Monday, September 24, 2007

என்றும் அன்புடன்...


புதுமைப்பித்தனின் "ஒரு நாள் கழிந்தது" கதை படித்திருக்கிறீர்களா? இந்த வாரத்தின் ஒவ்வொரு நாளும் எனக்கந்த கதையை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது! காரணம் பெரிதாய் ஒன்றுமில்லை.... பரீட்சையிலிருந்து பயணம் போவது வரை முன் ஆயத்தங்கள் ஏதுமின்றி எல்லாவற்றையும் அவசர கதியில் செய்வதே வழக்கமாகிப் போனதால் இந்த வாரம் முழுக்க என்னிடம் பதற்றநிலையே நீடித்து வந்தது!

என்றாலும் வாரநிறைவோடு மனதும் நிறைந்திருக்கிறது இப்போது. சிரிக்க, சிலிர்க்க, சிந்திக்க, ரசிக்க என நான் பதிவித்த ஒவ்வொரு இடுகையும் பலதரப்பட்ட வாசக அன்பர்களை என்னிடம் கொண்டு சேர்த்திருப்பது வெகுவாய் மகிழ்ச்சியையும் பொறுப்புணர்ந்து இயங்கியதற்கான திருப்தியையும் வழங்கியிருக்கிறது. உண்மையில் நானே கொஞ்சமும் எதிர்பார்த்திராத வரவேற்பு...அசர வைத்த பின்னூட்டங்கள்! இன்னமும் கூட மலைப்பாயிருக்கிறது எனக்கு! அதிலும் 'குறுந்தொகை' பதிவிற்குக் கிடைத்த ஆதரவு அதீத ஆச்சரியங்களைக் கொடுத்தது! பின்னூட்டமிட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் பிரத்யேக நன்றிகளும் ப்ரியங்களும்!!

நன்றி நவில்வது தவிர்த்து இந்த பதிவில் நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ஒன்றுண்டு. 'கும்மி' என்றொரு விஷயம்.... சரியா தவறா என்று ஒவ்வொரு வலைப்பதிவர் சந்திப்பிலும் விவாதிக்கப்பட்டு இன்னும் முடிவு காணப்படாத ஒன்றாய் தொடர்ந்து கொண்டிருப்பது. "கும்மி தடை செய்யப்படுகிறது" என்ற அறிவிப்பின் மூலம் என்னை பலரது அதிருப்திக்கு ஆளாக்கியிருப்பது!

உண்மையில் கும்மிக்கு நான் எதிரியல்ல. இதுவரை என் பதிவில் சிபி, குசும்பன், இளா, மின்னல், ஜி3, மை ஃப்ரண்ட், ராம், ஜே.கே, மங்களூர் சிவா போன்றவர்கள் இட்ட கலாய்த்தல் ரக கும்மிப் பின்னூட்டங்கள் பலமுறை கண்ணீர் வர வாய்விட்டு சிரிக்க வைத்திருக்கின்றன. அதிலும் இந்த முறை பேய்க்கிட்ட பேசியிருக்கீங்களா? பதிவிற்கு வந்த 'பதிவை மிஞ்சிய பின்னூட்டங்கள்' வெகுவாய் ரசிக்க வைத்தன. என்னைப் பொறுத்தவரை கும்மி என்பது திருவிழா போல! ஆனால் 'தினமும் திருவிழா' என்றால் அதை ரசிக்க முடியாதில்லையா?

பின்னூட்டங்களின் எண்ணிக்கை மட்டுமே பதிவின் தரத்தை நிர்ணயிப்பதில்லை என்பதாலும் கும்மியால் சில பதிவுகள் வீரியமிழந்து போவதாலும் இதற்கு தடை விதிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறேன். அதனால் சில பதிவுகளில் சிலரது பின்னூட்டங்களை நிராகரிக்க நேர்ந்ததற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்து இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்கள் இருவர்... ஒருவர் எனக்கு முன்னால் நட்சத்திரமாய் மின்னிய ஆழியூரான்! தனது செறிவான மற்றும் வசீகரிக்கும் எழுத்துக்களால் என்னை மிரள வைத்து, வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான பொறுப்புணர்ச்சியை வலிந்து உருவாக்கியவர். அத்துடன் என் பதிவுகளுக்கு தொடர்ந்து வருகை தந்து பொறுமையாய்ப் படித்து பின்னூட்டமிட்டு மெல்லிய குற்றவுணர்ச்சியும் தந்தவர்! (நான் படித்தேன், பின்னூட்டமிடவில்லை.) ஆழியூரானுக்கு என் தனிப்பட்ட நன்றிகள்!

மற்றொருவர் இன்று முதல் ஜொலிக்கவிருக்கும் எங்கள் அன்பு அண்ணன், பாசக்காரக் குடும்பத்தின் 'மூத்த' உறுப்பினர் "அபி அப்பா". சூரியன் கிழக்கே உதிப்பது போல அவர் திறமைகள் சொல்லித் தெரியவேண்டியவையல்ல!பாசத்திற்குரிய அண்ணனுக்கு நட்சத்திர வாழ்த்துக்களை சொல்லிக் கொள்ளும் வேளையில் எனக்களித்ததை விடவும் பன்மடங்கு ஆதரவை அவருக்கு வழங்கவேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் இது என் 100 வது பதிவு! ஒரு வார காலமாய் என்னையும் நட்சத்திரமென ஏற்றுக் கொண்டு வாழ்த்தும் ஆதரவும் பாராட்டுக்களும் அளித்திருக்கும் வலையுலக ஜாம்பவான்கள், அறிவுஜீவிகள், கும்மியர் பெருமக்கள், பிரியத்திற்குரிய நண்பர்கள், பாசக்காரக்குடும்பத்தினர், புதிய பதிவர்கள் அனைவருக்கும் இந்த 100 வது இடுகையை சமர்ப்பிக்கிறேன். நன்றி!


என்றும் அன்புடன்....

காயத்ரி

Saturday, September 22, 2007

எனக்குப் பிடித்த கவிதைகள்!

நான் கவிதைப் ப்ரியை! எக்காலத்திலும் எந்நேரங்களிலும் கவிதைகள் என்னை ஈர்த்தபடியும் மயக்கியபடியுமிருக்கின்றன. பிடித்த கவிதைகள் என்று கணக்கெடுத்தால் இன்னொரு வாரம் முழுக்க எழுத நேரிடும். (அப்படியொரு அசம்பாவிதம் நடக்காது. பயப்படாதீங்க!!) என்றாலும் படித்து முடித்ததும் நாய்க்குட்டி போல என் பின்னேயே ஓடி வந்துவிட்ட ஒரு சில கவிதைகளை மட்டும் உங்களுக்கும் அறிமுகப்படுத்துகிறேன். (இனி நீங்களாச்சு, அதுங்களாச்சு!)


1. "என்ன சொல்லி என்ன
என்ன எழுதி என்ன
நான் சொல்ல வருவதைத் தவிர
எல்லாம் புரிகிறது உனக்கு!"


- கனிமொழி

2. "பறிக்க முடியாத
பட்டுப்பூச்சியை மறக்க
பறக்க முடியாத பூக்களை
வெடுக்கெனெக் கிள்ளி
வீசின விரல்கள்"


3. "சிலைகளை விட
மலைகளை விட
பாறைகள் அழகானவை
கூழாங்கற்களும் கூட"

- கல்யாண்ஜி

4." கல்லெறிபட்டும்
கலங்காது
தேனையே சொரிகிறது
தேன்கூடு"

- தேவதேவன்


5. "அதை அவ்வளவுதான்
புரிந்துகொள்ள முடிந்தது
நண்பர்களுக்கு
எதிரியே! உன் கைகளை
முத்தமிட அனுமதி
என் நண்பர்களைவிடவும்
அதை நீ புரிந்து கொண்டதற்கு!"


- மனுஷ்யபுத்திரன்


6. "அநேகமாய்
பார்க்க மறந்தாலும்
தலைக்கு மேல் வானம்
என் நினைவுக்குள்
நீயும்!"

- இரா. சேதுபதி

7. "கவிதைக்குள் வராத
எந்தவொன்றும் உலகில் இல்லை
உன்னை நான்
முத்தமிட்டு உயிர் பெற்ற
எனது காலத்தின்
முதற்கணத்தைத் தவிர"


-ரமேஷ் - ப்ரேம்

8. "எனக்கு யாருமில்லை
நான் கூட"
- நகுலன்


9. "எல்லாக் கவிதைகளுமே
உன்னைப் பற்றியவை தானெனினும்
ஒரு கவிதை கூட
உன்னை மாதிரி இல்லையே?"

- தபூ சங்கர்10. "விலக விலக
புள்ளி தானே?
நீ மட்டும் எப்படி
விஸ்வரூபம்?"

- இரா. பார்த்திபன்


11. "இன்னும் உடையாத
ஒரு நீர்க் குமிழி
நதியில் ஜீவிக்க
நழுவுகிறது.
கைப்பிடியளவு கடலாய்
இதழ்விரிய உடைகிறது
மலர் மொக்கு"

-பிரமிள்


12. "கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே
தோன்றவில்லை.
அவரும் புன்னகைத்துப்
போய் விட்டார்.
ஆனாலும்
மனதிலே ஒரு நிம்மதி"


- ஆத்மாநாம்

13. "இனி பார்க்க வேண்டும் என்கிற
ஆசை வருகிற போதெல்லாம்
அந்த வானத்தைப் பார்த்துக் கொள்ளலாம்
எங்காவது ஒரு புள்ளியில்
நம் பார்வைகளாவது
சந்தித்துக் கொள்ளட்டுமே"

-அறிவுமதி


14."..... ஆயத்தங்களில்
கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல்.."

-பசுவய்யா (சு.ரா)


15. "கூந்தலின்
ஒற்றை முடியென
சந்திப்பின் குறுகிய வெளியில்
என் பிரியங்களைப்
பிரித்துக் காட்ட
அவகாசமேதுமின்றியே
நிகழ்ந்தது நம் பிரிவும்..."

- சல்மா


முலைகள்

16. "....ஒரு நிறைவேறாக் காதலில்
துடைத்தகற்ற முடியாத
இரு கண்ணீர்த் துளிகளாய்த்
தேங்கித் தளும்புகின்றன. "

- குட்டி ரேவதி


17. "பழத்தை சாப்பிட்டு விடு
நாளைக்கென்றால் அழுகிவிடும்
என்றாள் அம்மா
வாங்கி விண்டு உண்டேன்
இன்றை"


- தேவதச்சன்

18. "அந்திக் கருக்கலில்
திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கதன் கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும் எனக்கதன்
பாஷை புரியவில்லை."


- கலாப்ரியா


19. "உன் பெயர்
இந்த இரவில்
காலி அறையில்
மாட்டிய கடிகாரம்"

-சுகுமாரன்


20. "சுற்றிலும் இருட்டைவீசி
தயாராக நிற்கிறது இரவு
மனிதர்கள் சுவர்களுக்குள் ஒடுங்க
அனாதைகளாக அழும் தெருக்கள்"

- சமயவேல்


பி.கு: விட்டுப்போனவை இன்னும் இருக்கக் கூடும். (பொழச்சுப் போங்க!)நினைவிலிருந்து எழுதியதால் வரிகளோ கவிஞர்களின் பெயர்களோ மாறுபட்டிருக்கலாம். பிழையிருந்தால் குட்டு (மெதுவாய்) வைத்து திருத்தும்படி வேண்டிக் கொள்கிறேன்.

Friday, September 21, 2007

குறுந்தொகை - அறிமுகம் -2"நீரும் செம்புலச்சேறும் கலந்தது போலே கலந்தோம் நாமே"


-- சில்லுனு ஒரு காதல்!


குறுந்தொகை என்ற தொகுப்பு நூல் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர், மற்றும் பாணர் முதலான சமூகத்தின் பல மட்டங்களிலிருக்கும் தமிழறிந்த மக்களால் எழுதப்பட்ட பாடல்களைக் கொண்டிருக்கிறது. மொத்தம் 400 பாடல்கள். 4 முதல் 8 அடிகளுக்கு மிகாமல் எழுதப்பட்ட பாடல்களில் உணர்ச்சிகளைக் கனம் குறையாமல் கவிதையாய்க் கட்டமைத்திருக்கிறது. குறுந்தொகை உவமைகளுக்குப் பெயர் போன இலக்கியம். 'இப்படி கூட சிந்திப்பார்களா?' என்று நம்மை ஆச்சரியத்தில் தள்ளும் அற்புத உவமைகள் ஏராளமிருக்கின்றன. அவற்றில் இதுவும் ஒன்று!

கணவன் வேலைக்காக வெளியூர் சென்றுவிட அவன் பிரிவால் வாடும் மனைவி...


"பூ இடைப்படினும் ஆண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போல...."

என்று கணவனுடனான தன் நெருக்கத்தையும் பிரிவுத்துயரையும் சொல்கிறாள்.

மகன்றிற் பறவை (அன்றிற் பறவையாகவும் இருக்கலாம்!) என்பது எப்போதும் தன் இணையோடு சேர்ந்து நீரில் நீந்திக் கொண்டிருப்பது. அப்படி நீந்தி வருகையில் இரண்டு பறவைகளுக்குமிடையில் நீரில் பூத்திருக்கும் தாமரையோ அல்லியோ அல்லது ஏதேனுமொரு நீர்ப்பூவோ எதிர்ப்படுமானால் அந்தப் பூவைச் சுற்றிவந்து மீண்டும் இணையும் சிறு பொழுதிற்கு இரண்டு பறவைகளும் ஓராண்டு பிரிந்தது போலத் தவித்திருக்கும்... அப்பறவையை போன்றவள் தான் நானும் என்கிறாள்!

மற்றுமொரு பெண்... "மழைக்காலத்திற்குள் திரும்பி வந்துவிடுவேன்" என்று சொல்லிப்போனவன் வெகுநாட்களாய் வராததால் காத்திருப்பின் உக்கிரம் தாளாமல் அவனைத் திட்டத் தொடங்குகிறாள்

"வாரார் ஆயினும் வரினும் அவர் நமக்கு
யார் ஆகியரோ? தோழி! நீர
நீரப் பைம்போது உளரி, புதல
பீலி ஒண்பொறிக் கருவிளை ஆட்டி
நுண்முள் ஈங்கைச் செவ்வரும்பு ஊழ்த்த
வண்ணத்துய்ம்மலர் உதிர, தண்ணென்று
இன்னாது எளிதரும் வாடையொடு
என் ஆயினாள் கொல் என்னா தோரே?"


-- 110, கிள்ளி மங்கலங் கிழார்.


"அவர் இனி வராவிட்டாலும் வந்தாலும் எனக்கு அவர் யாரோ போன்றவரே தோழி! நீரில் மலரும் மொட்டுக்களை மலர்த்தி மயில் தோகை போன்ற கருவிளை மலர்களை அசைத்து, நுண்ணிய முட்களையுடைய ஈங்கை மர அரும்புகளை விரித்து, வண்ண மலர்களை உதிர்த்தபடி சில்லென வீசி துன்பம் தரும் இந்த வாடைக்காற்றில் அவள் என்ன ஆனாளோ என்று
வருந்தாதவன் வந்தால் என்ன? வரா விட்டால் தான் என்ன? " என்பது அவள் கோபம்!

'உளரி, ஆட்டி, உதிர' என மலர்களின் துன்பத்தைச் சொல்வதன் மூலம் குளிர்க்காற்றும் மழையும் தன்னை வருத்துவதைச் சொல்லாமல் சொல்லும்
தலைவி "இனி அவருக்கும் எனக்கும் சம்பந்தமில்லை" என்று சினந்து கொள்கிறாள்!!


" நைட் போன் பண்றேன்னு சொல்லிட்டு பண்ணலன்னா எனக்கு கோபம் வராதாடி? எவ்ளோ நேரம் காத்திட்டிருந்தேன் தெரியுமா?
அவ வெயிட் பண்ணிட்டிருப்பாளேன்னு கூட தோணலன்னா இவனெல்லாம் என்ன லவ்வர் சொல்லு?"


என்று கோபமும் ஆற்றாமையுமாய் என் தோழிகள் புலம்பும் தருணங்களில் என் மனதில் இந்தப் பாடல் தவறாமல் தலைகாட்டி புன்னகை பூக்க வைக்கிறது!!

இது ஒரு எல்லை என்றால்.. கணவன் சொல்லிப் போன மழைக்காலம் வந்த பின்னும் அவன் வராத நிலையில் " அவர் சொன்ன சொல் தவறாதவர்..
இந்த மழை தான் பருவம் தப்பிப் பெய்கிறது" என்று சொல்லிக் கொள்ளும் அதீத நம்பிக்கை உணர்வுகளையும் காண முடிகிறது!

பிரிவின்போது பொழுது சாயும் வேளைகள் தரும் துயரத்தை உணர்ந்திராதவர்கள் யார் இருக்க முடியும்? இந்தப்பாடலும் அப்படி ஒரு பிரிவின் துயரைப் பேசுகிறது..


"எல்லை கழிய முல்லை மலர
கதிர்சினம் தணிந்த கையறு மாலை
உயிர்வரம்பு ஆக நீந்தினம் ஆயின்
எவன் கொல்? வாழி தோழி!
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே!"


--387, கங்குல் வெள்ளத்தார்


"பகலின் எல்லை முடிந்து முல்லைப்பூக்கள் மலரத் தொடங்கிவிட்ட மாலை நேரம்! சூரியனின் சினம் தணிந்த பின்னால் வந்து கொண்டிருக்கும் இந்த தாங்கிக் கொள்ளவியலாத மாலை நேரத்தை உயிர் போவதற்கு முன்பாக என்னால் நீந்திக் கடந்து விட முடியுமா தோழி? இரவு வெள்ளம் கடலை விடவும் பெரிதாய் இருக்கிறது" என்கிறாள் ஒரு பெண்!

இரவென்ன வெள்ளம் போன்றதா? அதுவும் உயிர் போவதற்குள் நீந்திக் கடந்துவிட முடியாத கடல் போன்றதா!! என்ன அற்புதமான உவமை இது? இதைப் படித்ததிலிருந்து ஜன்னல் திறந்து இரவு வானம் பார்க்கையில் எல்லாம் இருள் கடலாய்ப் பொங்கிப் பெருகுவது போன்றதோர் பிம்பம் எழுவதை என்னால் தவிர்க்க முடிவதில்லை! இப்பாடலை எழுதியவர் தன்
பெயரைக்கூட குறிப்பிட்டுச் சொல்லிக் கொள்ளாததால் 'கங்குல் வெள்ளத்தார்' என்றே குறிக்கப்பட்டிருக்கிறார்!

குறுந்தொகைப் பாடல்கள் ஒவ்வொன்றிலும் அளவிட முடியாத காதல் உணர்வுகள் தேக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

பெண்ணொருத்தியைப் பார்த்த நாளிலிருந்து பித்துப் பிடித்தவனாகிறான் இளைஞன் ஒருவன். அவனின் இயல்பு பிறழ்ந்த நிலையைக் காணச்சகிக்காத அவன் நண்பர்கள் அவனை கடிந்து கொள்கின்றனர். அவர்களுக்கு அவன் இப்படி பதில் தருகிறான்...

"இடிக்கும் கேளிர்! நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கைஇல் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல
பரந்தன்று இந்நோய்; நோன்று கொளற்கு அரிதே"


-58, வெள்ளி வீதியார்


"என்னை இடித்துரைக்கும் நண்பர்களே! என் பிரச்சினையை உங்களால் நிறுத்த முடிந்தால் அது எனக்கு நன்மையுடையதாய் இருக்கும். வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும் பாறை ஒன்றின்மீது வைக்கப்பட்டிருக்கும் வெண்ணெயை கைகள் இல்லாத, வாய் பேசவியலாத ஒருவன் காக்க முயல்வதைப் போல நான் தவித்துக் கொண்டிருக்கிறேன். வெண்ணெய் உருகிப் பாறையில் பரவுவது போல காதல் என்னுள் பரவிக் கொண்டிருக்கிறது. இந்நோய் தாங்கிக் கொள்வதற்கு அரிதானது" என்பது இதன் பொருள்.


"கை இல் ஊமன் கண்ணிற் காக்கும் வெண்ணெய் உணங்கல் போல"

குறுந்தொகையில் என்னை வெகுவாய் அசர வைத்த உவமை இது! கைகளிருந்தால் உருகும் வெண்ணெயைத் தடுத்து நிறுத்த இயலும். பேச முடிந்தால் எவரையேனும் உதவிக்கழைக்கலாம். ஏதும் செய்யவியலாமல் வெண்ணெய் உருகி வழிதலை கண்களால் கண்டபடி தவிப்பது எத்தனை கொடுமை....என்ன அழகான கற்பனை!

இவை தவிர குறுந்தொகையில் புகழ் பெற்ற பாடல் ஒன்றுண்டு.

"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"


-- செம்புலப் பெயல்நீரார்

"உன் தாயும் என் தாயும் யாரோவென தொடர்பற்றவர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் அறிமுகமானவர்கள் இல்லை. பாலை மண்ணில் பெய்த மழை போல நம்மிருவர் நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன" என்பது இப்பாடல்.

செம்புலம் என்பது பாலை, செம்மண் என்ற இரண்டு அர்த்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. மணலில் தண்ணீர் சிந்திப் பார்த்ததுண்டா நீங்கள்? தண்ணீர் விழுவதும் அதை மணல் உறிஞ்சிக் கொள்ளலும் கண்ணிமைக்கும் நொடிகளில் நிகழும். அதைப் போல பிரித்தறிய முடியாத கணங்களில் உள்ளங்கள் கலந்தன என்றும் கொள்ளலாம். செம்மண்ணில்
புழுதியும் வாசனையும் கிளப்பியடி பெய்யும் மழை நீர் மண்ணோடு கலந்த வினாடியில் சுயமிழந்து தானும் செந்நிறம் கொள்வதுபோல நெஞ்சங்கள் ஒன்றாய்க் கலந்தன என்றும் கொள்ளலாம். எதுவான போதிலும் கண்டதும் காதல் என்ற அனுபவத்தைப் பெற்றவர்களுக்கு இந்த பாடல் மறுதலிக்க முடியாததாய் இருக்கக் கூடும்.

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த வரிகளைத்தான் உணர்ச்சி குன்றாமல் இன்னும்

"நீரும் செம்புலச் சேறும் கலந்தது போல கலந்தோம் நாமே"


என்று பாடிக் கொண்டிருக்கிறோம்! இப்போது சொல்லுங்கள் சங்க இலக்கியங்களில் அர்த்தங்கள் ஏதுமில்லையா?

குறுந்தொகை - அறிமுகம் - 1

வலைக்கு வந்த நாள் முதலாய் சங்க இலக்கியங்கள் குறித்த அறிமுகம் தரவேண்டும் என்ற விருப்பம் உள்ளே கனன்று கொண்டேயிருக்கிறது. சித்தார்த்தின் பதிவுகள் அந்த விருப்பத்தைப் பெரு விழைவாய் மாற்றியிருந்த போதும் தொடர்ந்து நான் தயங்கியபடியே இருந்ததற்குக் காரணம், சொல்லும் பொருளுமாய் செறிந்திருக்கும் பாடல்களை அதன் அடர்வு குன்றாமல் அர்த்தமிழக்காமல் எளிமைப்படுத்திவிட இயலுமா என்ற சந்தேகம் நீடித்து வந்ததே. கொஞ்சம் பிசகினாலும் வலைப்பதிவு வகுப்பறையாகி கற்பித்தலுக்கான த்வனியோடு என் வார்த்தைகள் இயங்கிவிடக் கூடிய அபாயமிருப்பதாலேயே இந்த முயற்சியை இத்தனை நாட்களாய்த் தள்ளிப் போட்டிருந்தேன். அதனால் இதை பதிவென்று கொள்வதை விடவும் என் முதல் முயற்சி என்று கூறிக் கொள்வது என் பிழைகளை நீங்கள் மன்னிக்க உதவலாம்!

சங்க இலக்கிய அறிமுகம் எழுதுவதென்று முடிவு செய்துவிட்ட பிறகு மொத்தமுள்ள 2387 பாடல்களில் எதைச் சொல்வது எதை விடுப்பது என்ற மலைப்பு வந்தது. 3 அடி முதலாய் 782 அடிகள் கொண்ட நெடும்பாடல்கள் வரை அனைத்தும் திரும்பத் திரும்ப காதலையும் வீரத்தையுமே பேசிக்கொண்டிருக்கையில் சிறப்பித்தும் வியந்தும் சொல்லவேண்டிய பாடல்களைத் தேர்ந்து கொள்வது கொஞ்சமல்ல... நிரம்பவே சிரமமான காரியமாயிருந்தது. என்றாலும் சுட்டிக் காட்டவும் சிலாகித்துச் சொல்ல்வும் எப்போதுமே எனக்கு குறுந்தொகை எளிதில் வசப்படுமென்பதால் அதையே இப்போதும் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.


பொதுவில் சங்க இலக்கியங்கள் பற்றிய புரிதலின்மையும், அலட்சியப் போக்கும் மேலதிகமாய் "சங்க இலக்கியங்கள் சாமான்ய மக்களைப் பற்றிப் பேசுவதில்லை" என்ற மேம்போக்கான கருத்துருவாக்கமும் நிலவி வருவதை நான் கண்டு வருகிறேன். உணர்வுகளில் மேல்தட்டு, கீழ்மட்டம் என்ற பிரிவினைகள் சாத்தியமா என்ன? பிரிவின் வலி, இழத்தலின் துயரம், காதலின் அவஸ்தை, ஊடல், கூடல் போன்ற நுண்ணிய அக உணர்வுகள் அனைத்தும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் கூட பொதுவாயிருப்பதை சங்க இலக்கியம் சுட்டிக் காட்டத் தவறிவிடவில்லை. மக்களால் மக்களுக்காக எழுதப்பட்ட இலக்கியங்கள் என்பதால் அரசனொருவனின் பாடலுக்கிணையாய் விவசாயியின் கவிதையும், பாடிப்பிழைக்கும் பாணனின் பாடலும், பெண்களின் கவித்திறனும் இடம்பெற்றிருக்கும் அற்புதம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது!

என் பதின்மங்களில் முதன்முதலாய் அடர்பச்சை நிற அட்டையில் "குறுந்தொகை" என்று பொன்னிற எழுத்துகளில் ஒளிர்ந்த அந்த தடித்த புத்தகத்தைப் பிரிக்க நேர்ந்தபோது இது தமிழ்தானா என்ற சந்தேகம் வந்தது எனக்கு. திருவிழாவில் தொலைந்த குழந்தையாய் அந்த புத்தகங்களின் பக்கங்களுக்குள் அலைபாய்ந்து ஓரளவு வழியறிந்தேன். என்றாலும் அத்தனை பாடல்களும் வெகுவாய் சலிப்பூட்டின. மீண்டும் மீண்டும் காதல், காமம், ஊடல், கூடல், பிரிதல், காத்திருத்தல் என்று வந்த பாடல்களைப் பார்த்த போது 'இதைவிட்டால் எழுத்தில் பதிவு செய்ய வேறொன்றுமே இல்லையா தமிழர்களுக்கு?' என்ற வெறுப்பும் 'இதுவா கடலை வென்று,காலத்தை வென்று இன்னமும் பேசப்பட்டுக் கொண்டேயிருக்கிறது?' என்ற வியப்பும் ஒருமித்துத் தோன்றின.

வெகு நாட்களுக்கு பேடி கை வாள் போல அந்த புத்தககம் பயன்படாமலே இருந்தது என்னிடம். ஆனால் வெறும் கற்களென நான் ஒதுக்கியவை செப்பமுற செதுக்கப்பட்ட கடவுட் சிலைகளென காலம் கடந்த புரிதல்களின்போது விளங்கியது. கவிதை எப்போதும் கவிதையாகவே இருக்கிறது.. அதைப் புரிந்து கொள்ளக்கூடிய திறனும் அதற்கேற்ற உணர்வுகளும்தான் அதை ஏற்கவும் நிராகரிக்கவும் காரணங்களாகின்றன.

மனிதர்கள் காதலித்துக் கொண்டிருக்கும் வரையில், எக்காலத்திலும் சலித்து விடாத ஒன்றாய் ஆண் - பெண் உறவுகள் தொடர்ந்து வரும் வரையில் உணர்ச்சிகளின் சமுத்திரமாய் விளங்கும் இப்பாடல்கள் தங்களின் தனித்துவத்தை இழந்துவிடப் போவதில்லையென்றே தோன்றுகிறது. நம்மையொத்த முகச்சாயல் கொண்ட ஒருவரை எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தால் எப்படியொரு இன்ப அதிர்வெழுமோ அதே அதிர்வை இப்பாடல்களும் தருகின்றன.

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை என்ற எட்டு நூல்கள் சேர்ந்த எட்டுத்தொகை என்ற தொகுப்பும் இன்ன பிற பத்து நூல்கள் அடங்கிய பத்துப்பாட்டு என்ற தொகுப்பும் இணைந்து சங்ககால இலக்கியங்கள் என்ற பெயரில் வழங்குகின்றன. இவற்றில் என்னைப் பெரிதும் மயக்கியிருக்கும் குறுந்தொகையின் நானூறு பாடல்களில் ஒரு சில துளிகளை மட்டுமே இங்கு சுட்டிக்காட்டவிருக்கிறேன்.

செய்யுட்களுக்கு அருஞ்சொற்பொருளும் தெளிவுரைகளும் தந்து செல்வது என் நோக்கமன்று. 'நம் தமிழில் இவையும் இருக்கின்றன, தெரிந்துகொள்ளுங்கள்' என்று ஆற்றுப்படுத்தும் முயற்சியாகவே இதனைத் தொடங்குகிறேன்.

Thursday, September 20, 2007

வாழ்வைச் சுமத்தல்


"எல்லாத்தையும் விட்டுட்டு செத்துப் போய்டலாமா?"

என்று எந்த ஒரு வலி மிகுந்த கணத்திலாவது நீங்கள் நினைக்காமல் இருந்ததுண்டா?

முதுகின்மேல் கனக்கும் வாழ்க்கையின் பாரம் அதிகரிக்கையில், துயரங்களின் துரத்தல்களுக்குப் பணிந்து ஓடிக் களைத்து மூச்சிரைத்து நிற்கையில் ஏதோவோர் கணத்தில் எல்லோருக்குமே விட்டு விடுதலையாவதற்கான வேட்கை வருகிறது இல்லயா? சாலைச் சந்திப்பில் நின்றபடி போக வேண்டிய பாதையைத் தேர்ந்தெடுப்பது போலவே பிரச்சினைகளின் விளிம்பில் நின்றபடி வாழ்வா? சாவா? என்று திசை தீர்மானிக்க வேண்டிய கட்டாயங்களுக்கு 'தற்கொலை' மிகச்சிறந்த தப்பித்தலாய் அமைந்து விடுகிறது.

நேற்றும்கூட தனது இரண்டு பிள்ளைகளுடன் தீக்குளித்து இறந்து நேற்றைய முக்கியச்செய்திகளில் இடம்பிடித்தார் ஒரு பெண். இப்படி தினமும் காலையில் கொலையும் தற்கொலையுமான தகவல்களால் நிரம்பிவரும் நாளிதழ்கள் எல்லாம் கண்களுக்கும் கவனங்களுக்கும் வெகுவாய் பழக்கப்பட்டுப் போய் நம்மை சகஜ நிலையிலேயே வைத்திருப்பது எத்தனை குரூரமானது?

மக்கள் தொடர்பு ஊடகங்களை பகுதிநேரங்களில் சார்ந்திருக்கும் நான் தினமும் ஒரு சில மரணச்சேதிகளையாவது ஊருக்குச் சொல்ல வேண்டியவளாயிருப்பதால், "தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்" "மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார்" என்பன போன்ற சொற்கோர்வைகள் ஏதோ "இன்று திங்கட்கிழமை"" என்பது போலத்தான் காதில் விழுகின்றன. மேலதிகமாய் விஷம் குடித்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவன் சற்று வீரியமுள்ள எதையாவது குடித்துத் தொலைத்திருக்கக் கூடாதா? தலைப்புச் செய்திக்கு உபயோகப்பட்டிருக்குமே என்ற ரீதியிலான தொழில் தர்மங்களையும் சந்தித்ததுண்டு. என்றாலும் சில துர்மரணங்கள் கண்ணாடியில் வீசப்பட்ட கல்லாய் உணர்வுகளை, வாழ்வின் அஸ்திவாரங்கள் மீதான அடிப்படை நம்பிக்கைகளை சிதறடித்துப் போவதைத் தவிர்க்க முடிவதில்லை.

சேலத்தில் 10 மாதக்குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்று தானும் தூக்கு மாட்டி இறந்து போனாள் ஒரு தாய். கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பது போல வாளியில் எடுத்தார்கள் அந்த குழந்தையை. வாளியின் பக்கவாட்டில் சாய்ந்தபடி உறங்குவது போல மரித்திருந்த அந்தப் பிள்ளை இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் எதோவோர் நடுநிசியிலும் பின்னிரவுகளிலும் என் உறக்கம் கலைத்தபடியே இருக்கிறது.

இதோ நாம் சந்தோஷமாய்ச் சிரித்துக் கொண்டிருக்கிற நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருக்கிற, கதைத்துக் கொண்டோ, காதலித்துக் கொண்டோ, பொழுது போக்கிக் கொண்டோ இருக்கின்ற இந்த கணங்களில் எங்காவது யாராவது நெஞ்சம் வெடிக்கும் வேதனையிலும் விரக்தி மற்றும் வெறுப்பைச் சுமந்தபடியும் சாவதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருப்பார்களோ என்ற எண்ணம் அதிபயங்கரமாயும் தாங்க முடியாததாயுமிருக்கிறது.

கொடைக்கானலில் சூசைட் பாய்ண்ட் பார்த்தபோதும் கூட அடிவயிற்றில் சில்லிட்ட பயத்தை விடவும், வழியும் கண்ணீருடனோ விரக்தியில் வாடிப்போன முகத்துடனோ அங்கு வந்து நின்றிருந்து கசப்பின் உச்ச கணங்களில் உயிரை வீசியெறிந்து தற்கொலை கொண்ட மனிதர்களைப் பற்றிய கற்பனை தாங்க முடியாததாயிருந்தது. அங்கு வீசும் காற்றிலும் அவர்களின் துயரமும் கண்ணீரின் ஈரமும் மிச்சமிருப்பதாய்ப் பட்டது.

நினைவறிந்து இதுவரை 2 முறை என்னை உலுக்கியெடுத்த உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. முதல் தற்கொலை ஜெயஸ்ரீயினுடையது. 'பள்ளியிறுதித் தேர்வில் தோல்வி' என்ற வெகு அற்பமான காரணமே வாழ்க்கையை முடித்துக் கொள்ள போதுமானதாயிருந்தது அவளுக்கு. பாதம் மறைக்கும் பட்டுப்பாவாடைகளும், காதை நிறைக்கும் சதங்கைக் கொலுசும், திரும்பிப் பார்க்க வைக்கும் முகமும் ஜெயஸ்ரீயின் தனித்துவமான அடையாளங்கள்.

என்ன காரணத்தாலோ என்னை மிகவும் நேசிப்பவளாயிருந்தாள். எப்போதும் அவள் என்னுடனே இருந்தாளென்பதை அவள் இல்லாத நாட்களில் தான் என்னால் உணர முடிந்தது. அவள் அன்பை அவ்வப்போது தேவைக்கேற்ப மட்டுமே நான் பயன்படுத்திக் கொண்டேன் என்ற குற்ற உணர்வை அவள் மரணம் என் மனதில் நிரந்தமாக்கிவிட்டுப் போயிருக்கிறது.

ஜெயஸ்ரீ நல்ல நிறம். தாழம்பூ போலிருக்கிறாள் என்று கூட நான் நினைத்ததுண்டு. தேர்வு முடிவு வந்த அன்று மாலை பூட்டிய அறைக்குள் மண்ணெண்ணெய் ஊற்றி பற்றவைத்துக் கொண்டாள் என்றும் அரை மணி நேரம் எரிந்து கொண்டிருந்தாள் என்று சொன்னார்கள். போய்ப் பார்க்கும் அளவிற்குத் திராணியில்லை எனக்கு.

காதல், கடன், வன்கலவி இவற்றின் வரிசையில் தற்கொலைக்குத் தூண்டும் காரணிகளில் ஒன்றாய் தேர்வு முடிவுகளும் இருக்கும் அவலம்ம் நம் நாட்டில் மட்டும் தானா?

அதன் பின்னாய் 6 வருடங்கள் கழித்து மீண்டும் அதே அளவிற்கு அதிர்ச்சி தந்தவள் சிந்தியா... வெகு அழகு. வட்ட முகம்.. எப்போதும் சிரித்தபடியிருக்கும் உதடுகள். மிகுந்த தைரியசாலியான பெண் என்று சொல்ல வைக்கும் தோற்றம். ஆனால் அவளின் அலங்காரமும் ஆர்ப்பாட்டமான பேச்சும் சுற்றியிருப்பவர்களுக்கு அவளின் பத்தினித்தனத்தைச் சந்தேகிக்க உதவுவனவாய் இருந்தன.

ஒரு முறை ஹேண்ட்பேக்கிலிருந்து நீளமாயிருந்த செயின் ஒன்றை எடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டிருந்தாள். "இதென்ன டிசைன்? வித்தியாசமாய்..?" என்றதற்கு "இதுவா? இது தாலி" என்றாள் அலட்சியமாய். சில நேரங்களில் 'அவள் அப்படித்தான்' பட கதாநாயகியை நினைவூட்டும் படியாய் நடந்து கொள்வாள்.

சில பல மாதங்கள் கழித்து வெகு சோம்பலாய் நகர்ந்து கொண்டிருந்த அலுவலக மாலை நேரத்தை "சிந்தியா சூசைட் பண்ணிகிட்டா" என்ற செய்தியின் மூலம் பரபரப்பாக்கினாள். பதறியடித்துக் கொண்டு பார்க்கப் போனோம். ஹால் நடுவில் அவள் கிடத்தப்பட்டிருக்க மூலையில் டிவி ஓடிக் கொண்டிருந்தது. எவரையும் இழந்ததற்கான அறிகுறி எதுவும் அவள் கணவன் மற்றும் குடும்பத்தாரின் முகத்தில் இருந்ததாய் தெரியவில்லை.

கண்கள் பிதுங்கிய நிலையிலும், மூக்கிலும் கடைவாயிலும் ரத்தம் வழிந்தோடிய நிலையிலும் விகாரமடைந்திருந்த அவள் முகத்தைப் பார்த்தபோது வாழ்க்கை மீதான நம்பிக்கைச் சங்கிலியில் சில இணைப்புகள் சட்டென்று விட்டுப் போயின. அவள் இறப்பிற்கான காரணம் தெரியவில்லை. ஏன்? எதற்காக என்ற கேள்விகள் மட்டுமே எஞ்சியிருந்தன எல்லோரிடமும்.

அவள் உயிரோடிருந்தபோது "அது கேசுப்பா" என்று வர்ணித்த ஆண்கள் எல்லோரும் எத்தனை 'ஒழுக்க சீலர்கள்' என்பதையும் எல்லோரது குரலிலும் "சீச்சி இந்தப் பழம் புளிக்கும்" என்ற ஏமாற்ற தொனியிருந்ததையும் நான் அப்பட்டமாய் உணர்ந்திருக்கிறேன். காலங்காலமாய்ச் சொல்லிக் கொடுக்கப்பட்டு வருவதைப் போல அவள் 'குத்துவிளக்காய்' இல்லாவிட்டாலும் உண்மையில் அவள் நெருப்பாகவே இருந்தாள். ஏன் அணைந்து போனாளென்பது அவள் மட்டுமே அறிந்த ரகசியம்.

"பெண் ஒழுக்கமாயிருப்பதை விடவும் தான் ஒழுக்கமாயிருப்பதை ஒவ்வொருவரிடமும் நிரூபித்துக் கொண்டேயிருக்க வேண்டும்" என்ற அசிங்கமான உண்மையை அவள் மெளனமாய்ச் சொல்லிப் போயிருக்கிறாள் என்றே தோன்றியது எனக்கு.

இரக்கமற்று மீண்டும் மீண்டும் தோற்கடித்துக் கொண்டே இருக்கும் வாழ்க்கையை பழிவாங்குவதற்கான இறுதி முயற்சியாய் மனிதர்கள் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறார்களா? சாவைத் தீர்மாணிக்கும் கணங்கள் வெகு சொற்பமாய் இருந்தபோதும் எளிதில் கடந்து விட முடியாத தொலைவாய் நீள்கின்றன. மரணத்தை அதன் வாசலிலேயே சந்திக்கவும் ஓர் அசாத்திய தைரியம் தேவைதான் இல்லையா?

"தற்கொலை என்பது கோழைத்தனம்" " கோழைகள் எடுக்கும் துணிச்சலான முடிவு" என்றெல்லாம் வக்கணையாய்ப் பேசிக் கொண்டாலும் அந்தக் கணங்களை நேரடியாய்ச் சந்திக்க நேர்கையில் எல்லோரிடமும் மிஞ்சுவது எதுவும் கையாலாகாத இயலாமை மட்டுமே. இத்தனை குரூரங்களுக்கு மத்தியில் தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என நினைக்கையில் கனிமொழியின் வரிகளைத்தான் சொல்லிக் கொள்ளத் தோன்றுகிறது.

" அகால முடிவுகள் என்ற செய்திகளோடு
விடியும் நாள்களை
வாழவும் முடியவில்லை
வாழாதிருக்கவும் முடியவில்லை"

Wednesday, September 19, 2007

அன்பின் மொழி


அடிவான விளிம்பில்
கண்கொள்ளா நிறங்களைக்
கொட்டி வைத்திருக்கும்
இந்தச் சூரியன் தான்
தகிப்பாய்த் தகித்தது
இன்றைய முற்பகலில்..

பூக்கள் மிதக்க
உதடு சுழித்து
புன்னகைத்தோடும்
இந்த நதியில்தான்
அன்று மிதந்து வந்தது
குழந்தையின் பிணமொன்று...

பொங்கியும் புரண்டும்

மகிழ்ச்சி துள்ள ஓடிவந்தும்
அடிவருடிப்போகும்
அலைகள் தான்
பலி கொண்டன
பல்லாயிரம் உயிர்களை.....

என்றாலும்...

வெறுத்து விடவோ
ரசிக்காதிருக்கவோ
முடியவில்லை


சூரியனை..

நதியை..

அலைகளை...

உன்னையும்!

புனைவின் நிழல்
ஒவ்வொரு முறை 'பாலம் புக் ஷாப்'பை விட்டு வெளியில் வரும் போதும், "அடுத்த முறை இந்த வழியாய் வரக்கூடாது அல்லது வெறுங்கையோடு தான் வர வேண்டும்" என்று தீர்மானித்துக் கொள்வது இந்த சில நாட்களாய் வழக்கமாகியிருக்கிறது எனக்கு.


பாதி படித்து.. பக்க நுனி மடிக்கப்பட்டோ, தலைகுப்புறக் கவிழ்த்த நிலையிலோ தரையிலும் படுக்கையிலுமாய் இறைந்து கிடக்கும் புத்தகங்கள் தொடர்ந்து அதே நிலையில் கிடந்தபடியும், "ஒன்னா படி, இல்லன்னா ஒழுங்கா எடுத்து அடுக்கி வை........." என்று அம்மா என்னை வசைபாடுவதற்கு உதவி புரிந்தபடியும் இருக்கும்போது மறுபடி நான் புத்தகங்கள் வாங்கப் போவதில் என்ன அர்த்தமிருக்கிறது?

ஆனால் இந்த முறை வாங்கிய 'புனைவின் நிழல்' சேலத்திலிருந்து ஈரோடு வரையிலான ஒன்னரை மணிநேர பயணத்தில், இடைநிறுத்தமின்றி வெற்றிகரமாய்ப் படித்து முடிக்க ஏதுவாய் இருந்தது ஆச்சர்யம்தான்!

15 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு நூல் அது. நூலாசிரியர் மனோஜ். வளர்ந்து வரும் புனைகதை எழுத்தாளர். பத்திரிக்கையாளர். குழந்தைகளுக்காக "ஃப்ளைட் நம்பர் ஐ.சி 814" என்ற நாவல் எழுதியிருக்கிறாராம்.

"கனவின் மர்ம வெளிகளாலும் பைத்திய நிலையின் புதிர்களாலும் கட்டப்பட்டவை மனோஜின் இக்கதைகள். கனவுக்கும் நனவுக்குமிடையே, யதார்த்தத்திற்கும் புனைவிற்கும் இடையே எப்போதும் பெருகிக் கொண்டிருக்கும் ரகசிய நதியை இக்கதைகள் தொடர்ந்து தேடிச் சென்றவண்ணமிருக்கின்றன"

என்கிறது புத்தகத்தின் பின்பக்க அட்டை!


இது போன்ற தொகுப்பு நூலையோ அல்லது கவிதைப் புத்தகத்தையோ கையிலெடுக்கையில் எப்போதுமே முதல் பக்கத்திலிருந்து தொடங்குவதில்லை நான். கண்களை இறுக மூடி திடீரென நூல் விரித்து கண்ணில் படும் பக்கம் ஏதாவதொன்றிலிருந்து புத்தகத்தைப் படிக்கத் தொடங்கும் கிறுக்குத்தனம் எப்போது தொடங்கியதென்று நினைவிலில்லை!

இதையும் அப்படிப் பிரித்த போது முதலில் கைக்குச் சிக்கியது 'கச்சை' என்ற சிறுகதை.

மலையாள தேசத்தில் மேலாடை அணிய அனுமதிக்கப்பட்டிராத கீழ்ச்சாதி அடிமைப் பெண்களில் ஒருத்தியான 'குட்டிமோளு' மார்க்கச்சை அணிந்து கொள்ள பெரிதும் விரும்புகிறாள். யாருமறியாமல் தம்புராட்டியின் கச்சையைத் திருடி அணிந்து பார்க்கையில் அசந்தர்ப்பமாய்ப் பிடிபட்டு, தம்புரானால் அனைவர் முன்னிலையிலும் முழு நிர்வாணியாக்கப்படுகிறாள். அவமானம் தாங்காமல் புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் குட்டிமோளு பல வருடங்கள் கழித்து.... அவ்வூருக்கு வரும் பெண்ணொருத்தி அணிந்திருக்கும் நவீன ரக சோளிகளை ஸ்பரிசித்துப் பார்க்க முயல்வதாக முடிந்த அக்கதை பரிதாபம் கலந்த திகிலுணர்வையும் நல்ல கதையொன்றைப் படித்த திருப்தியையும் தந்தது.


படித்து முடித்து முன் பக்கம் வந்தேன். "அட்சர ஆழி" என்ற வசீகரிக்கும் பெயர் கொண்ட முதல் சிறுகதை முதல் ஐந்து வரிகளிலேயே அதிர்ச்சி தந்தது.

"எப்படி விளங்க வைப்பது என்பது தான் எனக்குள்ள பிரச்சினையே. எனக்கு நிகழ்பவை எல்லாம் அவர்களுக்கு விநோதமாகத் தோன்றுகிறது. கண்கள் மின்ன நான் சொல்வதை மிக நிதானமாகக் கேட்கிறார்கள். இதழ்க்கடையில் ஒரு புன்னகை நெளியும். கேலியின் நெளியல் அது. அதன்பின் ஒற்றைச் சொல்லில் அடக்கி விடுகிறார்கள். "மாத்திரை சாப்டியா?"

மனநலம் பாதிக்கப்பட்டவனாய் கருதப்படும் ஒருவன் அறைக்குள்ளேயே நூலகம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு புத்தகங்களுக்குள் மூழ்கிப் போகிறான். அவன் தன்னுணர்விழந்து வார்த்தைகளில் அமிழ்ந்து போகும் போது அந்த வார்த்தைகள் உயிர் பெறுகின்றன! கதைகளில் நிகழும் சம்பவங்கள் அவன் அறைக்குள்ளும் நிகழ்கின்றன.

விவிலியத்தில் கடவுள் நதிகளைப் படைப்பதைப் படிக்கையில் அவன் அறை நீரால் நிரம்புகிறது. கட்டுரை ஒன்றில் கிறிஸ்தவப்படைகள் நூலகம் ஒன்றிற்கு வைக்கும் தீ அவன் படிப்பறையின் திரைச்சீலைகளில் பற்றுகிறது. புத்தகத்தின் 127 ம் பக்கத்திலிருந்து உருப்பெற்று வரும் அமேசான் காட்டுப்பகுதியில் வாழ்ந்த யனோமாமி தொல்குடி மனிதன் கொடுத்த அரிய வகைச் செடி அவன் மேசையோரச் சாடியில் வளர்கிறது! இப்படி அந்தக் கதை நிறைய ஆச்சரியங்களைக் கொண்டிருந்தது!!

"857" என்ற எண்ணைத் தலைப்பாகக் கொண்ட சிறுகதை அந்தப்புரத்தில் சக்கரவர்த்தியின் மனைவியாய் இருக்கும் பெண்ணொருத்தியின் நினைவோட்டங்களை விவரிக்கிறது.

"திடீரென பின்னால் ஏதோ அரவம். திடுக்கிட்டுத் திரும்பினால் மகாராஜன். பெளருஷம் நிறைந்த தேகக்கட்டு. என்னுள் பதற்றம். நெருங்கிய ராஜன் என் தோள் தொட்டு முகம் உயர்த்தினான். நாணம் என்னைப் போர்வையாய்ப் போர்த்தியது. கரத்தால் என் மோவாய் உயர்த்தி ஊடுருவிப் பார்த்தான். புன்னகை இழையோட ராஜன் மெல்லிய குரலில் பேசினான் - "உன் பெயரென்ன?"

மெல்லிய அதிர்ச்சி தந்த இந்த வரிகள் தொடர்ந்து வளர்ந்து...

"நான் மனைவி.. சக்ரவர்த்தியின் மனைவி. தசரதச் சக்ரவர்த்தியின் அறுபதினாயிரம் மனைவியரில் 857 வதாகப் பிடிக்கப்பட்ட மனைவி"

என்று முடிந்தபோது லேசாய்ப் புன்னகை வந்தது!


"கள்ளா... நினைச்சேன். யார்ட்ட டா பேசிட்டிருக்கே?

"அய்யோ... திங்க் ஆஃப் தி டெவில். உன்னை நினைச்சு தான் உள்ள வந்தேன். உடனே வர்ற.. சிலுக்குதுப்பா"

"பொய்.. பொய் உன்னைத் தெரியாதா டா எனக்கு. லயர்.. லயர்.."

"சியாமு குட்டி என்னடா இப்டிச் சொல்ற.. போ.. ஒன்னும் பேச வேணாம்"

யாஹூ மெசஞ்ரில் கொஞ்சலும் சீண்டலுமாய் காதலித்துக் கொண்டிருக்கும் இருவரின் உண்மை முகங்களை அம்பலமாக்கி 'அடப்பாவிகளா'வென ஆச்சரியப்பட வைக்கிறது சூன்ய வெளி என்ற சிறுகதை!


இவை தவிர.. 15 கதைகளில் மிகவும் தவிர்க்க முடியாதனவாகவும் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டிய அவசியத்தைப் பெற்றனவாகவும் இருக்கும் "றெக்கை" "பால்" என்ற இரண்டு புனை கதைகள்... "என்னை பயமுறுத்தி, ஆச்சரியமூட்டி, எல்லையில்லா குழப்ப வெளியில் நிறுத்தி விநோதமான உணர்வுகளைத் தந்தன" என்று சிலாகித்துக் கூறுவதை விடவும், "எனக்கு ஒன்னுமே புரியல" என்று 'சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது' நேர்மையான செயலாய் இருக்குமென்று நம்புகிறேன்!

அட்சர ஆழி, றெக்கை, பால், பின்னிருந்து சில குரல்கள், ஏவாளின் விலா எலும்பு, குளியல், திரை, 857, கச்சை, புனைவின் நிழல், சர்ப்ப வாசனை, அச்சாவோட சிச்சாமணி, சாமி, சூன்ய வெளி, மஹல்

என்ற 15 சிறுகதைகளும் திசைக்கொன்றாய் இருப்பது சலிப்பின்றி விரும்பிப் படிக்க வைக்கிறது. பிடித்திருந்தால் வாங்கிப் படித்துப் பாருங்கள்! (அடர்பச்சையில் இருப்பவை எனக்குப் பிடித்தமானவை என்று கொள்க!)

நூல் : புனைவின் நிழல்

எழுதியவர் : மனோஜ்

வெளியிட்டது : உயிர்மை பதிப்பகம்

விலை : ரூ.70

Tuesday, September 18, 2007

பேய்கிட்ட பேசியிருக்கீங்களா?

தலைப்பைப் பாத்ததும் ஆளாளுக்கு பிடிக்காத யாரயாச்சும் பேய்னு சொல்லி பழி தீர்த்துக்காதீங்க.. நான் நிஜமாவே கேக்கறேன்.

"பேய் இருக்குதா இல்லியா? பாத்திருக்காங்களா பாத்ததில்லயா? அது வர்றத எப்பிடி தெரிஞ்சிக்கறது?"

ஏன் கேட்கறேன்னா... எனக்கு பேய், பிசாசுன்னா ரொம்ம்ம்ம்ப பயம்ங்க. நான் சின்னப் புள்ளயா இருந்தப்ப அம்மா எனக்கு சாப்பாடு ஊட்டும்போது "ரெண்டுகண்ணன்" வர்றான்.. சீக்கிரம் சாப்பிட்ரு" ன்னு டி.டி.எஸ் எபக்ட்ல சொல்லி பயமுறுத்துவாங்க. நானும் ஏதோ பேயோ பிசாசோன்னு பயந்தடிச்சு மந்திரம் கேட்ட அலிபாபா குகை மாதிரி வாய திறந்து வேக வேகமா சாப்பிட்ருவேன். ரொம்ப நாள் கழிச்சி திடீர்னு ஞானோதயம் (ஒளிவட்டம்?) வந்து கோபமா அம்மாட்ட போய் "ஏம்மா எல்லாருக்கும் ரெண்டு கண்ணு தானே இரூக்கு? அத சொல்லி பயமுறுத்தியிருக்கீங்க.. நானும் பயந்திருக்கேன்.. இது என்ன கொடுமை? இது நியாயமா அடுக்குமா" ன்னு நியாயம் கேட்டேன். அம்மா ரொம்ப சாவதானமா "எல்லாருக்கும் ரெண்டு கண்ணு தான்.. ஆனா உனக்குதான் ரெண்டுன்னா எத்தனைன்னு தெரியாதே" ன்னு சொல்லி இன்சல்ட் பண்ணிட்டாங்க.

இவங்க தான் இப்படின்னா, எங்க பாட்டி வீட்டுக்கு போகும்போது ஒரு சித்தி சாப்பாடு ஊட்டுவாங்க.. என்னை சாப்பிட வைக்க இன்னொரு சித்தி முழுசா கறுப்பு பெட்ஷீட் போர்த்திகிட்டு திடீர்னு எங்காச்சும் இருந்து "ஊஊஊஊ ஹா ஹ்ஹா" ன்னு கத்திகிட்டே குதிப்பாங்க. "பச்சப்புள்ள.. எப்படி பயப்படும்? இப்படியெல்லாம் பண்ணினா உள்ள இருக்கற இன்னொரு ஜான்சிராணி (ஹிஹி நாந்தான்!) வளராமயே போய்டுவாளே?" அப்படின்னெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படறதில்ல..

ஆனா நான் இதுக்கெல்லாம் அசரல.. வளர வளர ரொம்ப தைரியசாலி ஆய்ட்டேன். கரப்பான் பூச்சிய மீசைய பிடிச்சி தூக்கறது, எலிய வாலப்பிடிச்சு தூக்கறதுன்னு (செத்தது தான்!) எல்லாரும் ஆச்சரியப்படற அளவுக்கு வீர சாகசமெல்லாம் பண்ண ஆரம்பிச்சேன்!! ஒரு முறை பெரிசா பெருச்சாளி ஒன்னை நான் அசால்ட்டா ஒரு கைல பிடிச்சிட்டு போன தகவல் தெரிஞ்சு "எனக்கு வால் (ள் இல்ல!) பிடித்த வீராங்கனை" ன்னு பட்டம் தரலாமான்னு கார்ப்பரேஷன்ல இருந்து செண்ட்ரல் கவர்ன்மெண்ட் வரை யோசிச்சாங்க.. நாந்தான் பெருந்தன்மையா "அதெல்லாம் வேணாம்.. 'பரம் வீர் சக்ரா' மட்டும் குடுத்துடுங்க போதும்" னு சொல்லி அவங்க ஆர்வத்தை தணிச்சிட்டேன்.

எலி மாதிரியே புலியையும் தூக்கற ஐடியா கூட இருந்துச்சு.. "அது எலி மாதிரி கிடையாது. உசிரோட இருந்தா கடிச்சிரும்.. செத்துப் போச்சின்னா ரொம்ப வெயிட்டா இருக்கும்" னு தகவல் தெரிஞ்சதால அந்த ஐடியாவ ட்ராப் பண்ணிட்டேன்.

சரி அது இருக்கட்டும், சொல்ல வந்ததயே மறந்துட்டேன் பாருங்க. அப்ப நான் 8 த் படிச்சிட்டிருந்தேன். முழுப்பரீட்சை லீவு விட்டா கிராமத்துல இருக்கற பாட்டி வீட்டுக்கு போய்டுவேன். அங்க எந்த வேலையும் செய்யத் தேவை இல்ல.. ஜாலியா இருக்கலாம்! சாப்பிட்டு வெளில கிளம்பினா எங்க வேணா ஊர் சுத்தலாம்.. அவ்ளோ சின்ன ஊர்ல எங்கயும் நான் தொலைஞ்சு போய்ட முடியாதுன்ற தைரியத்துல சாயந்திரம் வரைக்கும் தேட மாட்டாங்க.

அப்டி ஒரு நாள், என்கூட 3 வருஷம் ஒண்ணா படிச்ச ஃப்ரண்ட் மைதிலிய தேடிட்டு போனேன். ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா "நண்பியே.. நண்ண்ண்பியே.. நன்றி சொல்வேன் நண்பியே" ன்னு பாடிகிட்டு ஊர் முழுக்க சுத்திட்டிருந்தோம். உச்சி வெயில்ல அலைஞ்சி களைச்சு ரொம்ப பசி எடுக்க ஆரம்பிச்சிடுச்சு. நடக்கவே முடில. அப்பதான் அந்தப்பக்கமா ஒரு கோவில் கண்ல பட்டுச்சு..

"ஹேய் மைத்தி.. அங்க போனா எதுனா பிரசாதம் தருவாங்க.. அட்லீஸ்ட் சுண்டலாச்சும் தருவாங்க. சாப்டு தெம்பா வீட்டுக்கு போய்டலாம்" னு நான்
சொன்னேன். என் அறிவோட 'தீட்சண்யத்தைப்' பாத்து ஆனந்தத்துல அவளுக்கு கண்ணே கலங்கிடுச்சி.. சிவாஜி கணேசன் மாதிரி குரல் தழுதழுக்க "நீ இன்னும் மாறவே இல்லயாம்மா? மாறவே இல்லியா?" னு ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் இண்டியாவா ஆய்ட்டா!

சரின்னு ரெண்டு பேரும் கோவிலுக்கு போனோம். கோவில் முன்னால பெரிசா ரெண்டு அரச மரம், வேப்ப மரமெல்லாம் இருந்திச்சு.. அதில நிறைய ஆணி வேற அடிச்சு வெச்சுருக்காங்க.. ஆணி அடிக்க வேற இடமா இல்ல? இந்த லூசுப் பயப்புள்ளகளுக்கு ன்னு யோச்சிட்டே உள்ள போனா ரெண்டு க்யூ நின்னுச்சு. ஒரு க்யூவுல நிறைய கூட்டம்.. இன்னொன்னுல ஒரு 5 பேரு நின்னாங்க. சின்னக் க்யூவுல நின்னா சீக்கிரம் பிரசாதம் வாங்கிக்கலாம்னு
ரெண்டு பேரும் அடிச்சி பிடிச்சி ஓடிப்போய் நின்னோம்.

க்யூவுல எனக்கு முன்னால செவப்பு தாவணி போட்டுகிட்டு அழகா ஒரு பொண்ணு (அக்கா!) நின்னுகிட்டிருந்திச்சு. தல மட்டும் ரொம்ப கலைஞ்சிருந்துச்சு. அந்தக்கா திரும்பி எங்கள பாத்து ரொம்ப சினேகமா சிரிச்சிது. நானும் "ச்சே.. கிராமம்னா கிராமம் தான்..என்னா எளிமையான மனுஷங்க" ன்னு சந்தோசப்பட்டுகிட்டே பதிலுக்கு சிரிச்சி வெச்சேன். உடனே அந்தக்கா திரும்பி.. என்கிட்ட பேச ஆரம்பிச்சிடுச்சு.

"உன் பேரு என்ன?"

"பி.காயத்ரி... இவ எல். மைதிலி"

" எத்தனாவது படிக்கறே?

"8த் ஸ்டேண்டர்ட் பி"

"ஓ.. எந்தூரு நீங்க?"

"இவ இங்க பக்கத்துல தான் இருக்கா.. நான் ஈரோட்ல இருந்து லீவுக்கு வந்திருக்கேன், உங்களுக்கு தெரியாதா என்னய? திருச்செங்கோட்டார் வீட்டு மொதப் பேத்தி"

என்னமோ நாட்டாமை பொண்ணே நாந்தான்ற மாதிரி நான் கேக்கறேன்.. அது சுரத்தே இல்லாம..

"ஓஹோ.." அப்படின்னுச்சு.

இந்த ஊர்ல நமக்கு பப்ளிசிட்டி போதல போலிருக்கேன்னு நான் ஃபீல் பண்ணிட்டிருக்கும் போதே,

"ஈரோட்ல எங்க இருக்கீங்க?" ன்னு கேட்டுச்சு!

நான் ரொம்ப குஷியாகி..

"ஹை ஈரோடு வந்திருக்கீங்களா நீங்க? அங்க காரைவாய்க்கால் பக்கத்துல தான் குடியிருக்கோம், ராதாகிருஷ்ணன் வீதி, ஏழாம் நம்பர் வீடு,
பச்ச பெயிண்ட் அடிச்சிருக்கும், வீட்டுக்கு முன்னால முருங்கை மரம் ஒன்னு இருக்கும் அதான் அடையாளம்,"

ன்னு லேண்ட் மார்க்கெல்லாம் சொல்லி அட்ரெஸ் சொல்லிட்ருக்கும் போது எங்க க்யூவுல இருந்தவங்க எல்லாம் முன்னால போய் ஒரு மண்டபத்துல
வரிசையா தரைல உக்காந்துகிட்டாங்க. நாங்களும் பின்னாடியே போனோம். நான் ரொம்ப பிரியமா செவப்பு தாவணி அக்கா பக்கத்துல உக்காந்துகிட்டேன்.
ஒரு அம்மா வந்து எல்லாருக்கும் ஒரு தட்டும் எலுமிச்சம் பழமும் குடுத்திட்டு போனாங்க.

"ஆஹா இம்புட்டு நல்லவங்களா இவிங்க? பூஜை பண்றதுக்கு முன்னாடியே பிரசாதம் தர்றாங்களே? அதும் தட்டுல போடுவாய்ங்க போலிருக்கு.. ஆமா என்னத்துக்கு எலுமிச்சம் பழம்?" ன்னு நாங்க டிஸ்கஸ் பண்ணிட்டிருக்கும் போது கூட இருக்கறவங்க எல்லாம் தட்டுல எலுமிச்சம்பழத்தை வெச்சு தட்டத் தூக்கி தலை மேல வெச்சிகிட்டாங்க. எங்களுக்கு ஒரு எழவும் புரியல.. இப்படி பண்ணினா தான் சாப்பாடு போடுவாங்க போலன்னு நாங்களும் தட்டத் தூக்கி தலைல வெச்சிட்டு 'தேமே' ன்னு உக்காந்திருந்தோம்.

அப்புறம் ஒரு தட்டு பூரா விபூதிய எடுத்துகிட்டு, கைல வேப்பிலை வெச்சிகிட்டு ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரி ஒரு பூசாரி வந்தார். வந்தவரு
என் பக்கத்துல தட்ட கீழ வெச்சிட்டு கைல உடுக்கை எடுத்துகிட்டு திடீர்னு சத்தமா " ஏய்ய்ய்ய் கருப்புசாமி முனுசாமி.." ன்னு வரிசையா சாமி பேர்
சொல்லி "வந்துடு வந்துடு" ன்னு ஆடிகிட்டே பாட ஆரம்பிச்சிட்டார். திடீர்னு உடுக்கை அடிச்சதுல மைதிலி 'விருக்'னு பயந்துட்டா. அவ தலைல
இருந்த தட்டு 'டமால்' னு கீழ விழுந்துடுச்சு. நானும் பயத்துல தான் இருந்தேன்னாலும் அவ மூஞ்சிய பாத்து "ஹெஹ்ஹே" ன்னு சத்தமா சிரிச்சிட்டேன்.

உடனே பூசாரி உடுக்கை அடிக்கறத நிறுத்திட்டு என் பக்கத்துல வந்து என் கண்ணை உத்த்த்த்துப் பாத்து.. "யாரு நீ? சொல்லு யாரு நீ" ன்றாரு.
நான் நொந்து போய்ட்டேன். "யோவ்.. என்ன பயோடேட்டா சொன்னா தான் பிரசாதம் தருவீங்களா?" ன்னு உள்ளார கொந்தளிக்கறேன்... ஆனா வாய்ல இருந்து வார்த்தையே வரல.

நான் பேசலன்னதும் அவரு இன்னும் சத்தமா உடுக்கை அடிச்சிட்டு நாராசமா பாட ஆரம்பிச்சிட்டாரு. அப்ப தான்.. பக்கத்துல "ஹ்ஹ்ஹ்ம்ம்ம்...ஹ்ம்ம்ம்" னு
யாரோ உறுமற மாதிரி சத்தம். திரும்பிப்பாத்தா செவப்பு தாவணி அக்கா.. ரொம்ம்ம்ம்ம்ப கோபமா பூசாரிய பாத்து மொறச்சிட்டிருக்கு. பூசாரி உடனே
என்னை விட்டு அக்கா பக்கத்துல ஷிப்ட் ஆகி.. "யேய்.. யாரு நீ? சொல்லு யாரு நீ?" ன்றாரு. (இந்தாளுக்கு வேற வேலயே இல்லியா?)

உடனே அந்தக்கா.. " நானா?.. நாஆஆனா?" ன்னு கத்திட்டு முன்னயும் பின்னயுமா சாமியாடுச்சு. அப்புறம் "நானு செல்வராசு.. மேலத்தெரு செல்வராசு" ன்னு ஆம்பளக் குரல்ல அட்ரெஸ் சொல்லுது.. யம்மே! எனக்கு கொல நடுங்கிடுச்சு.

அப்றம் பூசாரி பாட்டுக்கு ரொம்ப சகஜமா.. "எப்ப செத்தே? எப்பிடி செத்தே? இந்த புள்ளய எங்க வெச்சி புடிச்சே" ன்னு டீடெய்லா விசாரிக்க, அதுவும்
"நானு புளியமரத்தாண்ட இருந்தேன்.. இந்த புள்ள உச்சில கறிக்கொழம்பு கொண்டு போச்சி.. ஏறிகிட்டேன்" ன்னு பொறுப்பா பதில் சொல்லுது.

அடுத்தாப்பல "சரி.. நீ போய்டனும்.. என்ன வாங்கிட்டு போறேன்னு சொல்லு? நாட்டுக்கோழியும் நாலுகட்டு பீடியும் போதுமா?" ன்னு டீலிங் பேசறாரு
பூசாரி. அது "இல்ல.. சாராயம் குடு.. சாராயம் குடு" ன்னு கத்துது.

நான் வெலவெலத்து திரும்பிப் பாத்தா மைதிலிய ஆளயே காணோம்.. பாவி.. எப்ப எஸ்கேப் ஆனான்னு தெரியல.. எனக்குள்ள இருந்த ஜான்சிராணியும்
பர்மனெண்டா லீவ் போட்டுட்டு போய்ட்டா. அவ்ளோ தான்.. நானும் 'கபால்'னு கிளம்பி கண்ணு மண்ணு தெரியாம ஓடறேன். பின்னாடியே யாரோ துரத்தறாப்பல வேற இருக்கேன்னு பயந்து நான் அஞ்சு ஜார்ஜ் கணக்கா ஓடும்போது "ஏய் நில்லுடி, நில்லுடி" ன்னு அந்த துரோகி மைதிலியோட குரல் கேட்டுச்சு. கோவில் பக்கத்துல ஒளிஞ்சிருந்து நான் ஓடும் போது அவ தான் பின்னால ஓடி வந்தாளாம். நாசமா போக..

வீட்டுக்கு வந்தும் நான் யார்கிட்டயும் எதும் மூச்சு விடல. அடுத்த நாளே "ச்சே... கிராமம் ரொம்ப போர் அடிக்குது" ன்னு பந்தா பண்ணிகிட்டு
ஊருக்கு கிளம்பி வந்துட்டேன்.

வீட்டுக்கு வந்து, "ஆத்தி அவ்ளோ நேரம் பேய்கிட்டயா பேசிட்டிருந்தோம்? அட்ரஸ் எல்லாம் சொன்னமே? முருங்கை மரம் இருக்குன்னு வேற சொல்லிட்டோமே? ரொம்ம்ப முக்கியமா இதெல்லாம்? அட்ரஸ் கண்டுபிடிச்சு வந்துடுமோ" ன்னு ராத்திரி பகலா ஷிப்ட் போட்டு பயப்பட்டுகிட்டே இருந்தேன்.

ரெண்டு நாள் கழிச்சு அக்கம் பக்கத்து ஃப்ரண்ட்ஸ்கிட்ட இந்த பிரச்சினை பத்தி சொல்லி டிஸ்கஸ் பண்ணினேன். உடனே எல்லாரும் "பேய்க்கு வெள்ளைப் பூண்டுன்னா பயம்.. இல்லல்ல.. வெங்காயம்னா தான் பயம்" னு ஆளாளுக்கு பேயறிவுத் தகவல்களா சொன்னாங்க.

நான் ரொம்ப குழம்பிப் போய்.. எதுக்கும் இருக்கட்டும்னு கொஞ்ச நாள் ஸ்கூல் பேக்ல வெங்காயம், வெள்ளைப்பூண்டு, இஞ்சி, பட்டை, லவங்கம் னு பிரியாணி செய்ற அளவுக்கு மசாலா சாமானெல்லாம் தூக்கிட்டு
திரிஞ்சேன்..

அப்புறம் ஜான்சிராணி மறுபடி லீவ் முடிஞ்சி வந்துட்டதாலயும் நாங்க புதுசா குடி மாறுன வீட்டோட அட்ரெஸ் மிஸ்டர். செல்வராசுக்கு
தெரியாதுன்ற தைரியத்துலயும் அதெல்லாம் தூக்கிப் போட்டுட்டேன்!

......ரமேஷ் அண்ணாவிற்கு

Monday, September 17, 2007

இழந்த மழை..இரவோடிரவாய்
வந்து போய் விட்டிருக்கிறது
மழை.

முன்வாசல் மரங்களின்
இலைகளிருந்து
துளித்துளியாய்ச் சிந்தும்
நீர்த்துளிகள்

நினைவூட்டியபடி விழுகின்றன
நான் தவறவிட்ட தருணங்களை!

அம்முவாகிய நான்

நடிப்பு : பார்த்திபன், பாரதி, மகாதேவன்...

இயக்கம் : பத்மா மகன்

இசை : சபேஷ் - முரளி

ஒளிப்பதிவு : எம்.எஸ்.பிரபு


அம்முவாகிய நான்... ஆகஸ்ட் 31 ம் தேதியே தியேட்டர்களுக்கு வந்து விட்டாள். போய்ப் பார்க்கத்தான் சந்தர்ப்பமே வாய்க்கவில்லை. வந்த ஒரு வாரத்திலேயே 'அத்திப் பூத்தாற் போல ஒரு அபூர்வமான படம்' என்ற வாசகத்துடன் விளம்பரங்கள்! அத்தி பூத்தாலும் ஆலமரம் பூத்தாலும் இனி மொக்கைப்படம் பார்க்க தியேட்டருக்குப் போவதில்லையென சங்கல்பம் எடுத்திருந்ததால் சில நாட்கள் காத்திருக்க வேண்டியதாகி விட்டது.

போதாக்குறைக்கு தவறாமல் என் பதிவுகளுக்கு பின்னூட்டமிடும் 'புண்ணியவதி' இந்த படத்திற்கு மட்டும், 'படம் பார்த்தாலோ விமர்சனம் எழுதினாலோ குத்துவேன் கொல்லுவேன்' என்று கொலை மிரட்டல் விடுத்து வந்ததும் தாமதத்திற்கு ஒரு முக்கிய காரணம்!

என்றாலும் வெகுவாய் போரடித்த நாளொன்றில் என்ன செய்வதென்று தெரியாமல் துணிந்து கிளம்பிப் போய் படத்தைப் பார்த்தே விட்டேன்! ஏற்கனவே நாயகன், மூன்றாம் பிறை, மகாநதி போன்ற படங்களில் கமல் கோடிட்டுக் காட்டிய விஷயம் தான் என்றாலும் கற்பு, கண்ணகி, விபச்சாரி போன்ற வார்த்தைகளை தொட்டாலே தீப்பற்றிக் கொள்ளும் தமிழ்நாட்டில் இப்படி ஒரு விபரீதமான கதைக்களத்தில் படம் எடுக்க கொஞ்சம் அசாத்தியத் துணிச்சல் தேவை.

படம் முடிந்த பின்பும் கூட இது பார்த்திபன் இயக்கம் என்றே தான் நினைத்திருந்தேன். இயக்குனர் பெயர் பார்த்த பின்பு தான் 'யாரிந்த பத்மா மகன்' என்று யோசிக்கத் தோன்றியது.

படத்தின் துவக்கத்தில் இடி மின்னலுடன் கூடிய மழையிரவில் பிரசவக் காட்சியைப் பார்த்ததும் "அய்யோ மறுபடி மாட்டிக்கிட்டோம் போலிருக்கே" என்று அதிர்ச்சி வந்தது. (அது ஏன் தமிழ்ப்படங்களில் மட்டும் பிரசவ நேரங்களில் மழை பெய்கிறது?) இடி மின்னல்களுக்கிடையில் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றுவிட்டு தாய் இறந்து போய் விட தகப்பன் அதை ஒரு பாலியல் தொழிலாளியிடம் விற்றுவிட்டுப் போகிறான். அந்த வீட்டுச் சூழலை பார்த்தும் பழகியும் வளர்ந்து வரும் 'அம்மு' என்ற அப்பெண் பெரியவளானதும் விபச்சாரத்தை விரும்பி ஏற்றுக்கொள்பவளாய் இருக்கிறாள்.

எழுத்தாளர் கெளரிசங்கராய் பார்த்திபன். இந்திய இலக்கியக் கழகத்தின் விருது பெற்றுவிடும் லட்சியத்தோடு வித்தியாசமான கதைக்களம் தேடி விபச்சார விடுதிக்கு வரும் பார்த்திபன் தன் அறையை பொம்மைகளால் நிறைத்திருக்கும் அம்முவால் கவரப்பட்டு, அவளை தன் கதைக்கு மட்டுமின்றி வாழ்க்கைக்குமான கதாநாயகியாய் சுவீகரித்துக் கொள்கிறார்.

குடும்ப வாழ்க்கையில் நாட்டமில்லாத அம்மு படிப்படியாய் அதன் சுகங்களை, அர்த்தங்களை உணரத் தொடங்குகையில் இலக்கிய கழகத்தின் தலைவராய் வரும் வில்லன் மகாதேவன், விருதுக்கு விலையாக அவளின் உடலைக் கேட்க பார்த்திபனுக்கு நன்றி(?) செலுத்தும் விதமாய் நிபந்தனைக்கு சம்மதிக்கும் அம்மு வில்லன் தொட்டதும் திடீரென சீறி நிமிர்ந்து அவனை அடித்தே கொல்கிறாள்! (கொலையும் செய்வாள் பத்தினி?!) "பிரார்த்திப்பது என்பது எதையும் நோக்கியல்ல.. அன்பாய் இருப்பதே" என்று ஓஷோவின் வார்த்தைகளோடு முடித்திருக்கிறார்கள் படத்தை!

இது என்ன கதை? இதை ஏன் இவள் பாராட்டுகிறாள் என்று சிலர் நினைக்கக் கூடும். படத்தின் மிகப்பெரிய பலம் பார்த்திபன். 'அழகி' போல கண்ணியமான கதாபாத்திரம். 'கற்பு கன்னிமை கர்மம் எல்லாம் கண்டு கொள்ளாத' ஒருவனாய் வலம் வருகிறார். ஒரு விபச்சாரிக்கு 'வாழ்க்கை கொடுத்தவனாய்' இல்லாமல் அவளிடமிருந்து வாழ்க்கையைப் பெற்றவனாய் தன்னை வரித்துக் கொண்டிருப்பது அற்புதம்! மிகைப்படுத்தல் இல்லாமல் மென்மையாய் ஆழமாய் இழையும் காதல், அம்மு காணாமல் போகையில் வரும் தவிப்பு, அழுகை, பரிவு, கோபம், ஆக்ரோஷம் என படம் முழுக்க உணர்ச்சிகளால் நிறைத்(ந்)திருக்கிறார்.

அம்முவாய் அறிமுகமாகும் பாரதிக்கு ஆழமான கண்கள், நேர்த்தியான நாசி. என்றாலும் முகம் மனதில் பதியவில்லை. படம் முழுக்க தன்னை மையமாய்க் கொண்டிருப்பதால் பொறுப்புணர்ந்து நடித்திருக்கிறார். ஒரு விலைமகள் குடும்பப் பெண்ணாய் பரிணமித்த பின்பாய், கணவனின் முன்னால் செயற்கைத்தனங்களின்றி அவள் முகத்தில் தோன்றும் 'உண்மையான' நாணம் ஆச்சரியமாய் ரசிக்க வைக்கிறது! வெகு அழகாய் பிரதிபலித்திருக்கிறார். குடும்பம் என்ற கட்டுக்கோப்பான அமைப்பிற்கு சமூகம் வழங்கும் கெளரவத்தை அம்மு உணர்ந்து கொள்ளும் காட்சிகள் 'புதிய பாதையை' நினைவூட்டுகின்றன.

அம்மு, கெளரி என இணக்கமான பெயர்களும் அதிர்வில்லாத வசனங்களும் அமைதியாய் நகரும் காட்சிகளும் மனதிற்கு இதமாயிருக்கின்றன.

திருமணத்தின் போது எங்கோ திரும்பி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அம்முவின் மோவாயைப் பிடித்து தன் புறமாய்த் திருப்பி, தலையை தாழ்த்தி கழுத்தில் தாலி கட்டுவதிலும்,

கணவனும் மனைவியும் பரஸ்பரம் ஆரத்தி எடுத்துக் கொள்வதிலும்,

"இது என் அம்மு.. பேரு பொண்டாட்டி" என்று அறிமுகப்படுத்துவதிலும்

படுக்கையை அலங்கரித்து "இது மொத ராத்திரி.. நீ தனியா தூங்கப் போற முதல் ராத்திரி" என்று சொல்வதிலும்


பார்த்திபன் 'டச்' தெரிகிறது.


இசை சபேஷ் - முரளியாம். கல்யாணி, ஹரீஸ் ராகவேந்திராவின் குரலில் "உன்னைச் சரணடைந்தேன் மன்னவா" பாடல் மட்டும் மயக்கியெடுக்கிறது. இன்னும் சில நாட்களுக்கு பயணங்களில் கேட்கவும் அடிக்கடி முணுமுணுத்துக் கொள்ளவும் வசதியாய் இருக்குமென்று தோன்றியது.


கண்களுக்கு குளுமையாய் ஒளிப்பதிவு. பார்த்திபன் வீடு கொள்ளை அழகு!

மொத்தத்தில், சில இடங்களில் உறுத்தலாய் நிற்கும் கமர்ஷியல் சினிமாத்தனங்கள், முன்பே யூகிக்கும்படியான அழுத்தமில்லாத க்ளைமாக்ஸ் மற்றும் லாஜிக் குறைபாடுகளைத் தவிர்த்து விட்டு (அல்லது சகித்துக் கொண்டு) பார்த்தால் அம்முவாகிய நான் நன்றாகவே இருக்கிறாள்!!

என்றாலும் குழந்தைகள், வயோதிகர்கள், கர்ப்பிணீப் பெண்கள் மற்றும் இருதயம் பலஹீனமாவர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன்! (ஜி3 நீ இதுல எந்த கேட்டகிரி?)

இதனால் சகலமானவர்களுக்கும்...

தமிழ்மணம் பற்றியோ வலைப்பதிவுகள் பற்றியோ நட்சத்திர அந்தஸ்து பற்றியோ எதுவுமே அறிந்திராத நாளொன்றில், முதன்முதலாய் பள்ளி செல்லும் குழந்தை போல நிறைய தயக்கங்களோடு நான் என் வலைப்பதிவை தொடங்கிய போது


"கண்கள் மற்றும் கற்பனையின் சக்திக்கு அப்பாற்பட்டு பரந்து விரிந்திருக்கும் இந்த வானத்தில் நானும் ஓர் நட்சத்திரமாய் மின்ன வந்திருக்கிறேன். நட்சத்திரங்களை எண்ணும் எந்தக் குழந்தையாவது என்னை அதன் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளாமலா போய் விடும்? நம்பிக்கையுடன் துவங்குகிறேன்!!"


என்று என் அரங்கேற்றத்தில் சொல்லிருந்தேன். ஏப்ரல் 28 ம் தேதி இதைப் பதிவிட்டு மிகச்சரியாய் நான்கு மாதங்களில் ஆகஸ்ட் 28 ம் தேதி தமிழ்மணத்தாரின் நட்சத்திர அழைப்பை ஏற்க வேண்டியிருந்தது. இச்செய்தியை என் தலையின் எடையைச் சற்று கூட்டக் கூடிய விஷயங்களில் ஒன்றாக நான் கருதிக் கொண்டாலும் பார்வையாளர் வரிசைகளில் ஏதோவோர் கடைக்கோடி இருக்கையில் உட்கார்ந்திருந்தவளை அழைத்து வந்து மேடையின் கண் கூசும் வெளிச்ச விளக்குகளுக்கு நடுவே நிறுத்தினாற் போல பதற்றமே மிஞ்சியிருக்கிறது இப்போது!


நானறிந்த என் உயரம் மற்றும் இன்னும் விஸ்தரிக்கப்பட்டிராத என் எழுத்தின் சிற்றெல்லைகள் கேலிப் புன்னகையுடன் என்னை நோக்கியபடி இருப்பதால் இன்னும் ஒரு வார காலம் என்ன எழுதப்போகிறேன் என்பது விளங்கவில்லை. (யாருங்க அது? எழுதினா மட்டும் வெளங்கவா போகுதுன்னு சொல்றது?!)


என்றாலும் என் அடையாளங்களைத் (கவிதை?) தக்க வைத்துக் கொள்வதற்கான தன்முனைப்பு மற்றும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளும் பொறுப்புணர்வின் மீதான உந்துதலிலாவது எதையேனும் எழுத முடியுமென நம்புகிறேன்.


மற்றபடி, 'எவரையும் நிராகரிக்காமலும் எவராலும் நிராகரிக்கப்படாமலும் வாழ விரும்பும், வெகு சாதாரணள்' என்பது தவிர என்னைப் பற்றிச் சிறப்பித்துச் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை.


இந்த நான்கு மாதங்களாய் நானாவிதமான திசைகளிலிருந்தும் என் மேல் அன்பைப் பொழிந்து வரும்(?) நண்பர்கள் மற்றும் பாசக்காரக் குடும்பத்தினர் என் பதிவுகளுக்கு பின்னூட்டங்களின் வழி "ஊட்டம்" தரவிருப்பதாக சென்ற வாரத்தொடக்கத்திலிருந்தே உளவுத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தபடியிருக்கின்றன!! எல்லோரையும் அன்பு கூர்ந்து வரவேற்கும் இதே வேளையில் பொன்மொழி ஒன்றையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்..."கமெண்ட் மாடரேஷனை நம்பினோர் கை விடப்படார்!"
நட்புடன்...


காயத்ரி

Thursday, September 6, 2007

அறிந்தும் அறியாமலும்

எதிர்பாராமல் மட்டுமல்ல...

தெளிவான தீர்மானங்கள்
துல்லியமான திட்டமிடல்கள்
மற்றும்
விரிவான ஆயத்தங்களோடும் கூட
நிகழலாம்
சில கொடிய விபத்துகள்.

Sunday, September 2, 2007

அன்பிற்கும் உண்டோ..பரஸ்பரம் விரல் நீட்டிக்
குற்றம் சாட்டிக் கொள்ள..

குரூரமாய்
விமர்சித்துக் கொள்ள..

ரத்தம் வரும்படியாய்
வார்த்தைகளால் கீறிக் கொள்ள..

எல்லோரிடமும் இருக்கின்றன
ஒரு சில காரணங்கள்.

என்றாலும்..

மேடு பள்ளங்களை
இட்டு நிறைத்தபடி

ஊரின் கிழக்கே
பெருக்கெடுத்து
ஓடியபடியிருக்கிறது
ஒரு நதி!

Saturday, September 1, 2007

அன்பு சொல்லும் தருணம்..குழந்தைகள்
அழகான தொல்லைகள்...

நீயும் அப்படித்தான்..

உடனிருந்தும் இல்லாமலும்
இம்சிக்கிறாய் என்னை!

சிறிது சிறிதாய்
அன்பு தந்து
என்னைப் பெரியதோர்
கடனாளியாக்கி விட்டிருக்கிறாய்..

உன் ஓயாத பேச்சுக்கள்
என் தனிமைகளை
நிரப்புகின்றன..

பயணங்களின் போது
உடன்வருகின்றன...

யாருமில்லா நாட்களில்
துணையிருக்கின்றன...

பிரியத்திற்குரிய தோழீ..

என்னிடம் தொலைபேசுவதை
தினசரிக் கடமையாகக்
கொண்டிருக்கிறாய் நீ

உன்னை மறவாதிருத்தலை
வாழ்நாள் லட்சியங்களிலொன்றாய்
வைத்திருக்கிறேன் நான்!

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

பிறந்தநாள் காணும் என் ப்ரியசகி..

புத்தகங்களை விட்டு விலகி மனிதர்களைப் படிக்கத் தொடங்கிய நாட்களிலிருந்து கூடவே எச்சரிக்கை உணர்வொன்றும் நிரந்தரமாய்த் தங்கி விட்டது மனதில். அன்பும் அக்கறையுமாய் உள்ளில் ஆழப்பதியும் மனிதர்கள் பிரிவென்னும் பெயரால் உறவை வேரோடு பிடுங்கிப் போகையில் மண் சரிவைப் போன்றே மனமும் சரிந்து போக நேரிடுகிறது. எவரேனும் அன்பு சொல்லி அருகில் வந்தால் பயமாயிருக்கிறது. "எவரின் அன்பையும் ஏற்பதுமில்லை நிராகரிப்பதுமில்லை" என்று பொதுவிதியொன்றைப் புனைந்து கொண்டு இயந்திரகதியில் இயங்கிக் கொண்டிருந்தாலும் சுவர்களில் கசிந்தூறும் மழை நீராய், எவருடைய அதீத அன்பினாலோ, எதிர்நோக்கங்கள் அற்ற அக்கறையினாலோ எப்போதாவது இறுக்கங்கள் தளர்ந்து மனதின் ஊற்றுக்கண்களில் அன்பு கசியத் தொடங்கி விடுகிறது.

அன்றும் அப்படித்தான் நிகழ்ந்தது. பிரிவு, துயர், நிராகரிப்பு, வலியென கண்ணீர் சுமந்த கவிதைகளையே அதிகம் பதிவித்து வரும் நான் இடையிடையே லேசாய்ச் சிரிக்கவும் வைத்திருப்பேன். அது தான் அவளை என்னிடம் கொண்டு சேர்த்திருக்க வேண்டுமென நினைக்கிறேன். பதிவிடத் தொடங்கிய என் ஆரம்ப நாட்களில், எவரும் என்னை கவனத்தில் கொண்டிராத தினங்களிலிருந்தே என் பதிவுகளுக்கு தொடர்ந்து பின்னூட்டமிட்டு வந்த அவள், முதன் முதலாய் என் சோகப்பதிவு தொடர்பாய் மடல் ஒன்று அனுப்பியிருந்தாள்.

"உன் வரிகள் என்னை ரொம்ப பாதிச்சிடுச்சு. என்ன சோகம்னு நீ என்கிட்ட சொல்லித்தான் ஆகனும்னு கட்டாயமில்ல. ஆனா யார்கிட்டயாச்சும் சொல்லனும்னு நீ விரும்பினா U can count on me ன்னு சொல்லத்தான் இதை எழுதினேன்"

என்று சொல்லப்பட்டிருந்தது அதில்! அந்த கடிதம் கொண்டு வந்த அன்பு, வார்த்தைகளில் இருந்த ஆறுதல், அடுத்தவர் அந்தரங்கத்தில் எட்டிப் பார்க்க விரும்பாத இங்கிதம், 'நானிருக்கிறேன் உனக்கு' என்ற நம்பிக்கை எல்லாம் சேர்ந்து எதிர்பாராமல் என்னை ஆக்கிரமிக்க, முகமறியாத அந்த பிரியத்தின் நெகிழ்வில் லேசாய் கண்ணீர் துளிர்த்தது.

அதன் பின்.. முதன் முதலாய் என் பிறந்தநாளன்று பேசத் துவங்கினாள். வாழ்த்தினாள்.. நலம் விசாரித்தாள்...என் கவிதைகளை சிலாகித்தாள்.. கேலியாய் விமர்சித்தாள்.. தினமும் பேசியே இம்சித்தாள்... பேசாத நாட்களில் 'எங்கே போனாளென' கவலையாய் யோசிக்க வைத்தாள்..


இத்தனையும் செய்த அவள்... அழகான ராட்சசி...

என் இனிய ஜி3!


இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறாள்!!


கொஞ்சம் அன்பு, கொஞ்சம் அக்கறை, கொஞ்சம் பரிவு, கொஞ்சம் பொறுப்பு.. நிறைய்ய்ய குறும்புகள்.. இவையெல்லாம் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்ட அற்புதமான பெண் அவள்! அவளை நான் எத்தனை நேசிக்கிறேன் என்பதை இதுவரை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதுவரை நானும் சொன்னதில்லை. ஆயினும் என்ன? என் அன்பைச் சொல்ல இன்றைய தினம் நிச்சயம் பொருத்தமாயிருக்கக் கூடும்.எங்கள் செல்லத்திற்கு


இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!