Sunday, January 20, 2008

வனம்


இப்போதெல்லாம்
சொல்காய்ச்சி மரமாகிவிட்டது
மனம்..

சொல் விழுந்த இடங்களில்
மற்றுமோர் மனம் முளைக்கிறது.

மறுபடி முளைத்து
மறுபடி கிளைத்து
மனங்கள் பெருகிப் பெருகிப்
பெருகியபடியிருக்க
முடிவில்
எல்லைகளில்லாப்
பெருவன
மாகிறேன் நான்.

வனத்திற்குள் வழிகளுண்டா?
வனத்திற்கு வாசல்களுண்டா?
வனமில்லா இடமேதும் உண்டா?
தெரியவில்லை..

உச்சரிக்கவிரும்பா உதடுகள் இப்போது
மெளனம் பேசப் பழகுகின்றன.

நினைவுகள் உரசிக்கொண்டதில் மெதுவாய்
வெந்து தணிகிறது காடு.

Tuesday, January 8, 2008

ஜெயமோகனின் சங்கச் சித்திரங்கள்
ஈரோட்டில் நல்ல புத்தகக் கடைகள் இல்லையென்பது என் நெடுநாளைய வருத்தம். இருக்கும் ஓரிரு கடைகளிலும் "செல்வந்தராவது எப்படி?" "சிகப்பழகு பெற சில வழிகள்" "செட்டிநாட்டு சமையல்"என்ற ரீதியில் மணிமேகலைப் பிரசுரங்களையும் பாடாவதி புத்தகங்களையுமே நிரப்பி வைத்திருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவருக்கு சங்கநூல்களை அன்பளிக்க வேண்டி கடைகடையாய் ஏறி இறங்கிய போது இதைப் பெருங்குறையாக உணர நேர்ந்தது.

'சங்க இலக்கியம் இருக்கா?' என்ற என் கேள்விக்கு ஏறக்குறைய எல்லாக் கடைக்காரர்களுமே ஒரே மாதிரியான திகைப்புடனும் மொழி விளங்காதது போன்ற பாவனையுடனும் இல்லையென வருத்தம் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் மட்டும் விடாப்பிடியாய்த் தேடி சின்னஞ்சிறு புத்தகக் கட்டிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து 'இதுவா? பாருங்க' என்றார். அது ஜெயமோகன் எழுதிய "சங்கச் சித்திரங்கள்". நான் கேட்ட புத்தகத்தின் தலைப்போடு 'சங்கம்' என்ற வார்த்தை பொருந்திப் போயிருப்பதால் தேடியது கிடைத்துவிட்ட திருப்தியோடும் அதை நான் நிச்சயம் வாங்கிக் கொள்வேன் என்ற நம்பிக்கையோடும் முகம் பார்த்து நின்றார் கடைக்காரர். எரிச்சலாயிருந்தது எனக்கு. அவர் தேடும்போதே சங்க இலக்கியம் ஈரோட்டில் கிடைக்கப் போவதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டிருந்ததால், 'வெறுங்கையோடு திரும்பிப் போவானேன்' என்று வாங்கி வந்ததுதான் இந்தப் புத்தகம்.

அதற்கு முன்பாக காடு நாவலில் மட்டுமே ஜெயமோகன் எனக்கு பரிச்சயமாகியிருந்தார். பிரமிப்பூட்டும் வீரியமிக்க எழுத்து அவருடையதென்று அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு. காடு நாவலிலேயே குறுந்தொகை பற்றிய சிலாகிப்புகள் அற்புதமாயிருந்ததால் புத்தகம் பிரிக்கையில் என்னையறியாமலேயே மிதமான எதிர்பார்ப்பு தோன்றியிருந்தது.

"தலைவியின் தவிப்பை கபிலர் எத்தனை நுட்பமாய் வர்ணித்திருக்கிறார்..." என வழக்கமான உரைகாரர்களின் பழக்கப்பட்ட வாசகங்களை எதிர்பார்த்துப் புத்தகம் பிரித்த எனக்கு பெருத்த ஏமாற்றமும் ஆச்சரியமுமாயிருந்தது அவரின் நடை. புத்தகம் முழுக்க கவிதையையோ கவிதைக்களத்தையோ விளக்குவதில் அக்கறை காட்டாமல் தன் சொந்த அனுபவங்களை விவரித்துச் சொல்லியிருந்தார். அதையும் கவிதையோடு முழுமையாய்த் தொடர்பு படுத்தாமல் கொண்டு கூட்டியுணர வைக்கும் உத்தி அபாரம்!

ஒரு மனிதனின் வயது என்பது அவன் உடம்பு வாழ்ந்த காலத்தின் கணக்கு... உண்மையான வயது அவன் அனுபவங்களைக் கொண்டு கணக்கிடப்படுகிறது என்று ஏதோவோர் கதையில் பாலகுமாரன் சொல்லியிருப்பார். அந்த வகையில் ஜெயமோகனின் அனுபவங்களில் நூற்றாண்டு முதிர்ச்சியைக் காணமுடிகிறது. வாசகியும் காதலியுமான அருண்மொழி நங்கையுடனான காதல் நாட்கள், தாயும் தந்தையும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட பின்னாக பைசாசமாய் மாறித் துரத்திக் கொண்டிருந்த தனியிரவுகள், வறுமையால் குடிசைகளில் வாழ்ந்திருந்த நாட்கள், நிகழ்வுகள் மற்றும் மனதின் அலைவுகளைப் பின்தொடர்ந்து மேற்கொண்ட பயணங்கள் என வாழ்வின் சாரமாயிருக்கும் அனுபவங்களை, அனுபவங்களின் சாரமாயிருக்கும் சங்கக் கவிதைகளோடு அழகாய் இணைத்துப் புரிவிக்க முயன்றிருக்கிறார்.


"இங்கே நாம் சங்க இலக்கியத்தை பள்ளிப்பாடமாக மனப்பாடம் செய்கிறோம்.. கோயில் சிலைகளைப் போல இருட்டில் வைத்து வழிபடுகிறோம்.. அல்லது ஏதோ தொல்பொருள் பொருள் போல சுரண்டி சுரண்டி ஆய்வு செய்கிறோம். கவிதை அடிப்படையில் வாழ்வுடன் தொடர்புள்ளது. வாழ்வை விரிவுபடுத்துவது. வாழ்வை வைத்துத் தான் கவிதையை வாசிக்க வேண்டும்"


என்று முன்னுரையில் இடம்பெறும் பீடிகையின் பொருளாக தன்னனுபவங்களையும் தன்சார்ந்த மனிதர்களின் வாழ்வையுமே நூலின் அடித்தளமாக்கியிருப்பது வாசிக்கத் தூண்டும் நேர்மையானதோர் உத்தி என்பேன்.

குறுந்தொகை, புறநானூறு, நற்றிணை மற்றும் கலித்தொகையிலிருந்து 40 பாடல்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். சங்கப்பாடல்களில் பாலைத்திணைப் பாடல்களின் மீது பெருவிருப்போடிருக்கும் நான், மருதத் திணையை மட்டும் எப்போதும் ரசித்ததில்லை. மருதம் ஊடலும் ஊடல் நிமித்தமுமான உரிப்பொருளுடையது. ஊடலுக்கு முக்கிய காரணியாயிருப்பது தலைவனின் பரத்தமையொழுக்கம். தலைவன் பரத்தையரை நாடிச்செல்வதால் தலைவிக்கு வரும் கோபம் ஊடலுவகையில் வகைப்படுத்தக் கூடியதா? என்னவொரு அபத்தமான வரையறை....! அந்த கோபத்தையும் நேரடியாய் வெளிப்படுத்தவியலாமல் இறைச்சிப் பொருளாய் தலைவி இடித்துரைப்பதும், மதி மயக்கும் அழகோடு வீதியில் நடந்து வரும் பெண்ணைக் கண்டதும் தன் கணவனை அவளிடமிருந்து காத்துக் கொள்ள வேண்டுமேயென கவலைப்படுவதும் எத்தனை ஆபாசமானது?

ஒருவனுக்கு ஒருத்தியென பறைசாற்றிக் கொள்ளும் தமிழ்ப்பண்பாடும், சங்ககாலம் 'பொற்காலம்' என்ற அர்த்தமற்ற கருதுகோளும் பொய்யாகிப் பல்லிளிப்பது மருதத்திணையில் தான். இதையே வழிமொழிவது போல "மருதத்திணைப் பாடல் வேறெந்த நுட்பம் கொண்டதாக இருந்தாலும் என் மனம் அதை ரசிப்பதில்லை"எனச்சொல்லிக் கொள்ளும் ஜெயமோகன்,

"பத்தினியிடமும் பரத்தையரிடமும் மாறி மாறி ஓடும் தலைவர்களைச் சார்ந்து வாழும் அவ்வாழ்க்கையில் பத்தினியாய் இருப்பதற்கும்பரத்தையாக இருப்பதற்கும் வேறுபாடு ஏதும் இல்லை என்றே இப்போது படுகிறது."

என்கிறார்.

வாசகன் தன் பார்வையை படைப்பாளியின் கண்கொண்டு காண நேர்கையில் படைப்பும் அவனும் ஒன்றென்றாகி விடுவதை இதைப் படிக்கும்போது உணர்ந்தேன். தன்னைப் போலவே முகம் கொண்ட மனிதரை எதிர்பாராமல் சந்தித்த மகிழ்வையும் திகைப்பையும் அதிர்ச்சியையும் ஒருங்கே தந்த வரிகள் இவை.

40 கட்டுரைகளில் "சூனியத்தில் ஓர் இடம்" மற்றும் "உதிரச்சுவை" ஆகிய இரண்டு கட்டுரைகளும் கொடியதோர் நோயைப் போல.. தவிர்த்து விட முடியாத ஆழ்மன அச்சத்தைப் போல இன்னும் என்னைப் பீடித்திருக்கின்றன. இரண்டும் இருவேறு விதமான பிரிவைப் பற்றிப் பேசுகின்றன. எட்டு வருடங்களாய்க் குழந்தை வேண்டி தவமிருந்த ஒருவருக்கு முளைவிதை போல சின்னஞ்சிறியதாய் ஒரு பிள்ளை பிறந்து, மண்ணிற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளத் தெரியாமல் பிறந்த சில நாட்களில் இறந்து போகிறது.


"ஒருவர் நிரப்பியிருந்த இடம் எவ்வளவு என்று மரணம் மூலம் நாம் அறிகிறோம். வெற்றிடத்தின் வலிமை என்பது அதன் மீது மோதும் சூழலின் அழுத்தமே. முடிவின்மையாகிய கால இடப் பருவெளியின் எடை முழுக்க அந்த வெற்றிடத்தின் மீது கவிகிறது போலும்."


என்ற வரிகள் இழப்பின் வலியை எக்காலத்தும் முடிவற்றதாய் நீட்டித்துச் செல்கின்றன.


உதிரச்சுவை கட்டுரையில் வரும்..


"பிரிவு என்பது எந்தக் காலத்திலும் ஆணின் ஆயுதம் தானா என்று எண்ணிக் கொள்கிறேன். பெண்ணின் அளப்பரிய சக்தியைமுழுக்க அது உறிஞ்சி விடுகிறது போலும். அதை அஞ்சி அவள் மீண்டும் மீண்டும் சரண்டைகிறாள். மேலும் மேலும் பலவீனம் கொள்கிறாள்.இதற்கு மறுபக்கமும் தெரிகிறது. தன் துணைவியின் மனதில் பேருருவம் கொள்ளும் பொருட்டு ஆண் போடும் வேடம் தானா இது?"


என்ற கேள்வி மீண்டும் மீண்டும் மனதில் மின்னி மறைகிறது.


"...............
அஞ்சல் என்ற இறை கைவிட்டெனப்
பைங்கண் யானை வேந்துபுறந்து இறுத்தலின்
களையுநர்க் காணாது கலங்கிய உடைமதில்
ஓரெயில் மன்னனைப் போல
அழிவுவந் தன்றால் ஒழிதல் கேட்டே"


என்ற நற்றிணைக் கவிதையை

"இவளைப் பிரிந்து பயணமாவது
ஒருவேளை உனக்கு
குளிர்தென்றல் போல மகிழ்வூட்டலாம்
இவளுக்கோ
காக்கும் கடவுளால் கைவிடப்பட்டு
ஈரக்கண்களுள்ள யானைப்படையுடன்
பகை மன்னன் முற்றுகையிட
துணைக்கு யாருமில்லாமல் ஆன
விரிசலிடும் ஒற்றைக் கோட்டையுடைய
சிற்றரசனைப் போல
மரணம் நெருங்கி வருகிறது"


என எளிமைப்படுத்தியிருக்கிறார். படித்து முடித்த சில மணித்துளிகளுக்கு நான் செயலிழந்தவளாயிருந்தேன். "களையுநர்க் காணாது கலங்கிய உடைமதில்" ..... "களையுநர்க் காணாது கலங்கிய உடைமதில்" என மனம் பதற்றமாய் திரும்பத் திரும்பப் பிதற்றிக் கொண்டேயிருந்தது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு பெண்ணின் துயரம்... அவளின் வெம்மை மிகுந்த கண்ணீர்.. இன்னும் அப்படியே இருப்பதை ஒவ்வொருவர் மனதிலும் கனமாய்த் தேங்குவதை, தாள முடியாத கணங்களில் உருகி கண்ணீராய் வழிவதை என்னவென்று சொல்ல? காலம் நகராமல் ஓரிடத்தில் உறைந்து விட்டதாய்த் தோன்றுகிறது.

குறுந்தொகையின் முதல் பாடலான "செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த.. " என்ற பாடலை எப்போது படிக்க நேர்ந்தாலும் 'என்ன படிமமிருக்கிறது இதில்?' என அலட்சியமாய் நினைத்ததுண்டு. அதே பாடலை

"வரிகளெங்கும் செம்மை தகதகக்கும் இக்கவிதையை உலகக் கவிதை மரபின் மிகச்சிறந்த கவிப்படிமங்களில் ஒன்றாக நான் முன்வைப்பேன்"

என்கிறார் ஜெயமோகன்! இந்த கட்டுரை படித்தபின்பாக 'சங்ககாலக் கவிதைகள் இன்றைய நவீனக்கவிதைகளை விட இறுக்கமான கவிதைமொழி உடையவை. மேலும் நுட்பமான மெளனங்கள் கொண்டவை' என்ற அவரின் கூற்றை ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.

நூலாக்குபவன் செய்துவிடக் கூடாத நூற்குற்றங்கள் பத்தினை வரிசைப்படுத்தும் நன்னூல், குன்றக் கூறல்.. மிகைபடக் கூறல்.. ஆகியவற்றை முதன்மைக் குற்றங்களாகக் கூறுகிறது. என் வாசிப்பில் கலைஞரின் குறளோவியம் போல் திகட்டிவிடாமல் சுஜாதாவின் 401 காதல் கவிதைகளைப் போல் பற்றாக்குறையாகவுமில்லாமல் மிகச்சரியாய் வாசிப்பின் நீள அகலங்களுக்குள் பொருந்தி வருகிறது இந்த 'சங்கச் சித்திரங்கள்'.

சங்கப்பாடல்களுக்கு நூலாகவோ இணையத்திலோ சுவாரசியமான விளக்க நூல்களில்லை என்ற வருத்தத்திலிருப்பவர்கள் இந்தநூலை விரும்பிப் படிக்க முடியும். படிக்கையில் மனம் ஓரிடத்திலும் கால் பாவாமல் தாவிச் செல்வதும்.. சிலவிடங்களில் கைகட்டி அமர்ந்துகொள்வதுமாயிருக்கிறது! விரும்பினால் வாங்கி வாசித்துப் பாருங்கள்.


நூற்பெயர் : சங்கச்சித்திரங்கள்

எழுதியவர் : ஜெயமோகன்

வெளியிட்டது : கவிதா பப்ளிகேஷன்

விலை : ரூ.100