Tuesday, January 8, 2008

ஜெயமோகனின் சங்கச் சித்திரங்கள்
ஈரோட்டில் நல்ல புத்தகக் கடைகள் இல்லையென்பது என் நெடுநாளைய வருத்தம். இருக்கும் ஓரிரு கடைகளிலும் "செல்வந்தராவது எப்படி?" "சிகப்பழகு பெற சில வழிகள்" "செட்டிநாட்டு சமையல்"என்ற ரீதியில் மணிமேகலைப் பிரசுரங்களையும் பாடாவதி புத்தகங்களையுமே நிரப்பி வைத்திருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவருக்கு சங்கநூல்களை அன்பளிக்க வேண்டி கடைகடையாய் ஏறி இறங்கிய போது இதைப் பெருங்குறையாக உணர நேர்ந்தது.

'சங்க இலக்கியம் இருக்கா?' என்ற என் கேள்விக்கு ஏறக்குறைய எல்லாக் கடைக்காரர்களுமே ஒரே மாதிரியான திகைப்புடனும் மொழி விளங்காதது போன்ற பாவனையுடனும் இல்லையென வருத்தம் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் மட்டும் விடாப்பிடியாய்த் தேடி சின்னஞ்சிறு புத்தகக் கட்டிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து 'இதுவா? பாருங்க' என்றார். அது ஜெயமோகன் எழுதிய "சங்கச் சித்திரங்கள்". நான் கேட்ட புத்தகத்தின் தலைப்போடு 'சங்கம்' என்ற வார்த்தை பொருந்திப் போயிருப்பதால் தேடியது கிடைத்துவிட்ட திருப்தியோடும் அதை நான் நிச்சயம் வாங்கிக் கொள்வேன் என்ற நம்பிக்கையோடும் முகம் பார்த்து நின்றார் கடைக்காரர். எரிச்சலாயிருந்தது எனக்கு. அவர் தேடும்போதே சங்க இலக்கியம் ஈரோட்டில் கிடைக்கப் போவதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டிருந்ததால், 'வெறுங்கையோடு திரும்பிப் போவானேன்' என்று வாங்கி வந்ததுதான் இந்தப் புத்தகம்.

அதற்கு முன்பாக காடு நாவலில் மட்டுமே ஜெயமோகன் எனக்கு பரிச்சயமாகியிருந்தார். பிரமிப்பூட்டும் வீரியமிக்க எழுத்து அவருடையதென்று அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு. காடு நாவலிலேயே குறுந்தொகை பற்றிய சிலாகிப்புகள் அற்புதமாயிருந்ததால் புத்தகம் பிரிக்கையில் என்னையறியாமலேயே மிதமான எதிர்பார்ப்பு தோன்றியிருந்தது.

"தலைவியின் தவிப்பை கபிலர் எத்தனை நுட்பமாய் வர்ணித்திருக்கிறார்..." என வழக்கமான உரைகாரர்களின் பழக்கப்பட்ட வாசகங்களை எதிர்பார்த்துப் புத்தகம் பிரித்த எனக்கு பெருத்த ஏமாற்றமும் ஆச்சரியமுமாயிருந்தது அவரின் நடை. புத்தகம் முழுக்க கவிதையையோ கவிதைக்களத்தையோ விளக்குவதில் அக்கறை காட்டாமல் தன் சொந்த அனுபவங்களை விவரித்துச் சொல்லியிருந்தார். அதையும் கவிதையோடு முழுமையாய்த் தொடர்பு படுத்தாமல் கொண்டு கூட்டியுணர வைக்கும் உத்தி அபாரம்!

ஒரு மனிதனின் வயது என்பது அவன் உடம்பு வாழ்ந்த காலத்தின் கணக்கு... உண்மையான வயது அவன் அனுபவங்களைக் கொண்டு கணக்கிடப்படுகிறது என்று ஏதோவோர் கதையில் பாலகுமாரன் சொல்லியிருப்பார். அந்த வகையில் ஜெயமோகனின் அனுபவங்களில் நூற்றாண்டு முதிர்ச்சியைக் காணமுடிகிறது. வாசகியும் காதலியுமான அருண்மொழி நங்கையுடனான காதல் நாட்கள், தாயும் தந்தையும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட பின்னாக பைசாசமாய் மாறித் துரத்திக் கொண்டிருந்த தனியிரவுகள், வறுமையால் குடிசைகளில் வாழ்ந்திருந்த நாட்கள், நிகழ்வுகள் மற்றும் மனதின் அலைவுகளைப் பின்தொடர்ந்து மேற்கொண்ட பயணங்கள் என வாழ்வின் சாரமாயிருக்கும் அனுபவங்களை, அனுபவங்களின் சாரமாயிருக்கும் சங்கக் கவிதைகளோடு அழகாய் இணைத்துப் புரிவிக்க முயன்றிருக்கிறார்.


"இங்கே நாம் சங்க இலக்கியத்தை பள்ளிப்பாடமாக மனப்பாடம் செய்கிறோம்.. கோயில் சிலைகளைப் போல இருட்டில் வைத்து வழிபடுகிறோம்.. அல்லது ஏதோ தொல்பொருள் பொருள் போல சுரண்டி சுரண்டி ஆய்வு செய்கிறோம். கவிதை அடிப்படையில் வாழ்வுடன் தொடர்புள்ளது. வாழ்வை விரிவுபடுத்துவது. வாழ்வை வைத்துத் தான் கவிதையை வாசிக்க வேண்டும்"


என்று முன்னுரையில் இடம்பெறும் பீடிகையின் பொருளாக தன்னனுபவங்களையும் தன்சார்ந்த மனிதர்களின் வாழ்வையுமே நூலின் அடித்தளமாக்கியிருப்பது வாசிக்கத் தூண்டும் நேர்மையானதோர் உத்தி என்பேன்.

குறுந்தொகை, புறநானூறு, நற்றிணை மற்றும் கலித்தொகையிலிருந்து 40 பாடல்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். சங்கப்பாடல்களில் பாலைத்திணைப் பாடல்களின் மீது பெருவிருப்போடிருக்கும் நான், மருதத் திணையை மட்டும் எப்போதும் ரசித்ததில்லை. மருதம் ஊடலும் ஊடல் நிமித்தமுமான உரிப்பொருளுடையது. ஊடலுக்கு முக்கிய காரணியாயிருப்பது தலைவனின் பரத்தமையொழுக்கம். தலைவன் பரத்தையரை நாடிச்செல்வதால் தலைவிக்கு வரும் கோபம் ஊடலுவகையில் வகைப்படுத்தக் கூடியதா? என்னவொரு அபத்தமான வரையறை....! அந்த கோபத்தையும் நேரடியாய் வெளிப்படுத்தவியலாமல் இறைச்சிப் பொருளாய் தலைவி இடித்துரைப்பதும், மதி மயக்கும் அழகோடு வீதியில் நடந்து வரும் பெண்ணைக் கண்டதும் தன் கணவனை அவளிடமிருந்து காத்துக் கொள்ள வேண்டுமேயென கவலைப்படுவதும் எத்தனை ஆபாசமானது?

ஒருவனுக்கு ஒருத்தியென பறைசாற்றிக் கொள்ளும் தமிழ்ப்பண்பாடும், சங்ககாலம் 'பொற்காலம்' என்ற அர்த்தமற்ற கருதுகோளும் பொய்யாகிப் பல்லிளிப்பது மருதத்திணையில் தான். இதையே வழிமொழிவது போல "மருதத்திணைப் பாடல் வேறெந்த நுட்பம் கொண்டதாக இருந்தாலும் என் மனம் அதை ரசிப்பதில்லை"எனச்சொல்லிக் கொள்ளும் ஜெயமோகன்,

"பத்தினியிடமும் பரத்தையரிடமும் மாறி மாறி ஓடும் தலைவர்களைச் சார்ந்து வாழும் அவ்வாழ்க்கையில் பத்தினியாய் இருப்பதற்கும்பரத்தையாக இருப்பதற்கும் வேறுபாடு ஏதும் இல்லை என்றே இப்போது படுகிறது."

என்கிறார்.

வாசகன் தன் பார்வையை படைப்பாளியின் கண்கொண்டு காண நேர்கையில் படைப்பும் அவனும் ஒன்றென்றாகி விடுவதை இதைப் படிக்கும்போது உணர்ந்தேன். தன்னைப் போலவே முகம் கொண்ட மனிதரை எதிர்பாராமல் சந்தித்த மகிழ்வையும் திகைப்பையும் அதிர்ச்சியையும் ஒருங்கே தந்த வரிகள் இவை.

40 கட்டுரைகளில் "சூனியத்தில் ஓர் இடம்" மற்றும் "உதிரச்சுவை" ஆகிய இரண்டு கட்டுரைகளும் கொடியதோர் நோயைப் போல.. தவிர்த்து விட முடியாத ஆழ்மன அச்சத்தைப் போல இன்னும் என்னைப் பீடித்திருக்கின்றன. இரண்டும் இருவேறு விதமான பிரிவைப் பற்றிப் பேசுகின்றன. எட்டு வருடங்களாய்க் குழந்தை வேண்டி தவமிருந்த ஒருவருக்கு முளைவிதை போல சின்னஞ்சிறியதாய் ஒரு பிள்ளை பிறந்து, மண்ணிற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளத் தெரியாமல் பிறந்த சில நாட்களில் இறந்து போகிறது.


"ஒருவர் நிரப்பியிருந்த இடம் எவ்வளவு என்று மரணம் மூலம் நாம் அறிகிறோம். வெற்றிடத்தின் வலிமை என்பது அதன் மீது மோதும் சூழலின் அழுத்தமே. முடிவின்மையாகிய கால இடப் பருவெளியின் எடை முழுக்க அந்த வெற்றிடத்தின் மீது கவிகிறது போலும்."


என்ற வரிகள் இழப்பின் வலியை எக்காலத்தும் முடிவற்றதாய் நீட்டித்துச் செல்கின்றன.


உதிரச்சுவை கட்டுரையில் வரும்..


"பிரிவு என்பது எந்தக் காலத்திலும் ஆணின் ஆயுதம் தானா என்று எண்ணிக் கொள்கிறேன். பெண்ணின் அளப்பரிய சக்தியைமுழுக்க அது உறிஞ்சி விடுகிறது போலும். அதை அஞ்சி அவள் மீண்டும் மீண்டும் சரண்டைகிறாள். மேலும் மேலும் பலவீனம் கொள்கிறாள்.இதற்கு மறுபக்கமும் தெரிகிறது. தன் துணைவியின் மனதில் பேருருவம் கொள்ளும் பொருட்டு ஆண் போடும் வேடம் தானா இது?"


என்ற கேள்வி மீண்டும் மீண்டும் மனதில் மின்னி மறைகிறது.


"...............
அஞ்சல் என்ற இறை கைவிட்டெனப்
பைங்கண் யானை வேந்துபுறந்து இறுத்தலின்
களையுநர்க் காணாது கலங்கிய உடைமதில்
ஓரெயில் மன்னனைப் போல
அழிவுவந் தன்றால் ஒழிதல் கேட்டே"


என்ற நற்றிணைக் கவிதையை

"இவளைப் பிரிந்து பயணமாவது
ஒருவேளை உனக்கு
குளிர்தென்றல் போல மகிழ்வூட்டலாம்
இவளுக்கோ
காக்கும் கடவுளால் கைவிடப்பட்டு
ஈரக்கண்களுள்ள யானைப்படையுடன்
பகை மன்னன் முற்றுகையிட
துணைக்கு யாருமில்லாமல் ஆன
விரிசலிடும் ஒற்றைக் கோட்டையுடைய
சிற்றரசனைப் போல
மரணம் நெருங்கி வருகிறது"


என எளிமைப்படுத்தியிருக்கிறார். படித்து முடித்த சில மணித்துளிகளுக்கு நான் செயலிழந்தவளாயிருந்தேன். "களையுநர்க் காணாது கலங்கிய உடைமதில்" ..... "களையுநர்க் காணாது கலங்கிய உடைமதில்" என மனம் பதற்றமாய் திரும்பத் திரும்பப் பிதற்றிக் கொண்டேயிருந்தது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு பெண்ணின் துயரம்... அவளின் வெம்மை மிகுந்த கண்ணீர்.. இன்னும் அப்படியே இருப்பதை ஒவ்வொருவர் மனதிலும் கனமாய்த் தேங்குவதை, தாள முடியாத கணங்களில் உருகி கண்ணீராய் வழிவதை என்னவென்று சொல்ல? காலம் நகராமல் ஓரிடத்தில் உறைந்து விட்டதாய்த் தோன்றுகிறது.

குறுந்தொகையின் முதல் பாடலான "செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த.. " என்ற பாடலை எப்போது படிக்க நேர்ந்தாலும் 'என்ன படிமமிருக்கிறது இதில்?' என அலட்சியமாய் நினைத்ததுண்டு. அதே பாடலை

"வரிகளெங்கும் செம்மை தகதகக்கும் இக்கவிதையை உலகக் கவிதை மரபின் மிகச்சிறந்த கவிப்படிமங்களில் ஒன்றாக நான் முன்வைப்பேன்"

என்கிறார் ஜெயமோகன்! இந்த கட்டுரை படித்தபின்பாக 'சங்ககாலக் கவிதைகள் இன்றைய நவீனக்கவிதைகளை விட இறுக்கமான கவிதைமொழி உடையவை. மேலும் நுட்பமான மெளனங்கள் கொண்டவை' என்ற அவரின் கூற்றை ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.

நூலாக்குபவன் செய்துவிடக் கூடாத நூற்குற்றங்கள் பத்தினை வரிசைப்படுத்தும் நன்னூல், குன்றக் கூறல்.. மிகைபடக் கூறல்.. ஆகியவற்றை முதன்மைக் குற்றங்களாகக் கூறுகிறது. என் வாசிப்பில் கலைஞரின் குறளோவியம் போல் திகட்டிவிடாமல் சுஜாதாவின் 401 காதல் கவிதைகளைப் போல் பற்றாக்குறையாகவுமில்லாமல் மிகச்சரியாய் வாசிப்பின் நீள அகலங்களுக்குள் பொருந்தி வருகிறது இந்த 'சங்கச் சித்திரங்கள்'.

சங்கப்பாடல்களுக்கு நூலாகவோ இணையத்திலோ சுவாரசியமான விளக்க நூல்களில்லை என்ற வருத்தத்திலிருப்பவர்கள் இந்தநூலை விரும்பிப் படிக்க முடியும். படிக்கையில் மனம் ஓரிடத்திலும் கால் பாவாமல் தாவிச் செல்வதும்.. சிலவிடங்களில் கைகட்டி அமர்ந்துகொள்வதுமாயிருக்கிறது! விரும்பினால் வாங்கி வாசித்துப் பாருங்கள்.


நூற்பெயர் : சங்கச்சித்திரங்கள்

எழுதியவர் : ஜெயமோகன்

வெளியிட்டது : கவிதா பப்ளிகேஷன்

விலை : ரூ.100

55 comments:

Unknown said...

நூல் அறிமுகத்திற்கு நன்றி காயத்ரி.
உரையுடன் கூடிய நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு நூற்களை சென்னைப் புத்தக கண்காட்சியில் தேடியலைந்து கிடைக்காமல், பின், உரையாக இல்லாமல் எளிய பாடலாக விளக்கப்பட்ட ஒரு குறுந்தொகை புத்தகம் மட்டும் வாங்கி வந்திருக்கிறேன்.

கொங்குதேர் வாழ்க்கை என்ற தொகுப்பில் அனைத்துப் பாடல்களும் இல்லையென்பதால் அதனை தவிர்த்திருக்காமல், அதனையாவது வாங்கி வந்திருக்கலாம் :(

ஜெயமோகனின் புத்தகத்தை வாசித்த பிறகு சொல்கிறேன்.

MyFriend said...

ம்ம்.. நல்ல ஒரு விமர்சனம்..

ஆனால், நான் சங்கம் இலைக்கியமெல்லாம் படிச்சாலும் எனக்கு புரியாதே.. நீங்களே எங்களுக்கு க்ளாஸ் நடத்துங்க.. கத்துக்கிறோம். :-)

லக்ஷ்மி said...

கதம்ப மாலை பற்றி அறிந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். இக்கட்டுரையை அங்கே தொகுத்திருக்கிறோம்.

http://kathambamaalai.wordpress.com/2008/01/08/%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/

லக்ஷ்மி said...

கவிதையை வாழ்க்கையை கொண்டு அவரவர்க்கு ஏற்ற மாதிரி புரிந்து கொள்ளல் என்பது சரிதான். ஆனா அது சில சமயம் விபரீதமாப் போகவும் வாய்ப்புண்டு - இங்க ஒருத்தரோட புரிதல்களைப் ஜெயமோகனே படிச்சு பயந்து போயிருக்கார் பாருங்க.

Hari said...

Hi, I am from Erode. FYI, there is a book shop near to P.S.Park signal(in the same line of "TATA Gold" shop, hope u can catch me now :) ). Also, there is another book shop in the one-way perpendicular to the road I have specified(u may find a church & SBI in that one-way). u may try those.

I know I am too vague in details, as I don't remember the street name.

இராம்/Raam said...

நல்ல விமர்சனம்.... :)

manjoorraja said...

அருமையான நூல் அறிமுகத்திற்கு நன்றி காயத்ரி உங்கள் விமர்சனம் ஆழந்த உங்களது வாசிப்பை வெளிக்கொணர்கிறது.

பல இடங்களில் அனுபவித்து எங்களையும் அனுபவிக்க செய்து எழுதியிருக்கிறீர்கள்.

நல்லதொரு விமர்சனம்.

குசும்பன் said...

"நூலாக்குபவன் செய்துவிடக் கூடாத நூற்குற்றங்கள் பத்தினை வரிசைப்படுத்தும் நன்னூல்"

அது என்னா நூல்லாக்குபவன் எனக்கு பேபிபவன் தான் தெரியும்:)))

குசும்பன் said...

//'வெறுங்கையோடு திரும்பிப் போவானேன்' என்று ///

அடுத்த முறை கல்லாபெட்டியை தூக்கிட்டு வந்துடுங்க!!!

குசும்பன் said...

///". நான் கேட்ட புத்தகத்தின் தலைப்போடு 'சங்கம்' என்ற வார்த்தை பொருந்திப் போயிருப்பதால் தேடியது கிடைத்துவிட்ட திருப்தியோடும் அதை நான் நிச்சயம் வாங்கிக் கொள்வேன் என்ற நம்பிக்கையோடும் முகம் பார்த்து நின்றார் கடைக்காரர்.///

உங்க ஊர்காரர்கள் எல்லோருமே உங்களை போலதான் என்று எங்களுக்கு முன்பே தெரியும்!!! இதை எல்லாம் சொல்லனுமா?

குசும்பன் said...

// 'சங்கம்' என்ற வார்த்தை பொருந்திப் போயிருப்பதால் ///

சங்கநூல் கேட்டு நல்ல வேளை நூல்கண்டை எடுத்து கொடுக்காமல் இருந்தாரே நூல் என்ற வார்த்தை இதில் ஒத்து போகிறது என்று:)))

குசும்பன் said...

/// .:: மை ஃபிரண்ட் ::. said...
ஆனால், நான் சங்கம் இலைக்கியமெல்லாம் படிச்சாலும் எனக்கு புரியாதே.. நீங்களே எங்களுக்கு க்ளாஸ் நடத்துங்க.. கத்துக்கிறோம். :-)///

எல்லா இடத்திலேயும் ரிஜிஸ்டர் மட்டும் செஞ்சு வெச்சுக்குங்க கிளாஸுக்கு மட்டும் வராதீங்க மைபிரண்ட்:((((

Unknown said...

புத்தகம் குறித்த பதிவை மிகவும் ரசித்தேன் காயத்ரி. எனக்கு சங்க இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்டது சங்கச்சித்திரங்கள் படித்த பிறகே.

//40 கட்டுரைகளில் "சூனியத்தில் ஓர் இடம்" மற்றும் "உதிரச்சுவை" ஆகிய இரண்டு கட்டுரைகளும் கொடியதோர் நோயைப் போல.. தவிர்த்து விட முடியாத ஆழ்மன அச்சத்தைப் போல இன்னும் என்னைப் பீடித்திருக்கின்றன.//

இதை மேலும் தூலமாய் உணர
ஜெயமோகனின் 'டார்த்தீனியம்' என்ற சிறுகதையை படிக்க வேண்டும். அச்சம் கரிய மரமென நம்முள் வளர்வதை உணர்வோம்...

//"ஒருவர் நிரப்பியிருந்த இடம் எவ்வளவு என்று மரணம் மூலம் நாம் அறிகிறோம். வெற்றிடத்தின் வலிமை என்பது அதன் மீது மோதும் சூழலின் அழுத்தமே. முடிவின்மையாகிய கால இடப் பருவெளியின் எடை முழுக்க அந்த வெற்றிடத்தின் மீது கவிகிறது போலும்."//

பின் தொடரும் நிழலின் குரலில் ஒரு கவிதை வரும். சைபீரிய சிறைச்சாலையில் இறந்த குழந்தையை புதைக்கும் தாயைப்பற்றி..

மண்
----
இறந்த குழந்தையை தானே புதைக்கும்
தாய் ஒருத்தியை நேற்றுப் பார்த்தேன்.
பிடிப்பிடியாக மண்ணை அள்ளி
மெதுவாக சொரிந்துகொண்டிருந்தாள்.
பிஞ்சுக் கால்கள் மறைந்தன.
குட்டிக் கைகள் பிறகு.
உருண்ட சிறு முகத்தை மெல்ல வருடினாள்.
மென்மையான மண்ணை அள்ளி
மெதுவாகப் பரப்பினாள்.
ஒவ்வொரு பிடி மண்ணாக
மெல்ல மெல்ல…
அம்மா
இந்த பூமியையே அள்ளி எடுத்துவிடுவாயா?நானும் தமிழை பாடமாக படித்திருக்கலாமோ என ஏக்கம் கொள்ள வைக்கின்றன சங்க இலக்கியம் குறித்த உங்களது கருத்துக்கள். இன்னும் நிறைய எழுதுங்கள் காயத்ரி...

Dreamzz said...

அழகாய் இருந்தது உங்கள் அலசல்.
தமிழ் இன்னும் வாழ்வதற்கான காரணங்களில் ஒன்று, நம் எழுத்தாளர்கள்.

//இங்கே நாம் சங்க இலக்கியத்தை பள்ளிப்பாடமாக மனப்பாடம் செய்கிறோம்.. கோயில் சிலைகளைப் போல இருட்டில் வைத்து வழிபடுகிறோம்.. அல்லது ஏதோ தொல்பொருள் பொருள் போல சுரண்டி சுரண்டி ஆய்வு செய்கிறோம். கவிதை அடிப்படையில் வாழ்வுடன் தொடர்புள்ளது. வாழ்வை விரிவுபடுத்துவது. வாழ்வை வைத்துத் தான் கவிதையை வாசிக்க வேண்டும்//
இது அட்டகாசம்!

Dreamzz said...

//பத்தினியிடமும் பரத்தையரிடமும் மாறி மாறி ஓடும் தலைவர்களைச் சார்ந்து வாழும் அவ்வாழ்க்கையில் பத்தினியாய் இருப்பதற்கும்பரத்தையாக இருப்பதற்கும் வேறுபாடு ஏதும் இல்லை என்றே இப்போது படுகிறது///
என் கருத்து மாற்றாக இருந்தாலும், நல்லா தான் இருக்கு படிக்க!!

Dreamzz said...

//தன் துணைவியின் மனதில் பேருருவம் கொள்ளும் பொருட்டு ஆண் போடும் வேடம் தானா இது?"//
பெண் சொல்கிறாள். ஆண் சொல்வதில்லை.அவ்ளோ தான். உடைவது என்னமோ இருவரும் :)

Dreamzz said...

இது போன்ற மேலும் நல்ல பதிவுகளை இட என் வாழ்த்துக்கள்!

ஜெயமோகன் said...

நல்ல கட்டுரை. திரு மஞ்சூர் ராஜா இதைப்பற்றி சொன்னார்.ஈரோட்டில் ஸ்டேட் பேங்க் தலைமை கிளை முன்னால் பாரதி புத்தகாலயம் என்ற கடை உள்ளது. அது இளங்கோ என்ற நண்பரால் நடத்தப்படுகிறது. அங்கே எல்லாவிதமான இலக்கிய நூல்களும் கிடைக்கும். இல்லாவிட்டால் வாங்கியளிப்பார்

ஜெயமோகன்

ஜெயமோகன் said...

நல்ல கட்டுரை. திரு மஞ்சூர் ராஜா இதைப்பற்றி சொன்னார்.ஈரோட்டில் ஸ்டேட் பேங்க் தலைமை கிளை முன்னால் பாரதி புத்தகாலயம் என்ற கடை உள்ளது. அது இளங்கோ என்ற நண்பரால் நடத்தப்படுகிறது. அங்கே எல்லாவிதமான இலக்கிய நூல்களும் கிடைக்கும். இல்லாவிட்டால் வாங்கியளிப்பார்

ஜெயமோகன்

http://www.jeyamohan.in

காயத்ரி சித்தார்த் said...

அருள்.. இந்த பதிவை எழுதும்போதே உங்களையும் சித்தார்த்தையும் நினைத்துக் கொண்டேன். அவர் படித்தாயிற்றாம். வாங்கிப் படியுங்கள்.. உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

காயத்ரி சித்தார்த் said...

//ம்ம்.. நல்ல ஒரு விமர்சனம்..//

உனக்குப் புரியற மாதிரி எழுத முடிஞ்சிருக்கே.. தேங்க்ஸ் டா.

//கதம்ப மாலை பற்றி அறிந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.//

இப்பதான் தெரியும் லக்ஷ்மி! நன்றி உங்கள் பரிந்துரைக்கும்.. பின்னூட்டத்திற்கும். :)

காயத்ரி சித்தார்த் said...

//there is a book shop near to P.S.Park signal(in the same line of "TATA Gold" shop,//

ஹரி.. இந்த புத்தகம் அங்க வாங்கினது தாங்க..

//hope u can catch me now :) //

???!!!?

காயத்ரி சித்தார்த் said...

ராம் நன்றிங்க!

மஞ்சூர் ராசா.. படித்து பின்னூட்டியதுமில்லாமல் மெனக்கெட்டு என் கட்டுரையை எழுத்தாளரின் கவனத்திற்கும் எடுத்துச் சென்றதற்கு என் மனமார்ந்த நன்றிகள்! :)

காயத்ரி சித்தார்த் said...

யப்பா குசும்பா.. ஆரம்பிச்சுட்டியா உன் கும்மிய?

//அது என்னா நூல்லாக்குபவன் எனக்கு பேபிபவன் தான் தெரியும்:)))//

இந்த கமெண்ட்டுக்கு நிஜமாவே சிரிச்சிட்டேன்.. உன்னால மட்டும்தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியும் போல!

காயத்ரி சித்தார்த் said...

சித்தார்த், பதிவெழுதத் தொடங்கும் போதே உங்களுக்கும் அருட்பெருங்கோவிற்கும் நிச்சயம் பிடித்தமானதாயிருக்குமென நினைத்துக் கொண்டேன். எந்தளவிற்கு பிடித்திருக்கிறதென்பதை உங்கள் பின்னூட்டம் மூலமாய் உணர்ந்து கொள்ள முடிகிறது. அய்யோ.. அந்தக் கவிதை அதிபயங்கர சோகமுடையதாய் இருக்கிறது..

//நானும் தமிழை பாடமாக படித்திருக்கலாமோ என ஏக்கம் கொள்ள வைக்கின்றன சங்க இலக்கியம் குறித்த உங்களது கருத்துக்கள். இன்னும் நிறைய எழுதுங்கள் காயத்ரி...
//

தனி வலைப்பூவில் எழுதும் எண்ணமிருக்கிறது. விரைவில் செயலாகுமென்று நம்புகிறேன்.. நம்புங்கள்!

காயத்ரி சித்தார்த் said...

//இது போன்ற மேலும் நல்ல பதிவுகளை இட என் வாழ்த்துக்கள்!
//

நன்றி ட்ரீம்ஸ்.. பதிவை ரொம்பவும் ஆராய்ந்து படித்தீர்கள் போல!

காயத்ரி சித்தார்த் said...

//நல்ல கட்டுரை. திரு மஞ்சூர் ராஜா இதைப்பற்றி சொன்னார்.//

திரு.ஜெயமோகன் உங்கள் வருகை எதிர்பாராதது. என் தோழி உங்களின் காடு நாவலில் தான் நிறைஞர் பட்ட (எம்.ஃபில்) ஆய்வை மேற்கொண்டாள். பாரதி புத்தகாலயம் பற்றிய குறிப்பிற்கு நன்றி. உங்கள் இணைய தளத்தை அறிந்திருக்கிறேன் தவறாமல் வாசித்தும் வருகிறேன். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மீண்டும் என் நன்றிகள்.

Jayaprakash Sampath said...

காயத்ரி, நல்ல மனநிறைவைத் தந்த கட்டுரை. வாழ்த்துகள்.

நான்காண்டுகளுக்கு முன்பு, இந்த படைப்பு குறித்து, ராயர் கிளப்பில் ( யாஹூ குழுமம்) சுவாரசியமான விவாதம் நடைபெற்றது நினைவுக்கு வந்து, தேடிப் பார்த்தேன். [ ஜெயமோகன், சங்கப் பாடல்களைப் புரிந்து கொண்ட விதம் தவறானது / சரியானது என்றும், திணை துறை குறிப்பில் தவறு இருக்கிறது என்றும் காரசாரமாக மோதிக் கொண்டார்கள். ]

தகுதரத்தில் ( TSCII ) எழுதப்பட்ட பல்லாயிரம் மடல்கள் கொண்ட குழுவில் ஒரு சங்கதியைத் தேடுவதை விட, சும்மா இருக்கும் பூனைக்கு ஷேவ் செய்வது உத்தமம் என்பதால், இங்கே சுட்டிகளைத் தர இயலவில்லை.

தொடர்ந்து எழுதுங்கள்.

கோபிநாத் said...

நல்ல விமர்சனம்..:)

துரியோதனன் said...

அருமையான நூல் அறிமுகத்திற்கு நன்றி

தென்றல் said...

நூல் அறிமுகத்திற்கு நன்றி, காயத்ரி!

நல்லதொரு விமர்சனம்!!

இங்கு நூலகத்தில் இருந்து ஜெயமோகனின் 'காடு' எடுத்து வந்தேன். பத்து பக்கம் படிச்சி முடிக்கிறதுக்குள்ள கண்ண கட்டுது. ஆனால், என் மனைவி (வழக்கம் போல்) படித்துவிட்டு நாவலைப் பற்றி சிலாகித்து கொள்ள.... இப்பொழுத்தான் 11ம் பக்கத்திற்கு தாண்டியுள்ளேன் ;) !

gayathri said...

அருமையான விமர்சனம். வாழ்த்தக்கள்.

Bee'morgan said...

ரொம்ப அழகானதொரு பதிவு.. பொதுவாக நூல் அறிமுகம் எழுதுபவர்கள், அதன் நிறைகுறைகளைலை அலசுவதில் எடுத்துக்கொள்ளும் அக்கறை எழுத்து நடையிலும், வாசகனின் வாழ்வோடு அதனை ஒப்பிட்டு பார்க்கும் வாய்ப்புகளையும் கவனத்தில் கொள்வதில்லை.. ஆனால் இப்பதிவு இவ்விரண்டையும் செய்கிறதென்னும் நிறைவு என்னுள்.. இன்னும் நிறைய எழுதுங்கள்..

சுரேகா.. said...

அழகாக மொழிந்திருக்கிறீர்கள்.

திரு.ஜெயமோகனின் கோணம் என்றுமே இயல்பானதாகவும், மாற்றமுடையதாகவும் இருப்பதால்தான்
அவருக்கு இப்படிப்பட்ட
தமிழ் வழங்கும் ரசிக வாசகர்கள்.!

உங்கள் வாசிப்பின் ஆழத்திற்கு வாழ்த்துக்கள்!

தமிழ்நதி said...

நல்லதொரு பதிவு காயத்ரி.

"பிரிவு என்பது எந்தக் காலத்திலும் ஆணின் ஆயுதம் தானா என்று எண்ணிக் கொள்கிறேன். பெண்ணின் அளப்பரிய சக்தியைமுழுக்க அது உறிஞ்சி விடுகிறது போலும். அதை அஞ்சி அவள் மீண்டும் மீண்டும் சரண்டைகிறாள். மேலும் மேலும் பலவீனம் கொள்கிறாள்.இதற்கு மறுபக்கமும் தெரிகிறது. தன் துணைவியின் மனதில் பேருருவம் கொள்ளும் பொருட்டு ஆண் போடும் வேடம் தானா இது?"

இந்த வரிகளின் வலி அனுபவித்து உணர்ந்தவர்களுக்கே புரியும். 'காடு'நாவல் படித்துவிட்டு நான்கைந்து நாட்கள் அந்த வேதனையில் உழன்றபடி கிடந்தேன். கடைசியில் அந்தப் பெண் சடுதியில் இறந்துவிடுவது எதிர்பாராதது. திடீரென 'அத்தனையும் இதற்குத்தானா' என்றொரு கேள்வி எழுந்தது. இல்லாமற் போனவள் இருந்தாள் பல நாட்கள் என்னுள். காயத்ரி!கவிதைகளில் மட்டுமல்லாது விமர்சனங்களிலும் கவனத்தைச் செலுத்தவாரம்பித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

நந்து f/o நிலா said...

//குசும்பன் said...

உங்க ஊர்காரர்கள் எல்லோருமே உங்களை போலதான் என்று எங்களுக்கு முன்பே தெரியும்!!! இதை எல்லாம் சொல்லனுமா?//

குசும்பா இதை ஈரோடு ப்ளாக்கர்ஸ் அசோசியேசன்ஸ் சார்பில் வண்மையாக கண்டிக்கிறேன்.

நந்து f/o நிலா said...

பாக்கி கமெண்ட்டெல்லாம் மஹாசீரியசா இருக்கும் போது குசும்பன் கும்மி மட்டும் தனியா தெரியுது.

இப்போவெல்லாம் காயத்ரி பதிவில் கும்மியோ பதிவ பத்தி கிண்டலோ அடிக்க பயமா இருக்கு

மொதநாள் ரஜினி படம் பாக்கரப்போ ரஜினிய கிண்டல் பண்ணா ஆகும் நிலைமை நமக்கு ஆயிடும் போல. :(

காயத்ரி சித்தார்த் said...

//காயத்ரி, நல்ல மனநிறைவைத் தந்த கட்டுரை. வாழ்த்துகள்//

நன்றிங்க பிரகாஷ்! கில்லியில் பரிந்துரைத்திருக்கிறீர்கள் போல!

காயத்ரி சித்தார்த் said...

நன்றி துரியோதனன்..

கோபி நெசம்மா பதிவ படிச்சீங்களா?!

தென்றல், காடு எனக்கு ரொம்ம்ம்ம்ப பிடித்தமான நாவல். மலையாளம் கலந்த நடை கொஞ்சம் சிரமமா இருக்கலாம். பொறுமையா படிங்க!

காயத்ரி சித்தார்த் said...

காயத்ரிஹரி புதிய பதிவரா நீங்க? நன்றிங்க..

Bee'morgan, சுரேகா.. நன்றி.

காயத்ரி சித்தார்த் said...

//இந்த வரிகளின் வலி அனுபவித்து உணர்ந்தவர்களுக்கே புரியும். 'காடு'நாவல் படித்துவிட்டு நான்கைந்து நாட்கள் அந்த வேதனையில் உழன்றபடி கிடந்தேன்//

உண்மை தான் தமிழ். எனக்கும் இதே போன்ற பாதிப்பிருந்தது. இவர் எழுத்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்திப் போகிறது எப்போதும். :)

காயத்ரி சித்தார்த் said...

//குசும்பா இதை ஈரோடு ப்ளாக்கர்ஸ் அசோசியேசன்ஸ் சார்பில் வண்மையாக கண்டிக்கிறேன்//

நல்லாக் கேளுங்க நந்து .. குசும்பு ரொம்ப ஜாஸ்தியாப் போச்சு... குட்டீஸ் கார்னருக்கு தகவல் குடுக்கனும்!

//மொதநாள் ரஜினி படம் பாக்கரப்போ ரஜினிய கிண்டல் பண்ணா ஆகும் நிலைமை நமக்கு ஆயிடும் போல. :(
//

ஏங்க.. இருந்தாலும் இவ்ளோ பில்ட் அப் தேவையா? கொஞ்சம் ஓவரா போய்ட்ட மாதிரி இருக்கே? :(

KARTHIK said...

//"ஒருவர் நிரப்பியிருந்த இடம் எவ்வளவு என்று மரணம் மூலம் நாம் அறிகிறோம்.//

உண்மை.

நல்ல படைப்பை பகிர்ந்தமைக்கு நன்றி.

ஜெயமோகன் அவர்கள் கூறியதுபோல் பாரதி புத்தகாலயத்தில் வங்கித் தருவார்
அவரும் நல்ல புத்தகங்களையும் பரிந்துரைப்பார்.

குசும்பு
தந்தை பெரியர்ரை தந்தது எங்கள் ஊர் நினைவிருக்கட்டும்.

தென்றல் said...

காயத்ரி,

இந்த பதிவு பார்த்திருக்கீங்களா?

http://anathai.blogspot.com/2004/11/blog-post.html

http://elanko.net/?p=13

King... said...

காயத்ரிக்கு...
நீங்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள் புத்தகங்களோடு வாழ்கிறீர்கள் ம்ம்ம் எனக்கு அந்த வரம் கிடைக்கவில்லை...

நிச்சயமாய் பிரிவு என்பது ஆண்களின் ஆயுதமாக இருக்க முடியாது இப்படி இருந்தால் இலக்கியங்கள் நம் வாழ்வோடு பொருந்தியிருக்க முடியாது.. இது பற்றியும் நீங்களே எழுதலாமே...

இங்கே ஒரு விசயம் சங்க இலக்கியங்களை ஆக்கியவர்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்...

ரூபஸ் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நான் எனது வலையில் புத்தாண்டு சபதம் என்ற பெயரில் ஒரு பதிவு எழுதியுள்ளேன்..

தங்களையும் அந்த தலைப்பில் ஒரு பதிவு எழுதுமாறு அழைப்பு விடுக்கிறேன்..

நன்றியுடன்

அ.ரூபஸ்.

ரூபஸ் said...

//இங்கே நாம் சங்க இலக்கியத்தை பள்ளிப்பாடமாக மனப்பாடம் செய்கிறோம்.. கோயில் சிலைகளைப் போல இருட்டில் வைத்து வழிபடுகிறோம்.. அல்லது ஏதோ தொல்பொருள் பொருள் போல சுரண்டி சுரண்டி ஆய்வு செய்கிறோம். கவிதை அடிப்படையில் வாழ்வுடன் தொடர்புள்ளது. வாழ்வை விரிவுபடுத்துவது. வாழ்வை வைத்துத் தான் கவிதையை வாசிக்க வேண்டும்//

சங்க இலக்கியங்களை வாசிக்க வேண்டும் என்கிற ஆவலைத்தூண்டுகிறது உங்கள் பதிவு

சுரேகா.. said...

ஈரோட்டில் பெண்கள் படித்தீர்களா?

http://surekaa.blogspot.com

Vi said...

//தலைவன் பரத்தையரை நாடிச் செல்வதால் தலைவிக்கு வரும் கோபம் ஊடலுவகையில் வகைப்படுத்தக் கூடியதா? என்னவொரு அபத்தமான வரையறை....!//
யார் அளித்த வரையறை இது. தமிழ் இலக்கிய ஆய்வாளர்களின் கண்ணோட்டம் தானே? இது சரியான வரையறை இல்லை என்றால் சரியான வரையறையை நீங்களேத் தாருங்களேன். அன்றைய காலத்தில் பரத்தையர் ஒழுக்கம் என்பது சமுதாயக் கட்டமைப்பின் தேவையாக இருந்திருக்கலாம் அல்லவா? அதற்காக தலைவியின் கோபத்தை ஊடலில் இருத்தி இருப்பதை சாத்தி இருப்பது தவறாக எனக்கு தோன்றவில்லை.

//அந்த கோபத்தையும் நேரடியாய் வெளிப்படுத்தவியலாமல் இறைச்சிப் பொருளாய் தலைவி இடித்துரைப்பதும்,//
அந்த கோபம் நேரடியாக வெளிப்படுத்தபபட்டு இருக்குமேயானால் இன்று நாம் சங்க இலக்கியம் குறித்து பேசிக் கொண்டிருப்போமா என்பது சந்தேகமே! என்பதை தாங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

//மதி மயக்கும் அழகோடு வீதியில் நடந்து வரும் பெண்ணைக் கண்டதும் தன் கணவனை அவளிடமிருந்து காத்துக் கொள்ள வேண்டுமேயென கவலைப்படுவதும் எத்தனை ஆபாசமானது?//
எதுவும் நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது. பெண்கள் தெய்வத்திற்கு சமம். தெய்வங்களைக் காணும் எவ்வுயிரும் அதை நோக்கித் திரும்புதல் இயல்பு. பெண் தன் கணவனைக் குழந்தைக்குச் சமமென எண்ணுவள். குழந்தை தன்னை பற்றி இருக்க விரும்புதல் தாய்மையின் இயல்பன்றோ! இதிலென்ன ஆபாசம்?

அரை பிளேடு said...

பொங்கல் வாழ்த்துக்கள்.

தங்களை எழுதியதில் பிடித்தது தொடர் விளையாட்டில் பதிவு எழுத அழைத்துள்ளேன்.

நன்றிகளுடன்
அரைபிளேடு.

விமலா said...

உங்களின் இந்த அறிமுகம் கண்ட பின் நூலகத்தில் தேடிப்பிடித்து இந்நூலை வாசிக்க
துவங்கியுள்ளேன்.
"சங்கப் பாடல்கள்"
அதன் அடர்வு மிகுதியினாலும் பிரித்தாள முடியாத
பல்வேறு படிமங்களாலும் பெரும் தாக்கத்தை விட்டுச்செல்கின்றன..
..இன்னும் சங்க இலக்கியங்களை நிறைய அறிந்து கொள்ளும் ஆவல் எழுந்துள்ளது..சங்க இலக்கியங்களைக்
குறித்து உங்கள் அறிமுகம் உறுதியாக என்னைப் போன்றவர்களுக்கு உதவி
அளிக்கும்..(ஒன்றிரண்டு பாடல்களை
பள்ளி காலங்களில் தேர்வுக்காக மனனம் செய்ததோடு அதனோடு கூட
தொடர்பு அகன்றது)

வழக்கம் போல் ஜெயமோகனின் எழுத்துக்கள் இதிலும் வசீகரிக்கின்றன.

tamizh said...

i too have started writing blogs. Just 10 to 15 lines ezhudhirken. If u find time have a look at it. I m of ur age only.

பாம்பாட்டிச் சித்தன் said...

வணக்கம்

உங்களின் பதிவில் படைப்பாளி பார்க்கத் தவறிய சில கோணங்களையும் குறைகளையும் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கலாம்.அது உங்கள் விழிகளில் படவில்லையோ?

நன்றி

நித்யன் said...

காயத்ரி மேடம்,

வெகு நுட்பமான பதிவு. இப்போதே படிக்க வேண்டும் என்று ஆர்வம் வருகிறது.

நீங்கள் சொல்லியபடியே காய்களைத் தவிர்த்து கனிகளைத்தேடி படிக்க முயல்கிறேன்.

உங்களின் கனிவான அக்கறைக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

பேரன்புடன் நித்யகுமாரன்.

Unknown said...

காயத்ரி,

ஜெயமோகனின் சங்கச்சித்திரங்கள் பற்றிய பதிவைப்பார்க்க நேர்ந்தது. நன்றாக எழுதியுள்ளீர்கள். அந்தப்புத்தகத்தைப் படிக்கவேனண்டும் என்கிற ஆவல் மிகுகிறது. நல்ல படைப்புகளைப்பற்றி தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.