Tuesday, July 24, 2007

"துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்"

போன மாதம் நண்பர் ஒருவருக்கு பிறந்தநாள் வந்தது. புத்தகம் ஏதாவது பரிசளிக்கலாமென்று வழக்கமான கடைக்குள் நுழைந்தபின்பே புத்தியில் உறைத்தது எந்த ரக புத்தகங்களை அவர் விரும்புவார் என்பது தெரியவில்லை. எப்போதோ ஒரு முறை வைரமுத்துவின் 'பெய்யெனப் பெய்யும் மழை' பற்றி அவர் சிலாகித்ததாய் நினைவு. சுற்றி சுற்றித் தேடியும் அங்கே வைரமுத்துவைக் காணவில்லை. கடைக்காரர் வினோதமாய் பார்க்க ஆரம்பித்ததால் குறிக்கோளை மாற்றிக் கொண்டு 'எதையாவது வாங்கிக் கொண்டு இடத்தைக் காலி செய்வது' என்ற முடிவிற்கு வந்தபோது, அந்த புத்தகத்தின் தலைப்பு கண்களை ஈர்த்தது. அது பாப்லோ நெரூடாவின்.. 'துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்' என்ற கவிதை நூல்.

துயருக்கும் இரவிற்கும் மிக நெருங்கிய தொடர்பிருப்பதாய் அடிக்கடி தோன்றும் எனக்கு. எப்போதும் இரைந்து கொண்டிருக்கும் பகலை விடவும் ஆழமாய், அடர்த்தியாய், மெளனமாயிருக்கும் இரவு புதைந்த நினைவுகளை எல்லாம் மீட்டெடுக்கிறது. என் கவிதைகளிலும் கூட சோகக்கவிதைகள் பெரும்பாலும் உறக்கம் தொலைந்த இரவுகளில் எழுதப்பட்டவையே.. என்னை அப்புத்தகம் ஈர்த்ததற்கும் இதுவே காரணமாயிருக்கலாம்.

"சிலி நாட்டில் பிறந்த பாப்லோ நெரூடா (1904 - 1973) இருபதாம் நூற்றாண்டின் பெரும் கவிஞராக மதிக்கப்படுபவர். இருபது வயதில் அவர் எழுதி வெளியிட்ட 'இருபது காதல் கவிதைகளும் நிராசைப் பாடல் ஒன்றும்' அவருக்கு புகழ் தேடித் தந்தது. ...........' கவிதை ஒரு தொழில்' என்று கூறிய நெரூடாவின் கவிதைகள், பன்முகத்தன்மை வாய்ந்தவை. அவருடைய பிற்கால கவிதைகள் நேரிடையாக மக்களை நோக்கிப்பேசின. 1971ல் நோபல் பரிசு பெற்றார்..............."

என்பதாக சம்பிரதாய அறிமுகத்துடன் தொடங்கும் இப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்குகையில் வெறுமனே 'ஒரு கவிதை புத்தகம் படிக்கப் போகிறோம்' என்ற எதிர்பார்ப்புகளற்ற வெற்றுணர்வு மாத்திரமே இருந்தது மனதில். படித்து முடித்ததின் பின்னாய் ஆழமாய் ஆனால் அர்த்தமுள்ளதாய்... மீண்டும் ஓர் வெறுமை வந்தது. சங்க இலக்கியம் முதலாய் சோகம் சுமந்த கவிதைகளுக்கு தனித்ததோர் சிறப்பிடம் வழங்கப்பட்டு வருவது எதனால் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்வுபூர்வமாய் அறிந்து கொள்ள முடிந்தது.

இந்த கவிதைகளை மொழியாக்கம் செய்துள்ள சலபதி, 'துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்' என்ற கவிதைக்கு மட்டும் தமிழில் அரைடஜன் மொழியாக்கங்கள் இருப்பதாய் தனது மிக நீண்ட அறிமுகத்தில் கூறுகிறார்.

படைப்பை விரும்பும் வாசகருக்கு படைப்பாளியும் அவரின் சொந்த விருப்பு வெறுப்புகள் குறித்த ஆராய்ச்சிகளும் அவசியமற்றவை என எப்போதுமே நான் நம்பி வருவதால் பாப்லோ நெரூடாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரின் துயரத்தின் காரணம் குறித்த விபரங்களை வலிந்து தவிர்த்துவிட்டு அவர் கவிதைகளை மட்டும் இங்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

காற்றில் கைவீசி நடப்பதைப்போல தடையின்றி நகரும் இந்தக் கவிதைகள் அனைத்துமே மிக நீண்ண்டதாய் அமைந்திருப்பது என் பணியை சிக்கலாக்கிய போதும்... இடுப்பிலிருந்து இறங்க மறுக்கும் குழந்தையாய் நினைவிலிருந்து நீங்காமல் அடம்பிடிக்கும் ஒரு சில வரிகளை இங்கு சொல்லிப்போவது சாத்தியம்.


"எவளும் உனக்கு நிகரில்லை
நீ என் காதலி என்பதனால்"


"அவள் இல்லை என்பதை நினைக்கும்போது, அவள்
இழப்பை நான் உணரும் போது
துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்"


"துயரத்தை நான் இழந்த பிறகு
எனக்கென நீ மட்டுமே இருக்கிறாய்"


அசாதாரண அர்த்தங்களைச் சுமந்த மிகச்சாதாரணமான இந்த வரிகளில் உண்மையில் நான் பிரமித்துப் போனேன்! அனைத்திற்கும் மேலாய்

"காதல் மிகச் சிறியது.. மறத்தல் மிக நெடியது"

என்ற வரி ஒரு கணம் உலுக்கிப்போனது மனதை!

மொழிபெயர்த்த சலபதியும்,

" Love is short. Forgetting is so long.' இதனை மொழிபெயர்ப்பது அசாத்தியமென்றே சொல்லிவிடலாம். கடைசியில், 'குறுந்தொகையில் பயிலும் 'உயிர் தவச் சிறிது, காமமோ பெரிதே' என்ற அமைப்பைத் தழுவி என் மொழி பெயர்ப்பை அமைத்துள்ளேன்"

எனச் சொல்லியிருந்ததைப் பார்க்கையில் சங்க இலக்கியங்கள் என்ன சமுத்திரங்களை உள்ளடக்கிய சிப்பிகளா என்று வியப்பு வந்தது!!

காதல், பிரிவு என்பன தவிர்த்த பிற கவிதைகளும் இருக்கின்றன.

"எலும்போ உமியோ
செதிளோ முள்ளோ அற்று
புதுமை பொலியும்
நிறங்களின் திருவிழா நமக்கு"

என்று நெரூடா சிலாகிப்பது தக்காளியைப் பார்த்து!!


'புத்தகத்திற்கு' என்று எழுதப்பட்டிருக்கும் விளிநிலைப் பாடல் வெகுவாய் ஆச்சரியப்படுத்தியது என்னை. புத்தகங்களை நேசிப்பதும் வெறுப்பதுமான இருவேறு மனநிலைகளைச் சுமந்திருக்கும் என்னை அக்கவிதை பிரதிபலிப்பதாய் உணர்ந்தேன்.

"புத்தகமே
உன்னை மூடுகையில்
நான் திறப்பது வாழ்க்கையை"


என்ற தொடக்க வரிகளை தாண்டிப்போகவே சில நிமிடங்கள் பிடித்தன!!


"இளம் பூச்சியைப் பிடிப்பதற்கு
நச்சு வலை விரிக்கும்
சிலந்தி நூல்களை
நான் வெறுக்கிறேன்
புத்தகமே
என்னை விட்டு விடு"
"உன் நூலகத்திற்கு நீ திரும்பிப்போ
நான் தெருவில் இறங்கப் போகிறேன்
வாழ்க்கையை நான்
வாழ்க்கையிலிருந்தே கற்றுக் கொண்டேன்
காதலை ஒரு முத்தத்திலிருந்து கற்றேன்"உண்மை தான் இல்லயா? வாழ்க்கையை கற்றுக் கொள்ள அந்த வாழ்க்கையை விடவும் சிறந்த புத்தகம் வேறெதுவாக இருக்க முடியும்?
சில நேரங்களில் புத்தகங்களின் அணைப்பை எரிச்சலூட்டும் ஆக்கிரமிப்பாய்
உணர்ந்ததுண்டு என்பதால் இந்த நூலில் நான் மிக ரசித்த கவிதைகளில் இதுவும் ஒன்று. இதுவன்றி பெயர்களை பற்றி சிந்திக்க வைக்கும் 'எத்தனை பெயர்கள்' மற்றும் 'சொல்' 'கவிதை' 'நினைவு' ஆகிய கவிதைகளும் பிடித்தமானவையாய் இருந்தன. அறிமுகம் போதுமென நினைக்கிறேன்..

சோற்றுப்பதமாய் ஒரே ஒரு கவிதை மட்டும் உங்களுக்காக...

இந்த அந்திமாலையைக் கூட...

இந்த அந்திமாலையைக் கூட நாம் இழந்து விட்டோம்
துயர இரவு இவ்வுலகின்மீது கவிந்தபோது
நாம் கையோடு கைகோர்த்துச் சென்றதை
யாரும் பார்க்கவில்லை.

தொலைதூர மலைமுகடுகளில் அஸ்தமனத்
திருவிழாவைச்
சாளரத்தின் வழியே நான் பார்த்திருக்கிறேன்.

சில சமயங்களில் ஒரு துண்டுச் சூரியன்
என் கைகளுக்கிடையே ஒரு நாணயத்தைப்போல்
சுடர்விட்டது.

என் துயரத்தைப் பற்றித்தான் நீ அறிவாயே -
அது என்னை இறுகப் பற்றுகையில்
உன்னை நான் நினைத்துப் பார்த்தேன்.

அப்போது நீ எங்கே இருந்தாய்?
வேறு யார் உன்னோடிருந்தது?
அவன் என்ன சொன்னான்?

துயருறும் போதும், நீ எங்கோ இருக்கிறாய்
என உணரும்போதும்
காதல் என்னை ஏன் முழுமையாக ஆட்கொள்கிறது?

ஒவ்வொரு மாலையும் நான் படிக்கும்
புத்தகம் கீழே விழுந்தது.
அடிபட்ட நாயைப்போல் என் அங்கி
காலருகே சுருண்டு கிடந்தது.

சிலைகளை அழிக்க அந்தி எங்கே செல்கிறதோ
அங்கே நீ மாலைதோறும் மாலைதோறும் விலகிச்
சென்று கொண்டேயிருக்கிறாய்.


பிடித்திருந்தால் வாங்கிப் படித்துப் பாருங்கள்! அனேகமாய் துயர்மிகு வரிகளை நானும் கூட இன்றிரவு எழுதலாம்!! எப்போதுமே "சுகராகம் சோகம் தானே?" :)

13 comments:

வனம் said...

வணக்கம் காயத்ரி
நானும் பாப்லோ நெரூடாவின் கவிதைகளை படித்துள்ளேன் ஆனால் இன்னும் 'துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்' படிக்கவில்லை

உங்கள் பதிவை பார்த்தவுடன் அதை உடனே படிக்க வேண்டும் என்று இருக்கின்றது

'துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்' படித்தபின் எழுதுகின்றேன்

காயத்ரி சித்தார்த் said...

முதல் வருகைக்கு நன்றி ராஜா.. படிச்சிட்டு சொல்லுங்க. :)

கதிர் said...

நானும் ரொம்ப நாளா இவர பத்தி தெரிஞ்சிக்கணும்னு இருந்தேன்.
பதிவுக்கு நன்றி.

கையேடு said...

miha nalla pathivu. oru muzhu puththahaththai vaasithu athilirinthu thohuthu ezhuthuvathu nichchayam kadinamaana oru seyal.
miha nanraaha ezhuthiyirukkireerhal.

nichchayam antha puththahaththai mattrum avarudaya mattra padaippuhalayum vaasikka vendum enginra oru aarvaththai thoondiyathu ungaludaya pathivu.
__________________________
oru chinna kelvi ketkaamal irukka mudiyavillai
antha puthahaththai parisalitheerhalaa?

Dreamzz said...

படிச்சதில்ல. ஆனா நீங்க போட்டு இருப்ப்பதை படிச்சா அசத்தலா இருக்கு!

காயத்ரி சித்தார்த் said...

தம்பி, ட்ரீம்ஸ்.. உபயோகமா இருந்தா சந்தோஷம் தான்.

இல்லை ரஞ்சித்! பிறந்த நாளுக்கு துயர்மிகு வரிகளை எப்படி பரிசளிக்க? அவர் விரும்பும் வைரமுத்துவையே தேடிப்பிடித்து பரிசளித்தேன்.. "தண்ணீர் தேசம்".

(அட! இதை சொல்லாம விட்டுட்டேனா? தேங்க்ஸ்) :)

கப்பி | Kappi said...

நல்லதொரு அறிமுகத்திற்கு நன்றி!

Unknown said...

நெருடாவின் கவிதைகள் சுகுமாரனின் மொழிபெயர்ப்பில் கிடைத்தது. வாசித்த போது ஈர்க்கவில்லை. அதற்கான மனநிலை அப்போது இருந்திருக்கவில்லை. உங்களது பதிவு மீண்டும் வாசிக்க தூண்டுகிறது. நன்றி.

MyFriend said...

//என் கவிதைகளிலும் கூட சோகக்கவிதைகள் பெரும்பாலும் உறக்கம் தொலைந்த இரவுகளில் எழுதப்பட்டவையே..//

hmm.. puriyuthu!!! nadaththungga nadaththungga!!! :-P

ரவி said...

நல்ல ரசிப்பு !!!!!!!!! என்னையும் ரசிக்க வைத்தது...!!

Enbee said...

"அவள் இல்லை என்பதை நினைக்கும்போது, அவள்
இழப்பை நான் உணரும் போது
துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்"

-classic one

Bee'morgan said...

காயத்ரி, என்ன பதிப்பகம்னு சொல்லலியே?
நீங்க எழுதியிருக்கிறதை பாக்கும் போது, உடனே படிக்கணும்னு தோணுது..

Bee'morgan said...

என்றோ நீங்கள் எழுதிய இந்த பதிவின் விளைவு.. பெங்களுர் புத்தகக்கண்காட்சியில் கண்ணில் பட்டதுமே வாங்கிவிட்டேன்.. இன்னும் படித்து முடித்ததிலிருந்து மீள முடியவில்லை.

நானும் கூட இன்றிரவு எழுதலாம்.. அருமையான அறிமுகத்திற்கு நன்றி..