தமிழ்மணம் பற்றியோ வலைப்பதிவுகள் பற்றியோ நட்சத்திர அந்தஸ்து பற்றியோ எதுவுமே அறிந்திராத நாளொன்றில், முதன்முதலாய் பள்ளி செல்லும் குழந்தை போல நிறைய தயக்கங்களோடு நான் என் வலைப்பதிவை தொடங்கிய போது
"கண்கள் மற்றும் கற்பனையின் சக்திக்கு அப்பாற்பட்டு பரந்து விரிந்திருக்கும் இந்த வானத்தில் நானும் ஓர் நட்சத்திரமாய் மின்ன வந்திருக்கிறேன். நட்சத்திரங்களை எண்ணும் எந்தக் குழந்தையாவது என்னை அதன் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளாமலா போய் விடும்? நம்பிக்கையுடன் துவங்குகிறேன்!!"
என்று என் அரங்கேற்றத்தில் சொல்லிருந்தேன். ஏப்ரல் 28 ம் தேதி இதைப் பதிவிட்டு மிகச்சரியாய் நான்கு மாதங்களில் ஆகஸ்ட் 28 ம் தேதி தமிழ்மணத்தாரின் நட்சத்திர அழைப்பை ஏற்க வேண்டியிருந்தது. இச்செய்தியை என் தலையின் எடையைச் சற்று கூட்டக் கூடிய விஷயங்களில் ஒன்றாக நான் கருதிக் கொண்டாலும் பார்வையாளர் வரிசைகளில் ஏதோவோர் கடைக்கோடி இருக்கையில் உட்கார்ந்திருந்தவளை அழைத்து வந்து மேடையின் கண் கூசும் வெளிச்ச விளக்குகளுக்கு நடுவே நிறுத்தினாற் போல பதற்றமே மிஞ்சியிருக்கிறது இப்போது!
நானறிந்த என் உயரம் மற்றும் இன்னும் விஸ்தரிக்கப்பட்டிராத என் எழுத்தின் சிற்றெல்லைகள் கேலிப் புன்னகையுடன் என்னை நோக்கியபடி இருப்பதால் இன்னும் ஒரு வார காலம் என்ன எழுதப்போகிறேன் என்பது விளங்கவில்லை. (யாருங்க அது? எழுதினா மட்டும் வெளங்கவா போகுதுன்னு சொல்றது?!)
என்றாலும் என் அடையாளங்களைத் (கவிதை?) தக்க வைத்துக் கொள்வதற்கான தன்முனைப்பு மற்றும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளும் பொறுப்புணர்வின் மீதான உந்துதலிலாவது எதையேனும் எழுத முடியுமென நம்புகிறேன்.
மற்றபடி, 'எவரையும் நிராகரிக்காமலும் எவராலும் நிராகரிக்கப்படாமலும் வாழ விரும்பும், வெகு சாதாரணள்' என்பது தவிர என்னைப் பற்றிச் சிறப்பித்துச் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை.
இந்த நான்கு மாதங்களாய் நானாவிதமான திசைகளிலிருந்தும் என் மேல் அன்பைப் பொழிந்து வரும்(?) நண்பர்கள் மற்றும் பாசக்காரக் குடும்பத்தினர் என் பதிவுகளுக்கு பின்னூட்டங்களின் வழி "ஊட்டம்" தரவிருப்பதாக சென்ற வாரத்தொடக்கத்திலிருந்தே உளவுத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தபடியிருக்கின்றன!! எல்லோரையும் அன்பு கூர்ந்து வரவேற்கும் இதே வேளையில் பொன்மொழி ஒன்றையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்...
"கமெண்ட் மாடரேஷனை நம்பினோர் கை விடப்படார்!"
நட்புடன்...
காயத்ரி