Friday, September 21, 2007

குறுந்தொகை - அறிமுகம் - 1

வலைக்கு வந்த நாள் முதலாய் சங்க இலக்கியங்கள் குறித்த அறிமுகம் தரவேண்டும் என்ற விருப்பம் உள்ளே கனன்று கொண்டேயிருக்கிறது. சித்தார்த்தின் பதிவுகள் அந்த விருப்பத்தைப் பெரு விழைவாய் மாற்றியிருந்த போதும் தொடர்ந்து நான் தயங்கியபடியே இருந்ததற்குக் காரணம், சொல்லும் பொருளுமாய் செறிந்திருக்கும் பாடல்களை அதன் அடர்வு குன்றாமல் அர்த்தமிழக்காமல் எளிமைப்படுத்திவிட இயலுமா என்ற சந்தேகம் நீடித்து வந்ததே. கொஞ்சம் பிசகினாலும் வலைப்பதிவு வகுப்பறையாகி கற்பித்தலுக்கான த்வனியோடு என் வார்த்தைகள் இயங்கிவிடக் கூடிய அபாயமிருப்பதாலேயே இந்த முயற்சியை இத்தனை நாட்களாய்த் தள்ளிப் போட்டிருந்தேன். அதனால் இதை பதிவென்று கொள்வதை விடவும் என் முதல் முயற்சி என்று கூறிக் கொள்வது என் பிழைகளை நீங்கள் மன்னிக்க உதவலாம்!

சங்க இலக்கிய அறிமுகம் எழுதுவதென்று முடிவு செய்துவிட்ட பிறகு மொத்தமுள்ள 2387 பாடல்களில் எதைச் சொல்வது எதை விடுப்பது என்ற மலைப்பு வந்தது. 3 அடி முதலாய் 782 அடிகள் கொண்ட நெடும்பாடல்கள் வரை அனைத்தும் திரும்பத் திரும்ப காதலையும் வீரத்தையுமே பேசிக்கொண்டிருக்கையில் சிறப்பித்தும் வியந்தும் சொல்லவேண்டிய பாடல்களைத் தேர்ந்து கொள்வது கொஞ்சமல்ல... நிரம்பவே சிரமமான காரியமாயிருந்தது. என்றாலும் சுட்டிக் காட்டவும் சிலாகித்துச் சொல்ல்வும் எப்போதுமே எனக்கு குறுந்தொகை எளிதில் வசப்படுமென்பதால் அதையே இப்போதும் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.


பொதுவில் சங்க இலக்கியங்கள் பற்றிய புரிதலின்மையும், அலட்சியப் போக்கும் மேலதிகமாய் "சங்க இலக்கியங்கள் சாமான்ய மக்களைப் பற்றிப் பேசுவதில்லை" என்ற மேம்போக்கான கருத்துருவாக்கமும் நிலவி வருவதை நான் கண்டு வருகிறேன். உணர்வுகளில் மேல்தட்டு, கீழ்மட்டம் என்ற பிரிவினைகள் சாத்தியமா என்ன? பிரிவின் வலி, இழத்தலின் துயரம், காதலின் அவஸ்தை, ஊடல், கூடல் போன்ற நுண்ணிய அக உணர்வுகள் அனைத்தும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் கூட பொதுவாயிருப்பதை சங்க இலக்கியம் சுட்டிக் காட்டத் தவறிவிடவில்லை. மக்களால் மக்களுக்காக எழுதப்பட்ட இலக்கியங்கள் என்பதால் அரசனொருவனின் பாடலுக்கிணையாய் விவசாயியின் கவிதையும், பாடிப்பிழைக்கும் பாணனின் பாடலும், பெண்களின் கவித்திறனும் இடம்பெற்றிருக்கும் அற்புதம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது!

என் பதின்மங்களில் முதன்முதலாய் அடர்பச்சை நிற அட்டையில் "குறுந்தொகை" என்று பொன்னிற எழுத்துகளில் ஒளிர்ந்த அந்த தடித்த புத்தகத்தைப் பிரிக்க நேர்ந்தபோது இது தமிழ்தானா என்ற சந்தேகம் வந்தது எனக்கு. திருவிழாவில் தொலைந்த குழந்தையாய் அந்த புத்தகங்களின் பக்கங்களுக்குள் அலைபாய்ந்து ஓரளவு வழியறிந்தேன். என்றாலும் அத்தனை பாடல்களும் வெகுவாய் சலிப்பூட்டின. மீண்டும் மீண்டும் காதல், காமம், ஊடல், கூடல், பிரிதல், காத்திருத்தல் என்று வந்த பாடல்களைப் பார்த்த போது 'இதைவிட்டால் எழுத்தில் பதிவு செய்ய வேறொன்றுமே இல்லையா தமிழர்களுக்கு?' என்ற வெறுப்பும் 'இதுவா கடலை வென்று,காலத்தை வென்று இன்னமும் பேசப்பட்டுக் கொண்டேயிருக்கிறது?' என்ற வியப்பும் ஒருமித்துத் தோன்றின.

வெகு நாட்களுக்கு பேடி கை வாள் போல அந்த புத்தககம் பயன்படாமலே இருந்தது என்னிடம். ஆனால் வெறும் கற்களென நான் ஒதுக்கியவை செப்பமுற செதுக்கப்பட்ட கடவுட் சிலைகளென காலம் கடந்த புரிதல்களின்போது விளங்கியது. கவிதை எப்போதும் கவிதையாகவே இருக்கிறது.. அதைப் புரிந்து கொள்ளக்கூடிய திறனும் அதற்கேற்ற உணர்வுகளும்தான் அதை ஏற்கவும் நிராகரிக்கவும் காரணங்களாகின்றன.

மனிதர்கள் காதலித்துக் கொண்டிருக்கும் வரையில், எக்காலத்திலும் சலித்து விடாத ஒன்றாய் ஆண் - பெண் உறவுகள் தொடர்ந்து வரும் வரையில் உணர்ச்சிகளின் சமுத்திரமாய் விளங்கும் இப்பாடல்கள் தங்களின் தனித்துவத்தை இழந்துவிடப் போவதில்லையென்றே தோன்றுகிறது. நம்மையொத்த முகச்சாயல் கொண்ட ஒருவரை எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தால் எப்படியொரு இன்ப அதிர்வெழுமோ அதே அதிர்வை இப்பாடல்களும் தருகின்றன.

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை என்ற எட்டு நூல்கள் சேர்ந்த எட்டுத்தொகை என்ற தொகுப்பும் இன்ன பிற பத்து நூல்கள் அடங்கிய பத்துப்பாட்டு என்ற தொகுப்பும் இணைந்து சங்ககால இலக்கியங்கள் என்ற பெயரில் வழங்குகின்றன. இவற்றில் என்னைப் பெரிதும் மயக்கியிருக்கும் குறுந்தொகையின் நானூறு பாடல்களில் ஒரு சில துளிகளை மட்டுமே இங்கு சுட்டிக்காட்டவிருக்கிறேன்.

செய்யுட்களுக்கு அருஞ்சொற்பொருளும் தெளிவுரைகளும் தந்து செல்வது என் நோக்கமன்று. 'நம் தமிழில் இவையும் இருக்கின்றன, தெரிந்துகொள்ளுங்கள்' என்று ஆற்றுப்படுத்தும் முயற்சியாகவே இதனைத் தொடங்குகிறேன்.

33 comments:

நாகை சிவா said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்...

ஜே கே | J K said...

முயற்சிக்கு வாழ்த்துக்கள்....

ஏங்க நீங்க M.Phil தமிழ் படிச்சிருக்கீங்கனு இப்படி எழுதித்தான் நிருபிக்கனும்னு இல்ல.

சொன்னாலே போதும் நாங்க ஒத்துக்கிறோம்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழம்மா ஆகிட்டீங்களா?/ எழுதுங்க எழுதுங்க...

Mohandoss said...

நல்ல விஷயம் தொடருங்கள்.

வாழ்த்துக்கள்.

நாடோடி இலக்கியன் said...

வாழ்த்துக்கள்!!!

நந்தா said...

நல்ல முயற்சி. படிக்கக் காத்திருக்கிறோம்.

//"சங்க இலக்கியங்கள் சாமான்ய மக்களைப் பற்றிப் பேசுவதில்லை" என்ற மேம்போக்கான கருத்துருவாக்கமும் நிலவி வருவதை நான் கண்டு வருகிறேன். உணர்வுகளில் மேல்தட்டு, கீழ்மட்டம் என்ற பிரிவினைகள் சாத்தியமா என்ன? //

இந்த கருத்து வெகு குறிப்பிட்ட சிலரால் மட்டுமே படித்தவுடன் புரிந்துக் கொள்ளும் வகையில் சங்க இலக்கியங்கள் எழுதப்பட்டதால் வந்த கருத்தாய் இருக்கலாம். இன்றும் நமக்கு சங்க இலக்கியங்களைப் படிக்க ஒரு உரையோ அல்லது தமிழ் பேராசிரியரோ தேவைப் படுகிறது.

எது எப்படியோ, கொடுங்கள். அதன் சுவையையும் அறியக் காத்திருக்கிறோம்.

சுஜாதாவின் 400 காதல் கவிதைகள் படித்திருக்கிறீர்களா?? ஒருவேளை எப்படி ப்ரசண்ட் செய்வது என்ற ஐடியா கிடைக்கலாம்.

Unknown said...

வாழ்த்துக்கள்,தமிழ் விரிவுரையாளரே.

Bee'morgan said...

வாழ்த்துக்கள் காயத்ரி. நீங்க நல்லா பண்ணுவீங்கனு நம்பிக்கை இருக்கு.. :)
பி.கு:
சுஜாதாவின் "401 காதல் கவிதைகள்" படிச்சிருக்கீங்களா?

கையேடு said...

//வலைக்கு வந்த நாள் முதலாய் சங்க இலக்கியங்கள் குறித்த அறிமுகம் தரவேண்டும் என்ற விருப்பம் உள்ளே கனன்று கொண்டேயிருக்கிறது.//

இப்படி ஏதும் திட்டம் இருக்கிறதா என்பதைத்தாங்க என்னுடைய முந்தய ஆங்கில எழுத்துவடிவ தமிழ்ப் பின்னூட்டத்தில் கேட்க முயன்றேன்.

உங்களுடைய முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.. - இரா. இரஞ்சித்.

LakshmanaRaja said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
என்னை போன்ற திசை தவறிய தமிழ் தேடும் பறவைகளுக்கு நன்கு உதவும். நன்றி.


//கவிதை எப்போதும் கவிதையாகவே இருக்கிறது.. அதைப் புரிந்து கொள்ளக்கூடிய திறனும் அதற்கேற்ற உணர்வுகளும்தான் அதை ஏற்கவும் நிராகரிக்கவும் காரணங்களாகின்றன.//
:-)

முகவை மைந்தன் said...

இது போன்ற பதிவுகள் தாம் உங்களிடம் எதிர் பார்த்தேன். வாழ்த்துக்கள்.

தனித் தமிழில் எழுத முயற்சிக்கலாமே!

Unknown said...

நல்ல காரியம் காயத்ரி... என்ன மாதிரி சும்மா ஆர்வக்கோளாருல செய்யறத விட. துறை சார்ந்து எழுதப்படற அறிமுகம் அர்த்தமுள்ளதா இருக்கும். தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

//ஆனால் வெறும் கற்களென நான் ஒதுக்கியவை செப்பமுற செதுக்கப்பட்ட கடவுட் சிலைகளென காலம் கடந்த புரிதல்களின்போது விளங்கியது. கவிதை எப்போதும் கவிதையாகவே இருக்கிறது.. அதைப் புரிந்து கொள்ளக்கூடிய திறனும் அதற்கேற்ற உணர்வுகளும்தான் அதை ஏற்கவும் நிராகரிக்கவும் காரணங்களாகின்றன//


கவிதைகள் மட்டுமல்ல,மனிதர்களைப் புரிந்து கொள்வதும் அப்படியே !!!!!!

வனம் said...

வணக்கம் காயத்திரி

வரவேண்டும் வாழ்த்துக்கள்
ரோம்ப நாளாக எதிர்பாத்துக்கொண்டு இருந்தேன்

இவையெல்லாம் இணையத்தில் வரவேண்டும்

வல்லிசிம்ஹன் said...

நன்றி காயத்ரி,

தமிழைத் தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு.
பாடலுடன் கூடவே பொருளும் கொடுத்தால்தான் புரிந்து கொள்ள முடியும். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

துரியோதனன் said...

//'நம் தமிழில் இவையும் இருக்கின்றன, தெரிந்துகொள்ளுங்கள்' என்று ஆற்றுப்படுத்தும் முயற்சியாகவே இதனைத் தொடங்குகிறேன்.//

நீங்க மட்டும் தொடங்கவில்லையென்றால் நான் எழுத ஆரபித்திருப்பேன். சொன்னா நம்புங்க நானும் பிளாகர்தான்,பிளாகர்தான்.


வாழ்த்துக்கள் காயத்ரி!

Ayyanar Viswanath said...

முயற்சிக்கு வாழ்த்துக்கள்

மக்க சொல்ற மாதிரி சுஜாதா படிக்காம எழுதுங்க :)

வித்யா கலைவாணி said...

காயத்ரி அக்கா அற்புதமான பாடல்கள் கொண்ட குறுந்தொகை ஆராய்ச்சியில் இறங்கியதற்கு நன்றியும், வாழ்த்துக்களும். அடுத்த பகுதியில் கீழே உள்ள தொடுப்பில் குறுந்தொகையை முழுவதும் PDF ஆக பதிவிறக்கலாம் என்பதை தெரிவிக்கவும்.நல்ல தொகுப்பு தொடரவும்.
http://www.tamil.net/projectmadurai/pub/pm0110/kurunto.pdf

sakthin said...

"கவிதை எப்போதும் கவிதையாகவே இருக்கிறது.. அதைப் புரிந்து கொள்ளக்கூடிய திறனும் அதற்கேற்ற உணர்வுகளும்தான் அதை ஏற்கவும் நிராகரிக்கவும் காரணங்களாகின்றன."
---succinctly and beautifully stated truth :) wonderful...

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள்!

G.Ragavan said...

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் முயற்சி வெற்றி பெற என்னுடையவாழ்த்துகள்.

இனியது கேட்கின் வலைப்பூவுல எனக்குத் தெரிஞ்சதச் சொல்லீருக்கேன். வந்து பாருங்க. ஆனா நீங்க தமிழ் படிச்சவங்க. ஆகையால நீங்க சுவையாச் சொல்லுவீங்கன்னு எதிர்பார்க்கிறேன். http://iniyathu.blogspot.com

குமரன் (Kumaran) said...

காயத்ரி,

தமிழ்மண விண்மீனாய் வருபவர்கள் எல்லோருடைய பதிவுகளையும் ஒரு முறையேனும் நுழைந்து வாசித்துவிடுவது என் வழக்கம். இந்த வாரம் அப்படி செய்யாமல் இருந்துவிட்டேன். குறுந்தொகை என்ற தலைப்பைப் பார்த்தவுடன் தான் உள்ளே வந்தேன். இடுகையின் கனத்தைப் பார்த்தவுடன் பிரதி எடுத்து சுவைத்துப் படித்து இப்போது பின்னூட்டங்கள் இடுகிறேன். வாரத் தொடக்கத்திலேயே உங்கள் பதிவுகளைப் படிக்காததற்கு மன்னிக்கவும்.

சித்தார்த்தின் பதிவினை அறிமுகம் செய்ததற்கும் நன்றி. அவருடைய பதிவினை முன்பு கண்டிருக்கிறேன். ஆனால் குறுந்தொகை இடுகைகளைப் படித்ததில்லை. இப்போது அவற்றையும் பிரதி எடுத்து வைத்திருக்கிறேன்.

உங்கள் தயக்கம் புரிகிறது. ஆனால் எழுதத் தொடங்கினால் தானாகவே இடுகைகள் எளிமையாக அமைந்துவிடும் என்றே நினைக்கிறேன். சொல்லும் பொருளும் என செறிந்திருக்கும் பாடல்களின் அருமையை அள்ளித் தரத் தயங்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

குமரன் (Kumaran) said...

//பொதுவில் சங்க இலக்கியங்கள் பற்றிய புரிதலின்மையும், அலட்சியப் போக்கும் மேலதிகமாய் "சங்க இலக்கியங்கள் சாமான்ய மக்களைப் பற்றிப் பேசுவதில்லை" என்ற மேம்போக்கான கருத்துருவாக்கமும் நிலவி வருவதை நான் கண்டு வருகிறேன். //

எனக்குத் தமிழில் சிறிது ஆர்வம் இருந்தாலும் சங்கப் பாடல்களில் அவ்வளவு பயிற்சி இல்லை. சங்கப் பாடல்களைப் பற்றி அண்மையில் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். புரிதலின்மையும் அலட்சியப் போக்கும் இருக்கின்றன என்பதை நானும் உணர்கிறேன். வடமொழி இலக்கியங்கள் ஆராயப்பட்ட அளவிற்கு தமிழ் இலக்கியங்கள் ஆராயப்பட்டு கருத்துகள் எடுத்து வைக்கப்படவில்லை. பல அரசியல் நோக்கங்களுக்காக தமிழ், தமிழர் என்ற உணர்வினைக் கொள்ளும் மக்களிடையேயும் வடமொழி நூற்களில் சொல்லப்பட்டவை பற்றிய அறிவு அதிகமாகவும் தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்டவை பற்றிய அறிவு குறைவாகவும் இருப்பதாக உணர்கிறேன். தமிழ் இலக்கியங்கள் அந்த அளவிற்கு ஆராயப்படவில்லையா, ஆராயப்பட்டிருந்தாலும் அந்த அளவிற்கு மக்கள் நடுவில் பரப்பப்படவில்லையா, அப்படியே பரப்பப் பட்டிருந்தாலும் சுவைப்படச் சொல்லப்படவில்லையா எங்கே குறையென்று தெரியவில்லை.

சங்க இலக்கியங்கள் மேற்குடி மக்களைப் பற்றி மட்டுமே பேசுகின்றன என்பதை 'திணை', 'துறை' போன்ற இலக்கணப் பிரிவுகளை வைத்து விளக்கிய ஒரு கட்டுரையைப் படித்திருக்கிறேன். மேற்குடி அல்லாதவர்களின் காதலும் வீரமும் கைக்கிளை போன்ற பொருந்தாக் காதலாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது என்றும் படித்திருக்கிறேன். சங்க இலக்கியங்களில் அவ்வளவு பயிற்சி இல்லாததால் இந்தக் கருத்து எவ்வளவு தூரம் சரி என்பது தெரியவில்லை. உங்களைப் போன்ற துறை சார்ந்தவர்கள் விளக்கினால் படித்து அறிந்து கொண்டு பயனடைவோம்.

SnackDragon said...

//என் பதின்மங்களில் முதன்முதலாய் அடர்பச்சை நிற அட்டையில் "குறுந்தொகை" என்று பொன்னிற எழுத்துகளில் ஒளிர்ந்த அந்த தடித்த புத்தகத்தைப் பிரிக்க நேர்ந்தபோது இது தமிழ்தானா என்ற சந்தேகம் வந்தது எனக்கு.//

நாங்கல்லாம் இன்னும் பதின்மத்திலேயே( ப்ளஸ் ஆர் மைனஸ் ஒன்னு இரண்டு) இருப்பதால அப்படி பேசறோம். வளர்ந்தா உங்கள மாதிரி மாறிட மாட்டோமா என்ன? :)))

Unknown said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்...

ஜமாலன் said...

நல்ல முயற்சி சகோதரி..

தொடருங்கள்.

நாமக்கல் சிபி said...

//சங்க இலக்கியங்கள் குறித்த அறிமுகம் தரவேண்டும் என்ற விருப்பம் உள்ளே கனன்று கொண்டேயிருக்கிறது//

ஆஹா! சங்கத்தைப் பத்தி இலக்கியமா?
சீக்கிரம் எழுதி போடுங்க!

மிக்க நன்றி!

-இவண்,
தளபதி,
வ.வா.சங்கம்!

நாமக்கல் சிபி said...

//சங்க இலக்கியங்கள் குறித்த அறிமுகம் தரவேண்டும் என்ற விருப்பம் உள்ளே கனன்று கொண்டேயிருக்கிறது//

கனன்று கொண்டே இருந்தா எப்படிங்க சூடான பதிவுல வரும்?

நல்லா நாலு பதிவு கொளுத்திப் போடுங்க!

நாமக்கல் சிபி said...

//கொஞ்சம் பிசகினாலும் வலைப்பதிவு வகுப்பறையாகி கற்பித்தலுக்கான த்வனியோடு என் வார்த்தைகள் இயங்கிவிடக் கூடிய அபாயமிருப்பதாலேயே இந்த முயற்சியை இத்தனை நாட்களாய்த் தள்ளிப் போட்டிருந்தேன்//

வகுப்பறையா?

எங்க வாத்தியார் ஐயாவுக்குப் போட்டியா இன்னொரு வகுப்பறை வந்துட முடியுமா என்ன?

பனமரத்துல வவ்வாலா?
எங்க (சுப்பையா)வாத்தியாருக்கே சவாலா?

அபி அப்பா said...

வாழ்த்துக்கள் காயத்ரி! நல்ல முயற்சி, ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக் வந்தா மாத்திரம் என்னை கேட்டுக்கோப்பா:-))

பாலராஜன்கீதா said...

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம்
என்று இத்திறத்த எட்டுத் தொகை

என்றொரு வெண்பா இருக்கிறதா ?

காட்டாறு said...

நல்ல முயற்சி. நட்சத்திர வாரத்தையும் தாண்டி எழுதுவீங்கன்னு நினைக்கின்றேன்.

பதில் எழுத முடியாது போனாலும், உங்க பதிவை, அதுவும் குறுந்தொகைப் பதிவை கண்டிப்பா வாசிப்பேன்.

thana said...

நல்ல முயற்சி காயத்திரி இலக்கியம் என்பது வாழ்க்கை.அதை தெளிவு படுத்த விரும்பும் உங்களுக்கு எனது சபாஷ்