Friday, September 21, 2007

குறுந்தொகை - அறிமுகம் -2"நீரும் செம்புலச்சேறும் கலந்தது போலே கலந்தோம் நாமே"


-- சில்லுனு ஒரு காதல்!


குறுந்தொகை என்ற தொகுப்பு நூல் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர், மற்றும் பாணர் முதலான சமூகத்தின் பல மட்டங்களிலிருக்கும் தமிழறிந்த மக்களால் எழுதப்பட்ட பாடல்களைக் கொண்டிருக்கிறது. மொத்தம் 400 பாடல்கள். 4 முதல் 8 அடிகளுக்கு மிகாமல் எழுதப்பட்ட பாடல்களில் உணர்ச்சிகளைக் கனம் குறையாமல் கவிதையாய்க் கட்டமைத்திருக்கிறது. குறுந்தொகை உவமைகளுக்குப் பெயர் போன இலக்கியம். 'இப்படி கூட சிந்திப்பார்களா?' என்று நம்மை ஆச்சரியத்தில் தள்ளும் அற்புத உவமைகள் ஏராளமிருக்கின்றன. அவற்றில் இதுவும் ஒன்று!

கணவன் வேலைக்காக வெளியூர் சென்றுவிட அவன் பிரிவால் வாடும் மனைவி...


"பூ இடைப்படினும் ஆண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போல...."

என்று கணவனுடனான தன் நெருக்கத்தையும் பிரிவுத்துயரையும் சொல்கிறாள்.

மகன்றிற் பறவை (அன்றிற் பறவையாகவும் இருக்கலாம்!) என்பது எப்போதும் தன் இணையோடு சேர்ந்து நீரில் நீந்திக் கொண்டிருப்பது. அப்படி நீந்தி வருகையில் இரண்டு பறவைகளுக்குமிடையில் நீரில் பூத்திருக்கும் தாமரையோ அல்லியோ அல்லது ஏதேனுமொரு நீர்ப்பூவோ எதிர்ப்படுமானால் அந்தப் பூவைச் சுற்றிவந்து மீண்டும் இணையும் சிறு பொழுதிற்கு இரண்டு பறவைகளும் ஓராண்டு பிரிந்தது போலத் தவித்திருக்கும்... அப்பறவையை போன்றவள் தான் நானும் என்கிறாள்!

மற்றுமொரு பெண்... "மழைக்காலத்திற்குள் திரும்பி வந்துவிடுவேன்" என்று சொல்லிப்போனவன் வெகுநாட்களாய் வராததால் காத்திருப்பின் உக்கிரம் தாளாமல் அவனைத் திட்டத் தொடங்குகிறாள்

"வாரார் ஆயினும் வரினும் அவர் நமக்கு
யார் ஆகியரோ? தோழி! நீர
நீரப் பைம்போது உளரி, புதல
பீலி ஒண்பொறிக் கருவிளை ஆட்டி
நுண்முள் ஈங்கைச் செவ்வரும்பு ஊழ்த்த
வண்ணத்துய்ம்மலர் உதிர, தண்ணென்று
இன்னாது எளிதரும் வாடையொடு
என் ஆயினாள் கொல் என்னா தோரே?"


-- 110, கிள்ளி மங்கலங் கிழார்.


"அவர் இனி வராவிட்டாலும் வந்தாலும் எனக்கு அவர் யாரோ போன்றவரே தோழி! நீரில் மலரும் மொட்டுக்களை மலர்த்தி மயில் தோகை போன்ற கருவிளை மலர்களை அசைத்து, நுண்ணிய முட்களையுடைய ஈங்கை மர அரும்புகளை விரித்து, வண்ண மலர்களை உதிர்த்தபடி சில்லென வீசி துன்பம் தரும் இந்த வாடைக்காற்றில் அவள் என்ன ஆனாளோ என்று
வருந்தாதவன் வந்தால் என்ன? வரா விட்டால் தான் என்ன? " என்பது அவள் கோபம்!

'உளரி, ஆட்டி, உதிர' என மலர்களின் துன்பத்தைச் சொல்வதன் மூலம் குளிர்க்காற்றும் மழையும் தன்னை வருத்துவதைச் சொல்லாமல் சொல்லும்
தலைவி "இனி அவருக்கும் எனக்கும் சம்பந்தமில்லை" என்று சினந்து கொள்கிறாள்!!


" நைட் போன் பண்றேன்னு சொல்லிட்டு பண்ணலன்னா எனக்கு கோபம் வராதாடி? எவ்ளோ நேரம் காத்திட்டிருந்தேன் தெரியுமா?
அவ வெயிட் பண்ணிட்டிருப்பாளேன்னு கூட தோணலன்னா இவனெல்லாம் என்ன லவ்வர் சொல்லு?"


என்று கோபமும் ஆற்றாமையுமாய் என் தோழிகள் புலம்பும் தருணங்களில் என் மனதில் இந்தப் பாடல் தவறாமல் தலைகாட்டி புன்னகை பூக்க வைக்கிறது!!

இது ஒரு எல்லை என்றால்.. கணவன் சொல்லிப் போன மழைக்காலம் வந்த பின்னும் அவன் வராத நிலையில் " அவர் சொன்ன சொல் தவறாதவர்..
இந்த மழை தான் பருவம் தப்பிப் பெய்கிறது" என்று சொல்லிக் கொள்ளும் அதீத நம்பிக்கை உணர்வுகளையும் காண முடிகிறது!

பிரிவின்போது பொழுது சாயும் வேளைகள் தரும் துயரத்தை உணர்ந்திராதவர்கள் யார் இருக்க முடியும்? இந்தப்பாடலும் அப்படி ஒரு பிரிவின் துயரைப் பேசுகிறது..


"எல்லை கழிய முல்லை மலர
கதிர்சினம் தணிந்த கையறு மாலை
உயிர்வரம்பு ஆக நீந்தினம் ஆயின்
எவன் கொல்? வாழி தோழி!
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே!"


--387, கங்குல் வெள்ளத்தார்


"பகலின் எல்லை முடிந்து முல்லைப்பூக்கள் மலரத் தொடங்கிவிட்ட மாலை நேரம்! சூரியனின் சினம் தணிந்த பின்னால் வந்து கொண்டிருக்கும் இந்த தாங்கிக் கொள்ளவியலாத மாலை நேரத்தை உயிர் போவதற்கு முன்பாக என்னால் நீந்திக் கடந்து விட முடியுமா தோழி? இரவு வெள்ளம் கடலை விடவும் பெரிதாய் இருக்கிறது" என்கிறாள் ஒரு பெண்!

இரவென்ன வெள்ளம் போன்றதா? அதுவும் உயிர் போவதற்குள் நீந்திக் கடந்துவிட முடியாத கடல் போன்றதா!! என்ன அற்புதமான உவமை இது? இதைப் படித்ததிலிருந்து ஜன்னல் திறந்து இரவு வானம் பார்க்கையில் எல்லாம் இருள் கடலாய்ப் பொங்கிப் பெருகுவது போன்றதோர் பிம்பம் எழுவதை என்னால் தவிர்க்க முடிவதில்லை! இப்பாடலை எழுதியவர் தன்
பெயரைக்கூட குறிப்பிட்டுச் சொல்லிக் கொள்ளாததால் 'கங்குல் வெள்ளத்தார்' என்றே குறிக்கப்பட்டிருக்கிறார்!

குறுந்தொகைப் பாடல்கள் ஒவ்வொன்றிலும் அளவிட முடியாத காதல் உணர்வுகள் தேக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

பெண்ணொருத்தியைப் பார்த்த நாளிலிருந்து பித்துப் பிடித்தவனாகிறான் இளைஞன் ஒருவன். அவனின் இயல்பு பிறழ்ந்த நிலையைக் காணச்சகிக்காத அவன் நண்பர்கள் அவனை கடிந்து கொள்கின்றனர். அவர்களுக்கு அவன் இப்படி பதில் தருகிறான்...

"இடிக்கும் கேளிர்! நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கைஇல் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல
பரந்தன்று இந்நோய்; நோன்று கொளற்கு அரிதே"


-58, வெள்ளி வீதியார்


"என்னை இடித்துரைக்கும் நண்பர்களே! என் பிரச்சினையை உங்களால் நிறுத்த முடிந்தால் அது எனக்கு நன்மையுடையதாய் இருக்கும். வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும் பாறை ஒன்றின்மீது வைக்கப்பட்டிருக்கும் வெண்ணெயை கைகள் இல்லாத, வாய் பேசவியலாத ஒருவன் காக்க முயல்வதைப் போல நான் தவித்துக் கொண்டிருக்கிறேன். வெண்ணெய் உருகிப் பாறையில் பரவுவது போல காதல் என்னுள் பரவிக் கொண்டிருக்கிறது. இந்நோய் தாங்கிக் கொள்வதற்கு அரிதானது" என்பது இதன் பொருள்.


"கை இல் ஊமன் கண்ணிற் காக்கும் வெண்ணெய் உணங்கல் போல"

குறுந்தொகையில் என்னை வெகுவாய் அசர வைத்த உவமை இது! கைகளிருந்தால் உருகும் வெண்ணெயைத் தடுத்து நிறுத்த இயலும். பேச முடிந்தால் எவரையேனும் உதவிக்கழைக்கலாம். ஏதும் செய்யவியலாமல் வெண்ணெய் உருகி வழிதலை கண்களால் கண்டபடி தவிப்பது எத்தனை கொடுமை....என்ன அழகான கற்பனை!

இவை தவிர குறுந்தொகையில் புகழ் பெற்ற பாடல் ஒன்றுண்டு.

"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"


-- செம்புலப் பெயல்நீரார்

"உன் தாயும் என் தாயும் யாரோவென தொடர்பற்றவர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் அறிமுகமானவர்கள் இல்லை. பாலை மண்ணில் பெய்த மழை போல நம்மிருவர் நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன" என்பது இப்பாடல்.

செம்புலம் என்பது பாலை, செம்மண் என்ற இரண்டு அர்த்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. மணலில் தண்ணீர் சிந்திப் பார்த்ததுண்டா நீங்கள்? தண்ணீர் விழுவதும் அதை மணல் உறிஞ்சிக் கொள்ளலும் கண்ணிமைக்கும் நொடிகளில் நிகழும். அதைப் போல பிரித்தறிய முடியாத கணங்களில் உள்ளங்கள் கலந்தன என்றும் கொள்ளலாம். செம்மண்ணில்
புழுதியும் வாசனையும் கிளப்பியடி பெய்யும் மழை நீர் மண்ணோடு கலந்த வினாடியில் சுயமிழந்து தானும் செந்நிறம் கொள்வதுபோல நெஞ்சங்கள் ஒன்றாய்க் கலந்தன என்றும் கொள்ளலாம். எதுவான போதிலும் கண்டதும் காதல் என்ற அனுபவத்தைப் பெற்றவர்களுக்கு இந்த பாடல் மறுதலிக்க முடியாததாய் இருக்கக் கூடும்.

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த வரிகளைத்தான் உணர்ச்சி குன்றாமல் இன்னும்

"நீரும் செம்புலச் சேறும் கலந்தது போல கலந்தோம் நாமே"


என்று பாடிக் கொண்டிருக்கிறோம்! இப்போது சொல்லுங்கள் சங்க இலக்கியங்களில் அர்த்தங்கள் ஏதுமில்லையா?

34 comments:

ஜே கே | J K said...

//மழைக்காலத்திற்குள் திரும்பி வந்துவிடுவேன்" என்று சொல்லிப்போனவன் வெகுநாட்களாய் வராததால்//

//"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"//

இவையெல்லாம் எப்போதோ படித்தது போல் ஞாபகத்துக்கு வருகின்றன.

இவையெல்லாம் குறுந்தொகைப்பாடல்கள் என நினைவில் இல்லாமல் போனது வருத்தமானதே!.

பள்ளீயில் பாடமாக மட்டுமே படித்துவிட்டு வந்துவிட்டோம். அப்போது இலக்கியம் பற்றி ஒன்றும் தெரியாததால் அவற்றின் தாக்கம் இருக்கவில்லை. இப்போதும் பாடல்கள் புரியாத போதும் விளக்கங்களை பார்க்கும் போது படிக்க தூண்டுகிறது.

ஏதேனும் விளக்க உரைகள் இருந்தால் அதையும் குறிப்பிடலாமே.

ஆடுமாடு said...

நல்ல முயற்சி. படித்து மறந்து போன குறுந்தொகையை மீண்டும் படிக்க வாய்ப்பு. நன்றி. தமிழ் விரிவுரையாளரே...
//மழைக்காலத்திற்குள் திரும்பி வந்துவிடுவேன்" என்று சொல்லிப்போனவன் வெகுநாட்களாய் வராததால் //
//இருள் கடலாய்ப் பொங்கி//
நாட்களாய், கடலாய் என்று எழுவது இலக்கணப்படி தவறு. யாரும் எழுதலாம். தமிழ் விரிவுரையாளர் அப்படி எழுதக்கூடாது. இலக்கண விளக்கம் வேண்டுமானால் தருகிறேன்.

நந்தா said...

நல்ல பதிவு. நல்ல விளக்கங்கள்.

அப்புறம் "யாயும் ஞாயும் யாராகியரோ" பாடலின் பொருளை பலத் தமிழ்த் திரைப்படப் பாடல்களில் உபயோகித்துள்ளனர் என்றுக் கேள்விப் பட்டுள்ளேன். அது போல உதாரணங்கள் ஏதேனும் தெரிந்தால் சொல்லுங்கள்.

முக்கியமாக "செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே". இந்த பாடல் வரிகளை ஏறக்குறைய அப்படியே A.R.ரஹ்மானின் இசையில் உபயோகப் படுத்தி இருந்தார்கள். (கருத்தம்மா என்று நினைக்கிறேன்.

தொடருங்கள்.

Bee'morgan said...

நந்தா, அது கருத்தம்மா இல்லை. இருவர். "நறுமுகையே" பாடல்...

கையேடு said...

மீண்டும் உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்... பள்ளிப் பருவத்தில் கடமைக்காகப் படிக்கும் போது அதன் சுவையும் அருமையும் உணராமல் படித்தது வருத்தமான ஒன்றாகவே இருக்கிறது...

தமிழ் வகுப்புக்கள் என்றாலே ஏதோ கல்லூரியில் கட் அடிப்பதற்காகவே இருப்பது போன்ற ஒரு எண்ணம் மேலோங்கியதும் வருந்தத்தக்க விசயங்களில் ஒன்று.

நிலா said...

உங்களின் இந்த பதிவு பார்த்து அப்பா அம்மாக்கு ரொம்ப சந்தோஷம். அவங்க கல்யாண பத்திரிக்கையில

"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"

இந்த குறுந்தொகை பாடலத்தான் போட்டிருந்தாங்கலாம்.

அப்பா பிளாஷ் பேக்குக்குப் போயிட்டார்

LakshmanaRaja said...

எல்லா பாடல்களும் நம்மை சுற்றி வழக்கத்தில் இருப்பதான உணர்வை தருகிறது..

"காவியங்கள்" காலம் கடந்தவை என்பது சரி தான் போலும்..

'உளரி, ஆட்டி, உதிர' என மலர்களின் துன்பத்தைச் சொல்வதன் மூலம் குளிர்க்காற்றும் மழையும் தன்னை வருத்துவதைச் சொல்லாமல் சொல்லும்...'' மிக அழகு.. வாழ்த்துக்கள்.நற்பணியை தொடர்ந்து செய்யவும். "நீந்தினம்" ..எவவளவு அழகான வார்த்தை. முதல் முறை இந்த வினைதொகை ( சரிதானே!!) கேட்கிறேன்... மிக நன்றி.

நந்தா said...

//நந்தா, அது கருத்தம்மா இல்லை. இருவர். "நறுமுகையே" பாடல்...//

ஆமாம். நன்றி.

Unknown said...

"பூ இடைப்படினும் ஆண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போல...."

நான் வாசித்தது சுஜாதா உரை. ஒரு பூ இடைப்பட்டாலும் ஒரு ஆண்டு கழிவதைப்போல... என உரை எழுதியிருந்தார். என்ன தான் சொல்ல வர்ராங்கன்னு முழிச்சிக்கிட்டு இருந்தேன்... நல்ல விளக்கம் காயத்ரி. நன்றி.

╬அதி. அழகு╬ said...

தமிழார்வலர்களைக் கவர்ந்திழுக்கும் பதிவு; பாராட்டுகள்!

//" நைட் போன் பண்றேன்னு சொல்லிட்டு பண்ணலன்னா எனக்கு கோபம் வராதாடி? எவ்ளோ நேரம் காத்திட்டிருந்தேன் தெரியுமா?
அவ வெயிட் பண்ணிட்டிருப்பாளேன்னு கூட தோணலன்னா இவனெல்லாம் என்ன லவ்வர் சொல்லு?"//

இப்படியெல்லாம் விளக்கினால்தான் புரியும் என்பது உங்களது நம்பிக்கையா மூடநம்பிக்கையா?

தமிழ் மகன் said...

அருமை

பள்ளி காலங்காலங்களில் புரியது மனப்பாடம் செய்தது பின்னர் நினைவிற்கு வந்து புதிய அரிய அர்த்தங்களை உணரும் போது தான் அந்தப் பாடல்களின் அருமையை உணர முடிகிறது

பாரதி தம்பி said...

/இப்போது சொல்லுங்கள் சங்க இலக்கியங்களில் அர்த்தங்கள் ஏதுமில்லையா?/

இருக்கலாம். ஆனா யாரும் வெளங்குற மாதிரியே சொல்லிக்கொடுக்கலியே..('அப்படி சொல்லிக்கொடுத்தா மட்டும் உனக்கு வெளங்கிடுமாக்கும்..? அடங்குடா இஸ்க்கு..')

ஆனா, நீங்க எழுதுறது எக்கச்சக்கமா புரியுது.

Enbee said...

அருமை

துரியோதனன் said...

கோனார் தமிழ் உரையை வச்சிகிட்டு வரிக்கு வரி மனப்பாடம் செய்தும் மண்டைக்குள்ள எறாததெல்லாம் இப்போ ஏறிடும் போல இருக்கே...ம்ம்மா எப்படி..ம்மா இதெல்லாம்.....

வரலாறு.காம் said...

அருமை. அற்புதம்.

மிகச்சிறந்த பாடல்களைத் தேர்ந்தெடுத்து மிகச்சிறந்த விளக்கங்களை அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.

நன்றி
கமல்
வரலாறு.காம்

உங்கள் நண்பன்(சரா) said...

மிகவும் நல்ல ஒரு பதிவு!
முழுமையாகப் படிப்பட்ட இலக்கியப் பதிவு!

//பூ இடைப்படினும் ஆண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போல...."
//

இதற்கான விளக்கம் அட! போட வைத்தது!

//இரவென்ன வெள்ளம் போன்றதா? அதுவும் உயிர் போவதற்குள் நீந்திக் கடந்துவிட முடியாத கடல் போன்றதா!! என்ன அற்புதமான உவமை இது//

நானும் ரசித்தேன், கூடவே அந்த வெண்ணைய் உவமை அருமை!


(வெட்டித்தனமாக எனது தோழியுடன் அரட்டையின் இடையில் இதைப் படித்தேன் , உடனே அவர்களுக்கும் உரலை அனுப்பினேன், படித்துவிட்டு அவர்களின் பாராட்டை உங்களின் கூறச் சொன்னார்)
தொடரட்டும் உங்கள் பணி!

அன்புடன்...
சரவணன்.

Ayyanar Viswanath said...

/கைகள் இல்லாத, வாய் பேசவியலாத ஒருவன் காக்க முயல்வதைப் போல நான் தவித்துக் கொண்டிருக்கிறேன். வெண்ணெய் உருகிப் பாறையில் பரவுவது போல காதல் என்னுள் பரவிக் கொண்டிருக்கிறது. /

ரொம்ப அழகா இருக்குல்ல..எனக்கும் இந்த உவமை ரொம்ப பிடிச்சிருக்கு

CVR said...

சூப்பர் பதிவு மேடம்!!!
இதே மாதிரி இன்னும் நிறைய பதிவுகளை எங்களுக்கு அளிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!! :-)

"நறுமுகையே" பாடலுக்கான விளக்கத்தை இந்த பதிவில் காணலாம்.

வித்யா கலைவாணி said...

காயத்ரி அக்கா அற்புதமான பாடல்கள் கொண்ட குறுந்தொகை ஆராய்ச்சியில் இறங்கியதற்கு நன்றியும், வாழ்த்துக்களும். அடுத்த பகுதியில் கீழே உள்ள தொடுப்பில் குறுந்தொகையை முழுவதும் PDF ஆக பதிவிறக்கலாம் என்பதை தெரிவிக்கவும்.நல்ல தொகுப்பு தொடரவும்.
http://www.tamil.net/projectmadurai/pub/pm0110/kurunto.pdf

வித்யா கலைவாணி said...

குறுந்தொகையை பதிவிறக்கி படியுங்கள்

http://www.tamil.net/projectmadurai/pub/pm0110/kurunto.pdf

G.Ragavan said...

அருமையான அறிமுகம். பழைய பாட்டுக புரியலைன்னு லேசாச் சொல்லீர்ர்ராங்க. கொஞ்சம் சிரமப்பட்டு புரிஞ்சிக்கிட்டோம்னா அதுல எத்தன நோபல் பரிசு புக்கர் பரிசுக இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம்.

குறுந்தொகை...பேரே சொல்லுதே. தொகையானதுன்னு.

இதுல எனக்கு ஒரு சந்தேகம். குறுந்தொகைக்குக் கடவுள் வாழ்த்துச் சொன்னவரு பாரதம் பாடிய பெருந்தேவனார். இவரு பாடிய பாரதம் இருக்கா இல்லையா? அந்தக் கடவுள் வாழ்த்துச் செய்யுளும் ரொம்ப அழகானது. தாமரை புரையும் காமர் சேவடின்னு தொடங்கும்.

குசும்பன் said...

காயத்ரி அப்ப நீங்க மெய்யாலுமே தமிழ் டீச்சரா? :))

நன்றாக இருக்கு!!!

Unknown said...

மிக அழகான பாடல்களுக்கு மிக எளிமையான விளக்கம்.
குறுந்தொகை, அகநானூறு இரண்டுக்கும் உரையோடு கிடைக்கும் தளங்கள் ஏதேனும்??? அல்லது நூல்பதிப்புகள்??? தெரிந்தால் தெரியப்படுத்துங்கள்.

மங்களூர் சிவா said...

முதலில் வாழ்த்துக்கள்.

வெகு ஜனங்களால் புரிந்து கொள்ள முடியாததாலோ தானோ என்னவோ இன்றும் கர்னாடக சங்கீதம் போல சங்க இலக்கியங்களும் கொஞ்சம் பயமுறுத்தத்தான் செய்கின்றன்.

கல்லூரி இளநிலை முது நிலை படித்தவர்களுக்கே இதுதான் நிலமை எனும் போது வருத்தம்தான் மிஞ்சுகிறது.

தமிழில் உரை நூல்கள் வைத்துக்கொண்டு படிக்க வேண்டியிருக்கிறது தமிழ் இலக்கியங்களை. போட்டியும், வாழ்க்கை போராட்டமும் அவசர ஓட்டமுமான இன்றைய சூழலில் இது எத்துனை பேருக்கு சாத்தியமோ தெரியாது.

இருவேறு உரை நூல்களை படித்துவிட்டால் மிஞ்சுவது குழப்பமே.

இதனால்தானோ என்னவோ கால்குலசும், அறிவியலும், கணிணியின் நாளொரு மென்பொருளும், அடிக்கடி புதிதாக மாறும் வன்பொருளும், இங்கிலாந்து தேசத்தவனின் மொழியும் இன்ன பிற மொழிகளும் ஏறும் தலையில் இதை ஏற்ற மிக்க சிரமம்தான் பலருக்கும்.

உலகத்தில் நடக்கப்போவதை எல்லாம் எழுதி வைத்தான் ‘நாஸ்டர் டாம்’ சங்கேத மொழியில் ஏனென்றால் மதத்தலைவர்களின் எதிர்ப்பாலும் மற்றும் சிறை தண்டனையிலிருந்து தப்பிக்கவும்.
பிரான்சு அரசாங்கம் நாத்திகன் என கூறி கைது செய்ய உத்தரவிட்ட போது ஆறு ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்ததாக சரித்திரம் சொல்கிறது.

நம்மவர்கள் இந்த இலக்கியங்கள் எழுதிய போது என்ன பிரச்சனையோ??

ஆக கூடி மொத்தத்தில் சொல்ல வருவது. மீ ப்ரசண்ட் டீச்சர்.

நிலா said...

அருட்பெருங்கோ மாமா , உமா பதிப்பகத்துல ஒரு குறுந்தொகை புக்
போட்ருகாங்க ரொம்ப சிம்பிளா இருக்கு.

( நான் வாங்கி மூணு வருஷம் ஆச்சு. இப்ப கிடைகலைன்னா நான் பொறுப்பில்லை மாமா)

நாமக்கல் சிபி said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள் டீச்சர்!

இதேபோல் இன்னும் நற்றிணை, பதிற்றுப்பத்து, அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியம், சிலப்பதிகாரன், வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி, இனியவை நாற்பது, இன்னா நாற்பது...

இதெல்லாமும் சொல்லித்தருவீங்கன்னு நினைக்கிறேன்!

ஓகை said...

வருமின் வருமின் வாரா வந்த
அருமழை அன்ன வருமின் வருமின்
என்மொழி இனிமை இன்னதென் றியம்பும்
பொன்னிப் புனல்நாட்டுப் புலவீர் வருமின்
நும்சொல் இனிமை நும்சொல் இளமை
அம்சொலைத் தந்தீர் அடைந்தேன் ஓகையே!

✪சிந்தாநதி said...

நல்ல பதிவு. இலக்கியத்தை பாடமாய் அல்லாமல் சுவையாக அணுகினால் சுகமானதுதான். வாழ்த்துக்கள்

இணையத்தில் குறுந்தொகைப் பாடல்கள் நேரடி வலைப்பக்க வாசிப்புக்கு இங்கே இருக்கின்றன.

http://www.chennailibrary.com/ettuthogai/kurunthogai.html

---
☆சிந்தாநதி
http://valai.blogspirit.com/

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

பதிவு படித்தவுடன் மனதில் பசக்கென்று ஒட்டிக் கொண்டது. காலம் மாறலாம் உடைகள் மாறலாம் கலாச்சாரங்கள் மாறலாம் அடிப்படையான உணர்வுகள் என்றுமே மாறுவதில்லை இல்லையா?

அவளைப் பிரிஞ்சு இருக்கற ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு யுகமா இருக்குன்னு இன்றைக்கும் இருக்கும் சொல்லாடல்கள் மகன்றிற் பறவை வழியாக பல காலங்களுக்கு முன்னாலும் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருந்திருக்கிறது.

சொன்ன நேரத்துக்கு முன்னாடியே வந்து 30 நொடி தாமதமா வந்த காதலனைத் திட்டும் பெண்மை சொன்ன நேரத்துக்கு வரவே தெரியாத ஆண்மை எத்தனை காலத்திற்கு முன்னாலும் இருந்திருக்கிறது? அது எத்தனை அழகாக அதனை வெளிப்படுத்தி இருக்கிறது?

காதல் பித்து பிடித்து திரியும் ஆண் அவன் நலனுக்காக கவலைப்படும் தோழமை இந்த காலத்திற்கும் அழகாக பொருந்துகிறது.

அழகாக சொல்லி இருக்கிறீர்கள் இன்னும் நிறைய சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.

குமரன் (Kumaran) said...

மிக அழகான பாடல்களை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. படித்து மகிழ்ந்தேன்.

RamkumaR said...

Nice.

சாணக்கியன் said...

நீர்ப்பரவை உவமை அற்புதம். கேள்வி ஞானம் என்று சொல்வார்களே அது இதுதான். இதுபோல் விளக்கங்களை கேட்டுத் தெரிந்துகொள்வதே போதையாகத்தான் இருக்கிறது. தொடர்ந்து எங்கள் செவிகளுக்கு உணவு தாருங்கள்....

ஜெயமோகனின், சங்கச்சித்திரங்கள் வாசித்திருக்கிறீர்களா? இல்லையெனில் உடனே படியுங்கள்!

Unknown said...

நல்ல முயற்சி! இன்னும் நிறைய படிக்கனும் போல இருக்கு...

priyamudanprabu said...

Nice ...