என் உறக்கம் எப்போதும் கனவுகள் நிறைந்தது. நல்லதோ அல்லதோ.. கனவுகள் இல்லாமல் தூங்கிய நாட்கள் மிகக் குறைவு. பெரும்பாலும் அம்மா தான் சிக்கிக் கொள்வார்கள். கனவு மறக்கும் முன்பாக சொல்லியே ஆக வேண்டுமென்று அடம்பிடித்து உட்கார வைத்து விலாவரியாய் மொத்தக் கனவையும் விவரிப்பேன். இடையில் எப்போதாவது அவர்கள் வேகமாக கண் சிமிட்டினாலோ பார்வை வேறு பக்கம் சென்றாலோ கவனம் குறைகிறது என்று கண்டுபிடித்து விடுவேன். "இப்ப வேற என்னமோ யோசிச்சீங்க தான? பொய் சொல்லாதீங்க.. அப்டின்னா நான் கடைசியா என்ன சொன்னேன்? சொல்லுங்க.. " என்று வம்படியாய் டார்ச்சர் செய்வேன். திருமணத்திற்கு பிறகு அந்த இடத்தில் சித்து. பொறுமையாய் கேட்டு முடித்து விட்டு (வேற வழி?) "எப்டி இவ்ளோ நியாபகம் வெச்சிருந்து சொல்ற? எனக்கெல்லாம் கனவே வர மாட்டிங்குதே" என்று ஆச்சரியப்படுவார். பெரும்பாலும் காட்சிச் சிதறல்களாய் குழப்பங்கள் நிறைந்த கனவுகள் தான் வரும். எப்போதாவது, கனவு காண்கிறோம் என்ற பிரக்ஞையோடேயே விழித்துக் கொள்ள விரும்பாத இனிமையான கனவுகள் வாய்க்கும். எனினும்.. மனதில் அதிகம் பதிந்திருப்பவை துர்கனவுகளே. பாம்புகள், நெருங்கிய உறவினர் மரணம், அறையில் தீ, அமானுஷ்ய துரத்தல்கள், உயரத்திலிருந்து விழுதல், போன்ற வழக்கமான துர்கனவுகளுக்கு அடிக்கடி மிரண்டு எழுந்து இருக்கிறேன்.. அழுதுமிருக்கிறேன். நாள் முழுக்க அசதியையும் மனச்சோர்வையும் கொடுத்த கனவுகளும் உண்டு.
நேற்றும் ஏதோவொரு கெட்ட கனவுடனேயே விடிந்தது. சிவந்த ஈறுகள் தெரிய, வாயில் எச்சில் ஒழுகும் வெறிநாய்கள் சூழ்ந்து கொண்டது போலவும், கருப்பு நாயொன்று பாய்ந்து கையில் கடித்ததுமில்லாமல் கோபமாய் எந்த மொழியிலோ திட்டியது போலவும் கனவு வந்தது. கடிபட்ட இடத்தில் இரத்தத்திற்கு பதிலாய் வெண்நுரை பொங்கி வழிந்து கொண்டேயிருந்தது. கண் விழித்தபோது பயம் திரண்டு கனத்த துக்கமாக மாறி அழுத்தமாய் தொண்டைக் குழியை அடைத்துக் கொண்டு நின்றது. வாய் விட்டு அழ வேண்டும் போலிருந்தது. அழுதால் நிச்சயம் இது கரைந்து விடும் என்று நினைத்துக் கொண்டே அமைதியாய் கண்ணீர் விட்டபடி படுத்திருந்தேன். திடீரென்று அம்மு சத்தமாய் அழுது கொண்டே எழுந்து நின்றாள். என் துக்கம் போன இடம் தெரியவில்லை. கண்ணீரை அவசரமாய் துடைத்துக் கொண்டு.. "என்னடா? என்ன செல்லம் ஆச்சு? எதுக்கு அழறே?" என்று சமாதானப்படுத்த முயற்சித்தேன். "அம்மா நானா பாப்பாவை விட்டுட்டே போய்ட்டாங்க.. அம்மாவும் நானாவும் பாப்பாவை விட்டுட்டே பைக்ல போய்ட்டாங்க" என்று ஓயாமல் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டும் விம்மி விம்மி அழுது கொண்டுமிருந்தாள். "எங்கயும் போகலடா.. இங்க பாரு ரெண்டு பேரும் உன் பக்கத்துல தான் இருக்கோம்.. அழக் கூடாது.. இது வெறும் கனவு. கனவுக்கு போய் யாராச்சும் அழுவாங்களா? அழாத செல்லம்.. அம்மா இருக்கேன்.. உன் கூடவே தான் இருப்பேன்.. தூங்குடா தங்கம்..தூங்கும்மா" என்று அவளை தட்டிக் கொடுத்தபோது அதுவரை சிறுமியாய் அழுது கொண்டிருந்த காயத்ரி திகைத்து என்னைப் பார்த்துத் திருதிருவென விழித்தாள். லேசாய் புன்னகைத்து "உனக்கும் சேர்த்து தான் சொன்னேன்.. நான் இருக்கேன்..படுத்துக்கோ.. தூங்கு" என்று அவளையும் தட்டிக் கொடுத்து தூங்க வைத்து விட்டு தைரியமான அம்மாவாய் நானும் தூங்க ஆரம்பித்தேன்.
இந்த மாதம் தான் கவனிக்கிறேன்.. அமுதினிக்கும் அடிக்கடி கனவுகள் வருகிறது. என்னைப் போலவே எழுந்ததும் அதை சொல்லவும் ஆரம்பித்திருக்கிறாள். என்னைப் போலவே பெரும்பாலும் மிரண்டு அழுது கொண்டு தான் எழுகிறாள். முதல் முறை தூக்கத்திலிருந்து எழுந்து தேம்பிக் கொண்டே "அம்மா.. அழுதாங்க.. அம்மா அழுதாங்க..அம்மா பாத்து பாப்பாவும் அழறா" என்றே சொல்லிக் கொண்டிருந்தாள். "இல்லடா.. செல்லம்.. அம்மா அழவே இல்ல. இங்க பாரு.. எப்டி சிரிக்கறேன் பாரு" என்று சிரித்து சிரித்து சமாதானப்படுத்தினேன். என்னைப் போல் கனவை காலையில் சொல்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் நியாபகம் வைத்திருந்து நாள் முழுக்க அடிக்கடி மறுஒலிபரப்பு செய்வதை இவள் வழக்கமாகக் கொண்டிருப்பதால் அன்று நாள் முழுவதும் நான் அடிக்கடி அவளுக்கு சிரித்துக் காட்ட வேண்டியிருந்தது. :) மற்றொரு முறை பெரிய பூச்சியொன்று தன்னைப் பிடிக்க வந்ததாக சொல்லி அழுதாள். அன்று அந்த பயத்தைப் போக்குவதற்காக யூடியூபில் விதவிதமான பூச்சி வகையறாக்களைப் பார்க்க வைத்தேன். தற்செயலாய் வீட்டில் தென்பட்ட குட்டி கரப்பான்பூச்சியொன்றை கண்ணாடி கிண்ணத்தால் மூடி சிறைபிடித்து நாள் முழுக்க வெளியிலிருந்து தைரியமாய் வேடிக்கை பார்த்தோம். இப்போதெல்லாம் பூச்சியென்றால் அம்முவிற்கு பயமே இல்லை. கனவிலோ நேரிலோ பூச்சியை சந்திக்க நேர்ந்தால் "போ பூச்சி" என்று கோபமாக திட்டி விரட்டப் போவதாக சொல்லியிருக்கிறாள். குளியலறை மூலையில் ஒட்டியிருக்கும் சிறிய குப்பையை பூச்சியென்று நினைத்துக் கொண்டு உள்ளே நுழையும் போதெல்லாம் "போ பூச்சி.. பாப்பா சொல்றேனில்ல?" என்று 2 நாட்களாய் மிரட்டிக் கொண்டிருக்கிறாள். :)
முதல்நாள் பள்ளிக்கு சென்று வந்த பிறகு, மூன்றாவது நாள் காலை திடீரென வீறிட்டு அலறி எழுந்தாள்.. தொடர்ந்து நிற்காத அழுகை. வெகு நேரம் விசாரித்தும் பதில் சொல்லாமல் அழுது கொண்டேயிருந்தாள். கொஞ்சம் கழித்து சமாதானமானது போல் இருக்கிறாளே என்று "என்னடா குட்டி? கனவு கண்டியா? ஏன் அழுத?" என்று கேட்டதும் திரும்பவும் அழ ஆரம்பித்தாள். பின் திக்கித் திக்கி தழுதழுத்தபடியே.. "அண்ணால்லாம்.. அட்ச்சி.. பாப்பா அழுதா" என்று ஆரம்பித்து முடிப்பதற்குள்ளாகவே 'ஓ' ந்னு கத்தி அழ ஆரம்பித்தாள். நான் கலங்கிப் போனேன். பள்ளி குறித்த பயத்தில் தான் அழுகிறாளோ.. அங்கிருந்த பையன்கள் அவளை அடிப்பது போல கனவு கண்டிருப்பாளோ.. இந்த அளவிற்கா அவளின் பிஞ்சு மனம் பாதிக்கப்பட்டிருக்கிறது?.. அவளுக்கு இந்த பள்ளி பிடிக்கவில்லையா?.. சுத்தமாய் பிடிக்காமலேயே போய்விட்டால் என்ன செய்வது?.. இல்லாவிட்டால் இப்போதே வேறு பள்ளிக்கு மாற்றி விடலாமா? என்றெல்லாம் கன்னாபின்னாவென்று சிந்தித்தபடியே குரலில் பரிவு பொங்கி வழிய "அண்ணால்லாம் பாப்பாவை அடிச்சிட்டாங்களா கண்ணு?" என்றேன். அவள் அழுகையை சற்று நிறுத்தி "இல்ல.. பாப்பா தான் அண்ணாவையெல்லாம் அடிச்சா.." என்று சொல்லிவிட்டு திரும்ப அழுகையைத் தொடர்ந்தாள். ஙே!! என்றாகிவிட்டது எனக்கு. எதற்கும் இன்னொரு முறை தெளிவுபடுத்திக் கொள்ளலாமென்று "அண்ணாவையெல்லாம் நீயே அடிச்சிட்டு நீயே அழுதியா கண்ணு?" என்று கேட்டதற்கு.. "ம்ம்ம்ம்ம்ம்" என்று ராகமிழுத்துவிட்டு கர்மசிரத்தையாய் மீண்டும் அழ ஆரம்பித்தாள். :)))
இன்று காலையிலும், "பாப்பா மேல இருந்து கீழ விழப் போய்ட்டா" என்று அழுது கொண்டே எழுந்தாள். "எது மேல இருந்து விழுந்த? எதைப் பார்த்தாலும் மேல ஏறி ஏறி நிக்காத.. டமால்னு விழுந்துடுவ.. அடிபட்டுடும்ன்னு சொன்னா கேட்டா தான?" என்று பொய்யாக அதட்டினேன். உடனே உதடுகள் பிதுங்க, கன்னங்கள் அழுகையில் உப்பிக் கொண்டன. "சரி.. சரி அழாதடா... எது மேல ஏறி விழுந்த? சொல்லு" என்றதும் "அதா அந்த சூரியன் இருக்கில்ல? அங்க இருந்து தான்" என்று ஜன்னலைக் காட்டி பதில் சொன்னாள்!
Showing posts with label அமுதினி. Show all posts
Showing posts with label அமுதினி. Show all posts
Monday, November 5, 2012
Tuesday, October 23, 2012
நசை பெரிதுடைமை
சித்துவிற்கு உயரம் என்றால் பயம். இப்படி நான் சொல்லும் போதெல்லாம் சித்து அருகிருந்தால் உடனே ஆட்சேபிப்பார். "எனக்கு உயரமென்றால் பயமில்லை. ஆழமென்றால் தான் பயம்" என்பார். அந்த பதில் ஒவ்வொரு முறையும் என்னை ரசனையாய் புன்னகைக்க வைக்கும். உணர்வுகளிலும் கூட இப்படித் தான். அவருக்கு உயர, ஆழங்கள் மிக அரிது. நானோ இவ்விரண்டு புள்ளிகளுக்கிடையில் பயணிப்பதையே தன்னியல்பாய்க் கொண்டவள். சமதளங்கள், புது முகங்கள், பொது இடங்கள், உயர் ஆளுமைகள், ஆரவாரமிக்க சபைகள், சவ்வூடு பரவும் பார்வைகள், பேச்சினை கலையாக அல்லது தொழிலாகக் கருதும் உதடுகள், கணக்குகள், புதிர்கள், அலர், அறிவினா, அரட்டை ஆகியவற்றிலிருந்தெல்லாம் எப்போதும் ஒதுங்கியிருக்கவே விழைவேன். 3 வயதில் முதன் முதலாக பள்ளிக்கு அனுப்பிய போது என்னை விடவும் அம்மா தான் மிகவும் சோர்ந்து போனார்கள். ஓயாத அழுகையில் தொடங்கி, வயிறு வலி, காது வலி, பல் வலி என்றெல்லாம் பொய் சொல்லி அழுது அம்மாவை வரவழைப்பது, இடைவேளை நேரத்தில் தப்பித்து பக்கத்தில் எதாவது கடையில் உக்கார்ந்து கொண்டிருந்து விட்டு பள்ளி முடிந்ததும் போய் பையை எடுத்துக் கொண்டு நல்ல பிள்ளையாய் வீட்டுக்குப் போவது என்று வயது ஏற ஏற என் தப்பித்தலியலும் (எஸ்கேபிசம்?) வளர்ந்து கொண்டிருந்தது. கல்லூரியில் இரண்டாம் வருடம் முதல் நாளன்று அம்மா வகுப்பறை வரை வந்து உள்ளே அனுப்பி விட்டுப் போகுமளவிற்கு அது என்னுள் வேரூன்றியிருந்தது. புகுந்த வீட்டிலும் கூட இந்த குணத்தால் சில சிரமங்கள் இருக்கவே செய்தன. என் பலமென்று நானும் பலவீனமென்று சித்துவும் கருதும் இக்குணாம்சம் அமுதினியிடமும் பிரதிபலிப்பதில் இருவருக்குமே உடன்பாடில்லை தான்,என்றாலும் அவளும் இன்று வரையில் இப்படியான கவலைகளுக்கு இடமளித்ததில்லை. இன்று வரையில்.... :)
அம்முவிற்கு இப்போது இரண்டரை வயதாகிறது. வீட்டைத் தூக்கி ஒரு டப்பாவில் போட்டு குலுக்கி தலைகீழாய் கொட்டுவதற்கு ஈடாய் குறும்புகள் செய்வாள். அவளை வைத்துக் கொண்டு எந்தவொரு வேலையையும் என்னால் செய்துவிட முடியாது. அவள் தூங்கும் நேரம் சமைத்தால் தான் உண்டு. இல்லாவிட்டால் ஹோம் டெலிவரிக்கு தொலைபேச வேண்டியிருக்கும். எப்போதும் என் அருகில் அல்லது மடியில் தான் இருப்பாள். தினமும் இரவு 12 மணிக்கோ 1 மணிக்கோ தூங்குவது. காலையில் 10 மணிக்கு விழிப்பது.. இடைப்பட்ட நேரம் முழுக்க குறும்புகள் செய்வது என்ற அவளது வாழ்க்கை முறையை ஒழுங்குபடுத்த வேண்டி, கடந்த ஒரு மாத காலமாக அவளை பள்ளியில் சேர்ப்பது குறித்த தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியிருந்தோம். அமெரிக்க, இங்கிலாந்து, இந்திய கல்வி முறைகளில் எந்த கல்வித் திட்டத்தைத் தேர்ந்தெடுப்படுப்பது என்று திசையறியாது நீண்ட எங்கள் குழப்பம், வெகு நாட்கள் நீடித்து 'மாண்டிசோரி கல்வி' என்ற முனையில் நின்று, 'ப' திருப்பமெடுத்து 'எந்த மாண்டிசோரி பள்ளி?' என்ற திசையில் மீண்டும் நீளத் தொடங்கியது. நல்ல பள்ளி எந்த திசையில், எத்தனை தூரத்திலிருந்தாலும் அங்கேயே வீட்டையும் மாற்றிக் கொள்வது என்ற முடிவோடு அலைந்து திரிந்தோம். பெரிய பள்ளிகள் அனைத்திலும் மாணவர் சேர்க்கை ஆகஸ்டிலேயே முடிந்து விட்டதாக கை விரித்தார்கள். தொடர்ந்து அலைந்ததில் ஒரு வழியாக வீட்டிலிருந்து நடந்து செல்லும் தொலைவுக்குள் சின்னஞ்சிறிய மாண்டிசோரி பள்ளி ஒன்று வாய்த்தது. வெறும் இருபதே குழந்தைகள். அனைத்தும் சின்னஞ்சிறிய இந்திய முகங்கள். வரும் மார்ச் மாதம் வேறு பள்ளியில் இடம் கிடைக்கும் வரை தற்காலிகமாக இங்கே அனுப்பலாம் என்று முடிவெடுத்தோம். பணம் செலுத்தி, ஆசிரியர்களிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பும் வரை அம்மு மெய்மறந்து விளையாடிக் கொண்டிருந்தாள். வலுக்கட்டாயமாகப் பிடித்து தூக்கி வந்து காரில் ஏறியதுமே "எவ்ளோ பொம்மை.. என்ன விடு, நான் ஸ்கூலுக்குப் போறேன்" என்று திமிறினாள். வெகு சந்தோஷமாய் இருந்தது. மிகப் பிடித்த பாடலைப் போல அந்த வார்த்தைகள் மனதிற்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தன.
இன்று அவளை முதன்முதலாய் பள்ளிக்கு அனுப்பும் நாள். எத்தனை முயன்றும் நேற்று இரவு முழுவதும் ஆழ்ந்த உறக்கம் வாய்க்கவே இல்லை. கடந்த இரண்டரை வருடத்தில் முதன் முறையாக இரவு எட்டு மணிக்கெல்லாம் உறங்கப் போய் விட்டோம். திடுமென விழிப்பு வந்ததும்.. விடிஞ்சிடுச்சோ என்று பதறி எழுந்து மணி பார்த்தால் இரவு 10 மணி தான் ஆகியிருந்தது. :) எங்கோ யார் பொறுப்பிலோ குழந்தையைத் தனியாக விடப் போகிறோமே என்ற கவலையை விடவும் அவள் அருகில்லாத 4 நான்கு மணி நேரங்களை எப்படி தனியாக கழிக்கப் போகிறேன் என்ற கவலையே ஆட்டிப் படைத்தது. காலையில் 6 மணிக்கெல்லாம் குழந்தை விழித்து விட்டாள். பள்ளிக்குப் போவது குறித்த அதீத உற்சாகத்திலிருந்தாள். புதுப் பட்டுப் பாவாடையும், ஒற்றைச் சிண்டும், முல்லைச்சரமுமாக ஜொலித்தாள். சாமிப் படங்களின் முன்னால் சித்துவின் மடியில் அமர்ந்து அரிசியில் "அ" எழுதினாள். தொலைபேசியில் தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என உறவினர்களிடமும் ஜெ.மோவிடமும் ஆசி பெற்றாள். எல்லாமும் வெகு சுலபமாக, சுபமாக நடக்கிறதே என்று நினைத்துக் கொண்டே சென்று அவளை பள்ளியில் சேர்ப்பித்து சிறிது நேரம் உடனிருந்து விட்டு அவளறியாமல் நகர்ந்தோம். முதலில் சித்து அலுவலகத்திற்கு கிளம்பினார். அடுத்த 10 நிமிடங்களில் நானும் வெளியில் வந்து நடக்கத் தொடங்கினேன். வீடு பயமுறுத்தியது. ஒற்றை படுக்கையறை கொண்ட சிறிய வீடு… நினைவில் எவருமற்ற மிகப் பரந்த மைதானமாக விரிந்து கொண்டே போனது. அந்த வெறுமையை சந்திக்காமல் எப்படி தப்பிக்க? 4 மணி நேரங்களை கண்ணீரில்லாமல் எப்படிக் கடக்க? அலுவலகம் சென்று கொண்டிருந்தவரிடம் தொலைபேசியில் தழுதழுத்தபடியே நடந்தவள், வழியில் தேவையே இல்லாமல் ஒரு கடைக்குள் நுழைந்து எதுவுமே வாங்காமல் சுற்றிச் சுற்றி வந்து விட்டு குழந்தைக்குப் பிடித்த சிலவற்றை மட்டும் வாங்கிக் கொண்டு வெளியில் வந்தேன். வாசலருகே சித்து காரில் காத்துக் கொண்டிருந்தார்! மனதில் உறைந்திருந்த பாரம் முழுவதும் உருகி கண்ணீராய் வழியத் தொடங்கியது. முன்னெப்போதை விடவும் சித்துவின் மேல் பிரியம் அபரிதமிதமாய்ப் பொங்கிப் பிரவகித்தது. இலக்கில்லாமல் தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்து விட்டு என்னை வீட்டில் இறக்கி விட்டு திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே கிளம்பிப் போனார்.
உள்ளே நுழைந்தால் கோபித்துக் கொண்டாற் போல வீடு மெளனம் சாதித்தது.. சமையலறைக்குள் நுழையும் போதே "அம்மா பாப்பாகிட்ட வந்துருங்கம்மா.. புவா செய்ய வேணாம்மா" என்றபடி ஓடி வரும் கொலுசொலிக்கு மனம் ஏங்கி நின்றது. திணறலாய் காலையுணவை கொறித்துக் கொண்டிருக்கையில் பள்ளியிலிருந்து தொலைபேசி.. "உங்கள் மகள் ஓயாமல் 'அம்மா, அம்மா' என்று அழுகிறாள்.. வந்து அழைத்துப் போக முடியுமா?" குழந்தை பள்ளிக்குப் போக மறுத்து அழுவதைக் கேட்டு எல்லையில்லா ஆனந்தம் அடைந்த அன்னை உலகிலேயே நானாகத் தான் இருப்பேன் என்று நினைக்கிறேன். :) அப்போதே கிளம்பி ஓட்டமாய் ஓடி பள்ளிக்குள் நுழைந்து, குழந்தையை அள்ளிக் கொண்டேன். அவள் கன்னத்தில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்து விட்டபடியே "எல்லாரும் அழாம விளையாடிட்டு இருக்காங்களேடா? நீ மட்டும் ஏன் அழறே?" என்றால் "அந்த பையன் அழறான் பாரு.. அவனை பாத்து தான் பாப்பாவும் அழறா" என்று ஒரு மூலையில் கத்திக் கொண்டிருந்த பையனைக் காண்பித்தாள். சிரிப்பு பொங்கிக் கொண்டு வந்தது. முகமெல்லாம் மகிழ்ச்சியில் விகசிக்க அவளை அணைத்தபடி வெளியில் வந்தேன். காண்பவையெல்லாம் அந்தக் குழந்தைகளின் கலரிங் புக் போல வண்ணத் தீட்டல்களாகத் தோன்றின. ஓயாமல் முத்தமிட்டுக் கொண்டும் கொஞ்சிக் கொண்டும் அழைத்து வந்தேன். அவள் நான் வேண்டுமென்று அழுதிருக்க மாட்டாள். எனக்கு அவள் வேண்டுமென்று புரிந்து தான் அழுதிருப்பாளாயிருக்கும்… என்ற அபத்த நினைப்பில் மனம் தித்தித்துத் திகட்டியது. வழியெல்லாம் புறாக்களையும் பூனைகளையும் துரத்தியபடி கொண்டாட்டமாய் வீடு வந்து சேர்ந்தோம். வீட்டிற்குள் நுழைந்ததும் வேண்டுமென்றே சமையலறைக்குள் சென்று நின்று கொண்டேன். "அம்மா பாப்பாகிட்ட வந்துருங்கம்மா.. வேலை செய்ய வேணாம்மா.. பாப்பா கூடயே இருங்கம்மா..ப்ளீஸ்மா.. :))
Tuesday, May 29, 2012
சீர் பெற்று வாழ்வதற்கே உன் போல் செல்வம் பிறிதுமுண்டோ...?
ஒரு
புலர்காலைப் பொழுதைப் போன்று மெல்ல விடிந்து கொண்டிருக்கிறேன். கனத்த
சாம்பல் நிறத்து இருட்திரைக்குள்ளிருந்து துலக்கம் பெற்று ஒளிரத்
துவங்கியிருக்கின்றன வாழ்வின் மறைபொருட்கள் ஒவ்வொன்றும். மகள் வளர்ந்து
கொண்டிருக்கிறாள். தொடுவானம் போல பார்க்கப் பார்க்க ஆச்சரியங்களை இறைத்துக்
கொண்டேயிருக்கிறாள். மழை நேரத்து வானவில் போல வண்ணம் மிகுத்துப்
பெய்கிறாள். முத்துக் குளித்து மேலெழுபவள் போல நிதமும் எங்கிருந்தோ
மகிழ்ச்சியை அள்ளி வருகிறாள். ஏன் இப்படியெல்லாம்? எதற்காக? எதன்
பொருட்டு? என்றெல்லாம் எப்போதோ மனதின் இருள் மூலைகளில் துடித்துக்
கொண்டிருந்த வலி மிகுந்த வினவல்கள் அத்தனைக்கும் ஒற்றைப் பதிலாய், ஒரேயொரு
ஆறுதலாய் நின்று புன்னகைத்துக் கொண்டிருக்கிறாள்.
அமுதினி... என் தவம். என் மோட்சம். என் செருக்கு. என் ஆழம். என் விடியல். என் மீட்சி. என்னாயுள் நீட்டிக்கும் அமுதம்....
நேற்று அவளுக்கு இரண்டாவது பிறந்தநாள். அவளை வாழ்த்த வேண்டும்.. எப்போதை
விடவும் மிகச் சிறப்பாக, மிகப் பிரியமாக, மிகவுயர்ந்ததாக, இது வரையிலும்
இல்லாத வாழ்த்தாக அது அமைய வேண்டும். இப்படித்தான் எப்போதும் நினைக்கிறேன்.
ஆனால், இம்முயற்சி பலிப்பதில்லை. ஒவ்வொரு முறையும் மனம் பிரியத்தால்
கசிந்து கசிந்து, இயலாமையில் வதிந்து இறுதியில் சொல்லின்மைக்குள் ஓடி முகம்
புதைத்துக் கொள்கிறது. சொல்லவியலாத அன்பினைச் சொல்லிச் சொல்லி
நைவதற்காகவேனும் ஒரு முறை மாணிக்கவாசகராய் பிறக்கத் தோன்றுகிறது.
அவள் பிறந்து 16 வது நாளில் அம்மா அவளுக்கென்று ஒரு பட்டுப் பாவாடை
தைத்தார்கள். அன்று அவளைத் தொட்டிலில் கிடத்துகையில் பாவாடையின் பட்டுக்
கரை கால்கொலுசு வரை நிறைத்துக் கொண்டு வெகு ரம்மியமாய் இருந்தது. இன்று
எடுத்துப் பார்க்கையில் வெறும் ஒன்னேகால் சாண் நீளமேயிருக்கிறது. என்ன இது!
இத்தனை சின்னவளாகவா இருந்தாள் என் குழந்தை? யப்பா! எப்படி வளர்ந்து
விட்டாள்! ஒரு நாளின் அத்தனை மணிநேரங்களும் அவளுடனேயே/ அவளுக்காக / அவளால்
இருக்கிறேன். எனக்குத் தெரியாமல் எப்போது வளர்கிறாள் இந்தப் பெண்?
அமுதினி எட்டாம் மாதத்தின் இறுதியில் பேசத் தொடங்கினாள். அவள் பேசிய முதல்
சொல் "ம்மா". நான் அவளை விட்டு எங்கு நகர்ந்தாலும் "ம்மா.. ம்மா" என்றபடி
தவழ்ந்து வருவாள். தனக்குவமை இல்லாத வெகு அழகான செயல் அது. பத்தாம்
மாதத்திலிருந்து சொற்கள் ஒவ்வொன்றாய் உயிர் பெற்றெழத் தொடங்கின. இப்போது
கோர்வையாய் பேசுகிறாள்.. நிறைய பேசுகிறாள். கதைகள் சொல்கிறாள். ஸ்லோகங்கள்
சொல்கிறாள். ஓயாமல் பாடிக் கொண்டேயிருக்கிறாள். தமிழும், தெலுங்கும் கலந்து
அவள் வசதிக்கேற்றபடி சொற்றொடர்களை அமைத்துக் கொள்கிறாள். கொஞ்சமும்
மழலையின்றி குழந்தையின் குரலில், ஆனால் அட்சர சுத்தமாய் சொற்கள் வந்து
விழுகின்றன. என்றாலும் இலக்கணம் இவளிடம் சிக்கிக் கொண்டு அல்லாடுவதைப்
பார்க்க மகிழ்ச்சியாய் இருக்கிறது. :))
“இங்க வந்து நில்லு” என்றால்.. “வேணாம்.. இங்கயே நில்லுக்கறேன்” என்பாள்.
“நீயே எடுத்து சாப்பிடறயா? அம்மா ஊட்டட்டுமா என்று கேட்டால் “நீயே எடுத்து
சாப்டுக்கறேன்” என்பாள். ("காதோடு தான் நான் பாடுவேன்" என்ற பாட்டைக் கூட
"காதோடு தான் நீ பாடுவேன்" என்று தான் பாடுகிறாள்)
“ என்னடா
பண்ற? டோரா ஸ்டிக்கரை பிக்கக் கூடாதுன்னு சொல்லிருக்கேனில்ல? என்று
அதட்டினால் “டோரா பிக்கலம்மா.. டைனோசரத்தான் பிக்குனேன்” என்று பதில்
சொல்வாள்.
“தமிழ் என்னும் மாபெரும் மதயானை குழந்தைகளின் முன்பாக
மட்டும் மண்டியிட்டு மத்தகம் தாழ்த்தி அவர்களை முதுகில் ஏற்றிக் கொண்டது”
என்று கொற்றவையில் ஒரு வாசகம் இடம்பெற்றிருக்கும். மொழியை இவள் தன்னுடைய
பொம்மைகளில் ஒன்றாக காதைப் பிடித்து தரையத் தரைய இழுத்துச் செல்லும்
போதெல்லாம் இப்படியொரு மாயப்பிம்பம் கண்ணில் மின்னி மறைகிறது!
எதைப் பெறுகையிலும் "தேங்க்யூ" என்கிறாள். எது வேண்டுமென்றாலும் "இத
கொஞ்சம் பாப்பாக்கு குடுங்களேன்" என்று கெஞ்சலாய்க் கேட்கிறாள்.
திறந்திருக்கும் கதவை தானே இழுத்து சார்த்திக் கொண்டு தலையை மட்டும் உள்ளே
நீட்டி “மே ஐ கமின்?” என்கிறாள். வீட்டுக் கதவை யாரேனும் தட்டினால் "யாரு
அது? பூச்சாண்டியா?" என்று அதட்டுகிறாள். "ஒன்னுல்ல.. ஒன்னுல்ல..
வலிக்காது" என்றபடி பேனாவின் நுனியினால் ஊசி போடுகிறாள். ஸ்பூனை கையில்
வைத்துக் கொண்டு "குனிஞ்சிக்கோ.. மொட்டை அடிக்கிறேன்" என்கிறாள்.
என்னை
அடித்து விட்டாலோ, இடித்து விட்டாலோ உடனே குற்ற உணர்வு கொண்டு என் கண்களில்
வராத கண்ணீரைத் துடைத்துத் துடைத்து "சாரி, சாரி.. அழாதம்மா" என்கிறாள்.
திடீரென்று நினைத்துக் கொண்டாற் போல "ஐ லவ் யூஊஊஊ அம்மா" என்று
ராகமிழுக்கிறாள். நான் பதில் ஒன்றும் சொல்லாவிட்டாலும் " மீ டூ லவ் யூஊஊஊ
அம்மா" என்கிறாள். கோபமாய் அதட்டும் போது முகத்தை கூம்பிக் கொண்டு
நிலைப்படியில் உட்கார்ந்து "மயில்க் குட்டியை திட்டிட்டாங்க" என்று
புலம்புகிறாள். தூக்கி நெஞ்சோடு அணைத்து "செல்லக்குட்டி தங்கக்குட்டி
பட்டுச் செல்லம் அம்முத் தங்கம்.." என்று லயம் மாறாமல் கொஞ்சிக்
கொண்டிருக்கையில் "தங்கச்செல்லம் சொல்லும்மா, மயில்க்குட்டி சொல்லு" என,
இடையில் விட்டுப் போன கொஞ்சல்களை நினைவூட்டுகிறாள். கொஞ்சம் சுணங்கிப்
படுத்தாலும் "அம்மா என்னாச்சி? இங்க ஜுரம் வந்துடுச்சா? இங்கயா?" என்றபடி
கை, கால், கன்னம், நெற்றி என தொட்டுத் தொட்டு பிஞ்சு விரல்களில் வாஞ்சை
ததும்பத் தடவிக் கொடுக்கிறாள். அடிபட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்த என்
கீழுதட்டை கலவரமாய் தொட்டுத் தொட்டுப் பார்த்து எதிர்பாராத நொடியில்
திடீரென காயத்தில் முத்தமிட்டு "அவ்ளோ தான்.. சரியாப் போச்சி" என்று கை
தட்டிச் சிரிக்கிறாள். இன்னும் வரும் நாட்களில் என்னை என்னவெல்லாம் செய்யத்
தீர்மானித்திருக்கிறாளோ தெரியவில்லை.
என் நிலை இப்படியென்றால்..
சித்துவின் நிலமை சொல்லுந் தரமன்று. :) சும்மாவே மகள் நிகழ்த்திக்
காட்டும் அற்புதங்களில் சொக்கிக் கிடப்பவர்.. சென்ற வாரத்தில் யோகா
வகுப்பிலிருந்து களைத்துத் திரும்பி படுக்கையில் வீழ்ந்து "கொஞ்சம் தண்ணி
கொண்டு வாயேன்" என்றார். இவள் பின்னால் ஓடி ஓடி அவரை விடவும் நான்
களைத்திருந்த காரணத்தால் "நீங்களே போய் எடுத்துக்கோங்க" என்றேன். உடனே
அருகில் உட்கார்ந்திருந்தவள் துள்ளி எழுந்தாள். உலகளவு பரிவோடு தந்தையின்
முகவாயைப் பிடித்து "நைனா? தண்ணியா? தண்ணி வேணுமா?" என்று கேட்டவள்
அவசரமாய் படுக்கையை விட்டு கீழிறங்கி "தண்ணி எங்க? பாட்டில் எங்க?" என்று
கேட்டுக் கொண்டே ஓட ஆரம்பித்தாள். அவள் தந்தை பூரித்துப்
புளகாங்கிதமடைந்து, உள்ளம் விம்ம, மெய் தான் அரும்பி விதிர்விதிர்த்து,
கண்ணில் நீர் மல்க அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தார்.
உண்மையில், தண்ணீர் எடுத்து வந்து கொடுத்ததென்னவோ நான் தான். ஆனால் அவர்
தன் மகளைப் பார்த்துத்தான் "இங்கிவளை யான் பெறவே என்ன தவம் செய்து
விட்டேன்" என்ற ரீதியில் உருகிக் கொண்டிருந்தார். :)
அமுதினியை
மரபணு ஆராய்ச்சித் துறையில் மகத்தான சாதனைகள் படைக்கவிருக்கும் மாபெரும்
விஞ்ஞானியாக உருவாக்க வேண்டுமென்பது அவள் தந்தையின் ஆசை.
அவளை
நல்லவளாக, வல்லவளாக, அச்சம் மடம் அறியாத துணிச்சல்காரியாக, எல்லா
உயிர்களிடத்தும் கருணை மிக்கவளாக, நேர்மையானவளாக, ஆரோக்கியமானவளாக,
திடமானவளாக, எக்கணத்திலும் உண்மையானவளாக, அவள் விரும்பும் கலைகள்
அனைத்திலும் சிறந்து விளங்குபவளாக, பிறர் துயர் கண்டு கலங்குபவளாக,
தன்னம்பிக்கை மிக்கவளாக, எடுத்த காரியம் திறம்பட முடிப்பவளாக, ஆழ்ந்து
சிந்திப்பவளாக, குழந்தைகளையும் இயற்கையையும் நேசிப்பவளாக, வயோதிகத்தைப்
புரிந்து கொள்பவளாக, என்றும் எப்போதும் நிலை குலையாதவளாக, பகைவனுக்கும்
அருள்பவளாக, எல்லாவற்றையும் தர்க்கத்தால் மட்டுமே அளக்காதவளாக, சினத்தால்
மதியிழக்காதவளாக, எச்சூழலிலும் நிதானமிழக்காதவளாக, பிரச்சினைகளை
பதட்டமின்றி அணுகுபவளாக, உழைக்கத் தயங்காதவளாக, பேராசையற்றவளாக, வாழ்நாள்
முழுவதும் நிபந்தனையற்ற அன்பினைப் பெறுபவளாக, தருபவளாக, நீள் ஆயுளும், உயர்
கல்வியும், குன்றாப் புகழும், செல்வமும் செல்வாக்கும், ஆல் போல் நட்பும்,
அருகு போல் உறவும், நல்ல துணையும், நன்மக்கட்பேறும், மகிழ்வான, நிறைவான
வாழ்வும் பெற்றவளாக அனைத்திலும் முக்கியமாக உலகை அதன் இயல்புடனே ரசிக்கக்
கற்ற ஆகப் பெரிய ரசிகையாக உருவாக்க வேண்டுமென்பது அவள் தாயின் ஆசை. :)
இவ்விருவரும் ஆசைகளும் அப்படியே நிறைவேற வேண்டுமென தெய்வங்களும்,
தேவதைகளும், தேவர்களும், ரிஷிகளும், எம் பிதுர்களும், சுற்றமும், நட்பும்,
எம்மை அறிந்தோரும், அறியாதோரும், படிக்காமலேயே 'லைக்' போடுவோரும் என
அனைவரும் 'ததாஸ்து' சொல்லி வாழ்த்துவீராக. :)
Friday, January 20, 2012
அமுதினியும் இராமாயணமும்
அமுதினியின் வளர்ச்சியில் யூ டியூப் காணொளிகளின் பங்கு மிக முக்கியமானது. அவள் பிறந்ததிலிருந்து முதல் 6 மாதங்கள் ஈரோட்டில் இருந்தோம். சுற்றிலும் மரங்கள் அடர்ந்த வீடு. பனை மரங்களில் குடியிருக்கும் கிளிகள், காகங்கள், பொன்னரளிப் பூக்களில் தேனெடுக்க வரும் தேன் சிட்டுகள், சிட்டுக்குருவிகள், மைனாக்கள், அபூர்வமாக குயில்கள் மற்றும் குருவியை ஒத்த தோற்றம் கொண்ட மஞ்சள் அலகு கொண்ட சற்று பெரிய பறவைகள் என வீடு எப்போதும் இசைக்குறிப்புகளால் நிரம்பியிருக்கும். வீட்டின் புறச்சுவரிலிருந்து சற்று தூரத்தில் மாடுகள், கன்றுக்குட்டிகள் கட்டப்பட்டிருக்கும் கட்டுத்தரை இருக்கும். காவலுக்கு ஒரு நாய். அவ்வப்போது வந்து போகும் பூனைகள் மற்றும் அணில்கள். தினமும் காலை அல்லது மாலையில் முற்றத்திலிருக்கும் ஊஞ்சலில் அமர்ந்து குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு ஜீவராசியையும் ஒலியால் அவளுக்கு அடையாளப்படுத்திக் கொண்டிருப்பேன். அவளுக்குப் புரிகிறதா.. கவனிக்கிறாளா என்றெல்லாம் கவலைப்பட்டதில்லை. 5 மாதக் குழந்தையாக இருக்கும் போது பசுவின் 'ம்ம்ம்மாஆஆ' என்ற குரலுக்கு திடீரென கண் மலர்த்தி மகிழ்ச்சியாக என் முகம் பார்த்தாள். 'யார் கத்தறா ந்னு எனக்குத் தெரியுமே' என்ற பாவனை இருந்தது முகத்தில். சந்தோஷமாக இருந்தது.
6 ம் மாதம் குவைத் வந்தாயிற்று. நாள் முழுவதும் அவள் பார்க்க என் முகமன்றி வேறில்லை என்ற நிலைமை வந்த போது அவளுக்கு யூ டியூபை அறிமுகப்படுத்தினேன். அந்த வயதிலேயே 'தப்போ தப்போ தப்பாணி' என்ற மலையாளப் பாடல் அவளுக்கு மிக விருப்பப் பாடலாக இருந்தது. அதைத் தொடர்ந்து இன்று வரை தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஹிந்தி, அரபி ஆகிய மொழிகளில் குழந்தைப்பாடல்களைப் பார்த்து வருகிறாள். அவள் பார்க்கும் பாடல்களின் எண்ணிக்கை இப்போது 160 ஐத் தொட்டிருக்கிறது. இவற்றுக்குள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல்கள், ஒரு தடவை பார்க்கலாம், இந்தப் பாடல் சலித்துப் போய்விட்டது என்பது போன்ற பாகுபாடுகளையும் அவளே உருவாக்கி வைத்திருக்கிறாள். 11 ம் மாதத்தில் பேசத் துவங்கியதிலிருந்து எல்லாப் பொருட்களையும் அவளறிந்த பாடல்களின் வழியாகவே சொல்லப் பழகி வருகிறாள். அவளின் பேச்சில் "குவா குவா வாத்து, மாம்பழமாம் மாம்பழம், வண்ண பலூன், மியா மியா பூனைக்குட்டி, பச்சைக்கிளியே வா வா" என்று அடைமொழியோடு கூடிய வார்த்தைகளே மிகுதி.
சமீபமாக பாடல்களைக் குறைத்து கதைகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறேன். நேற்று முன் தினம் எதேச்சையாக கண்ணில் பட்டது இராமாயணம் காணொளி. ஒன்னரை மணி நேரம் அதை அவள் பொறுமையாகப் பார்த்தது எனக்கே தாள முடியாத ஆச்சரியத்தைக் கொடுத்தது. படம் முடிந்தபின் இராமாயணத்தை வெறும் பத்து வரிகளாகச் சுருக்கி அவளது மொழியில் சொல்லிக் கொடுத்தேன்.
"1.இராமன் மாமா வில்லை எடுத்து 'டமார்னு' உடைச்சாரு.
2. இராமன் மாமாவும் சீதா அத்தையும் கல்யாணம் பண்ணிகிட்டாங்க.
3.அப்றம் இராமன் மாமா, சீதா அத்தை, லட்சுமணன் மாமா 3 பேரும் காட்டுக்கு போனாங்க.
4. அங்க ஒரு மானை பார்த்துட்டு சீதா அத்தை 'எனக்கு மானு வேணும் மானு வேணும்' நு அழுதா.
5. உடனே 'நான் புடிச்சித் தர்றேன்'நு இராமன் மாமா மானைத் துரத்திகிட்டு ஓடிப் போனாரு.
6. அப்போ இராவணன் பூச்சாண்டி அங்க வந்து 'வாஆஆ' ந்னு சீதா அத்தையை தூக்கிட்டு போய்ட்டாரு.
7. ஹனுமான் சொய்ய்ய்ய்ங்னு வானத்துல பறந்து போய் சீதா அத்தைகிட்ட மோதிரம் குடுத்துட்டு வளையல் வாங்கிட்டு வந்தாரு.
8. இராமன் மாமாவும் இராவணன் பூச்சாண்டியும் டிஷ்யூம் டிஷ்யூம்னு சண்டை போட்டுகிட்டாங்க.
9. இராவணன் பூச்சாண்டி டமார்னு கீழ விழுந்துட்டாரு.
10. கடைசியா இராமன் கிரீடம் எடுத்து தலைல வெச்சிகிட்டாரு"
ஹையா.. இராமாயணம் முடிஞ்சி போச்சி. :)))) கோர்வையாக இல்லாவிட்டாலும் அவள் இதை மழலையில் சொல்வது கொள்ளை அழகாக இருக்கிறது. வில்லை உடைக்கும் போது இராமனாகவும், சீதையை இழுக்கும் போது இராவணனாகவும் முகத்தில் பிரயத்தனம் காட்டி அசர வைக்கிறாள். கடைசியில் அவள் தலையில் அவளே பாவனை கிரீடம் வைத்துக் கொண்டு கை தட்டிச் சிரிக்கையில் என்னை கெளசல்யையாக உணர வைக்கிறாள். :)
Saturday, May 28, 2011
வாழுநம் என்னும் செருக்கு

அப்படித்தான் இருந்தாள் அவள்.
கரை தொலைத்த தோணிகளுக்காய்
தொலைவில்
மின்னிச்சுழலும் ஓர் ஒளித்தீண்டல் போல..
நன்னீர் சுரந்திருக்கும்
சின்னஞ்சிறு சுனையென
கரவலைகள் வீசி
தளும்பிக் கொண்டிருந்தாள்.
பின்னோர் நாள் கண்டேன்
கவிமனம் தேடியலையும்
முதற்சொல்லொன்று
எம் முற்றத்தில்
தவழ்ந்து கொண்டிருப்பதை.
இப்போது
அவள் விரல்நுனி பிடித்து
தத்தி நடக்கிறது காலம்.
காற்றசைத்த மலரென
வீடெங்கும்
சிதறிக் கிடக்கிறது மொழி.
ஆம்..
அவள் வளர்ந்து கொண்டிருக்கிறாள்
நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
சென்ற வருடம் இதே நாளில் அரை மயக்கத்தில் கண்விழித்துப் பார்க்கையில், சின்னஞ்சிறு சிப்பி இமைகள் மூடியிருக்க, கைகளிரண்டையும் கமலப்பூவின் அரும்பு போல நெஞ்சின் மேல் குவித்து, தானிருந்த கண்ணாடிப் பேழை முழுவதிலும் தன்னுடலின் விரிசோதியினை நிரப்பியபடி, தந்தையின் சாயலோடு உறங்கிக் கொண்டிருந்த செல்ல மகள்....
ஈன்ற பொழுதினும்...
ஒரு கண் சிமிட்டலைப் போல கடந்து விட்டது வருடம். நினைக்க நினைக்க மலைப்பாயிருக்கிறது. .. இன்று அமுதினியின் முதல் பிறந்தநாள். இதுவரை ஒரு சில காணொளிகள், ஒலிப்பதிவுகள், கணக்கற்ற புகைப்படங்கள் தவிர்த்து எழுத்தில் அவளை நான் பதிவு செய்யவேயில்லை. 'இன்மையிலிருந்து இருப்புக்கு வருவது போல' என்று ஓர் உவமை சொல்வார் ஜெயமோகன். அம்முவின் செயல்கள் ஒவ்வொன்றும் சொற்களில் தொடங்கி சொல்லின்மையில் சென்று முடிவதாகவே படுமெனக்கு. ஒவ்வொரு முறையும் மனதிற்குள்ளாகவே அதை விரித்து விரித்து.. கையிருப்பிலுள்ள வார்த்தைகளையெல்லாம் கலைத்து அடுக்கி மீண்டும் கலைத்து... முடிவில், இயலாமையினூடாக மெல்லிய பெருமிதம் கசிய 'என்ன பொண்ணு இவ' என்று சந்தோஷமாய் அலுத்துக் கொண்டு முயற்சியை கை விட்டு விடுவேன். இம்முறை அப்படி விட்டுவிட மனமில்லை.
குழந்தை கற்பூரம். ஓரிரு முறைகளில் எதையும் கற்றுக் கொண்டு விடுகிறாள். சாப்பாடு ஊட்டும் போது சில சமயம் 'அம்மாக்கு கண்ணு?' என்று வாய் திறப்பேன். அவளுக்கு நான் ஊட்டுவதைப் போலவே சின்னஞ்சிறு கையை அழகாய்க் குவித்து இல்லாத உணவை என் வாயில் திணிப்பாள். இது அவ்வப்போது நடக்கும்.
கூடவே யூ டியூபில் குழந்தைப்பாடல்களைப் பார்த்தபடி சாப்பிடுவது அவள் வழக்கம். சித்துவையும் என்னையும் தவிர்த்து இந்த வீட்டில் ஈ, எறும்பு, கொசு போன்ற இதர சிற்றுயிர்களைக் கூட காணாது வளரும் அவளுக்கு சிங்கம், புலி, குரங்கு, மாடு, யானை, முயல், பூனை, நாய், ஆடு, காக்கை, கிளி, மயில்,மான் முதலான அத்தனை ஜீவராசிகளும் இந்தப் பாடல்கள் மூலமாகவே பரிச்சயம். க்கா க்கா வெனக் கரைவது, பவ் பவ் வெனக் குரைப்பது, ம்ம்மாஆஆவென்று கத்துவது, சிங்கம் போல வாய் பிளந்து கர்ஜிப்பது, யானையைப் போல கையுயர்த்தி தலையில் ஆசிர்வதிப்பது போன்றவற்றையும் இதிலிருந்தே கற்றுக் கொண்டிருக்கிறாள். மேற்சொன்ன வரிசையில் பூனை அவளுக்கு மிகப்பிரியமான உயிர்.
கடந்த 2 வார காலமாய் அவளுடைய பாடல் வரிசையில் கீழ்க்கண்ட காணொளியையும் சேர்த்திருந்தேன். பூனைக்குட்டி கத்திக் கொண்டே துள்ளுவதைப் பார்ப்பதில் பேரானந்தம் அவளுக்கு. எப்போதோ ஒரு முறை 'பாவம் கண்ணு.. பூனைக்குட்டிக்கு பசிக்குதாம்' என்றும் சொல்லி வைத்திருந்தேன்.
நேற்று சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் இந்தப் பூனையைப் பார்த்தவள், திடுமென அதற்கு சாப்பாடு ஊட்டுபவளைப் போல கை குவித்துக் கொண்டு 'பு பு' (புவா - சாப்பாடு) என்றபடி கணினித் திரையை நோக்கி கை நீட்டினாள். என்ன சொல்ல! அவளின் புரிதலில், அதனை அவள் வெளிப்படுத்திய விதத்தில், அன்பென்று அவளே அறிந்திராத அவளது தூய அன்பினில், இனியெப்போதும் என்னால் மறக்கவியலாத அந்தக் கண நேரக் காட்சியில்... இன்னமும் பிரம்மித்துக் கொண்டேயிருக்கிறேன். கன்னலின் சுவையையும் தேனின் சுவையையும் சொல்லால் வேறுபடுத்திக் காட்ட முயல்வது போல அயர்ச்சி பரவுகிறது மனதில். :)
" தன்னைப் பெற்றேற்கு வாயமுதம் தந்தென்னை தளிர்ப்பிக்கின்றான்" என்று கண்ணனைப் பாடுகிறார் பெரியாழ்வார். தளிர்ப்பித்தல் என்பதன் பொருளை இப்போது தான் உணர்ந்து கொண்டேன்.
குழந்தை கற்பூரம். ஓரிரு முறைகளில் எதையும் கற்றுக் கொண்டு விடுகிறாள். சாப்பாடு ஊட்டும் போது சில சமயம் 'அம்மாக்கு கண்ணு?' என்று வாய் திறப்பேன். அவளுக்கு நான் ஊட்டுவதைப் போலவே சின்னஞ்சிறு கையை அழகாய்க் குவித்து இல்லாத உணவை என் வாயில் திணிப்பாள். இது அவ்வப்போது நடக்கும்.
கூடவே யூ டியூபில் குழந்தைப்பாடல்களைப் பார்த்தபடி சாப்பிடுவது அவள் வழக்கம். சித்துவையும் என்னையும் தவிர்த்து இந்த வீட்டில் ஈ, எறும்பு, கொசு போன்ற இதர சிற்றுயிர்களைக் கூட காணாது வளரும் அவளுக்கு சிங்கம், புலி, குரங்கு, மாடு, யானை, முயல், பூனை, நாய், ஆடு, காக்கை, கிளி, மயில்,மான் முதலான அத்தனை ஜீவராசிகளும் இந்தப் பாடல்கள் மூலமாகவே பரிச்சயம். க்கா க்கா வெனக் கரைவது, பவ் பவ் வெனக் குரைப்பது, ம்ம்மாஆஆவென்று கத்துவது, சிங்கம் போல வாய் பிளந்து கர்ஜிப்பது, யானையைப் போல கையுயர்த்தி தலையில் ஆசிர்வதிப்பது போன்றவற்றையும் இதிலிருந்தே கற்றுக் கொண்டிருக்கிறாள். மேற்சொன்ன வரிசையில் பூனை அவளுக்கு மிகப்பிரியமான உயிர்.
கடந்த 2 வார காலமாய் அவளுடைய பாடல் வரிசையில் கீழ்க்கண்ட காணொளியையும் சேர்த்திருந்தேன். பூனைக்குட்டி கத்திக் கொண்டே துள்ளுவதைப் பார்ப்பதில் பேரானந்தம் அவளுக்கு. எப்போதோ ஒரு முறை 'பாவம் கண்ணு.. பூனைக்குட்டிக்கு பசிக்குதாம்' என்றும் சொல்லி வைத்திருந்தேன்.
நேற்று சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் இந்தப் பூனையைப் பார்த்தவள், திடுமென அதற்கு சாப்பாடு ஊட்டுபவளைப் போல கை குவித்துக் கொண்டு 'பு பு' (புவா - சாப்பாடு) என்றபடி கணினித் திரையை நோக்கி கை நீட்டினாள். என்ன சொல்ல! அவளின் புரிதலில், அதனை அவள் வெளிப்படுத்திய விதத்தில், அன்பென்று அவளே அறிந்திராத அவளது தூய அன்பினில், இனியெப்போதும் என்னால் மறக்கவியலாத அந்தக் கண நேரக் காட்சியில்... இன்னமும் பிரம்மித்துக் கொண்டேயிருக்கிறேன். கன்னலின் சுவையையும் தேனின் சுவையையும் சொல்லால் வேறுபடுத்திக் காட்ட முயல்வது போல அயர்ச்சி பரவுகிறது மனதில். :)
" தன்னைப் பெற்றேற்கு வாயமுதம் தந்தென்னை தளிர்ப்பிக்கின்றான்" என்று கண்ணனைப் பாடுகிறார் பெரியாழ்வார். தளிர்ப்பித்தல் என்பதன் பொருளை இப்போது தான் உணர்ந்து கொண்டேன்.
Subscribe to:
Posts (Atom)