Tuesday, July 31, 2007

'தல'க்குப் பொருந்தாத 'கிரீடம்'





ஒரு அழகான ரம்மியமான சாயந்திர நேரம்! என்ன பண்ணிருக்கனும் நான்? ஊர்ல புத்தகத்திருவிழா நடக்குது, ஒரெட்டு போய் பாத்திட்டு வந்திருக்கலாம். சின்னதா ஒரு கூடைல திரி, எண்ணெய், கற்பூரம், கொஞ்சம் பூ எல்லாம் எடுத்திட்டு நல்ல புள்ளையா எதாச்சும் ஒரு கோவிலுக்கு போயிருக்கலாம், பக்கத்து வீட்டு வாண்டுகளை கூப்பிட்டு வெச்சி 'சிங்கம்' அல்லது 'புலி'க்கதை சொல்லிருக்கலாம்.. அட மொட்டை மாடிக்குப் போய் டீ குடிச்சிட்டே... வாங்கினதுல இருந்து இன்னும் படிக்காம 'இழுத்துட்டே' போற 'ரப்பர்' நாவலையாச்சும் படிச்சு முடிச்சிருக்கலாம். இதெல்லாம் பண்ணாம 'கிரீடம்' படத்துக்கு போலாம்னு நான் முடிவு பண்ணினதுக்கு வெளிநாட்டு சதி அல்லது எதாச்சும் அமானுஷ்ய சக்தி தான் காரணம்னு நான் நினைக்கிறேன்! நீங்க என்ன நினைக்கறீங்க?

இந்த படத்து ஸ்டில்ஸ் எல்லாம் பார்த்து அஜித் போலீஸ் ஆபீசர் போலன்னு நினைக்கறீங்க தானே? அதான் இல்ல.. அவரு ஒரு ரௌடி. அப்புறம் எதுக்கு இந்த ஸ்டில்? என்னைக் கேட்டா? படத்துல அப்படி தாங்க சொல்றாங்க!!! இருங்க கடைசில புரியும்.

படத்துல 'தல' இன்ட்ரோ சீன் அட்டகாசம். ஜெயில்ல இருந்து தப்பிச்சு போற கைதிங்க எல்லாரையும் கொட்ற மழைல செமயா ஃபைட் பண்ணி அரெஸ்ட் பண்றார் அஜித். அடடா ன்னு ஆர்வமா சீட்ல நிமிர்ந்து உக்காந்தா அதெல்லாம் அஜித்தோட அப்பா ராஜ்கிரண் கண்ட கனவாம். (எப்பிடி சிக்கிருக்கேன் பாத்திங்களா?)

ராஜ்கிரண் ஒரு நேர்மையான... ஆமா! கரெக்ட் போலீஸ் தான்! போலீஸ் ஹெட்கான்ஸ்டபிளான இவரு பையன் அஜித்தை எஸ்.ஐ ஆக்கனும்ங்கிறத தன்னோட வாழ்நாள் லட்சியமா வெச்சிருக்காரு. ஆனா அஜித் என்னா பண்றாருன்னா... த்ரிஷாவோட க்ளோஸ் ஃப்ரெண்டா இருந்த புள்ளையார் சாமிய அவங்க வீடு பூந்து திருடறாரு. (எதாச்சும் வெளங்குது?) திருடி முடிச்சதும் ஒரு பாட்டு. அது என்ன பாட்டுன்னு புரியல.... எதுக்கு பாட்டுன்னும் தெரியல. அதெல்லாம் நாம கேக்கப்படாது, தமிழ்சினிமால ஹீரோ அறிமுகமாகும்போது இப்படி 10, 20 பேர் கூட சேர்ந்து பாடி ஆடனும்னு ஒரு நியதி இருக்கு.. ஆனா ஹீரோ இன்ட்ரோ முடிஞ்சு 4, 5 சீனுக்கு பின்னாடியும் இப்படி பாடலாமான்னு தெரியல. (ரூல்ஸ மாத்திட்டாய்ங்க போலிருக்கு!) சரி கேளுங்க.. நான் மட்டும் கஷ்டப்பட்டு பாக்கல? நான் யார்கிட்ட கேப்பேனாம்?

சரி பாட்டு முடிஞ்சுதா? த்ரிஷா பாவம்.. புள்ளையாரையும் அதை திருடின அஜித்தையும் தேடிட்டே இருக்காங்க. அந்த புள்ளையார் இல்லன்னா அவங்க எக்ஸாம்ல பெயில் ஆய்டுவாங்களாம். (இதை அவங்க சொல்லும் போது துக்கம் தாங்காம நான் அழுதுட்டேன் தெரியுமா?) அதனால அஜித் என்ன பண்றாரு, கரெக்டா அவங்க எக்ஸாம் அன்னிக்கு த்ரிஷாவ அந்த புள்ளையார்கிட்ட கூட்டிட்டு போறாரு. (என்னமோ வேற யாரோ திருடினத இவர் கண்டுபிடிச்சாப்பல.. என்ன கொடுமை சார் இது?) இப்ப என்னாகும்? மறுபடி தமிழ்சினிமா நியதிப்படி த்ரிஷாக்கு அஜித் மேல காதல் வந்துடுது.

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் நம்ம நேர்மையான ராஜ்கிரண் வழக்கம் போல ஒரு எம்.எல்.ஏ பையன்கிட்ட வம்பு வளர்க்க, டிப்பார்ட்மெண்ட் வழக்கம் போல அவரை தண்ணியில்லாத காட்டுக்கு மாத்த, அங்க வழக்கம் போல ஒரு ரௌடி ஊரையே மிரட்டிட்டு இருக்க, இவரும் வழக்கம் போல அவன்கிட்டயும் தன் நேர்மைய காட்டி அடிவாங்க, அஜித் வழக்கம் போல அப்பாவ காப்பாத்த உணர்ச்சிவசப்பட்டு அந்த ரௌடிய கன்னாபின்னான்னு அடிக்க.... அவ்வ்வ்வ்வ்வ்.. என்னால முடியலங்க.

இருங்க.. எங்க ஓடறீங்க? முழுசா சொ(கொ)ல்லாம விடறதில்ல இன்னிக்கு. அப்புறம் என்ன ஆச்சுன்னா... அரைகுறையா உசிர் பொழச்ச அந்த ரௌடி "என்னை யாருமே அடிக்கல" ன்னு போலீஸ்கிட்ட சொல்றார். அஜித் அவரை மண்டைலயே அடிச்சதால அப்படி சொல்றாரா வேற எதுனாச்சும் காரணமான்னு தெரியல எனக்கு.

அப்புறம் வழக்கம் போல ஜாமீன்ல வெளில வந்து மறுபடி வழக்கம் போல அஜித்தை துரத்தி அவர் குடும்பத்துல எல்லாரையும் அடிச்சு போட்டு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்றார் மிஸ்டர். ரவுடி!! உடனே அஜித்துக்கு பயங்கரமா கோபம் வந்து நேரா அந்த ரவுடிகிட்ட போய்.. "நான் சாக வந்திருக்கேன்.. என்னை கொல்லு"ன்றார். ஆனா ரொம்ப நேரம் சண்டை போட்டுட்டு இவரு தான் அந்த ரவுடியை கொல்றார். (என்ன இழவுடா இது?) ஒரு கொலைகாரனுக்கு பொண்ணு தர மாட்டோம்னு த்ரிஷா அப்பாம்மா சொல்லிடறாங்க. பாவம் த்ரிஷா அழறாங்க..

இதுக்கெல்லாம் நடுவுல ஒரு பாட்டு வருது.. அந்த பாட்டுலயே அஜித் எக்சர்சைஸ் எல்லாம் பண்ணி, எஸ்.ஐ எக்ஸாம் எல்லாம் எழுதி முடிச்சி, செலக்ட்டும் ஆய்டறாரு. போலீஸ் வெரிபிகேஷன் பண்ணி ஓகே.. ன்னு சொன்னா அவருக்கு எஸ்.ஐ போஸ்ட் கிடைச்சிரும்... வெரிபிகேஷன் ரிப்போர்ட் குடுக்கப்போற அப்பா ராஜ்கிரண் கடைசில அந்த பரபரப்பான க்ளைமாக்ஸ்ல (!!?) 'அவனுக்கு எஸ்.ஐ ஆகத் தகுதி இல்ல' அப்படின்னு சொல்லிடறாரு. (நாங்க தான் சொன்னோமுல்ல? அவரு நேர்மையானவர்னு!) உடனே அஜித்தோட போட்டோவ போலீஸ் ஸ்டேஷன்ல குற்றவாளிகள் லிஸ்ட்ல சேர்த்துடறாங்க. இப்படி ஒரு உருக்கமான காட்சியோட படம் முடிஞ்சு போச்சுங்க. (ஸ்ஸ்! அப்பாடா!!)

நியாயமா விமர்சனம் பண்றவங்க படத்தோட முழுக்கதை அல்லது க்ளைமாக்ஸ சொல்லாம விடறதுதான் மரபு. நான் ஏன் இங்க அந்த மரபை மீறி செயல்பட்டிருக்கேன்னா என்னை மாதிரி வேற யாரும் நொந்து போகக் கூடாதுன்ற ஒரே நல்லெண்ணம் தான் காரணம். படம் ரொம்ப யதார்த்தமா இருக்கறதா சிலர் சொல்றாங்க... இண்ட்ரோ சாங் ல இருந்து, த்ரிஷாவோட காதல் வரை எல்லாம் சினிமாத்தனமா செயற்கையா வெச்சிட்டு 'நாயகனின் தோல்வியை இயல்பா படமாக்கிருக்கோம்'னு பெருமைப்பட்டுக்கறது நிஜமாவே நல்ல காமெடி.

காமெடின்னதும் நியாபகம் வருது.. படத்துல விவேக் இருக்கார்.. எதுக்கு இருக்கார்னு தெரியல. சந்தானம் கூட பரவாயில்லை, லேசா எப்பவாச்சும் சிரிக்க வைக்கிறார். இசை ஜி.வி.பிரகாஷ். ஒரே ஒரு பாட்டுல மனுஷன் அசத்தியிருக்கார். "அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்" னு சாதனாசர்கம் நெருப்புல போட்ட வெண்ணையா கரைஞ்சி உருகறாங்க.. படத்துல உருப்படியா பாக்கற மாதிரி அழகான லொக்கேஷன்ஸ்ல எடுத்திருக்கற ஒரே பாட்டு இது.

அஜித் அரிசி மூட்டைக்கு பனியன் போட்ட மாதிரி 'ரெட்' அஜித்தாவோ, சோமாலியாவுல இருந்து பஞ்சம் பொழைக்க வந்த 'பரமசிவன்'அஜித்தாவோ இல்லாம கொஞ்சம் பாக்கற மாதிரி இருந்தது படத்துல இன்னொரு பெரிய ஆறுதல். என்னமோ போங்க.. விஜய் ஒரு பக்கம் போக்கிரி பக்கிரின்னு எப்படி நடிச்சாலும் படம் ஓஹொன்னு ஓடிட்டிருக்க நல்ல நடிப்புத்திறமைய வெச்சிட்டு இவரு இப்படி திணறுறத பாத்தா பாவமாத்தான் இருக்கு. அஜித் நீங்க எதுக்கும் ஒரு நடை திருநள்ளாறு போய் எள் தீபம் ஏத்திட்டு வாங்களேன்?

பி.கு: நான் இனிமே சன் டிவி தவிர வேறெதுலயும் புதுப்படம் பாக்க போறதில்ல.

Monday, July 30, 2007

* தூரத்துப் பச்சை

நேற்றிரவு உன்
வீட்டிற்கு வந்திருந்தேன்..

வழக்கம் போல
உனக்கே உனக்கென்று
சில பிரத்யேக சொற்களையும்
இந்த சிலநாட்களாய்
என்னைப் பற்றித்தொடரும்
துயரமொன்றையும் சுமந்தபடி...

வழக்கத்திற்கு மாறாய்
நான் வரும்முன்பே
நீ நிரம்பியிருந்தாய்
புதிய சில மனிதர்களின்
கூச்சல்களால்...
ஆரவாரங்களால்...
போதையூட்டும் சொற்களால்...

காதுகளை நிறைக்கும்
இரைச்சல்களின் நடுவே
எவருக்கும் கேளாமல்
உள்ளடங்கி ஒலிக்கின்றன
மனம் முறியும் சப்தங்கள்...

மெளனமாய்த் திரும்பி
என் நாட்குறிப்பில்
எழுதிக் கொள்கிறேன்...

'கவனிக்கப்படாத துயரங்கள்
எப்போதும்
கனம் மிகுந்தவையாய்
இருக்கின்றன.'

Friday, July 27, 2007

* நெஞ்சு பொறுக்குதில்லையே...


செய்தி: ஈரோடு அருகே உள்ள பெருந்துறையில் பெற்றதாயை பராமரிக்காமல் குப்பைமேட்டில் வீசிய மகள் கைது செய்யப்பட்டார்.


"பெருந்துறை ஆர்.எஸ்.ரோட்டில் இருக்கிறது புங்கம்பாடி என்ற ஏரியா. கடந்த வாரம் இந்த பகுதியில் உள்ள குப்பைமேட்டில் குப்பையைக் கொட்டப் போனவர்கள் ஒரு முனகல் சப்தத்தைக் கேட்டிருக்கிறார்கள். முனகல் சப்தம் கேட்ட இடத்திற்கு அருகில் சென்று பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள். அழுக்குத்துணியால் சுருட்டி வீசப்பட்டது போல் வயதான மூதாட்டி ஒருவர் அங்கே சுருண்டு கிடந்திருக்கிறார். உடனே அவரை மீட்டு தண்ணீரும் பாலும் கொடுத்த ஈரமனம் கொண்ட அப்பகுதி மக்கள் 2 நாட்கள் தங்கள் அரவணைப்பில் வைத்திருந்து பிறகு மாவட்ட திட்ட அலுவலருக்கு தகவல் தெரிவிக்க, அவர் அந்த பாட்டியை ஈரோடு கே.கே.நகரில் இயங்கும் கருணை இல்லத்தில் ஒப்படைத்திருக்கிறார். எண்பது வயது மூதாட்டியான அவர் உயிருக்கு போராடி கடந்த 22ம் தேதி இறந்து போனார்.."


கொஞ்சம் ஆறிப்போன செய்திதான் இது.. ஆனால் கேள்விப்பட்டதிலிருந்து மனசு ஆறவில்லை எனக்கு. எங்கள் ஊரில் நடந்தது என்று சொல்லிக்கொள்கையில் கனமாய் அவமான உணர்வு முகத்தில் படிவதை தவிர்க்க முடியவில்லை.

எப்படி முடிகிறது இப்படியெல்லாம் நடந்து கொள்ள? என்னதான் வறுமை என்றாலும் அம்மாவை குப்பையில் வீசிவிடத் தோன்றுமா? பாசம் என்பதென்ன உபயோகம் முடிந்ததும் தூக்கியெறியப்படும் அற்ப விஷயமா? பசியென்றால் பறந்துபோகும் பத்தில் அடிப்படை மனிதம்தான் முதலில் இருக்கிறதா? என்னவோ.. தாங்கிக் கொள்ளவே முடியவில்லை என்னால்.


தெருவோரத்திலும் சேரிகளிலும் வதவதவென திரியும் அழுக்குப்படிந்த பிள்ளைகளைப் பார்க்கும்போது குழந்தை பெறுவதும் வளர்ப்பதும் இத்தனை சுலபமா என்று தோன்றுவதுண்டு. அதே நேரம் என் சித்தி, அண்ணி, போன்றவர்களுக்கு குழந்தை பிறந்தபோது பிள்ளை வளர்ப்பு அப்படியொன்றும் சாதாரண விஷயமல்ல என்றும் தோன்றியிருக்கிறது.


முன்பெல்லாம் சித்தி வீட்டிற்கு போகையில் 7 மாத குழந்தையாய் இருந்த என் தங்கை அபி எந்நேரமும் ரீங்காரமாய் அழுது கொண்டிருப்பாள்..


"அடடா! அழ ஆரம்பிச்சிட்டா என்னவாம் சித்தி இவளுக்கு?"

"ஒன்னுமில்ல.. பாப்பாக்கு பசி வந்திடுச்சு"


பால் குடித்து 10 நிமிஷம் ஆகியிருக்காது.. மறுபடி 'ங்ங்ங்ங்கேஏஏ' என்று ஆரம்பிப்பாள்!


"அடிங்க.. வயிறு நம்பிடுச்சுல்ல.. இப்ப என்னாடி உனக்கு?"

"தூக்கம் வந்திடுச்சு.. அதான் அழறா.."


அவளுக்கு தெரிந்ததென்னவோ எந்நேரமும் 'ங்ங்ங்ங்கேஏஏ' தான். அதிலிருந்து அது பசியா, தூக்கமா, அஜீரணமா, காது வலியா, கொசுவோ எறும்போ கடித்ததா என்று எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்று இன்னமும் புரிந்ததில்லை எனக்கு.

பிள்ளைகளுக்கு எத்தனை வயதானாலும் தாய்ப்பாசத்தின் அடர்த்தி மட்டும் கூடிக்கொண்டே போகிறதே தவிர குறைந்து விடுவதில்லை. திருவாசகத்தில் ஒரு பாடல் வரும்...


"பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து

பாவியேனின் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி.."


என சிவபெருமானை நினைந்து உருகிக் கொண்டிருப்பார் மாணிக்கவாசகர். பெரும்பாலும் திருவாசகத்தில் வரிக்கு வரி நின்று நிதானித்து நகரும் மனதிற்கு இதைப் படிக்கையில் 'அய்யோ' வென அசதி வரும். கடவுளுக்கே உவமை சொல்ல உதவுவது 'பால் நினைந்தூட்டும் தாயன்பா?' என்ற பிரமிப்பு வரும். எதுவிலோ எப்படியோ கடவுள் என்ற உணர்வை அல்லது மறைக்கப்பட்ட பிரபஞ்ச உண்மைகளை உணர்ந்து கொண்டு நெக்குருகி நிற்கும் அவருக்கு அது எப்படியிருக்கிறது என்று சொல்ல விழைகையில் தாயன்பு தான் நினைவுக்கு வந்தது போல. அப்படிப்பட்ட அன்பை எப்படி குப்பையில் வீச?


என் அண்ணிகள், பக்கத்து வீட்டு அக்காக்கள் என எல்லாருமே ஏதோவொரு தருணத்தில்.. " என் அம்மாவையெல்லாம் என்ன பேச்சு பேசியிருக்கேன்.. பெத்து வளர்த்தா தான் தெரியுது கஷ்டம்" என்று உணர்வுபூர்வமாய் சொல்வதை கேட்டிருக்கிறேன். எனக்கென்னவோ இது போன்ற பிரச்சினைகளுக்கும் வளர்ப்பு முறைதான் காரணம் என்று தோன்றுகிறது. உண்மையில் குழந்தையை கஷ்டப்பட்டு வளர்ப்பதை விடவும் பெற்றவர்களின் கஷ்டங்களை புரிய வைத்து வளர்ப்பது தான் அவசியமாயிருக்கிறது.


அம்மாவிடம் இது பற்றி சொல்லி ஆதங்கப்பட்டபோது... "குழந்தைகள வளர்த்து ஆளாக்கறது பெத்தவங்க கடமை.. பின்னாடி வெச்சு காப்பாத்துவாங்கன்னு எதிர்பார்ப்போட வளர்க்க கூடாது.. அதே நேரம் பெத்தவங்களை பத்திரமா பாத்துக்கறது பிள்ளைங்களோட கடமை.. அதுல இருந்து அவங்க விலக நினைக்க கூடாது... தண்டவாளம் மாதிரி ரெண்டு பக்கத்து உணர்வுகளும் பொருத்தமா இருக்கணும்" என்றார்கள்.


சரிதான்.. எத்தனை வீட்டில் இது நடைமுறையில் இருக்கிறது? உண்மையில் எது பற்றியும் அம்மா அல்லது அப்பாவிடம் மனம் விட்டு பேச முடிவதே சிறந்ததொரு வளர்ப்பு முறை என்பேன் நான். எனக்கு என் அம்மாவிடம் இருக்கும் நட்புணர்வை நாளை என் பிள்ளைக்கு வழங்க முடியுமா என்பதில் சந்தேகம் இருந்துகொண்டேயிருக்கிறது மனதில். இத்தனை புரிதல் இருந்தும் கூட அம்மாவிற்கும் எனக்கும் அடிக்கடி முட்டிக்கொண்டு விடும்! ஒவ்வொருமுறையும் எங்கள் பஞ்சாயத்தை தீர்த்து வைக்கும் எங்கள் நாட்டாமை (என் தம்பி!) இரு தரப்பு வாதங்களையும் கேட்டு தீர விசாரித்த பின்னர் கொஞ்சமும் மாற்றமின்றி..


"தப்பு அம்மா மேலதான்.. நியாயம் (?!) உன் பக்கம் தான் இருக்கு.. ஆனாலும் நீ எதிர்த்து பேசியிருக்க கூடாது.. ஏன்னா அது அம்மா."


என்று ஒருதலைபட்சமாக தான் தீர்ப்பு வழங்குவார். கொசுறாய்..


"அம்மாவிற்கு அட்வைஸ் பண்ண முடியாது.. உனக்கு பண்ணலாம்.. உன் வாதத்திறமையை அம்மாகிட்ட காட்டாதே"


என்று அறிவுரை வேறு கிடைக்கும்.


பாசத்தை கொட்டி வளர்க்கும் பெற்றோர்கள் அதை பிள்ளைகளுக்கு புரிய வைக்க தவறுகிறார்கள் என்றே தோன்றுகிறது. சென்ற வாரம் செய்தியாளராய் இருக்கும் நண்பர் ஒருவரோடு செய்தித்தொகுப்பிற்காக முதியோர் இல்லம் ஒன்றிற்கு போயிருந்தேன். திரும்பி வருகையில் வெகுவாய் கனத்துப் போயிருந்தது மனது.

அன்பும், ஆதரவும், புரிந்து கொண்டற்கான ஆறுதலும் தேவைப்படுகின்ற முதுமைக்காலம், அவர்களுக்கு அங்கே தாங்கிக் கொள்ளவியலாத தனிமையில் கழிகிறது. பேட்டிக்காக தன் அனுபவம் சொல்ல வந்த ஒவ்வொருவரின் கண்களிலும் புறக்கணிப்பின் வேதனை கண்ணீராய் வழிந்ததை தாங்க முடியவில்லை.


"இங்க கொண்டு வந்துவிட்டுட்டு போன பின்னாடி எம்புள்ளஒரு தடவ கூட வந்து பாக்கல கண்ணு"


என்று தோல் சுருங்கி மெலிந்த கரங்களால் என் கை பிடித்து அழுத மூதாட்டி திடீரென,


"ஏம்மா இதெல்லாம் டிவி ல வருமா? இதால எம்புள்ளைக்கு எதும் பிரச்சினை வந்துடாதே?"

என்று பதறியபோது தவிர்க்க முடியாமல் கண்கலங்கியது எனக்கு.


அன்பும் பாசமும் கடை விரித்துக் கொட்டப்பட்டிருக்கிறது அங்கே. கொள்வார் தான் எவருமில்லை. அம்மாவைப் பார்க்கிறேன், அப்பாவைப் பார்க்கிறேன் என்று வந்த ஒரு சிலரைப் பார்க்கையில் தாங்க முடியாத கோபமும், குப்பையில் வீசாமல் இதையாவது செய்கிறார்களே என்ற ஆறுதலும் வந்தது. கூடவே எங்கோ கேட்ட கவிதையும்..


"இது மனிதக்காட்சி சாலை
பால் குடித்த மிருகங்கள்
வந்து பார்த்துவிட்டு போகின்றன"


எத்தனை நிஜம்! குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட அந்த பரிதாபத்திற்குரிய தாய்,


"நாமளே வாய்க்கும் வயித்துக்கும் அல்லாடிட்டு இருக்கோம். இதுல இது வேறயா' ன்னு ஆரம்பத்துல இருந்தே என் பொண்ணு என்னை கரிச்சு கொட்ட ஆரம்பிச்சா.. ஒழுங்கா சாப்பாடு போட மாட்டா...'ஏன் இங்க வந்து எங்க உசிரை வாங்கறே? எங்காவது போய் செத்து தொலைய வேண்டியது தானே'ன்னு அடிக்கடி திட்டுவா" என்று கண்ணீர் விட்டிருக்கிறார் பாவம்.

மருமகள் கூட செய்யத் தயங்கும் காரியத்தைச் செய்ய மகளுக்கு மனம் வந்திருக்கிறது. எண்பது வயது வரை உயிரோடிருந்த அந்த தாயை, மகளின் நிராகரிப்பு இரண்டே நாளில் கொன்றிருக்கிறது. என்ன கொடுமை!


அந்த பெண்ணை கைது செய்ய உத்தரவிட்டிருக்கும் மாவட்ட ஆட்சியர்,
"குடும்ப சூழ்நிலையைக் காரணம் காட்டி பெற்றவர்களுக்கு இதுபோல தவறிழைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்று நினைக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

சரிதான்.. இது போல எத்தனை பாடங்கள்? எப்போதுமே கடமைகளை சட்டத்திற்கு பயந்து செய்வது தானே நம்மவர்களின் வழக்கம். எப்படியோ போகட்டும். எனக்கு சட்டத்திலோ, சாபங்களிலோ, பாவ புண்ணியங்களிலோ இல்லாத நம்பிக்கை நியூட்டனின் 3வது விதியின் மேல் இருக்கிறது.




"For every action, there is an equal and opposite reaction."



குப்பையில் வீசப்பட்ட சின்னம்மாள்

செய்தி மற்றும் புகைப்பட ஆதாரம்: ஜூலை 29,2007 ஜூனியர் விகடன்.





Tuesday, July 24, 2007

* நீயில்லாத நாளில்...

நேற்றைய தினத்தில்
என்னுடனோ
எனக்கென்றோ
எவருமில்லை....

நானும் எவர் நினைவிலும்
சென்றிருக்கவில்லை...

நான்.. நான்.. நான்
மட்டுமேயிருந்தேன்

முற்றுப்புள்ளிகளற்ற
மெளனம் ஒன்று
நாள் முழுக்க
நீண்டபடியேயிருந்தது
முடிவற்று...

உன் வெற்றிடங்களை
எப்போதும்
நிரப்பிக் கொண்டிருப்பதாய்
உன்னால் சிலாகிகக்கப்பட்ட
என் சொற்களும் கூட
இலக்கற்று அலைந்து
மூடப்பட்ட உன் கதவுகளில் மோதி
உடைந்து திரும்பின..

உரக்கச் சத்தமிட்டு
ஓடித்திரியும் பிள்ளைகளாய்
என்னைச் சுற்றிவந்த
நினைவுகள் சிலவற்றில்
உன் பெயருமிருந்தது.

ஒருவேளை...

உன் பெயர் சொல்லிக்கொண்டு
துண்டு மேகமொன்றோ
சிட்டுக்குருவியொன்றோ
வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில்
ஜன்னல்களினூடே
நானுமோர் கம்பியாய் நின்றிருந்தேன்
வெகுநேரம்...

தொலைவில்...
வானம் முடியும் ஒரு புள்ளியில்
நொடிக்கொரு வண்ணம் காட்டி
பிரித்தறிய முடியா நிறங்களை
என்முகத்தில் அள்ளித்தெளித்தபடியே

மிச்சங்கள் ஏதுமின்றி
மறைந்துபோனது பகல்
உன்னைப் போலவே....

"துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்"

போன மாதம் நண்பர் ஒருவருக்கு பிறந்தநாள் வந்தது. புத்தகம் ஏதாவது பரிசளிக்கலாமென்று வழக்கமான கடைக்குள் நுழைந்தபின்பே புத்தியில் உறைத்தது எந்த ரக புத்தகங்களை அவர் விரும்புவார் என்பது தெரியவில்லை. எப்போதோ ஒரு முறை வைரமுத்துவின் 'பெய்யெனப் பெய்யும் மழை' பற்றி அவர் சிலாகித்ததாய் நினைவு. சுற்றி சுற்றித் தேடியும் அங்கே வைரமுத்துவைக் காணவில்லை. கடைக்காரர் வினோதமாய் பார்க்க ஆரம்பித்ததால் குறிக்கோளை மாற்றிக் கொண்டு 'எதையாவது வாங்கிக் கொண்டு இடத்தைக் காலி செய்வது' என்ற முடிவிற்கு வந்தபோது, அந்த புத்தகத்தின் தலைப்பு கண்களை ஈர்த்தது. அது பாப்லோ நெரூடாவின்.. 'துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்' என்ற கவிதை நூல்.

துயருக்கும் இரவிற்கும் மிக நெருங்கிய தொடர்பிருப்பதாய் அடிக்கடி தோன்றும் எனக்கு. எப்போதும் இரைந்து கொண்டிருக்கும் பகலை விடவும் ஆழமாய், அடர்த்தியாய், மெளனமாயிருக்கும் இரவு புதைந்த நினைவுகளை எல்லாம் மீட்டெடுக்கிறது. என் கவிதைகளிலும் கூட சோகக்கவிதைகள் பெரும்பாலும் உறக்கம் தொலைந்த இரவுகளில் எழுதப்பட்டவையே.. என்னை அப்புத்தகம் ஈர்த்ததற்கும் இதுவே காரணமாயிருக்கலாம்.

"சிலி நாட்டில் பிறந்த பாப்லோ நெரூடா (1904 - 1973) இருபதாம் நூற்றாண்டின் பெரும் கவிஞராக மதிக்கப்படுபவர். இருபது வயதில் அவர் எழுதி வெளியிட்ட 'இருபது காதல் கவிதைகளும் நிராசைப் பாடல் ஒன்றும்' அவருக்கு புகழ் தேடித் தந்தது. ...........' கவிதை ஒரு தொழில்' என்று கூறிய நெரூடாவின் கவிதைகள், பன்முகத்தன்மை வாய்ந்தவை. அவருடைய பிற்கால கவிதைகள் நேரிடையாக மக்களை நோக்கிப்பேசின. 1971ல் நோபல் பரிசு பெற்றார்..............."

என்பதாக சம்பிரதாய அறிமுகத்துடன் தொடங்கும் இப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்குகையில் வெறுமனே 'ஒரு கவிதை புத்தகம் படிக்கப் போகிறோம்' என்ற எதிர்பார்ப்புகளற்ற வெற்றுணர்வு மாத்திரமே இருந்தது மனதில். படித்து முடித்ததின் பின்னாய் ஆழமாய் ஆனால் அர்த்தமுள்ளதாய்... மீண்டும் ஓர் வெறுமை வந்தது. சங்க இலக்கியம் முதலாய் சோகம் சுமந்த கவிதைகளுக்கு தனித்ததோர் சிறப்பிடம் வழங்கப்பட்டு வருவது எதனால் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்வுபூர்வமாய் அறிந்து கொள்ள முடிந்தது.

இந்த கவிதைகளை மொழியாக்கம் செய்துள்ள சலபதி, 'துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்' என்ற கவிதைக்கு மட்டும் தமிழில் அரைடஜன் மொழியாக்கங்கள் இருப்பதாய் தனது மிக நீண்ட அறிமுகத்தில் கூறுகிறார்.

படைப்பை விரும்பும் வாசகருக்கு படைப்பாளியும் அவரின் சொந்த விருப்பு வெறுப்புகள் குறித்த ஆராய்ச்சிகளும் அவசியமற்றவை என எப்போதுமே நான் நம்பி வருவதால் பாப்லோ நெரூடாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரின் துயரத்தின் காரணம் குறித்த விபரங்களை வலிந்து தவிர்த்துவிட்டு அவர் கவிதைகளை மட்டும் இங்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

காற்றில் கைவீசி நடப்பதைப்போல தடையின்றி நகரும் இந்தக் கவிதைகள் அனைத்துமே மிக நீண்ண்டதாய் அமைந்திருப்பது என் பணியை சிக்கலாக்கிய போதும்... இடுப்பிலிருந்து இறங்க மறுக்கும் குழந்தையாய் நினைவிலிருந்து நீங்காமல் அடம்பிடிக்கும் ஒரு சில வரிகளை இங்கு சொல்லிப்போவது சாத்தியம்.


"எவளும் உனக்கு நிகரில்லை
நீ என் காதலி என்பதனால்"


"அவள் இல்லை என்பதை நினைக்கும்போது, அவள்
இழப்பை நான் உணரும் போது
துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்"


"துயரத்தை நான் இழந்த பிறகு
எனக்கென நீ மட்டுமே இருக்கிறாய்"


அசாதாரண அர்த்தங்களைச் சுமந்த மிகச்சாதாரணமான இந்த வரிகளில் உண்மையில் நான் பிரமித்துப் போனேன்! அனைத்திற்கும் மேலாய்

"காதல் மிகச் சிறியது.. மறத்தல் மிக நெடியது"

என்ற வரி ஒரு கணம் உலுக்கிப்போனது மனதை!

மொழிபெயர்த்த சலபதியும்,

" Love is short. Forgetting is so long.' இதனை மொழிபெயர்ப்பது அசாத்தியமென்றே சொல்லிவிடலாம். கடைசியில், 'குறுந்தொகையில் பயிலும் 'உயிர் தவச் சிறிது, காமமோ பெரிதே' என்ற அமைப்பைத் தழுவி என் மொழி பெயர்ப்பை அமைத்துள்ளேன்"

எனச் சொல்லியிருந்ததைப் பார்க்கையில் சங்க இலக்கியங்கள் என்ன சமுத்திரங்களை உள்ளடக்கிய சிப்பிகளா என்று வியப்பு வந்தது!!

காதல், பிரிவு என்பன தவிர்த்த பிற கவிதைகளும் இருக்கின்றன.

"எலும்போ உமியோ
செதிளோ முள்ளோ அற்று
புதுமை பொலியும்
நிறங்களின் திருவிழா நமக்கு"

என்று நெரூடா சிலாகிப்பது தக்காளியைப் பார்த்து!!


'புத்தகத்திற்கு' என்று எழுதப்பட்டிருக்கும் விளிநிலைப் பாடல் வெகுவாய் ஆச்சரியப்படுத்தியது என்னை. புத்தகங்களை நேசிப்பதும் வெறுப்பதுமான இருவேறு மனநிலைகளைச் சுமந்திருக்கும் என்னை அக்கவிதை பிரதிபலிப்பதாய் உணர்ந்தேன்.

"புத்தகமே
உன்னை மூடுகையில்
நான் திறப்பது வாழ்க்கையை"


என்ற தொடக்க வரிகளை தாண்டிப்போகவே சில நிமிடங்கள் பிடித்தன!!


"இளம் பூச்சியைப் பிடிப்பதற்கு
நச்சு வலை விரிக்கும்
சிலந்தி நூல்களை
நான் வெறுக்கிறேன்
புத்தகமே
என்னை விட்டு விடு"




"உன் நூலகத்திற்கு நீ திரும்பிப்போ
நான் தெருவில் இறங்கப் போகிறேன்
வாழ்க்கையை நான்
வாழ்க்கையிலிருந்தே கற்றுக் கொண்டேன்
காதலை ஒரு முத்தத்திலிருந்து கற்றேன்"



உண்மை தான் இல்லயா? வாழ்க்கையை கற்றுக் கொள்ள அந்த வாழ்க்கையை விடவும் சிறந்த புத்தகம் வேறெதுவாக இருக்க முடியும்?
சில நேரங்களில் புத்தகங்களின் அணைப்பை எரிச்சலூட்டும் ஆக்கிரமிப்பாய்
உணர்ந்ததுண்டு என்பதால் இந்த நூலில் நான் மிக ரசித்த கவிதைகளில் இதுவும் ஒன்று. இதுவன்றி பெயர்களை பற்றி சிந்திக்க வைக்கும் 'எத்தனை பெயர்கள்' மற்றும் 'சொல்' 'கவிதை' 'நினைவு' ஆகிய கவிதைகளும் பிடித்தமானவையாய் இருந்தன. அறிமுகம் போதுமென நினைக்கிறேன்..

சோற்றுப்பதமாய் ஒரே ஒரு கவிதை மட்டும் உங்களுக்காக...

இந்த அந்திமாலையைக் கூட...

இந்த அந்திமாலையைக் கூட நாம் இழந்து விட்டோம்
துயர இரவு இவ்வுலகின்மீது கவிந்தபோது
நாம் கையோடு கைகோர்த்துச் சென்றதை
யாரும் பார்க்கவில்லை.

தொலைதூர மலைமுகடுகளில் அஸ்தமனத்
திருவிழாவைச்
சாளரத்தின் வழியே நான் பார்த்திருக்கிறேன்.

சில சமயங்களில் ஒரு துண்டுச் சூரியன்
என் கைகளுக்கிடையே ஒரு நாணயத்தைப்போல்
சுடர்விட்டது.

என் துயரத்தைப் பற்றித்தான் நீ அறிவாயே -
அது என்னை இறுகப் பற்றுகையில்
உன்னை நான் நினைத்துப் பார்த்தேன்.

அப்போது நீ எங்கே இருந்தாய்?
வேறு யார் உன்னோடிருந்தது?
அவன் என்ன சொன்னான்?

துயருறும் போதும், நீ எங்கோ இருக்கிறாய்
என உணரும்போதும்
காதல் என்னை ஏன் முழுமையாக ஆட்கொள்கிறது?

ஒவ்வொரு மாலையும் நான் படிக்கும்
புத்தகம் கீழே விழுந்தது.
அடிபட்ட நாயைப்போல் என் அங்கி
காலருகே சுருண்டு கிடந்தது.

சிலைகளை அழிக்க அந்தி எங்கே செல்கிறதோ
அங்கே நீ மாலைதோறும் மாலைதோறும் விலகிச்
சென்று கொண்டேயிருக்கிறாய்.


பிடித்திருந்தால் வாங்கிப் படித்துப் பாருங்கள்! அனேகமாய் துயர்மிகு வரிகளை நானும் கூட இன்றிரவு எழுதலாம்!! எப்போதுமே "சுகராகம் சோகம் தானே?" :)

Saturday, July 21, 2007

மலேசிய தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

மலேசியத் தோழி, அன்புத்தங்கை, ப.பா.சங்கத்தின் தானைத் தலைவி, பயமறியாப் பாவை மை ஃப்ரண்ட்டின் பிறந்த நாள் இன்று. வழக்கம் போல கவிதையில் மட்டுமாய் வாழ்த்திவிட்டுப் போக மனமில்லை. ஆடம்பர வார்த்தைகளால் வர்ணிப்பதை விடவும் இப்பெண்ணை நினைக்கையில் மனதில் தோன்றும் நெகிழ்வை எளிமையாய் உண்மையாய் இங்கே பதிவிட முடிவு செய்திருக்கிறேன்.

இந்த வலையுலக வாசலில் நிறைய தயக்கங்களோடு நான் வந்துநின்றபோது புன்னகை முகமாய் ஓடிவந்து விரல் பற்றி இழுத்துச்செல்லும் குட்டிப்பெண் போல அறிமுகமானவள் மை ஃப்ரண்ட்.

பாசக்கார குடும்பம், ப.பா சங்கம், தமிழ்மணம், கூகுள் ரீடர்என இந்த சுற்றுசூழலுக்கு ஏற்ப என்னை தகவமைத்துக் கொள்ள பெரிதும் உதவியவள். சற்றும் புரியாத கணினி குழப்பங்களை எனக்கும் கூட புரியும் விதத்தில் தெளிவித்தவள். இத்தனை அழகான உறவுகளை, கண்ணியமான நண்பர்களை என்னிடம் கொண்டுவந்து சேர்த்தவள்!

பிறகு என் பதிவர் வட்டம் பெரிதாக பெரிதாக பலரிடமும் இவளைப் பற்றி பேச நேர்ந்தது.

"மைஃப்ரண்டா? ரொம்ப நல்ல பொண்ணு.. டூருக்காக மலேசியா பத்தி ஒரு முறை விசாரிச்சப்போ ரொம்ப பொறுப்பா பதில் சொன்னா" என்றார் அய்யனார்.

"மை ஃப்ரண்ட் என் பாசமலராச்சே.. அடிக்கடி போன் பண்ணும்"என்றார் அபிஅப்பா.

"அவ காலேஜ் படிக்கும் போது தூங்கவே மாட்டாங்க.. எப்பவும் ஆன்லைன்ல தான்இருப்பா.. உங்க லேடி கைப்புள்ள!" என்று லேசாய் பெருமையுடன் கிண்டலடித்தார் ராயல் ராம்.

"நான் 5 பேருக்கு 5 கேட்டகிரில அவார்டு குடுக்கனும்.. அதுக்கு பதிலா 5 யும் மைஃப்ரண்ட்க்கே குடுத்துடலாம்னு இருக்கேன்.. அவங்க ரொம்ப ஜாலி டைப்.. ரொம்ப நாள் பழகின மாதிரி பேசுவாங்க"என்று புகழ் பாடினாள் ஜி3.

"மை ஃப்ரண்டா? அது கொலைவெறியோட பின்னூட்டம் போடும்... தூக்கமே வராதுஅவளுக்கு" - செல்லமாய் கடிந்து கொண்டார் கோபிநாத்.

"மீ த ஃப்ர்ஸ்ட்னு பின்னூட்டம் போட்டுட்டு உடனே போய்ட மாட்டா,படிச்சு பாத்து அடுத்த பின்னூட்டம் சரியா போடுவா" என்று பாராட்டினார் கண்மணி அக்கா.

இத்தனைக்கிடையில் வெகு நாட்களாய் பொண்ணைக் காணவில்லை.. மறந்துவிட்டாளோ என்று நினைத்துக் கொண்டிருக்கையில் திடீரென என் பிறந்த நாள் அன்று போனில், மெசேஜில், பதிவில், பின்னூட்டத்தில், ஜிடாக்கில் என்று கிடைத்த வழியில் எல்லாம் வாழ்த்தி அசத்தினாள். முகமறியாத பந்தங்களில் சொந்த தங்கையென அமைந்து விட்ட இப்பெண்ணின் அன்பை எந்த வழியில் திருப்பிச் செலுத்த?

இறைவா! இந்த பிறந்தநாள் உலகின் எல்லா திசைகளிலிருந்தும் மகிழ்ச்சியை சேகரித்து அவள் இல்லத்திலும் உள்ளத்திலும் கொண்டு சேர்க்கட்டும்!

இனி வரும் நாட்கள் அனைத்தும் மிக இனியனவாய் அமையட்டும்!!

அவளின் கனவுகள் நனவாக, ஆசைகள் நிறைவேற, எதிர்காலம் சிறப்பாக இதயம் கனிந்து வாழ்த்துகிறேன்!!!



எங்கள் செல்லம்...

Thursday, July 19, 2007

துயர்களின் நீட்சி



உள்ளங்கையில் அள்ளிய நீராய்
வடிந்து போகின்றன
உன்னைத்
தக்கவைத்துக் கொள்வதற்கான
அத்தனை முயற்சிகளும்...

கானல் என்றும்
கவர்ச்சி என்றும்
விழிப்பின் விளிம்பில்
தோன்றி மறைந்த கனவென்றும்
ஆறுதல் மொழிகளை
அருகழைத்துக் கொண்டபின்பும்
மனதின் சுவர்களில்
பிசுபிசுப்பாய் படிகிறது
ஏமாற்றத்தின் சாயல்.

பிடிவிலகிய அதிர்வில்
பற்றிகொள்ள கரம்தேடி
இருப்புகொள்ளாதலைகிறது
கைவிடப்பட்ட காதலொன்று...

நம்பிக்கைகள் நீர்த்துப்போகையில்
அர்த்தமிழந்து போகின்றன
காதலும்
எல்லாக் கர்மங்களும்.

Wednesday, July 11, 2007

கொலை

முடிவற்று நீளும் இரவொன்றில்
கணங்களின் பிரக்ஞையற்று
மெளனமாய் அமர்ந்திருக்கிறேன்...

கண்ணெதிரே சுவற்றில்
படபடத்துத்
துடித்து
நிலைகொள்ளத் தவித்து
இருப்பிற்காய் போராடி
முடிவில்
சடலமாய்ச் சரிகிறது நாட்காட்டி...

திட்டமிட்டு கொலையொன்றைச்
செய்துமுடித்த திருப்தியோடு
திரும்பிப் போகிறது
காற்றும்..
உன் நினைவும்!

Monday, July 9, 2007

பொருளற்றுப் போகும் நேசங்கள்

நேற்றைய முன்னிரவில்
பிழையின் சாயலில் நிகழ்ந்துவிட்ட
நிகழ்வொன்று...

இரவெல்லாம்
இருளின் கருமையள்ளி
முகத்தில் பூசிக்கொண்டு
வன்மம் தின்று வயிறு பெருத்து
திசைகள் எங்கும்
வெறுப்பின் வேர் பரப்பி
சுட்டு விரல் நீட்டிக்
குற்றம் சாட்டுகிறது காலையில்...

அடிபட்ட சீற்றம் மறைத்து
வெறி மிகுத்து வேட்டையாடி
குருதிசிந்தக் கொன்று தின்ற பின்னால்
சிவந்த பற்களில் சிக்கியிருக்கின்றன
நேசத்தின் துணுக்குகள்...

சொல்லிவிட முடியாத வலியொன்று
செல்லுமிடமெல்லாம் தொடர்கிறது...

இருக்கட்டும்..

மண்டியிடுதல்களும்
சரணடைதல்களும்
ஒருபோதும்
புரிதல்களைத் தருவதில்லை.

Sunday, July 8, 2007

நன்றியதலின் நெகிழ்வில்...




வருடாவருடம்
வந்து போகும் என் நாள்
வழக்கத்திற்கு மாறாய்
பிரம்மிப்பின் வாசலில்
இழுத்து நிறுத்தியிருக்கிறது
என்னை!

நேற்றைய நள்ளிரவில்..

இதுவரை நானறிந்திராத
திசைகளினின்று நீண்டு...

கதகதப்பாய்
என் விரல் கோர்த்த கரங்கள்...

கைகுலுக்கிய தோழமைகள்...

இதம் நிறைத்த
தலைகோதல்கள் எல்லாம்..

என் இருப்பை முழுதாய்
அர்த்தப்படுத்திப் போயிருக்கின்றன!

துக்கத்தில் தூக்கம் தொலைத்த
இரவுகள் உண்டு...
மிதமிஞ்சிய மகிழ்வும்
உறங்க விடாதென்ற உண்மை
விளங்குகிறது இப்போது..

வாழ்த்துச் சுமந்து வந்த
வார்த்தைகள் எல்லாம்
பூக்களாய் மலர்ந்து
மணம் பரப்புகின்றன மனதிற்குள்...

திக்கெங்கிலும்
நிரம்பி வழியும் அன்பினை
சேர்த்தெடுக்கத் தவிக்கிறேன்...

இதயம் மலர்ந்து...
கண்கள் பனிக்க...

'என்றும் என்னோடிருங்களெ'ன
வேண்டுவதைத் தவிர்த்து
வேறொன்றும்
சொல்லத் தோன்றவில்லை
இப்போது!






வியப்பாயிருக்கிறது! 2 மாதங்கள் முன்பு வரை நானும் தனிமையும் மட்டுமாய் நிரப்பியிருந்த என் நாட்கள் இப்போது எல்லைகள் கடந்த தொடர்புகளோடு கண்முன் விஸ்வரூபமாய் விரிகின்றன. இத்தனை வருடங்களில் எந்தப் பிறந்தநாளும் இப்படி வாழ்த்துக்களால் நிரம்பி வழிந்ததாய் நினைவிலில்லை!
இவ்வளவு அன்பும் எனக்கே எனக்கா என்ற திகைப்பு மேலிட பூரிப்பில் திளைத்திருக்கிறேன்.

இரவு 8 மணியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை போனில் வாழ்த்திக்கொண்டேயிருந்த அபி அப்பா மிகச்சரியாய் இரவு 12 மணிக்கு... வழக்கம் போல தூங்கிப்போனார்!!

கிண்டலும் கேலியுமாய் 'கவுஜ' எழுதி சங்கம் மூலம் வாழ்த்திய பாசமிகு அண்ணன் இளா மிகச்சரியாய் நிமிடங்களை.. நொடிகளைக் கணக்கிட்டு துல்லியமாய் நாளின் துவக்கத்தில் வாழ்த்தி திகைக்க வைத்தார்.

தனக்கே உரிய பாணியில்... நையாண்டியின் நடுவில் நட்பை ஒளித்து வைத்து அழகிய பதிவை பரிசளித்ததும்இல்லாமல்... போனிலும் வாழ்த்தினார் நண்பர் குசும்பன்!

இதுவரை சாட்டில் கூட பேசியிராத அன்புத்தங்கை மைஃப்ரண்ட் போனிலும் சாட்டிலுமாய் திரும்பத் திரும்ப வாழ்த்திக் கொண்டேயிருந்தாள்.

உடன்பிறப்பென பதிவில் வாழ்த்தி என்னையும் பிசாசு ஆக்கியிருக்கிறது குட்டிப்பிசாசு!

நடுநிசியில் குறுந்தகவல் அனுப்பி விடியும் வரை யாராயிருக்குமென யோசிக்க வைத்து அதிகாலையில் உற்சாகம் மிகுத்து பாசமாய் வாழ்த்தினாள் ஜி3.

இளந்தல ராயல் ராமின் வாழ்த்து வித்தியாசமாய் (!?) மறக்க முடியாததாயிருந்தது.

சொந்த ஊருக்கு போயிருக்கும் ஜி நியாபகமாய் வாழ்த்தியது வியப்பு!

இன்னும் அய்யனார், தம்பி, கோபி, கண்மணி அக்கா, துர்கா செல்லம், மின்னல் ..... மற்றும் வாழ்த்துச் சொன்ன சொந்தங்கள் அனைத்திற்கும் இங்கு என் அன்பைச் சொல்லிக் கொள்கிறேன். நன்றியிலும் நெகிழ்விலும் நிறைந்திருக்கிறேன்.. இன்று மீண்டும் புதிதாய்ப் பிறந்திருக்கிறேன்!!



நிறைவாய் மீண்டும்...


நன்றி! நன்றி! நன்றி!

Saturday, July 7, 2007

உன் ஆளுமையின் பரப்பில்....



ஆழிப்பேரலையாய்
வாரிச் சுருட்டி
இழுத்துக் கொள்கிறாய்
என்னை!

உன் அன்பின் பரப்பிற்குள்
நுழைகையில் எல்லாம்

விதிர்விதிர்த்து நிற்றலும்...
கால்கள் தளர
செயலற்று அமர்தலும்...
கைகள் குறுக்கிச்
சுருண்டு படுத்தலுமே
வாடிக்கையாகி விட்டது.

சந்திக்கும் போதெல்லாம்
சிந்திப்போகிறாய் காதலை...

இன்றாவது விட்டுப் போ
உன்னிடம் கோபிப்பதற்கான
ஓரிரு தவறுகளை!

Monday, July 2, 2007

சலிப்பூட்டும் எல்லைகள்...




தேவைகள் தீர்ந்த வேளையில்
முன்னெப்போதோ
தேடப்பட்டவைகள் கிடைக்கின்றன!

இறுக மூடிய உள்ளங்கையாய்
திகைப்பூட்டுகிறது வாழ்க்கை
அவிழ்க்கப்படாத முடிச்சுகளுடன்...

நிராசைகளால் நிரம்பிய
மனதின் அறை ஒன்று
திறக்கப்படாமலே இருக்கிறது
வெகுநாட்களாய்...

கரைமீறல்களை அறிந்திராத
குளமாய் இருக்கிறேன்

சலனப்படுத்திய கற்களையெல்லாம்
ஆழத்தில் பாதுகாத்தபடி!

Sunday, July 1, 2007

உன்னைப் பின் தொடர்தல்!

இருவேறு துருவங்களில்
இயங்குகிறது நம் உலகம்..

முரண்பாடுகளுக்கிடையே
முகிழ்த்திருக்கின்றன
நம் பிரியங்கள்
கள்ளிப் பூக்களாய்...

கடந்துவிட முடியாத
எல்லைகளை எல்லாம்
எளிதாய்த் தகர்த்தெறிகின்றன
நினைவுகள்...

என் சொற்களுக்கு
எதிர்ப்பதமாய் இருப்பதையே
வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறாய் நீ!

அதனாலென்ன?

உயிர்த்தலுக்கான அத்தியாவசியக்
காரணங்களுள் ஒன்றாய்
நீ இருக்கும்வரையில்...

வாழ்க்கை சலித்து விடாது எனக்கு!