Saturday, April 28, 2007

பாலைத்திணை

பிரிவிற்கு பாலையென்று
திணை வகுத்தவன்
உண்மையில்
பேரறிஞனாய் இருக்க வேண்டும்

நீ இல்லாத போது
எனக்கு எந்த இடமும்
பாலையாகத் தான் தோன்றுகிறது

உள்ளும் புறமும்
வெப்பக்காற்றாய் சுழலும்
உன் நினைவுகள்

கண்களில் விழுந்த மணலாய்
உள்ளத்தில் உறுத்தலாய்
உன் உருவம்

அவ்வப்போது கானலாய்
தோன்றி மறையும்
உன் புன்னகை

எங்கேனும் உன்னைச்
சந்திக்க நேரும்போது
உதடுகள் உலர்ந்து...
நா வறண்டு..
வார்த்தைகளுக்காய் தவிக்கையில்...

நிச்சயமாய்த் தோன்றுகிறது
பாலை இத்தனை கொடுமையாய்
இருக்காது என்று!


அரங்கேற்றம்
நிகழும் சர்வஜித் ஆண்டு சித்திரை 15 ம் நாளாகிய இந்த சுபயோக சுப தினத்தில் என் முதல் வலைப் பதிவை துவங்கியிருக்கிறேன். வலைப் பதிவுகளின் எண்ணிக்கை, அதில் இடம்பெற்றுள்ள வீரியமான.. விவேகமான.. விவகாரமான.. மற்றும் விளையாட்டான பதிவுகள் பிரம்ம்ம்மிக்க வைக்கின்றன. 'இத் தரை கொய்யாப் பிஞ்சு.. அதில் நீயும் ஓர் சிற்றெறும்பே' - பாரதிதாசன் காதில் ஒலிக்கிறார்.


"இத்தனை ஜாம்பவான்கள் இருக்குமிடத்தில் நீ எப்படி உன்னை அடையாளம் காட்டிக் கொள்ளப் போகிறாயோ தெரியவில்லை!" - உள்ளிருந்து ஒரு காயத்ரி முணுமுணுக்கிறாள். அதனால் என்ன? எல்லா நதிகளும் ஊற்றாகத்தான் தோன்றுகின்றன... எல்லா மேதைகளும் குழந்தையாகத்தான் பிறக்கின்றனர்.!! கண்கள் மற்றும் கற்பனையின் சக்திக்கு அப்பாற்பட்டு பரந்து விரிந்திருக்கும் இந்த வானத்தில் நானும் ஓர் நட்சத்திரமாய் மின்ன வந்திருக்கிறேன். நட்சத்திரங்களை எண்ணும் எந்தக் குழந்தையாவது என்னை அதன் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளாமலா போய் விடும்? நம்பிக்கையுடன் துவங்குகிறேன்!!


சரி.. எதற்காக பாலைத்திணை? 'பிரிவு' - மிகச் சிறிய ஆனால் மிகவும் கனமான சொல்லாக இதுவரை அறியப்பட்டு வந்திருக்கிறது. காதலோ, நட்போ, உறவோ உண்மையான நேசம் எந்த ரூபத்தில் இருந்தாலும் அதில் பிரிவு என்பது மற்றுமோர் மரணத்திற்கு சமம். நானும் பிரிந்திருக்கிறேன்.. 'உயிர் பிரியும் நேரத்தைக் காட்டிலும் உறவு பிரியும் நேரம் கொடுமையானது' என்பதை அனுபவ பூர்வமாய் உணர்ந்திருக்கிறேன். அருகிலிருந்த நட்பு அன்னியமாய் விலகுவதை கண்ணில் வலியோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன். காலம் காயங்களை ஆற்றி விட்டு தழும்பை மட்டும் விட்டுச் சென்றிருக்கிறது. " வெறும் நட்பிற்கா இந்த புலம்பல்?" என்று கேட்கும் மஞ்சள் காமாலைக்காரர்கள்... மன்னிக்கவும்.. நீங்கள் இதைப் படிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்.


இது.. ஒரு பட்டுப்புழு பட்டாம்பூச்சி ஆவதற்கான முயற்சி... நீங்கள் கை தட்டலாம்.. தலையிலும் குட்டலாம்.. இரண்டிலும் நான் வளர்வேன்.


நட்புடன்...

காயத்ரி