Monday, November 5, 2012

கனாக் காணும் காலங்கள்

என் உறக்கம் எப்போதும் கனவுகள் நிறைந்தது. நல்லதோ அல்லதோ.. கனவுகள் இல்லாமல் தூங்கிய நாட்கள் மிகக் குறைவு. பெரும்பாலும் அம்மா தான் சிக்கிக் கொள்வார்கள். கனவு மறக்கும் முன்பாக சொல்லியே ஆக வேண்டுமென்று அடம்பிடித்து உட்கார வைத்து விலாவரியாய் மொத்தக் கனவையும் விவரிப்பேன். இடையில் எப்போதாவது அவர்கள் வேகமாக கண் சிமிட்டினாலோ பார்வை வேறு பக்கம் சென்றாலோ கவனம் குறைகிறது என்று கண்டுபிடித்து விடுவேன். "இப்ப வேற என்னமோ யோசிச்சீங்க தான? பொய் சொல்லாதீங்க.. அப்டின்னா நான் கடைசியா என்ன சொன்னேன்? சொல்லுங்க.. " என்று வம்படியாய் டார்ச்சர் செய்வேன். திருமணத்திற்கு பிறகு அந்த இடத்தில் சித்து. பொறுமையாய் கேட்டு முடித்து விட்டு (வேற வழி?)  "எப்டி இவ்ளோ நியாபகம் வெச்சிருந்து சொல்ற? எனக்கெல்லாம் கனவே வர மாட்டிங்குதே" என்று ஆச்சரியப்படுவார். பெரும்பாலும் காட்சிச் சிதறல்களாய் குழப்பங்கள் நிறைந்த கனவுகள் தான் வரும். எப்போதாவது, கனவு காண்கிறோம் என்ற பிரக்ஞையோடேயே விழித்துக் கொள்ள விரும்பாத இனிமையான கனவுகள் வாய்க்கும். எனினும்.. மனதில் அதிகம் பதிந்திருப்பவை துர்கனவுகளே. பாம்புகள், நெருங்கிய உறவினர் மரணம், அறையில் தீ, அமானுஷ்ய துரத்தல்கள், உயரத்திலிருந்து விழுதல், போன்ற வழக்கமான துர்கனவுகளுக்கு அடிக்கடி மிரண்டு எழுந்து இருக்கிறேன்..  அழுதுமிருக்கிறேன். நாள் முழுக்க அசதியையும் மனச்சோர்வையும் கொடுத்த கனவுகளும் உண்டு.

நேற்றும் ஏதோவொரு கெட்ட கனவுடனேயே விடிந்தது.  சிவந்த ஈறுகள் தெரிய, வாயில் எச்சில் ஒழுகும் வெறிநாய்கள் சூழ்ந்து கொண்டது போலவும், கருப்பு நாயொன்று பாய்ந்து கையில் கடித்ததுமில்லாமல் கோபமாய் எந்த மொழியிலோ திட்டியது போலவும் கனவு வந்தது. கடிபட்ட இடத்தில் இரத்தத்திற்கு பதிலாய் வெண்நுரை பொங்கி வழிந்து கொண்டேயிருந்தது. கண் விழித்தபோது பயம் திரண்டு கனத்த துக்கமாக மாறி அழுத்தமாய் தொண்டைக் குழியை அடைத்துக் கொண்டு நின்றது. வாய் விட்டு அழ வேண்டும் போலிருந்தது. அழுதால் நிச்சயம் இது கரைந்து விடும் என்று நினைத்துக் கொண்டே அமைதியாய் கண்ணீர் விட்டபடி படுத்திருந்தேன். திடீரென்று அம்மு சத்தமாய் அழுது கொண்டே எழுந்து நின்றாள். என் துக்கம் போன இடம் தெரியவில்லை. கண்ணீரை அவசரமாய் துடைத்துக் கொண்டு.. "என்னடா? என்ன செல்லம் ஆச்சு? எதுக்கு அழறே?" என்று சமாதானப்படுத்த முயற்சித்தேன். "அம்மா நானா பாப்பாவை விட்டுட்டே போய்ட்டாங்க.. அம்மாவும் நானாவும் பாப்பாவை விட்டுட்டே பைக்ல போய்ட்டாங்க" என்று ஓயாமல் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டும் விம்மி விம்மி அழுது கொண்டுமிருந்தாள். "எங்கயும் போகலடா.. இங்க பாரு ரெண்டு பேரும் உன் பக்கத்துல தான் இருக்கோம்.. அழக் கூடாது.. இது வெறும் கனவு. கனவுக்கு போய் யாராச்சும் அழுவாங்களா? அழாத செல்லம்.. அம்மா இருக்கேன்.. உன் கூடவே தான் இருப்பேன்..  தூங்குடா தங்கம்..தூங்கும்மா" என்று அவளை தட்டிக் கொடுத்தபோது அதுவரை சிறுமியாய் அழுது கொண்டிருந்த காயத்ரி திகைத்து என்னைப் பார்த்துத் திருதிருவென விழித்தாள். லேசாய் புன்னகைத்து "உனக்கும் சேர்த்து தான் சொன்னேன்.. நான் இருக்கேன்..படுத்துக்கோ.. தூங்கு" என்று அவளையும் தட்டிக் கொடுத்து தூங்க வைத்து விட்டு தைரியமான அம்மாவாய்  நானும் தூங்க ஆரம்பித்தேன். 

இந்த மாதம் தான் கவனிக்கிறேன்.. அமுதினிக்கும் அடிக்கடி கனவுகள் வருகிறது. என்னைப் போலவே எழுந்ததும் அதை சொல்லவும் ஆரம்பித்திருக்கிறாள். என்னைப் போலவே பெரும்பாலும் மிரண்டு அழுது கொண்டு தான் எழுகிறாள். முதல் முறை தூக்கத்திலிருந்து எழுந்து தேம்பிக் கொண்டே "அம்மா.. அழுதாங்க.. அம்மா அழுதாங்க..அம்மா பாத்து பாப்பாவும் அழறா" என்றே சொல்லிக் கொண்டிருந்தாள். "இல்லடா.. செல்லம்.. அம்மா அழவே இல்ல. இங்க பாரு.. எப்டி சிரிக்கறேன் பாரு" என்று சிரித்து சிரித்து சமாதானப்படுத்தினேன்.  என்னைப் போல் கனவை காலையில் சொல்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் நியாபகம் வைத்திருந்து நாள் முழுக்க அடிக்கடி மறுஒலிபரப்பு செய்வதை இவள் வழக்கமாகக் கொண்டிருப்பதால் அன்று நாள் முழுவதும் நான் அடிக்கடி அவளுக்கு சிரித்துக் காட்ட வேண்டியிருந்தது. :)  மற்றொரு முறை பெரிய பூச்சியொன்று தன்னைப் பிடிக்க வந்ததாக சொல்லி அழுதாள். அன்று அந்த பயத்தைப் போக்குவதற்காக யூடியூபில் விதவிதமான பூச்சி வகையறாக்களைப் பார்க்க வைத்தேன். தற்செயலாய் வீட்டில் தென்பட்ட குட்டி கரப்பான்பூச்சியொன்றை கண்ணாடி கிண்ணத்தால் மூடி சிறைபிடித்து நாள் முழுக்க வெளியிலிருந்து தைரியமாய் வேடிக்கை பார்த்தோம். இப்போதெல்லாம் பூச்சியென்றால் அம்முவிற்கு பயமே இல்லை. கனவிலோ நேரிலோ பூச்சியை சந்திக்க நேர்ந்தால் "போ பூச்சி" என்று கோபமாக திட்டி விரட்டப் போவதாக சொல்லியிருக்கிறாள். குளியலறை மூலையில் ஒட்டியிருக்கும் சிறிய குப்பையை பூச்சியென்று நினைத்துக் கொண்டு உள்ளே நுழையும் போதெல்லாம் "போ பூச்சி.. பாப்பா சொல்றேனில்ல?" என்று 2 நாட்களாய் மிரட்டிக் கொண்டிருக்கிறாள். :)  

முதல்நாள் பள்ளிக்கு சென்று வந்த பிறகு, மூன்றாவது நாள் காலை திடீரென வீறிட்டு அலறி எழுந்தாள்.. தொடர்ந்து நிற்காத அழுகை. வெகு நேரம் விசாரித்தும் பதில் சொல்லாமல் அழுது கொண்டேயிருந்தாள். கொஞ்சம் கழித்து சமாதானமானது போல் இருக்கிறாளே என்று  "என்னடா குட்டி? கனவு கண்டியா? ஏன் அழுத?" என்று கேட்டதும் திரும்பவும் அழ ஆரம்பித்தாள். பின் திக்கித் திக்கி தழுதழுத்தபடியே.. "அண்ணால்லாம்.. அட்ச்சி.. பாப்பா அழுதா" என்று ஆரம்பித்து முடிப்பதற்குள்ளாகவே 'ஓ' ந்னு கத்தி அழ ஆரம்பித்தாள். நான் கலங்கிப் போனேன். பள்ளி குறித்த பயத்தில் தான் அழுகிறாளோ.. அங்கிருந்த பையன்கள் அவளை அடிப்பது போல கனவு கண்டிருப்பாளோ.. இந்த அளவிற்கா அவளின் பிஞ்சு மனம் பாதிக்கப்பட்டிருக்கிறது?..  அவளுக்கு இந்த பள்ளி பிடிக்கவில்லையா?.. சுத்தமாய் பிடிக்காமலேயே போய்விட்டால் என்ன செய்வது?.. இல்லாவிட்டால் இப்போதே வேறு பள்ளிக்கு மாற்றி விடலாமா? என்றெல்லாம் கன்னாபின்னாவென்று சிந்தித்தபடியே குரலில் பரிவு பொங்கி வழிய "அண்ணால்லாம் பாப்பாவை அடிச்சிட்டாங்களா கண்ணு?" என்றேன். அவள் அழுகையை சற்று நிறுத்தி "இல்ல.. பாப்பா தான் அண்ணாவையெல்லாம் அடிச்சா.." என்று சொல்லிவிட்டு திரும்ப அழுகையைத் தொடர்ந்தாள். ஙே!! என்றாகிவிட்டது எனக்கு. எதற்கும் இன்னொரு முறை தெளிவுபடுத்திக் கொள்ளலாமென்று "அண்ணாவையெல்லாம் நீயே அடிச்சிட்டு நீயே அழுதியா கண்ணு?" என்று கேட்டதற்கு.. "ம்ம்ம்ம்ம்ம்" என்று ராகமிழுத்துவிட்டு கர்மசிரத்தையாய் மீண்டும் அழ ஆரம்பித்தாள். :)))

இன்று காலையிலும்,  "பாப்பா மேல இருந்து கீழ விழப் போய்ட்டா" என்று அழுது கொண்டே எழுந்தாள். "எது மேல இருந்து விழுந்த? எதைப் பார்த்தாலும் மேல ஏறி ஏறி நிக்காத.. டமால்னு விழுந்துடுவ.. அடிபட்டுடும்ன்னு சொன்னா கேட்டா தான?" என்று பொய்யாக அதட்டினேன். உடனே உதடுகள் பிதுங்க, கன்னங்கள் அழுகையில் உப்பிக் கொண்டன. "சரி.. சரி அழாதடா... எது மேல ஏறி விழுந்த? சொல்லு" என்றதும் "அதா அந்த சூரியன் இருக்கில்ல? அங்க இருந்து தான்" என்று ஜன்னலைக் காட்டி பதில் சொன்னாள்! 

Tuesday, October 23, 2012

நசை பெரிதுடைமை


சித்துவிற்கு உயரம் என்றால் பயம். இப்படி நான் சொல்லும் போதெல்லாம் சித்து அருகிருந்தால் உடனே ஆட்சேபிப்பார். "எனக்கு உயரமென்றால் பயமில்லை. ஆழமென்றால் தான் பயம்" என்பார். அந்த  பதில் ஒவ்வொரு முறையும் என்னை ரசனையாய் புன்னகைக்க வைக்கும். உணர்வுகளிலும் கூட இப்படித் தான். அவருக்கு உயர, ஆழங்கள் மிக அரிது. நானோ இவ்விரண்டு புள்ளிகளுக்கிடையில் பயணிப்பதையே தன்னியல்பாய்க் கொண்டவள். சமதளங்கள், புது முகங்கள், பொது இடங்கள், உயர் ஆளுமைகள், ஆரவாரமிக்க சபைகள், சவ்வூடு பரவும் பார்வைகள், பேச்சினை கலையாக அல்லது தொழிலாகக் கருதும் உதடுகள், கணக்குகள், புதிர்கள், அலர், அறிவினா, அரட்டை ஆகியவற்றிலிருந்தெல்லாம் எப்போதும் ஒதுங்கியிருக்கவே விழைவேன். 3 வயதில் முதன் முதலாக பள்ளிக்கு அனுப்பிய போது என்னை விடவும் அம்மா தான் மிகவும் சோர்ந்து போனார்கள். ஓயாத அழுகையில் தொடங்கி, வயிறு வலி, காது வலி, பல் வலி என்றெல்லாம் பொய் சொல்லி அழுது அம்மாவை வரவழைப்பது, இடைவேளை நேரத்தில் தப்பித்து பக்கத்தில் எதாவது கடையில் உக்கார்ந்து கொண்டிருந்து விட்டு பள்ளி முடிந்ததும் போய் பையை எடுத்துக் கொண்டு நல்ல பிள்ளையாய் வீட்டுக்குப் போவது என்று வயது ஏற ஏற என் தப்பித்தலியலும் (எஸ்கேபிசம்?) வளர்ந்து கொண்டிருந்தது. கல்லூரியில் இரண்டாம் வருடம் முதல் நாளன்று அம்மா வகுப்பறை வரை வந்து உள்ளே அனுப்பி விட்டுப் போகுமளவிற்கு அது என்னுள் வேரூன்றியிருந்தது. புகுந்த வீட்டிலும் கூட இந்த குணத்தால் சில சிரமங்கள் இருக்கவே செய்தன. என் பலமென்று நானும் பலவீனமென்று சித்துவும் கருதும் இக்குணாம்சம் அமுதினியிடமும் பிரதிபலிப்பதில் இருவருக்குமே உடன்பாடில்லை தான்,என்றாலும் அவளும் இன்று வரையில் இப்படியான கவலைகளுக்கு இடமளித்ததில்லை. இன்று வரையில்.... :)

அம்முவிற்கு இப்போது இரண்டரை வயதாகிறது. வீட்டைத் தூக்கி ஒரு டப்பாவில் போட்டு குலுக்கி தலைகீழாய் கொட்டுவதற்கு ஈடாய் குறும்புகள் செய்வாள். அவளை வைத்துக் கொண்டு எந்தவொரு வேலையையும் என்னால் செய்துவிட முடியாது. அவள் தூங்கும் நேரம் சமைத்தால் தான் உண்டு. இல்லாவிட்டால் ஹோம் டெலிவரிக்கு தொலைபேச வேண்டியிருக்கும். எப்போதும் என் அருகில் அல்லது மடியில் தான் இருப்பாள். தினமும் இரவு 12 மணிக்கோ 1 மணிக்கோ தூங்குவது. காலையில் 10 மணிக்கு விழிப்பது.. இடைப்பட்ட நேரம் முழுக்க குறும்புகள் செய்வது என்ற அவளது வாழ்க்கை முறையை ஒழுங்குபடுத்த வேண்டி, கடந்த ஒரு மாத காலமாக அவளை பள்ளியில் சேர்ப்பது குறித்த தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியிருந்தோம். அமெரிக்க, இங்கிலாந்து, இந்திய கல்வி முறைகளில் எந்த கல்வித் திட்டத்தைத்  தேர்ந்தெடுப்படுப்பது என்று  திசையறியாது நீண்ட எங்கள் குழப்பம், வெகு நாட்கள் நீடித்து 'மாண்டிசோரி கல்வி' என்ற முனையில் நின்று, 'ப' திருப்பமெடுத்து 'எந்த மாண்டிசோரி பள்ளி?' என்ற திசையில் மீண்டும் நீளத் தொடங்கியது. நல்ல பள்ளி எந்த திசையில், எத்தனை தூரத்திலிருந்தாலும் அங்கேயே வீட்டையும் மாற்றிக் கொள்வது என்ற முடிவோடு அலைந்து திரிந்தோம். பெரிய பள்ளிகள் அனைத்திலும் மாணவர் சேர்க்கை ஆகஸ்டிலேயே முடிந்து விட்டதாக கை விரித்தார்கள். தொடர்ந்து அலைந்ததில் ஒரு வழியாக வீட்டிலிருந்து நடந்து செல்லும் தொலைவுக்குள் சின்னஞ்சிறிய மாண்டிசோரி பள்ளி ஒன்று வாய்த்தது. வெறும் இருபதே குழந்தைகள். அனைத்தும் சின்னஞ்சிறிய இந்திய முகங்கள். வரும் மார்ச் மாதம் வேறு பள்ளியில் இடம் கிடைக்கும் வரை தற்காலிகமாக இங்கே அனுப்பலாம் என்று முடிவெடுத்தோம். பணம் செலுத்தி, ஆசிரியர்களிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பும் வரை அம்மு மெய்மறந்து விளையாடிக் கொண்டிருந்தாள். வலுக்கட்டாயமாகப் பிடித்து தூக்கி வந்து காரில் ஏறியதுமே "எவ்ளோ பொம்மை.. என்ன விடு, நான் ஸ்கூலுக்குப் போறேன்" என்று திமிறினாள். வெகு சந்தோஷமாய் இருந்தது. மிகப் பிடித்த பாடலைப் போல அந்த வார்த்தைகள் மனதிற்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தன.

இன்று அவளை முதன்முதலாய் பள்ளிக்கு அனுப்பும் நாள். எத்தனை முயன்றும் நேற்று இரவு முழுவதும் ஆழ்ந்த உறக்கம் வாய்க்கவே இல்லை. கடந்த இரண்டரை வருடத்தில் முதன் முறையாக இரவு எட்டு மணிக்கெல்லாம் உறங்கப் போய் விட்டோம். திடுமென விழிப்பு வந்ததும்.. விடிஞ்சிடுச்சோ என்று பதறி எழுந்து மணி பார்த்தால் இரவு 10 மணி தான் ஆகியிருந்தது. :) எங்கோ யார் பொறுப்பிலோ குழந்தையைத் தனியாக விடப் போகிறோமே என்ற கவலையை விடவும் அவள் அருகில்லாத 4 நான்கு மணி நேரங்களை எப்படி தனியாக கழிக்கப் போகிறேன் என்ற கவலையே ஆட்டிப் படைத்தது. காலையில் 6 மணிக்கெல்லாம் குழந்தை விழித்து விட்டாள். பள்ளிக்குப் போவது குறித்த அதீத உற்சாகத்திலிருந்தாள். புதுப் பட்டுப் பாவாடையும், ஒற்றைச் சிண்டும், முல்லைச்சரமுமாக ஜொலித்தாள். சாமிப் படங்களின் முன்னால் சித்துவின் மடியில் அமர்ந்து அரிசியில் "அ" எழுதினாள். தொலைபேசியில் தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என உறவினர்களிடமும் ஜெ.மோவிடமும் ஆசி பெற்றாள். எல்லாமும் வெகு சுலபமாக, சுபமாக நடக்கிறதே என்று நினைத்துக் கொண்டே சென்று அவளை பள்ளியில் சேர்ப்பித்து சிறிது நேரம் உடனிருந்து விட்டு அவளறியாமல் நகர்ந்தோம். முதலில் சித்து அலுவலகத்திற்கு கிளம்பினார். அடுத்த 10 நிமிடங்களில் நானும் வெளியில் வந்து நடக்கத் தொடங்கினேன். வீடு பயமுறுத்தியது. ஒற்றை படுக்கையறை கொண்ட சிறிய வீடு… நினைவில் எவருமற்ற மிகப் பரந்த மைதானமாக விரிந்து கொண்டே போனது. அந்த வெறுமையை சந்திக்காமல் எப்படி தப்பிக்க? 4 மணி நேரங்களை கண்ணீரில்லாமல் எப்படிக் கடக்க? அலுவலகம் சென்று கொண்டிருந்தவரிடம் தொலைபேசியில் தழுதழுத்தபடியே நடந்தவள், வழியில் தேவையே இல்லாமல் ஒரு கடைக்குள் நுழைந்து எதுவுமே வாங்காமல் சுற்றிச் சுற்றி வந்து விட்டு குழந்தைக்குப் பிடித்த சிலவற்றை மட்டும் வாங்கிக் கொண்டு வெளியில் வந்தேன்.  வாசலருகே சித்து காரில் காத்துக் கொண்டிருந்தார்! மனதில் உறைந்திருந்த பாரம்  முழுவதும் உருகி கண்ணீராய் வழியத் தொடங்கியது. முன்னெப்போதை விடவும் சித்துவின் மேல்  பிரியம் அபரிதமிதமாய்ப் பொங்கிப் பிரவகித்தது. இலக்கில்லாமல் தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்து விட்டு  என்னை வீட்டில் இறக்கி விட்டு திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே கிளம்பிப் போனார்.

உள்ளே நுழைந்தால் கோபித்துக் கொண்டாற் போல வீடு மெளனம் சாதித்தது.. சமையலறைக்குள் நுழையும் போதே "அம்மா பாப்பாகிட்ட வந்துருங்கம்மா.. புவா செய்ய வேணாம்மா" என்றபடி ஓடி வரும் கொலுசொலிக்கு மனம் ஏங்கி நின்றது. திணறலாய் காலையுணவை கொறித்துக் கொண்டிருக்கையில் பள்ளியிலிருந்து தொலைபேசி.. "உங்கள் மகள் ஓயாமல் 'அம்மா, அம்மா' என்று அழுகிறாள்.. வந்து அழைத்துப் போக முடியுமா?" குழந்தை பள்ளிக்குப் போக மறுத்து அழுவதைக் கேட்டு எல்லையில்லா ஆனந்தம் அடைந்த அன்னை உலகிலேயே நானாகத் தான் இருப்பேன் என்று நினைக்கிறேன். :) அப்போதே கிளம்பி ஓட்டமாய் ஓடி பள்ளிக்குள் நுழைந்து, குழந்தையை அள்ளிக் கொண்டேன். அவள் கன்னத்தில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்து விட்டபடியே "எல்லாரும் அழாம விளையாடிட்டு இருக்காங்களேடா? நீ மட்டும் ஏன் அழறே?" என்றால் "அந்த பையன் அழறான் பாரு.. அவனை பாத்து தான் பாப்பாவும் அழறா" என்று ஒரு மூலையில் கத்திக் கொண்டிருந்த பையனைக் காண்பித்தாள். சிரிப்பு பொங்கிக் கொண்டு வந்தது. முகமெல்லாம் மகிழ்ச்சியில் விகசிக்க அவளை அணைத்தபடி வெளியில் வந்தேன். காண்பவையெல்லாம் அந்தக் குழந்தைகளின் கலரிங் புக் போல வண்ணத் தீட்டல்களாகத் தோன்றின. ஓயாமல் முத்தமிட்டுக் கொண்டும் கொஞ்சிக் கொண்டும் அழைத்து வந்தேன். அவள் நான் வேண்டுமென்று அழுதிருக்க மாட்டாள். எனக்கு அவள் வேண்டுமென்று புரிந்து தான் அழுதிருப்பாளாயிருக்கும்… என்ற அபத்த நினைப்பில் மனம் தித்தித்துத் திகட்டியது. வழியெல்லாம் புறாக்களையும் பூனைகளையும் துரத்தியபடி கொண்டாட்டமாய் வீடு வந்து சேர்ந்தோம். வீட்டிற்குள் நுழைந்ததும் வேண்டுமென்றே சமையலறைக்குள் சென்று நின்று கொண்டேன். "அம்மா பாப்பாகிட்ட வந்துருங்கம்மா.. வேலை செய்ய வேணாம்மா.. பாப்பா கூடயே இருங்கம்மா..ப்ளீஸ்மா.. :))

Tuesday, July 10, 2012

காயத்ரி பிறந்தநாள் கொண்டாட்டம் 2012 - உருவான விதம் :))சித்துவிற்கு லேசாக செலக்டிவ் அம்னீஷியா உண்டு.  இஸ்ரேலின் ஆதியோடந்தமான வரலாறு, ஆண்டாளின் திருப்பாவை, குறுந்தொகைக் கவிதைகள், உலகப்படங்கள் மற்றும் அவற்றின் பிரத்தியேக காட்சிகள், Friends எபிசோட்ஸின் டயலாக்குகள், இயற்பியல் விதிகள், அண்டைநாடுகளின் அரசியல் மாற்றங்கள், விஷ்ணுபுரம்/ கொற்றவை/ பின் தொடரும் நிழலின் குரல் / காடு ஆகியவற்றில் எந்த வரி எத்தனையாவது பக்கத்தில் எதற்காக இடம்பெற்றுள்ளது, ஆப்பிள் நிறுவனத்தின் இது வரையிலான மற்றும் வரவிருக்கும் தயாரிப்புகள் பற்றிய தகவல்கள், மலையாளக் கவிதைகள் / இயக்குனர்கள், மகாத்மா காந்தி, அயன்ராண்ட், டெர்ரி ப்ராட்சட்,  அகிரா குரோசோவா, டால்ஸ்டாய், கம்பர், பாப் டிலன், இளையராஜா, ஜெயமோகன், யுவன் சந்திரசேகர்,  ஹயோ மியாசகி, கிரிக்கெட், ரூபி நிரலாக்க மொழி பற்றியெல்லாம் எந்த நேரம் என்ன கேள்வி கேட்டாலும் யோசிக்காமல் பதில் சொல்லக் கூடிய மனிதர்.. எலுமிச்சம்பழம் வாங்குவதற்காக என்றே வேகாத வெயிலில் நடந்து கடைக்குப் போய்விட்டு, இடையில் நான் போன் செய்து “புதினாவும் சேர்த்து வாங்கிட்டு வாங்கப்பா” என்றால் வெறும் புதினாவோடு மட்டும் வீட்டிற்குத் திரும்புவார். :)))  இந்த விநோதமான மெமரி ஸ்டேட்டை புரிந்து கொள்ள முடியாமல் நான் இன்னமும் திணறிக் கொண்டிருக்கிறேன். இதுவே இப்படியென்றால் நெருங்கியவர்கள் / உறவினர்கள் பிறந்தநாள், திருமணநாள், அவர்களுக்கு என்னென்ன பிடிக்கும் போன்ற விஷயங்கள் பற்றியெல்லாம் சொல்லவே தேவையில்லை. ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாளை அவர் மறக்காமல் இருப்பதே பெரிய சாதனையாக எண்ணி பெருமைப்பட்டுக் கொள்வேன். ஆனால் இந்த வருடம் எதிர்பாராத ஆச்சரிய அதிர்ச்சி.. :) 

பிறந்தநாளுக்கு 2 நாட்கள் முன்பே மூணரைப் பவுனில் வளையல், மஸக்களி சுடிதார் என்று ’வல்லிய’ வசூலாகி விட்டதால் ஏழாம் தேதி இரவு 10.30 மணிக்கெல்லாம் எந்த எதிர்பார்ப்புமில்லாமல் நிம்மதியாக தூங்க ஆரம்பித்திருந்தேன். திடீரென்று தூக்கத்தினிடையில் இனிமையான இசை ஒலிக்கக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். எழுந்த போது அறை வெளிச்சமாக, அமைதியாக இருந்தது. அருகில் அம்மு மட்டுமே தூங்கிக் கொண்டிருந்தாள். ‘என்ன சத்தம் அது?.. சித்து எங்க?” என்றெல்லாம் குழம்பிக் கொண்டிருந்த போது “ஹாப்பி பர்த் டே டூ யூ” என்று பாடிக் கொண்டே உள்ளே நுழைந்தார்.  மணி 12 ஆகியிருந்தது. கையில் ஒரு பெரிய தட்டில்.. Mini dates croissants, Nachos, strawberry & white chocolate milk shake, green tea with lemon & mint can,  Ferrero Raffaello almond coconut treat chocolates, Ice cream Cakes  என்று எனக்குப் பிடித்த தீனி வகையறாக்களை அடுக்கிக் கொண்டு வந்து நீட்டினார். சந்தோஷத்தில் சிரிப்பு பொங்கிக் கொண்டு வந்தது. இருந்தாலும் குழப்பம் முழுமையாய்த் தீராமல் "என்ன சத்தம் கேட்டுச்சு? நான் எப்டி எழுந்தேன்? நான் இப்ப எங்க இருக்கேன்?" என்று அடுக்கடுக்காய் நான் எழுப்பிய கடினமான கேள்விகளுக்கு "நான் உனக்கு மெசேஜ் அனுப்பிட்டு உள்ள வந்தேன்.. உன் போனோட மெசேஜ் டோன் தான்" என்று சுருக்கமாக பதிலிறுத்தார்.  பின்னர், கப் கேக் போலிருந்த குட்டி ஐஸ்க்ரீம் கேக்கை வெட்டி சாப்பிட்டதோடு அவர் மனம் சங்கடப்படக் கூடாதே என்ற ஒரே காரணத்திற்காக அவர் கொண்டு வந்திருந்த எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சம் டேஸ்ட் பார்த்து விட்டு  1 மணிக்கு தும்மிக் கொண்டே படுத்துத் தூங்கினேன். 

விடிகாலையில் மூக்கிலிருந்து ஜலம் கொட்டத் தொடங்கி, தலை கனத்து எழுந்திரிக்கவே முடியாமல் போய்விட்டது. பிறந்தநாளன்று கணவரையும், மாமனாரையும் காலைக்கும் மதியத்திற்கும் சேர்த்து ஆபீஸிற்கு பட்டினியாக அனுப்பினேன் என்ற குற்ற உணர்வு தாளாமல் சித்துவிற்கு பிடித்த மிளகுக் குழம்பு வைக்கலாம்.. மாலை வந்தாவது சாப்பிடட்டும் என்று மதியம் சமைக்கப் போனேன். மிளகை வறுத்து எடுத்து தட்டில் கொட்டலாம் என்று நினைத்துத் திரும்பிய வேளையில் திடீரென அமுதினி அழும் சப்தம் கேட்டு அடுப்பை அணைக்காமலேயே வெளியில் ஓடி, அவளைத் தூக்கி சமாதானப்படுத்திக் கொண்டே திரும்பி வருவதற்குள் ஏற்கனவே கருப்பாக இருந்த மிளகு  வடிவேலுவைப் போல கருப்பாய் பயங்கரமாய் இருந்தது. “ஏன் எனக்கு மட்டும் இப்டியெல்லாம் நடக்குது” என்று துக்கம் தொண்டையை அடைக்க, மிளகுக் குழம்பு திட்டத்தைக் கை விட்டு மோர்க்குழம்பு வைக்கலாமென்று முடிவெடுத்தேன்.  சித்துவும், அப்பாவும் திரும்பி வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு இரும்பு வாணலியில் வெண்டைக்காய் வதக்கி, தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் அரைத்துக் கொட்டி கொதிப்பதற்குள் குழந்தையை குளிப்பாட்டி விடலாம் என்று சென்று திரும்புவதற்குள்... இல்லை.. இல்லை.. இது தீயவில்லை. ஆனாலும் குழம்பு கருப்பாயிருந்தது.  எப்படி என்று தான் புரியவில்லை. சரி.. அப்புறமாய் செஃப் தாமோதரனுக்கோ, மல்லிகா பத்ரிநாத்திற்கோ சமையல் சந்தேகங்கள் பிரிவில் எழுதிக் கேட்டுக் கொள்ளலாம் என்று என்னை நானே தேற்றிக் கொண்டு,  குழம்பு கருப்பாய் இருந்தால் என்ன மோர் வெள்ளையாய் தானே இருக்கிறது? ஒளி இருளை விரட்டும் போது வெண்ணிற மோர், கார்க்குழம்பை வெளுப்பாக்காதா என்ன? என்ற நம்பிக்கையில் மோரையும் அதில் ஊற்றினேன். எல்லாம் சேர்ந்து மொத்தமாய் திரிந்து போய் விட்டது. அவ்வ்வ்.. வெளியில் எட்டிப் பார்க்கவிருந்த கண்ணீரை “பெண் என்பவள் அழப் பிறந்தவள் அல்ல; ஆளப் பிறந்தவள்" என்ற தினத்தந்தி ராணி காலண்டர் பொன்மொழி நினைவிற்கு வந்து அடக்கியது. இப்படியாக பிறந்தநாள் அன்று குடும்பத்தார்க்கு வெறும் சோற்றையும் ரசத்தையும் மட்டுமே உணவாகப் படைத்த பாவியாக பழியேற்கவிருந்ததால்.. டின்னரையாவது உருப்படியாக செய்து முடிப்பது என்று நான் கட்டாய சபதமெடுக்க வேண்டியதாயிற்று. 

சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கெளமாரம், செளரம் ஆகிய அறுசமயக் கடவுளர்களையும், பிற மதத்துத் தெய்வங்களையும், சீட்டில் எழுதி மரத்தில் கட்டினால் வேண்டுதலை அப்படியே நிறைவேற்றித் தரும் உள்ளூர் கடவுள் உட்பட அத்தனை சிறு தெய்வங்களையும், மதுரை ஆதீனம் தவிர்த்து பிற தமிழக ஆதீனங்கள் அனைவரையும் வேண்டி வணங்கி இரவு உணவிற்கு Tuna பிரியாணியும், சப்பாத்தி + கொங்குநாட்டுக் கோழிக் குழம்பும் சிறந்த முறையில் செய்து அசத்தினேன். (அசத்தினேன் என்றவிடத்தில் என 'அசந்தேன்' என்ற பதமும் பொருந்தக் கூடியதே) சித்துவின் நெருங்கிய நண்பரும் அவர் மனைவியும் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்திருந்தனர். பிரியாணியும்  குழம்பும் மிக அருமையாக இருப்பதாக வாய் கொள்ளாமல் பாராட்டி விட்டுச் சென்றனர். வீட்டிற்கு சென்றதுமே, எங்கோ மலேசியாவில்  இன்னும் சில நாட்களில் கேன்சரில் சாகவிருக்கும் Zanzila binti Hashim என்ற முகம் தெரியாத புண்ணியவான் (புண்ணியவதி?) தன்னுடைய சொத்திலிருந்து 2 பில்லியன் பிரிட்டன் பவுண்டுகளை இவர்கள் பேரில் எழுதி வைப்பதாக மெயில் அனுப்பியிருந்தாராம். உடனேயே எனக்கு போன் செய்து "எல்லாம் உன் கை ராசி.. நீ செய்த பிரியாணியை வயிறாரச் சாப்பிட்டு வாயாரப் புகழ்ந்ததின் பலன் தான் இது.." என்று மேலும் அரை மணி நேரம் புகழ்ந்தார்கள். நான் அமைதியாக புன்னகை செய்து "என்னை ரொம்ப புகழாதீங்க. நான் என் கடமையைத் தான செஞ்சேன்?" என்று கூறியபடி சித்துவின் கண்ணாடியைக் கழற்றினேன். (நான் தான் கண்ணாடி போடலயே?) :)

Tuesday, May 29, 2012

சீர் பெற்று வாழ்வதற்கே உன் போல் செல்வம் பிறிதுமுண்டோ...?

ஒரு புலர்காலைப் பொழுதைப் போன்று மெல்ல விடிந்து கொண்டிருக்கிறேன். கனத்த சாம்பல் நிறத்து இருட்திரைக்குள்ளிருந்து துலக்கம் பெற்று ஒளிரத் துவங்கியிருக்கின்றன வாழ்வின் மறைபொருட்கள் ஒவ்வொன்றும். மகள் வளர்ந்து கொண்டிருக்கிறாள். தொடுவானம் போல பார்க்கப் பார்க்க ஆச்சரியங்களை இறைத்துக் கொண்டேயிருக்கிறாள். மழை நேரத்து வானவில் போல வண்ணம் மிகுத்துப் பெய்கிறாள். முத்துக் குளித்து மேலெழுபவள் போல நிதமும் எங்கிருந்தோ மகிழ்ச்சியை அள்ளி வருகிறாள். ஏன் இப்படியெல்லாம்? எதற்காக? எதன் பொருட்டு? என்றெல்லாம் எப்போதோ மனதின் இருள் மூலைகளில் துடித்துக் கொண்டிருந்த வலி மிகுந்த வினவல்கள் அத்தனைக்கும் ஒற்றைப் பதிலாய், ஒரேயொரு ஆறுதலாய் நின்று புன்னகைத்துக் கொண்டிருக்கிறாள்.

அமுதினி... என் தவம். என் மோட்சம். என் செருக்கு. என் ஆழம். என் விடியல். என் மீட்சி. என்னாயுள் நீட்டிக்கும் அமுதம்....

நேற்று அவளுக்கு இரண்டாவது பிறந்தநாள். அவளை வாழ்த்த வேண்டும்.. எப்போதை விடவும் மிகச் சிறப்பாக, மிகப் பிரியமாக, மிகவுயர்ந்ததாக, இது வரையிலும் இல்லாத வாழ்த்தாக அது அமைய வேண்டும். இப்படித்தான் எப்போதும் நினைக்கிறேன். ஆனால், இம்முயற்சி பலிப்பதில்லை. ஒவ்வொரு முறையும் மனம் பிரியத்தால் கசிந்து கசிந்து, இயலாமையில் வதிந்து இறுதியில் சொல்லின்மைக்குள் ஓடி முகம் புதைத்துக் கொள்கிறது. சொல்லவியலாத அன்பினைச் சொல்லிச் சொல்லி நைவதற்காகவேனும் ஒரு முறை மாணிக்கவாசகராய் பிறக்கத் தோன்றுகிறது.

அவள் பிறந்து 16 வது நாளில் அம்மா அவளுக்கென்று ஒரு பட்டுப் பாவாடை தைத்தார்கள். அன்று அவளைத் தொட்டிலில் கிடத்துகையில் பாவாடையின் பட்டுக் கரை கால்கொலுசு வரை நிறைத்துக் கொண்டு வெகு ரம்மியமாய் இருந்தது. இன்று எடுத்துப் பார்க்கையில் வெறும் ஒன்னேகால் சாண் நீளமேயிருக்கிறது. என்ன இது! இத்தனை சின்னவளாகவா இருந்தாள் என் குழந்தை? யப்பா! எப்படி வளர்ந்து விட்டாள்! ஒரு நாளின் அத்தனை மணிநேரங்களும் அவளுடனேயே/ அவளுக்காக / அவளால் இருக்கிறேன். எனக்குத் தெரியாமல் எப்போது வளர்கிறாள் இந்தப் பெண்?

அமுதினி எட்டாம் மாதத்தின் இறுதியில் பேசத் தொடங்கினாள். அவள் பேசிய முதல் சொல் "ம்மா". நான் அவளை விட்டு எங்கு நகர்ந்தாலும் "ம்மா.. ம்மா" என்றபடி தவழ்ந்து வருவாள். தனக்குவமை இல்லாத வெகு அழகான செயல் அது. பத்தாம் மாதத்திலிருந்து சொற்கள் ஒவ்வொன்றாய் உயிர் பெற்றெழத் தொடங்கின. இப்போது கோர்வையாய் பேசுகிறாள்.. நிறைய பேசுகிறாள். கதைகள் சொல்கிறாள். ஸ்லோகங்கள் சொல்கிறாள். ஓயாமல் பாடிக் கொண்டேயிருக்கிறாள். தமிழும், தெலுங்கும் கலந்து அவள் வசதிக்கேற்றபடி சொற்றொடர்களை அமைத்துக் கொள்கிறாள். கொஞ்சமும் மழலையின்றி குழந்தையின் குரலில், ஆனால் அட்சர சுத்தமாய் சொற்கள் வந்து விழுகின்றன. என்றாலும் இலக்கணம் இவளிடம் சிக்கிக் கொண்டு அல்லாடுவதைப் பார்க்க மகிழ்ச்சியாய் இருக்கிறது. :))

“இங்க வந்து நில்லு” என்றால்.. “வேணாம்.. இங்கயே நில்லுக்கறேன்” என்பாள்.

“நீயே எடுத்து சாப்பிடறயா? அம்மா ஊட்டட்டுமா என்று கேட்டால் “நீயே எடுத்து சாப்டுக்கறேன்” என்பாள். ("காதோடு தான் நான் பாடுவேன்" என்ற பாட்டைக் கூட "காதோடு தான் நீ பாடுவேன்" என்று தான் பாடுகிறாள்)

“ என்னடா பண்ற? டோரா ஸ்டிக்கரை பிக்கக் கூடாதுன்னு சொல்லிருக்கேனில்ல? என்று அதட்டினால் “டோரா பிக்கலம்மா.. டைனோசரத்தான் பிக்குனேன்” என்று பதில் சொல்வாள்.

தமிழ் என்னும் மாபெரும் மதயானை குழந்தைகளின் முன்பாக மட்டும் மண்டியிட்டு மத்தகம் தாழ்த்தி அவர்களை முதுகில் ஏற்றிக் கொண்டது” என்று கொற்றவையில் ஒரு வாசகம் இடம்பெற்றிருக்கும். மொழியை இவள் தன்னுடைய பொம்மைகளில் ஒன்றாக காதைப் பிடித்து தரையத் தரைய இழுத்துச் செல்லும் போதெல்லாம் இப்படியொரு மாயப்பிம்பம் கண்ணில் மின்னி மறைகிறது!

எதைப் பெறுகையிலும் "தேங்க்யூ" என்கிறாள். எது வேண்டுமென்றாலும் "இத கொஞ்சம் பாப்பாக்கு குடுங்களேன்" என்று கெஞ்சலாய்க் கேட்கிறாள். திறந்திருக்கும் கதவை தானே இழுத்து சார்த்திக் கொண்டு தலையை மட்டும் உள்ளே நீட்டி “மே ஐ கமின்?” என்கிறாள். வீட்டுக் கதவை யாரேனும் தட்டினால் "யாரு அது? பூச்சாண்டியா?" என்று அதட்டுகிறாள். "ஒன்னுல்ல.. ஒன்னுல்ல.. வலிக்காது" என்றபடி பேனாவின் நுனியினால் ஊசி போடுகிறாள். ஸ்பூனை கையில் வைத்துக் கொண்டு "குனிஞ்சிக்கோ.. மொட்டை அடிக்கிறேன்" என்கிறாள்.
  என்னை அடித்து விட்டாலோ, இடித்து விட்டாலோ உடனே குற்ற உணர்வு கொண்டு என் கண்களில் வராத கண்ணீரைத் துடைத்துத் துடைத்து "சாரி, சாரி.. அழாதம்மா" என்கிறாள். திடீரென்று நினைத்துக் கொண்டாற் போல "ஐ லவ் யூஊஊஊ அம்மா" என்று ராகமிழுக்கிறாள். நான் பதில் ஒன்றும் சொல்லாவிட்டாலும் " மீ டூ லவ் யூஊஊஊ அம்மா" என்கிறாள். கோபமாய் அதட்டும் போது முகத்தை கூம்பிக் கொண்டு நிலைப்படியில் உட்கார்ந்து "மயில்க் குட்டியை திட்டிட்டாங்க" என்று புலம்புகிறாள். தூக்கி நெஞ்சோடு அணைத்து "செல்லக்குட்டி தங்கக்குட்டி பட்டுச் செல்லம் அம்முத் தங்கம்.." என்று லயம் மாறாமல் கொஞ்சிக் கொண்டிருக்கையில் "தங்கச்செல்லம் சொல்லும்மா, மயில்க்குட்டி சொல்லு" என, இடையில் விட்டுப் போன கொஞ்சல்களை நினைவூட்டுகிறாள். கொஞ்சம் சுணங்கிப் படுத்தாலும் "அம்மா என்னாச்சி? இங்க ஜுரம் வந்துடுச்சா? இங்கயா?" என்றபடி கை, கால், கன்னம், நெற்றி என தொட்டுத் தொட்டு பிஞ்சு விரல்களில் வாஞ்சை ததும்பத் தடவிக் கொடுக்கிறாள். அடிபட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்த என் கீழுதட்டை கலவரமாய் தொட்டுத் தொட்டுப் பார்த்து எதிர்பாராத நொடியில் திடீரென காயத்தில் முத்தமிட்டு "அவ்ளோ தான்.. சரியாப் போச்சி" என்று கை தட்டிச் சிரிக்கிறாள். இன்னும் வரும் நாட்களில் என்னை என்னவெல்லாம் செய்யத் தீர்மானித்திருக்கிறாளோ தெரியவில்லை.

என் நிலை இப்படியென்றால்.. சித்துவின் நிலமை சொல்லுந் தரமன்று. :) சும்மாவே மகள் நிகழ்த்திக் காட்டும் அற்புதங்களில் சொக்கிக் கிடப்பவர்.. சென்ற வாரத்தில் யோகா வகுப்பிலிருந்து களைத்துத் திரும்பி படுக்கையில் வீழ்ந்து "கொஞ்சம் தண்ணி கொண்டு வாயேன்" என்றார். இவள் பின்னால் ஓடி ஓடி அவரை விடவும் நான் களைத்திருந்த காரணத்தால் "நீங்களே போய் எடுத்துக்கோங்க" என்றேன். உடனே அருகில் உட்கார்ந்திருந்தவள் துள்ளி எழுந்தாள். உலகளவு பரிவோடு தந்தையின் முகவாயைப் பிடித்து "நைனா? தண்ணியா? தண்ணி வேணுமா?" என்று கேட்டவள் அவசரமாய் படுக்கையை விட்டு கீழிறங்கி "தண்ணி எங்க? பாட்டில் எங்க?" என்று கேட்டுக் கொண்டே ஓட ஆரம்பித்தாள். அவள் தந்தை பூரித்துப் புளகாங்கிதமடைந்து, உள்ளம் விம்ம, மெய் தான் அரும்பி விதிர்விதிர்த்து, கண்ணில் நீர் மல்க அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தார். உண்மையில், தண்ணீர் எடுத்து வந்து கொடுத்ததென்னவோ நான் தான். ஆனால் அவர் தன் மகளைப் பார்த்துத்தான் "இங்கிவளை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்" என்ற ரீதியில் உருகிக் கொண்டிருந்தார். :)

அமுதினியை மரபணு ஆராய்ச்சித் துறையில் மகத்தான சாதனைகள் படைக்கவிருக்கும் மாபெரும் விஞ்ஞானியாக உருவாக்க வேண்டுமென்பது அவள் தந்தையின் ஆசை.

அவளை நல்லவளாக, வல்லவளாக, அச்சம் மடம் அறியாத துணிச்சல்காரியாக, எல்லா உயிர்களிடத்தும் கருணை மிக்கவளாக, நேர்மையானவளாக, ஆரோக்கியமானவளாக, திடமானவளாக, எக்கணத்திலும் உண்மையானவளாக, அவள் விரும்பும் கலைகள் அனைத்திலும் சிறந்து விளங்குபவளாக, பிறர் துயர் கண்டு கலங்குபவளாக, தன்னம்பிக்கை மிக்கவளாக, எடுத்த காரியம் திறம்பட முடிப்பவளாக, ஆழ்ந்து சிந்திப்பவளாக, குழந்தைகளையும் இயற்கையையும் நேசிப்பவளாக, வயோதிகத்தைப் புரிந்து கொள்பவளாக, என்றும் எப்போதும் நிலை குலையாதவளாக, பகைவனுக்கும் அருள்பவளாக, எல்லாவற்றையும் தர்க்கத்தால் மட்டுமே அளக்காதவளாக, சினத்தால் மதியிழக்காதவளாக, எச்சூழலிலும் நிதானமிழக்காதவளாக, பிரச்சினைகளை பதட்டமின்றி அணுகுபவளாக, உழைக்கத் தயங்காதவளாக, பேராசையற்றவளாக, வாழ்நாள் முழுவதும் நிபந்தனையற்ற அன்பினைப் பெறுபவளாக, தருபவளாக, நீள் ஆயுளும், உயர் கல்வியும், குன்றாப் புகழும், செல்வமும் செல்வாக்கும், ஆல் போல் நட்பும், அருகு போல் உறவும், நல்ல துணையும், நன்மக்கட்பேறும், மகிழ்வான, நிறைவான வாழ்வும் பெற்றவளாக அனைத்திலும் முக்கியமாக உலகை அதன் இயல்புடனே ரசிக்கக் கற்ற ஆகப் பெரிய ரசிகையாக உருவாக்க வேண்டுமென்பது அவள் தாயின் ஆசை. :)

இவ்விருவரும் ஆசைகளும் அப்படியே நிறைவேற வேண்டுமென தெய்வங்களும், தேவதைகளும், தேவர்களும், ரிஷிகளும், எம் பிதுர்களும், சுற்றமும், நட்பும், எம்மை அறிந்தோரும், அறியாதோரும், படிக்காமலேயே 'லைக்' போடுவோரும் என அனைவரும் 'ததாஸ்து' சொல்லி வாழ்த்துவீராக. :)

Friday, January 20, 2012

அமுதினியும் இராமாயணமும்

அமுதினியின் வளர்ச்சியில் யூ டியூப் காணொளிகளின் பங்கு மிக முக்கியமானது. அவள் பிறந்ததிலிருந்து முதல் 6 மாதங்கள் ஈரோட்டில் இருந்தோம். சுற்றிலும் மரங்கள் அடர்ந்த வீடு. பனை மரங்களில் குடியிருக்கும் கிளிகள், காகங்கள், பொன்னரளிப் பூக்களில் தேனெடுக்க வரும் தேன் சிட்டுகள், சிட்டுக்குருவிகள், மைனாக்கள், அபூர்வமாக குயில்கள் மற்றும் குருவியை ஒத்த தோற்றம் கொண்ட மஞ்சள் அலகு கொண்ட சற்று பெரிய பறவைகள் என வீடு எப்போதும் இசைக்குறிப்புகளால் நிரம்பியிருக்கும். வீட்டின் புறச்சுவரிலிருந்து சற்று தூரத்தில் மாடுகள், கன்றுக்குட்டிகள் கட்டப்பட்டிருக்கும் கட்டுத்தரை இருக்கும். காவலுக்கு ஒரு நாய். அவ்வப்போது வந்து போகும் பூனைகள் மற்றும் அணில்கள். தினமும் காலை அல்லது மாலையில் முற்றத்திலிருக்கும் ஊஞ்சலில் அமர்ந்து குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு ஜீவராசியையும் ஒலியால் அவளுக்கு அடையாளப்படுத்திக் கொண்டிருப்பேன். அவளுக்குப் புரிகிறதா.. கவனிக்கிறாளா என்றெல்லாம் கவலைப்பட்டதில்லை. 5 மாதக் குழந்தையாக இருக்கும் போது பசுவின் 'ம்ம்ம்மாஆஆ' என்ற குரலுக்கு திடீரென கண் மலர்த்தி மகிழ்ச்சியாக என் முகம் பார்த்தாள். 'யார் கத்தறா ந்னு எனக்குத் தெரியுமே' என்ற பாவனை இருந்தது முகத்தில். சந்தோஷமாக இருந்தது.

6 ம் மாதம் குவைத் வந்தாயிற்று. நாள் முழுவதும் அவள் பார்க்க என் முகமன்றி வேறில்லை என்ற நிலைமை வந்த போது அவளுக்கு யூ டியூபை அறிமுகப்படுத்தினேன். அந்த வயதிலேயே 'தப்போ தப்போ தப்பாணி' என்ற மலையாளப் பாடல் அவளுக்கு மிக விருப்பப் பாடலாக இருந்தது. அதைத் தொடர்ந்து இன்று வரை தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஹிந்தி, அரபி ஆகிய மொழிகளில் குழந்தைப்பாடல்களைப் பார்த்து வருகிறாள். அவள் பார்க்கும் பாடல்களின் எண்ணிக்கை இப்போது 160 ஐத் தொட்டிருக்கிறது. இவற்றுக்குள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல்கள், ஒரு தடவை பார்க்கலாம், இந்தப் பாடல் சலித்துப் போய்விட்டது என்பது போன்ற பாகுபாடுகளையும் அவளே உருவாக்கி வைத்திருக்கிறாள். 11 ம் மாதத்தில் பேசத் துவங்கியதிலிருந்து எல்லாப் பொருட்களையும் அவளறிந்த பாடல்களின் வழியாகவே சொல்லப் பழகி வருகிறாள். அவளின் பேச்சில் "குவா குவா வாத்து, மாம்பழமாம் மாம்பழம், வண்ண பலூன், மியா மியா பூனைக்குட்டி, பச்சைக்கிளியே வா வா" என்று அடைமொழியோடு கூடிய வார்த்தைகளே மிகுதி.

சமீபமாக பாடல்களைக் குறைத்து கதைகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறேன். நேற்று முன் தினம் எதேச்சையாக கண்ணில் பட்டது இராமாயணம் காணொளி. ஒன்னரை மணி நேரம் அதை அவள் பொறுமையாகப் பார்த்தது எனக்கே தாள முடியாத ஆச்சரியத்தைக் கொடுத்தது. படம் முடிந்தபின் இராமாயணத்தை வெறும் பத்து வரிகளாகச் சுருக்கி அவளது மொழியில் சொல்லிக் கொடுத்தேன்.

"1.இராமன் மாமா வில்லை எடுத்து 'டமார்னு' உடைச்சாரு.

2. இராமன் மாமாவும் சீதா அத்தையும் கல்யாணம் பண்ணிகிட்டாங்க.

3.அப்றம் இராமன் மாமா, சீதா அத்தை, லட்சுமணன் மாமா 3 பேரும் காட்டுக்கு போனாங்க.

4. அங்க ஒரு மானை பார்த்துட்டு சீதா அத்தை 'எனக்கு மானு வேணும் மானு வேணும்' நு அழுதா.

5. உடனே 'நான் புடிச்சித் தர்றேன்'நு இராமன் மாமா மானைத் துரத்திகிட்டு ஓடிப் போனாரு.

6. அப்போ இராவணன் பூச்சாண்டி அங்க வந்து 'வாஆஆ' ந்னு சீதா அத்தையை தூக்கிட்டு போய்ட்டாரு.

7. ஹனுமான் சொய்ய்ய்ய்ங்னு வானத்துல பறந்து போய் சீதா அத்தைகிட்ட மோதிரம் குடுத்துட்டு வளையல் வாங்கிட்டு வந்தாரு.

8. இராமன் மாமாவும் இராவணன் பூச்சாண்டியும் டிஷ்யூம் டிஷ்யூம்னு சண்டை போட்டுகிட்டாங்க.

9. இராவணன் பூச்சாண்டி டமார்னு கீழ விழுந்துட்டாரு.

10. கடைசியா இராமன் கிரீடம் எடுத்து தலைல வெச்சிகிட்டாரு"


ஹையா.. இராமாயணம் முடிஞ்சி போச்சி. :)))) கோர்வையாக இல்லாவிட்டாலும் அவள் இதை மழலையில் சொல்வது கொள்ளை அழகாக இருக்கிறது. வில்லை உடைக்கும் போது இராமனாகவும், சீதையை இழுக்கும் போது இராவணனாகவும் முகத்தில் பிரயத்தனம் காட்டி அசர வைக்கிறாள். கடைசியில் அவள் தலையில் அவளே பாவனை கிரீடம் வைத்துக் கொண்டு கை தட்டிச் சிரிக்கையில் என்னை கெளசல்யையாக உணர வைக்கிறாள். :)Saturday, January 14, 2012

'அதைச் சாப்பிடும் நோக்கமே அவளுக்கு கிடையாது'என் செல்ல மகள் அமுதினிக்கு ஒன்னரை வயதாகிறது. அவள் என் வயிற்றில் 3 மாதக் குழந்தையாக இருந்த போதிலிருந்து இன்று வரையிலும் அவளுக்கென்று பிரத்யேகமாய் ஒரு கடிதத்தை எழுதிவிட முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் முதலில் ஓரிரு வரிகள் எழுதுவதும், அதையே திரும்பப் படித்து, திருப்தியில்லாமல் வார்த்தைகளை மாற்றுவதும், அடித்துத் திருத்தித் திருத்தி ஒருவழியாக அவ்வரிகளை அரை மனதோடு ஏற்றுக் கொள்ளும் போது "இதை அடுத்த பத்தியில் சேர்த்துக் கொள்ளலாம். மடலின் துவக்கம் இன்னும் அழகாக, இன்னும் வாஞ்சையாக, இன்னும் குழைவாக... அவள் மீதான என் உள்ளன்பு முழுவதையும் வெளிக்காட்டுவதாக அமைந்தால் நன்றாக இருக்குமே" என்றோர் ஏக்கம் தோன்றுவதும், பெருமூச்சோடு அம்முயற்சியை அப்படியே கிடப்பில் போடுவதும் இது வரை பல தடவைகள் நடந்து விட்டது. ஒவ்வொரு வரியிலும் ஒரு சொல் நிரப்ப வேண்டிய இடத்திற்கென அதே பொருள் கொண்ட ஒன்பது சொற்கள் முட்டி மோதிப் போட்டியிட்டு ஒன்றும் வெற்றி பெறாமல் போவதே இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். இதே போன்றதொரு இடர்ப்பாட்டினை எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் கதைகள் குறித்து எழுத முயல்கையிலும் நான் சந்திக்க நேர்கிறது.

வாத்சல்யம் என்றோர் சமஸ்கிருதச் சொல் உண்டு. மனதிற்குள் உச்சரித்தாலும் காதுகளுக்குள் இனிமையாக ஒலிக்கக் கூடிய பிரியமான சொல் அது. வாத்சல்யம் என்றால் அன்பு என்று நேரடியாகப் பொருள் கூற முடியாதபடி, அன்பு, அக்கறை, வாஞ்சை, மிகப்பிரியம், குற்றம் காணாத் தன்மை எனப் பல்வேறு அர்த்தங்களில் தொனிக்கும் அடர்த்தியான அதே சமயம் மிக மிருதுவான சொல்லாக விளங்குவது. என் அம்முவை எத்தனை வாத்சல்யத்தோடு அணுகுகிறேனோ அதே அளவு வாத்சல்யத்துடனே அ.மு வின் எழுத்துக்களையும் எதிர்கொள்கிறேன் என்று சொல்வது பொருத்தமாக இருக்கக் கூடும்.

''இலங்கை கொக்குவில் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட அ. முத்துலிங்கம், அப்பாத்துரை ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் சாட்டர்ட் அக்கவுண்டனாகவும், இங்கிலாந்தின் மனேஜ்மெண்ட் அக்கவுண்டனாகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் சபையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் கடமையாற்றி தற்சமயம் ஓய்வுபெற்று தன் மனைவி கமலரஞ்சினியுடன் வசிப்பது கனடாவில். இவரின் மகன் சஞ்சயனும், மகள் வைதேகியும் வசிப்பது அமெரிக்காவில்.''

என்று இவருக்கு அறிமுகம் தந்திருக்கிறது தமிழ் விக்கிபீடியா. இதை விடவும் 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்', 'அங்கே இப்ப என்ன நேரம்' முதலான தொகுப்புகளிலும் இன்ன பிற கதைகள் மற்றும் கட்டுரைகளிலும் இவர் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தினர் பற்றியும் கொடுத்திருக்கும் தகவல்களே மனதிற்கு மிக நெருக்கமானவையாய் இருக்கின்றன. ' பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு நள்ளிரவில் திரும்பி வரும் மகனிடம் பரிசு குறித்து ஒன்றுமே கேட்காமல் விழித்திருந்து உணவு பரிமாறும் அம்மா, கதவிற்கு வெளியே உருண்டு வரும் தேசிக்காய்களை வைத்து குழந்தைகள் பிறந்த நேரத்தைக் குறித்துக் கொண்டு, ஊருக்கு வரும் ஒவ்வொரு ஜோசியரிடமும் பிள்ளைகளின் ஜாதகக் கட்டைக் கொடுத்து பலன் கேட்கும் தந்தை, தம்பியைப் படம் எடுக்க வீட்டிற்கு புகைப்படக்காரர் வந்த போது அழுது அரற்றி தன்னையும் படம் பிடிக்கும்படி பிடிவாதம் செய்த அண்ணர், சங்கீதம் கற்றுக் கொள்ளும் அக்காள், தன் தலையைக் காட்டிலும் பெரிதான மாம்பழத்தை நெஞ்சோடணைத்து வீடெங்கும் தூக்க முடியாமல் தூக்கித் திரிந்த குட்டித்தங்கை, கனமான புத்தகங்களை அடியிலும் மெலிதானவற்றை மேலாகவுமாக அடுக்கி வைத்து ஒரே கதையின் அடுத்தடுத்த பாகங்களை கீழ்மேலாக தேடச் செய்யும் மனைவி, குதிரையிடம் கடி வாங்கிய மகள், சூட்டிகையான பேத்தி அப்சரா' என்று அவரது உறவினர்கள் அனைவருமே ஏற்கனவே நன்கு அறிமுகமான தூரத்து சொந்தங்களாகவே தோன்றுகின்றனர்.

"நாங்க 5 பேரும் தினம் 8 மணிக்கெல்லாம் தூங்கிடுவோம். தாத்தி மட்டும் தாத்தாவுக்காக முழிச்சிருப்பாங்க. நைட் 10, 11 மணிக்கு வருவார். வெளியூருக்கு போய்ட்டு வந்தார்னா அன்னேரத்துலயும் உசிரோட வாத்தோ, கோழியோ வாங்கிட்டு வந்து அப்பவே தோலுரிச்சி மஞ்சப் பூசிக் குடுத்து சமைக்கச் சொல்லுவார். தாத்தி நடுராத்திரில அம்மில வருக் வருக்னு மசாலா அரைச்சி குழம்பு வைப்பாங்க. புள்ளைங்க சூடா சாப்பிடட்டும்னு நைட் 1 மணிக்கு எங்களை எழுப்பி சாப்பிடச் சொல்லுவார் தாத்தா. தூங்கி விழுந்துகிட்டே சாப்பிடுவோம். காலைல கேட்டா உன் கடைசிச் சித்தி நான் நைட் சாப்பிடவே இல்லன்னு அழுவா" என்று நாங்கள் பார்த்தேயிராத தாத்தாவைப் பற்றியும் எங்கள் குழந்தைப் பருவத்துக் குறும்புகள் பற்றியும் அம்மா சொல்லும் கதைகளில் இருக்கும் சுவாரஸியத்தையும் நம்பகத் தன்மையையும் அச்சுப் பிசகாமல் கொண்டிருப்பவை அ.முவின் அனுபவக் கதைகள்.

இவரது கதைகளின் சிறப்பம்சமாக அதில் விரவியிருக்கும் நகைச்சுவையை பலரும் குறிப்பிடுவதைக் கேட்டிருக்கிறேன். "புன்னகைக்கும் கதை சொல்லி" என்பார் ஜெயமோகன். உடல்நலம் குன்றிய தன் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து அருகில் துணைக்கிருந்த இரவில், சூழலுக்கு கொஞ்சமும் பொருந்தாமல் வாய் விட்டுச் சிரித்தபடியே 'அங்கே இப்ப என்ன நேரம்' தொகுப்பை வாசித்துக் கொண்டிருந்ததாக சொல்கிறார் பா.ராகவன். 'ஐவேசு' கதையை தன் பதிவில் குறிப்பிட்டு எழுதியதன் வாயிலாக எனக்கு முதன் முதலாக அ.மு வை அறிமுகப்படுத்திய ஆசிப் அண்ணாச்சியும் அதன் நகைச்சுவையே தன்னை வெகுவாகக் கவர்ந்த அம்சம் என்று கூறியிருக்கிறார். ஆனால் என்னளவில் நகைச்சுவையைக் காட்டிலும் அ.மு வின் கதை சொல்லும் நேர்த்தியும் சொக்க வைக்கும் விவரணைகளுமே அவரது அதி சிறந்த அம்சங்களாகத் தோன்றுகின்றன.

ஜெயமோகனின் தாயார் பாதம் சிறுகதையில் "சும்மா தேனீமேலே ஏறி ஒக்காந்து ரீ….ம்னு நந்தவனமெல்லாம் சுத்தி, நந்தியாவட்டை மல்லிகை ரோஜான்னு பூப்பூவா உக்காந்து மண்ட மண்ட தேன்குடிச்சுட்டு வந்து எறங்கின மாதிரி ஒரு அனுபவம்." என்றொரு வரி இடம்பெற்றிருக்கும். அ.முத்துலிங்கத்தின் எழுத்தை வாசிக்கும் போதெல்லாம் இப்படியானதொரு அனுபவம் வாய்க்கத் தவறியதில்லை. அவரின் இணையதளத்தில் இருக்கும் 'மாம்பழம்' என்ற கட்டுரை நான் மிக மிக ரசித்துக் கிறங்கிப் படித்த கட்டுரைகளுள் ஒன்று. தோட்டத்திலிருக்கும் மாமரத்திலிருந்து வீட்டுக் குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்களுக்கான பழத்தைத் தேர்வு செய்து அதில் தங்கள் பெயர் எழுதிய சீட்டுக்களை கட்டி வைக்கின்றனர். அவற்றின் வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணித்து அவை முற்றிக் கனிந்ததும் அவரவர் கனியை பறித்து உண்டு மகிழ்கின்றனர். அவர்களுள் மிகச் சிறியவளான 3 வயது தங்கையின் மாம்பழம் குறித்து பின்வருமாறு விவரிக்கிறார் ஆசிரியர்.

"ஆக எஞ்சியது தங்கச்சியின் மாங்காய்தான். அது ஒவ்வொரு நாளும் பெருத்துக்கொண்டே வந்தது. அவளுடைய தலையளவுக்கு பெருத்த பிறகு நிறம் வைக்கத் தொடங்கியது. ஒருநாள் காலை பழுத்து கனிந்து சாப்பிடுவதற்கான பருவத்தை எட்டியது. அண்ணர் அதை ஆய்ந்து அவளிடம் கொடுத்தார். இரண்டு கைகளாலும் ஏந்திப் பிடிக்க கைகளில் அவளுக்கு போதிய பலம் கிடையாது. ஆனாலும் அவள் அதை கீழே இறக்கவில்லை. குழந்தையை அணைத்துப் பிடிப்பதுபோல நெஞ்சோடு சேர்த்து இறுக்கிக்கொண்டு வீடு முழுக்க அலைந்தாள். ஒரு புதுப் பொம்மை கிடைத்ததுபோல மகிழ்ச்சி. மதியம்வரை அதை நெஞ்சைவிட்டு கீழே இறக்கவில்லை. அதைச் சாப்பிடும் நோக்கமே அவளுக்கு கிடையாது."

இந்தப் பத்தியைப் படிக்கும் போதே மாம்பழத்தைத் தூக்க முடியாமல் தூக்கித் திரியும் குட்டிப் பெண்ணின் உருவம் மனக்கண்ணில் தோன்றியதோடு அவளின் மகிழ்ச்சி என் முகத்திலும் கசிந்து விரவிக் கொண்டிருந்தது. இறுதியாய் 'அதைச் சாப்பிடும் நோக்கமே அவளுக்குக் கிடையாது' என்ற வரியை வாசித்தபோது உண்டான மனக்கிளர்ச்சியை எப்படிச் சொல்வதெனத் தெரியவில்லை. ஏறத்தாழ அ.முவின் எழுத்துக்களை நானும் இப்படித்தான் தூக்கிக் கொண்டு திரிகிறேனோ என்று தோன்றுகிறது!

விவரணைகளைப் போன்றே அவர் கையாளும் உவமைகளும் மிக மிக அழகானவை. 'ஐயோ' எப்படித்தான் இப்படியெல்லாம் சொல்லத் தோன்றுகிறதோவென மாய்ந்து மாய்ந்து வியக்கச் செய்பவை.

"தாயின் கையை பறித்துக்கொண்டு ஓடும் குழந்தைபோல ஒரு முடிக்கற்றை நெற்றியிலே விழுந்தது"

"இப்பொழுதுதான் பிறந்த ஆட்டுக்குட்டி எழுந்து நிற்பதுபோல அவர் கால்கள் நடுங்கின"

"என்னுடைய முகம் சாத்தி வைத்த கதவு போல இருந்தது"

"ஒரு குளவியை அறைக்குள் விட்டு கதவைச் சாத்தியது போல அறையின் இந்த மூலைக்கும் அந்த மூலைக்குமாக கனகி சர்க் சர்க் என்று பறந்து கொண்டிருந்தாள்."

"குழந்தை அவசரமாக தாயைப் பின் தொடர்ந்தது. திடீரென நின்று, தானியத்தைக் கொத்துவதற்கு குருவி தயங்குவது போல யோசித்தது"

" கனடாவின் 143 வருட சரித்திரத்தில் முதன்முதலாக ஓர் ஈழத்தமிழர் உடலழகன் போட்டியில் பங்குபற்றியதுமல்லாமல் இரண்டாவது இடத்தையும் வென்றிருந்தார். அவர் பெயர் பகீரதன் விவேகானந். ஒரு மேப்பிள் இலை உதிர்ந்ததுபோல, ஒரு குறுக்கெழுத்துப் புதிர் பூர்த்தியானதுபோல, ஒரு வீதி விளக்கு சிவப்பிலிருந்து பச்சைக்கு மாறியதுபோல இந்தச் சம்பவம் மிகச் சாதாரணமாக மறக்கப்பட்டுவிடும் "

என்பவை சில எடுத்துக்காட்டுகள். எவருடைய நூலைப் பற்றியாவது சிலாகித்துப் பேசுகையில் அதில் வரும் மிகச் சிறந்த வசனத்தை சுட்டிக் காட்டி "இந்த ஒரு வசனத்திற்கே புத்தகத்திற்கு கொடுத்த மொத்த விலைப்பணமும் சரியாய்ப் போய்விட்டது" என்று குறிப்பிடுவது அ.முத்துலிங்கம் அவர்களின் வழக்கம். அவரது புத்தகத்தை வாசிக்கையில் குறைந்தது 50 முறைகளாவது இதே வரியை நினைவு கூர வேண்டியிருக்கிறது. உவமைகளைப் போன்றே ஒவ்வொரு கதையிலும் புதிதாக அறிந்து கொள்வதற்கென நிறைய சுவாரஸியமான செய்திகள் பொதிந்திருக்கும். அட! என புருவமுயர்த்தி ஆச்சரியப்பட வைக்கும்.

"ஆராய்ச்சி’ என்று ஒரு மாமரம். அதன் காய்கள் பனங்காய் அளவுக்கு பெரிசாக வளர்ந்து தன் பாரத்தை தானே தாங்க முடியாமல் வெடித்துவிடும். இன்னொரு வகை ’மத்தளம்தூக்கி’. நார்ச்சத்துள்ள இனிய பழம். இன்னொன்று ’வெங்காயம் காய்ச்சி’. இதை பழுக்க வைப்பதில்லை, இதில் வெங்காய வாசனை வரும் ஆகவே கறிக்கு பயன் படுத்துவார்கள்."


"தென் அமெரிக்காவில் 150 பேர் மட்டுமே கொண்ட ஓர் இனக்குழு உண்டு. அவர்களுடைய மொழியில் ’அரைகுறையாக அம்பு எய்தவன்’ என்பதற்கு ஒரு வார்த்தை உண்டு. அரைகுறையாக அம்பு எய்தால் மிருகம் வலியில் துடித்து உழன்றுதான் சாகும். அந்த மொழியில் ஆக மோசமாக ஒருவரை திட்டவேண்டும் என்றால் அந்த வார்த்தையை சொல்லி வைவார்கள். "

"ஆப்பிரிக்காவில் மணமுடிக்கும் முன்னரே பிள்ளை பெற்ற பெண்ணுக்கு மதிப்பு அதிகம். அவள் கர்ப்பம் தரிப்பது பிரச்னை இல்லாததால் அவளை மணக்க ஆடவர் போட்டியிடுவர். இந்தியப் படங்களில் ஒரு பெண் கற்பைக் காப்பாற்றப் போராடும் இடங்கள் அவர்களுக்குப் புரிவதேயில்லை."

"ஆப்பிரிக்காவில் வாழும் இந்தியர்கள் பிணத்தை எரிப்பதைப் பார்த்ததும் ஆப்பிரிக்கர்கள் கிலி பிடித்து ஓடிவிடுவார்கள். இது ஒரு காட்டுமிராண்டித்தனமான பழக்கம் என்று என்னிடமே சொல்லியிருக்கிறார்கள்".

இப்படி தனி நூலாய்த் தொகுக்குமளவிற்கு கதையெங்கும் பரவியிருக்கும் நுண்ணிய அவதானிப்புகள் மட்டுமல்லாது சாதாரணமாய் நகரும் கதையை ஒற்றை வரியால் சட்டென வேறு தளத்திற்கு உயர்த்திச் செல்லும் லாவகமும், மாலையா இரவா எனப் பிரித்தறிய முடியாதபடி மயங்கி வரும் பொழுதைப் போல உண்மையா புனைவா என்றுணர மாட்டாத மயக்கத்தோடு அனுபவங்களை விவரித்து செல்லும் பாங்கும், வெவ்வேறு தேசங்கள், பல்வேறு வாழ்க்கை முறைகள் என வாசிப்போருக்கு அந்நியமாயிருக்கும் அனைத்தையும் எளிய தமிழின் வழியாக மிக அணுக்கமானதானக் காட்டும் திறமையும், செறிவான சொற்களைத் தேடித் தேடிப் பயன்படுத்தும் வசீகரமும் அவரின் தனிச்சிறப்புக்களாக மிளிர்கின்றன.

அ.மு வின் கதைகளில் எதிரி, மட்டுப்படுத்தப்பட்ட வினைச் சொற்கள், மயான பராமரிப்பாளர், வேட்டை நாய், என் குதிரை நல்லது, முதலியவற்றோடு எனக்கு மிக மிகப் பிடித்தமான கதைகள் இரண்டு உண்டு. "அடுத்த புதன் கிழமை உன்னுடைய முறை" "உடனே திரும்ப வேண்டும்" ஆகிய 2 கதைகளையும் என்னால் மறக்க முடிந்ததே இல்லை.

இவை என் மனதில் ஆழப் பதிந்து அழியாமல் நின்று விட்டமைக்கு, இந்த இரண்டு கதைகளுமே உடல் நலமின்றித் துன்புறும் இளங்குழந்தையைப் பற்றியும் குழந்தையின் அவஸ்தையைக் காணச் சகியாத பெற்றோரைப் பற்றியுமான கதைகளாய் அமைந்தது காரணமாயிருக்கலாம். என் மகள் பிறக்கும் முன்பாகவே இவ்விரண்டு கதைகளையும் பதைபதைப்போடு மிகவூன்றிப் படித்திருந்தேன். அவள் பிறந்து வளர்ந்து முதன் முதலாகப் பின்னோக்கித் தவழத் தொடங்கிய நாட்களிலும், சமீபமாய் உடல்நலமின்றி இரவெல்லாம் கடுமையான சளித் தொந்தரவோடும் காய்ச்சலோடும் அவள் அவதிப்பட்ட நாட்களிலும் இக்கதைகளை மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்த படியே இருந்தேன்.

'அடுத்த புதன் கிழமை உன்னுடைய முறை' என்ற கதையில் வரும், தவழும் பருவத்துக் குழந்தையான லவங்கி திடீரென கடுமையான நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்படுவாள். ஒரு சுவாசப் பை முற்றிலும் மடிந்து உயிருக்கு ஆபத்தான நிலையிலிருக்கும் குழந்தைக்கு ஊசி மருந்து செலுத்துவதும், சலைன் ஏற்றுவதும், உடலில் மெல்லிய குழாயைச் செலுத்தி சிறுநீர் எடுப்பதுமாக மருத்துவ சோதனை என்ற பெயரில் அலைக்கழிப்பார்கள். ஒவ்வொன்றிற்குமாக அழுது அழுது களைத்த குழந்தை, எக்ஸ்ரே எடுப்பதற்காக அந்நிய மனிதர்கள் இருவர் அவளை அழுத்திப் பிடித்ததும் அது வரை இல்லாத அளவுக்கு கதற ஆரம்பிப்பாள். இதற்கு அனுமதித்த தன் அப்பாவை நம்ப முடியாத கண்களால் பார்ப்பாள். முதல் மொட்டை அடிப்பதற்காக அமுதினியை எல்லாருமாக சேர்ந்து அழுத்திப் பிடித்து தலையில் தண்ணீர் தெளித்த போது இதே போன்ற பார்வையுடன் தான் கதறித் தீர்த்தாள். அம்மா.. அம்மா என்றே ஓயாமல் அழுதாள். சுற்றியிருந்த அத்தனை பேரையும் விடுத்து அவள் கருவிழிகள் என்னை மட்டுமே ஊடுருவித் துளைத்தன. அவ்விழிகளில் கண்ணீரோடு சேர்ந்து நீயுமா இதற்கு உடந்தை? என்ற கேள்வியும் கலந்து கன்னத்தில் இறங்கியபடியே இருந்தது.

மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகளை மனைவியின் வசம் ஒப்படைத்து, இரண்டே நாட்களில் திரும்பி விடுவதாக வாக்களித்து விட்டு பணி நிமித்தமாய் தூர தேசம் செல்லும் தந்தை தொடர்ந்து 8 நாட்களாக ஊருக்குத் திரும்ப இயலாமல் அவதிப்படுவதைப் பற்றிய சிறுகதை 'உடனே திரும்ப வேண்டும்'. போதாக்குறைக்கு கைக்குழந்தையான அவர் மகளின் தோள் மூட்டில் பூச்சியொன்று முட்டையிட்டு கண்ணுக்குத் தெரியாத அந்த முட்டைப்புழு சருமத்திற்குள் வளர ஆரம்பித்து சருமம் வீங்கத் தொடங்கியிருக்கும். வலி தாளாமல் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டேயிருக்கும். விமானம் பழுதாகி விசா இல்லாமல் அல்லாடி மீண்டும் விமானம் ஏற முடியாமல் தவித்து முழுதாக 8 நாட்கள் கழித்து அவர் திரும்பி வரும் போது அப்புழு வளர்ந்து குழந்தையின் தசையைப் பிளந்து கொண்டு வெளியேறிப் போயிருக்கும். குழந்தை சுரம் குறைந்து களைப்போடு ஒரு குட்டித் தலையணையில் தன் குட்டித் தலையை வைத்துப் படுத்திருக்கும்.

இரு கதைகளிலுமே குழந்தை உடலால் அனுபவிக்கும் வேதனைக்கு சற்றும் குறையாத வேதனையைப் பெற்றோர் மனதால் அனுபவிக்கின்றனர். எப்போது நினைத்துக் கொண்டாலும் மையுறிஞ்சும் தாளைப் போல நெஞ்சில் துக்கம் பரவிப் பாய்வதைத் தடுக்க முடிந்ததில்லை. வாசிக்கும் போது கண்ணோடும் கையிலிருக்கும் நூலோடும் மட்டும் நின்று விடாமல் வாசிப்பவரின் நெஞ்சோடு கலந்து வாழ்க்கை முழுவதும் துணை வரும் படியாக இப்படி ஒரு சில கதைகளே வாய்க்கின்றன. என் கல்லூரிக்கால முதல் வகுப்பில் 'இலக்கியத்தின் பயன் என்ன?' என்று எங்கள் ஆசிரியர் கேட்ட கேள்விக்கான பதிலையும் இது போன்ற சந்தர்ப்பங்களில் மட்டுமே நான் கண்டு கொள்கிறேன்.

நான் தமிழ் இலக்கியம் பயின்றவள். எந்தவொரு பொருள் குறித்தும் காய்தல் உவத்தல் இன்றி ஆராய்ந்து நேர்மையான முறையில் அவற்றின் நிறை, குறைகளை முன்வைத்து கட்டுரை படைக்கப்பட வேண்டும் என்றே எனக்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் எனக்குப் பிடித்தமானவை குறித்து நானெழுதும் கட்டுரைகள் அனைத்திலும் சிலாகிப்புகள் மட்டுமே நிரம்பியிருக்கின்றன. 'எழுதுங்கால் கோல் காணாக் கண்ணே போல்' என்பார் வள்ளுவர். ரோஜாக்களைப் பற்றி பேச முனைகையில் முட்களை முன்னிறுத்த வேண்டிய அவசியம் தான் என்ன?

Tuesday, January 3, 2012

குறுகத் தரித்த மனம்


சிகரங்களின் சீதளத்தையும்
பள்ளத்தாக்குகளின் விரிசல்களில்
நதியோடு கசியும் ரகசியங்களையும்
ஒருபோதும் அறிந்ததில்லை
தோட்டத்துப் பூக்கள்

தினமும் விரித்துச் சுருட்டும்
படுக்கைகளுக்குள்ளாக
இருதயம் போல்
கசங்கி விரிகின்றன
நாட்கள்

ஜன்னல்களின் விளிம்பில்
கிளைபரப்பிக் கனிவளர்த்து
செழித்து நிற்கின்றன
போன்சாய் மரங்கள்

ஆயினும்..

தொட்டி மீன்களின் கனவில்
ஓயாமல் அலைவீசிக் கொண்டிருக்கிறது
பேராழம் மிக்கப்
பெருங்கடல் ஒன்று.