Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Saturday, January 14, 2012

'அதைச் சாப்பிடும் நோக்கமே அவளுக்கு கிடையாது'



என் செல்ல மகள் அமுதினிக்கு ஒன்னரை வயதாகிறது. அவள் என் வயிற்றில் 3 மாதக் குழந்தையாக இருந்த போதிலிருந்து இன்று வரையிலும் அவளுக்கென்று பிரத்யேகமாய் ஒரு கடிதத்தை எழுதிவிட முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் முதலில் ஓரிரு வரிகள் எழுதுவதும், அதையே திரும்பப் படித்து, திருப்தியில்லாமல் வார்த்தைகளை மாற்றுவதும், அடித்துத் திருத்தித் திருத்தி ஒருவழியாக அவ்வரிகளை அரை மனதோடு ஏற்றுக் கொள்ளும் போது "இதை அடுத்த பத்தியில் சேர்த்துக் கொள்ளலாம். மடலின் துவக்கம் இன்னும் அழகாக, இன்னும் வாஞ்சையாக, இன்னும் குழைவாக... அவள் மீதான என் உள்ளன்பு முழுவதையும் வெளிக்காட்டுவதாக அமைந்தால் நன்றாக இருக்குமே" என்றோர் ஏக்கம் தோன்றுவதும், பெருமூச்சோடு அம்முயற்சியை அப்படியே கிடப்பில் போடுவதும் இது வரை பல தடவைகள் நடந்து விட்டது. ஒவ்வொரு வரியிலும் ஒரு சொல் நிரப்ப வேண்டிய இடத்திற்கென அதே பொருள் கொண்ட ஒன்பது சொற்கள் முட்டி மோதிப் போட்டியிட்டு ஒன்றும் வெற்றி பெறாமல் போவதே இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். இதே போன்றதொரு இடர்ப்பாட்டினை எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் கதைகள் குறித்து எழுத முயல்கையிலும் நான் சந்திக்க நேர்கிறது.

வாத்சல்யம் என்றோர் சமஸ்கிருதச் சொல் உண்டு. மனதிற்குள் உச்சரித்தாலும் காதுகளுக்குள் இனிமையாக ஒலிக்கக் கூடிய பிரியமான சொல் அது. வாத்சல்யம் என்றால் அன்பு என்று நேரடியாகப் பொருள் கூற முடியாதபடி, அன்பு, அக்கறை, வாஞ்சை, மிகப்பிரியம், குற்றம் காணாத் தன்மை எனப் பல்வேறு அர்த்தங்களில் தொனிக்கும் அடர்த்தியான அதே சமயம் மிக மிருதுவான சொல்லாக விளங்குவது. என் அம்முவை எத்தனை வாத்சல்யத்தோடு அணுகுகிறேனோ அதே அளவு வாத்சல்யத்துடனே அ.மு வின் எழுத்துக்களையும் எதிர்கொள்கிறேன் என்று சொல்வது பொருத்தமாக இருக்கக் கூடும்.

''இலங்கை கொக்குவில் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட அ. முத்துலிங்கம், அப்பாத்துரை ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் சாட்டர்ட் அக்கவுண்டனாகவும், இங்கிலாந்தின் மனேஜ்மெண்ட் அக்கவுண்டனாகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் சபையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் கடமையாற்றி தற்சமயம் ஓய்வுபெற்று தன் மனைவி கமலரஞ்சினியுடன் வசிப்பது கனடாவில். இவரின் மகன் சஞ்சயனும், மகள் வைதேகியும் வசிப்பது அமெரிக்காவில்.''

என்று இவருக்கு அறிமுகம் தந்திருக்கிறது தமிழ் விக்கிபீடியா. இதை விடவும் 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்', 'அங்கே இப்ப என்ன நேரம்' முதலான தொகுப்புகளிலும் இன்ன பிற கதைகள் மற்றும் கட்டுரைகளிலும் இவர் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தினர் பற்றியும் கொடுத்திருக்கும் தகவல்களே மனதிற்கு மிக நெருக்கமானவையாய் இருக்கின்றன. ' பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு நள்ளிரவில் திரும்பி வரும் மகனிடம் பரிசு குறித்து ஒன்றுமே கேட்காமல் விழித்திருந்து உணவு பரிமாறும் அம்மா, கதவிற்கு வெளியே உருண்டு வரும் தேசிக்காய்களை வைத்து குழந்தைகள் பிறந்த நேரத்தைக் குறித்துக் கொண்டு, ஊருக்கு வரும் ஒவ்வொரு ஜோசியரிடமும் பிள்ளைகளின் ஜாதகக் கட்டைக் கொடுத்து பலன் கேட்கும் தந்தை, தம்பியைப் படம் எடுக்க வீட்டிற்கு புகைப்படக்காரர் வந்த போது அழுது அரற்றி தன்னையும் படம் பிடிக்கும்படி பிடிவாதம் செய்த அண்ணர், சங்கீதம் கற்றுக் கொள்ளும் அக்காள், தன் தலையைக் காட்டிலும் பெரிதான மாம்பழத்தை நெஞ்சோடணைத்து வீடெங்கும் தூக்க முடியாமல் தூக்கித் திரிந்த குட்டித்தங்கை, கனமான புத்தகங்களை அடியிலும் மெலிதானவற்றை மேலாகவுமாக அடுக்கி வைத்து ஒரே கதையின் அடுத்தடுத்த பாகங்களை கீழ்மேலாக தேடச் செய்யும் மனைவி, குதிரையிடம் கடி வாங்கிய மகள், சூட்டிகையான பேத்தி அப்சரா' என்று அவரது உறவினர்கள் அனைவருமே ஏற்கனவே நன்கு அறிமுகமான தூரத்து சொந்தங்களாகவே தோன்றுகின்றனர்.

"நாங்க 5 பேரும் தினம் 8 மணிக்கெல்லாம் தூங்கிடுவோம். தாத்தி மட்டும் தாத்தாவுக்காக முழிச்சிருப்பாங்க. நைட் 10, 11 மணிக்கு வருவார். வெளியூருக்கு போய்ட்டு வந்தார்னா அன்னேரத்துலயும் உசிரோட வாத்தோ, கோழியோ வாங்கிட்டு வந்து அப்பவே தோலுரிச்சி மஞ்சப் பூசிக் குடுத்து சமைக்கச் சொல்லுவார். தாத்தி நடுராத்திரில அம்மில வருக் வருக்னு மசாலா அரைச்சி குழம்பு வைப்பாங்க. புள்ளைங்க சூடா சாப்பிடட்டும்னு நைட் 1 மணிக்கு எங்களை எழுப்பி சாப்பிடச் சொல்லுவார் தாத்தா. தூங்கி விழுந்துகிட்டே சாப்பிடுவோம். காலைல கேட்டா உன் கடைசிச் சித்தி நான் நைட் சாப்பிடவே இல்லன்னு அழுவா" என்று நாங்கள் பார்த்தேயிராத தாத்தாவைப் பற்றியும் எங்கள் குழந்தைப் பருவத்துக் குறும்புகள் பற்றியும் அம்மா சொல்லும் கதைகளில் இருக்கும் சுவாரஸியத்தையும் நம்பகத் தன்மையையும் அச்சுப் பிசகாமல் கொண்டிருப்பவை அ.முவின் அனுபவக் கதைகள்.

இவரது கதைகளின் சிறப்பம்சமாக அதில் விரவியிருக்கும் நகைச்சுவையை பலரும் குறிப்பிடுவதைக் கேட்டிருக்கிறேன். "புன்னகைக்கும் கதை சொல்லி" என்பார் ஜெயமோகன். உடல்நலம் குன்றிய தன் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து அருகில் துணைக்கிருந்த இரவில், சூழலுக்கு கொஞ்சமும் பொருந்தாமல் வாய் விட்டுச் சிரித்தபடியே 'அங்கே இப்ப என்ன நேரம்' தொகுப்பை வாசித்துக் கொண்டிருந்ததாக சொல்கிறார் பா.ராகவன். 'ஐவேசு' கதையை தன் பதிவில் குறிப்பிட்டு எழுதியதன் வாயிலாக எனக்கு முதன் முதலாக அ.மு வை அறிமுகப்படுத்திய ஆசிப் அண்ணாச்சியும் அதன் நகைச்சுவையே தன்னை வெகுவாகக் கவர்ந்த அம்சம் என்று கூறியிருக்கிறார். ஆனால் என்னளவில் நகைச்சுவையைக் காட்டிலும் அ.மு வின் கதை சொல்லும் நேர்த்தியும் சொக்க வைக்கும் விவரணைகளுமே அவரது அதி சிறந்த அம்சங்களாகத் தோன்றுகின்றன.

ஜெயமோகனின் தாயார் பாதம் சிறுகதையில் "சும்மா தேனீமேலே ஏறி ஒக்காந்து ரீ….ம்னு நந்தவனமெல்லாம் சுத்தி, நந்தியாவட்டை மல்லிகை ரோஜான்னு பூப்பூவா உக்காந்து மண்ட மண்ட தேன்குடிச்சுட்டு வந்து எறங்கின மாதிரி ஒரு அனுபவம்." என்றொரு வரி இடம்பெற்றிருக்கும். அ.முத்துலிங்கத்தின் எழுத்தை வாசிக்கும் போதெல்லாம் இப்படியானதொரு அனுபவம் வாய்க்கத் தவறியதில்லை. அவரின் இணையதளத்தில் இருக்கும் 'மாம்பழம்' என்ற கட்டுரை நான் மிக மிக ரசித்துக் கிறங்கிப் படித்த கட்டுரைகளுள் ஒன்று. தோட்டத்திலிருக்கும் மாமரத்திலிருந்து வீட்டுக் குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்களுக்கான பழத்தைத் தேர்வு செய்து அதில் தங்கள் பெயர் எழுதிய சீட்டுக்களை கட்டி வைக்கின்றனர். அவற்றின் வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணித்து அவை முற்றிக் கனிந்ததும் அவரவர் கனியை பறித்து உண்டு மகிழ்கின்றனர். அவர்களுள் மிகச் சிறியவளான 3 வயது தங்கையின் மாம்பழம் குறித்து பின்வருமாறு விவரிக்கிறார் ஆசிரியர்.

"ஆக எஞ்சியது தங்கச்சியின் மாங்காய்தான். அது ஒவ்வொரு நாளும் பெருத்துக்கொண்டே வந்தது. அவளுடைய தலையளவுக்கு பெருத்த பிறகு நிறம் வைக்கத் தொடங்கியது. ஒருநாள் காலை பழுத்து கனிந்து சாப்பிடுவதற்கான பருவத்தை எட்டியது. அண்ணர் அதை ஆய்ந்து அவளிடம் கொடுத்தார். இரண்டு கைகளாலும் ஏந்திப் பிடிக்க கைகளில் அவளுக்கு போதிய பலம் கிடையாது. ஆனாலும் அவள் அதை கீழே இறக்கவில்லை. குழந்தையை அணைத்துப் பிடிப்பதுபோல நெஞ்சோடு சேர்த்து இறுக்கிக்கொண்டு வீடு முழுக்க அலைந்தாள். ஒரு புதுப் பொம்மை கிடைத்ததுபோல மகிழ்ச்சி. மதியம்வரை அதை நெஞ்சைவிட்டு கீழே இறக்கவில்லை. அதைச் சாப்பிடும் நோக்கமே அவளுக்கு கிடையாது."

இந்தப் பத்தியைப் படிக்கும் போதே மாம்பழத்தைத் தூக்க முடியாமல் தூக்கித் திரியும் குட்டிப் பெண்ணின் உருவம் மனக்கண்ணில் தோன்றியதோடு அவளின் மகிழ்ச்சி என் முகத்திலும் கசிந்து விரவிக் கொண்டிருந்தது. இறுதியாய் 'அதைச் சாப்பிடும் நோக்கமே அவளுக்குக் கிடையாது' என்ற வரியை வாசித்தபோது உண்டான மனக்கிளர்ச்சியை எப்படிச் சொல்வதெனத் தெரியவில்லை. ஏறத்தாழ அ.முவின் எழுத்துக்களை நானும் இப்படித்தான் தூக்கிக் கொண்டு திரிகிறேனோ என்று தோன்றுகிறது!

விவரணைகளைப் போன்றே அவர் கையாளும் உவமைகளும் மிக மிக அழகானவை. 'ஐயோ' எப்படித்தான் இப்படியெல்லாம் சொல்லத் தோன்றுகிறதோவென மாய்ந்து மாய்ந்து வியக்கச் செய்பவை.

"தாயின் கையை பறித்துக்கொண்டு ஓடும் குழந்தைபோல ஒரு முடிக்கற்றை நெற்றியிலே விழுந்தது"

"இப்பொழுதுதான் பிறந்த ஆட்டுக்குட்டி எழுந்து நிற்பதுபோல அவர் கால்கள் நடுங்கின"

"என்னுடைய முகம் சாத்தி வைத்த கதவு போல இருந்தது"

"ஒரு குளவியை அறைக்குள் விட்டு கதவைச் சாத்தியது போல அறையின் இந்த மூலைக்கும் அந்த மூலைக்குமாக கனகி சர்க் சர்க் என்று பறந்து கொண்டிருந்தாள்."

"குழந்தை அவசரமாக தாயைப் பின் தொடர்ந்தது. திடீரென நின்று, தானியத்தைக் கொத்துவதற்கு குருவி தயங்குவது போல யோசித்தது"

" கனடாவின் 143 வருட சரித்திரத்தில் முதன்முதலாக ஓர் ஈழத்தமிழர் உடலழகன் போட்டியில் பங்குபற்றியதுமல்லாமல் இரண்டாவது இடத்தையும் வென்றிருந்தார். அவர் பெயர் பகீரதன் விவேகானந். ஒரு மேப்பிள் இலை உதிர்ந்ததுபோல, ஒரு குறுக்கெழுத்துப் புதிர் பூர்த்தியானதுபோல, ஒரு வீதி விளக்கு சிவப்பிலிருந்து பச்சைக்கு மாறியதுபோல இந்தச் சம்பவம் மிகச் சாதாரணமாக மறக்கப்பட்டுவிடும் "

என்பவை சில எடுத்துக்காட்டுகள். எவருடைய நூலைப் பற்றியாவது சிலாகித்துப் பேசுகையில் அதில் வரும் மிகச் சிறந்த வசனத்தை சுட்டிக் காட்டி "இந்த ஒரு வசனத்திற்கே புத்தகத்திற்கு கொடுத்த மொத்த விலைப்பணமும் சரியாய்ப் போய்விட்டது" என்று குறிப்பிடுவது அ.முத்துலிங்கம் அவர்களின் வழக்கம். அவரது புத்தகத்தை வாசிக்கையில் குறைந்தது 50 முறைகளாவது இதே வரியை நினைவு கூர வேண்டியிருக்கிறது. உவமைகளைப் போன்றே ஒவ்வொரு கதையிலும் புதிதாக அறிந்து கொள்வதற்கென நிறைய சுவாரஸியமான செய்திகள் பொதிந்திருக்கும். அட! என புருவமுயர்த்தி ஆச்சரியப்பட வைக்கும்.

"ஆராய்ச்சி’ என்று ஒரு மாமரம். அதன் காய்கள் பனங்காய் அளவுக்கு பெரிசாக வளர்ந்து தன் பாரத்தை தானே தாங்க முடியாமல் வெடித்துவிடும். இன்னொரு வகை ’மத்தளம்தூக்கி’. நார்ச்சத்துள்ள இனிய பழம். இன்னொன்று ’வெங்காயம் காய்ச்சி’. இதை பழுக்க வைப்பதில்லை, இதில் வெங்காய வாசனை வரும் ஆகவே கறிக்கு பயன் படுத்துவார்கள்."


"தென் அமெரிக்காவில் 150 பேர் மட்டுமே கொண்ட ஓர் இனக்குழு உண்டு. அவர்களுடைய மொழியில் ’அரைகுறையாக அம்பு எய்தவன்’ என்பதற்கு ஒரு வார்த்தை உண்டு. அரைகுறையாக அம்பு எய்தால் மிருகம் வலியில் துடித்து உழன்றுதான் சாகும். அந்த மொழியில் ஆக மோசமாக ஒருவரை திட்டவேண்டும் என்றால் அந்த வார்த்தையை சொல்லி வைவார்கள். "

"ஆப்பிரிக்காவில் மணமுடிக்கும் முன்னரே பிள்ளை பெற்ற பெண்ணுக்கு மதிப்பு அதிகம். அவள் கர்ப்பம் தரிப்பது பிரச்னை இல்லாததால் அவளை மணக்க ஆடவர் போட்டியிடுவர். இந்தியப் படங்களில் ஒரு பெண் கற்பைக் காப்பாற்றப் போராடும் இடங்கள் அவர்களுக்குப் புரிவதேயில்லை."

"ஆப்பிரிக்காவில் வாழும் இந்தியர்கள் பிணத்தை எரிப்பதைப் பார்த்ததும் ஆப்பிரிக்கர்கள் கிலி பிடித்து ஓடிவிடுவார்கள். இது ஒரு காட்டுமிராண்டித்தனமான பழக்கம் என்று என்னிடமே சொல்லியிருக்கிறார்கள்".

இப்படி தனி நூலாய்த் தொகுக்குமளவிற்கு கதையெங்கும் பரவியிருக்கும் நுண்ணிய அவதானிப்புகள் மட்டுமல்லாது சாதாரணமாய் நகரும் கதையை ஒற்றை வரியால் சட்டென வேறு தளத்திற்கு உயர்த்திச் செல்லும் லாவகமும், மாலையா இரவா எனப் பிரித்தறிய முடியாதபடி மயங்கி வரும் பொழுதைப் போல உண்மையா புனைவா என்றுணர மாட்டாத மயக்கத்தோடு அனுபவங்களை விவரித்து செல்லும் பாங்கும், வெவ்வேறு தேசங்கள், பல்வேறு வாழ்க்கை முறைகள் என வாசிப்போருக்கு அந்நியமாயிருக்கும் அனைத்தையும் எளிய தமிழின் வழியாக மிக அணுக்கமானதானக் காட்டும் திறமையும், செறிவான சொற்களைத் தேடித் தேடிப் பயன்படுத்தும் வசீகரமும் அவரின் தனிச்சிறப்புக்களாக மிளிர்கின்றன.

அ.மு வின் கதைகளில் எதிரி, மட்டுப்படுத்தப்பட்ட வினைச் சொற்கள், மயான பராமரிப்பாளர், வேட்டை நாய், என் குதிரை நல்லது, முதலியவற்றோடு எனக்கு மிக மிகப் பிடித்தமான கதைகள் இரண்டு உண்டு. "அடுத்த புதன் கிழமை உன்னுடைய முறை" "உடனே திரும்ப வேண்டும்" ஆகிய 2 கதைகளையும் என்னால் மறக்க முடிந்ததே இல்லை.

இவை என் மனதில் ஆழப் பதிந்து அழியாமல் நின்று விட்டமைக்கு, இந்த இரண்டு கதைகளுமே உடல் நலமின்றித் துன்புறும் இளங்குழந்தையைப் பற்றியும் குழந்தையின் அவஸ்தையைக் காணச் சகியாத பெற்றோரைப் பற்றியுமான கதைகளாய் அமைந்தது காரணமாயிருக்கலாம். என் மகள் பிறக்கும் முன்பாகவே இவ்விரண்டு கதைகளையும் பதைபதைப்போடு மிகவூன்றிப் படித்திருந்தேன். அவள் பிறந்து வளர்ந்து முதன் முதலாகப் பின்னோக்கித் தவழத் தொடங்கிய நாட்களிலும், சமீபமாய் உடல்நலமின்றி இரவெல்லாம் கடுமையான சளித் தொந்தரவோடும் காய்ச்சலோடும் அவள் அவதிப்பட்ட நாட்களிலும் இக்கதைகளை மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்த படியே இருந்தேன்.

'அடுத்த புதன் கிழமை உன்னுடைய முறை' என்ற கதையில் வரும், தவழும் பருவத்துக் குழந்தையான லவங்கி திடீரென கடுமையான நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்படுவாள். ஒரு சுவாசப் பை முற்றிலும் மடிந்து உயிருக்கு ஆபத்தான நிலையிலிருக்கும் குழந்தைக்கு ஊசி மருந்து செலுத்துவதும், சலைன் ஏற்றுவதும், உடலில் மெல்லிய குழாயைச் செலுத்தி சிறுநீர் எடுப்பதுமாக மருத்துவ சோதனை என்ற பெயரில் அலைக்கழிப்பார்கள். ஒவ்வொன்றிற்குமாக அழுது அழுது களைத்த குழந்தை, எக்ஸ்ரே எடுப்பதற்காக அந்நிய மனிதர்கள் இருவர் அவளை அழுத்திப் பிடித்ததும் அது வரை இல்லாத அளவுக்கு கதற ஆரம்பிப்பாள். இதற்கு அனுமதித்த தன் அப்பாவை நம்ப முடியாத கண்களால் பார்ப்பாள். முதல் மொட்டை அடிப்பதற்காக அமுதினியை எல்லாருமாக சேர்ந்து அழுத்திப் பிடித்து தலையில் தண்ணீர் தெளித்த போது இதே போன்ற பார்வையுடன் தான் கதறித் தீர்த்தாள். அம்மா.. அம்மா என்றே ஓயாமல் அழுதாள். சுற்றியிருந்த அத்தனை பேரையும் விடுத்து அவள் கருவிழிகள் என்னை மட்டுமே ஊடுருவித் துளைத்தன. அவ்விழிகளில் கண்ணீரோடு சேர்ந்து நீயுமா இதற்கு உடந்தை? என்ற கேள்வியும் கலந்து கன்னத்தில் இறங்கியபடியே இருந்தது.

மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகளை மனைவியின் வசம் ஒப்படைத்து, இரண்டே நாட்களில் திரும்பி விடுவதாக வாக்களித்து விட்டு பணி நிமித்தமாய் தூர தேசம் செல்லும் தந்தை தொடர்ந்து 8 நாட்களாக ஊருக்குத் திரும்ப இயலாமல் அவதிப்படுவதைப் பற்றிய சிறுகதை 'உடனே திரும்ப வேண்டும்'. போதாக்குறைக்கு கைக்குழந்தையான அவர் மகளின் தோள் மூட்டில் பூச்சியொன்று முட்டையிட்டு கண்ணுக்குத் தெரியாத அந்த முட்டைப்புழு சருமத்திற்குள் வளர ஆரம்பித்து சருமம் வீங்கத் தொடங்கியிருக்கும். வலி தாளாமல் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டேயிருக்கும். விமானம் பழுதாகி விசா இல்லாமல் அல்லாடி மீண்டும் விமானம் ஏற முடியாமல் தவித்து முழுதாக 8 நாட்கள் கழித்து அவர் திரும்பி வரும் போது அப்புழு வளர்ந்து குழந்தையின் தசையைப் பிளந்து கொண்டு வெளியேறிப் போயிருக்கும். குழந்தை சுரம் குறைந்து களைப்போடு ஒரு குட்டித் தலையணையில் தன் குட்டித் தலையை வைத்துப் படுத்திருக்கும்.

இரு கதைகளிலுமே குழந்தை உடலால் அனுபவிக்கும் வேதனைக்கு சற்றும் குறையாத வேதனையைப் பெற்றோர் மனதால் அனுபவிக்கின்றனர். எப்போது நினைத்துக் கொண்டாலும் மையுறிஞ்சும் தாளைப் போல நெஞ்சில் துக்கம் பரவிப் பாய்வதைத் தடுக்க முடிந்ததில்லை. வாசிக்கும் போது கண்ணோடும் கையிலிருக்கும் நூலோடும் மட்டும் நின்று விடாமல் வாசிப்பவரின் நெஞ்சோடு கலந்து வாழ்க்கை முழுவதும் துணை வரும் படியாக இப்படி ஒரு சில கதைகளே வாய்க்கின்றன. என் கல்லூரிக்கால முதல் வகுப்பில் 'இலக்கியத்தின் பயன் என்ன?' என்று எங்கள் ஆசிரியர் கேட்ட கேள்விக்கான பதிலையும் இது போன்ற சந்தர்ப்பங்களில் மட்டுமே நான் கண்டு கொள்கிறேன்.

நான் தமிழ் இலக்கியம் பயின்றவள். எந்தவொரு பொருள் குறித்தும் காய்தல் உவத்தல் இன்றி ஆராய்ந்து நேர்மையான முறையில் அவற்றின் நிறை, குறைகளை முன்வைத்து கட்டுரை படைக்கப்பட வேண்டும் என்றே எனக்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் எனக்குப் பிடித்தமானவை குறித்து நானெழுதும் கட்டுரைகள் அனைத்திலும் சிலாகிப்புகள் மட்டுமே நிரம்பியிருக்கின்றன. 'எழுதுங்கால் கோல் காணாக் கண்ணே போல்' என்பார் வள்ளுவர். ரோஜாக்களைப் பற்றி பேச முனைகையில் முட்களை முன்னிறுத்த வேண்டிய அவசியம் தான் என்ன?

Friday, January 9, 2009

பாற்கடல்!

சித்துவிற்கு புத்தகங்கள் என்றால் அலாதிப் ப்ரியம். உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளின் பட்டியலில் நிச்சயம் அவையும் இடம் பெற்றிருப்பதாய் சாதிப்பார்! இந்த முறை சென்னையிலும் ஈரோட்டிலுமாய் புத்தகக் கடைகளில் ஏறி இறங்குகையில் லா.ச.ரா வின் 'பாற்கடலை' அதிதீவிரமாய் தேடிக் கொண்டிருந்தார். ஒரு வழியாய் ஈரோடு பாரதி புத்தகாலயத்தில் லா.ச.ரா -வின் படைப்புலகம் கிடைத்தது.. மேலதிகமாய் கவிஞர் அபியின் விமர்சனங்களோடு.

சிறுகதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள் மற்றும் குறுநாவல்கள் பற்றிய அறிமுகங்களோடு கூடிய அத்தொகுப்பு நூலை இருள் கவியத் தொடங்கிய மாலையொன்றில் காவிரி ஆற்றங்கரையில் அமர்ந்து படிக்கத் துவங்கினோம். காவிரி முன் போலில்லை. என் சின்னஞ்சிறு விழிகளில் விரிந்து விரிந்து.. என் இளம் பிராயங்களின் கரைகளில் நிரம்பித், ததும்பிக் கொண்டிருந்தது போல பின்னெப்போதும் அது இருக்கவில்லை. ஆறும் கல்பொரு சிறு நுரையாகிக் கொண்டிருக்கிறதோ என்னவோ? என்றாலும் ஆற்றங்கரைகளுக்கேயுரிய தனி வசீகரமும் இல்லாமலில்லை.

"சிறு அசைவுகளில் பெரிய விளைவுகள் உண்டாக்க வேண்டும். சொல்லாமல் உணர்த்தும் நளினம் கைவர வேண்டும். தமது நடவடிக்கைகள் மெளனத் தளத்தில் இருக்க வேண்டும்" என்று தீவிரமாக ஆசைப்படுபவர் லா.ச.ரா என்கிறார்
அபி.

அபியின் கணிப்பு சரி தான் என்றாமோதிக்கிறது 'பாற்கடல்'. பாற்கடலைப் போல, படிக்கப் படிக்க உடம்பு சிலிர்த்துக் கொண்டதும், மனம் பெரு மைதானம் போல விரிந்து கொண்டே சென்றதும், படித்து முடிக்கையில் பேரானந்தமும்
பெருந்துக்கமுமாய் தொண்டை அடைத்துக் கொண்டதுமான மெய்ப்பாடுகள் வேறெப்போது நிகழ்ந்தனவென்று நினைவிலில்லை. எங்கள் முன்னால் வற்றி இளைத்து, உடம்பெங்கும் எலும்புகள் துருத்தினாற் போல் நகர்ந்து கொண்டிருந்த நதி கூட சட்டென்று பாற்கடலாகி விட்டது போலொரு பிரமை தட்டிற்று. சொல்லி வைத்தாற் போல் நிறைவாய் இரு புன்னகைகள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன.

'நல்ல கதை... நல்ல்ல கதை' - சித்து தன்னையறியாமல் முணுமுணுத்துக் கொண்டேயிருந்தார். கடிதமா கதையா என்று பிரித்துப் பார்க்கவியலாதபடி வெகு இலாவகமாய் நகரும் கதையின் கட்டமைப்பை வெகு நேரம் வியந்து கொண்டிருந்தார். வலைப்பதிவில் நிச்சயம் எழுதவேண்டும் என்றார்.

இதோ இப்போது பாற்கடல் பற்றி எழுதுவது என்று முடிவான பின்னும் கூட லா.ச.ரா விரும்பும், அவர் படைப்புகள் அனைத்திலும் அவர் நிகழ்த்திக் காட்டியிருக்கும் 'சொல்லாமல் உணர்த்தும் நளினம்' கைவருமா
என்ற சந்தேகத்தில் தான் நான் இப்படி சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறேன்.

இக்கட்டுரை நிச்சயம் ஒரு விமர்சனக் கட்டுரையில்லை.. இன்னின்ன நிறைகள், இத்தனை குறைகள் என்று பட்டியலிடும் எண்ணமில்லை. மாறாய் ஒரு அளப்பரிய உன்னத கணத்தை, எப்போதும் மாறாமலிருக்கும் உண்மையொன்றை, மனம் தளும்பும் மகிழ்ச்சியொன்றை தற்செயலாய் ஸ்பரிசித்து விட்ட அனுபவத்தை மட்டுமே இதில் சுட்டிப் போக விரும்புகிறேன். ஒரு விழைவு.. அல்லது ஆற்றுப்படுத்தும் முயற்சி.. அல்லது முதன்முதலாய் கடல் பார்க்கும் குழந்தையின் ஆச்சரியம்!

"குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்து லட்சுமி, ஐராவதம், உச்சஸ்ரவஸ் எல்லாம் உண்டாயின. .... ஆலகால விஷமும் அதிலிருந்து தான் உண்டாகியது; உடனேயே அதற்கு மாற்றான அம்ருதமும் அதிலேயே தான்.."

என்று நிறைவுறுகிறது கதை. நம் பழஞ்சமூகம் முன்னொரு காலத்தில் கட்டமைத்திருந்த கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பம் தான் பாற்கடலின்
கதைக்களமாகியிருக்கிறது. கூட்டுக்குடும்பங்கள் பற்றிய தற்காலத்தைய அவநம்பிக்கையை, முன்மதிப்பீடுகளை எல்லாம் பொட்டிலறைந்தாற் போல ஒரே ஒரு கதையின் மூலம் களைந்து விட முடியுமா என்ற ஐயப்பாட்டை சாத்தியமாக்கியிருக்கிறது லா.ச.ரா வின் எழுத்து. அன்பு, பாசம், காதல், நெகிழ்ச்சி, உறவு, பிரிவு.... இன்னும் பின்னவீனத்துவ வாதிகளின் கேலிக்குள்ளாகும் இதேபோன்ற இன்னபிற பொய்களில் நிறைந்திருக்கும் உண்மையின் சதவீதத்தை அன்னம் போல பிரித்துக் காட்டியிருக்கிறது.

கதை படித்த நாளிலிருந்து பாற்கடல் என்ற படிமம் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். எவர் உருவாக்கியிருப்பார்கள் இதை? கற்பனைக்கெட்டா வண்ணம் ஆழமும் விரிவுமாய் பரவியிருக்கும் உவர்கடலை, முழுவதும் பாலால் நிரப்பிப் பார்க்க எந்த மனம் விரும்பியிருக்கும்? விஷமும் அமிர்தமும் அதிலிருந்தே வந்ததென்ற கற்பனை எவர் மனத்தில் உதித்திருக்கும்?

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த கதை, மனதில் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்குமிடையிலான தடுப்புச் சுவற்றை வலுவுற மேலெழுப்பிக் கட்டியதெனில் லா.ச.ராவின் 'பாற்கடல்' இருமைகளுக்கிடையிலான தடித்த கோட்டினை முற்றிலும் இல்லாமலாக்கியிருக்கிறது. உண்மை தான். சூரியன் ஒரேயிடத்தில் இருக்கையில் இரவேது? பகலேது? உறவுகளும் அவை தரும் துன்பங்களும் அதைத் தொடர்ந்த தேற்றுதல்களும் பின் வரும் இன்பங்களும் என்றான வாழ்க்கைச் சுழற்சி கூட இத்தனை நாட்கள் இரவு பகலைப் போல வேறு வேறாய் காட்சியளித்தவை தானில்லையா? நன்றும் தீயதுமான அல்லது நன்மையும் தீமையுமற்ற பாற்கடலைப் போன்றது தான் குடும்பங்களெனில் ஒவ்வொரு மனிதரையும் கூட பாற்கடலாய்த் தான் பார்க்கத் தோன்றுகிறது!

Friday, September 21, 2007

குறுந்தொகை - அறிமுகம் -2



"நீரும் செம்புலச்சேறும் கலந்தது போலே கலந்தோம் நாமே"


-- சில்லுனு ஒரு காதல்!


குறுந்தொகை என்ற தொகுப்பு நூல் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர், மற்றும் பாணர் முதலான சமூகத்தின் பல மட்டங்களிலிருக்கும் தமிழறிந்த மக்களால் எழுதப்பட்ட பாடல்களைக் கொண்டிருக்கிறது. மொத்தம் 400 பாடல்கள். 4 முதல் 8 அடிகளுக்கு மிகாமல் எழுதப்பட்ட பாடல்களில் உணர்ச்சிகளைக் கனம் குறையாமல் கவிதையாய்க் கட்டமைத்திருக்கிறது. குறுந்தொகை உவமைகளுக்குப் பெயர் போன இலக்கியம். 'இப்படி கூட சிந்திப்பார்களா?' என்று நம்மை ஆச்சரியத்தில் தள்ளும் அற்புத உவமைகள் ஏராளமிருக்கின்றன. அவற்றில் இதுவும் ஒன்று!

கணவன் வேலைக்காக வெளியூர் சென்றுவிட அவன் பிரிவால் வாடும் மனைவி...


"பூ இடைப்படினும் ஆண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போல...."

என்று கணவனுடனான தன் நெருக்கத்தையும் பிரிவுத்துயரையும் சொல்கிறாள்.

மகன்றிற் பறவை (அன்றிற் பறவையாகவும் இருக்கலாம்!) என்பது எப்போதும் தன் இணையோடு சேர்ந்து நீரில் நீந்திக் கொண்டிருப்பது. அப்படி நீந்தி வருகையில் இரண்டு பறவைகளுக்குமிடையில் நீரில் பூத்திருக்கும் தாமரையோ அல்லியோ அல்லது ஏதேனுமொரு நீர்ப்பூவோ எதிர்ப்படுமானால் அந்தப் பூவைச் சுற்றிவந்து மீண்டும் இணையும் சிறு பொழுதிற்கு இரண்டு பறவைகளும் ஓராண்டு பிரிந்தது போலத் தவித்திருக்கும்... அப்பறவையை போன்றவள் தான் நானும் என்கிறாள்!

மற்றுமொரு பெண்... "மழைக்காலத்திற்குள் திரும்பி வந்துவிடுவேன்" என்று சொல்லிப்போனவன் வெகுநாட்களாய் வராததால் காத்திருப்பின் உக்கிரம் தாளாமல் அவனைத் திட்டத் தொடங்குகிறாள்

"வாரார் ஆயினும் வரினும் அவர் நமக்கு
யார் ஆகியரோ? தோழி! நீர
நீரப் பைம்போது உளரி, புதல
பீலி ஒண்பொறிக் கருவிளை ஆட்டி
நுண்முள் ஈங்கைச் செவ்வரும்பு ஊழ்த்த
வண்ணத்துய்ம்மலர் உதிர, தண்ணென்று
இன்னாது எளிதரும் வாடையொடு
என் ஆயினாள் கொல் என்னா தோரே?"


-- 110, கிள்ளி மங்கலங் கிழார்.


"அவர் இனி வராவிட்டாலும் வந்தாலும் எனக்கு அவர் யாரோ போன்றவரே தோழி! நீரில் மலரும் மொட்டுக்களை மலர்த்தி மயில் தோகை போன்ற கருவிளை மலர்களை அசைத்து, நுண்ணிய முட்களையுடைய ஈங்கை மர அரும்புகளை விரித்து, வண்ண மலர்களை உதிர்த்தபடி சில்லென வீசி துன்பம் தரும் இந்த வாடைக்காற்றில் அவள் என்ன ஆனாளோ என்று
வருந்தாதவன் வந்தால் என்ன? வரா விட்டால் தான் என்ன? " என்பது அவள் கோபம்!

'உளரி, ஆட்டி, உதிர' என மலர்களின் துன்பத்தைச் சொல்வதன் மூலம் குளிர்க்காற்றும் மழையும் தன்னை வருத்துவதைச் சொல்லாமல் சொல்லும்
தலைவி "இனி அவருக்கும் எனக்கும் சம்பந்தமில்லை" என்று சினந்து கொள்கிறாள்!!


" நைட் போன் பண்றேன்னு சொல்லிட்டு பண்ணலன்னா எனக்கு கோபம் வராதாடி? எவ்ளோ நேரம் காத்திட்டிருந்தேன் தெரியுமா?
அவ வெயிட் பண்ணிட்டிருப்பாளேன்னு கூட தோணலன்னா இவனெல்லாம் என்ன லவ்வர் சொல்லு?"


என்று கோபமும் ஆற்றாமையுமாய் என் தோழிகள் புலம்பும் தருணங்களில் என் மனதில் இந்தப் பாடல் தவறாமல் தலைகாட்டி புன்னகை பூக்க வைக்கிறது!!

இது ஒரு எல்லை என்றால்.. கணவன் சொல்லிப் போன மழைக்காலம் வந்த பின்னும் அவன் வராத நிலையில் " அவர் சொன்ன சொல் தவறாதவர்..
இந்த மழை தான் பருவம் தப்பிப் பெய்கிறது" என்று சொல்லிக் கொள்ளும் அதீத நம்பிக்கை உணர்வுகளையும் காண முடிகிறது!

பிரிவின்போது பொழுது சாயும் வேளைகள் தரும் துயரத்தை உணர்ந்திராதவர்கள் யார் இருக்க முடியும்? இந்தப்பாடலும் அப்படி ஒரு பிரிவின் துயரைப் பேசுகிறது..


"எல்லை கழிய முல்லை மலர
கதிர்சினம் தணிந்த கையறு மாலை
உயிர்வரம்பு ஆக நீந்தினம் ஆயின்
எவன் கொல்? வாழி தோழி!
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே!"


--387, கங்குல் வெள்ளத்தார்


"பகலின் எல்லை முடிந்து முல்லைப்பூக்கள் மலரத் தொடங்கிவிட்ட மாலை நேரம்! சூரியனின் சினம் தணிந்த பின்னால் வந்து கொண்டிருக்கும் இந்த தாங்கிக் கொள்ளவியலாத மாலை நேரத்தை உயிர் போவதற்கு முன்பாக என்னால் நீந்திக் கடந்து விட முடியுமா தோழி? இரவு வெள்ளம் கடலை விடவும் பெரிதாய் இருக்கிறது" என்கிறாள் ஒரு பெண்!

இரவென்ன வெள்ளம் போன்றதா? அதுவும் உயிர் போவதற்குள் நீந்திக் கடந்துவிட முடியாத கடல் போன்றதா!! என்ன அற்புதமான உவமை இது? இதைப் படித்ததிலிருந்து ஜன்னல் திறந்து இரவு வானம் பார்க்கையில் எல்லாம் இருள் கடலாய்ப் பொங்கிப் பெருகுவது போன்றதோர் பிம்பம் எழுவதை என்னால் தவிர்க்க முடிவதில்லை! இப்பாடலை எழுதியவர் தன்
பெயரைக்கூட குறிப்பிட்டுச் சொல்லிக் கொள்ளாததால் 'கங்குல் வெள்ளத்தார்' என்றே குறிக்கப்பட்டிருக்கிறார்!

குறுந்தொகைப் பாடல்கள் ஒவ்வொன்றிலும் அளவிட முடியாத காதல் உணர்வுகள் தேக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

பெண்ணொருத்தியைப் பார்த்த நாளிலிருந்து பித்துப் பிடித்தவனாகிறான் இளைஞன் ஒருவன். அவனின் இயல்பு பிறழ்ந்த நிலையைக் காணச்சகிக்காத அவன் நண்பர்கள் அவனை கடிந்து கொள்கின்றனர். அவர்களுக்கு அவன் இப்படி பதில் தருகிறான்...

"இடிக்கும் கேளிர்! நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கைஇல் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல
பரந்தன்று இந்நோய்; நோன்று கொளற்கு அரிதே"


-58, வெள்ளி வீதியார்


"என்னை இடித்துரைக்கும் நண்பர்களே! என் பிரச்சினையை உங்களால் நிறுத்த முடிந்தால் அது எனக்கு நன்மையுடையதாய் இருக்கும். வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும் பாறை ஒன்றின்மீது வைக்கப்பட்டிருக்கும் வெண்ணெயை கைகள் இல்லாத, வாய் பேசவியலாத ஒருவன் காக்க முயல்வதைப் போல நான் தவித்துக் கொண்டிருக்கிறேன். வெண்ணெய் உருகிப் பாறையில் பரவுவது போல காதல் என்னுள் பரவிக் கொண்டிருக்கிறது. இந்நோய் தாங்கிக் கொள்வதற்கு அரிதானது" என்பது இதன் பொருள்.


"கை இல் ஊமன் கண்ணிற் காக்கும் வெண்ணெய் உணங்கல் போல"

குறுந்தொகையில் என்னை வெகுவாய் அசர வைத்த உவமை இது! கைகளிருந்தால் உருகும் வெண்ணெயைத் தடுத்து நிறுத்த இயலும். பேச முடிந்தால் எவரையேனும் உதவிக்கழைக்கலாம். ஏதும் செய்யவியலாமல் வெண்ணெய் உருகி வழிதலை கண்களால் கண்டபடி தவிப்பது எத்தனை கொடுமை....என்ன அழகான கற்பனை!

இவை தவிர குறுந்தொகையில் புகழ் பெற்ற பாடல் ஒன்றுண்டு.

"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"


-- செம்புலப் பெயல்நீரார்

"உன் தாயும் என் தாயும் யாரோவென தொடர்பற்றவர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் அறிமுகமானவர்கள் இல்லை. பாலை மண்ணில் பெய்த மழை போல நம்மிருவர் நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன" என்பது இப்பாடல்.

செம்புலம் என்பது பாலை, செம்மண் என்ற இரண்டு அர்த்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. மணலில் தண்ணீர் சிந்திப் பார்த்ததுண்டா நீங்கள்? தண்ணீர் விழுவதும் அதை மணல் உறிஞ்சிக் கொள்ளலும் கண்ணிமைக்கும் நொடிகளில் நிகழும். அதைப் போல பிரித்தறிய முடியாத கணங்களில் உள்ளங்கள் கலந்தன என்றும் கொள்ளலாம். செம்மண்ணில்
புழுதியும் வாசனையும் கிளப்பியடி பெய்யும் மழை நீர் மண்ணோடு கலந்த வினாடியில் சுயமிழந்து தானும் செந்நிறம் கொள்வதுபோல நெஞ்சங்கள் ஒன்றாய்க் கலந்தன என்றும் கொள்ளலாம். எதுவான போதிலும் கண்டதும் காதல் என்ற அனுபவத்தைப் பெற்றவர்களுக்கு இந்த பாடல் மறுதலிக்க முடியாததாய் இருக்கக் கூடும்.

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த வரிகளைத்தான் உணர்ச்சி குன்றாமல் இன்னும்

"நீரும் செம்புலச் சேறும் கலந்தது போல கலந்தோம் நாமே"


என்று பாடிக் கொண்டிருக்கிறோம்! இப்போது சொல்லுங்கள் சங்க இலக்கியங்களில் அர்த்தங்கள் ஏதுமில்லையா?

குறுந்தொகை - அறிமுகம் - 1

வலைக்கு வந்த நாள் முதலாய் சங்க இலக்கியங்கள் குறித்த அறிமுகம் தரவேண்டும் என்ற விருப்பம் உள்ளே கனன்று கொண்டேயிருக்கிறது. சித்தார்த்தின் பதிவுகள் அந்த விருப்பத்தைப் பெரு விழைவாய் மாற்றியிருந்த போதும் தொடர்ந்து நான் தயங்கியபடியே இருந்ததற்குக் காரணம், சொல்லும் பொருளுமாய் செறிந்திருக்கும் பாடல்களை அதன் அடர்வு குன்றாமல் அர்த்தமிழக்காமல் எளிமைப்படுத்திவிட இயலுமா என்ற சந்தேகம் நீடித்து வந்ததே. கொஞ்சம் பிசகினாலும் வலைப்பதிவு வகுப்பறையாகி கற்பித்தலுக்கான த்வனியோடு என் வார்த்தைகள் இயங்கிவிடக் கூடிய அபாயமிருப்பதாலேயே இந்த முயற்சியை இத்தனை நாட்களாய்த் தள்ளிப் போட்டிருந்தேன். அதனால் இதை பதிவென்று கொள்வதை விடவும் என் முதல் முயற்சி என்று கூறிக் கொள்வது என் பிழைகளை நீங்கள் மன்னிக்க உதவலாம்!

சங்க இலக்கிய அறிமுகம் எழுதுவதென்று முடிவு செய்துவிட்ட பிறகு மொத்தமுள்ள 2387 பாடல்களில் எதைச் சொல்வது எதை விடுப்பது என்ற மலைப்பு வந்தது. 3 அடி முதலாய் 782 அடிகள் கொண்ட நெடும்பாடல்கள் வரை அனைத்தும் திரும்பத் திரும்ப காதலையும் வீரத்தையுமே பேசிக்கொண்டிருக்கையில் சிறப்பித்தும் வியந்தும் சொல்லவேண்டிய பாடல்களைத் தேர்ந்து கொள்வது கொஞ்சமல்ல... நிரம்பவே சிரமமான காரியமாயிருந்தது. என்றாலும் சுட்டிக் காட்டவும் சிலாகித்துச் சொல்ல்வும் எப்போதுமே எனக்கு குறுந்தொகை எளிதில் வசப்படுமென்பதால் அதையே இப்போதும் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.


பொதுவில் சங்க இலக்கியங்கள் பற்றிய புரிதலின்மையும், அலட்சியப் போக்கும் மேலதிகமாய் "சங்க இலக்கியங்கள் சாமான்ய மக்களைப் பற்றிப் பேசுவதில்லை" என்ற மேம்போக்கான கருத்துருவாக்கமும் நிலவி வருவதை நான் கண்டு வருகிறேன். உணர்வுகளில் மேல்தட்டு, கீழ்மட்டம் என்ற பிரிவினைகள் சாத்தியமா என்ன? பிரிவின் வலி, இழத்தலின் துயரம், காதலின் அவஸ்தை, ஊடல், கூடல் போன்ற நுண்ணிய அக உணர்வுகள் அனைத்தும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் கூட பொதுவாயிருப்பதை சங்க இலக்கியம் சுட்டிக் காட்டத் தவறிவிடவில்லை. மக்களால் மக்களுக்காக எழுதப்பட்ட இலக்கியங்கள் என்பதால் அரசனொருவனின் பாடலுக்கிணையாய் விவசாயியின் கவிதையும், பாடிப்பிழைக்கும் பாணனின் பாடலும், பெண்களின் கவித்திறனும் இடம்பெற்றிருக்கும் அற்புதம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது!

என் பதின்மங்களில் முதன்முதலாய் அடர்பச்சை நிற அட்டையில் "குறுந்தொகை" என்று பொன்னிற எழுத்துகளில் ஒளிர்ந்த அந்த தடித்த புத்தகத்தைப் பிரிக்க நேர்ந்தபோது இது தமிழ்தானா என்ற சந்தேகம் வந்தது எனக்கு. திருவிழாவில் தொலைந்த குழந்தையாய் அந்த புத்தகங்களின் பக்கங்களுக்குள் அலைபாய்ந்து ஓரளவு வழியறிந்தேன். என்றாலும் அத்தனை பாடல்களும் வெகுவாய் சலிப்பூட்டின. மீண்டும் மீண்டும் காதல், காமம், ஊடல், கூடல், பிரிதல், காத்திருத்தல் என்று வந்த பாடல்களைப் பார்த்த போது 'இதைவிட்டால் எழுத்தில் பதிவு செய்ய வேறொன்றுமே இல்லையா தமிழர்களுக்கு?' என்ற வெறுப்பும் 'இதுவா கடலை வென்று,காலத்தை வென்று இன்னமும் பேசப்பட்டுக் கொண்டேயிருக்கிறது?' என்ற வியப்பும் ஒருமித்துத் தோன்றின.

வெகு நாட்களுக்கு பேடி கை வாள் போல அந்த புத்தககம் பயன்படாமலே இருந்தது என்னிடம். ஆனால் வெறும் கற்களென நான் ஒதுக்கியவை செப்பமுற செதுக்கப்பட்ட கடவுட் சிலைகளென காலம் கடந்த புரிதல்களின்போது விளங்கியது. கவிதை எப்போதும் கவிதையாகவே இருக்கிறது.. அதைப் புரிந்து கொள்ளக்கூடிய திறனும் அதற்கேற்ற உணர்வுகளும்தான் அதை ஏற்கவும் நிராகரிக்கவும் காரணங்களாகின்றன.

மனிதர்கள் காதலித்துக் கொண்டிருக்கும் வரையில், எக்காலத்திலும் சலித்து விடாத ஒன்றாய் ஆண் - பெண் உறவுகள் தொடர்ந்து வரும் வரையில் உணர்ச்சிகளின் சமுத்திரமாய் விளங்கும் இப்பாடல்கள் தங்களின் தனித்துவத்தை இழந்துவிடப் போவதில்லையென்றே தோன்றுகிறது. நம்மையொத்த முகச்சாயல் கொண்ட ஒருவரை எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தால் எப்படியொரு இன்ப அதிர்வெழுமோ அதே அதிர்வை இப்பாடல்களும் தருகின்றன.

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை என்ற எட்டு நூல்கள் சேர்ந்த எட்டுத்தொகை என்ற தொகுப்பும் இன்ன பிற பத்து நூல்கள் அடங்கிய பத்துப்பாட்டு என்ற தொகுப்பும் இணைந்து சங்ககால இலக்கியங்கள் என்ற பெயரில் வழங்குகின்றன. இவற்றில் என்னைப் பெரிதும் மயக்கியிருக்கும் குறுந்தொகையின் நானூறு பாடல்களில் ஒரு சில துளிகளை மட்டுமே இங்கு சுட்டிக்காட்டவிருக்கிறேன்.

செய்யுட்களுக்கு அருஞ்சொற்பொருளும் தெளிவுரைகளும் தந்து செல்வது என் நோக்கமன்று. 'நம் தமிழில் இவையும் இருக்கின்றன, தெரிந்துகொள்ளுங்கள்' என்று ஆற்றுப்படுத்தும் முயற்சியாகவே இதனைத் தொடங்குகிறேன்.

Thursday, September 20, 2007

வாழ்வைச் சுமத்தல்


"எல்லாத்தையும் விட்டுட்டு செத்துப் போய்டலாமா?"

என்று எந்த ஒரு வலி மிகுந்த கணத்திலாவது நீங்கள் நினைக்காமல் இருந்ததுண்டா?

முதுகின்மேல் கனக்கும் வாழ்க்கையின் பாரம் அதிகரிக்கையில், துயரங்களின் துரத்தல்களுக்குப் பணிந்து ஓடிக் களைத்து மூச்சிரைத்து நிற்கையில் ஏதோவோர் கணத்தில் எல்லோருக்குமே விட்டு விடுதலையாவதற்கான வேட்கை வருகிறது இல்லயா? சாலைச் சந்திப்பில் நின்றபடி போக வேண்டிய பாதையைத் தேர்ந்தெடுப்பது போலவே பிரச்சினைகளின் விளிம்பில் நின்றபடி வாழ்வா? சாவா? என்று திசை தீர்மானிக்க வேண்டிய கட்டாயங்களுக்கு 'தற்கொலை' மிகச்சிறந்த தப்பித்தலாய் அமைந்து விடுகிறது.

நேற்றும்கூட தனது இரண்டு பிள்ளைகளுடன் தீக்குளித்து இறந்து நேற்றைய முக்கியச்செய்திகளில் இடம்பிடித்தார் ஒரு பெண். இப்படி தினமும் காலையில் கொலையும் தற்கொலையுமான தகவல்களால் நிரம்பிவரும் நாளிதழ்கள் எல்லாம் கண்களுக்கும் கவனங்களுக்கும் வெகுவாய் பழக்கப்பட்டுப் போய் நம்மை சகஜ நிலையிலேயே வைத்திருப்பது எத்தனை குரூரமானது?

மக்கள் தொடர்பு ஊடகங்களை பகுதிநேரங்களில் சார்ந்திருக்கும் நான் தினமும் ஒரு சில மரணச்சேதிகளையாவது ஊருக்குச் சொல்ல வேண்டியவளாயிருப்பதால், "தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்" "மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார்" என்பன போன்ற சொற்கோர்வைகள் ஏதோ "இன்று திங்கட்கிழமை"" என்பது போலத்தான் காதில் விழுகின்றன. மேலதிகமாய் விஷம் குடித்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவன் சற்று வீரியமுள்ள எதையாவது குடித்துத் தொலைத்திருக்கக் கூடாதா? தலைப்புச் செய்திக்கு உபயோகப்பட்டிருக்குமே என்ற ரீதியிலான தொழில் தர்மங்களையும் சந்தித்ததுண்டு. என்றாலும் சில துர்மரணங்கள் கண்ணாடியில் வீசப்பட்ட கல்லாய் உணர்வுகளை, வாழ்வின் அஸ்திவாரங்கள் மீதான அடிப்படை நம்பிக்கைகளை சிதறடித்துப் போவதைத் தவிர்க்க முடிவதில்லை.

சேலத்தில் 10 மாதக்குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்று தானும் தூக்கு மாட்டி இறந்து போனாள் ஒரு தாய். கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பது போல வாளியில் எடுத்தார்கள் அந்த குழந்தையை. வாளியின் பக்கவாட்டில் சாய்ந்தபடி உறங்குவது போல மரித்திருந்த அந்தப் பிள்ளை இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் எதோவோர் நடுநிசியிலும் பின்னிரவுகளிலும் என் உறக்கம் கலைத்தபடியே இருக்கிறது.

இதோ நாம் சந்தோஷமாய்ச் சிரித்துக் கொண்டிருக்கிற நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருக்கிற, கதைத்துக் கொண்டோ, காதலித்துக் கொண்டோ, பொழுது போக்கிக் கொண்டோ இருக்கின்ற இந்த கணங்களில் எங்காவது யாராவது நெஞ்சம் வெடிக்கும் வேதனையிலும் விரக்தி மற்றும் வெறுப்பைச் சுமந்தபடியும் சாவதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருப்பார்களோ என்ற எண்ணம் அதிபயங்கரமாயும் தாங்க முடியாததாயுமிருக்கிறது.

கொடைக்கானலில் சூசைட் பாய்ண்ட் பார்த்தபோதும் கூட அடிவயிற்றில் சில்லிட்ட பயத்தை விடவும், வழியும் கண்ணீருடனோ விரக்தியில் வாடிப்போன முகத்துடனோ அங்கு வந்து நின்றிருந்து கசப்பின் உச்ச கணங்களில் உயிரை வீசியெறிந்து தற்கொலை கொண்ட மனிதர்களைப் பற்றிய கற்பனை தாங்க முடியாததாயிருந்தது. அங்கு வீசும் காற்றிலும் அவர்களின் துயரமும் கண்ணீரின் ஈரமும் மிச்சமிருப்பதாய்ப் பட்டது.

நினைவறிந்து இதுவரை 2 முறை என்னை உலுக்கியெடுத்த உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. முதல் தற்கொலை ஜெயஸ்ரீயினுடையது. 'பள்ளியிறுதித் தேர்வில் தோல்வி' என்ற வெகு அற்பமான காரணமே வாழ்க்கையை முடித்துக் கொள்ள போதுமானதாயிருந்தது அவளுக்கு. பாதம் மறைக்கும் பட்டுப்பாவாடைகளும், காதை நிறைக்கும் சதங்கைக் கொலுசும், திரும்பிப் பார்க்க வைக்கும் முகமும் ஜெயஸ்ரீயின் தனித்துவமான அடையாளங்கள்.

என்ன காரணத்தாலோ என்னை மிகவும் நேசிப்பவளாயிருந்தாள். எப்போதும் அவள் என்னுடனே இருந்தாளென்பதை அவள் இல்லாத நாட்களில் தான் என்னால் உணர முடிந்தது. அவள் அன்பை அவ்வப்போது தேவைக்கேற்ப மட்டுமே நான் பயன்படுத்திக் கொண்டேன் என்ற குற்ற உணர்வை அவள் மரணம் என் மனதில் நிரந்தமாக்கிவிட்டுப் போயிருக்கிறது.

ஜெயஸ்ரீ நல்ல நிறம். தாழம்பூ போலிருக்கிறாள் என்று கூட நான் நினைத்ததுண்டு. தேர்வு முடிவு வந்த அன்று மாலை பூட்டிய அறைக்குள் மண்ணெண்ணெய் ஊற்றி பற்றவைத்துக் கொண்டாள் என்றும் அரை மணி நேரம் எரிந்து கொண்டிருந்தாள் என்று சொன்னார்கள். போய்ப் பார்க்கும் அளவிற்குத் திராணியில்லை எனக்கு.

காதல், கடன், வன்கலவி இவற்றின் வரிசையில் தற்கொலைக்குத் தூண்டும் காரணிகளில் ஒன்றாய் தேர்வு முடிவுகளும் இருக்கும் அவலம்ம் நம் நாட்டில் மட்டும் தானா?

அதன் பின்னாய் 6 வருடங்கள் கழித்து மீண்டும் அதே அளவிற்கு அதிர்ச்சி தந்தவள் சிந்தியா... வெகு அழகு. வட்ட முகம்.. எப்போதும் சிரித்தபடியிருக்கும் உதடுகள். மிகுந்த தைரியசாலியான பெண் என்று சொல்ல வைக்கும் தோற்றம். ஆனால் அவளின் அலங்காரமும் ஆர்ப்பாட்டமான பேச்சும் சுற்றியிருப்பவர்களுக்கு அவளின் பத்தினித்தனத்தைச் சந்தேகிக்க உதவுவனவாய் இருந்தன.

ஒரு முறை ஹேண்ட்பேக்கிலிருந்து நீளமாயிருந்த செயின் ஒன்றை எடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டிருந்தாள். "இதென்ன டிசைன்? வித்தியாசமாய்..?" என்றதற்கு "இதுவா? இது தாலி" என்றாள் அலட்சியமாய். சில நேரங்களில் 'அவள் அப்படித்தான்' பட கதாநாயகியை நினைவூட்டும் படியாய் நடந்து கொள்வாள்.

சில பல மாதங்கள் கழித்து வெகு சோம்பலாய் நகர்ந்து கொண்டிருந்த அலுவலக மாலை நேரத்தை "சிந்தியா சூசைட் பண்ணிகிட்டா" என்ற செய்தியின் மூலம் பரபரப்பாக்கினாள். பதறியடித்துக் கொண்டு பார்க்கப் போனோம். ஹால் நடுவில் அவள் கிடத்தப்பட்டிருக்க மூலையில் டிவி ஓடிக் கொண்டிருந்தது. எவரையும் இழந்ததற்கான அறிகுறி எதுவும் அவள் கணவன் மற்றும் குடும்பத்தாரின் முகத்தில் இருந்ததாய் தெரியவில்லை.

கண்கள் பிதுங்கிய நிலையிலும், மூக்கிலும் கடைவாயிலும் ரத்தம் வழிந்தோடிய நிலையிலும் விகாரமடைந்திருந்த அவள் முகத்தைப் பார்த்தபோது வாழ்க்கை மீதான நம்பிக்கைச் சங்கிலியில் சில இணைப்புகள் சட்டென்று விட்டுப் போயின. அவள் இறப்பிற்கான காரணம் தெரியவில்லை. ஏன்? எதற்காக என்ற கேள்விகள் மட்டுமே எஞ்சியிருந்தன எல்லோரிடமும்.

அவள் உயிரோடிருந்தபோது "அது கேசுப்பா" என்று வர்ணித்த ஆண்கள் எல்லோரும் எத்தனை 'ஒழுக்க சீலர்கள்' என்பதையும் எல்லோரது குரலிலும் "சீச்சி இந்தப் பழம் புளிக்கும்" என்ற ஏமாற்ற தொனியிருந்ததையும் நான் அப்பட்டமாய் உணர்ந்திருக்கிறேன். காலங்காலமாய்ச் சொல்லிக் கொடுக்கப்பட்டு வருவதைப் போல அவள் 'குத்துவிளக்காய்' இல்லாவிட்டாலும் உண்மையில் அவள் நெருப்பாகவே இருந்தாள். ஏன் அணைந்து போனாளென்பது அவள் மட்டுமே அறிந்த ரகசியம்.

"பெண் ஒழுக்கமாயிருப்பதை விடவும் தான் ஒழுக்கமாயிருப்பதை ஒவ்வொருவரிடமும் நிரூபித்துக் கொண்டேயிருக்க வேண்டும்" என்ற அசிங்கமான உண்மையை அவள் மெளனமாய்ச் சொல்லிப் போயிருக்கிறாள் என்றே தோன்றியது எனக்கு.

இரக்கமற்று மீண்டும் மீண்டும் தோற்கடித்துக் கொண்டே இருக்கும் வாழ்க்கையை பழிவாங்குவதற்கான இறுதி முயற்சியாய் மனிதர்கள் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறார்களா? சாவைத் தீர்மாணிக்கும் கணங்கள் வெகு சொற்பமாய் இருந்தபோதும் எளிதில் கடந்து விட முடியாத தொலைவாய் நீள்கின்றன. மரணத்தை அதன் வாசலிலேயே சந்திக்கவும் ஓர் அசாத்திய தைரியம் தேவைதான் இல்லையா?

"தற்கொலை என்பது கோழைத்தனம்" " கோழைகள் எடுக்கும் துணிச்சலான முடிவு" என்றெல்லாம் வக்கணையாய்ப் பேசிக் கொண்டாலும் அந்தக் கணங்களை நேரடியாய்ச் சந்திக்க நேர்கையில் எல்லோரிடமும் மிஞ்சுவது எதுவும் கையாலாகாத இயலாமை மட்டுமே. இத்தனை குரூரங்களுக்கு மத்தியில் தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என நினைக்கையில் கனிமொழியின் வரிகளைத்தான் சொல்லிக் கொள்ளத் தோன்றுகிறது.

" அகால முடிவுகள் என்ற செய்திகளோடு
விடியும் நாள்களை
வாழவும் முடியவில்லை
வாழாதிருக்கவும் முடியவில்லை"