Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, January 3, 2012

குறுகத் தரித்த மனம்






சிகரங்களின் சீதளத்தையும்
பள்ளத்தாக்குகளின் விரிசல்களில்
நதியோடு கசியும் ரகசியங்களையும்
ஒருபோதும் அறிந்ததில்லை
தோட்டத்துப் பூக்கள்

தினமும் விரித்துச் சுருட்டும்
படுக்கைகளுக்குள்ளாக
இருதயம் போல்
கசங்கி விரிகின்றன
நாட்கள்

ஜன்னல்களின் விளிம்பில்
கிளைபரப்பிக் கனிவளர்த்து
செழித்து நிற்கின்றன
போன்சாய் மரங்கள்

ஆயினும்..

தொட்டி மீன்களின் கனவில்
ஓயாமல் அலைவீசிக் கொண்டிருக்கிறது
பேராழம் மிக்கப்
பெருங்கடல் ஒன்று.

Saturday, May 28, 2011

வாழுநம் என்னும் செருக்கு



அப்படித்தான் இருந்தாள் அவள்.
கரை தொலைத்த தோணிகளுக்காய்
தொலைவில்
மின்னிச்சுழலும் ஓர் ஒளித்தீண்டல் போல..

நன்னீர் சுரந்திருக்கும்
சின்னஞ்சிறு சுனையென
கரவலைகள் வீசி
தளும்பிக் கொண்டிருந்தாள்.

பின்னோர் நாள் கண்டேன்
கவிமனம் தேடியலையும்
முதற்சொல்லொன்று
எம் முற்றத்தில்
தவழ்ந்து கொண்டிருப்பதை.

இப்போது
அவள் விரல்நுனி பிடித்து
தத்தி நடக்கிறது காலம்.

காற்றசைத்த மலரென
வீடெங்கும்
சிதறிக் கிடக்கிறது மொழி.

ஆம்..
அவள் வளர்ந்து கொண்டிருக்கிறாள்
நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.



சென்ற வருடம் இதே நாளில் அரை மயக்கத்தில் கண்விழித்துப் பார்க்கையில், சின்னஞ்சிறு சிப்பி இமைகள் மூடியிருக்க, கைகளிரண்டையும் கமலப்பூவின் அரும்பு போல நெஞ்சின் மேல் குவித்து, தானிருந்த கண்ணாடிப் பேழை முழுவதிலும் தன்னுடலின் விரிசோதியினை நிரப்பியபடி, தந்தையின் சாயலோடு உறங்கிக் கொண்டிருந்த செல்ல மகள்....

Sunday, September 13, 2009

உயிர்த்தல்




நீயற்ற பொழுதுகளின்
கனம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன்

உறக்கம் தொலைத்த இரவுகளை..
உன்னை நினைத்துக் கொண்ட தருணங்களை..
உன்னோடிருந்த நாட்களை....
உன்னைப் போலிருந்த மனிதர்களை...

சொற்களின் இடுக்குகளில்
கசியத் தொடங்குகிறது
விழிகளின் ஈரம்..

கண்கள் தவிர்த்து
காற்றிடம் பேசுமென்னை
முன்னெப்போதுமில்லாத
பரிவின் முகம் கொண்டு
பார்த்துக் கொண்டிருக்கிறாய் நீ...

விடைபெறும் வேளையில்..
மழையின் குரலில்
அழைக்கிறாய் என்னை..

நான்
எத்தனை சொல்லியும் தீராக் காதலை
ஒற்றைச் சொல்லில் நிரப்பி விளிக்கிறாய்..

எங்கோ
கிளைகளுதிர்த்த பூக்களில் ஒன்று
மீண்டும் பூக்கிறது
மனதின் ஆழத்தில்.

Monday, September 29, 2008

குறையொன்றுமில்லை..

பூக்களாலான பள்ளத்தாக்கினுள்
விழுந்து விட்டாற் போலிருக்கிறது.

கூறும் முன்பாய்க்
குறைகள் களையப்படுகின்றன.

உவகையில் கசியும் விழிநீர்
தரைவிழும் முன்னர்த்
தடுத்தாட் கொள்ளப்படுகிறது.

'போய பிழையும்
புகுதருவான் நின்றனவும்
உன் முன்னால்
தீயினில் தூசாகித்'
திசை கெட்டழிகின்றன.

இருபெரும் கரைகளுக்குள்
பெருகியோடும் நதியாய்

உன்னிரு கரங்களுக்குள்
வாழ்ந்துவிட தோன்றுகிறது...
ஒரு சில யுகங்களேனும்.

Tuesday, September 2, 2008

குழந்தையின் சுவர்க்கிறுக்கல்களைப்
போலிருந்தது உன் கோபம்....
எரிநட்சத்திரங்களென்றும்...
ஈரம் பொசிந்த
மழைக்காளான்களென்றும்...
காற்றசைத்த அதிர்வில்
கிளைகள் தவறவிட்ட
மலர்களென்றும் கூட
முன்னொரு முறை
நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
நீ கோபிக்கிறாய்..
நீளத்துவங்குகிறது என்
ஆச்சரியங்களின் பட்டியல்!

Tuesday, March 25, 2008



யார் யாரிடமோ
உன் சாயல்களைப் பார்த்தபடி
வீடு வந்து சேர்ந்தேன்..
வீட்டிலிருந்த நீ
யாரோவாகியிருந்தாய்.
உள்ளங்கையின்
மெல்லிய ரேகையில்
தளர்வாய் ஊர்கிறதோர்
சிற்றெறும்பு...

எல்லையற்ற வெளியில்
வழிதவறியலைவதாய்
ஒருவேளை அது
பதறிக்கொண்டிருக்கலாம்.

இருக்கட்டும் அப்படியே...

எல்லோர்க்கும் கையளவே இருக்கிறது
வாழ்க்கையும்!


நேற்று நேற்றுடனும்
இன்று இன்றுடனும்
முடிவுற்றால் பரவாயில்லை...
நாளைகளின் விளிம்பில்
எனக்கும் முன்பாய்
காத்திருக்கின்றன
நேற்றும் இன்றும்.

Wednesday, February 13, 2008

உதிர்தல்



சில பிரியங்கள்
ஏற்கப்படுவதில்லை
சில பிரியங்களை
ஏற்கமுடிவதில்லை...

அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்
ஏற்கப்படாத பிரியங்களும்
எங்கோ கைவிடப்பட்டு
காற்றில் கிடந்தலையும் நேசங்களும்
பின் என்னாகுமென்று...

ஒவ்வொரு காலையிலும்
தன் வாசலில்
பூக்களைப் பரப்பிக் கொள்ளும்
இந்த மரங்களைப் பார்க்கையில்
தோன்றுகிறது

உடைந்து போன நேசங்கள்
உதிர்ந்த பூக்களாகின்றன..

சில நேரங்களில்
கவிதைகளாகவும்.

Sunday, January 20, 2008

வனம்


இப்போதெல்லாம்
சொல்காய்ச்சி மரமாகிவிட்டது
மனம்..

சொல் விழுந்த இடங்களில்
மற்றுமோர் மனம் முளைக்கிறது.

மறுபடி முளைத்து
மறுபடி கிளைத்து
மனங்கள் பெருகிப் பெருகிப்
பெருகியபடியிருக்க
முடிவில்
எல்லைகளில்லாப்
பெருவன
மாகிறேன் நான்.

வனத்திற்குள் வழிகளுண்டா?
வனத்திற்கு வாசல்களுண்டா?
வனமில்லா இடமேதும் உண்டா?
தெரியவில்லை..

உச்சரிக்கவிரும்பா உதடுகள் இப்போது
மெளனம் பேசப் பழகுகின்றன.

நினைவுகள் உரசிக்கொண்டதில் மெதுவாய்
வெந்து தணிகிறது காடு.

Sunday, December 23, 2007

பிரிவுடன்படிக்கை..


எவருமற்ற அந்த சாலையினோரம் நின்றபடி
சாசனமொன்றை வாசிப்பவன் போல
உணர்ச்சிகளற்ற த்வனியில்
அறிவித்துக் கொண்டிருந்தாய்
"இது நம் இறுதிச் சந்திப்பென"
உன் சொற்கள் பட்டவிடங்களில்
மனம் கொப்புளித்துக் கொண்டது..
சொற்களில் சில
நீலம் பாரிக்கத் தொடங்கின..
மேலும் சில
மரங்களாய் முளைத்து
முட்களாய் கிளைத்து
அடர்சிவப்பு நிறத்தில்
பூக்களாய்ப் பூத்தன...
எஞ்சியவை எல்லாம்
என் கண்ணீர் பட்டழிந்து கொண்டிருக்க..
காற்றின் பக்கங்களில் அவசரமாய்த் தேடுகிறேன்
எந்தச் சொல் உன் இறுதிச் சொல்லென.

Wednesday, December 19, 2007




அழகாயிருப்பதாய் நினைத்துப் பறித்த
ரத்த நிறத்துப் பூவொன்று
தன் சுவாரசியமிழந்தது
அடுத்த சில கணங்களில்...

பறித்த போதிருந்த
மென்மை துறந்து
கனக்கத் துவங்குகிறது
கைகளில்...

பறிக்காமலே இருந்திருக்கலாமென
யோசித்துக் கொண்டிருக்கையில்...
இதழிதழாய் பிய்த்தெறியத்
தொடங்கி விட்டன
விரல்கள்.

Saturday, November 24, 2007

புள்ளி




எண்ணிக்கை தப்பாகியிருக்கலாம்..
கோடிழுக்கும் அவசரத்தில்
விட்டுப் போயிருக்கலாம்..
அல்லது
வேண்டுமென்றே கூட
தவிர்க்கப்பட்டிருக்கலாம்..
காரணம் எதுவாயிருப்பினும்
தன்னந்தனியாய்
மனதில்
உறுத்திக்கொண்டேயிருக்கிறது
கோட்டிற்குள் சிக்காத
ஒற்றைப் புள்ளி.

Wednesday, November 14, 2007

தப்பித்தலின் சாத்தியங்கள்...




நான் விதைக்கப்பட்டிருக்கும்
சின்னஞ்சிறு பரப்பினை
வன்மமாய்
நினைவூட்டுகின்றன
இந்த தொட்டிச்செடிகள்..

விடுபடலோ
விட்டு விடுதலையாதலோ
சாத்தியமாவதில்லை
எப்போதும்...

வேர்களால் உள்வாங்கி
பூக்களாய் எதிரொளித்து
தளிர்நுனிகள் அனைத்திலும்
உயிர்சொட்டும் விருட்சங்கள்
காழ்ப்புணர்ச்சியோடு
கசப்புத் தருகின்றன...

தப்பித்தல்களுக்கான
இடம் தேடிக்களைத்து
எங்கேனும் எதிலேனும்
ஒளிந்துகொள்ள முயன்று
முடிவாய் மறைந்து போகிறேன்
கவிதைகளின் பின்னால்.

Friday, November 9, 2007

தனித்திருத்தல்




தனிமை,வெறுமை
வெற்றிடம்,மெளனமென
நாள்பட்ட சொற்களின் துணையோடு
எத்தனை கவிதைகள் எழுதியபோதும்
எந்தக் கவிதையும் நிரப்பிவிடவில்லை
எப்போதுமிருக்கும் தனிமையை...

Monday, November 5, 2007




எப்போதும் சண்டையிட்டபடி
எல்லாவற்றையும் சந்தேகித்தபடி
கொஞ்சல்
மிஞ்சல்
குழைதல்
கோபித்தல்
குறை கூறல்
கேள்வி கேட்டல்
காதலித்தல்
கண்ணீர் விடல்

மற்றும்...

இன்னபிற மிகைப்படுத்தல்களின்
கலவையாயிருக்கும்
ஒருவன் அல்லது ஒருத்தியின்
பெருங்கொண்ட காதலை
உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

உங்களால் ஏற்கப்படாவிட்டாலும் கூட
கறுப்பும் ஓர் நிறமாய்
கசப்பும் ஓர் சுவையாய்
இரவும் ஓர் பொழுதாய்
இருத்தலைப் போன்றே
அவர்களின் காதலும்
காதலாகவே இருக்கிறது
எப்போதும்...!

Sunday, October 28, 2007

உதிர்தலும் துளிர்த்தலும்...



வாரத்தின்
ஏழு நாட்களும்
ஒன்றேபோலிருக்கின்றன...

நிறத்தில்..
வடிவில்..
அளவில்..
எதிலும் மாற்றமில்லை.

பகலில் தொடங்கி
இரவில் முடியும்
இந்த நாட்களில்
எங்கு தொடங்கி
எங்கு முடிகிறது
உன் நினைவென்பதை
அனுமானிக்க முடிவதில்லை..

தினமும் காகிதங்களின் வடிவில்
உதிர்ந்தபடியே இருக்கின்றன
நாட்களும்
சில நம்பிக்கைகளும்..

என்றாலும்..

யாரேனும் எழுதிய கடிதமோ
கைவிட்டுப் போன உறவோ
தொலைந்து போன பொருளோ
நிச்சயம் கிடைக்கலாம்
இன்றைக்காவது...

Sunday, October 14, 2007

வாழ்தல் இனிதென்று...


நீரைப் போல்
நினைவுகளைப் போல்
சில நிமிடங்களையும்
தேக்கிக் கொள்ள முடிந்தால்......

பருவங்களைப் போன்றே
சில தருணங்களும்
மீண்டும் வரக்கூடுமென்றால்...

வாழ்வதற்கான வாய்ப்பு
மற்றுமொரு முறை
வழங்கப்படுமானால்....

அப்போதேனும்
மிகச் சரியாய் வாழ
முயன்று பார்க்கலாம்தான்..

என்ன செய்ய?

அடித்துத் திருத்தி
மீண்டும் எழுத
கவிதையில்லை வாழ்க்கை!

Wednesday, October 10, 2007

கலையாத சுவடுகள்



வாழ்வைச் சுவாரசியமாக்கும்
உத்திகளிலொன்றாய்
சிப்பி சேர்க்கத் தொடங்கி
சிப்பிகள் சேகரித்தலே
வாழ்வாகியிருக்கிறது இப்போது....

சிந்தும் மழைத்துளி
ஒவ்வொன்றிலும்
சிக்கியிருக்கிறது வானம்

உள்ளங்கைக் குழிவிற்குள்
அள்ளிய தண்ணீரில்
ஓடிக் கொண்டிருக்கிறது நதி

ஆழ்ந்தும் அகண்டும்
ஆகிருதி காட்டியும்
அலையடிக்கும் சமுத்திரச் சப்தம்
கேட்டபடியிருக்கிறது
சங்குகளுக்குள்ளும்.....

எது எப்படியிருந்தென்ன?

நிகழ்ந்தபடியிருக்கும்
நிகழ்வுகளனைத்தின் முடிவிலும்
தக்க வைத்துக் கொள்ளவென
என்ன இருக்கிறது?

இனிப்பும் கசப்புமாய்
சில நினைவுகளைத் தவிர.......

Saturday, October 6, 2007

முதன் முதலாக...


பூ ஒன்று
மலர்வது போலவும்

பொழுதொன்று
புலர்வது போலவும்

அழகியதோர்
கவிதை போலவும்

பொருள் பொதிந்த
புன்னகை போலவும்

நம் சந்திப்பை
நேர்த்தியாய் நிகழ்த்தவென
நான் தீட்டியிருந்த
திட்டங்களனைத்தும்
செயலற்றுப் போயின....

சரி தான்.......

எதிர்பாரா நேரத்து மழையில்
என்ன செய்ய முடியும்
எதிர்கொண்டு ஆனந்தமாய்
நனைவது தவிர?