Thursday, August 2, 2007

மழை சாட்சியாய்.....



நேற்று மாலை பேருந்தின் ஜன்னலோரப் பயணத்தின்போது வழக்கம் போல உன் நினைவு வந்தது. தொலைதூரப் பயணங்கள் எப்போதுமே சுகமானவைதான் இல்லையா? அவசர அவசியங்கள், செய்துமுடிக்க வேண்டிய பொறுப்புகள் ஏதுமின்றி சாலையோர மரங்களையும் கடந்துபோகும் மனிதர்களையும் வெறுமனே வேடிக்கை பார்த்தபடியிருக்கலாம். சேருமிடம் வரும் வரையில் நாம் செய்யக்கூடியதென எதுவும் இருக்காது, விரும்பியதை சிந்தித்திருத்தலைத் தவிர.

அதிலும் பக்கத்து இருக்கைப் பெண்களின் முழங்கை உரசல்கள், அநாவசிய விசாரிப்புகள், எரிச்சலூட்டும் நெருக்கங்கள் ஏதுமின்றி தன்னந்தனியே ஒற்றை இருக்கையில் சாய்ந்து கொண்டு, கம்பீரமாய் நகர்வலம் போவதாய் கற்பித்துக் கொள்வதும், கூடுதலாய் உன் நினைவுகளைத் துணைக்கழைத்துக் கொள்வதும் வெகு செளகரியமானதும் கூட. நேற்றைய மாலைப்பொழுது இதுவரை சந்தித்திருந்த சாயந்திர வேளைகளை விடவும் மிக அழகாயிருந்தது. ஒவ்வொரு மாலையும் ஏற்படுத்தும் அதே பிரமிப்பு.. அதே கிளர்ச்சி.. அதே ஆனந்தம். ஆனால் ஒவ்வொரு நாளும் தனித்துவமாய்...

மேகங்கள் வெகு சோகமாய் ஒன்றுகூடி கருமையாய் திரண்டிருந்தன, அழப்போவதன் அறிகுறியாய் உதடு பிதுக்கும் குழந்தை போல. உப்பிய மேகங்களின் உள்ளே தளும்பிக் கொண்டிருந்தது வானத்தின் கண்ணீர்! லேசாய் புன்னகைத்துக் கொண்டேன். நானும் கூட இப்படித்தான்.. உன்னுடன் ஊடல் கொண்டாடும் பொழுதுகளில், சண்டைகள் தீர்ந்து சமாதானம் பேச விழைகையில், சிறிய பிரிவுகளுக்குப் பின்னான விரும்பத்தக்க சந்திப்புகளில் இதோ.. இந்த மேகங்களைப் போலத்தான்... உணர்வுகள் பொங்க... கண்கள் ததும்ப.. மெளனமாய் உதடுகடித்தபடி நின்றிருப்பேன்.... எந்த நேரமும் அனைத்தையும் கொட்டித் தீர்த்துவிடக் கூடிய அபாயங்களோடு! உன்னைச் சந்தித்த பின்னாய்... எத்தனை கணங்கள் அந்த தவிப்பை என்னால் காத்துநிற்க முடிந்ததென்பதை ஒருமுறை கூட அனுமானிக்க முடிந்ததில்லை.

சிறிது நேரத்தில் என்னைப் போலவே கட்டவிழ்ந்து கொட்டத் தொடங்கிவிட்டன மேகங்களும். மண்ணைத் தொட்டுத் தழுவும் வேட்கையோடு, இரண்டறக் கலந்துவிடும் ஆவேசத்தோடு, தீராக் காதலோடு, எதையோ முடிவிற்குக் கொண்டுவரும் தீர்மானத்தோடு சீராய்ப் பெய்து கொண்டிருந்தது மழை. மண்வாசனையும் மழைஸ்பரிசமும் உண்டாக்கிய கிளர்வில் அவசரமாய் கவிதையொன்று எழுதுவதற்கான பரபரப்பு எழுந்தது என்னுள். ஆனால்..மடை திறந்த வெள்ளத்தில் அலைபாயும் மீன்களென பிடிகொடுக்காமல் நழுவியபடியிருந்தன சொற்கள். மேகமாய் மிதக்கும் மனது, சாலையில் தேங்கிய மழைநீரில் சிந்தி வண்ணங்களாய்க் குழம்பும் எண்ணெய் போல, கலைவதும் சேர்வதுமாய் கண்களில் மின்னி மறையும் உன் பிம்பம்.. காற்றைக் கிழித்தபடி பேரிரைச்சலாய் விரையும் பேருந்து... இந்த நிமிடங்களே எப்போதும் சாஸ்வதமாயிருந்தால் எத்தனை சுகமாயிருக்கும் என்று அபத்தமாய் ஒருமுறை நினைத்துக் கொண்டேன்.

திடுமென, எப்போதும் என்னைப் பற்றித் தொடர்ந்தபடியும் என்னை நிரப்பியபடியும் இருக்கும் உன் சொற்கள் பற்றிய நினைவெழுந்தது.
உண்மை தான்.. எப்போதும் என்னைச் சுற்றி திரும்பிய பக்கமெல்லாம் உன் சொற்களே சூழ்ந்திருக்கின்றன. சொற்கள்.. ஏராள அர்த்தங்களை, துல்லியமான உணர்வுகளை, சில அதிர்ச்சிகளைச் சுமந்தபடி அலையும், சிந்திக்கும் போதெல்லாம் என்னை இல்லாமலாக்கும், அபாயமும் ஆதிக்கமும் மிகுந்த உன் சொற்கள்! சில நேரங்களில் எனக்கென்றே கூரிய வார்த்தைகளைப் பிரயோகிப்பாய் நீ. பழம் நறுக்குகையில் கை தவறுவது போல சரேலென மனதைக் கீறிப் போகும் வார்த்தைகள். என்றபோதும் அதையும் நான் விரும்புவதாகவே உணர்கிறேன். உன் பிம்பமே சொற்களால் ஆனது தானோ என உறக்கம் தொலைந்த பின்னிரவுகளில் நான் பலமுறை எண்ணிக் கொள்வதுண்டு. எப்படி இப்ப்ப்படி பேசுகிறாய் நீ? எவ்வளவு பேசுகிறாய்.. சந்தித்த நாள் முதலாய் என்னவெல்லாம் பேசியிருப்பாய் என்னிடம்? அல்லது எதைத்தான் பேசிக் கொள்ளவில்லை நாம்? நீ பேசிப் போனவற்றை மீண்டும் எடுத்துப் பார்க்கும்போதெல்லாம் பிரியத்தால் மனம் கசிய பிரமிப்பும் கர்வமுமே எஞ்சுகிறது என்னுள்.

மழை வேகமெடுத்தது. ஜன்னல் வழியாய் சாரல் வடிவில் நுழைந்து வேகமாய் நனைத்தது என்னை. யோசித்துத் தடுக்க முனைவதற்குள் முழுவதுமாய் நனைந்திருந்தேன். கோபம் வந்தது.. "அறிவுகெட்ட மழையே.. நான் என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டியிருக்கிறது, எங்கெல்லாம் போக வேண்டியிருக்கிறது.. எதுவும் தெரிந்து கொள்ளாமல், இப்படித்தான் காலநேரமின்றி நனைத்துத் தொலைப்பாயா முட்டாளே?" திட்டலாம் தான்! கடிந்துகொண்டால் மழை என்ன கண்டுகொள்ளவா போகிறது?
நீயும் இப்படியே தான்! என் லட்சியங்கள், தீர்மானங்கள், விருப்பங்கள், முடிவுகள்... எதுவும் என்றுமே உனக்கு ஒரு பொருட்டாய் இருந்ததில்லை. மழைதான் நீயும்! எதிர்கொண்டணைப்பதில், எதிர்பாராமல் நனைப்பதில், எதிர்பார்க்கும் போது ஏமாற்றம் தருவதில் மழையே தான் நீ! நிறைய்ய சந்தோஷங்களையும் அநேக தொல்லைகளையும் ஒரே நேரத்தில் ஒன்றாய்த் தர உங்களிருவரால் மட்டும்தான் முடிகிறது!!

நம் முதல் சந்திப்பு நினைவிருக்கிறதா உனக்கு? எப்படி மறந்துவிட முடியும்? அன்றைய தினமே.. அது மறந்துவிட முடியாத, மறந்துவிடக் கூடாத தினமென்று உறுதிப்படுத்திக் கொண்டோம் இல்லையா? முதன் முதலாய் உனக்கென்று கவிதை எழுதி உன்னிடம் காண்பித்த போது.. சொல்லும் முன்பாகவே அதிலிருந்த உன் அடையாளங்களைக் கண்டு கொண்டாய்! "கவிதையின் பின்புலம் யார்? நானா?" என்றபடி நெகிழ்ச்சியாய் என் விரல்களைப் பற்றிக் கொண்டாய். அந்த தொடுதல் அதிகாலை நேரப் பூக்களைப் போல மென்மையாய் தண்ணென்றிருந்ததாய் நினைவு எனக்கு.

உனக்கும் எனக்குமிடையே நிகழ்ந்து கொண்டிருப்பது என்னவென்பதை ஆராய்வதிலோ தெளிவுபடுத்திக் கொள்வதிலோ பெரிதாய் ஆர்வமில்லை என்னிடம். என்ன இப்போது? உலகின் கேள்விகளுக்கு பதிலிறுத்தல் அத்தனை அவசியமான ஒன்றா? அவரவர் பார்வை மற்றும் கற்று வைத்திருக்கும் ஒழுக்க விதிகளுக்கேற்ப பரிசுத்தமான அன்பு, தெய்வீகக் காதல், அப்பட்டமான காமம், கண்ணியமான நட்பு, சகோதர பாசம், வெற்று இனக்கவர்ச்சி.. இன்னும் என்னென்ன கர்மங்களாகவோ வார்த்தைகளால் நம்மை வகைப்படுத்திக் கொள்ளட்டும். நமக்கென்ன நஷ்டமாகிவிடப் போகிறது? இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு நமக்கென்று புதிதாய் ஒரு வார்த்தை கண்டுபிடிக்கப்படும்போது அதில் நம்மை வகைப்படுத்திக் கொள்ளலாம். அதுவரையில் இவர்கள் இப்படியே கத்திக் கொண்டிருக்கட்டும் விடு.


இப்போதெல்லாம் உன் மீதான பிரியங்கள் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. அன்பினை சுமக்கவியலாமல் தள்ளாடுகையில் 'பிரிந்து விடலாமா' என்று கூட யோசிக்கத் தோன்றுகிறது. அளவிற்கு மிஞ்சினால் அன்பும் கூட நஞ்சுதானோ? என்ன? புன்னகைக்கிறாயா? தெரியும் எனக்கு. பிரிவென்றாலும் கூட உன்னால் புன்னகைக்க முடியும் என்று. தெரியுமா? இந்த சில நாட்களாய் உன்னிடம் பேசப்பிடிப்பதில்லை எனக்கு. உனக்கென்ன.. பேசி விட்டு போய்விடுகிறாய். நீ பேசிப்போன பின்பாய் நீ விட்டுச் சென்ற வார்த்தைகள் என் மிச்சங்களைக் கூட விட்டு வைப்பதில்லை. கூடு கலைந்த கோபத்தில் படையெடுத்துவரும் தேனீக்களைப் போல அவை என்னை துரத்தியபடியே இருக்கின்றன.. காதுகளில் ஓயாத ரீங்காரம். தாங்க முடியவில்லை என்னால். மயக்கத்திலாழ்த்துவதும் உலுக்கியெழுப்புவதுமாய் இருவேறு நிலைகளில் செயல்பட்டபடி உன் வார்த்தைகள் என்னைக் கலைத்துப் போடுகின்றன தினமும். போதுமெனப் படுகிறது. உலகம் முழுவதையும் நேசிப்பதற்கான மாபெரும் அன்பு சுமந்து வீடு துறந்த சித்தார்த்தனைப் போன்றே மனம் கொள்ளாப் பிரியங்களுடன் இப்போதே உன்னை பிரிந்துவிடத் தோன்றுகிறது.

என்னிடம் மிகைப்படுத்தல்கள் அதிகமென எப்போதும் குற்றம் சாட்டுவாய் என்னை. உண்மைதான். சில பூக்கள் மென்மையான தென்றலில் கூட உதிர்ந்து விடுவதுண்டு. இந்த கணம் உன்னைப் பிரிவதற்கென்று என்னிடம் காரணங்கள் ஏதுமில்லை.. பிரிந்து விடலாம் என்ற எண்ணம் தவிர. நீயும் இதைத் தான் சொல்வாயென நினைக்கிறேன். 'அய்யோ, பிரிவதா உன்னையா?' என்பது போன்ற ஆபாசக் கூச்சல்களோ, 'நீயில்லன்னா செத்துருவேன்' என்பதான அபத்தமான வசனங்களோ நம்மிடம் இல்லாதிருப்பதே பெரிய ஆறுதல்தான் இல்லையா? நிரூபித்தல்களுக்கான அவசியங்களின்றி மனதின் எல்லா ஊற்றுக்கண்களிலும் சுரந்தபடியிருக்கின்றன உன் மீதான பிரியங்கள்!! வா அருகே.. கன்னங்களில் முத்தமிட்டு, மென்மையாய் கைகுலுக்கி, புன்னகையோடு பிரிந்து போவோம். முடிந்தால் சந்திப்போம்..... எங்காவது, எப்போதாவது இந்த மழையைச் சந்திப்பது போலவே!

39 comments:

சிநேகிதன்.. said...

ரசித்தேன்...

Ayyanar Viswanath said...

கவிதாயினி
இந்த பொண்ணுங்க பசங்கள கழட்டி விடுறத எவ்ளோ அழகா சொல்லிகிறீங்க அட்டகாசம் :)

காயத்ரி சித்தார்த் said...

சிநேகிதன் நன்றி!

அய்யனார் கிண்டல் பண்றீங்களா? இது பிரிதல் இல்லை. இதுவும் ஒரு புரிதல்னு சொல்றேன். :)

ALIF AHAMED said...

குட் மார்னிங்..:)

ALIF AHAMED said...

நேற்று மாலை பேருந்தின் ஜன்னலோரப் பயணத்தின்போது வழக்கம் போல உன் நினைவு வந்தது.
/

கண்டக்டர் சில்லரை பாக்கி குடுப்பாரா மாட்டாரா என்றா நினைத்து கொண்டுயிருந்திங்க..:)

த.அகிலன் said...

//வா அருகே.. கன்னங்களில் முத்தமிட்டு, மென்மையாய் கைகுலுக்கி, புன்னகையோடு பிரிந்து போவோம்.//

பாலகுமாரனின் ஏதோ ஒரு நாவலில் எழுதியிருப்பார். மனிதர்களிற்கு கைகுலுக்கிப் பிரிந்துபோகத்தெரியாது.நண்பன் பகைவன் இரண்டுக்கும் இடையிலான ஒரு உறவு கிடையாது. என்முடிவுகளிற்கு இசைகிறாயா? நீ நண்பன். என் முடிவுகளை விமர்சிக்கிறாய் .அல்லது எதிர்க்கிறாயா நீ எதிரி.அவ்வளவுதான் உறவுகள்.

நீங்கள் சொல்வது மாதிரியான பிரிவுகள் சாத்தியம் என்றால் உலகம் அற்புதமானதுதான் இல்லையா?

ALIF AHAMED said...

'நீயில்லன்னா செத்துருவேன்'
//

ரொம்ப புடிச்ச வரி எனக்கு அடிக்கடி சொல்வதுதான்


(காதல் தான் ஆனால் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை இது வேற )

Gopalan Ramasubbu said...

பஸ்ல போகும் போது மழை பெய்யுது..அத வெச்சு Plantanic relationshipனு சொல்லுவாங்க ஆங்கிலத்துல..அதை சொல்லியிருக்கீங்கனு நினைக்கிறேன்.

நல்ல கற்பனை.

//தண்ணென்றிருந்ததாய்//

முதல் தடவை இந்த வார்த்தையை கேள்விப்படுகிறேன்.

Gopalan Ramasubbu said...

//Plantanic relationship//

should read as *Platonic*

காயத்ரி சித்தார்த் said...

//நீங்கள் சொல்வது மாதிரியான பிரிவுகள் சாத்தியம் என்றால் உலகம் அற்புதமானதுதான் இல்லையா? //

ஆமா அகிலன்.. எதிரியாத்தான் பிரியனும்னு கட்டாயமா என்ன? நேசமிகுதி தான் இங்க பிரிவுக்கே காரணம்.. அப்படியிருக்கும் போது கை குலுக்கிப் பிரியறது சாத்தியம் தானே?

காயத்ரி சித்தார்த் said...

//(காதல் தான் ஆனால் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை இது வேற )
//

ஏன் மின்னல் ஏன்? குழப்பறதுக்கு ஒரு லிமிட் இல்லியா? கும்மி அடிக்க வேணாம்னு சொன்னதுக்கு பழிவாங்கறீங்களா?

காயத்ரி சித்தார்த் said...

நன்றி கோபாலன்..

//தண்ணென்றிருந்ததாய்//

குளிர்ச்சியாய் இருந்ததுன்னு அர்த்தம். 'தண்' - குளிர்ச்சி.. தண்+நீர்= தண்ணீர் னு சொல்றோம் இல்ல?

திருவடியான் said...

நன்றி சகோதரி..

நான் தங்களோடு பஸ்ஸில் பயணம் செய்த மாதிரியே இருந்தது. இதோ மழைத்துளி கையில் பட்டு சிலிர்ப்பூட்டுவதை எண்ணால் உணர முடிகிறது. பாலையில் கண்ட தண்ணென்ற நிழல்போல இருக்கிறது தங்கள் எண்ண ஓட்டம்.

வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

கோபிநாத் said...

\\வகைப்படுத்தாதவை...\\

அப்படியா!!!!..சரி...

குசும்பன் said...

அருமையாக இருக்கிறது...

ஆனால் முத்தம் கொடுத்த பின் எப்படி பிரிவது?

Unknown said...

வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்!

ILA (a) இளா said...

பிரிவதற்க்கான காரணம் தெரியவில்லை
தெரிந்து என்ன ஆகப் போகிறது
பிரிந்த பின்.

பதிவை படிச்சுட்டு இப்படியெல்லாம் ஃபீலிங்கா கவிதை எழுதலாம் வந்தா
//நேற்று மாலை பேருந்தின் ஜன்னலோரப் பயணத்தின்போது வழக்கம் போல உன் நினைவு வந்தது.
/

கண்டக்டர் சில்லரை பாக்கி குடுப்பாரா மாட்டாரா என்றா நினைத்து கொண்டுயிருந்திங்க..:)//

இப்படி ஒரு பின்னூட்டம் பார்த்து குபீர்ன்னு சிரிச்சுட்டேன். மின்னலு பின்னூட்டத்தை பிரசுரிக்கவேண்டாமென மிரட்டுகிறேன்.

G3 said...

இது எப்போ நடந்துது? அன்னிக்கு நீ பஸ்ல போனப்போ நான் தானே உன்னோட போன்ல மொக்க போட்டுட்டிருந்தேன் ;)

G3 said...

//இதோ.. இந்த மேகங்களைப் போலத்தான்... உணர்வுகள் பொங்க... கண்கள் ததும்ப.. மெளனமாய் உதடுகடித்தபடி நின்றிருப்பேன்.... எந்த நேரமும் அனைத்தையும் கொட்டித் தீர்த்துவிடக் கூடிய அபாயங்களோடு! //

//பழம் நறுக்குகையில் கை தவறுவது போல சரேலென மனதைக் கீறிப் போகும் வார்த்தைகள். என்றபோதும் அதையும் நான் விரும்புவதாகவே உணர்கிறேன். //

// நீ பேசிப் போனவற்றை மீண்டும் எடுத்துப் பார்க்கும்போதெல்லாம் பிரியத்தால் மனம் கசிய பிரமிப்பும் கர்வமுமே எஞ்சுகிறது என்னுள். //

//மழைதான் நீயும்! எதிர்கொண்டணைப்பதில், எதிர்பாராமல் நனைப்பதில், எதிர்பார்க்கும் போது ஏமாற்றம் தருவதில் மழையே தான் நீ! நிறைய்ய சந்தோஷங்களையும் அநேக தொல்லைகளையும் ஒரே நேரத்தில் ஒன்றாய்த் தர உங்களிருவரால் மட்டும்தான் முடிகிறது!!//

//மழைதான் நீயும்! எதிர்கொண்டணைப்பதில், எதிர்பாராமல் நனைப்பதில், எதிர்பார்க்கும் போது ஏமாற்றம் தருவதில் மழையே தான் நீ! நிறைய்ய சந்தோஷங்களையும் அநேக தொல்லைகளையும் ஒரே நேரத்தில் ஒன்றாய்த் தர உங்களிருவரால் மட்டும்தான் முடிகிறது!!//

// கூடு கலைந்த கோபத்தில் படையெடுத்துவரும் தேனீக்களைப் போல அவை என்னை துரத்தியபடியே இருக்கின்றன.. காதுகளில் ஓயாத ரீங்காரம். தாங்க முடியவில்லை என்னால்.//

//சில பூக்கள் மென்மையான தென்றலில் கூட உதிர்ந்து விடுவதுண்டு. இந்த கணம் உன்னைப் பிரிவதற்கென்று என்னிடம் காரணங்கள் ஏதுமில்லை.. பிரிந்து விடலாம் என்ற எண்ணம் தவிர. //

அழகான வார்த்தை பிரயோகம்.. ஆழமான கருத்துக்கள்.. மனதில் ஆழ்ந்த தடயத்தை ஏற்படுத்தி விட்டன

காயத்ரி சித்தார்த் said...

நன்றி திருவடியான்!

கோபி!! யார் கவனிக்கப்போறாங்கன்னு நினைச்சேன்!! கிரேஏஏஏட்!! :)

காயத்ரி சித்தார்த் said...

//ஆனால் முத்தம் கொடுத்த பின் எப்படி பிரிவது? //

:))) அனுபவம் இல்ல குசும்பா! கற்பனை தானே இது? முடியும்னு நினைச்சி எழுதிட்டேன்.. மன்னிச்சி விட்ரு!

காயத்ரி சித்தார்த் said...

சண்ஷிவா நன்றி!

//மின்னலு பின்னூட்டத்தை பிரசுரிக்கவேண்டாமென மிரட்டுகிறேன். //

அது முடியாதே அண்ணா! அவரு நடந்தா ஊர்வலம்.. நின்னா பொதுக்கூட்டம்.. படுத்தா பந்த்.. அவரை எப்படி பகைச்சிக்க முடியும்?

(மின்னல் நீங்க கெஞ்சிக் கேட்டுகிட்ட மாதிரியே சொல்லிட்டேன்.. அழாதீங்க) :))

கையேடு said...

one of my prof use to tell me " both of them shuld be happy when u say good bye to somebody or else that is not the time to say good bye"

ithayey romba azhahaa unga style la sollirukeenga.
_________________
first half padikkum pothu i thought ur speaking to ur inner self.
___________
but romba nalla irunthu padippatharkku

- ranjith

Dreamzz said...

// சில பூக்கள் மென்மையான தென்றலில் கூட உதிர்ந்து விடுவதுண்டு. இந்த கணம் உன்னைப் பிரிவதற்கென்று என்னிடம் காரணங்கள் ஏதுமில்லை.. //


அசத்த்தல்!!

காயத்ரி சித்தார்த் said...

//அன்னிக்கு நீ பஸ்ல போனப்போ நான் தானே உன்னோட போன்ல மொக்க போட்டுட்டிருந்தேன் ;) //

நீ மொக்க போட்டது வர்றப்ப! போனப்போ நான் நிம்மதியா தான் போனேன்! ஹிஹி.. ரொம்ப ஓட்டாம விட்டதுக்கு தேங்க்ஸ்டா!

காயத்ரி சித்தார்த் said...

ரஞ்சித், ட்ரீம்ஸ்.. வழக்கம் போல நன்றி!! :)

காட்டாறு said...

அழகா வடித்திருக்கிறீங்க.

//நீங்கள் சொல்வது மாதிரியான பிரிவுகள் சாத்தியம் என்றால் உலகம் அற்புதமானதுதான் இல்லையா?//

அற்புதம் தான். என் தோழி ஒருவர் விவாகரத்து ஆனவர். அவர் முன்னாள் கணவருடன் இன்றும் அருமையான தோழமை. அவர்கள் பிரிந்ததும் நீங்கள் சொன்னது போல் தான். இருவர் திசைகள் வேறு வேறாயினும் இன்றும் இருவரும் தோழமையுடன் இருப்பது... சொல்ல வார்த்தைகள் இல்லை.... காண அற்புதமாக இருக்கும்.

manasu said...

G3,

இந்த வாத்தியாருங்க எல்லாம் பேப்பர் திருத்தும் போது நாலு லைன்னுக்கு ஒரு டிக் அடிப்பாங்களே அப்படி செலக்ட் பண்ணீங்களா.

நீங்களே ஓட்டிட்டா நான் என்ன பண்றது.

LakshmanaRaja said...

:-)

தமிழன் said...

அடுத்த முறை பஸ் பயணம் "மழை சாட்சியுடன்" தான்.

nagoreismail said...

படித்து முடித்த போது நீங்கள் நானானேன் தங்களின் கவிதை கட்டுரை க.க வில் வரும் காதாலனானது - இது புரியவில்லை என்றால் இதுவும் ஒரு கவிதை தான் - நாகூர் இஸ்மாயில்

G3 said...

//நீங்களே ஓட்டிட்டா நான் என்ன பண்றது.//

Idhu enna first otravanga mattum dhaan ottanuma enna? neengalum vandhu jodhila aikkiyamaagunga :))

காயத்ரி சித்தார்த் said...

காட்டாறு.. அப்படியா? கற்பனையை விட நிஜத்துல பார்க்கும்போது ரொம்பவே நல்லாருக்கும்னு தான் தோணுது!

காயத்ரி சித்தார்த் said...

//நீங்களே ஓட்டிட்டா நான் என்ன பண்றது. //

//neengalum vandhu jodhila aikkiyamaagunga :)) //

மனசு, ஜி3 என்ன பிரச்சினையா இருந்தாலும் நேர்ல பேசித்தீர்த்துக்கலாம்.. இப்டி ஒரு அப்பாவி பொண்ணுக்கு எதிரா கூட்டணி எல்லாம் அமைக்கணுமா?

காயத்ரி சித்தார்த் said...

லட்சுமணராஜா.. மொக்க மோகன் (என்னங்க பேர் இது?) நன்றி!

இஸ்மாயில்.. எதோ சொல்லிருக்கீங்கன்னு தெரியுது.. ஆனா என்னான்னு தான் தெரியல. :(

Letchu said...

Hello Gayathri:

Its really original .Next time if i go in bus, let me see if i could feel in the same way as you feel .Love and friendship is freedom .You can love somebody for life without living with the person.

Really good.I read it 11 times, still few more times may be

-Letchu

பாரதி தம்பி said...

பிரமிக்க வைக்கிறது- இது மட்டுமல்ல.. மற்ற பதிவுகள் அனைத்தும்.

CVR said...

என்ன சொல்லுறதுன்னே தெரியலை!!
அழகா இருக்குன்னு சொல்லுறது தவிர வேற எதுவும் சொல்ல தெரியல!

ரௌத்ரன் said...

தூங்க போகலாம்னு தோன்றிய சமயத்தில் ஒரு எதிரி இந்த இடுகையின் தொடுப்பை தந்தான்..பாருங்கள் தூக்கம் கலைந்து விட்டது...தூக்கத்தை கலைப்பவர்கள் எதிரிகள் தானே.?உங்கள் விசிறிகளின் இம்சை தாங்க முடியவில்லை தோழி.கொஞ்சம் கண்டித்து வையுங்கள்.யாரா..தமிழன் கறுப்பி. :)