Tuesday, July 31, 2007

'தல'க்குப் பொருந்தாத 'கிரீடம்'

ஒரு அழகான ரம்மியமான சாயந்திர நேரம்! என்ன பண்ணிருக்கனும் நான்? ஊர்ல புத்தகத்திருவிழா நடக்குது, ஒரெட்டு போய் பாத்திட்டு வந்திருக்கலாம். சின்னதா ஒரு கூடைல திரி, எண்ணெய், கற்பூரம், கொஞ்சம் பூ எல்லாம் எடுத்திட்டு நல்ல புள்ளையா எதாச்சும் ஒரு கோவிலுக்கு போயிருக்கலாம், பக்கத்து வீட்டு வாண்டுகளை கூப்பிட்டு வெச்சி 'சிங்கம்' அல்லது 'புலி'க்கதை சொல்லிருக்கலாம்.. அட மொட்டை மாடிக்குப் போய் டீ குடிச்சிட்டே... வாங்கினதுல இருந்து இன்னும் படிக்காம 'இழுத்துட்டே' போற 'ரப்பர்' நாவலையாச்சும் படிச்சு முடிச்சிருக்கலாம். இதெல்லாம் பண்ணாம 'கிரீடம்' படத்துக்கு போலாம்னு நான் முடிவு பண்ணினதுக்கு வெளிநாட்டு சதி அல்லது எதாச்சும் அமானுஷ்ய சக்தி தான் காரணம்னு நான் நினைக்கிறேன்! நீங்க என்ன நினைக்கறீங்க?

இந்த படத்து ஸ்டில்ஸ் எல்லாம் பார்த்து அஜித் போலீஸ் ஆபீசர் போலன்னு நினைக்கறீங்க தானே? அதான் இல்ல.. அவரு ஒரு ரௌடி. அப்புறம் எதுக்கு இந்த ஸ்டில்? என்னைக் கேட்டா? படத்துல அப்படி தாங்க சொல்றாங்க!!! இருங்க கடைசில புரியும்.

படத்துல 'தல' இன்ட்ரோ சீன் அட்டகாசம். ஜெயில்ல இருந்து தப்பிச்சு போற கைதிங்க எல்லாரையும் கொட்ற மழைல செமயா ஃபைட் பண்ணி அரெஸ்ட் பண்றார் அஜித். அடடா ன்னு ஆர்வமா சீட்ல நிமிர்ந்து உக்காந்தா அதெல்லாம் அஜித்தோட அப்பா ராஜ்கிரண் கண்ட கனவாம். (எப்பிடி சிக்கிருக்கேன் பாத்திங்களா?)

ராஜ்கிரண் ஒரு நேர்மையான... ஆமா! கரெக்ட் போலீஸ் தான்! போலீஸ் ஹெட்கான்ஸ்டபிளான இவரு பையன் அஜித்தை எஸ்.ஐ ஆக்கனும்ங்கிறத தன்னோட வாழ்நாள் லட்சியமா வெச்சிருக்காரு. ஆனா அஜித் என்னா பண்றாருன்னா... த்ரிஷாவோட க்ளோஸ் ஃப்ரெண்டா இருந்த புள்ளையார் சாமிய அவங்க வீடு பூந்து திருடறாரு. (எதாச்சும் வெளங்குது?) திருடி முடிச்சதும் ஒரு பாட்டு. அது என்ன பாட்டுன்னு புரியல.... எதுக்கு பாட்டுன்னும் தெரியல. அதெல்லாம் நாம கேக்கப்படாது, தமிழ்சினிமால ஹீரோ அறிமுகமாகும்போது இப்படி 10, 20 பேர் கூட சேர்ந்து பாடி ஆடனும்னு ஒரு நியதி இருக்கு.. ஆனா ஹீரோ இன்ட்ரோ முடிஞ்சு 4, 5 சீனுக்கு பின்னாடியும் இப்படி பாடலாமான்னு தெரியல. (ரூல்ஸ மாத்திட்டாய்ங்க போலிருக்கு!) சரி கேளுங்க.. நான் மட்டும் கஷ்டப்பட்டு பாக்கல? நான் யார்கிட்ட கேப்பேனாம்?

சரி பாட்டு முடிஞ்சுதா? த்ரிஷா பாவம்.. புள்ளையாரையும் அதை திருடின அஜித்தையும் தேடிட்டே இருக்காங்க. அந்த புள்ளையார் இல்லன்னா அவங்க எக்ஸாம்ல பெயில் ஆய்டுவாங்களாம். (இதை அவங்க சொல்லும் போது துக்கம் தாங்காம நான் அழுதுட்டேன் தெரியுமா?) அதனால அஜித் என்ன பண்றாரு, கரெக்டா அவங்க எக்ஸாம் அன்னிக்கு த்ரிஷாவ அந்த புள்ளையார்கிட்ட கூட்டிட்டு போறாரு. (என்னமோ வேற யாரோ திருடினத இவர் கண்டுபிடிச்சாப்பல.. என்ன கொடுமை சார் இது?) இப்ப என்னாகும்? மறுபடி தமிழ்சினிமா நியதிப்படி த்ரிஷாக்கு அஜித் மேல காதல் வந்துடுது.

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் நம்ம நேர்மையான ராஜ்கிரண் வழக்கம் போல ஒரு எம்.எல்.ஏ பையன்கிட்ட வம்பு வளர்க்க, டிப்பார்ட்மெண்ட் வழக்கம் போல அவரை தண்ணியில்லாத காட்டுக்கு மாத்த, அங்க வழக்கம் போல ஒரு ரௌடி ஊரையே மிரட்டிட்டு இருக்க, இவரும் வழக்கம் போல அவன்கிட்டயும் தன் நேர்மைய காட்டி அடிவாங்க, அஜித் வழக்கம் போல அப்பாவ காப்பாத்த உணர்ச்சிவசப்பட்டு அந்த ரௌடிய கன்னாபின்னான்னு அடிக்க.... அவ்வ்வ்வ்வ்வ்.. என்னால முடியலங்க.

இருங்க.. எங்க ஓடறீங்க? முழுசா சொ(கொ)ல்லாம விடறதில்ல இன்னிக்கு. அப்புறம் என்ன ஆச்சுன்னா... அரைகுறையா உசிர் பொழச்ச அந்த ரௌடி "என்னை யாருமே அடிக்கல" ன்னு போலீஸ்கிட்ட சொல்றார். அஜித் அவரை மண்டைலயே அடிச்சதால அப்படி சொல்றாரா வேற எதுனாச்சும் காரணமான்னு தெரியல எனக்கு.

அப்புறம் வழக்கம் போல ஜாமீன்ல வெளில வந்து மறுபடி வழக்கம் போல அஜித்தை துரத்தி அவர் குடும்பத்துல எல்லாரையும் அடிச்சு போட்டு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்றார் மிஸ்டர். ரவுடி!! உடனே அஜித்துக்கு பயங்கரமா கோபம் வந்து நேரா அந்த ரவுடிகிட்ட போய்.. "நான் சாக வந்திருக்கேன்.. என்னை கொல்லு"ன்றார். ஆனா ரொம்ப நேரம் சண்டை போட்டுட்டு இவரு தான் அந்த ரவுடியை கொல்றார். (என்ன இழவுடா இது?) ஒரு கொலைகாரனுக்கு பொண்ணு தர மாட்டோம்னு த்ரிஷா அப்பாம்மா சொல்லிடறாங்க. பாவம் த்ரிஷா அழறாங்க..

இதுக்கெல்லாம் நடுவுல ஒரு பாட்டு வருது.. அந்த பாட்டுலயே அஜித் எக்சர்சைஸ் எல்லாம் பண்ணி, எஸ்.ஐ எக்ஸாம் எல்லாம் எழுதி முடிச்சி, செலக்ட்டும் ஆய்டறாரு. போலீஸ் வெரிபிகேஷன் பண்ணி ஓகே.. ன்னு சொன்னா அவருக்கு எஸ்.ஐ போஸ்ட் கிடைச்சிரும்... வெரிபிகேஷன் ரிப்போர்ட் குடுக்கப்போற அப்பா ராஜ்கிரண் கடைசில அந்த பரபரப்பான க்ளைமாக்ஸ்ல (!!?) 'அவனுக்கு எஸ்.ஐ ஆகத் தகுதி இல்ல' அப்படின்னு சொல்லிடறாரு. (நாங்க தான் சொன்னோமுல்ல? அவரு நேர்மையானவர்னு!) உடனே அஜித்தோட போட்டோவ போலீஸ் ஸ்டேஷன்ல குற்றவாளிகள் லிஸ்ட்ல சேர்த்துடறாங்க. இப்படி ஒரு உருக்கமான காட்சியோட படம் முடிஞ்சு போச்சுங்க. (ஸ்ஸ்! அப்பாடா!!)

நியாயமா விமர்சனம் பண்றவங்க படத்தோட முழுக்கதை அல்லது க்ளைமாக்ஸ சொல்லாம விடறதுதான் மரபு. நான் ஏன் இங்க அந்த மரபை மீறி செயல்பட்டிருக்கேன்னா என்னை மாதிரி வேற யாரும் நொந்து போகக் கூடாதுன்ற ஒரே நல்லெண்ணம் தான் காரணம். படம் ரொம்ப யதார்த்தமா இருக்கறதா சிலர் சொல்றாங்க... இண்ட்ரோ சாங் ல இருந்து, த்ரிஷாவோட காதல் வரை எல்லாம் சினிமாத்தனமா செயற்கையா வெச்சிட்டு 'நாயகனின் தோல்வியை இயல்பா படமாக்கிருக்கோம்'னு பெருமைப்பட்டுக்கறது நிஜமாவே நல்ல காமெடி.

காமெடின்னதும் நியாபகம் வருது.. படத்துல விவேக் இருக்கார்.. எதுக்கு இருக்கார்னு தெரியல. சந்தானம் கூட பரவாயில்லை, லேசா எப்பவாச்சும் சிரிக்க வைக்கிறார். இசை ஜி.வி.பிரகாஷ். ஒரே ஒரு பாட்டுல மனுஷன் அசத்தியிருக்கார். "அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்" னு சாதனாசர்கம் நெருப்புல போட்ட வெண்ணையா கரைஞ்சி உருகறாங்க.. படத்துல உருப்படியா பாக்கற மாதிரி அழகான லொக்கேஷன்ஸ்ல எடுத்திருக்கற ஒரே பாட்டு இது.

அஜித் அரிசி மூட்டைக்கு பனியன் போட்ட மாதிரி 'ரெட்' அஜித்தாவோ, சோமாலியாவுல இருந்து பஞ்சம் பொழைக்க வந்த 'பரமசிவன்'அஜித்தாவோ இல்லாம கொஞ்சம் பாக்கற மாதிரி இருந்தது படத்துல இன்னொரு பெரிய ஆறுதல். என்னமோ போங்க.. விஜய் ஒரு பக்கம் போக்கிரி பக்கிரின்னு எப்படி நடிச்சாலும் படம் ஓஹொன்னு ஓடிட்டிருக்க நல்ல நடிப்புத்திறமைய வெச்சிட்டு இவரு இப்படி திணறுறத பாத்தா பாவமாத்தான் இருக்கு. அஜித் நீங்க எதுக்கும் ஒரு நடை திருநள்ளாறு போய் எள் தீபம் ஏத்திட்டு வாங்களேன்?

பி.கு: நான் இனிமே சன் டிவி தவிர வேறெதுலயும் புதுப்படம் பாக்க போறதில்ல.

41 comments:

ILA (a) இளா said...

அப்படியே நீங்களும் ஒரு தடவை கூடுதுறை பக்கம் போய்ட்டு வாங்க. சனீஸ்வரன் பகவானை தரிசிக்கதான், இல்லைன்ன இப்படி ஒரு பார்க்க முடியுமா?

CVR said...

ஹ ஹ ஹா!!
நல்ல காமெடியான விமர்சனம்!!
நல்லா எழுதியிருக்கீங்க மேடம்!!
வாழ்த்துக்கள்!! :-)

G3 said...

//அஜித் நீங்க எதுக்கும் ஒரு நடை திருநள்ளாறு போய் எள் தீபம் ஏத்திட்டு வாங்களேன்?
//

அட.. இங்க பாருங்கப்பு.. ஒரு படம் பாத்ததுக்கே கவிதாயினி சாமியாரினி ஆயிட்டாங்க :P

வடுவூர் குமார் said...

சாதனா சர்கம் மட்டும் இந்த ழ உச்சரிப்பை சரி செய்துகொண்டால்,நன்றாக இருக்கும்.
இவர் குரலில் ஏதோ ஒன்று நம்மை எங்கோ கொண்டுசெல்கிறது.
அஜீத்தோட "திருப்பதி" பார்த்த போது ஏற்பட்ட மயக்கம் இன்னும் தீரவில்லை.

nagoreismail said...

உங்களின் விமர்சனம் படம் பார்க்கும் ஆசையை அதிகரித்து விட்டது, அது உங்கள் எழுத்தின் மகிமையாக தான் இருக்கும் - நாகூர் இஸ்மாயில்

காயத்ரி சித்தார்த் said...

இளா அண்ணா.. அதான் சொன்னனே இது வெளிநாட்டு சதி அல்லது அமானுஷ்ய சக்தியோட வேலைன்னு..
:(

காயத்ரி சித்தார்த் said...

நன்றி சிவிஆர்.. படம் பாத்தா சிரிக்க முடியாது. விமர்சனம் படிச்சாவது சிரிச்சுக்குங்க! :))

காயத்ரி சித்தார்த் said...

ஜி3 நாட்டுக்கு நல்லது பண்ணினா பொறுக்காதா உனக்கு? என் புகழை குலைக்கனும்கிற சதித்திட்டத்தோடயே அலையுற நீயி..

ILA (a) இளா said...

//இளா அண்ணா.. அதான் சொன்னனே இது வெளிநாட்டு சதி அல்லது அமானுஷ்ய சக்தியோட வேலைன்னு.. //ஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

காயத்ரி சித்தார்த் said...

//சாதனா சர்கம் மட்டும் இந்த ழ உச்சரிப்பை சரி செய்துகொண்டால்,நன்றாக இருக்கும்.
//

அப்படிங்களா குமார்? நான் கவனிக்கல.. ஆனா அப்படி ஒரு குழைவான சாரீரம்.. உருகிட்டேன் நான்!

அருள் குமார் said...

// டிப்பார்ட்மெண்ட் வழக்கம் போல அவரை தண்ணியில்லாத காட்டுக்கு மாத்த//

ஏங்க... கோடிக்கரை தண்ணியில்லாத காடா?!

Ayyanar Viswanath said...

கவிதாயினி ரொம்பத்தான் கிண்டல் அதிகமாயிடுச்சி..

ஆட்டோ வந்துட்டிருக்கு...

Ayyanar Viswanath said...

கவிதாயினி ரொம்பத்தான் கிண்டல் அதிகமாயிடுச்சி..

ஆட்டோ வந்துட்டிருக்கு...

குசும்பன் said...

"ஒரு அழகான ரம்மியமான சாயந்திர நேரம்! என்ன பண்ணிருக்கனும் நான்? ஊர்ல புத்தகத்திருவிழா நடக்குது, ஒரெட்டு போய் பாத்திட்டு வந்திருக்கலாம். சின்னதா ஒரு கூடைல திரி, எண்ணெய், கற்பூரம், கொஞ்சம் பூ எல்லாம் எடுத்திட்டு நல்ல புள்ளையா எதாச்சும் ஒரு கோவிலுக்கு போயிருக்கலாம், பக்கத்து வீட்டு வாண்டுகளை கூப்பிட்டு வெச்சி 'சிங்கம்' அல்லது 'புலி'க்கதை சொல்லிருக்கலாம்.. அட மொட்டை மாடிக்குப் போய் டீ குடிச்சிட்டே... வாங்கினதுல இருந்து இன்னும் படிக்காம 'இழுத்துட்டே' போற 'ரப்பர்' நாவலையாச்சும் படிச்சு முடிச்சிருக்கலாம்."


அடா அடா உங்க டீ யோட இந்த படம் மோசமாக இருந்துச்சா! கேட்கவே மணசு கஷ்டமா இருக்குதுங்க...அஜித் உன் படம் பார்கிறதுக்கு அவுங்க டீ குடிச்சு இருக்கலாம்ன்னு சொன்னாங்க பாரு.. அய்யோ..இதுக்கு நீ அந்த டீய குடிச்சுட்டு ....:(

சரி நீங்க சொன்னது எதுலேயும் இல்லேன்னா கவிதை எழுதி இருக்கலாம் என்ற ஒரு வார்தை கூட வரலீயே, அப்ப அந்த கவிதை எல்லாம் எழுதுறது யாரு.

காயத்ரி சித்தார்த் said...

//ஏங்க... கோடிக்கரை தண்ணியில்லாத காடா?! //

பனிஷ்மெண்ட்டுக்காக ட்ரான்ஸ்பர் குடுத்தா இப்படித்தான் சொல்லனும் அருள்! இன்னும் பச்சப்புள்ளயாவே இருக்கீங்களே? ஏன் அது உங்க ஊரா?

காயத்ரி சித்தார்த் said...

//உங்களின் விமர்சனம் படம் பார்க்கும் ஆசையை அதிகரித்து விட்டது,//

இஸ்மாயில் இத்தன சொல்லியும் கேக்கலன்னா அப்புறம் உங்க தலையெழுத்தை யாரால மாத்த முடியும்?

காயத்ரி சித்தார்த் said...

அய்யனார்.. நீங்க அஜித் ரசிகரா? தெரியாம போச்சே! அது சரி துபாய்ல இருந்து ஆட்டோலயே வரப்போறீங்களா? :)))

அருள் குமார் said...

//இன்னும் பச்சப்புள்ளயாவே இருக்கீங்களே? //

ஆமாங்க நான் எப்பவும் குழந்தைதான் :)

//ஏன் அது உங்க ஊரா? //
இலங்க. ஆனா நான் பார்க்க விரும்புகிற ஊர். 'பொன்னியின் செல்வனில்'(படம் இல்லங்க, நாவல்!) அந்த ஊர் பத்தி படிச்சப்போ எழுந்த ஆர்வம். இந்த படம் பாத்ததுக்கு அப்புறம் இன்னும் அதிகமாய்டுச்சி. 'அக்கம் பக்கம் யாருமில்லா..' பாட்டு லொக்கேஷன் பாத்தீங்களா? அது கோடிக்கரைதானாம்!

காயத்ரி சித்தார்த் said...

குசும்பா.. அது நான் போட்ட டீன்னு சொன்னனா? அடங்க மாட்டியா நீயி?

//சரி நீங்க சொன்னது எதுலேயும் இல்லேன்னா கவிதை எழுதி இருக்கலாம் என்ற ஒரு வார்தை கூட வரலீயே//

துயர்மிகு வரிகளை இரவு எழுதறதுதான் என் வழக்கம்ப்பா! (உனக்கெல்லாம் சீரியசா பதில் சொல்ல வேண்டியிருக்கு பாரேன். கலிகாலம்!)

ஜே கே | J K said...

//அஜித் அரிசி மூட்டைக்கு பனியன் போட்ட மாதிரி 'ரெட்' அஜித்தாவோ, சோமாலியாவுல இருந்து பஞ்சம் பொழைக்க வந்த 'பரமசிவன்'அஜித்தாவோ இல்லாம கொஞ்சம் பாக்கற மாதிரி இருந்தது படத்துல இன்னொரு பெரிய ஆறுதல்.//

ஆமாங்க ரொம்ப ஆறுதலான விசயம் தான்.

manasu said...

//அந்த புள்ளையார் இல்லன்னா அவங்க எக்ஸாம்ல பெயில் ஆய்டுவாங்களாம்.//

உங்கள மாதிரி வாத்தியார், கவிதையும் கணிணியுமே கதின்னு இருந்தா, புள்ளயாரைத்தான் நம்பனும்.

கவிதாயினி விஜய் ரசிகையோ.

(இது மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெளியான வெற்றிப்படம், ஆனால் அதில் கதை இதுபோலல்ல.)

கோபிநாத் said...

\அந்த புள்ளையார் இல்லன்னா அவங்க எக்ஸாம்ல பெயில் ஆய்டுவாங்களாம். (இதை அவங்க சொல்லும் போது துக்கம் தாங்காம நான் அழுதுட்டேன் தெரியுமா?) \\\

நீங்க எதுக்கு அழுதீங்க...நீங்களும் புள்ளையார் இல்லன்னா பெயில் ஆய்டுவிங்களா!!! ;-)


\\ராஜ்கிரண் வழக்கம் போல ஒரு எம்.எல்.ஏ பையன்கிட்ட வம்பு வளர்க்க, டிப்பார்ட்மெண்ட் வழக்கம் போல அவரை தண்ணியில்லாத காட்டுக்கு மாத்த, அங்க வழக்கம் போல ஒரு ரௌடி ஊரையே மிரட்டிட்டு இருக்க, இவரும் வழக்கம் போல அவன்கிட்டயும் தன் நேர்மைய காட்டி அடிவாங்க, அஜித் வழக்கம் போல அப்பாவ காப்பாத்த உணர்ச்சிவசப்பட்டு அந்த ரௌடிய கன்னாபின்னான்னு அடிக்க.... அவ்வ்வ்வ்வ்வ்.. \\

இதுக்கு வழக்கம் போல கவிதையே எழுதியிருக்கலாம் ;)))

குசும்பன் said...

காயத்ரி said...
குசும்பா.. அது நான் போட்ட டீன்னு சொன்னனா? அடங்க மாட்டியா நீயி?

மாட்டோம் மாட்டோம் மாட்டோம்:)

தமிழன் said...

என்னிக்காவது ஒரு நாள் சினிமாவுக்கு போகலாமுனு பார்த்தா அப்போதான்
இந்த விமர்சனம் எல்லாம் கண்ணுல படும்
என்ன கொடுமை காயத்திரி...

Dreamzz said...

//இண்ட்ரோ சாங் ல இருந்து, த்ரிஷாவோட காதல் வரை எல்லாம் சினிமாத்தனமா செயற்கையா வெச்சிட்டு 'நாயகனின் தோல்வியை இயல்பா படமாக்கிருக்கோம்'னு பெருமைப்பட்டுக்கறது நிஜமாவே நல்ல காமெடி.//

ஹிஹி!! என் எண்ணமும் அதுவே!
நல்லா சொல்லற்றீங்க விமர்சனம்! :)

எதுக்கும் ஜகா வாங்காதவன் said...

தோழி காயத்ரி ஹ ஹ ஹா!!
நல்ல காமெடியான விமர்சனம்!!

காட்டாறு said...

சரி காமெடி. கவிதைல கலக்குவீங்கன்னு பார்த்தா... காமெடியும் தான். விமர்சித்த விதம் நல்லா இருக்குதுங்க.

காயத்ரி சித்தார்த் said...

//கவிதாயினி விஜய் ரசிகையோ.//

சேச்சே!!

//(இது மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெளியான வெற்றிப்படம், ஆனால் அதில் கதை இதுபோலல்ல.) //

அதானே! இப்படி கதை இருந்தா எங்க வெற்றியடையறது?

காயத்ரி சித்தார்த் said...

//நீங்க எதுக்கு அழுதீங்க...நீங்களும் புள்ளையார் இல்லன்னா பெயில் ஆய்டுவிங்களா!!! ;-)//

//இதுக்கு வழக்கம் போல கவிதையே எழுதியிருக்கலாம் ;))) //

பாவிகளா! இதுக்குத்தான் இந்த குசும்பன் கூட சேராதீங்கன்னு தலையால அடிச்சிகிட்டேன். நல்ல புள்ளையா இருந்த கோபி கூட கலாய்க்க ஆரம்பிச்சுட்டார். :(

காயத்ரி சித்தார்த் said...

தப்பிச்சோம்னு சந்தோஷப்படுங்க மோகன்!

ட்ரீம்ஸ், காட்டாறு, நன்றி!

ஏங்க 'ஜகா' தெரியும். அதென்ன 'ஜாகா'? என்னவோ சிரிச்சீங்களா நல்லா? சந்தோஷம்.. மகிழ்ச்சி! :))

வெட்டிப்பயல் said...

//காயத்ரி said...

குசும்பா.. அது நான் போட்ட டீன்னு சொன்னனா? அடங்க மாட்டியா நீயி?//

அதானே அவுங்க போட்ட டீ அஜித் படத்தைவிட கொடுமையா இருக்கும் ;)

இராம்/Raam said...

ஓப்பனிங் ஷோ'வுக்கு மோகன் தாஸ் கூப்பிட்டவே நாங்க போகலியே!!!!


படத்தை பார்த்துட்டு வந்த ஒங்களை பார்த்தா பாவமாதான் இருக்கு.... :)

Santhosh said...

நல்ல வேளை இந்த படத்தை டவுன்லோடு பண்ண ரெண்டு நாளா முயற்சி செய்துகிட்டு இருந்தேன். எல்லாரும் நல்லா இருக்குன்னு சொல்வதை பாத்து ரொம்ப பீல பண்ணேன் என்ன இன்னும் பாக்க முடியலையேன்னு.. நல்ல வேளை me the escapuuu...

MyFriend said...

தலயின் பெயரை கலங்கப்படுத்த பார்க்குறீங்களா??

அஜித் கொலைவெறி சங்கத்துல இருந்து ஆட்டோ சுமோக்கள் கிளம்பி ஈரோடு பக்கம் வந்தாச்சு!!! மாட்டுனீங்க நீங்க!!!!! :-P

கப்பி | Kappi said...

உங்களுக்கு பின்னூட்ட ஆரம்பிச்சு அது தனிபதிவாவே ஆயிருச்சுங்க :))

Yogi said...

// அஜித் அரிசி மூட்டைக்கு பனியன் போட்ட மாதிரி 'ரெட்' அஜித்தாவோ, //

:)))))

நாஞ்சில் பிரதாப் said...

நான் நினைக்கிறேன் காயத்ரி மேடம் இப்பதான் கமர்சியல் படங்கள் பார்க்க ஆரம்பித்திருக்கிறார் என்று இதற்கு முன்பு ஆவணப்படங்கள் மட்டும் தான் பார்த்துகொண்டிருந்தார் போல.

உங்கள் விமர்சனம் தல படத்திற்கு மட்டுமல்ல இப்போது வரும் எல்லா படங்களுக்கும் பொதுவான ஒரு விமர்சனமாக உள்ளது. கதைமட்டும் மாறலாம்.

இந்த படத்திற்கே இப்படி பில்டப் கொடுக்கீறீர்களே... நீங்கள் பேரரசு, பூபதி பாண்டியன், சரண் இவர்கள் படங்களை பார்த்ததே இல்லையா...அவர்கள் படங்களை எந்த வகையில் சேர்ப்பீர்கள்.

உங்களை கடுப்பாகிய பல விசயங்கள் ஒரு கமர்சியல் படத்திற்கான அடையாளங்களே தவிர அவைகள் இல்லாமல் படம் எடுத்து ரிஸ்க் எடுக்க ஒரு சில இயக்குநர்களை தவிர வேறு எவரும் தயாரில்லை.

இவ்வளவு கூறும் நீங்கள் தவமாய் தவமிருந்து, பருத்திவீரன், ராம், அன்பேசிவம், அழகி, வெயில், இவற்றில் எத்தனை படங்களை தியேட்டரில் சென்று பார்த்தீர்கள். இல்லை இதில் எத்தனை படங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளதாக நினைக்கிறீர்கள். அதைப்பற்றி குறிப்பிடவில்லையே.

அரதப்பழசாகிப் போன தமிழ்படங்களின் லாஜிக் சொதப்பல்கள் பற்றி விமர்சனங்களை படித்து படித்து பழகிவிட்டது. புதிதாக ஏதேனும் எழுது முயற்சிக்கலாமே.

பின் குறிப்பு : நான் தல ரசிகன் அல்ல...
அன்றும் இன்றும் என்றும் நம்ம ஒரே நாயகன்...உலகநாயகன் கமல்ஹாசன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கவிதைக்கு அடுத்தபடி உங்க
சினிமா விமர்சனங்களும் மிக ரசிக்கும் படி இருக்கிறது..
பத்தவச்சிட்டயே பரட்டை மாதிரி இதுவும் ஒரு அட்டகாசமான பதிவு.

Unknown said...

உங்களுக்கு அஜித்துக்கு எதாச்சும் முன்விரோதம் இருக்குதா??

போட்டுத் தாக்கிருங்கிங்க ?????

ஆனா இந்தப் படம் எல்லாருக்கும் பிடிக்காது.

நாங்கள்ளாளாளாம் அப்படினு சீன் போடறவங்களுக்கு வேணும்னா பிடிக்கலாம் ;)

படம் எப்படியோ போகட்டும் உங்க
விமர்சனம் சூப்பர்.

இதைப் போலவே இன்னமும் பல படம் பாத்து விமர்சனத்துல கலக்கி ஆப்பு வாங்க வாழ்த்துக்கள் :)

chandru / RVC said...

nalla vimarsanam. unmayileye thaanga mudiatha commercial comprmise intha padathula neraya irunthathu.ivaroda last movie PARAMASIVANlayum ipadithan.
ragasiya jailukkulla vanthu aaduvanga,athukku jailerana prakashraje aerpaadu panni koduppar,kadaisiyila adhu prakashrajoda kanavu...dear Ajith, better luck next time...
(pls post my comment in tamil.thanks)

Unknown said...

மோகன்லால் ரொம்ப இயற்கையா நடிச்சு (முரண்தொடை??) நேஷனல் அவார்டெல்லாம் வாங்கின படத்தை எப்படியும் தமிழ்ல எடுக்கிறப்போ சூப்பரா மொக்கைப் போட்டிருப்பாங்கிற ஒரே காரணத்துக்காக அந்தப் படத்தைப் பார்க்கல. இதுக்கு முன்னாடி பரதம் படத்தை சீனு'ங்கிற பேர்ல கார்த்திக்கை நடிக்க வச்சு பீ.வாசு பண்ண கொடுமையே ஜீரணிக்க முடியல...