Wednesday, February 27, 2013

லெபனான் பயணம் - பெய்ரூட் - 3








இது Harissa. பெய்ரூட்டில் பார்க்க வேண்டிய இடங்கள் என்று நாங்கள் வைத்திருந்த லிஸ்ட்டில் இந்த இடம் இல்லை. ஆனால் சுற்றுலாப் பயணிகள் பிரைவேட் டாக்ஸி அல்லது தங்கியிருக்கும் ஹோட்டலின் கார் மூலம் பயணிப்பதாயிருந்தால் jeita Grotto - Harissa - Byblos ஆகிய மூன்றையும் ஒரே நாளில் பார்க்க வேண்டியிருக்கும். இதை ஒருநாள் பேக்கேஜாக வைத்து 100 டாலர்கள் வசூலிக்கிறார்கள். (ஹோட்டல் காருக்கு 120) பிரைவேட் டாக்ஸி டிரைவர்களில் ஒருவருக்கும் ஆங்கிலம் தெரிந்திருக்கவில்லை. பெரும்பாலும் ஆதிகாலத்து சைகை மொழியிலேயே கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்த வேண்டியிருக்கிறது. 

Harissa ஒரு மலைக்கிராமம். கடல் மட்டத்திலிருந்து 650 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இவ்விடத்தில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றும் 15 டன் எடை கொண்ட அன்னை மேரியின் 27 அடி உயர வெண்கலச் சிலையும் இருக்கின்றன. 1908 ல் அமைக்கப்பட்ட சிலையாம்.  நிறைய ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் வெகு சிரமப்பட்டு படியேறி சிலையை அடைந்து அங்கிருந்து கீழே ஊரையும் மேலே அன்னையையும் இடையில் தங்களையும் புகைப்படம் எடுக்கிறார்கள். நான் கீழே நின்றபடி மேரியின் விரிந்த கரங்களில் தெரிவது கருணையா  கையறு நிலையா என்று  யோசித்துக்கொண்டிருந்தேன். பசி நேரமாகிவிட்டதால் அம்மு நசநசக்க ஆரம்பிக்கவும் சர்ச்சிற்குள் போகாமலேயே திரும்பி விட்டோம். மாதாவின் உருவம் பொறித்த கோப்பை ஒன்றை வாங்கி வந்தேன்.

கடற்கரை அருகிலிருந்து புறப்படும் ரோப் கார் மலை உச்சியை அடைகையில் திரும்பி கீழே பார்த்தால் ஒரே நேரத்தில் திகைப்பாகவும் திகிலாகவும்  இருக்கிறது.  சித்துவுக்கு ஆழத்தைப் பார்ப்பதென்றால் பயம்.. “என்னைப் பார்த்து சிரிக்கக் கூடாது” என்ற நிபந்தனையோடு வேர்க்க வியர்க்க கண்களை இறுக்கி மூடிக் கொண்டார். அம்மு சீட்டிலிருந்து கீழே இறங்கி மொத்தப் பெட்டியும் அதிருமளவுக்கு குதிப்பதும், கதவைக் கையால் உந்தித் தள்ளுவதுமாக திகிலூட்டிக் கொண்டிருந்தாள். பின்னாளில் பார்த்துச் சிரிக்கவும், அவ்வப்போது அவரை  ப்ளாக்மெயில் செய்யவும் உதவும் என்று சித்துவின் பயந்த முகத்தைப் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டேன். :) “திரும்பி இதுல தான் கீழ போகனுமா? நான் மாட்டேன்.. பேசாம ஒரு டாக்ஸி புடிச்சி ரோடு வழியா கீழ போய்டலாம்” என்று புலம்பிக் கொண்டேயிருந்தார். நானோ ஜான்சிராணி போன்ற  முகபாவத்தோடு.. “டாக்சில போனா சாயந்திரம் ஆய்டும் கீழ போக....அதெல்லாம் வேணாம்.  இதுல என்ன பயம்? தைரியமா இருங்கப்பா” என்று அட்வைசினேன். உண்மையில் திரும்பி கீழிறங்கும் போது எனக்குத் தான் பயத்தில் உயிரே போய்விட்டது. வேகமாக கீழிறங்கிக் கொண்டிருக்கையில் பாதி வழியில் திடீரென எங்கள் பெட்டி நின்று விட்டது. லேசான மிரட்சியோடு “ஏன் நின்னுடுச்சி? ஏன் நின்னுடுச்சி?” என்று இருவரும் மாற்றி மாற்றி கேட்டுக் கொண்டிருக்கையில் சித்து திடீரென  “ஐய்யோ பின்னாடி ஒரு பெட்டி வேகமா வந்துட்டிருக்கு” என்றார்.  திரும்பிப் பார்த்தால் உண்மையாகவே பின்னால் ஒரு பெட்டி வேகமாக இறங்கி வந்து கொண்டிருக்க எங்கள் பெட்டி நின்ற இடத்திலேயே முன்னும் பின்னுமாக ஆடிக் கொண்டிருந்தது. நல்லவேளையாக அப்போது என் முகத்தை யாரும் புகைப்படம் எடுக்கவில்லை. எங்கள் பெட்டிக்கு சற்று அருகில் வந்து அதுவும் நின்று விட்ட பின்னரே கொஞ்சம் மூச்சு விட முடிந்தது. பின் சீராக அனைத்தும் கீழிறங்கின. கீழே இறங்க இறங்க கயிறு எங்கு தொடங்கி எங்கு முடிகிறது என்றே புரியவில்லை. சர்ர்ரென்று இறங்கி  நேராக கடலில் போய் விழப்போவது போல ஒரு பிரமை தட்டியது. சித்துவுக்கு   பயம் தெளிந்து விட்டது போல...  வழியில் விதவிதமான அமைப்புகளில் கட்டபட்டிருந்த வீடுகளைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தார். ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பின் முதல் 2 தளங்கள் பள்ளத்திலிருக்க  இரண்டாவது தளத்தோடு சாலை இணைந்திருந்தது. :)  

இப்போது யோசித்தால் ஹரிஸ்ஸாவில் மிகப் பிடித்தது தேவாலயமோ, அன்னை மேரியின் சிலையோ.. அங்கே தத்தித் திரிந்த குழந்தைகளோ அல்ல.. ரோப் கார் நின்று கிளம்பியதற்கு இடைப்பட்ட திகில் நிமிடங்களே என்று தோன்றுகிறது.

1 comment:

pudugaithendral said...

சுவாரஸ்யம்