Wednesday, February 27, 2013

லெபனான் பயணம் - பெய்ரூட் - 2





பெரிய சங்கினை காதருகே வைத்துக் கேட்டிருக்கிறீர்களா? ஓயாத இரைச்சல் ஒன்று கேட்கும். கொஞ்சம் விலக்கியதும் சட்டென்று அமைதி சூழும். விளையாட்டுப் போல வேக வேகமாய் வைத்து எடுத்தால் இரைச்சலும் மெளனமும் மாற்றி மாற்றிக் கேட்கும். பெய்ரூட்டின் மைய நகரமும் இந்த பிப்லோஸ் நகரமும் இந்த சங்கு விளையாட்டினைத் தான் நினைவூட்டின. பெரிய இரைச்சலிலிருந்து சட்டென்று மிகப் பெரிய அமைதிக்குள் நுழைந்தாற் போலிருந்தது. Byblos.. கெளதம் மேனன் சொல்வது போல அவ்ளோ அழகு! 

8000 வருடங்களாய் இதே பெயரோடு தொடர்ந்து மக்களின் பயன்பாட்டில் இருந்து வரும் உலகின் மிகப் பழமையான நகரம் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள் லெபனான் வாசிகள். இரண்டாவது படத்திலிருக்கும் சாலையில் நின்று சற்றே அண்ணாந்து பார்த்தால் திகைப்பிலும் மகிழ்ச்சியிலும் ‘ஹா’ வென்று ஒரு உணர்வு வருகிறது. ஒரு புறம் முழுவதும் திகட்டத் திகட்ட கடல்! மறுபுறத்தில் திகைக்க வைக்கும் மலைகள்!! மொத்த லெபனானுமே இவற்றுக்கு நடுவில் தான் வசிக்கிறது போல. சர்க்கஸ் மாஸ்டரின் சாட்டைச் சொடுக்கலுக்குப் பணிந்து ஸ்டூல் மீதேறி நின்று வாய் பிளந்து கர்ஜிக்கும் சிங்கத்தைப் போலிருக்கிறது கடல். சொன்ன இடத்திலெல்லாம் வளைந்து கொடுத்து நின்று கொஞ்சமாய் அலை வீசிக் கொள்கிறது. கிள்ளி முத்தமிடலாம் போல அழகு! 

இந்நகரத்தில் வானுயர்ந்த சிமெண்ட் கட்டிடங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அனைத்தும் கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட நம்மை விட சற்றே உயரமான  இணக்கமான குடியிருப்புகளாகவே காட்சியளிக்கின்றன. தெருவோரங்களில் ஆரஞ்சுப் பழ மரங்கள் காய்த்துக் குலுங்குகின்றன. சுற்றுச்சுவர் மட்டுமல்லாது வீட்டின் சுவர் முழுக்க பூங்கொடிகளைப் படர விட்டிருக்கிறார்கள். ஒரு வீட்டின் சுவரில் படர்ந்திருந்த கொடியைப் பார்த்து “இது திராட்சை இலை மாதிரியே இருக்கில்லப்பா?” என்றேன் சித்துவிடம். “திராட்சைக் கொடியாவே கூட இருக்கலாம்.. யார் கண்டா?” என்றார். அம்மு குறுக்கிட்டு “இது திராட்சைக் கொடி இல்ல.. இது மேங்கோ கொடி” என்றாள். நாங்கள் சிரித்து “மேங்கோ கொடியா? மேங்கோவெல்லாம் எங்க காணோம்?” என்றோம். கொஞ்சம் போல யோசித்தவள், “மேங்கோல்லாம் கொண்டு வந்து மாட்டுவாங்க... நாளைக்குக் கொண்டு வந்து மேங்கோ கொடில மாட்டுவாங்க” என்றாள். :))))

No comments: