Friday, June 22, 2007

எட்டுக்குள்ளே வாழ்க்கை இருக்கு!!

எட்டு விளையாட்டுக்குள்ள என்னையும் இழுத்துவிட்டிருக்கார் திரு.குசும்பர்! இதுவும் குசும்பு தானான்னு தெரியல! இருக்கட்டும். என் தன்னடக்கத்தை பீரோவுல வெச்சி பூட்டிட்டு என்னைப் பத்தி சொல்றேன்! (எட்டு மட்டும் போதுமா குசும்பரே?)

1. தமிழாசிரியை என்ற அடையாளம் :

தமிழ்நாட்டுல தமிழ் இலக்கியம் படிக்கிறதும் தற்கொலை பண்ணிக்கறதும் ஒண்ணுங்க. ஆனாலும் தமிழை விரும்பி படிச்சதிலயும் தமிழாசிரியையா இருக்கறதிலயும் பெருமைதான் எனக்கு. இலக்கியம் படிக்கும் போது ஏதாவது ஒரு வரில மனசு ஸ்தம்பிச்சு நிக்கும் அப்டியே. 'இத விட என்ன பெரிசா இருக்கு வாழ்க்கைல'ன்னு தோனும். பணத்துக்காக படிக்காம மனசுக்காக படிச்சோம்னு ஒரு நிறைவு இருக்கு. அதே போல ஆசிரியைங்கிற ஸ்தானம் ரொம்ப உன்னதமானது. வயதுக்கு மீறின பொறுப்புணர்வோட... என் மாணவிகளுக்கு படிப்பைத் தாண்டி துணிச்சலாவும் தெளிவாகவும் செயல்படற அளவுக்கான உள்ளீடுகளை குடுத்திருக்கேன்ற நம்பிக்கைதான் இந்த பணில கிடைச்ச ஆத்ம திருப்தி.

2. அன்பு செய்தல்:

யாரையாவது பிடிச்சு போய்டுச்சுன்னா சில்லுன்னு ஒரு வாளி நிறய தண்ணி எடுத்து அப்டியே தலைல கொட்ற மாதிரி எந்த எதிர்பார்ப்பும் இல்லாம அன்பு காட்றது என் ஸ்டைல். வந்து போன காதலர்களை பூங்காக்கள் நினைவு வெச்சிக்குதோ இல்லியோ என் மனசுக்குள்ள வந்து போனவங்க யாரையும் நான் மறக்கறதே இல்ல. தொடர்பே இல்லாம சில வருஷங்கள் இருக்கறவங்களைக் கூட பழைய அன்பார்ந்த நினைவுகளோட திடிர்னு சந்திச்சு திக்குமுக்காட வெப்பேன்.

3. கணிணியும் குழப்பமும்:

கம்பரோ.. கபிலரோ கணிணி பத்தி ரெண்டு கண்ணி கூட எழுதாம போனது என் துரதிருஷ்டம். வீட்டுல ஓரமா தேமேன்னு உக்காந்திருக்கிற இந்த பொட்டிய என்னால எவ்ளோ முடியுமோ அவ்ளோ இம்சிச்சிருக்கேன். என்ன இது? எப்டி பண்ணனும்னு யாரயும் கேக்காம சுயமா கத்துக்க முயற்சிசெஞ்சு... photo shop, vedio editing, tamil type writing லொட்டு லொசுக்குன்னு எல்லாம் பழகினேன். பாவம் 2 தடவை என் கொடுமை தாங்காம உசுர விட்ருச்சு. தம்பி தான் காப்பாத்தினான். கண்ணுக்கு தெரியற கீபோர்டு, மெளஸ், மானிட்டரோட ஒன்னுமே புரியாத Html குழப்பங்களை தாண்டி பதிவு ஆரம்பிச்சு.. 'சங்கம்' வெச்சு தமிழ் வளர்க்கிற (!?) அளவுக்கு வளர்ந்திருக்கிறது பெரிய சாதனையா படுது எனக்கு.

4. முனிவின்மை:

முனிவுன்னா வெறுப்பு! (பெரிய மீசை வெச்ச சாமியோ.. தமிழ்சினிமாவோ இல்ல!!) எல்லாரயும் நேசிக்க முடியல என்னால.. ஆனா யாரயுமே வெறுக்காம இருக்க முடியுது. ஒருத்தர் மேல கோபத்தையோ வெறுப்பையோ சுமந்துகிட்டு அலையறது.. ஒரு பாத்திரத்துல சாக்கடை தண்ணியோ.. மலமோ எடுத்து வீட்டுக்குள்ள வெச்சுக்கற மாதிரி. மனசு நாறிப் போய்டும். என்னையும் என் ஒழுக்கத்தையும் பத்தி புறம்பேசிட்ருந்த ஒரு நண்பருக்கு உடல்நிலை சரியில்லாதப்போ...அவர் பிறந்தநாள் நினைவு வெச்சிருந்து கேக்கும் பழமுமா வீட்ல போய் சந்திச்சு ஆறுதல் சொல்லிட்டு வந்தேன். என்னை வழியனுப்பும்போது அவர் முகத்துல இருந்த நெகிழ்வு!.. அப்பவே தெரிஞ்சுது மறுபடி என்னை தப்பா பேச மாட்டார்னு. ம்ம்..
"இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு"

5. நேர்மை :

"ஒருவரை ஒருவர் அடுதலும் தொலைதலும் புதுவது அன்று உலகத்தியற்கை" கிட்டத்தட்ட ரெண்டாயிரம் வருஷம் முன்னால எழுதப்பட்ட வரி... ஒருத்தன ஒருத்தன் ஏமாத்திக்கறதும் ஏமாறுறதும் ஒன்னும் புதுசில்லடா ன்னு சொல்றாங்க. இத்தனை வருஷத்தில நான் பலமுறை ஏமாந்திருக்கேனே தவிர யாரயும் ஏமாத்தினதில்ல. குறிப்பா எனக்கு முழு சுதந்திரம் குடுத்திருக்கிற என் அப்பா.. அம்மாவை. 99.99 சதவீதம் வீட்ல எந்த விஷயத்தையும் நான் மறைக்கறதில்ல. பணத்துலயோ.. மனசுலயோ யாரையும் நம்ப வெச்சு ஏமாத்தினதில்லங்கிறது ஒரு கர்வமாவே இருக்கு எனக்கு. போலித்தனமோ பாசாங்கோ இல்லாம வெளிப்படையா பழகறதும் ஒத்துவராதுன்னு தோணினா நேர்மையா சொல்லிட்டு விலகிடறதும் என் ப்ளஸ்ன்னு நினைக்கிறேன். ஒரு தடவை செல் ரீசார்ஜ் பண்ண கடைக்கு போனப்ப, கடைக்காரர் ரொம்ப நல்லவர்னு வேற ஒருத்தர் புகழ்ந்துகிட்டிருந்தார்.. அதுல மயங்கியோ என்னவோ 100 ரூபா டாப் அப் கார்டுக்கு என்கிட்ட கார்டு + 400 ரூபாய் குடுத்தார் அவர். (நான் குடுத்தது 500னு நினைச்சிட்டார் போல) திருப்பி குடுத்துட்டு வீட்டுக்கு வந்து அம்மாட்ட சொன்னேன்.. "அவர் நிஜமாவே நல்லவர்தான் போலிருக்குமா.. அதான் அவர் பணம் அவர விட்டு போக மாட்டிங்குது"ன்னு.

6. தைரியம் :

இயல்பாவே தைரியம் ஜாஸ்தி எனக்கு.. சில சமயம் குருட்டு தைரியமாவும் இருக்கும் அது. நான் வெளியூர் போனா நைட் 11.30 வரை என்ன ஆனேன்னு வீட்ல யாருமே கவலைப்பட மாட்டாங்க. அதுவரை தான் பஸ் இருக்கும். அதுக்கு பிறகு தான் போன் பண்ணுவாங்க. பொதுவா பொண்ணுங்களூக்கு குறிப்பா வேலைக்கு போற பொண்ணுங்களுக்கு பெரிய பிரச்சினையே ஆண்கள் தான். பஸ்ல, பொது இடத்துல, வேலை செய்யற இடத்துலன்னு நிறைய்ய பிரச்சினைகள சந்திச்சு சமாளிச்சு வந்திட்டிருக்கேன்னா அதுக்கு அம்மாவும்.. பாரதியும் தான் உள்ளீடா இருக்கணும். அதேபோல புடவை.. நகைன்னு அலையாம கதை ..கவிதைன்னு அலையற பொண்ணு. மத்தவங்க சொந்த விஷய்த்துல மூக்கை நுழைக்கலன்னா
பொண்ணா பிறந்ததுக்கே அர்த்தமில்லயாமே அப்டியா? இல்லாட்டி போகுது நாம என்ன டிக்ஷ்னரியா?

7. கடவுளின் பிள்ளைகள்:

அம்மா.. அப்பா.. தம்பின்னு ஒரு கூட்டுக்குள்ள LIC logo ல நடுவுல இருக்குற தீபம் மாதிரி பாதுகாப்பா வாழும்போதே 'தனிமை' 'தனிமை' னு புலம்பிட்ருக்கற எனக்கு.. ஆதரவற்றோர் இல்ல குழந்தைகள பாக்கும்போது நமக்கு இருக்கறது நிஜமா தனிமை உணர்வா.. இல்ல கொஞ்சம் அதிகப்படியான கொலஸ்ட்ராலான்னு சந்தேகம் வரும். பிற்காலத்துல வெங்கடாஜலபதி சாமி அனுக்கிரகம் இருந்தா இப்டி ஒரு இல்லம் ஆரம்பிக்கனும்னு கனவு.. ஏக்கம்.. லட்சியம் இருக்கு. முடியலன்னா குறைஞ்சபட்சம் ஒரே ஒரு குழந்தைய வளர்க்கவாச்சும் கடவுள் கருணை காட்டனும்.

8. குடுத்துட்டு போறேன் :

ரத்ததானமெல்லாம் தொடர்ந்து செய்ய முடியலன்னாலும் உயிருக்கு போராடின ஒருத்தருக்கு ரத்தம் குடுக்கிற வாய்ப்பை ஒரு முறை கடவுள் கொடுத்தார். கண்ணையும் குடுத்துட்டு போற எண்ணமிருக்கு. என்ன வழிமுறைகள்னு விசாரிக்கனும். அதுக்கு முன்னாடியே பதிவு போட கூப்பிட்டிங்களே? :( சரி எழுதிக் குடுத்துட்டு சொல்றேன். இதெல்லாம் பெருமைன்னு இல்ல.. இருந்தாலும் எண்ணிக்கைக்காக சேர்த்துகிட்டேன்.

அவ்ளோதான்!! ச்சே சுயபுராணம் பாடி பழக்கமே இல்ல.. இப்டி உண்மை எல்லாம் சொல்ல வெச்சிட்டாங்களே? :(

நான் அழைக்கும் அடுத்த எண்மர்!

1. தமிழ்நதி

2. இராம்

3. குட்டிபிசாசு

4. ஜி3

5. மை ஃப்ரண்ட்

6. முத்துலட்சுமி

7. டுபுக்கு

8. தம்பி


விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

36 comments:

கதிர் said...

இப்படிலாம் பண்ணாதான் உண்மை பேசுவீங்களா? :)
யாரோ ஒருத்தர் உண்மை பேச வாய்ப்பு கொடுத்தாரேன்னு சந்தோஷப்படுங்க!
யெக்கோவ், நான் பதினாறு போடணுமா?
என்னை ஏற்கனவே ஒருத்தர் பழிவாங்கிட்டாரு.

G3 said...

//4. ஜி3//

:-((( Idhu un kusumba? illa pazhi vaangum padalama??

G3 said...

//தமிழாசிரியை என்ற அடையாளம் ://
Nichayamaai maar thattikollalaam :-))

//என் மனசுக்குள்ள வந்து போனவங்க யாரையும் நான் மறக்கறதே இல்ல.//
Tok tok.. naan irukkaena ulla?

//'சங்கம்' வெச்சு தமிழ் வளர்க்கிற (!?) அளவுக்கு//
vaa vaa.. unnaa thaan madurai thamizh sangathula theditirukkaangalaam..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஏம்பா இப்படி செய்திட்ட?

G3 said...

//அவர் பிறந்தநாள் நினைவு வெச்சிருந்து கேக்கும் பழமுமா வீட்ல போய் சந்திச்சு ஆறுதல் சொல்லிட்டு வந்தேன்.//
Chancae illa.. Aniyaayathukku nallavala irukka.. naan pidikalana avanga pathi yosikka kooda maaten. but indha alavukkelam nammala karpanai kooda panni paaka mudiyaadhu :(

//"அவர் நிஜமாவே நல்லவர்தான் போலிருக்குமா.. அதான் அவர் பணம் அவர விட்டு போக மாட்டிங்குது"ன்னு.//
Nallavae pesara :-))

G3 said...

//அதேபோல புடவை.. நகைன்னு அலையாம கதை ..கவிதைன்னு அலையற பொண்ணு. மத்தவங்க சொந்த விஷய்த்துல மூக்கை நுழைக்கலன்னா
பொண்ணா பிறந்ததுக்கே அர்த்தமில்லயாமே அப்டியா? இல்லாட்டி போகுது நாம என்ன டிக்ஷ்னரியா?//
*** Clap clap clap ***

//ஏக்கம்.. லட்சியம் இருக்கு.//
Niraivera vaazhthukkal :-)

G3 said...

:-) super padhivu. Imbuttu nalla ponna otta manasu varala.. adhanala indha postla freeya vittudaren unna ;-))

குட்டிபிசாசு said...

படுபாவி!! நான் தான் கிடைச்சனா? நல்லா மாட்டிவிட்டுடீயே!!

CVR said...

என்ன மேடம்!!!
அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்கீங்க!! :-)

நல்ல தெள்வா ரசிக்கும்படியா எழுதியிருக்கீங்க!
உங்க எட்டு குணங்களும் சிறப்பா இருக்கு!!
வாழ்த்துக்கள்!!

மனசு... said...

உங்கள் பக்கத்தில் என் முதல் பதில். தமிழாசியைனு சொல்லிருக்கிங்க. வாழ்த்துக்கள். இன்னிகு பிள்ளை பிறக்கிறதுக்கு முன்னாடியே ஆங்கில பள்ளிக்கூடத்தில்தான் சேக்கனும்னு நினைக்கிற பெற்றோர்கள் 99.99%. ஆனா தமிழை நேசிக்கிறவங்க இல்ல இல்ல சுவாசிக்கிறவங்க இன்னமும் இருக்காங்க்.

எட்டுவிசியம் பேசிருக்கிங்க. அழகு அருமை. வாழ்த்துக்கள்!

மனசு...

Guna said...

//'தனிமை' 'தனிமை' னு புலம்பிட்ருக்கற எனக்கு.. ஆதரவற்றோர் இல்ல குழந்தைகள பாக்கும்போது நமக்கு இருக்கறது நிஜமா தனிமை உணர்வா.. இல்ல கொஞ்சம் அதிகப்படியான கொலஸ்ட்ராலான்னு சந்தேகம் வரும். //
என்னை சிந்திக்க வைத்த வாசகம்.

nice one..

manasu said...

//'இத விட என்ன பெரிசா இருக்கு வாழ்க்கைல'ன்னு தோனும்.//

ரொம்ப ஸ்தம்பிச்சிராதிங்க நான்காம் தமிழ்ச்சங்கத்திற்கு ஆள் இல்லாம போயிரும்.

//யாரையாவது பிடிச்சு போய்டுச்சுன்னா சில்லுன்னு ஒரு வாளி நிறய தண்ணி எடுத்து அப்டியே தலைல கொட்ற மாதிரி //

டீ மாஸ்டர் பாவம்.

//கம்பரோ.. கபிலரோ//

பரிமேலழகர் படிச்சதில்லையா? திருக்குறளுக்கு அடுத்து அவர் தொட்ட சப்ஜெக்ட் இதான். என்ன தமிழாசிரியையோ போங்க.

//அவர் நிஜமாவே நல்லவர்தான் போலிருக்குமா.. //

வடிவேலு தம்பி உங்க ஊரு தானா? சொல்லவேயில்ல????

//அம்மா.. அப்பா.. தம்பின்னு ஒரு கூட்டுக்குள்ள LIC logo ல நடுவுல இருக்குற தீபம் மாதிரி பாதுகாப்பா வாழும்போதே//

//வந்து போன காதலர்களை பூங்காக்கள் நினைவு வெச்சிக்குதோ இல்லியோ என் மனசுக்குள்ள வந்து போனவங்க யாரையும் நான் மறக்கறதே இல்ல.//

நல்லாயிருக்குங்க...இது ரெண்டும்.

குசும்பன் said...

ரொம்ப நன்றி !
என்னையும் ஒரு ஆள மதிச்சு, எனக்காக ஒரு பதிவு போட்டதுக்கு.
நன்றாக சொல்லி இருகிறீர்கள்.

நன்றி.

MyFriend said...

யக்கா.. நீங்க பதிவு போட்டு கிளம்பிட்டு வர்றதுக்குள்ள நாங்க பதிவு போட்டாச்சு.. வந்து பாருங்க. :-D

வீட்டு பாடத்தை கரெக்ட்டா செஞ்சாச்சு. ;-)

MyFriend said...

யக்கா.. உங்களுக்கு 8 போட தெரியல.. :-((

MyFriend said...

ஆனாஎழுதுன வரைக்கும் பிரமாதமா இருக்கு.. ;-)

காயத்ரி சித்தார்த் said...

//யெக்கோவ், நான் பதினாறு போடணுமா?
என்னை ஏற்கனவே ஒருத்தர் பழிவாங்கிட்டாரு//

எத்தன பேர் கூப்பிட்டாலும் 8 போட்டா போதும் தம்பி! எட்டு இருக்கான்னே ட்வுட்டா இருக்கு.. இதுல 16 ஆஆஆ?

காயத்ரி சித்தார்த் said...

//vaa vaa.. unnaa thaan madurai thamizh sangathula theditirukkaangalaam.. //

பாவி! நம்ம ப.பா சங்கத்த தான் சொன்னேன்.. உள்ளயே எட்டிப்பாக்கலன்னா இப்டிதான் கேப்பே நீ..

காயத்ரி சித்தார்த் said...

//முத்துலெட்சுமி said...
ஏம்பா இப்படி செய்திட்ட? //

அக்கா! எவ்ளோ நாள் தன்னடக்கத்தோட பேசாமயே இருப்பீங்க? சொல்லுங்க.. உங்க அருமை பெருமை எல்லாருக்கும் தெரியட்டும்! :))

காயத்ரி சித்தார்த் said...

// குட்டிபிசாசு said...
படுபாவி!! நான் தான் கிடைச்சனா? நல்லா மாட்டிவிட்டுடீயே//

இதென்ன? நானென்னமோ துரோகம் பண்ணிட்ட மாதிரியே எல்லாரும் ஃஎபக்ட் குடுக்கறீங்க??

காயத்ரி சித்தார்த் said...

//என்ன மேடம்!!!
அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்கீங்க!! :-)//

ஹிஹி! அப்டியே நம்ம 'இளந்தல' ராயல் ராம பாத்தா இத சொல்லிட்டு வாங்க. நான் சொன்னா ஒத்துக்க மாட்டிங்கிறார்!

காயத்ரி சித்தார்த் said...

இதென்ன? தமிழ் 'மனசு' பாராட்டுது.. இங்கிலீஷ் 'மனசு' கலாய்க்குது? :((

நன்றிங்க குணா...

காயத்ரி சித்தார்த் said...

//குசும்பன் said...
ரொம்ப நன்றி !
என்னையும் ஒரு ஆள மதிச்சு, எனக்காக ஒரு பதிவு போட்டதுக்கு.
//

எதுக்கு வம்பு.. உடனே நீங்க எதாச்சும் பட்டமளிப்பு விழா.. ஆபுரேஷன்ன்னு போட்டு தாளிப்பீங்க! நானு நல்ல பொண்ணுங்க.. சொன்ன பேச்ச கேப்பேனாக்கும்!

காயத்ரி சித்தார்த் said...

//வீட்டு பாடத்தை கரெக்ட்டா செஞ்சாச்சு//

வெரிகுட் தங்கச்சி!

குட்டிபிசாசு said...

///தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.///

இதை செய்தீங்களா?

குட்டிபிசாசு said...

ஆனா நீங்க சொல்லாமலேயே எட்டு போட்டுட்டேன். இப்ப போட்டாதான் பிறகு டைம் இருக்காது!! மத்தவங்களுக்காவது சொல்லிடுங்க!!

குட்டிபிசாசு said...

///
இதென்ன? நானென்னமோ துரோகம் பண்ணிட்ட மாதிரியே எல்லாரும் ஃஎபக்ட் குடுக்கறீங்க??///

என்னைபத்தி எல்லாருக்கும் காட்டி குடுக்க போற அப்ப என்ன சொல்லட்டும்!! எட்டையப்பன்னு தான் சொல்லனும்!!:))))

காயத்ரி சித்தார்த் said...

மன்னிச்சிக்கோ பிசாசு.. அதுக்குள்ள பாசக்கார குடும்பத்தை சந்திக்க போய்ட்டேன்..

//ஆனா நீங்க சொல்லாமலேயே எட்டு போட்டுட்டேன்//

அப்புறம் என்ன மாட்டி விட்டுட்டியேன்னு குற்றச்சாட்டு?

குட்டிபிசாசு said...

///அப்புறம் என்ன மாட்டி விட்டுட்டியேன்னு குற்றச்சாட்டு?///

அது எட்டு பொடாததுக்கு முன்ன சொன்ன குற்றச்சாட்டு.

ILA (a) இளா said...

//அம்மா.. அப்பா.. தம்பின்னு ஒரு கூட்டுக்குள்ள LIC logo ல நடுவுல இருக்குற தீபம் மாதிரி பாதுகாப்பா வாழும்போதே 'தனிமை' 'தனிமை' னு புலம்பிட்ருக்கற எனக்கு.. ஆதரவற்றோர் இல்ல குழந்தைகள பாக்கும்போது நமக்கு இருக்கறது நிஜமா தனிமை உணர்வா.. //

எவ்வளவு உண்மை. உங்ல பதிவு படிச்சு, மனசு என்னமோ கல்லு மாதிரி கனக்குது. நோ டூ கும்மி இன் திஸ் பதிவு :(

சிநேகிதன்.. said...

வணக்கம் காயத்ரி. உங்க பதிவுகளை வாசிக்கும் போது ரொம்ப கலகலப்பா., சுவாரஸ்யமா இருக்கு.. அருமை..

கண்மணி/kanmani said...

@ 6 வது பாயிண்ட்
காயூ நேத்து உங்கம்மாவப் பார்த்து ஆச்சரியப்பட்டேன் .இத்தனை சிநேகமாக மகளைப் புரிந்து கொண்ட அம்மா.....ஒரு முகம் சிணுங்கல் சுளிப்பு,அதிர்ந்து ஒரு வார்த்தை ஹூம் ஹூம் எப்பவும் இப்படியா?நேற்று மட்டுமா?
@7 வது பாயிண்ட்
அனாதை இல்லம் குழந்தை வளர்ப்பு...வாவ் கிரேட்.ஆமா கண்டிப்பா ஒரு குழந்தையை வளர்த்தே ஆகனும்னா என்னை வளர்க்கலாமே....ஹி..ஹி என்ன தூக்கி விட ஆள் தேவைப்படும்.['அம்மா' 25 வயசுல எடுக்கலயா]

Jazeela said...

அருமையான எட்டு. நிறைய குணங்களில் என்னை பார்க்கிறேன் ;-)

காயத்ரி சித்தார்த் said...

இளா, கலாபாரதி நன்றிங்க.

@ கண்மணி
//ஆமா கண்டிப்பா ஒரு குழந்தையை வளர்த்தே ஆகனும்னா என்னை வளர்க்கலாமே//

ஏற்கனவே வளந்துட்டீங்களே அக்கா! இன்னும் எப்பிடி வளர்க்கிறது?

வாங்க ஜெசிலா! முதல் வருகைக்கு நன்றி.

Anonymous said...

டீச்சர் யெக்காவ் ...நம்மளால முடியாதுன்னு போஸ்ட் போட்டுட்டு வந்தா நீங்களும் டேக் செய்திருக்கீங்க...ஏதோ சின்னைப்பையன்...மன்னிச்சு விட்ருங்க

உங்க எட்டும் அருமை....

நாகை சிவா said...

//கண்ணையும் குடுத்துட்டு போற எண்ணமிருக்கு. என்ன வழிமுறைகள்னு விசாரிக்கனும்//

கண் தானம் செய்ய விரும்பவதாக உங்க ஊரில் இருக்கும் லயன்ஸ் சங்கத்திடம் பதிந்து வைக்கலாம், கண்தானம் செய்பவர்களுக்கு என்றே ஒரு அடையாள அட்டை உள்ளது, அது லயன்ஸ் சங்கம் வைத்து இருக்கிறாதா என்று தெரியவில்லல. அந்த அட்டையை பூர்த்தி செய்து எப்பொழுதும் உங்கள் பர்ஸ் அல்லது கைப்பையில் வைத்து இருப்பது நலம்.

நீங்கள் உங்கள் கண்களை தானம் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை உங்கள் குடும்பத்தார், நெருங்கிய உறவினர்கள், நண்பர்களிடன் சொல்லி வைப்பது சிறந்தது.

நல்ல எண்ணம். வாழ்த்துக்கள்