நிகழும் சர்வஜித் ஆண்டு சித்திரை 15 ம் நாளாகிய இந்த சுபயோக சுப தினத்தில் என் முதல் வலைப் பதிவை துவங்கியிருக்கிறேன். வலைப் பதிவுகளின் எண்ணிக்கை, அதில் இடம்பெற்றுள்ள வீரியமான.. விவேகமான.. விவகாரமான.. மற்றும் விளையாட்டான பதிவுகள் பிரம்ம்ம்மிக்க வைக்கின்றன. 'இத் தரை கொய்யாப் பிஞ்சு.. அதில் நீயும் ஓர் சிற்றெறும்பே' - பாரதிதாசன் காதில் ஒலிக்கிறார்.
"இத்தனை ஜாம்பவான்கள் இருக்குமிடத்தில் நீ எப்படி உன்னை அடையாளம் காட்டிக் கொள்ளப் போகிறாயோ தெரியவில்லை!" - உள்ளிருந்து ஒரு காயத்ரி முணுமுணுக்கிறாள். அதனால் என்ன? எல்லா நதிகளும் ஊற்றாகத்தான் தோன்றுகின்றன... எல்லா மேதைகளும் குழந்தையாகத்தான் பிறக்கின்றனர்.!! கண்கள் மற்றும் கற்பனையின் சக்திக்கு அப்பாற்பட்டு பரந்து விரிந்திருக்கும் இந்த வானத்தில் நானும் ஓர் நட்சத்திரமாய் மின்ன வந்திருக்கிறேன். நட்சத்திரங்களை எண்ணும் எந்தக் குழந்தையாவது என்னை அதன் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளாமலா போய் விடும்? நம்பிக்கையுடன் துவங்குகிறேன்!!
சரி.. எதற்காக பாலைத்திணை? 'பிரிவு' - மிகச் சிறிய ஆனால் மிகவும் கனமான சொல்லாக இதுவரை அறியப்பட்டு வந்திருக்கிறது. காதலோ, நட்போ, உறவோ உண்மையான நேசம் எந்த ரூபத்தில் இருந்தாலும் அதில் பிரிவு என்பது மற்றுமோர் மரணத்திற்கு சமம். நானும் பிரிந்திருக்கிறேன்.. 'உயிர் பிரியும் நேரத்தைக் காட்டிலும் உறவு பிரியும் நேரம் கொடுமையானது' என்பதை அனுபவ பூர்வமாய் உணர்ந்திருக்கிறேன். அருகிலிருந்த நட்பு அன்னியமாய் விலகுவதை கண்ணில் வலியோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன். காலம் காயங்களை ஆற்றி விட்டு தழும்பை மட்டும் விட்டுச் சென்றிருக்கிறது. " வெறும் நட்பிற்கா இந்த புலம்பல்?" என்று கேட்கும் மஞ்சள் காமாலைக்காரர்கள்... மன்னிக்கவும்.. நீங்கள் இதைப் படிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்.
இது.. ஒரு பட்டுப்புழு பட்டாம்பூச்சி ஆவதற்கான முயற்சி... நீங்கள் கை தட்டலாம்.. தலையிலும் குட்டலாம்.. இரண்டிலும் நான் வளர்வேன்.
நட்புடன்...
காயத்ரி
22 comments:
//இது.. ஒரு பட்டுப்புழு பட்டாம்பூச்சி ஆவதற்கான முயற்சி... //
ஒரு பட்டுப்புழுவிற்கு இன்னொரு பட்டுப்புழுவின் வாழ்த்துக்கள்.
வாங்க...வாங்க..! வாழ்த்துக்கள்!
உங்கள் எழுத்தும், நடையும் அழகு!
/மழை மாலை மழலை நிலா நட்ஷத்திரம் சாக்லேட்ஸ் டெடி பொம்மை கவிதைகள் கனவுகள்...
/
ம்ம்ம்ம்...
வாழ்த்துக்கள்.
அரங்கேற்றம் அருமையாகத்தான் இருக்கிறது!
வாழ்த்துக்கள்!
வாழ்க! வளர்க!
(என்னோட வலைப்பூக்களில் ஒன்று கலாய்த்தல் திணை)
வாருங்கள் தோழி!!
//இது.. ஒரு பட்டுப்புழு பட்டாம்பூச்சி ஆவதற்கான முயற்சி... நீங்கள் கை தட்டலாம்.. தலையிலும் குட்டலாம்.. இரண்டிலும் நான் வளர்வேன்.//
பெருசா கைத்தட்டியாச்சு :))
நல்வரவு. வாழ்த்துகள்.
சூப்பர்....
கலக்கிட்டீங்க...
இன்னும் என்ன சொல்றதுன்னு தெரியல.
//அருகிலிருந்த நட்பு அன்னியமாய் விலகுவதை கண்ணில் வலியோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன். காலம் காயங்களை ஆற்றி விட்டு தழும்பை மட்டும் விட்டுச் சென்றிருக்கிறது.//
அனுபவப்பட்டவர்களுக்கு அதிகம் தெரியும் :(
டெல்லியிலிருந்து
சென்ஷி
கை தட்டிய ராதா செந்தில், தென்றல், முத்துலட்சுமி, நாமக்கல் சிபி, இராம், பாலராஜன் கீதா, சென்ஷி.. அனைவருக்கும்..என் நன்றிகள்.
//"இத்தனை ஜாம்பவான்கள் இருக்குமிடத்தில் நீ எப்படி உன்னை அடையாளம் காட்டிக் கொள்ளப் போகிறாயோ தெரியவில்லை!" //
அப்படித்தான் நானும்...
இப்போதான் ஆரம்பிச்சிருக்கேன்...
நலவரவு...
வாங்க! ஜேகே உங்க ஸ்டைல்ல நீங்க கலக்குங்க!!வாழ்த்துக்கள்!
un pirivin sogaththai PAALAI THINAI ennum BLOG SPOT moolam palaridam irrakki vaithu vittaai....
pirivu endra thuyaraththaal ethayaththil irul sulnthu manamey BLOCK SPOT-aga kondu valnthu kondu irukkum ennai pondravarkalukku enna solla pogirai???????????????
உங்கள் பிரிவின் வலியை பயனற்ற நினைவுச்சுமை என்று சொல்லமாட்டேன், அது நிகழ்கால அற்புதங்களின் எல்லைகளை அரிக்காதவரை...!!!
நினைவுவெளிகளினின்றும் அறுந்து வீழாதவரை,
விடுதலை என்பது பகற்கனவே - அது சுகமான சுமையானாலும்.
மற்றபடி கவிதைகள் அருமை.
- வாழ்த்துக்களுடன்
ஆனந்த்
இப்பொழுது தான் படிக்க நேர்கிறது, அதனால் காலம் கடந்த பின்னூட்டம் தான், உங்கள் எழுத்துக்கள் தான் எழுதாமல் இருப்பதை விட தாமதமாக எழுதுவது மேல் என்று எழுத வைக்கிறது
"எல்லா நதிகளும் ஊற்றாகத்தான் தோன்றுகின்றன..."
- ஊற்றில் இருந்து நீர் பெருக்கெடுப்பது போல் மனதிலிருந்து நம்பிக்கை பெருக்கெடுக்கிறது
"நட்சத்திரங்களை எண்ணும் எந்தக் குழந்தையாவது என்னை அதன் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளாமலா போய் விடும்?"
- இதோ கணக்கெடுத்துக் கொண்ட இன்னொரு குழந்தை
"'உயிர் பிரியும் நேரத்தைக் காட்டிலும் உறவு பிரியும் நேரம் கொடுமையானது'"
நண்பனின் மரணத்தை விட நட்பின் மரணம் கொடுமையானது என்று எதிர்நீச்சல் படத்தில் நாகேஷ் சொல்வாங்க, அது நினைவிற்கு வருகிறது - வாழ்த்துக்கள் - நாகூர் இஸ்மாயில்
//அது நிகழ்கால அற்புதங்களின் எல்லைகளை அரிக்காதவரை...!!!//
இல்ல ஆனந்த்.. அப்பிடி இருந்தா என்னால பதிவே எழுத முடியாதே?
இஸ்மாயில்... அழகான பின்னூட்டம்! என்னையும் கணக்கெடுத்துக் கொண்ட குழந்தைக்கு நன்றி!
எனது நண்பர் மூலமாக உங்கள் Blog எனக்கு அறிமுகமானது.
உங்களுடைய எழுத்து நடை மேலும் படிக்க தூண்டும் வகையில் அமைந்திருப்பது அற்புதம்.
குறுகிய காலத்தில் நிறைய எழுதியிருக்கிறீர்கள்.. அனைத்தையும் இன்னும் படிக்க வில்லை..
"அரங்கேற்றம்" எனது எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது என்பதே உண்மை.
வாழ்த்துக்கள்.
- ஆனந்த்.
நிழலின் அருமை வெயிலில்...
உறவின் அருமை பிரிவில்...
பிரிவு என்பது ...
ஒரு கொடுமையான நோய்
மீண்டும் சேரவே முடியாது
எனும் போது...
பிரிவு என்பது...
ஒரு அருமருந்து
அது தற்காலிகம் தான்
என்றால்...
இந்தப் பாலையின் சோலையில்
இளைப்பாற வந்த ஒரு பறவை....
உங்கள் பதிவுகள் நட்சத்திரப் பதிவுகள் மூலமாகத்தான் எனக்கு அறிமுகம்.நல்ல நடை.அறிமுகப் பதிவு படிக்கும் போது எனது அறிமுகப் பதிவு தேவையில்லாமல் நினைவுக்கு வருகிறது.நான் உங்களை நோக்கும் போது தூரமாக உள்ளேன்.வாழ்த்துக்கள்.
தற்செயலாய் உங்கள் வலைப்பக்கம் வர நேரிட்டது..தமிழில் பட்ட மேற்படிப்பு எனது கனவு...ஆனால் அறிவியலில் நான் இன்று...நன்றாக எழுதுகிறீர்கள் சிறு சம்பவத்தைக் கூட சுவையாக..அதுதானே வாசகர்களுக்கு வேண்டும்...வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்...
ஆனா எல்லா ஒடைகளும் ஒரே நதிகளீடம் தான் சேருகின்றன..தோழி....
வாழ்த்துக்கள் தோழி
// எல்லா நதிகளும் ஊற்றாகத்தான் தோன்றுகின்றன... எல்லா மேதைகளும் குழந்தையாகத்தான் பிறக்கின்றனர்.!! கண்கள் மற்றும் கற்பனையின் சக்திக்கு அப்பாற்பட்டு பரந்து விரிந்திருக்கும் இந்த வானத்தில் நானும் ஓர் நட்சத்திரமாய் மின்ன வந்திருக்கிறேன். நட்சத்திரங்களை எண்ணும் எந்தக் குழந்தையாவது என்னை அதன் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளாமலா போய் விடும்? நம்பிக்கையுடன் துவங்குகிறேன்!!//
good, romba rasithu padithen.
Post a Comment