Wednesday, May 30, 2007

புதிராய் ஒரு விடை!

என் பிரயத்தனங்களை எல்லாம்
அலட்சியப்படுத்துவதில்
உனக்கு என்ன மகிழ்ச்சியோ
புரியவில்லை.

இப்போதும் பார்!
உனக்கென்றே கட்டப்பட்ட
இந்த வீட்டை விடவும்
ஜன்னலோர மரத்தில்
தவ்விக்குதிக்கும்
அந்த அணில் குட்டியே
உன்னை
மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது!

மகிழ்வின் நிழல்..

ஆசையாய் இருக்கிறது..
ஒரு நாளேனும்
புகைவண்டிக்கு கையசைக்கும்
அந்த குழந்தையாய் மாறிவிட!

Tuesday, May 29, 2007

நீர்வழிப்படூஉம் புணை...

ஆயத்தங்கள்
மதிப்பீடுகள்
சாதுரியமான திட்டமிடல்கள்
அனைத்தையும் அலட்சியப்படுத்தி
தன் போக்கில் நகர்கிறது வாழ்க்கை
வெகு இயல்பாய்....

நிர்மாணிக்கப்படாத மேடைகளில்
ஒத்திகை பாராத காட்சிகள்
சுவாரஸ்யம் கூட்டுகின்றன
அடி நாவில்!

நேற்றைய சாயல்கள் மாறாத
இன்றுகளின் அரங்கில்
அதோ பார்வையாளர் வரிசையில்
நானும் இருக்கிறேன்
கன்னத்தில் கை வைத்து
நகம் கடித்தபடி...

Saturday, May 26, 2007

எழுதாக்கவிதை

அடித்துத் திருத்தி
மீண்டும் எழுதி
ஒரு கவிதையை நிறைவுசெய்த
திருப்தியோடு நிமிர்கிறேன்..
அடிபட்ட வார்த்தைகளுக்குள்
மற்றுமோர் கவிதை
மெளனமாய் அழுது கொண்டிருக்கிறது
நிராகரிப்பின் வலியோடு!

Thursday, May 24, 2007

எனக்கு உடம்பு சரியில்ல... :(

ஹலோ மக்கள்ஸ்!! வணக்கம்ப்பா! எல்லாருக்கும் ஒரு வருத்தமான செய்தி சொல்ல போறேன். எனக்கு 2 நாளா உடம்பு சரியில்ல. (யாரது சந்தோஷமா விசிலடிக்கிறது? குட்டிபிசாசா தான் இருக்கனும்.. வரவர எதிரிங்க ஜாஸ்தி ஆய்ட்டே போறாங்க) :( அடடா.. ஜி3 நீ அழாதடா.. எனக்கு ஒன்னும் ஆகல..

2 நாளா நடந்தா உடம்பு கூட கூட வருது.. தூங்கும் போது கண்ணு தெரிய மாட்டிங்குது.. அப்பாவ பாத்தா டாடி மாதிரியே தெரியுது.. மூஞ்சி வேற ரொம்ப அழகாய்ட்டே வருது!!! என்ன பண்றதுன்னே தெரில. என்னம்மோ ஏதோன்னு எங்க ஏரியால இருக்கிற எம்.காம் படிச்ச கைராசிக்கார டாக்டர்ட்ட போனேன். என்னத்த சொல்ல? ஐயகோ.. இது எதையும் குணப்படுத்தவே முடியாதாமே?! அவர் சோகமா கண்ணாடிய கழட்டிட்டே.. "எதயுமே இன்னும் 24 மணி நேரம் கழிச்சு தான் சொல்லமுடியும்" னு சொன்னாரு. "பரவால்ல டாக்டர் நான் நேத்தே கேட்டதா நினச்சுட்டு பதில் சொல்லுங்களேன்.. எனக்கு என்ன ஆச்சு" ன்னு கேட்டேன். மனுஷன் கடுப்பாகி, "மனச தேத்திக்குங்க.. எங்க கைல எதும் இல்ல" ன்னு சொல்லிட்டு போய்ட்டார்.

அதோட இன்னொன்னும் சொன்னார்.. "உங்களுக்கு மல்ட்டிபிள் பர்ஸனாலிட்டி டிஸார்டர், ஷார்ட் டைம் மெமரி லாஸ், 'கவுஜோ'மேனியா ன்னு 3 விதமான, வித்யாசமான, வினோதமான.. அற்புதமான, ஆச்சரியமான.. அதிசயமான...(ஸ்ஸ்..அபா இப்பவே கண்ண கட்டுதே!) பாதிப்புகள் எல்லாம் பேசி வெச்சிகிட்டு சேர்ந்து ஒன்னா கிளம்பி வந்திருக்கு. இதுக்கு இன்னும் மருந்தே கண்டுபிடிக்கல அதனால நீங்க எப்ப கவித எழுதுவிங்க.. எப்ப மொக்க போடுவிங்கன்னு உங்களுக்கு மட்டுமில்ல.. அந்த அய்யனாருக்கே தெரியாது.." (சாமிங்க! யாரது சிண்டு முடியறது? அவர் ஏற்கனவே என் மேல கடுப்புல இருக்கார்!!) அப்டின்னு சொன்னார்.

மக்களே! இப்ப நான் என்ன பண்றது சொல்லுங்க? என் மேல எதுனா தப்பிருக்கா? இந்த பக்கம் நாலு பேரு.. அந்த பக்கம் நாலு பேரு நின்னுட்டு "நீ கவித எழுது" "இல்லல்ல நீ மொக்க போடு"ன்னு இழுத்தா ஒரு சின்ன பொண்ணு என்ன பண்ணும்? இருந்தாலும் நான் விடறதா இல்ல.

எல்லாருக்கும் சொல்லிக்கிறது என்னான்னா என் 'கலை தாகம்' அடங்குற வரைக்கும் இப்டி தான் எல்லாரையும் இம்சை பண்ணுவேன்.. இம்சை பண்ணுவேன்.. இம்சை பண்ணுவேன்.. (இது எக்கோ கண்டுக்காதீங்க!!) இது அந்த அய்யனார் மேல.. :) வேனாம் காடுவெட்டி கருப்புசாமி மேல சத்தியம்.!! :)))

ஏன்னா.. கவித பாதி.. மொக்க பாதி கலந்து செய்த கலவை நான்!! உள்ளே கவித வெளியே மொக்கை.. விளங்க முடியா இம்சை நான்!

இப்போதைக்கு அப்பீட்டு.. வருவேண்டா ரிப்பீட்டு!!

(டி.ஆர் எஃபக்ட்ல டிரை பண்ணினேன்! சாரி)

Tuesday, May 22, 2007

சத்தமில்லாமல் ஒரு மொக்கைப்பதிவு!

"அடப்பாவமே!"

"தெரியுமா விஷயம்?"

"எப்ப இருந்து?"

"இப்ப தான்.. நாலஞ்சு நாளா!"

"ச்சே! நல்லா இருந்த பொண்ணு.. யார் கண்ணு பட்டுச்சோ!"

"ம்ஹூம்.. நாமென்ன பண்ண முடியும்"

டுபுக்கு அண்ணா, சென்ஷி, ஜி3, தங்கச்சி, அபிஅப்பா இப்டி நிறைய பேர் என்னை பத்தி கவலை தெரிவிச்சிருக்காங்கன்னு தகவல்!! ஆளாளுக்கு "என்ன ஈரோட்டுல வெயில் ஜாஸ்தியா"ன்னு விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க! நம்ம தலைவர்.."என்னங்க என்னாச்சு.. ஏன் இப்டி"னு துக்கம் கேட்டவர் தான்.. அதுக்கப்புறம் ஆளயே காணல. தங்கச்சி (மை ஃப்ரண்ட்) என் ஸ்டூடென்ட்ஸ் மாதிரியே வந்தமா.. அட்டெண்டென்ஸ் குடுத்தமான்னு உடனே எஸ்கேப் ஆயிடறா! எல்லாம் திடீர்னு சீரியஸா பதிவு போட ஆரம்பிச்சதோட விளைவுகள்!

எல்லாருக்கும் அந்த ரகசியத்த சத்தமா சொல்லப் போறேன் இப்போ! நம்ம அய்யனார் இருக்காரே! அதாங்க துபாய்ல இருந்து அப்பாவித் தமிழர்களை இம்சை பண்ணிட்டிருக்காரே அவர்தான்! தெரியாத்தனமா அவரோட தனிமையின் இசை பக்கம் ஒரு நாள் தனியா போய்ட்டேங்க! அன்னிலருந்து 'வேட்டயபுரம் அரண்மனைக்கு மிட்நைட்ல போய்ட்டு வந்த மாதிரி' பேஸ்தடிச்சு உக்காந்திட்டிருக்கேன்! மனுஷன்.. புலிங்கிறாரு.. நீலிங்கிறாரு... அடர் கானகம், அரூபதர்ஷினினு... ஒரு சின்ன பொண்ண இப்டியா பயமுறுத்துவாங்க? (இந்த அநியாயத்த கேக்க யாருமே இல்லயா?) அதுக்கப்புறம் 'என்னனு தெரில.. என்ன மாயம்னு புரில' ஒரே கவித கவிதையா கொட்டுது. (கவுஜ?) (தமிழ்நதி அடிக்க வரப்போறாங்க!!)

சரி இன்னிக்கு நம்ம மக்கள்ஸ்க்கு எதாச்சும் கத சொல்லலாமான்னு ஒரு யோசனை. கத சொல்றது.. கேக்கறது ரெண்டுமே ஒரு சுகானுபவம் இல்ல? சின்ன வயசுல கிராமத்துல இருந்தப்போ அப்பா நிறைய கத சொல்வார். அம்மாவும் சொல்வாங்கன்னாலும் அப்பா தான் அதிகம்.

அப்போ எனக்கு 5 வயசு இருக்கலாம். வசதியான குடும்பத்துல பிறப்பு.. ஊர்லயே பெரிய கான்வெண்ட்ல எல்.கே.ஜி, யூ.கே.ஜி படிப்புன்னு என் கதைய எழுத ஆரம்பிச்ச விதி.. திடீர்ன்னு "இந்த ஆட்டம் செல்லாது.. செல்லாது"ன்னு எல்லாத்தயும் எச்சில் தொட்டு அழிச்சிட்டு மொதல்ல இருந்து எழுத ஆரம்பிக்கிறேன்னு ஒரு சின்ன கிராமத்துல ஓட்டு வீட்ல கொண்டு போய் விட்ருச்சு. நானும் ஒரு எலிமெண்ட்ரி ஸ்கூல்ல ஒண்ணாங்கிளாஸ் சேர்ந்துட்டேன். ஸ்கூல்ல ராஜமரியாதை எனக்கு! (ஏற்கனவே எல்.கே.ஜி, யூ.கே.ஜி படிச்ச சீனியராச்சே!!) புத்தக மூட்டை இல்ல.. கை ஒடிய எழுத ஹோம்வொர்க் இல்ல.. செம ஜாலியான அற்புதமான லைஃப்ங்க அது! எல்லாத்த விட அம்மா, அப்பாவோட அருகாமை அதிகம் கிடச்சுது.

டெய்லி 8 மணியானா கதை நேரம் ஆரம்பிக்கும் எங்க வீட்ல. 7 மணில இருந்தே நானும் தம்பியும், "ப்பா...ப்பா.. கதப்பா... சொல்லுங்கப்பா" னு நான்ஸ்டாப்பா கேட்டுட்டே இருப்போம். அவரும் 'சாப்டாத்தான் சொல்வேன்', 'இந்த பால குடி சொல்றேன்'னு பிளாக்மெயில் பண்ணி காரியம் சாதிச்சுக்குவார்! சரியா 8 மணிக்கு.."ம்ம்.. என்ன கத வேனும் இன்னிக்கு"ம்பார். எங்களுக்கு என்னமோ கடவுள் வந்து என்ன வரம் வேனும்னு கேட்ட மாதிரி டென்ஷன் ஆய்டும்.

''அப்பா சிங்கம் கத சொல்லுங்க.. இல்லன்னா முயல் கத.. வேணாம் யான கத சொல்லுங்க" ன்னு சாய்ஸ் குடுப்பேன் நான்!

"வேணாம்ப்பா கொரங்கு கத சொல்லுங்க... யான வேணாம்" னு அழ ஆரம்பிக்கும் எங்க வீட்டு குட்டிக்குரங்கு. (என் தம்பி.. ஹி ஹி)

"போடா கொரங்கு.. அதான் நீ இருக்கியே? ப்பா..யான கத தான் சொல்லனும்"

"பாருங்கப்பா என்ன கொரங்குன்னு சொல்றா.. நீ தான் கொரங்கு..போ"

ரெண்டு பேரும் அடிச்சுக்க ஆரம்பிக்கறதுக்குள்ள அவசர அவசரமா.. "இப்ப என்ன உனக்கு யான.. உனக்கு கொரங்கு... அவ்ளோதானே.. சொல்றேன் பேசாம இருங்க"ன்னு ரெண்டும் சேர்ந்து வர்ற மாதிரி கத சொல்வார் அப்பா. ஆனா.. இந்த மெகா சீரியல்காரங்க மாதிரி கதைக்கு சம்பந்தமே இல்லாம நாங்க கேட்ட கேரக்டர சேர்த்து எங்கள ஏமாத்திருக்காருன்னு ரொம்ம்ம்ம்ப நாள் கழிச்சு தாங்க தெரிஞ்சுது!!!

எந்த கதயா இருந்தாலும் "ஒரு ஊர்ல" ன்னு ஆரம்பிச்சா தான் சுவாரஸ்யமாவே இருக்கும். அது இல்லன்னா கத கேக்குற சுகமே போய்டும்! இப்டி தினம் தினம் நிறய்ய கதைகள்!! அரக்கர்கள்.. தேவதைகள்.. மாயாஜாலங்கள்.. பேசும் விலங்குகள்... யப்பா! தனி உலகம்ங்க! எல்லாக் கதைகள்ளயும் கெட்டது தோத்து நல்லது ஜெயிச்சதாவே க்ளைமாக்ஸ் இருக்கும்.

"உனக்கு என்ன வரம் வேனும் மைதாஸ்னு கடவுள் கேட்டாரா ... நான் தொட்டதெல்லாம் தங்கமாகனும்னு வரம் வாங்கிட்டான்"

அப்பா.. சொல்லும்போது வியப்பில் எங்கள் கண்கள் விரியும். ஏதோ நாங்களே வரம் வாங்குனது மாதிரி ரெண்டு பேரும் ஆச்சரியமா பாத்துப்போம்! அவன் வாங்கினது வரமில்லன்னு தெரியும்போதும் அதே ரியாக்சன் தான்!!

ஆண்டாளோட காதல், மீராவோட பக்தி, கர்ணனோட கொடை, குசேலரோட நட்பு, மைதாஸோட பேராசை, கண்ணப்பரோட அன்பு, அலிபாபாவோட அதிர்ஷ்டம், சிந்துபாதோட பயணம், ராமனோட பிதா பக்தி, அரிச்சந்திரனோட உண்மை, நளன், நந்தன், அனுமன், பரதன்,சிண்ட்ரெல்லா, ஸ்நோ ஒய்ட்...னு எல்லாரும் அறிமுகமானது அந்த காலகட்டத்துல தான்.

இந்த கதாபாத்திரங்களை எல்லாம் வேறு வேறு பெயர்களோட வாழ்க்கைல அங்கங்க சந்திக்க நேரும்போது தான் கதைகள் வெறும் கதைகள் இல்லன்னு புரிஞ்சுக்க முடியுது.

கத முடியும்போது.. பெரும்பாலும் தம்பி தூங்கியிருப்பான். அல்லது.. "விடிய விடிய மகாபாரதம் கேட்டு குந்திக்கு கர்ணன் பெரியப்பா புள்ள"ன்ன மாதிரி (ஹி ஹி.. புதுசா ட்ரை பண்ணலாமேன்னு!!) என் பக்கம் திரும்பி "ஏய் உனக்கு புரிஞ்சுதா? எனக்கு புரியவேஏஏ இல்ல"ம்பான் ராகத்தோட!

அதுக்கப்புறம் அப்பாட்ட இருந்து இந்த பழக்கம் எனக்கும் தொத்திகிச்சு. ஸ்கூல்ல என்கிட்ட கத கேக்க ஒரு ரசிகர் பட்டாளமே இருந்துச்சு. வீட்லயும் சித்தி பசங்கள கூப்ட்டு வெச்சு சொல்வேன். சித்தி பையன் குரு.. கதை பிரியன் இல்ல.. கதை வெறியன்!! இவன்கிட்ட ஒரே இம்சை என்னன்னா வரிக்கு நாலு சந்தேகம் கேப்பான். சாக்ரடீஸ் ஆவி தான் தம்பியா பொறந்துடுச்சோன்னு அடிக்கடி டவுட்டு பட்ருக்கேன் நான்!

" திரும்பி பாத்தா பெரிய யான ஒன்னு நின்னுச்சு"- இது நான்

"எவ்ளோ பெரிய யான?"-இது அவன்!!

கைகளை விரித்து..'இம்மாம் பெரிசு' ன்னு சொல்லனும் அவனுக்கு. உடனே..

"நாம அன்னிக்கு கோயில்ல பாத்தமே அத விட பெரிசா?"ம்பான்!

ஒருவழியா அது எவ்ளோ பெரிசுன்னு சொல்லி முடிச்சு.."அது கால்ல முள்ளு குத்திடுச்சு" ன்னு சொன்னா "ஏன்?" ன்னு கேப்பான் சுருக்கமா!

"ஏன்னா? என்னடா கேள்வி இது? அது என்ன நம்மள மாதிரி செருப்பா போட்ருக்கு? இல்ல மொசைக் தரைல நடக்குதா? சும்மா தொனதொனன்னு கேள்வி கேட்டின்னா கதையும் கிடயாது ஒன்னும் கிடயாது" ன்னு டென்ஷன் ஆவேன் நான்! அவனுக்கு பிறகு காலேஜிலும் இந்த பழக்கம் தொடர்ந்தது எனக்கு. (ரொமான்ஸ் கதைக்கு மாறிட்டேன்!) அப்றம் க்ளாஸ்ல என் ஸ்டூடன்ஸ்க்கு சொல்ல ஆரம்பிச்சு இப்ப பதிவு வரைக்கும் வந்தாச்சு!


போன மாசம் சேலத்தில் அண்ணா வீட்டிற்கு போனப்போ, அண்ணி சீரியல் பாக்க, அண்ணா பையன் (யூ.கே.ஜி. படிக்கிறார்) தனியா ரூம்ல கார்ட்டூன் பாத்துட்டிருந்தான். 6 மணிக்கே சாப்பாடு ஊட்டிட்டாங்களாம்! திடிர்ன்னு எனக்கு, பாவம் இப்டி தனியா தேமேன்னு டிவி பாக்கறானே.. கூப்பிட்டு வெச்சு கத சொன்னா என்னனு ஒரு யோசனை. மெதுவா தாஜா பண்ணி தூக்கி மடில உக்காத்தி வெச்சு.. "அத்த கத சொல்றேன் உனக்கு! என்ன கத வேனும்?"னு கேட்டா.. "பவர் ரேஞ்சர்ஸ் தெரியுமா?"ங்கிறான்! நான் என்னமோ சிவில் சர்வீஸ் எக்ஸாம் கொஸ்டின் பேப்பர் பாத்த மாதிரி திருதிருன்னு முழிச்சேன்! "அது கார்ட்டூன் கேரக்டர்ஸ் காயத்ரி"ன்னு அண்ணி ஹால்ல இருந்து குரல் குடுத்து காப்பாத்தினாங்க! சரின்னு ரொம்ப யோசிச்சு அவனுக்கு பிடிக்கிற மாதிரி ஸ்டண்ட் ஸ்டோரியா சொல்ல ஆரம்பிச்சேன். ரெண்டு நிமிஷம் கூட இருக்காது.. பயபுள்ள தூங்கி விழறான்! என்ன பண்ணி தொலயறது சொல்லுங்க? "ச்சே 11 மணி வரை தூங்காம அடம் பண்ணுவான்.. இப்ப சமத்தா தூங்கிட்டானே"ன்னு அண்ணி பாராட்டு வேற. அவன் முழுக்கத.. வேணாம்.. அரைக்கதை கேட்டுட்டு தூங்கிருந்தா கூட சந்தோஷப்பட்டிருப்பேன். 2 வரிலயே தூங்கி ரொம்ப அவமானப்படுத்திட்டான்!

நீங்களாச்சும் முழுசாப் படிச்சீங்களா? ரொம்போ டேங்க்ஸ்ப்பா!!

Monday, May 21, 2007

மனதில்...

எங்கெங்கோ சுற்றிவிட்டு
இப்போதுதான் திரும்பினேன்
மனதிற்கு.
நீ வந்து போனாயா?
பார்!
எல்லாம் கலைந்து கிடக்கிறது!

Saturday, May 19, 2007

குட்டியாய் ஒரு கவிதை!

வெட்டப்பட்ட மரம்
இல்லாமல் போன பிறகே
உணர்த்துகிறது
அதன் இருப்பை!

Friday, May 18, 2007

விட்டு விடுதலையாகி...

காலத்தின் அடர்கிளையிலிருந்து
விடைபெற்ற இலை ஒன்று
நிதானமாய் தரையிறங்கிக் கொண்டிருக்கிறது
மரத்திடம் நன்றி சொல்லியபடி..

இருத்தலின் உணர்வையும்
விடுபடலின் களிப்பையும்
தன் அசைவால் உரைத்தபடி
அது இறங்குகிறது கீழே....

காலம் தன் கடைசி வர்ணத்தை
அதன் உடலில் பூசியிருக்கிறது...

அனுபவத்தின் நீட்சியாய்
புடைத்திருக்கின்றன அதன் நரம்புகள்...

அவசர அவசியங்கள் ஏதுமின்றி..
காரணகாரியங்களுக்கு அப்பாற்பட்டு..
வெறுமனே
தரையிறங்கிக் கொண்டிருக்கிறது அது
கற்பித்தலுக்கான பிரக்ஞை ஏதுமின்றி!

Thursday, May 17, 2007

காத்திருத்தலின் அவஸ்தை!

யாரோ தட்டி விட்டது போல்
சட்டென்று கொட்டிவிட்டது
உன் மீதான அன்பு!

ரத்த நாளங்களில்
விஷமாய்ப் பரவும்
உனக்கான காத்திருப்பு..

கண்கள் மயங்க..
உடல் நீலம் பாரிக்க...
சென்று கொண்டிருக்கிறேன்..
மோட்சத்தை நோக்கி!

என் ஆழ்மனத்திலிருந்து - கலீல் ஜிப்ரான்

என் ஆழ்மனத்திலிருந்து
ஒரு பறவை எழுந்து
வானோக்கிப் பறந்தது.

உயர உயரப் பறக்கப் பறக்க
அது மேலும் மேலும் வளர்ந்த்து
முதலில் அது
ஒரு குருவியாக.. பின்
ஒரு வானம்பாடியாக..பின்
ஒரு ககழுகாக..பின்
ஒரு பெரும் பனி மேகமாக...
மாறி மாறி பின்
விண்மீன்கள் மின்னும்
சொர்க்கத்தை நிரப்பியது.

என் மனத்திருந்து
ஒரு பறவை
வானோக்கிப் பறந்தது
அது பறக்க.. பறக்க..
வலிமையிலும் உருவத்திலும்
மேலும் வளர்ந்தது
இன்னும் என் மனதை விட்டு
விலகவில்லை.

என் நம்பிக்கையே!
என் பழக்கப்படுத்தா அறிவே!
உன் உயரத்திற்கு நான்
எவ்வாறு பறப்பேன்?

வானில் தீட்டப்பட்டுள்ள
மனிதனின் பெரும் சுயத்தை
உன்னுடன் எவ்வாறு பார்ப்பேன்?
என்னுள் இந்தக் கடலை
ஒரு பனியாக
எவ்வாறு மாற்றுவேன்.?

அளக்க முடியா வண்ணம்
ஆகாய வெளியில் உன்னுடன்
எவ்வாறு நகர்வேன்?

ஆலயத்தினுள்ளேயே
இருக்கும் ஒரு சிறைக்கைதி
அதன் தங்க முகடுகளை
எவ்வாறு உற்று நோக்க முடியும்?

ஒரு கனியின்
இதயத்தை நீட்டி
அந்தக் கனியினையே மூட
எவ்வாறு முடியும்?

என் நம்பிக்கையே!
வெள்ளிக்கம்பிகள்
வலுவான மரத்தடுப்புகள் பின்
சங்கிலிகளால்
பிணைக்கப்பட்டிருக்கும் நான்
உன்னுடன் பறக்க முடியாது.

ஆனாலும் என்
இதயத்திலிருந்து நீ
வானோக்கிப் பறக்கிறாய்.
என் இதயம் உன்னைப்
பிடித்து வைத்திருக்கிறது.
நான் மனநிறைவுடன் இருப்பேன்!!

Wednesday, May 16, 2007

நிசப்தத்தின் சப்தம்...





இப்போதெல்லாம் பதிவு எழுத பயமாயிருக்கிறது. ஆடை கிழிந்திருப்பதை அறியாமல் சபை ஏறிவிட்டதைப் போன்று குன்றிப் போகிறேன். தடம் புரண்ட கடலாய் தளும்பும் இதயம் வார்த்தைகளில் சிந்தி விடாதிருக்கத் தவிக்கிறேன். மூலம் மறந்து அந்தம் தவிர்த்து உயிர்த்த்லுக்கும் உதிர்தலுக்கும் இடையிலான முடிவற்ற வெளியில் வழி தவறி அலைகிறது என் சுயம். விருப்பங்கள் பாராமல், சம்மதம் கேளாமல் இயலாமையின் விரலிடுக்குகளில் வழிகிறது வாழ்க்கை. வார்த்தைகளின் பாரம் தாங்காமல் பிதுங்கித் தவிக்கும் கவிதை விடுபடலை நோக்கி யாசிக்கிறது என்னைப் போலவே. எது நிகழ்ந்த போதிலும் பாம்பின் சீறலாய்..உஷ்ணப் பெருமூச்சுக்களுடன் என்னிலிருந்து பிரியாமல் அருகே சுருண்டு படுத்திருக்கிறது என் தனிமை!

Sunday, May 13, 2007

முதல் நாள் இன்று!

வழக்கத்தை விட சீக்கிரமாய்
விடிந்து விட்டது இன்று!

மனசு மொட்டு விட்டிருக்கிறது..

பக்கத்து வீட்டுப் பொடியன்...
பூ விற்கும் பாட்டி...
தினமும் பார்க்கும்
எதிர்வீட்டு மனிதர்கள்...
எல்லார் முகத்திலும்
அழகு கூடியிருக்கிறது!

மெலிதாய் புன்னகை ஒன்று
அடிக்கடி பூத்து உதிர்கிறது
இதழோரத்தில்!

பேருந்து நெரிசலில்
கால் மிதித்த பெண்ணை
பெருந்தன்மையாய் மன்னிக்க முடிகிறது!

மற்றபடி...
மாற்றங்கள் ஏதும்
நிகழவில்லையென்றே
நம்ப வைத்திருக்கிறேன் மனதை!

Saturday, May 12, 2007

பப்ளிக் எக்'ஜாம்' - டிப்ஸ்!

நம்ம தலைவரோட இந்த பதிவ படிச்சுட்டு எனக்கும் டார்ட்டாய்ஸ் சுத்த ஆரம்பிச்சிடுச்சுங்க! இருங்க.. இருங்க.. நீங்க நினைக்கிற மாதிரி ஃப்ர்ஸ்ட் லவ்வு, நெக்ஸ்ட் லவ்வு னு என் லைஃப்-ல எந்த 'காமெடி'யும் இதுவரை நடக்கல. ஆனா அவர் அந்த 'டிராயர் வெச்ச டேபிள்' பத்தி எழுதியிருந்தாரே? படிச்சிட்டு ஒரே சிரிப்பு! நானும் ஃப்ர்ஸ்ட் ரேங்க் வாங்கறேன்னு இப்டி எல்லாம் நிறைய அழும்பு பண்ணிருக்கேன்! ஒகே.. Over to Flashback!

நான் அப்போ +2 படிச்சிட்டிருந்தேன்! பப்ளிக் எக்ஸாம்-னாலே நமக்கு வீட்ல ஓவர் மரியாதை இருக்கும். தம்பி கிரிக்கெட் மேட்ச் பாத்தா தைரியமா போய் 'நான் படிக்கனும் போடா' னு தலைல தட்டி டிவிய ஆஃப் பண்ணலாம்! இல்லனா எதாச்சும் 'கில்மா' (தமிழில் லஞ்சம் அல்லது கையூட்டு என்று அழைக்கப்படுவது!) வாங்கிகிட்டு allow பண்ணலாம்! யாராச்சும் கொஞ்சம் சத்தமா பேசினாலும் "புள்ளைங்கள peaceful ஆ படிக்க விடுங்க" னு கில்லி ஸ்டைல்ல சவுண்ட் விடலாம்! சொந்தக்காரங்க யாராச்சும் வரும்போது 'குவாண்டம் தியரி'.. 'கெப்ளர்'ஸ் லா' னு எந்த கர்மத்தையாவது சின்சியரா படிச்சு ஃபிலிம் காட்டலாம்! குறிப்பா எல்லார் வீட்டுக்கும் தெரியற மாதிரி மொட்ட மாடில குறுக்க நெடுக்க நடந்துகிட்டே கொஞ்ச நேரம் படிச்சுட்டு..' நைட் எல்லாம் படிச்சேன்.. கண்ணு எரியுதுமா'னு காலைல 7 மணி வரை தூங்கலாம்! இப்டி நிறய அட்வான்டேஜஸ் இருக்கும்!!

அதுலயும் நான் 10 th- ல எடுக்காம விட்ட 'ஸ்டேட் ஃப்ர்ஸ்ட்' ட +2 ல எடுத்தே தீருவேன்னு சரஸ்வதி சபதம் போட்டிருந்ததால மரியாத கொஞ்சம் தூக்கலாவே இருந்துச்சு! நானும் ரூம்ல.. கிழக்கு பார்த்து வீணை வாசிக்கிற சரஸ்வதி படம் எல்லாம் மாட்டி வெச்சு, நம்ம தலைவர் மாதிரியே டேபிள், சேர் எல்லாம் வாங்கிப் போட்டு.. வாஸ்துப் படி (!) ஈசானி மூலைல உக்காந்து அவர மாதிரியே "மண்டய கவுத்தி" படிப்பேன்! சுவத்தில வேற, எந்த பக்கம் திரும்பினாலும்..."Success is yours", "எங்கள் லட்சியம் வெல்வது நிச்சயம்", "இப்போது இல்லாவிட்டால் எப்போது ஜெயிக்கப் போகிறோம்.. நாம் ஜெயிக்காவிட்டால் (?!) வேறு யார் ஜெயிக்கப் போகிறார்கள்" னு தன்னம்பிக்கை வாசகமெல்லாம் வேற ஒட்டி வெச்சிருந்தேன். ஸ்கூல் விட்டு வந்ததும் தட்டுல சாப்பாடு போட்டு ஒரு வெட்டு வெட்டிட்டு (படிக்கிற புள்ள! தெம்பு வேனாமா?) ரூமுக்குள்ளார போவேன்.. 'சக்திமான்' மாதிரி ஒரு என்ர்ஜி வரும்.. வீராவேசமா போய்..பிசிக்ஸ் புக்கயோ..கெமிஸ்ட்ரி புக்கயோ எடுத்து பிரிப்பேன். அவ்ளோதான்.. சார்ஜ் போடாத செல்போன் மாதிரி பேட்டரி குறைஞ்சிட்டே வந்து 1 மணி நேரத்துல 'ஸ்விட்ச் ஆஃப்' ஆய்டுவேன்! சிலநேரம்.. இந்த பாடமெல்லாம் கண்டுபிடிக்காத காலத்துல.. ஒரு ஆதிவாசியாவோ.. கற்கால மனுஷியாவோ பொறந்திருக்க கூடாதானு ஃபீல் பண்ணிட்டு உக்காந்திட்டிருப்பேன்!

இப்டிபோய்ட்டிருந்த வாழ்க்கைல.. ஒரு நாள் ஸ்கூல்ல திடிர்னு 'மெமரி பவர் & பெர்ஸனாலிட்டி டெவெலப்மென்ட்' கிளாஸ்க்கு ஏற்பாடு பண்ணினாங்க. எங்களுக்கு ஒரே சந்தோஷம்! (கெமிஸ்ட்ரி பீரியட் கட் ஆகுதே!) வந்தவரும் சீரியஸா என்னென்னமோ டிப்ஸ் குடுத்தாரு.. நாங்களும், யாரு பெத்த புள்ளயோ இப்டி தனியா புலம்புதேனு பரிதாபப் பட்டு.. எந்த சேட்டையும் பண்ணாம தேமேன்னு கேட்டுட்டு இருந்தோம்.

"டெய்லி கொஞ்ச நேரம் தியானம் பண்ணுங்க.. மைண்ட் சுறுசுறுப்பாகும்"

(தியானமா? உக்காந்துட்டே தூங்கறேன்னு வீட்ல இருக்கிற குட்டிச்சாத்தான் கலாய்க்குமே!?)

"தினம் 4 அல்லது 5 மணிக்கு எந்திரிச்சு படிங்க! பாடம் மனசுல நல்லா பதியும்"

(அடப்பாவி மக்கா! நடுராத்திரில எந்திரிச்சு படிக்கிறதா?)

"ஆனா விடிகாலைல படிக்கும் போது பசிக்கும்"

(ஆமா! பசிக்காதா பின்ன?)

"அதனால வீட்ல சொல்லி பிஸ்கட், பிரெட், ஜாம் எதாவது வாங்கி வெச்சிட்டு சாப்பிட்டு படிக்க ஆரம்பிங்க!

(அட! இது நல்லாருக்கே!)

வீட்டுக்கு வந்ததும் மொத வேலயா 'பிரெட், ஜாம் வந்தா தான்.. ஸ்டேட் ஃப்ர்ஸ்ட்' னு அம்மாட்ட கறாரா சொல்லிட்டேன். அம்மாவும்... அப்பாக்கு போன போட்டு "வந்தா ஜாமோட வாங்க.. இல்லன்னா வராதிங்க"னு சொல்லிட்டாங்க!

அப்பாக்கு எப்பாவுமே என் மேல பாசம் ஜாஸ்தி! உடனே கடைக்கு போயிருக்கார். அங்க 'ஸ்டாக் கிளியரன்ஸ்' போட்டிருந்தான் போல! ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீனு 3+3 ஜாம் பாட்டில்களோட வீட்டுக்கு வந்துட்டார்! உண்மைய சொல்றேங்க! அதுநாள் வரைக்கும்.. ஜாம்னு கேட்டா எங்கம்மா பாழாப்போன சாஷே ல வாங்கிட்டு வந்து, பிரெட்டுகிட்ட "இதான் ஜாம்" னு கண்ணுல காமிச்சுட்டு குடுப்பாங்க! இப்ப என்னடான்னா..எனக்கே எனக்குனு இத்தன பாட்டில் ஜாம்! ஆனா.. காலைல படிக்கும் போது தான் சாப்பிடணும்னு கண்டிஷன்! சரினு 5 மணிக்கு அலாரம் வெச்சுட்டு படுத்தா.. கனவுல ஜாம் பாட்டில் எல்லாம் என்ன சுத்தி நின்னு "ரிங்கா ரிங்கா ரோஸஸ்"னு டான்ஸ் ஆடுதுங்க!

மறுநாள்.. அலாரம் அடிக்கிறதுக்கு முன்னாடியே எந்திரிச்சி.. அவசரமா பல் தேச்சு.. வேகமா ஓடி வந்து பிரெட்.. ஜாம எடுத்து.. பெட் மேலயே உக்காந்து..பிரெட் ல ஜாம தேய் தேய்னு தேச்சு ஆச தீர சாப்ட்டேன்! அப்புறம் தான்.. புக்கு எங்கனு தேடினேன்! கைக்கு கிடச்ச புக்க எடுத்து வெச்சிட்டு ஈசானி மூலைல சேர் போட்டு உக்காந்தா.. சரியா 5 நிமிஷம் தான்..உடனே 'அருள் வாக்கு' சொல்லப் போற மாதிரி உடம்பு சாமியாட ஆரம்பிச்சிடுச்சு. சரின்னு பெட்லயே.. தலகாணிய சுவத்தில சாய்ச்சு வெச்சு படிச்சேன்.. முதுகு வலிச்சுது...அப்புறம் குப்புறப் படுத்து கன்னத்துல கை வெச்சிட்டு படிச்சேன்! திடீர்ன்னு முழிச்சா..( தூங்கிட்டமுல்ல!) புக்கு தலகாணி ஆய்ருக்கு! சரஸ்வதி தேவி சபிச்சுட்டா என்ன பண்றதுனு.. கட்டிலுக்கு வெளில தல நீட்டி புக்க கைல வெச்சிகிட்டு மறுபடி ஃப்ர்ஸ்ட்டுல இருந்து ஆரம்பிச்சேன்! சரியா 2 நிமிஷத்துல புக்கு கீழ விழுந்துடுச்சு பாவம்! இப்டி நான் படிக்க ஆரம்பிகிறதுக்குள்ளார விடிஞ்சே போய்டுச்சு!

அம்மா.. காலைல ஜாம் பாட்டில் எடுத்து திறந்து.. 'இடி விழுந்த மாதிரி' ஜாம்ல பள்ளம் இருக்கறத பாத்து ஷாக் ஆய்ட்டாங்க! இப்டியே.. எல்லா ஜாமும் தீருர வரைக்கும் என்னோட 'நைட் ஸ்டடி' கண்டின்யூ ஆச்சு. அப்புறமா அந்த பழக்கத்த நிப்பாட்டிட்டேன்!

என்னது ஸ்டேட் ஃப்ர்ஸ்ட் எடுத்தனானு கேக்கறிங்களா? அத வழக்கம் போல ஒரு கண்ணாடி போட்ட பொண்ணோ, பையனோ வாங்கிருப்பாங்க! அடுத்தவங்க பர்ஸனல் மேட்டர் நமக்கெதுக்குங்க?

Friday, May 11, 2007

உன்னிடம் ஒரு கேள்வி!




என்றாவது ஒருநாள்
நீ என்னைத் தேடி வந்தால்
எனக்காய் சாட்சி சொல்ல
தூக்கம் தொலைத்த இரவுகளும்
கண்ணீர் நனைத்த தலையணையும்
மிச்சமிருக்கும்....
ஆனால்...
அந்த நாளின் மகிழ்ச்சி தாங்க
நான் உயிரோடிருப்பேனா?

Thursday, May 10, 2007

வலிகள் பலவிதம்!


நீயும் நானும்
நடந்து சென்ற பாதை
நீண்டு கொண்டேயிருக்கிறது
முடிவில்லாமல்....

நாம் பேசிச் சிரித்த
நிமிடங்களுக்கு சாட்சியாய்
மெளனித்து நிற்கிறதே
அதோ அந்த மரத்தை
நினைவிருக்கிறதா?

யாருக்குத் தெரியும்?
சலசலத்துக் கொண்டிருக்கும்
அந்த பறவைகளின் பேச்சு
நம்மைப் பற்றியதாகக்கூட இருக்கலாம்!

உண்மை சொல்!

உன்னை எனக்கு
நினைவூட்டும் எதுவும்
என்னை உனக்கு
நினைவூட்டவில்லையா?

உன் பார்வை காட்டும் பரிவு..
அன்பில் நனைந்த உன் கோபம்..
உன்னை என் நிழலாய்
உணர வைத்த உன் நட்பு...

அய்யோ!

உன் பிரிவால்
உயிர் கரையும் பொழுதுகளில்....
உன்னை இழந்ததற்கு பதிலாய்
உயிரை இழந்திருக்கலாம்
என்றே தோன்றுகிறது!

Tuesday, May 8, 2007

நட்பெனப் படுவது யாதெனில்...

நண்பர்கள் எதற்காக?





ஹி.. ஹி தலைப்ப பாத்து சீரியஸ் பதிவுனு நினச்சிங்களா? நாமெல்லாம் சீரியஸா இருந்து என்னத்த சாதிக்க போறோம்? சும்மா சிரிச்சுட்டு போவமே! சொந்த சரக்கு இல்லீங்க! சுட்டது தான்!

(ஸ்ஸ்! அப்பாடா! கடமை முடிஞ்சுது! இனி ஆணி புடுங்க போலாம்!)

வலி சொல்லும் வார்த்தைகள்!

"யேய் யாருடா அவ?"

"எவ?"

"ம்ம் இன்னிக்கு உனக்கு போன் பண்ணினப்ப அட்டெண்ட் பண்ணி பேசினாளே? அவதான்."

"என்னடி உளர்றே? யாரு பேசினா? நீ எப்ப போன் பண்ணினே?"

"யாருனு எனக்கென்ன தெரியும்? அவ தான் எப்ப கூப்டாலும் போன் எடுத்து, "நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்" னு சொல்லிட்டே இருந்தா!"

".....................?!?"

"சொல்லி வை அவகிட்ட! நீ என் தொடர்பு எல்லைய விட்டு எங்கயும் போக முடியாதுனு!!"

நீ சிரித்தாய்! என் குறும்பு புரிந்து.. என் ஆதங்கம் புரிந்து.. என் அன்பு புரிந்து.. பெருமையாய்...கர்வமாய் சிரித்துக் கொண்டிருந்தாய்!!

இன்று என் எல்லைகள் உன் வசதிக்கேற்ப விஸ்த்தரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்க நீயோ உன் தொடர்புகளை துண்டித்துக் கொண்டேயிருக்கிறாய்!

Sunday, May 6, 2007

அழகு!! ஏ புள்ள முத்தழகு..!!!

"அம்மாடி.. ஆத்தாடி.. உன்ன எனக்கு தரியாடி..! யம்மா.. யம்மா..யம்மா.. யம்மம்மா..!

இப்டி ஏதாவது ஒரு குத்து பாட்டுக்கு கண்ணு மண்ணு தெரியாம ஆடற அளவுக்கு சந்தோஷமா இருக்கேன் நான்! பின்ன? பாசக்கார குடும்பத்துல நாமளும் சேர்ந்துட்டமுல்ல..சேர்ந்துட்டமுல்ல..சேர்ந்துட்டமுல்ல..!

எல்லாரும் கூடி கும்மியடிக்கிறத பாத்து.. சோகமா.. சோலோவா.. பெர்ஃபார்மன்ஸ் குடுத்திட்டிருந்த என்னை.. நம்ம தங்கச்சி.." வாங்க.. நீங்களும் அழகு பத்தி எழுதுங்க.." னு கூப்பிட்டு ஆட்டத்துல சேர்த்துகிச்சு.. ("தங்கச்சி.. இந்த உதவிய நான் எப்ப்ப்டிமா மறப்பேன்.. எப்டி மறப்பேன்!)

சொல்ல கொஞ்சம் கூச்சமா தாங்க இருக்கு.. இருந்தாலும் ஒரே குடும்பம்னு ஆன பின்னால என்ன மானம் ரோஷம் எல்லாம் பாத்துகிட்டு? எல்லாரும் எழுதறாங்களே.. நாம அழக பத்தி என்ன எழுதலாம்னு முன்னமே யோசிச்சு வெச்சுகிட்டு.. யாராச்சும் கூப்பிட மாட்டாங்களானு தேவுடு காத்துட்டு உக்காந்துட்டு இருந்தேன்! ( ஹலோ.. யாரது சத்தமா சிரிக்கிறது?) மை ஃப்ரண்ட்..இந்த குறைய தீர்த்து வெச்சிடுச்சு. (பாசக்கார பய புள்ள!)

சரி ஆட்டத்துக்கு வருவோம்! பொதுவா இந்த 'அழகு'ங்கிறது நாம பாக்கற பார்வைல இருக்கு. அதாவது..என்னனா.. ம்ம் நான் என்ன சொல்ல வரேன்னா..வேணாம்.. முறைக்கப்படாது! அலம்பல் பண்ணாம விஷயத்துக்கு வந்துடரேன்.!

1. குட்டீஸ் குறும்பு:


நான்: விஷ்ணு.. அங்க என்ன பண்றே? வா இங்க..

விஷ்ணு: வத மாத்தேன் போ..

நான்: ஏண்டா? அங்க என்ன பண்ணிட்ருக்கே?

விஷ்ணு: சத்த (சட்டை) மேல தண்ணி ஊத்திகித்தேன்..!

நான்: ஏய்.. தண்ணில விளையாட போய்ட்டியா..வாடா இங்க!

விஷ்ணு: மாத்தேன்.. நா.. நான்.. டாமிக்கு.. ஈஈ.. தேச்சி.. தன்ணி ஊத்தறேன்!

( அழுக்கு நாய் பொம்மை என் டூத் ப்ரஷ் புண்ணியத்தில் சுத்தமாகிக் கொண்டிருக்கிறது!)

இதுக்கு விளக்கம் வேற சொல்லணுமா சொல்லுங்க?

என்னைப் பொறுத்தவரை குட்டீஸ் நின்னா.. நடந்தா.. சிரிச்சா.. அழுதா.. அடம்பிடிச்சா.. தூங்கினா.. எல்லாமே அழகு..அழகு கொள்ளை அழகு!


சாம்பிள்ஸ்!










2. காத்திருப்பு:


"இடக்கை மணலை

வலக்கைக்கு மாற்றி

நகக்கண்ணெல்லாம் வலிக்கிறது..

அடியே நாளையேனும் வா!"


எங்கியோ எப்பவோ படிச்சு... கடற்கரை மணல் மாதிரியே இந்த கவிதையும் மனசுல ஒட்டிகிட்டே வந்துடுச்சு! காதல் தான்னு இல்ல.. மேடு தட்டின வயித்த பாசத்தோட தடவிகிட்டே.. குழந்தை முகத்துக்காக காத்திருக்கிற அம்மா, ஸ்கூல் வாசல்ல.. அம்மாவுக்கோ.. அப்பாவுக்கோ.. கன்னத்துல கை வெச்சு காத்திட்டிருக்கிற குழந்தை, வேலைக்குப் போன கணவன் திரும்பி வர்ற நேரத்துக்காக காத்திட்டிருக்கிற புது பொண்டாட்டி! வெளிநாடு போன பையன் திரும்பி வர்ற நாளுக்காக காத்துகிட்டிருக்கிற வயசான அப்பாம்மா!.. இப்டி நேசம் இருக்கிற எல்லா இடத்திலயும் காத்திருத்தல் அழகு தாங்க!


"உன்னை எதிரில் பார்த்த நாட்களை விடவும் எதிர்பார்த்த நாட்களே அதிகம்!"







3. அறிவு!

அவருக்கு வயசாகிடுச்சு.. அப்டி ஒன்னும் அழகான முகம் இல்ல. முகமெல்லாம் சுருக்கம்.. முடி எல்லாம் நரைச்சுப் போச்சு! அவர் ஹேர் ஸ்டைல் வித்தியாசமா கொஞ்சம் பைத்தியக்காரத்தனமா கூட இருக்கும்.! ஆனா.. அவர் தான் கோடிக்கணக்கான இளைஞர்களோட லட்சிய நாயகன்! அந்த அழகன்(ர்) யாருனு தெரியனுமா?





மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்!


அறிவும் ஆளுமையும் தர்ற கம்பீரமான அழகு இருக்கே!.. அடடா! அது எப்பவும் ஸ்பெஷல் தான்!



4. பாவாடை தாவணியில் பார்த்த உருவமா!

பொண்ணுங்கன்னாலே அழகு தான்! இதுக்கு எந்த தரப்புல இருந்தும் எதிர்ப்பு வராது னு நினைக்கிறேன்! ஆனா என்ன தான் வித விதமா உடைகள் வந்தாலும் இந்த பாவாடை தாவணியும்... புடவையும் தர்ற அழகு இருக்கே.. அதுக்கு ஈடு இணையே கிடையாதுங்க! ப்ரிட்னி ஸ்பியர்ஸ்-ஸா இருந்தா கூட புடவை கட்டினா.. நம்ம 'மஹாலட்சுமி' கெட்டப் -க்கு வந்துடுவாங்க! அதுக்கு நான் கேரண்டி!









நானெல்லாம் பாவாடை தாவணில பாவனா -வ விட சூப்பரா இருப்பேன்! கண்ணு பட்ருமேனு தான் என் போட்டோ போடல!



5. தனிமை!


சோகம் கலக்காத தனிமை தான் என்னை பொறுத்தவரை இனிமையான.. அழகான நேரம் -னு சொல்வேன். டி.வி வேனாம்.. பாட்டு வேனாம்.. புக் வேனாம்.. யாரும் என்கிட்ட பேச வேனாம்..னு மாடிக்கு போய்.. தூரத்துல தெரியற கோவில் கோபுரத்த...பளிச்னு இருக்குற வானத்த..சூரியன் மறையறத.. நிலா தேஞ்சுகிட்டோ.. வளர்ந்துகிட்டோ இருக்கிறத.. மேகத்துக்குள்ள மறைஞ்சுகிட்டு கண்ணாமூச்சி ஆடறத... மெல்லிசா தூறல் போடறத..ரசிக்கிற நேரம்..அழகான சொர்க்கம்! மனசு காத்துல பறக்குற பேப்பர் மாதிரி லேசா ஆகி.."எதுனாச்சும் எழுதலாமா.. வேணாமா னு பரபரன்னு இருக்கும்.. அந்த தனிமை.. ஹையோ! ரொம்ப அழகுங்க..





வெளியே பெய்கிறது மழை!.. உள்ளே நனைகிறது மனசு!





6. காதல்!


உலகத்துல எதெல்லாம் அழகில்லயோ அதயெல்லாம் கூட அழகா காட்ர சக்தி காதலுக்கு இருக்குங்க! காதலோட அருமை பெருமை எல்லாம் பூவே உனக்காக ல இருந்து.. படத்துக்கு படம் விஜய் விரிவா விளக்கமா சொல்லிட்டு வர்றாரு.. இதுல உங்களுக்கு எதுனா டவுட்டுனா அவருக்கு எப்ப வேணா போன் போட்டு க்ளியர் பன்ணிக்கலாம்!



"கடல் கடல் சார்ந்த இடம்

நெய்தல்.

நீ உன் சார்ந்த நினைவு

காதல்!"


-கென்






இது தவிர.. அம்மாவோட அக்கறை கலந்த கோபம், காதலியோட வெட்கம், ஊடல் உடைகின்ற நிமிடம், நம்ம அபி பாப்பா, ஜோதிகாவோட துள்ளல், ரஜினி ஸ்டைல், பாவனாவோட குறும்பு, காயத்ரியோட புன்னகை (கண்டுக்காதீங்க!) லேட்டஸ்ட்டா 'உன்னாலே உன்னாலே' விநய் வரைக்கும் எல்லாமே அழகு தான் போதுமா!

நான் தனியாள் இல்ல!!

"இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்" னு தலைப்பு போட்டு.."நான் என்பது இலக்கணத்தில் ஒருமை.. நடைமுறையில் பன்மை"னு வைரமுத்து மாதிரி கவித்துவமா ஆரம்பிச்சா நல்லாத்தான் இருக்கும். ஆனா.. 'இந்தப் பொண்ணும் எதோ கிறுக்குதே'னு அப்பப்ப பாலைத்திணைக்குள்ள எட்டி பாக்குறவங்களும்.."அடி ஆத்தி"னு அலறி அடிச்சு ஓடிட்டா என்ன பண்றதுனு இப்டி தலைப்பு குடுத்திருக்கேன். ( மீண்டும் ஒரு முறை தலைப்பை சிட்டிஜன் அஜித் ஸ்டைலில் படிக்கவும்!)

இந்த 16 வருஷத்துல.. சாரி பழைய நியாபகம்! இந்த 25 வருஷத்துல... எனக்கு கை கொடுத்தவங்க.. தோள் கொடுத்தவங்க.. இந்த கிணத்துல(?) (என் மனசு ரொம்ப ஆழம்!) கல்லு.. மரம்.. மட்டை..னு எறிஞ்சு இந்த அமைதியான பொண்ண (!?) சலனப்படுத்தினவங்க எல்லாரயும்.. வரிசைப்படுத்தப் போறேன். ரெடி ஜூட்! (ஓடறவங்க இப்பவே ஜகா வாங்கிக்கலாம்!)

10. திரு.கென் : நம்ம ப்ளாக்கர் தாங்க! இவரு கவிதை எழுதறாரா... இல்ல அடி பட்ட இடத்தை அப்டியே ரத்தகாயமா நம்மகிட்ட காட்றாரானு தெரில. பாக்கும் போதே வலிக்குது. ஆனா.."நான் நல்லவன்னு பொய் சொல்ல நான் ஒன்னும் கெட்டவனும் இல்ல. நான் கெட்டவன்னு உண்மைய ஒத்துக்க நான் ஒன்னும் நல்லவனும் இல்ல" அப்டினு அவர பத்தி தெளிவா(!) புரிய வைப்பார்!

9. சுஜா அப்பா: என் யு.ஜி ஃப்ரண்ட் சுஜாவோட அப்பா. எங்கப்பாவே எட்டிப் பாக்காத எங்க ஹாஸ்டலுக்கு மாசம் ஒரு தடவ வந்து... முறுக்கு, பப்ஸ், good day, வீட்டு சாப்பாடு, ..இன்ன பிற அயிட்டங்கள கொண்டு வந்து குடுத்துட்டு.. எனக்கும் ராதிகாவுக்கும் சேர்த்து 3(!) லாலி பப் வாங்கி குடுத்து "சண்டை போடாம சாப்பிடுங்க"னு சொல்லிட்டு போகும் பாசக்கார தந்தை. நாங்க இரண்டாம் ஆண்டு படிக்கும் போது மாரடைப்பால் இறந்து போனார். நினைவு தெரிந்து நான் சந்தித்த.. என்னை உலுக்கிய.. முதல் மரணம். :-(

8. பேரில்லா பச்சைக்கிளி: நான் ஏழாவது படிச்சிட்டிருந்தப்போ.. ஸ்கூல் மரத்துல இருந்து காலொடிஞ்ச கிளி ஒன்னு கீழ விழுந்துச்சு. அத வீட்டுக்கு தூக்கிட்டு போக எல்லாருக்கும் ஒரே அடிதடி! கடைசியா எல்லார் பேரையும் சீட்டுல எழுதி குலுக்கிப் போட்டு எடுத்தாங்க.. பாத்தா என் பேரு! சந்தோஷமா வீட்டுக்கு தூக்கிட்டு வந்துட்டேன். ராமன் சொன்ன மாதிரி.."நால்வரோடு ஐவரானோம்" னு எங்க ஃபேமிலி மெம்பராய்டுச்சு. " குயில் கூவும்.. மயில் அகவும்.. கிளி பேசும்" னு ஒன்னாப்புல படிச்சதுக்கு அப்ப தான் அர்த்தம் புரிஞ்சுது. அவ்ளோ அழகா என்னை.."அக்கா.. அக்கா.."னு கூப்பிட்ட என் பச்சைக்கிளி.. ஒரு விஷேச நாள்-ல நாய் கடிச்சு செத்துப் போச்சு. வாயில கேசரியோட (நான் செஞ்சது இல்ல) அது செத்து கிடந்தத பாத்து நாள் முழுக்க சோறு தண்ணி இல்லாம அழுதேன். ஜூலை 6 ம்(!) தேதி அதுக்கு திதி வருதுங்க. ;-(

7. கண்ணன் சார்: என்னோட வெல்விஷர்.. வழிகாட்டி.. காட் ஃபாதர்.. எப்டி வேணா இவர சொல்லலாம். காந்திஜி, அப்துல்கலாம் ரேஞ்சுக்கு இவர் மேல மரியாதை வெச்சிருக்கேன்னா பாத்துக்குங்க. இவர் என்ன சொன்னாலும் நான் கேப்பேன். அதனால.. "போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே"!

6. ஆனந்த்: எப்பவும் புலம்பிட்டே இருக்கிற பொடிப்பையன். எனக்கு ஆச்சரியமெல்லாம்.. இவன எப்டி விப்ரோ -ல செலெக்ட் பண்ணினாங்கங்கிறது தான். "நீ ஏன் தமிழ் ப்ளாக் ஒன்னு ஆரம்பிக்கக் கூடாது" னு கேட்டு என் அறிவுக்கண்ணை ஓபன் பண்ணின புண்ணியவான். ஆகவே மக்களே! என் மேல எதுனா கோபம் -னா.. நீங்க இவன தொடர்பு கொள்ளலாம்! (பழி ஓரிடம், பாவம் ஓரிடம்-னு ஆயிடக் கூடாதில்ல?)

5. கதிரேசன்: நல்லவன்.. வல்லவன்.. நாலும் தெரிஞ்சவன்! chat ல அறிமுகமான நான் மிகவும் நேசிக்கிற நேர்மையான நண்பன். என்ன ஒரே குறைன்னா.. நியாபக மறதி ஜாஸ்தி. பத்து நாள் ஆன்லைன்ல வரலனா யார் நீ-னு கேப்பான்! ஆனா ரொம்ம்ம்ம்ப... நல்லவன்!!

4. ராதிகா: யு.ஜி ல அறிமுகமான அழகான லூசு! ( அழகு-னு சொல்லிடதால.. லூசு-னு சொன்னத கண்டுக்க மாட்டா!) க்ளாஸ்ல.. ரூம்ல.. னு கூடவே இருந்து கழுத்தறுத்த இம்சை அரசி. இவளும் ஒரு பாவப்பட்ட காலேஜ் ல.."அரம் செய்ய இரும்பு" னு சொல்லிக் குடுத்துகிட்டு இருக்கா! ரெண்டு பேரும் காலேஜ் போகும்போது ஒரு உளியும் சுத்தியும் எடுத்திட்டு போவோம். எதிர்கால இந்தியாவ செதுக்கனுமில்ல?! மொத்ததுல.. கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார், துரியோதனன் - கர்ணன், பாரி - கபிலர், சரத்குமார் - விஜயகுமார், விஜய் - சூர்யா, வரிசைல வர்ற சரித்திரப் புகழ் பெற்ற நண்பிகள்!

3. அப்பா:  பாசமே உருவான என் தந்தை! தாய்மையை விடவும் அதிகமான அன்பை எங்கள் மீது செலுத்துபவர். அப்பாவுக்கு என்னவெல்லாம் தெரியும் என்று எனக்கு தெரியாது.. ஆனால்.. நான் என்றால் அவருக்கு 'உயிர்' என்பது மட்டும் தெரியும்!

2. அம்மா: மனைவி.. குடும்பத்தலைவி.. அம்மா.. ஃப்ரண்ட்.. என்று எல்லா பரிமாணங்களிலும் பிரகாசிக்கும் இனிய அம்மா! பூஜ்ஜியத்தை அடைந்து விட்ட குடும்ப பொருளாதாரத்தை  படிப்படியாய் உயர்த்தியவர். அசுர உழைப்பாளி... வேலை செய்த நேரம் போக மிச்சமிருந்த சொற்ப நேரங்களில்.. அன்பு..ஒழுக்கம்.. நேர்மை.. பண்பாடு.. இன்ன பிற குணங்களை கற்றுத் தந்தவர். குடும்பத்தை உருவாக்கி.. காப்பாத்தி.. கஷ்டங்கள அழிச்சு...ஆக்கல், காத்தல், அழித்தல் னு 3 gods செய்ற வேலைய 3 in 1 ஆ செஞ்சுகிட்டு இருக்காங்க! அவங்ககிட்ட எதயுமே நான் மறைச்சதில்ல.. என்ன வேணா பேசலாம்.. என்ன வேணா!
( கொஞ்சம் எமோஷனல் ஆய்ட்டேன் இல்ல! அம்மாவ நினச்சா ஒரே
ஃபீலிங்க்ஸ்பா!)

1. தீனதயாளன்: அடுத்து நம்ம டாப் டென்ல முதலிடத்தைப் பிடிக்கிறது.. என் கருவறைத் தோழன்.. ரத்தத்தின் ரத்தம்.. அருமைச் சகோதரன் தீனதயாளன்! அழுத்தம் னா அழுத்தம் அப்டி ஒரு அழுத்தக்காரன்! (பொம்பளைங்க தோத்து போகனும்) நான் பத்து வார்த்தை பேசினா அவன் குட்டியா ஒரு வார்த்தை பேசுவான். குறை இல்லாத மனுஷங்க கிடையாது.. பொறந்ததுல இருந்து இவன் -ட ஏதாச்சும் குறை இருக்கானு நக்கீரர் பேத்தி ரேஞ்சுல தேடரேன்.. மனுஷன் சிக்க மாட்டேங்கிறான்! கோபம்.. பாசம்.. வருத்தம் எல்லாத்தயும் 10% தான் வெளில காட்டுவான். அதுலயே நான் சரண்டர் ஆய்டுவேன்! ஒரே பாச மலர் தான் போங்க! (அக்கா-தம்பி பாசத்தை படமாக எடுக்க விரும்பும் தயாரிப்பாளர்கள் கவனிக்க!)

அவ்ளோ தான்..

பி.கு 1 : விதிமுறைகளுக்குட்பட்டது! கண்ணாலம்.. குழந்த குட்டி னு ஆன பின்னாடி இந்த பட்டியல் மாறலாம்!

பி.கு 2: இந்த பாலைத்திணைக்கு மூலகாரணமான ஜீவனை இந்த லிஸ்ட்டுல சேர்க்கல.

Saturday, May 5, 2007

புலம்ப வெச்சிட்டியே பரட்டை!


உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா? எனக்கு முந்தாநேத்து வரை லேசா தான் இருந்துச்சு.. "மாசற்ற உள்ளம் கொண்ட மகர ராசி நேயர்களே!" அப்டினு ஆரம்பிச்சா.. "உனக்காச்சும் தெரியுதே"னு சந்தோஷமா படிப்பேன். "சனி சைடுல பாக்கறான்.. குரு கோணையா பாக்கறான்..ராகு வீட்ல கேது பால் காய்ச்சிட்டான்.. தொட்டது துலங்காது.. வெச்சது வெளங்காது"னு எவனாச்சும் சொன்னா "சர்தான் போய்யா"னு போய்டுவேன். அப்டிதாங்க.. முந்தாநேத்து.."உங்களுக்கு நேரம் சரியில்ல.. ஜாக்கிரதையா இருங்க.. குஷ்டம்.. ச்சே.. கஷ்டம் வரப் போகுது"னு போட்டிருந்தான். கேட்டேனா நான்? மாங்கு மாங்குனு படிச்சு, 10th எழுதி முடிச்சு வீட்ல சிவனேனு ரெஸ்ட் எடுத்திட்டிருந்த தங்கச்சிய வேற தர தரனு இழுத்திட்டு... "பரட்டை என்கிற அழகு சுந்தரத்த" பாக்க போய்ட்டேன்!


பேர பாருங்களேன்.. தனுஷுக்கு ஆகாதவங்க யாரோ தான் டைட்டில் செலெக்ட் பண்ணிருப்பாங்க போல! ஆனா..சும்மா சொல்லக்கூடாது.. சூப்பர் படம்ங்க. பக்கத்து சீட்காரர் அப்டியே லயிச்சுப் போய்..மெய் மறந்து.. தூங்க ஆரம்பிச்சுட்டார்!! ( படம் பேர் "குறட்டை"னு நினைச்சுட்டாரோ என்னவோ?)

சரி என்ன கதைனு கேக்கறிங்களா? ஒண்ணும் இல்லங்க.. தனுஷ் ஒரு கிராமத்துல இருந்து சென்னைக்கு வந்து சந்தானத்த தேடறார்.. அர்ச்சனா பின்னாடியே கிளம்பி வந்து தனுஷ தேடறாங்க.. அவங்களோட சேர்ந்து நம்ம மீரா ஜாஸ்மினும் தேடறாங்க... கூடவே ஒரு ரவுடி கும்பலும் அவர தேடுது...அப்றம் தனுஷ் அவங்கம்மாவ தேடறார்.... மறுபடி எல்லாரும் தனுஷ தேடறாங்க..இப்டி surf excel விளம்பரம் மாதிரி, எல்லாரும் தேடறாங்க.. தேடறாங்க.. தேடிட்டே இருக்காங்க!! ( யாராச்சும் யாரையாச்சும் கண்டுபிடித்தார்களா? முடிவை வெள்ளித்திரையில் காண்க.)


படம் ஆரம்பிச்ச 10 நிமிஷத்துல என் தங்கச்சி என்னை பாத்து ஒரு 'லுக்' விட்டா பாருங்க..கேவலமாப் போய்டுச்சு! ஆனா....தனுஷ்.. 'சின்னதம்பி' பிரபுவையும்..'பதினாறு வயதினிலே' கமலையும்.. திருப்பாச்சி விஜயையும் சேர்த்து செஞ்ச மாதிரி ஒரு வித்தியாசமான கேரக்டர் -ல கலக்கியிருக்காருங்க! என்ன.. நான்தான் ' இவர் கேரக்டரயே புரிஞ்சுக்க முடிலயே' னு சத்யராஜ் ஸ்டைல்ல புலம்பிட்டிருந்தேன். படம் முடியும் போது..

இது என்ன கதை? தனுஷ் எதுக்கு ரவுடி ஆகறார்? நாசர் போலீஸ்க்கு ஃப்ரண்டா? ரவுடிங்களுக்கு ஃப்ரண்டா? அவர் சொல்றத எப்டி எல்லாரும் கேக்கறாங்க? மீரா ஜாஸ்மின் யாரு? ஸ்டூடெண்ட்டா.. ரிப்போர்ட்டரா? ஒரு ரவுடிகிட்ட எதுக்கு பேட்டி எடுக்கணும்? பேட்டி எடுக்க வந்தவங்க எதுக்கு பாட்டு பாடணும்? தனுஷ காணோம்னு அவர்கிட்டயே சொல்றாங்களே.. இவங்க கண்ணு என்ன நொள்ளையா? நடு ரோட்டுல ஒருத்தன வெட்டிக் கொன்னுட்டு.. தனுஷ் பாட்டுக்கு டீக்கடைல டீ போடறாரே அதெப்படி? க்ளைமாக்ஸ் ல தனுஷ கொல்ல வந்த ரவுடி கத்திய கீழ போட்டுடறாரே ஏன்? திருந்திட்டாங்களா?

இப்டி 'காயத்ரி ஒரு கேள்விக்குறி' யா தியேட்டர விட்டு வெளில வந்தேன். என்ன சொன்னாங்க.. என்ன சொல்ல வர்றாங்க னு ஒண்ணுமே புரியலிங்க!

தனுஷ்.. மீரா ஜாஸ்மின்..அர்ச்சனா.. சுரேஷ்கிருஷ்ணா..அந்த குருகிரண்.. (மீஸிக் டைரடக்கரு!) எல்லாரும் பேசி வெச்சிகிட்டு நம்மள பழிவாங்கிட்டாய்ங்க. அர்ச்சனா நடிக்கிறது போதாதுனு டான்ஸ் வேற ஆடறாங்க! பாசக்கார ஆத்தாவும்.. மவனும் ஜஸ்ட் மிஸ் ல பாக்காம போற சிச்சுவேஷன கேட்டு குருகிரணுக்கு அழுவாச்சி வந்துடுச்சு போல.. பி.ஜி.எம்லயே அழறார் மனுஷன்! விக்ரமன் படம் மாதிரி 'ஆஆஆ'னு கோரஸ் வேற! (கொல்ராங்கப்பா!)


ஆக மொத்தம் moral என்னான்னு கேட்டிங்கன்னா...
மின்னறதெல்லாம் பொன்னாக முடியாது....ரஜினி மருமகனெல்லாம் ரஜினி ஆக முடியாது.! படம் முடிஞ்சு போச்சு.. எல்லாரும் வூட்டுக்குப் போங்க!

அண்ணாந்து பார்க்கிறேன்!

ஒண்ணுமில்லங்க! புலம்பறத விட்டு புதுசா என்ன எழுதலாம்னு 2 நாளா கம்ப்யூட்டர முறைச்சு முறைச்சு பாத்துட்டு இருக்கேன். அதுக்கு மட்டும் வாய் இருந்தா.. " உங்கக்கா என்னை படுத்தறா டா" னு என் தம்பிட்ட போய் மூக்கால அழுதிருக்கும்!

சரி எத எழுத? பொறந்து வளர்ந்து 25 வருஷம் முடியப் போகுது. இத்தன நாளா நாம என்ன கிழிச்சிருக்கோம்னு எழுதலாமானு ஒரு யோசனை. இந்த..'திரும்பி பார்க்கிறேன்' 'சைடுல பாக்கரேன்'னெல்லாம் நிறைய பேர் டைட்டில் வெச்சுட்டதால..கொஞ்சம் புதுமையா இருக்கட்டுமேனு இப்டி தலைப்பு வெச்சிட்டேன்!

சரி உள்ளார எத எழுத? அடிக்கடி சவுண்டு உட்டு நம்மள டார்ச்சர் பண்ணுவாளே ஒருத்தி.. அதாங்க என் மனசாட்சி.. அவகிட்ட கேட்டேன். அவ்ளோதான்...ஒண்ணாங் கிளாஸ்-ல முதலும் கடைசியுமா கணக்குல 100 க்கு 100 வாங்கி சாதனை (!) படைச்சேனே அதச் சொல்லவா? அஞ்சாங்கிளாஸ்-ல கிளாஸ் லீடரா பதவி உயர்வு கிடச்சுதே அத சொல்லவா? எட்டாவது -ல அவன் பேரென்ன?.. ம்ம்.. ஜெயக்குமார். அவன் என் நோட்டுல கோணல் மாணலா ஐ லவ் யூ.. னு எழுதி வெச்சத பாத்து..ஐயோ அம்மானு கத்தி கூப்பாடு போட்டு ஹெச்.எம் ரூம் வாசல்ல அவன முட்டி போட்டு நிக்க வெச்சனே அந்த வீர சாகசத்த சொல்லவா? தமிழ் படிக்கிறேன் பேர்வழினு ஒரு சாமியார் காலேஜ் ல சேர்ந்து.. மொத வருஷமே பற்றறுத்து துறவறம் போகவிருந்தனே அந்த சோகத்த சொல்லவா? வேலைக்கு போன ஒரே வாரத்துல.. ஒருத்தன் என்னை கல்யாணம் பண்ணிக்கிறியானு கேக்க.. கிடுகிடுனு கால் நடுங்க ஓடி வந்து அம்மாவ மொட்டை மாடிக்கு இழுத்துட்டு போய்.. எல்லாத்தயும் உளறிக் கொட்டி.."நான் எதுமே பண்ணலமா.. அவன் தான் கேட்டான்"னு சொதப்பினேனே அத சொல்லவா? னு பேஜார் பண்ண ஆரம்பிச்சுட்டா. நானும் யோசிச்சு யோசிச்சு கடைசில ஒன்னும் சொல்லப் போறதில்லனு முடிவு பண்ணிட்டேன்.

இதுல நான் எதாச்சும் சொன்னேனா?சொல்லலயா? அத நீங்க தான் சொல்லணும். :)

Thursday, May 3, 2007

இதை படிக்காதீங்க ப்ளீஸ்!

தெரியுமே! எத செய்யாதே னு சொல்றாங்களோ அத மொதல்ல செய்றது தானே நம்ம பாரம்பரிய வழக்கம்!! சரி வந்தது வந்துட்டிங்க... படிங்க பரவால்ல.

இதுவரை.. "என்னடா இது? சரியான அழுமூஞ்சிப் பொண்ணா இருக்கே? இப்டி புலம்பிட்டே இருந்தா பொழப்ப எப்ப பாக்கறது" னு யாராச்சும் எனக்காக கவலைப்பட்டிருந்தா... (டேங்க்ஸ்!) அவங்களுக்காக இத எழுதறேன்.
இழவு வீட்ல என்ன தான் மாஞ்சு மாஞ்சு கட்டிப் பிடிச்சு ஒப்பாரி வெச்சாலும்... மூக்கு சிந்தற gap ல 'என்னக்கா சேல புதுசா? இத நீ கட்டி நான் பாத்ததே இல்லையே?' னு பரஸ்பரம் விசாரிச்சுக்குவாங்க பாத்திருக்கிங்களா? அந்த மாதிரி.. மூலைல உக்காந்து அழுதிட்டிருந்தா உடைஞ்சது ஒட்டவா போகுது.. கிடைக்கிற gap ல நாமும் கொஞ்சம் கலாய்ச்சுக்கலாம் னு முடிவு பண்ணியிருக்கேன்.

நான் கூட மொதல்ல யோசிச்சேன்.. சோகமா பாலைத்திணை-னு தொடங்கிட்டமே.. சந்தோசத்த சொல்ல இன்னொன்ணு ஆரம்பிக்கலாமானு.
உடனே.."காயத்ரி அடக்கி வாசி" னு ஒரு அசரீரி கேட்டுச்சு.(எனக்கு அப்பப்ப இப்டி கேக்கும்!) சரீனு இதுலயே சொல்ல முடிவு பண்ணிட்டேன். "குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிஞ்சது" தானே பாலை? அதனால திணை அப்டியே தான் இருக்கும். இங்க பருவங்கள் வேணா மாறலாம்.

ஆனா, எத சொல்றது.. எப்ப சொல்றது.. எப்டி சொல்றதுனு இன்னும் முடிவு பண்ணல. அதனால நீங்க எல்லாரும் எதுக்கும் கொஞ்சம் அலர்ட்டாவே இருங்க!!

மறுபடி வருவேன்..(கொஞ்சம் ஒவரா போய்டுச்சோ?)

போவதானால் போகலாம்..



என் உதட்டின் கடைசிப் புன்னகை
என் கண்களின் மிக நீண்ட கண்ணீர்
இரண்டுமே நீ கொடுத்தவை!

என்னை விட்டு விலகுவதாக நினைத்து
ஓடிக் கொண்டேயிருக்கிறாய்...

வானமாய் என் அன்பை
விரித்து வைத்திருக்கிறேன்..

எங்கே சென்று விடுவாய்
என்னைத் தவிர்த்துவிட்டு?

நினைவுகள்!

உன் அதீத அலட்சியம் தந்த
மிகப் பெரிய வேதனையின் முடிவில்
உறுதியாய்த் தீர்மானித்தேன்
உன்னை மறந்து விடுவதென்று!

உன் நினைவுகளை எங்கேனும்
தொலைத்து விடலாமென
அழைத்துக் கொண்டு கிளம்பினேன்.

திரையரங்கில்..
நூலகத்தில்..
புத்தக இடுக்கில்..
பேருந்தில்..
அலுவலகத்தில்..
சாலையில் பார்த்த
குழந்தையின் சிரிப்பில்...
அழுது வடிந்த ஒரு
மெகா சீரியலில்..

எங்கே தொலைப்பதென
அலைந்து திரிந்து
மீண்டும் வீட்டிற்குத் திரும்பினேன்.

செருப்புகளைக் கழற்றுகையில்
உறைத்தது!
உன் நினைவுகளைக் காணவில்லை!!

மகிழ்ச்சியாய் நுழைந்து
படுக்கையறையைத் திறந்தேன்

அங்கே...
அலைந்த களைப்பில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்..
என் கட்டிலில் படுத்து
உறங்கிக் கொண்டிருந்தன
உன் நினைவுகள்!

அழுவது நான் மட்டுமல்ல...


தந்தை அடித்ததை
தாயிடம் சொல்லி அழும்
பிள்ளை போல..

என் மார்பில் சாய்ந்து
தேம்பிக் கொண்டிருக்கிறது
நம் நட்பு!

..................

நடைபாதைக் கடையில்...
லாரிகளின் முகப்பில்........
பேருந்துப் பயணத்தில்.....
திருமண அழைப்பிதழில்...
சுவற்றுக் கிறுக்கல்களில்...
யாரோ அழைக்கையில்...
எதிர்பாராத விதமாய்
சந்திக்க நேர்ந்து விடுகிறது...

உன் பெயரை!

SMS

என்றாவது ஒருநாள் தோன்றும்
வால்நட்சத்திரம் போல
எப்போதாவது ஒரு முறை
உன்னிடமிருந்து
குறுந்தகவல் வந்திருப்பதாய்
என் அலைபேசி அழைக்கிறது.

புதையலைத் திறப்பவள் போல்
ஒவ்வொரு முறையும் பேராசையாய்த்
திறக்கிறேன்.

பெரிதாய் ஒன்றும் இல்லையென்றாலும்
பத்திரமாய் சேமித்து வைக்கிறேன்.

அதில்...
நீ என்னை
நினைத்த நிமிடம்
சிறைப்பட்டிருக்கிறது!

தொடரும்..

நம் நட்பிற்கு
நீ வைக்கும்
முற்றுப்புள்ளிகளையெல்லாம்
காற்புள்ளிகளாக்கிக் காத்திருக்கிறேன்

'தொடரும்' என்ற நம்பிக்கையில்.

எப்போது வருவாய்?

நானிருக்கிறேன் என்று
கைப்பிடித்து அழைத்து வந்து
நடுவழியில் எங்கோ
விட்டு விட்டுப் போய்விட்டாய்..

திருவிழாக் கூட்டத்தில்
தொலைந்துவிட்ட குழந்தையாய்
அடையாளங்களை மறந்து
அழுது கொண்டிருக்கிறேன்..

எனினும்..
நீ வருவாய் என்ற
நம்பிக்கை மட்டும்
இன்னும் மிச்சமிருக்கிறது.

பேசு ப்ளீஸ்...

திட்டு
அடி
உதை
வசை பாடு
கன்னத்தில் அறை
காறி உமிழ்
அமிலம் ஊற்று
கத்தியால் கிழி
காயப்படுத்து
ரத்தம் பார்
ரணப்படுத்தி ரசி
சாகும் வரை தூக்கிலிடு...

தயவு செய்து..
மெளனத்தால் கொல்லாதே.

காத்திருக்கிறேன்..


இப்போதெல்லாம்....
நீ என்னைக் கடந்து போகையில்
உன்னை நான் கவனிப்பதே இல்லை..

ஆனால்...
அந்த நொடிகளுக்காக
நாள் முழுவதும்
காத்திருக்கிறேன்!

நாவினால் சுட்ட வடு..


சொல்ல நினைத்து
சொல்லாமல் விட்ட வார்த்தைகளில்...

கேட்க நினைத்து
கேளாமல் விட்ட கேள்விகளில்..

அருகிலிருந்தும் மெளனமாய்க் கடத்திய
நிமிடங்களில்...

தவறான புரிதல்களால்-அன்பைத்
தவற விட்ட தருணங்களில்...

இன்னும் உள்ளாறாமல் இருக்கின்றன
நம் நட்பின் காயங்கள்!

நட்பு

நட்பின் தேசத்தில்
பாலினம் உணரப்படுவதில்லை

அங்கே வாழ்பவர்கள்
தேவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்

தட்டுவதற்கு அவசியமின்றி
கதவுகள் திறந்தே இருக்கின்றன

கேட்கப்படும் முன்பே அனைத்தும்
கொடுக்கப்படுகின்றன

தவங்கள் இன்றியே
வரங்கள் கிடைக்கின்றன

உண்மையான நட்பு
விட்டு விலகுவதுமில்லை
கை விடுவதுமில்லை...

நிஜம் நிழலாகிறது...


நம் நட்புக்காலத்தில்
ஒருநாள்
உன் காதலியை எனக்கு
அறிமுகம் செய்து வைத்தாய்.


இரண்டு அரசிகள்
மரியாதை நிமித்தமாய்
பேசிக் கொள்வதுபோல
நிகழ்ந்தது அந்த சந்திப்பு.

நம் பிரிவிற்குப் பின்னால்
மீண்டும் ஒருமுறை
அவளை சந்திக்க நேர்ந்தது

அவள் இன்னமும்
அரசியாய் இருக்கிறாள்..
நான்...
அனைத்தையும் இழந்த அகதியாய்..

எங்கே நான்?

என் ஆற்றலை
ஆளுமையை
கர்வத்தை
என்னைப் பற்றிய
என் மதிப்பீடுகள் அனைத்தையும்
உலக வரைபடமாய் சுருட்டி
உன் கைகளுக்குள் வைத்துக் கொண்டாய்..

எனக்குள் நானே
தேடிக் கொண்டிருக்கிறேன்..
என்றோ நானாக இருந்த
என்னை!

வெறுமை


ஒரு தொலைபேசி உரையாடலின் முடிவில்
நாம் இருவரும்
சண்டையிட்டுக் கொண்டோம்

இருபத்து நான்கு யுகங்களாய்
இருவரும் பேசிக்கொள்ளவில்லை

மறுநாள் நான் வரும் வழியில்
ஒரு சாலை சந்திப்பில்
எனக்காக காத்திருந்தாய்!

உன்னை மறைத்துக் கடந்து செல்லும்
வாகனங்களுக்கிடையே
உன் புன்னகை மட்டும்
என்னிடம் வந்து சமாதானம் பேசியது...

அதன் பின்னாக...
அந்தச் சாலையைக் கடக்கும் போதெல்லாம்
நீ நின்றிருந்த இடத்தைக்
கண்கள் அன்னிச்சையாய் நோக்குகின்றன..

எப்போதும் போல
அது வெறுமையாய் இருக்கிறது
நீ இல்லாத என் வாழ்க்கையைப் போன்றே.

நீ..





பகலெல்லாம் கண்களுக்குள்
நிறைந்திருந்து..
இரவில் உறங்கும் முன்

கண்ணோரங்களில் வழிகிறாய்
கண்ணீராக..

Tuesday, May 1, 2007

யார் ஜடம்?

நீ இல்லாத ஓர் மாலைவேளையில்
உன் 'bike' ம் நானும்
தனியே சந்தித்துக் கொண்டோம்.

என்னைக் கண்டதும்
தவிப்பாய் தலைகுனிந்து கொண்டது

அருகில் சென்றேன்...

'நீயுமா என்னை மறந்து விட்டாய்?'
என்றேன் வேதனையாய்...

'இல்லையில்லை'
என்று அவசரமாய்
நிமிர்ந்து விட்டு மீண்டும்
தர்மசங்கடமாய் தலைகுனிந்து கொண்டது

எதிரில் வந்த நீ
என்னை கவனிக்காமலே
கடந்து போனாய்...

உண்மை சொல்..
உங்கள் இருவரில் யார் ஜடம்?