Tuesday, January 3, 2012

குறுகத் தரித்த மனம்






சிகரங்களின் சீதளத்தையும்
பள்ளத்தாக்குகளின் விரிசல்களில்
நதியோடு கசியும் ரகசியங்களையும்
ஒருபோதும் அறிந்ததில்லை
தோட்டத்துப் பூக்கள்

தினமும் விரித்துச் சுருட்டும்
படுக்கைகளுக்குள்ளாக
இருதயம் போல்
கசங்கி விரிகின்றன
நாட்கள்

ஜன்னல்களின் விளிம்பில்
கிளைபரப்பிக் கனிவளர்த்து
செழித்து நிற்கின்றன
போன்சாய் மரங்கள்

ஆயினும்..

தொட்டி மீன்களின் கனவில்
ஓயாமல் அலைவீசிக் கொண்டிருக்கிறது
பேராழம் மிக்கப்
பெருங்கடல் ஒன்று.

6 comments:

G3 said...

:)

Yaathoramani.blogspot.com said...

தங்கள் கவிதையிலும் பேராழம் மிக்க
பெருங்கடல் ஒன்றை உணர முடிகிறது
குறுகத் தரித்த கவிதை
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

anujanya said...

நல்லா இருக்கு காயத்ரி.

//கசங்கி விரிகின்றன// சுருங்கி என்பதற்குப் பதில் கசங்கி என்று எழுதியதில் இருக்கும் நுட்பம்.... ம்ம்ம்.

சசிகலா said...

தொட்டி மீன்களின் கனவில்
ஓயாமல் அலைவீசிக் கொண்டிருக்கிறது
பேராழம் மிக்கப்
பெருங்கடல் ஒன்று.
அருமை

பாசு.ஓவியச்செல்வன் said...

சில வரிகள் மனதை வதம் செய்தது
சில வரிகள் ரணத்திற்கு மஞ்சள் பூசியது.

வாழ்க்கை மீதான உங்கள் அவதானிப்பு
நுண்ணிய இடுக்கு வரை சென்று திரும்பியிருப்பது
வியப்பாய் இருக்கிறது

முதல் கவிதையை விளையாட்டாய் வாசிக்கத் தொடங்கி
கடைசி கவிதையில் முட்டி நின்றேன்............

விக்கித்து நிற்கிறேன் வேறொன்றும் சொல்வதறியாது .........

அனைவருக்கும் அன்பு  said...

மறுக்கபட்டாலும்
கிடைதிவிடும் என்று நம்பிக்கை கொள்வது
'மானிட இயல்பு
அழகியல் ............அற்புதம் ......தத்துவம்