Sunday, April 14, 2013

”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..



”பாணர் தாமரை மலையவும் புலவர்
பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும்     
அறனோ மற்றிது விறன்மாண் குடுமி!
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு
இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே?”

என்ற புறநானூற்றுப் பாடலோடு தொடங்கும் இந்தப் பத்தி  நியாயமாக ஒரு சங்க இலக்கியக் கட்டுரையாக பரிணமித்திருக்க வேண்டியது. ஆனால் இக்கட்டுரை பேசவிருப்பது அதைப் பற்றியல்ல.  மனித  மனத்தின் செயல்பாடுகள் பெரும்பாலும் விநோதமானவை.... நினைவின் எந்தப் பிரி எந்தச் சரடினுடையது என்பது எளிதில் தீர்மானிக்கக் கூடியதாய் இருப்பதில்லை. முகப்பு விளக்குகள் ஒளிர வேகமாக வரும் லாரியை,  அறிவுற்றுத் தீவிழித்து  வாய் பிளந்து  ’ஈஈஈ’ யென்று பல்லிளித்தபடி பாய்ந்து வரும் அரக்கனாக கற்பிதம் செய்வதும், எப்போதும் துடைப்பத்தை வைத்து வீட்டைப் பெருக்கிக் கொண்டேயிருக்கும் பக்கத்து வீட்டுப் பெண்மணியைப் பார்க்கையில்,  கூண்டில் வைத்த நெல்லையும் பழங்களையும் நாளெல்லாம் காலால் எத்தி எத்தி  ஒரு மூலைக்கு நகர்த்திக் கொண்டே இருந்துவிட்டு ஒன்றும் சாப்பிடாமலேயே  இறந்து போன பச்சைக் கிளியைப் பற்றிய சாயம் போன நினைவுகளை மேலெழுப்புவதும் மனதின் கிறுக்குத்தனங்களேயன்றி வேறென்ன?  இதோ இப்போதும் கூட “உன்னைப் புகழ்ந்து பாடும் பாணர்களுக்கு பொன்னாலான தாமரைப் பூவை சூடிக் கொள்ளக் கொடுப்பதற்காக, உன்னைப் போற்றி எழுதும் புலவர்களுக்கு யானைகளையும் தேரையும் பரிசளிப்பதற்காக  பிறரை வருத்தி அவர்களுடைய மண்ணைக் கவர்ந்து கொள்கிறாயே.. இது  நியாயமா அரசே?”  என்ற திகைப்பூட்டும் கேள்வியைச் சுமந்திருக்கும் பாடலைத் தான்  கட்டுரையின் கருப்பொருளாகத் தேர்ந்து கொள்ளத் தீர்மானித்திருந்தேன். யாசகக் குரல்களால் நிரம்பியிருக்கும் புறநானூற்றில் தனித்து ஒலிக்கும் அடக்குமுறைக்கான முதல் எதிர்ப்புக் குரல் இது. ஆனால்.. “இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு” என்னும் வரியை வாசிக்கையில் மனது அவ்வரியோடு, சம்பந்தப்பட்ட மன்னனோடு, அது எழுதப்பட்ட காலத்தோடு நின்று விடாமல்,எங்கெங்கோ  குறுக்குச் சந்துகளுக்குள் புகுந்து இறுதியில் சினுவா ஆச்சிபியின் “சிதைவுகள்’ நாவலில் முட்டி நிற்கிறது. 

சினுவா ஆச்சிபி - நவீன ஆப்பிரிக்க இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் உலகப் புகழ் பெற்ற நாவலாசிரியர், கவிஞர், சிறுகதையாசிரியர்  மற்றும் திறனாய்வாளர். 1930 ல் நைஜீரியாவில்  ஈபோ இனத்தில் பிறந்த ஆச்சிபி தனது 28 வது வயதில் தனது முதல் படைப்பான “Things Fall Apart" (சிதைவுகள்) நாவலை வெளியிட்டார். 1999 வரை உலகம் முழுவதும் ஒரு கோடிப் பிரதிகள் விற்பனையாகி, 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அவருக்கு உலகப்புகழை  வாரிக் கொடுத்த இந்நாவலை, சென்ற மாதத்தில் தான் எனக்கு வாசிக்க வாய்த்தது. வாசித்து முடித்த அடுத்த ஓரிரு நாட்களுக்கு ஊனுறக்கம் கொள்ள முடியாத அளவிற்கு அவஸ்தை என்றெல்லாம் சொல்ல முடியாவிட்டாலும் உள்ளூர இனம் புரியாத சஞ்சலத்தைக் கொடுத்துக் கொண்டேயிருந்தது. 

ஆச்சிபி இந்நாவலைத் தொடர்ந்து No Longer at Ease, Arrow of God, A Man of the People, Anthills of the Savannah முதலிய நாவல்களையும், ஏராளமான சிறுகதைகளையும், கவிதைகளையும், குழந்தை இலக்கியங்களையும், கட்டுரைத் தொகுதிகளையும், திறனாய்வு விமர்சனங்களையும்  எழுதியிருக்கிறார்.  அவரது கவிதைகளில் சிலவற்றைஇங்கே வாசிக்கலாம். A Mother in a Refugee Camp கவிதை மனதைப் பிசைகிறது. நைஜீரிய அரசியலில் பெரும் பங்கு வகித்திருந்த சினுவா ஆச்சிபி தன் வாழ்வின் இறுதிப் பகுதியை அமெரிக்காவில் கழித்தார். ஒரு கார் விபத்தில் முதுகெலும்பில் அடிபட்டு இடுப்பிற்குக் கீழ் செயலிழந்த நிலையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே கல்லூரிப் பேராசிரியராக தன் பணியைத் தொடர்ந்த இவர் கடந்த 21.03.2013 ம் நாள் மரணமடைந்தார். அவர் மரணமும் என் வாசிப்பும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் நிகழ்ந்தது அபாரமான யதேச்சையே. இவரது படைப்புகள் அனைத்திலும் பார்க்க நாவல்களே அதிகம் புகழ் வாய்ந்தவையாய் இருக்கின்றன. உலகெங்கும் கல்வித் துறைகளில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. 

“Things Fall Apart" ஐ   கூகுளைப் போலவோ ஏனைய மொழி’பெயர்ப்பாளர்களைப்’ போன்றோ “விஷயங்களைத் தவிர வீழ்ச்சி”  என்று பெயர்த்தெடுக்காமல் “சிதைவுகள்” என்று அழகாய் மொழிபெயர்த்த திரு.என்.கே.மகாலிங்கம் அவர்களை இத்தருணத்தில் நிச்சயம் நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும். ”பூரணி” என்னும் சிற்றிதழின் ஆசிரியராகப் பணியாற்றி இலக்கிய உலகில் பூரணி மகாலிங்கம் என்றே அறியப்படும் இவர் ஒரு இலங்கைத் தமிழர். நைஜீரியாவில் பல்லாண்டுகள் ஆசிரியராய்ப் பணியாற்றியவர். உச்சரிக்கச் சிரமப்படுத்தும் ஆப்பிரிக்கப் பெயர்களையும், அவர்களின் ஆச்சரியமூட்டும் விநோதமான சடங்குகள், சம்பிரதாயங்களையும் கொஞ்சமும் அந்நியமாக உணராத வகையில் தமிழையும் வாசகர்களையும் படுத்தாமல்  வெகு அழகாய்த் தமிழ்ப்படுத்தியிருக்கிறார். இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் சுந்தரராமசாமி “சிதைவுகள் தமிழுக்கு வரும்போது அதன் கதாபாத்திரங்கள் தம் வாழ்க்கையில் தழுவி நின்ற பண்டைய வாழ்க்கை முறை போல மற்றொரு பண்டைய வாழ்க்கை முறை சார்ந்த வாசகர்களிடம் வந்து சேர்கிறார்கள். மொழிபெயர்ப்பாளரின் திறனால் இந்த உறவு அக்கதாபாத்திரங்களுக்கு வெகு இதமாகக் கூடியிருக்கிறது. தமிழ் அலட்டிக் கொள்ளாமல் அம்மக்களுக்குரிய வாழ்வை வாங்கிக் கொள்வதையும் இம்மொழிபெயர்ப்பு மூலம் நாம் உணர முடியும்.” என்று பாராட்டுகிறார். 

”சிதைவுகள்” நாவலின் கதைச் சுருக்கம் வெகு எளிமையானது. ஒக்கொங்வோ என்ற தனி மனிதனின் இளமைப் பருவம் முதல் அவன் மரணம் வரையிலான வாழ்க்கையைச் சொல்வது. ஆனால் ஒரு மனிதனின் வாழ்வு என்பது எத்தனை முயன்றபோதும் சமூகத்திலிருந்து முற்றிலும் வேறாய் பிரித்து எடுத்து விடக் கூடியதாய் இருப்பதில்லை தானே? ஒக்கொங்வோவின் வாழ்க்கை என்னும் சிறு மொட்டு அவன் சுற்றம், சமூகம், கிராமங்கள், அவர்களின் நம்பிக்கைகள், சடங்குகள், கடவுள்கள், கலாச்சாரம், குற்றங்கள், தண்டனைகள் மற்றும் இவையனைத்திலும் ஏற்படும் சிதைவுகள் ஆகியவற்றை படிப்படியாய் காட்சிப்படுத்தியபடி பல்லடுக்குத் தாமரையாய் விரிவதே நாவல். ஒற்றைப் பார்வையில் மிக எளிமையான கதையாகத் தெரிந்தபோதிலும் ஆதி மனிதர்களின் வாழ்விலிருந்து இன்று வரை தொடர்ந்து வரும் சக மனிதர்கள் / இனக் குழுக்கள் மீதான அடக்குமுறையையும், ஒரு மொழியோ, இனமோ, பண்பாடோ  பென்சில் சீவப்படுவது போல அதிகார வர்க்கத்தால் சிறிது சிறிதாய் செதுக்கிச் சிதைக்கப்படுகையில் உருவாகும் வலியையும் அதிர்வையும் மிக அழுத்தமாகப் பதிவு செய்வதாலேயே இது மிக முக்கியமான நாவலாகியிருக்கிறது. Gods must be crazy திரைப்படம் மற்றும் அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள் வாயிலாக மட்டுமே நான் பெற்றிருந்த ஆப்பிரிக்க கலாச்சாரம் குறித்த சித்தரிப்புகளை இந்நூல் பெருமளவில் விசாலமாக்கியிருக்கிறது. 

ஒக்கொங்வோ ஒரு இளைஞன். சோம்பேறியும் செலவாளியும், எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்காதவனும், நோயுற்று உடல் வீக்கமுற்று, தானே தன் புல்லாங்குழலோடு தனித்து இடுகாடு சென்று மரணித்து பிறரால் அடக்கம் செய்யப்படும் பெருமையைக் கூட இழந்தவனுமான உனோக்கா என்பவனின் மகன். தன் தந்தையைப் போல தானும் ஆகிவிடக் கூடாது என்ற பயம் அவனை வாழ்நாள் முழுவதும் ஆட்டிப் படைக்கிறது. அந்த பயமே அவனை பெரிய மல்யுத்த வீரனாகவும், கோபக்காரனாகவும், அன்பை வெளிக்காட்ட மறுப்பவனாகவும் ஆக்குகிறது. அந்த பயம் தான் அவனை கடும் உழைப்பாளியாகவும், மூன்று மனைவிகளையும் அவர்கள் குழந்தைகளையும் சொந்த வீட்டில் பராமரிப்பவனாகவும், வருடம் முழுவதற்கும் குடும்பத்திற்குத் தேவையான வள்ளிக் கிழங்குகளை களஞ்சியத்தில் சேமித்திருக்கும் செல்வந்தனாகவும், சமூகத்தில் மதிப்பிற்குரிய பட்டங்களைப் பெற்றவனாகவும் வைத்திருக்கிறது. மேலும் பல பட்டங்கள் பெற்று சமூகத்தின் பிரபுக்களுள் ஒருவனாக வாழ விரும்பியவனின் கனவு எதிர்பாராதவிதமாக  திடீரென ஒரே நாளில் சிதைகிறது. ஒரு மரணவீட்டில் சாவுப்பறை முழக்கி எல்லோரும் நடனமாடுகையில் தவறுதலாக இவனது துப்பாக்கி வெடித்து 16 வயதுப் பையன் ஒருவன் இறந்து போகிறான்.

 தன் குலத்தைச் சேர்ந்தவனை தானே கொல்லுதல் பெருங்குற்றம். குற்றங்களில் இரண்டு வகை உண்டு. ஆண் குற்றம், பெண் குற்றம். அறியாமல் செய்வது பெண் குற்றம். இவன் செய்தது பெண் குற்றமாகையால் 7 ஆண்டுகள் குலத்தை விட்டு விலக்கி வைத்து தண்டனை கொடுக்கிறார்கள். இரவோடு இரவாக வீட்டையும் கிழங்கு களஞ்சியத்தையும், வளர்ப்புப் பிராணிகளையும்  விட்டுவிட்டு குடும்பத்தோடு தன் தாயின் சொந்தங்கள் இருக்கும் கிராமத்தில்  தஞ்சமடைகிறான். ஒவ்வொரு தாயும் அவள் இறந்த பின்பாக அவளுடைய பிறந்த மண்ணிலேயே புதைக்கப்படுவாள். தந்தை அடித்ததும் தாயிடம் சென்று அழும் குழந்தை போல குற்றமிழைத்த ஆண் தன் குலத்தை விட்டு விலகி தாய் புதைக்கப்பட்ட மண்ணில் அவளின் பிறந்தகத்தாரிடம் தஞ்சம் புக வேண்டும் என்பது அவர்கள் நியதி. தந்தைவழிச் சமூகமாய் வாழ்ந்த போதிலும் தாயை “நேகா ” (தாயே தன்னிகரில்லாதவள்) என்று மதிக்கிறார்கள்.

7 வருடங்கள். காலம் கரையானைப் போல ஒக்கொங்வோவின் கனவுகளையும் வாழ்க்கையையும் கொஞ்சம் கொஞ்சமாய் அரித்து விடுகிறது. “ஒருவனுடைய இடம் அவனுக்காக காத்துக் கொண்டிருப்பதில்லை. ஒருவன் அவ்விடத்தை விட்டுப் போனவுடன் உடனடியாக வேறொருவன் அவ்விடத்தை நிரப்பி விடுவான். குலம் ஒரு பல்லியைப் போல. தன் வாலை இழந்தவுடன் அதற்குப் புதிய வால் விரைவிலே முளைத்து விடும்” என்கிறார் ஆச்சிபி. 3 பகுதிகளாகப் பிரியும் நாவல் ஒக்கொங்வோ  குற்றமிழைத்து குலம் விட்டு வெளியேறும் வரை முதல் பிரிவாகவும், அவன் தனது தாயின் பிறந்தகத்தில் வாழும் நாட்களை இரண்டாம் ,பிரிவாகவும் அவன் மீண்டும் குலத்திற்கே திரும்பிய பின்னான வாழ்க்கையை மூன்றாம் பிரிவாகவும் விவரிக்கிறது. நாவலின் இரண்டாம் பகுதியில் அவர்கள் கிராமத்திற்குள் மெல்ல கிறித்துவ சமயம் நுழைகிறது. அவனது மூத்த மகன் அவனை வெறுத்துப்  பிரிந்து கிறித்துவ சமயத்தில் இணையும் துயர சம்பவம் நடைபெறுகிறது. அவன் குலத்திற்குத் திரும்பும் போது சமயத்தோடு சேர்ந்து வெள்ளையர்களின் அரசாங்கமும் நுழைந்திருக்கிறது. வெள்ளையர்களின் அடக்குமுறையையும் சமயத்தையும் வெறுத்து அவர்களை வெளியேறும்படி போராடத் தொடங்குகின்றனர். அவர்களில் ஒக்கொங்வோ உட்பட 6 தலைவர்களை சமாதான பேச்சு வார்த்தைக்காக அழைக்கும் ஆங்கிலேயர்கள், எதிர்பாராத விதமாக அவர்களைக் கைது செய்து, தலை மயிரை மழித்து, சிறையில் அடைத்து 3 நாட்களுக்குப் பட்டினி போட்டு சித்திரவதை செய்து பின்னர் விடுவிக்கின்றனர்.... “தொழுத கையுள்ளும் படையொடுங்கும்”

ஒக்கொங்வோவை அந்த துரோகமும் அவமதிப்பும் அலைக்கழிக்கிறது. தான் கிராமமே நடுங்கும் மல்யுத்த வீரனாய் இருந்த நாட்களை எண்ணிப் பார்த்து அந்த கவுரவத்தை மீட்டெடுக்க விரும்புகிறான். அதன் தொடக்கமாக ஆங்கிலேய ஏவலாளி ஒருவனை  ஊர்ப் பொதுவில் வாளால் வெட்டிக் கொல்கிறான். ஆனால் அவன் எதிர்பார்த்த எழுச்சி மக்களிடம் வரும் முன்பாகவே அவன் வீட்டருகே இருக்கும் மரத்தில்  தூக்கில் பிணமாகத் தொங்குகிறான். அவன் தற்கொலை செய்து கொண்டு இறந்தானா அல்லது கொல்லப்பட்டானா என்பதை சினுவா புதிராகவே விட்டு வைக்கிறார். அவன் இறந்தது குறித்து விசாரிக்க வந்த ஆங்கிலேய மாவட்ட ஆணையாளன், தான் எழுதப்போகும் நூலில் ஒக்கொங்வோவைப் பற்றியும் எழுத உத்தேசிக்கிறான். “ஏவலாளன் ஒருவனைக் கொன்று விட்டு தானும் தற்கொலை  செய்து கொண்ட இந்த மனிதனின் கதை படிப்பவருக்குச் சுவாரஸ்யமாக இருக்கும். எத்தனையோ விஷயங்களை உள்ளடக்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும் பல விபரங்களை வெட்டி விடுவதில் உறுதியாக இருக்க வேண்டும்.” என்று எண்ணிக் கொள்ளும் அவன் தன் நூலுக்கான பெயரையும் முடிவு செய்கிறான். “கீழ் நைஜரின் ஆதி இனக் குல மரபுகளைச் சமாதானமயப்படுத்தல்” என்பதே அந்நூலின் பெயர். 

முதல் பகுதியில் அறியாமல் செய்த தவறால் ஒக்கொங்வோவின் கனவுகளும்,  இரண்டாம் பகுதியில் அவன் சேமித்து வைத்திருந்த பிம்பமும் நம்பிக்கைகளும், மூன்றாம் பகுதியில் அவனது ஒட்டுமொத்த வாழ்வும் படிப்படியாகச் சிதைகின்றன. எவராலும் அணை போட்டுத் தடுத்துவிட முடியாத பெரும் பிரவாகமாக வாழ்க்கை அடித்து இழுத்துப் போகையில் நீர்வழிப்படுவதைத் தவிர்த்து வேறு வழியறியாத சிறு துரும்பெனவே மனிதர்கள் அலைக்கழிய நேர்கிறது. நாவல் முழுவதிலும் எவர் சார்பிலும் நின்று பேசாமல், உள்ளதை உள்ளபடியே காட்டிப் போகும் கதாசிரியனாக பாத்திரங்களின் உணர்ச்சிகளுக்கு வழிவிட்டு ஒதுங்கியே நிற்கிறார் சினுவா ஆச்சிபி. வேற்று மதம் உள்ளே நுழைகையில் அதை ஏற்க முடியாமல் பதறித் தவிக்கும் மக்களிடையே அப்புது மதத்தை தங்களின் பற்றுக்கோடாக, நம்பிக்கை ஒளிக் கீற்றாக உணர்ந்து வழி மாறும் மனிதர்களின்  ஆசுவாசத்தினையும் அவர் பதிவு செய்யத் தவறவில்லை. 

நாவலில் எனக்கு மிகுந்த உணர்வெழுச்சியைக் கொடுத்த இடம் ஒன்றுண்டு. ஒக்கொங்வோவின் குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியை அயல் குலத்தார் கொலை செய்ததற்கு பரிகாரமாக அக்குலத்திலிருந்து கன்னிப் பெண் ஒருத்தியையும், சிறுவன் ஒருவனையும் தானமாக அனுப்பி வைப்பார்கள். கன்னிப்பெண்ணை இறந்தவளுக்கு மாற்றாக அவள் கணவனுக்கு அனுப்பி விட்டு சிறுவனை என்ன செய்வது என்று முடிவு செய்யும் வரை ஒக்கொங்வோவின் பராமரிப்பில் வைத்திருக்க முடிவு எடுக்கப்படும். ஆரம்ப நாட்களில் தாயையும் தங்கையையும் நினைத்து அழும் சிறுவன் நாளடைவில் அவர்கள் வீட்டில் ஒருவனாகி ஒக்கொங்வோவின் மூத்த மகனுக்கு நெருங்கிய நண்பனாகி விடுவதோடு ஒக்கொங்வோவையும் ‘அப்பா’ என்றே அழைப்பான். திடீரென ஒரு நாள் குலத்தெய்வம் அச்சிறுவனை கொன்று விடச் சொல்லி விட்டது என்று கூறி அவனைக் கொல்வதற்கு ஒக்கொங்வோவையும் அழைப்பார்கள். சிறுவனின் தலையில் கள்ளுப் பானையை வைத்து முன்னால் நடக்கவிட்டு ஊர் எல்லையைத் தாண்டிய பின் அவனை வெட்டிக் கொல்வதாக ஏற்பாடு. சிறுவன் முதலில் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பி பயந்தாலும் ஒக்கொங்வோவும் உடன்வருவதால் ‘அப்பா தான் இருக்கிறாரே’ என்ற தைரியத்துடனேயே நடப்பான். 

“இகெமெஃபுனாவுக்கு பின்னால் வந்த ஒருவன் தொண்டையைச் சரி பண்ணினான். இகெமெஃபுனா திரும்பிப் பார்த்தான். நின்று திரும்பிப் பார்க்காமல் போய்க் கொண்டிருக்கும்படி அவன் உறுமினான். அவன் சொல்லிய முறை இகெமெஃபுனாவின் முதுகுத் தண்டை விறைக்கச் செய்தது. அவன் தூக்கிச் சென்ற கறுத்த பானையில் அவன் கை லேசாக நடுங்கியது. ஒக்கொங்வோ ஏன் பின்புறம் போய்விட்டான்? தன் கால்கள் உருகின மாதிரி அவன் உணர்ந்தான். திரும்பிப் பார்க்க பயமாக இருந்தது.தொண்டையைக் கனைத்த மனிதன் தன் வாளை உருவி உயர்த்தினான். ஒக்கொங்வோ வேறு பக்கம் தலையைத் திருப்பிக் கொண்டான். வெட்டு அவனுக்குக் கேட்டது. பானை மண்ணில் விழுந்து உடைந்தது. “என் அப்பா.. என்னைக் கொன்று போட்டாங்க” என்று இகெமெஃபுனா அழுது கொண்டு அவனிடம் ஓடி வந்தது கேட்டது. பயத்தால் அலமந்து ஒக்கொங்வோவும் தன் வாளை உருவி அவனை வெட்டி விழுத்தினான். தான் பலவீனமானவன் என்று அவர்கள் நினைத்து விடுவார்களோ என்று பயந்தான்.”

என்று அந்த சம்பவத்தை விவரித்து முடிக்கிறார் ஆசிரியர். எனக்கு மனம் சிலிர்த்துச் சிலும்பி நின்றது. அடுத்த வந்த நாட்களில் உள்ளே தங்கி ஓயாமல் அறுத்துக் கொண்டிருந்த சம்பவங்களில் இதுவே முக்கியமானதாக இருந்தது. இகெமெஃபுனா இறந்த நாளிலிருந்து தன் தந்தையை உள்ளூர வெறுக்கும் மூத்த மகன் நாவோயெ, புதிய சமயத்தின் பாசுரங்களால் ஈர்க்கப்படுகிறான். “இருட்டிலும் பயத்திலும் இருந்த சகோதரர்களைப் பற்றிய இறைவன் புகழ்பாடிய பாசுரங்கள் அவன் இளம் ஆன்மாவைக் கவர்ந்தன. அவை தெளிவின்றியும் தொடர்ந்தும் அவனைப் பிடித்து அமுக்கிய பல கேள்விகளுக்கு விடை கூறுவன போல இருந்தன. அவனுடைய வாடிப் போன ஆன்மாவுக்குள் அப்பாசுரங்கள் நீரை வார்த்தது போன்ற ஆறுதலை அவன் உணர்ந்தான்”  என்று அவனது விட்டு விடுதலையாகும் உணர்வு புலப்படுத்தப்படுகிறது.

 மேலும் முதன் முறையாக ஒரு பெண்ணும் மதம் மாறுகிறாள். அவள் பெயர் நேகா. அவள் நிறை மாத கர்ப்பிணி. “நேகா முன்பு நாலு முறை கர்ப்பிணியாக இருந்து பிள்ளை பெற்றவள். ஒவ்வொரு முறையும் இரட்டைப் பிள்ளைகளையே பெற்றாள். உடனடியாக அப்பிள்ளைகளை வீசிவிட்டார்கள். அவளுடைய கணவனும் குடும்பமும் அப்படிப்பட்ட பெண்ணைக் குறை கூறுபவர்களாகவே இருந்தனர். அதனால் அவள் கிறித்தவர்களுடன் சேர ஓடிப் போனபோது அவர்கள் தேவைக்கதிகமாக அலட்டிக் கொள்ளவில்லை. அவள் போனது நல்லது என்றே அவர்கள் நினைத்தனர்.” 

ஆப்பிரிக்க தேசத்தை எங்கோ தொலைதூரத்திலிருக்கும் அந்நிய பிரதேசமாகக் கருத விடாமல் நாம் இது வரை அறிந்திராத நம் தேசத்துப் பழங்குடி மக்கள்  என்றே உணருமளவிற்கு அத்தனை இணக்கமான சித்தரிப்புகள் இந்நாவலில் கூடி வந்திருக்கின்றன. இதனை  “அந்த வாழ்க்கை முறையை அறியாத மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் ஆங்கிலம் அறிந்த உலக வாசகர்களின் தேவையை முன்னிட்டு நிகழ்த்தும் காரியம்”  என்கிறார் சுந்தரராமசாமி. என்றாலும் இதில் ஒன்றும் தவறில்லை என்றே தோன்றுகிறது. அறிமுகப்படுத்தும் பாணி தான் என்ற போதும் நாவலில் எந்த இடத்திலும் தோய்வோ சலிப்போ தென்படுவதேயில்லை. 

“மனிதன் வயிற்றிலோ வேறு அங்கங்களிலோ வீக்கம் ஏற்பட்டுத் துன்பப்பட்டால் அவனை வீட்டில் சாக விட மாட்டார்கள். அவனை தீய காட்டில் கொண்டுபோய் விட்டு அங்கே சாக விடுவார்கள். அந்த நோய் நிலத்துக்குச் சாபக்கேடாகையால் அவன் இறந்தால் நிலத்துள் புதைப்பதில்லை.”

”அந்தக் குழந்தை ஒரு ஒக்பான்ஜி. அதாவது கெட்டப்பிள்ளைகளில் ஒன்று. அது இறந்தவுடன் திரும்பவும் தாயின் கருப்பையில் பிறப்பதற்காக புகுந்து விடும் என்றும் அவன் சொன்னான். ... இறந்த பிள்ளைக்கு இனி துக்கங் கொண்டாடக் கூடாது என்று மந்திரவாதி கட்டளையிட்டான். ஒரு கூரிய கத்தியை எடுத்து பிள்ளையை கண்ட துண்டமாக வெட்டினான். பின் அதை கணுக்காலில் பிடித்து தனக்குப் பின்னால் நிலத்தில் போட்டு இழுத்துக் கொண்டு தீய காட்டுக்கு புதைப்பதற்கு எடுத்துச் சென்றான். அப்படிச் செய்த பிறகு அது திரும்பவும் வருவதாக இருந்தால் ஒன்றுக்கு இரண்டு தரம் யோசிக்கும். “

“சில வேளைகளில் மூதாதையரின் ஆவிகள் - எக்வுக்வு - சில கீழ் லோகத்திலிருந்து உடம்பு முழுவதும் நாரினால் செய்யப்பட்ட உருவத்தில் தோன்றி நடுங்கிய வேறோர் உலகக் குரலில் பேசும். அவற்றுள் சில மிக ஊறு செய்யக் கூடியவை.  எல்லாவற்றிலும் பார்க்க பீதி அடையச் செய்வது இன்னும் வரவில்லை. அது எப்போதும் தனியத்தான் வரும். சவப்பெட்டி போன்றது அதன் உருவம். அது போகிற இடமெல்லாம் அழுகிய நாற்றம் வரும். ஈக்களும் அதனைத் தொடரும். உயிர் வாழ்பவர்களின் உலகம் மூதாதையர்களின் உலகத்துக்கு அதிக தூரத்தில் இல்லை. அங்கிருந்து இங்கு வருவதும் போவதும் சர்வ சாதாரணம்.”

என்பதாக அம்மக்களின் நம்பிக்கைகள் உள்ளபடியே விவரிக்கப்பட்டுள்ளன. நாவலை வாசித்து முடிக்கையில் அவர்களது உணவு, வாழ்முறை, பழக்க வழக்கங்கள், திருமணங்கள், ஊர் விழாக்கள், போட்டிகள், போர்கள், கடவுள்கள், வழிபாடுகள், நீதிபரிபாலனம், சமூகத்தில் பெண்களின் இடம் ஆகியவை குறித்த பொதுவான மற்றும் தெளிவான சித்திரம் ஒன்று வாசிப்பவரின் மனதில் உருவாக்கப்படுகிறது. இவற்றை அறியாமை, மூடநம்பிக்கைகள் என்றெல்லாம் வாசகரின் அறிவு பகுத்துப் பார்ப்பதாயிருந்தாலும் ஒரு வகையில் அவை அம்மக்களின் தனித்துவம் மிக்க கலாச்சாரமாக விளங்குவதையும், தங்கள் கலாச்சாரத்தின் வேர்கள் ஒவ்வொன்றாய் துண்டிக்கப்படும் போது அம்மக்கள் சுவாசத்திற்கு ஏங்கும் மூச்சுக் குழல்களாகத் தவிப்பதையும் உணர முடிகிறது. 

முதன் முதலாய் ஆங்கிலேயர்கள் உமோஃபியாவிற்குள் கிறித்துவ தேவாலயம் அமைக்க இடம் கேட்கும் போது அவர்களுக்கு ஒரு துண்டு நிலம் வழங்க அம்மக்கள் முடிவு செய்கிறார்கள். அந்நிலம் அவர்கள் தீய காடு என்று ஒதுக்கி வைத்திருக்கும் பகுதியில் இருக்கிறது. தீய ஆவிகள் அலையும் அப்பகுதியில் இடம் கொடுத்தால் புதிய சமயத்தார் தானாகவே அழிந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையை உடைத்து தேவாலயம் அவ்விடத்தில் நிமிர்ந்து நிற்கிறது. அவர்கள் அறியும் முன்னரே அவர்தம்   காலடிகளுக்குக் கீழாவே வேகமாக வேர் விட்டுப் பரவுகிறது.  கிராமத்து மக்களில் பலர் கிறித்துவத்தைத் தழுவிய பின்பாக அவ்வூரில் நடக்கும் கூட்டமொன்றில்..

“இன்று காலையில் இங்கு இருக்கும் நாம் மட்டுந்தான் எங்கள் தந்தையர்களுக்கு உண்மையானவர்கள். எங்கள் சகோதரர்கள் எங்களைக் கைவிட்டு விட்டார்கள். அவர்களின் தந்தையர் நாட்டை மாசுபடுத்தும் அந்நியர்களுடன் சேர்ந்து விட்டார்கள். நாங்கள் அந்நியர்களுடன் சண்டை செய்தால் எங்கள் சகோதரர்களையும் நாங்கள் அடிக்க வேண்டும். சிலவேளை எங்கள் குலத்தவர்களின் இரத்தத்தையும் சிந்த வேண்டி வரும். ஆனால் நாங்கள் அதைச் செய்யத்தான் வேண்டும். எங்கள் தந்தையர் அப்படியான காரியத்தைக் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள். அவர்கள் ஒரு காலமுமே அவர்களுடைய சகோதரர்களைக் கொல்லவில்லை. ஆனால் ஒரு வெள்ளையனும் அவர்களிடம் வரவே இல்லை. எனேக்கா பறவையைப் பார்த்து நீ ஏன் எந்த நேரமும் பறந்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டபோது அது சொன்னது: மனிதர்கள் குறி தவறாது சுடப் பழகி விட்டார்கள். அதனால் நான் ஒரு கிளையிலும் தங்காமல் இருக்கப் பழகிவிட்டேன் என்று. நாங்கள் இந்தத் தீமையை வேருடன் களைய வேண்டும். தீமையுடன் எங்கள் சகோதரர்கள் வந்தால் அவர்களையும்  நாம் வேருடன் அழிக்க வேண்டும். அதை நாம் இப்போதே செய்ய வேண்டும். கணுக்கால் அளவு மட்டும் தண்ணீர் இருக்கும் போதே இத்தண்ணீரை இறைத்துச் சுத்தம் செய்திட வேண்டும்”

என்று பேசுகிறார்கள்.  குலத்தைச் சேர்ந்தவனை அறியாமல் கொன்ற குற்றத்திற்காக ஒருவனை 7 வருடங்கள் ஊரை விட்டு விலக்கி வைக்கும் மக்கள், இறுதியில் பேசும் இச்சொற்கள் அவர்கள் மனதிலிருக்கும் வலியையும் கசப்பையும் வாசிப்பவருக்குக் கடத்துகின்றன. 

இந்நாவலில் நான் மிகவும் ரசித்த மற்றொரு விஷயம் நாவல் முழுவதும் விரவியிருக்கும் சின்னச் சின்ன நாடோடிக் கதைகள். கதை சொல்லல் ஆப்பிரிக்க மக்களின் பாரம்பரியத்தோடு இணைந்தது. ஆப்பிரிக்க இலக்கியம் ஏராளமான வாய்மொழி இலக்கியங்களைக் கொண்டதாக இருக்கிறது. இந்நாவலிலும் கதையோட்டத்தின் போக்கை கொஞ்சமும் குலைக்காமல்  அலாதியான நாடோடிக் கதைகள் இடம் பெறுகின்றன. ஆமையின் ஓடு ஏன் வழுவழுப்பாக இல்லை?,  வானத்திற்கும் பூமிக்கும் சண்டை வந்து பஞ்சம் வந்தபோது மக்கள் யாரைத் தூது அனுப்பினார்கள்? கொசு ஏன் காதருகே வந்து ரீங்கரித்தபடியே இருக்கிறது? ஓணான் ஏன் தன் தாயைக் கொன்றது? இடியையும் மழையும் மக்கள் என்னவாகப் புரிந்து கொள்கின்றனர்.. என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் எளிமையும் சுவாரஸியமும் கலந்த குட்டிக் கதைகள் பதில்களாய் அமைந்திருக்கின்றன.  எனக்கும் கூட, சிறு வயதில் இடி இடிக்கும் போது காதைப் பொத்திக் கொண்டு “அர்ஜுனா அர்ஜுனா” என்று கத்தியதையும், வீட்டிற்குள் குளவி நுழைந்து சுற்றிச் சுற்றிப் பறந்த போது “உம்பிள்ள கல்யாணத்துக்கு வந்துடறேன்.. போ..” என்று சொல்லிக் கொண்டே இருந்ததையும் இனிமையாக  நினைவூட்டிய கதைகள். 

அணிந்துரையில், ”சிதைவுகளைப் படிக்கும் தமிழ் வாசகன் தமிழ் வாழ்வுடனும் இந்திய வாழ்வுடனும் அது கொண்டிருக்கும் ஒற்றுமையை உணராமல் இருக்க முடியாது. அவர்களுடைய நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும், சம்பிரதாயங்களும் நம் வாழ்வோடு நெருங்கி வருகின்றன. மேற்கத்திய வாழ்வின் அந்நியத் தன்மையை மொழிபெயர்ப்புகளில் கண்டு சலித்தவர்களுக்கு இத்தமிழாக்கம் நெருக்கமான அனுபவத்தைத் தரக் கூடியதாக இருக்கும்”  என்கிறார் சுந்தர ராமசாமி. இந்நூலை வாசித்த தமிழ் வாசகி என்ற முறையில் இக்கருத்தை அழுத்தமாக வழிமொழிகிறேன்.  ஆச்சிபிக்கு நன்றி கலந்த அஞ்சலிகள்.

 - இம்மாத ‘பண்புடன்’ இணைய இதழில் வெளியான கட்டுரை

1 comment:

Muruganandan M.K. said...

படித்திருக்கிறேன்
அற்புதமான நாவல்
விரிவான விளக்கம் அருமை
வாழ்த்துகிறேன்.