உன் மனதைப் போன்றே கதவுகளும் சன்னல்களும் இறுகச் சார்த்தப்பட்ட அறையொன்றின் வெளிச்சங்களற்ற பிரதேசத்தில் குறுகி அமர்ந்தபடி, நாற்புறச் சுவர்களிலிருந்தும் அடர்வு மிகுந்த திரவமெனப் பெருகி வழியும் கனத்த மெளனத்தை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன். விளக்கின் மிகமெலிந்ததும் பலகீனதுமான ஒளி இருளில் கசிந்து கசிந்து என்னைத் தொட்டு விட முயல்கிறது. மதுவில் மிதக்கும் பனித்துண்டமாய் கனத்து மிதக்கிறது மனம். வெளியில் பெரும் நிசப்தம்.. உள்ளில் பேரிரைச்சல். இதோ.. தூக்கம் தொலைந்த இந்த இரவுகளையும் ஓயாமல் அலறிக் கொண்டிருக்கும் நியாபகங்களையும் என்னதான் செய்வது? இந்த நினைவுகளின் கூக்குரல்களை என்னால் சகிக்க முடிவதில்லை. இதற்காகத் தான்... இது நிகழ்ந்துவிடக் கூடாதென்று தான் எப்போதும் எல்லா நிமிஷங்களையும் பரபரப்பானதாய் ஆக்கிக் கொள்ள விழைகிறேன். கேட்பவர்க்கெல்லாம் என் நேரங்களை பங்கிட்டுக் கொடுத்துவிட எப்போதும் சித்தமாயிருக்கிறேன். பார்.. இப்போது.. இந்த நினைவுகள்...உறக்கமின்றி எஞ்சியிருக்கும் இந்த நேரங்கள்.. எத்தனை துயரமிக்கதாய் இருக்கின்றன. மனம், என்றோ புதைத்தவற்றையெல்லாம் மீண்டும் தோண்டி எடுத்து மடியில் வைத்து அழுது கொண்டிருக்கிறது.
எதனால் இப்படி நான் அலைபாய்கிறேனெனத் தெரியவில்லை. ஒருவேளை என்றைக்குமில்லாமல் இன்றுன் நினைவுகள் என்னைக் கொன்று கூறு போடுவதனாலிருக்கலாம். என்னை இல்லாமலாக்கும் அவற்றின் முயற்சி மிகச்சரியாய் நிறைவேறிக் கொண்டிருப்பதனாலிருக்கலாம். போகட்டும். எங்கிருக்கிறாய் நீ? அருகிலா? தொலைவிலா? தொலைவெனில் எத்தனை தூரம்? இந்தக் கணங்களில் என்ன செய்து கொண்டிருப்பாய்? இதேபோல இருளும் குளிரும் நிறைந்த அறையில் அமைதியாய் தூங்கிக் கொண்டு அல்லது ஏதோவோர் புத்தகத்தின் எத்தனையாவது பக்கத்துடனோ தர்க்கித்துக் கொண்டு, அல்லது சிந்திப்புகளற்ற பெரும்மெளனம் வாய்க்கும் தருணங்கள் குறித்து பெருமையாய் சிந்தித்துக் கொண்டிருக்கலாம். எதுவானால் என்ன? நீ வாழ்கிறாய்.. வாழும் கலையை செவ்வனே அறிந்து வைத்திருப்பதோடு சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் அதை மற்றவர்க்கு உபதேசிக்கவும் செய்கிறாய். நல்ல விஷயம் தான் இது. உன்னைப் பற்றி எதுவும் தெரியாமல், தெரிந்து கொள்ள விரும்பாமல், உன்னிலிருந்து விலகி, ஆனால் உன்னுடனே நாட்களைக் கடத்திக் கொண்டிருப்பது எனக்கு சுகமானதும் சிக்கல்களற்றதுமாயிருக்கிறது.
காற்றில் வைத்த கற்பூரமாய் நாட்கள் கரைந்து கொண்டிருக்கின்றன. இரவும் பகலுமாய் மொத்தம் இரண்டு வருடங்கள் ஏழு மாதங்கள் மற்றும் இருபத்தியொரு நாட்கள் நான் உன்னுடன் இருந்திருக்கிறேன் என்பது எப்போது நினைத்தாலும் வியப்பூட்டுவதாகவே இருக்கிறது எனக்கு. உன்னை நெருங்குவது அத்தனை எளிதாயிருக்கவில்லை. அநேக சிக்கல்கள் நிறைந்த, ஆனாலும் கிடைத்தற்கரிய அற்புத நேசமாய் நீ உன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தாயில்லையா? மேலும் அன்பைப் புரிவிக்கும் வழிகளிலொன்றாய் வார்த்தைகளால் என்னை துன்புறுத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தாய்.
உன்னை நேசிப்பது, உன்னிடமிருந்து அன்பைப் பெறுவது, "எல்லையற்ற, எதிர்பார்ப்புகளற்ற மாற்றங்களற்ற தூய அன்பொன்று எங்கேனும் எவ்விதமேனும் எத்தகைய உருவிலேனும் நம் வழியில் குறுக்கிடலாம், அனுமதியின்றி நம்மைப் பின்தொடர்ந்து வரலாமென" உனக்குப் புரிவிப்பது ஆகிய காரியங்கள் உளி கொண்டு மலைஉடைப்பது போன்ற சிரமத்தைத் தந்துகொண்டிருந்தன அப்போது. உன்னுடன் இருந்த நாட்களனைத்திலும் சிறைக்கம்பிகளின் பின்னாலிருந்தபடி, தான் நிரபராதியென நிரூபிக்கப் போராடும் கைதியின் மனநிலையே எனக்கு நீடித்திருந்ததாய் நினைவு.
கொஞ்சம் இரு... எப்போதும் படபடத்தபடி தன்னிருப்பை ஓயாமல் உணர்த்திக் கொண்டிருக்கும் இந்த நாட்காட்டி இப்போதும் சுவரை உரசி சப்தித்தபடி அங்குமிங்குமாய் அலைவுறுகிறது. பாரேன் இதை! மீண்டும் மீண்டும் ஒன்றே போல் அதே தேதிகள், அதே கிழமைகள், அதே மாதங்கள்... ஆனால் நாட்கள் மட்டும் வெவ்வேறாய். பாழாய்ப் போன இந்த தேதிகளில் என்ன இருக்கிறது? எப்போதும் நகர்ந்தபடியிருக்கும் நதி நீரைப் பாத்திரங்களில் முகந்து கொள்வது போல நினைவுகள் ஒவ்வொன்றையும் இந்த தேதிகளுக்குள் தேக்கிக் கொள்கிறோமா? அல்லது நம் விருப்புவெறுப்புகள் குறித்த அக்கறையின்றி இது தன்னிச்சையாய் நிகழ்கிறதா? "இந்த நாளில் தானே..." "இதே போலவோர் மதியத்தில் தானே..." என்று கடந்து சென்றவற்றையும், மறக்கத் தீர்மானித்திருந்த அனைத்தையும் மீட்டு வந்து வன்மமாய் கண் முன்னால் நிறுத்துவதில் இந்த தேதிகளுக்கு என்ன மகிழ்ச்சியோ தெரியவில்லை.
இதோ.. இதே போன்ற ஒரு பதின்மூன்றாம் தேதியின் முன்னிரவில் தான் நீ முதன்முதலாய் என் வீட்டிற்கு வந்தாய். அவ்வப்போது மிதமாய் புன்னகைத்து, நேர்மையாய் கண்கள் பார்த்து, அதிராத குரலில் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தாய். என்றாலும் நோயுணர்த்தும் கண்களைப் போல வார்த்தைகள் அனைத்தும் உன் வலியுணர்த்தின. அப்போதென்றில்லை.. நீயில்லாமல் கடந்து போகும் இந்த நாட்களிலும் கூட உன்னை நினைக்கையில், காயம் பட்ட இடம் காட்டி உதடு பிதுக்கியழும் குழந்தையைப் போலத்தான் உன் பிம்பம் உருக்கொள்கிறது மனதில்.
மீண்டும் வெகு நாட்கள் கழித்து இதே போன்ற ஓர் பதின்மூன்றாம் தேதியில் என்னைப் பிரிந்து போனாய். எழுதிக் கொண்டிருக்கையில் மை தீர்ந்தது போல திடுமென முற்றுப் பெறாமலேயே முடிந்து போனது நம் நட்பு. மிகச்சிறிய வட்டம் போல, தொடங்கிய தினத்திலேயே மீண்டு வந்து முடித்துக் கொண்ட அதன் நேர்த்தியை என்னவென்று சொல்ல? அன்றைய தினம் கைதேர்ந்த ஓர் விமர்சகரைப் போலவும் அனுபவமிக்க ஆசிரியரைப் போலவும் நீ என் குறைகளை வரிசையாய் பட்டியலிட்டு அறிவுரைகளை அள்ளித் தெளித்து மிகுந்த கடமையுணர்வோடு உரை நிகழ்த்திக் கொண்டிருந்தாய். குற்றவுணர்வு மேலிடாமலிருக்க தக்க சமாதானங்களை துணைக்கழைத்துக் கொண்டாய். கண்கள் பொங்க, பேசவியலாத துயரத்தில் நான் துக்கித்துக் கொண்டிருந்தது குறித்த அக்கறைகள் எதுவும் உனக்கிருந்ததாய் தெரியவில்லை. என்றாலும் அத்தனை வேதனையிலும் உன் லாவகமான பேச்சினையும் வசீகரிக்கும் குரலையும் எப்போதும்போல் என்னால் ரசிக்க முடிந்தது இப்போதும் கூட வியப்பாயிருக்கிறது!
ப்ச்.. போதும். என்ன சொல்ல.. எதை நிரூபிக்க இதை வளர்த்திக் கொண்டு போகிறேன்? நீயிதைப் படிப்பதற்கான சாத்தியங்கள் ஏதுமில்லையெனத் தெரிந்தும் எதன்பொருட்டு எழுதிக் கொண்டிருக்கிறேன்? தெரியவில்லை தான். என்றாலும் உன்னையும் உன் முகவரியையும் தொலைத்துவிட்ட பின்பாய், என்னைப் பற்றியும் என் போன்ற பெண்களைப் பற்றியுமான உன் தீர்மானங்கள் அனைத்தையும் முறியடிப்பதற்கான என் நோக்கம் முற்றிலும் தோல்வியில் முடிந்த பின்பாய், எப்போதேனும் உனக்கென சுரக்கும் இந்தச் சொற்களை கடிதங்களிலன்றி நான் வேறெங்கு சேமிக்கமுடியும்? முகவரியற்ற இந்த கடிதங்கள் என் நேசத்தைப் போன்றே எங்கேனும் காற்றில் அலைந்து கொண்டிருக்கட்டுமே... என்ன நட்டமாகிவிடப்போகிறது? "அன்பு இல்லாமலிருப்பது என் நிம்மதியைக் கூட்டத்தான் செய்கிறது" என்று சொன்ன கவிதைக்காரியொருத்தியை இப்போது நானும் நினைவூட்டிக் கொள்கிறேன்.
இந்த கணம் உன்னிடம் பகிர்வதற்கு ஏதுமில்லையெனினும்.. உன்னுடனிருந்த நாட்களில், பாதுகாப்பாய் ஒளிந்துகொள்ளத் தூண்டும் உன் உலகம் என்னை ஏற்க மறுத்து வெளித்துப்பத் தொடங்கிய கணங்களில், உன்னிடம் சொல்ல நினைத்து சொல்லத் தவறியன சிலவுண்டு.
என்னருமை நண்ப.. எல்லாவற்றையும் பொதுப்படுத்தி ரசிப்பதில் மகிழ்ச்சியைப் போன்றே சில அபாயங்களும் இருக்கக் கூடும். உண்மைகளை உண்மையென உணரும் தருணங்களில் பெரும்பாலும் அவை நம்மைக் கடந்து போய்விட்டிருக்கின்றன.
25 comments:
பிரிவும்,பிரிவின் நிமித்தமுமான கணங்களின் வெளிப்பாடுகளும் பெரும்பாலும் அருமையானவை,இக்கடிதம் உள்பட !
படம் ரொம்ப நல்லா இருக்கு.
//நியாபங்களையும//
ஞாபகங்களையும்
//இந்த கணம்//
இந்தக் கணம்?
கடிதம்/கண்ணீர் சரியான முகவரியை அடைய வாழ்த்துக்கள்...
// எல்லாவற்றையும் பொதுப்படுத்தி ரசிப்பதில் மகிழ்ச்சியைப் போன்றே சில அபாயங்களும் இருக்கக் கூடும். உண்மைகளை உண்மையென உணரும் தருணங்களில் பெரும்பாலும் அவை நம்மைக் கடந்து போய்விட்டிருக்கின்றன.//
ரொம்ப அருமையாய் இருக்கு...
கதை மிகவும் நன்று..அதிலும் அந்தக் கடைசி உண்மை பற்றிய வரிகள்..அருமை
ம்ம்ம் என்ன சொல்றதுன்னு தெரியல
:( இந்த ஸ்மைலியை தவிர
மொழிநடை அற்புதமாயிருக்கிறது. உண்மையிலேயே நீங்கள்தான் எழுதினீர்கள் என்பதை நம்புவது கடினமாயிருக்கிறது.
enna solla! touches the heart.
//என்னருமை நண்ப.. எல்லாவற்றையும் பொதுப்படுத்தி ரசிப்பதில் மகிழ்ச்சியைப் போன்றே சில அபாயங்களும் இருக்கக் கூடும். உண்மைகளை உண்மையென உணரும் தருணங்களில் பெரும்பாலும் அவை நம்மைக் கடந்து போய்விட்டிருக்கின்றன. //
azahamaana sindhanaigal...
முகவரி இல்லாத காரணத்தால்தான் Post போட இத்தனை நாள் ஆச்சோ?
இடுக்கண் வருங்காள் நகுக.
அறுந்த கயிற்றின் இடையில் முறிந்த உறவை இணைக்கும் முயற்சியாய் மயிரிழைத் தொடர்பு. இதுவும் அற்றுப்போகும் சில வினாடிகளில்.
தங்கள் கவிதை படித்த பாதிப்பில் பதிவிலிருந்த புகைப்படம் பார்த்து எழுதிய கவிதை.
//
நந்து f/o நிலா said...
ம்ம்ம் என்ன சொல்றதுன்னு தெரியல
:( இந்த ஸ்மைலியை தவிர
//
மொதல்ல பதிவ படிங்க அப்பதான் எதாவது சொல்ல முடியும்!!
நல்ல நடை. இனிமையான வாசிப்பனுபவத்தைத் தருகிறது.
வாழ்த்துகள் காயத்ரி.
ஒரு நல்ல கதையோ, கவிதையோ படிப்பவர்களையும் அதே போல் எழுதத்தூண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.. அந்த ஆற்றல் உங்கள் எழுத்துக்கு உண்டு...
//உன்னுடன் இருந்த நாட்களனைத்திலும் சிறைக்கம்பிகளின் பின்னாலிருந்தபடி, தான் நிரபராதியென நிரூபிக்கப் போராடும் கைதியின் மனநிலையே எனக்கு நீடித்திருந்ததாய் நினைவு//
நிதர்சன உண்மை..
koncham porungo tamilil aaruthalaka anuppukiren aanal vasiththa udane eathavathu elutthivida vendum enkira unarvaikodukkira pathivukal unkaludayavai enpathanal...
"intha sogam yar koduththa sabam thodarum intha sogaththin mudivethamma"
//அதே தேதிகள், அதே கிழமைகள், அதே மாதங்கள்... ஆனால் நாட்கள் மட்டும் வெவ்வேறாய். பாழாய்ப் போன இந்த தேதிகளில் என்ன இருக்கிறது? எப்போதும் நகர்ந்தபடியிருக்கும் நதி நீரைப் பாத்திரங்களில் முகந்து கொள்வது போல நினைவுகள் ஒவ்வொன்றையும் இந்த தேதிகளுக்குள் தேக்கிக் கொள்கிறோமா? அல்லது நம் விருப்புவெறுப்புகள் குறித்த அக்கறையின்றி இது தன்னிச்சையாய் நிகழ்கிறதா?//
அற்புதம்....இதைத்தவிர நல்ல வார்த்தை கண்டுபிடித்தவுடன்,
அதையும் சொல்லலாம்.
நாம் எண்ணச் சேமிப்பு கிட்டங்கியாகி விட்ட காலகட்டத்தில், சில வெளிப்பாடுகளின் உண்மையின் வெம்மை கொஞ்சம் அதிர வைப்பதும் உண்மை..
பின்னூட்டங்களை மவுனமாக வாங்கிக்கொள்ளும் அமைதியும்...!
நன்று..வாழ்த்துக்கள்!
(நேரமிருந்தா நம்ம வீட்டுக்கும் வந்துட்டு போங்க....ரொம்ப எதிர்பார்ப்பு இல்லாம)
:-)
"விளக்கின் மிகமெலிந்ததும் பலகீனதுமான ஒளி இருளில் கசிந்து கசிந்து என்னைத் தொட்டு விட முயல்கிறது."
"என்றோ புதைத்தவற்றையெல்லாம் மீண்டும் தோண்டி எடுத்து மடியில் வைத்து அழுது கொண்டிருக்கிறது."
"இந்த நாட்காட்டி இப்போதும் சுவரை உரசி சப்தித்தபடி அங்குமிங்குமாய் அலைவுறுகிறது. பாரேன் இதை! மீண்டும் மீண்டும் ஒன்றே போல் அதே தேதிகள், அதே கிழமைகள்"
வார்த்தைகளில் விவரிக்கமுடியா வரிகள்
தனிமையின் நினைவுகளை அருமையாக
சொல்லியுள்ளிர்கள்.அற்புதம்.
ராமகிருஷ்ணன் சாயலைக் காணுகிறேன்.
//மதுவில் மிதக்கும் பனித்துண்டமாய் கனத்து மிதக்கிறது மனம்.//
//எப்போதும் நகர்ந்தபடியிருக்கும் நதி நீரைப் பாத்திரங்களில் முகந்து கொள்வது போல நினைவுகள் ஒவ்வொன்றையும் இந்த தேதிகளுக்குள் தேக்கிக் கொள்கிறோமா?//
//உண்மைகளை உண்மையென உணரும் தருணங்களில் பெரும்பாலும் அவை நம்மைக் கடந்து போய்விட்டிருக்கின்றன.//
மிக மிக அருமை... சாதாரண வார்த்தை.. எனக்கு வேறு வார்த்தைகள் தெரியவில்லை.
உங்கள் எழுத்துக்களின் ஆழங்களில் முழுகி விட்டேன்.
வாழ்த்துக்கள் பல.
Brilliant,splendid,fantabulous,vivid,magnificent.This write up is worth all these aforesaid adjectives :).Good on You & keep it up.
பிரிவின் துயரத்தை மிகவும் தெளிவாக அருமையான எழுத்து நடையில் விளக்கியுள்ளீர்கள்...
வாழ்த்துக்கள்... :-)
உண்மையிலேயே ஏற்பட்ட பிரிவினால் எழுதப்பட்ட கடிதமென்றால் கல்நெஞ்சக்காரனும் கரைந்துவிடுவான். அவ்வாறு கரையவில்லையென்றால் அவன் ஒரு பெரிய பொக்கிஷத்தை இழந்துவிட்டான் என்றுதான் அர்த்தம்...
whenever i feel like writing something i m reading your blog,
pottu thaakreenga!
தோழி.. நல்லாயிருக்கு நடை! உணர்வுகள்?! யோசிக்கிறேன்! அதுசரி.. பின்னூட்டத்திற்கு உன்னூட்டம் கொஞ்சமாவது இருக்கக்கூடாதா!? நிறையப் பிரசவிக்க வாழ்த்துக்கள்.
இன்(று)அல்கல் ஈர்ம்புடையுள் ஈர்ங்கோதை தோள்துணையா
நன்கு வதிந்தனை நன்னெஞ்சே! - நாளைநாம்
குன்றதர் அத்தம் இறந்து தமியமாய்
என்கொலே சேக்கும் இடம்.
என்றோ படித்த வரிகள் மீண்டும் ஞாபகம் வந்தது... எனவே மீண்டும் வந்து இந்த பின்னூட்டம்!
தோழி, என் வழக்கில் சொல்வதென்றால்... உன் நடை “பின்னி பெடலெடுக்குது”!
Post a Comment