Friday, July 27, 2007

* நெஞ்சு பொறுக்குதில்லையே...


செய்தி: ஈரோடு அருகே உள்ள பெருந்துறையில் பெற்றதாயை பராமரிக்காமல் குப்பைமேட்டில் வீசிய மகள் கைது செய்யப்பட்டார்.


"பெருந்துறை ஆர்.எஸ்.ரோட்டில் இருக்கிறது புங்கம்பாடி என்ற ஏரியா. கடந்த வாரம் இந்த பகுதியில் உள்ள குப்பைமேட்டில் குப்பையைக் கொட்டப் போனவர்கள் ஒரு முனகல் சப்தத்தைக் கேட்டிருக்கிறார்கள். முனகல் சப்தம் கேட்ட இடத்திற்கு அருகில் சென்று பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள். அழுக்குத்துணியால் சுருட்டி வீசப்பட்டது போல் வயதான மூதாட்டி ஒருவர் அங்கே சுருண்டு கிடந்திருக்கிறார். உடனே அவரை மீட்டு தண்ணீரும் பாலும் கொடுத்த ஈரமனம் கொண்ட அப்பகுதி மக்கள் 2 நாட்கள் தங்கள் அரவணைப்பில் வைத்திருந்து பிறகு மாவட்ட திட்ட அலுவலருக்கு தகவல் தெரிவிக்க, அவர் அந்த பாட்டியை ஈரோடு கே.கே.நகரில் இயங்கும் கருணை இல்லத்தில் ஒப்படைத்திருக்கிறார். எண்பது வயது மூதாட்டியான அவர் உயிருக்கு போராடி கடந்த 22ம் தேதி இறந்து போனார்.."


கொஞ்சம் ஆறிப்போன செய்திதான் இது.. ஆனால் கேள்விப்பட்டதிலிருந்து மனசு ஆறவில்லை எனக்கு. எங்கள் ஊரில் நடந்தது என்று சொல்லிக்கொள்கையில் கனமாய் அவமான உணர்வு முகத்தில் படிவதை தவிர்க்க முடியவில்லை.

எப்படி முடிகிறது இப்படியெல்லாம் நடந்து கொள்ள? என்னதான் வறுமை என்றாலும் அம்மாவை குப்பையில் வீசிவிடத் தோன்றுமா? பாசம் என்பதென்ன உபயோகம் முடிந்ததும் தூக்கியெறியப்படும் அற்ப விஷயமா? பசியென்றால் பறந்துபோகும் பத்தில் அடிப்படை மனிதம்தான் முதலில் இருக்கிறதா? என்னவோ.. தாங்கிக் கொள்ளவே முடியவில்லை என்னால்.


தெருவோரத்திலும் சேரிகளிலும் வதவதவென திரியும் அழுக்குப்படிந்த பிள்ளைகளைப் பார்க்கும்போது குழந்தை பெறுவதும் வளர்ப்பதும் இத்தனை சுலபமா என்று தோன்றுவதுண்டு. அதே நேரம் என் சித்தி, அண்ணி, போன்றவர்களுக்கு குழந்தை பிறந்தபோது பிள்ளை வளர்ப்பு அப்படியொன்றும் சாதாரண விஷயமல்ல என்றும் தோன்றியிருக்கிறது.


முன்பெல்லாம் சித்தி வீட்டிற்கு போகையில் 7 மாத குழந்தையாய் இருந்த என் தங்கை அபி எந்நேரமும் ரீங்காரமாய் அழுது கொண்டிருப்பாள்..


"அடடா! அழ ஆரம்பிச்சிட்டா என்னவாம் சித்தி இவளுக்கு?"

"ஒன்னுமில்ல.. பாப்பாக்கு பசி வந்திடுச்சு"


பால் குடித்து 10 நிமிஷம் ஆகியிருக்காது.. மறுபடி 'ங்ங்ங்ங்கேஏஏ' என்று ஆரம்பிப்பாள்!


"அடிங்க.. வயிறு நம்பிடுச்சுல்ல.. இப்ப என்னாடி உனக்கு?"

"தூக்கம் வந்திடுச்சு.. அதான் அழறா.."


அவளுக்கு தெரிந்ததென்னவோ எந்நேரமும் 'ங்ங்ங்ங்கேஏஏ' தான். அதிலிருந்து அது பசியா, தூக்கமா, அஜீரணமா, காது வலியா, கொசுவோ எறும்போ கடித்ததா என்று எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்று இன்னமும் புரிந்ததில்லை எனக்கு.

பிள்ளைகளுக்கு எத்தனை வயதானாலும் தாய்ப்பாசத்தின் அடர்த்தி மட்டும் கூடிக்கொண்டே போகிறதே தவிர குறைந்து விடுவதில்லை. திருவாசகத்தில் ஒரு பாடல் வரும்...


"பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து

பாவியேனின் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி.."


என சிவபெருமானை நினைந்து உருகிக் கொண்டிருப்பார் மாணிக்கவாசகர். பெரும்பாலும் திருவாசகத்தில் வரிக்கு வரி நின்று நிதானித்து நகரும் மனதிற்கு இதைப் படிக்கையில் 'அய்யோ' வென அசதி வரும். கடவுளுக்கே உவமை சொல்ல உதவுவது 'பால் நினைந்தூட்டும் தாயன்பா?' என்ற பிரமிப்பு வரும். எதுவிலோ எப்படியோ கடவுள் என்ற உணர்வை அல்லது மறைக்கப்பட்ட பிரபஞ்ச உண்மைகளை உணர்ந்து கொண்டு நெக்குருகி நிற்கும் அவருக்கு அது எப்படியிருக்கிறது என்று சொல்ல விழைகையில் தாயன்பு தான் நினைவுக்கு வந்தது போல. அப்படிப்பட்ட அன்பை எப்படி குப்பையில் வீச?


என் அண்ணிகள், பக்கத்து வீட்டு அக்காக்கள் என எல்லாருமே ஏதோவொரு தருணத்தில்.. " என் அம்மாவையெல்லாம் என்ன பேச்சு பேசியிருக்கேன்.. பெத்து வளர்த்தா தான் தெரியுது கஷ்டம்" என்று உணர்வுபூர்வமாய் சொல்வதை கேட்டிருக்கிறேன். எனக்கென்னவோ இது போன்ற பிரச்சினைகளுக்கும் வளர்ப்பு முறைதான் காரணம் என்று தோன்றுகிறது. உண்மையில் குழந்தையை கஷ்டப்பட்டு வளர்ப்பதை விடவும் பெற்றவர்களின் கஷ்டங்களை புரிய வைத்து வளர்ப்பது தான் அவசியமாயிருக்கிறது.


அம்மாவிடம் இது பற்றி சொல்லி ஆதங்கப்பட்டபோது... "குழந்தைகள வளர்த்து ஆளாக்கறது பெத்தவங்க கடமை.. பின்னாடி வெச்சு காப்பாத்துவாங்கன்னு எதிர்பார்ப்போட வளர்க்க கூடாது.. அதே நேரம் பெத்தவங்களை பத்திரமா பாத்துக்கறது பிள்ளைங்களோட கடமை.. அதுல இருந்து அவங்க விலக நினைக்க கூடாது... தண்டவாளம் மாதிரி ரெண்டு பக்கத்து உணர்வுகளும் பொருத்தமா இருக்கணும்" என்றார்கள்.


சரிதான்.. எத்தனை வீட்டில் இது நடைமுறையில் இருக்கிறது? உண்மையில் எது பற்றியும் அம்மா அல்லது அப்பாவிடம் மனம் விட்டு பேச முடிவதே சிறந்ததொரு வளர்ப்பு முறை என்பேன் நான். எனக்கு என் அம்மாவிடம் இருக்கும் நட்புணர்வை நாளை என் பிள்ளைக்கு வழங்க முடியுமா என்பதில் சந்தேகம் இருந்துகொண்டேயிருக்கிறது மனதில். இத்தனை புரிதல் இருந்தும் கூட அம்மாவிற்கும் எனக்கும் அடிக்கடி முட்டிக்கொண்டு விடும்! ஒவ்வொருமுறையும் எங்கள் பஞ்சாயத்தை தீர்த்து வைக்கும் எங்கள் நாட்டாமை (என் தம்பி!) இரு தரப்பு வாதங்களையும் கேட்டு தீர விசாரித்த பின்னர் கொஞ்சமும் மாற்றமின்றி..


"தப்பு அம்மா மேலதான்.. நியாயம் (?!) உன் பக்கம் தான் இருக்கு.. ஆனாலும் நீ எதிர்த்து பேசியிருக்க கூடாது.. ஏன்னா அது அம்மா."


என்று ஒருதலைபட்சமாக தான் தீர்ப்பு வழங்குவார். கொசுறாய்..


"அம்மாவிற்கு அட்வைஸ் பண்ண முடியாது.. உனக்கு பண்ணலாம்.. உன் வாதத்திறமையை அம்மாகிட்ட காட்டாதே"


என்று அறிவுரை வேறு கிடைக்கும்.


பாசத்தை கொட்டி வளர்க்கும் பெற்றோர்கள் அதை பிள்ளைகளுக்கு புரிய வைக்க தவறுகிறார்கள் என்றே தோன்றுகிறது. சென்ற வாரம் செய்தியாளராய் இருக்கும் நண்பர் ஒருவரோடு செய்தித்தொகுப்பிற்காக முதியோர் இல்லம் ஒன்றிற்கு போயிருந்தேன். திரும்பி வருகையில் வெகுவாய் கனத்துப் போயிருந்தது மனது.

அன்பும், ஆதரவும், புரிந்து கொண்டற்கான ஆறுதலும் தேவைப்படுகின்ற முதுமைக்காலம், அவர்களுக்கு அங்கே தாங்கிக் கொள்ளவியலாத தனிமையில் கழிகிறது. பேட்டிக்காக தன் அனுபவம் சொல்ல வந்த ஒவ்வொருவரின் கண்களிலும் புறக்கணிப்பின் வேதனை கண்ணீராய் வழிந்ததை தாங்க முடியவில்லை.


"இங்க கொண்டு வந்துவிட்டுட்டு போன பின்னாடி எம்புள்ளஒரு தடவ கூட வந்து பாக்கல கண்ணு"


என்று தோல் சுருங்கி மெலிந்த கரங்களால் என் கை பிடித்து அழுத மூதாட்டி திடீரென,


"ஏம்மா இதெல்லாம் டிவி ல வருமா? இதால எம்புள்ளைக்கு எதும் பிரச்சினை வந்துடாதே?"

என்று பதறியபோது தவிர்க்க முடியாமல் கண்கலங்கியது எனக்கு.


அன்பும் பாசமும் கடை விரித்துக் கொட்டப்பட்டிருக்கிறது அங்கே. கொள்வார் தான் எவருமில்லை. அம்மாவைப் பார்க்கிறேன், அப்பாவைப் பார்க்கிறேன் என்று வந்த ஒரு சிலரைப் பார்க்கையில் தாங்க முடியாத கோபமும், குப்பையில் வீசாமல் இதையாவது செய்கிறார்களே என்ற ஆறுதலும் வந்தது. கூடவே எங்கோ கேட்ட கவிதையும்..


"இது மனிதக்காட்சி சாலை
பால் குடித்த மிருகங்கள்
வந்து பார்த்துவிட்டு போகின்றன"


எத்தனை நிஜம்! குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட அந்த பரிதாபத்திற்குரிய தாய்,


"நாமளே வாய்க்கும் வயித்துக்கும் அல்லாடிட்டு இருக்கோம். இதுல இது வேறயா' ன்னு ஆரம்பத்துல இருந்தே என் பொண்ணு என்னை கரிச்சு கொட்ட ஆரம்பிச்சா.. ஒழுங்கா சாப்பாடு போட மாட்டா...'ஏன் இங்க வந்து எங்க உசிரை வாங்கறே? எங்காவது போய் செத்து தொலைய வேண்டியது தானே'ன்னு அடிக்கடி திட்டுவா" என்று கண்ணீர் விட்டிருக்கிறார் பாவம்.

மருமகள் கூட செய்யத் தயங்கும் காரியத்தைச் செய்ய மகளுக்கு மனம் வந்திருக்கிறது. எண்பது வயது வரை உயிரோடிருந்த அந்த தாயை, மகளின் நிராகரிப்பு இரண்டே நாளில் கொன்றிருக்கிறது. என்ன கொடுமை!


அந்த பெண்ணை கைது செய்ய உத்தரவிட்டிருக்கும் மாவட்ட ஆட்சியர்,
"குடும்ப சூழ்நிலையைக் காரணம் காட்டி பெற்றவர்களுக்கு இதுபோல தவறிழைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்று நினைக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

சரிதான்.. இது போல எத்தனை பாடங்கள்? எப்போதுமே கடமைகளை சட்டத்திற்கு பயந்து செய்வது தானே நம்மவர்களின் வழக்கம். எப்படியோ போகட்டும். எனக்கு சட்டத்திலோ, சாபங்களிலோ, பாவ புண்ணியங்களிலோ இல்லாத நம்பிக்கை நியூட்டனின் 3வது விதியின் மேல் இருக்கிறது.
"For every action, there is an equal and opposite reaction."குப்பையில் வீசப்பட்ட சின்னம்மாள்

செய்தி மற்றும் புகைப்பட ஆதாரம்: ஜூலை 29,2007 ஜூனியர் விகடன்.

15 comments:

nagoreismail said...

நான் குழந்தையாய் இருந்த போது நான் யாரென்று எனக்கு தெரியாது, என் அம்மா தான் 'இது என் பிள்ளை' என்று என்னை ஊருக்கு அடையாளம் காட்டினார்கள். ஆனால் இப்பொழுது யாராவது 'நீ யார்?' என்று கேட்டால், 'நான் யார் என்று கேட்ட முதல் ஆள் நீங்கள் தான், இங்கே(?) வந்து கேளுங்கள் நான் யாரென்று தெரியும்' என்கிறேன். 'பசிக்கிறது' என்று சொல்ல தெரியாது, அழுதேன், அப்படியே விட்டிருந்தால் அழுது மடிந்திருப்பேன்.. ஆனால் என் அம்மா தான் 'என் பிள்ளைக்கு பசிக்கிறது' என்று தன் பசி பொருட்படுத்தாகு எனக்கு தாயமுது ஊட்டினார்கள். ஆனால் இப்பொழுது எல்லாம் பசித்தால் நான் நல்ல உணவகம் தேடி புகுந்து வக்கணையாக கேட்டு வாங்கி வயிறு தொண்டை வாய் என எல்லாம் நிறைய சாப்பிடுகிறேன். குடித்த பால் செறித்த போது 'கழிவு வெளியாகிறது'- சொல்ல தெரியாது எனக்கு, அப்படியே விட்டிருந்தால் நாறியிருப்பேன்.. ஆனால் அப்பொழுதும் என் அம்மா தான் என்னை கழுவி விட்டு குளிப்பாட்டி சுத்தம் செய்தார்கள். ஆனால் இப்பொழுது எல்லாம் தண்ணீர் அல்லது (தண்ணீர் இல்லாத இடத்தில் - சிங்கப்பூரில் சி(ப)ல இடங்களில்) டிஸ்யு தாள் உதவியுடன் நானே சுத்தம் செய்து கொள்கிறேன்.

இன்று என் அம்மா முதுமை அடைந்து தன் காரியங்களை முடிக்க சிரமம் அடைகிறார். இப்பொழுது என் அம்மா எனக்கு குழந்தை -

குரானை அடிப்படையாக வைத்து இந்த கருத்து இங்கு சொல்லப்பட்டது

nagore ismail

குசும்பன் said...

"என்னதான் வறுமை என்றாலும் அம்மாவை குப்பையில் வீசிவிடத் தோன்றுமா? பாசம் என்பதென்ன உபயோகம் முடிந்ததும் தூக்கியெறியப்படும் அற்ப விஷயமா? "

உங்களின் கேள்விக்குள் இருக்கும் உங்கள் ஆதங்கம் புரிகிறது ஆனால் பதில்.......


"அம்மாவிடம் இது பற்றி சொல்லி ஆதங்கப்பட்டபோது... "குழந்தைகள வளர்த்து ஆளாக்கறது பெத்தவங்க கடமை.. பின்னாடி வெச்சு காப்பாத்துவாங்கன்னு எதிர்பார்ப்போட வளர்க்க கூடாது.. அதே நேரம் பெத்தவங்களை பத்திரமா பாத்துக்கறது பிள்ளைங்களோட கடமை.. அதுல இருந்து அவங்க விலக நினைக்க கூடாது... தண்டவாளம் மாதிரி ரெண்டு பக்கத்து உணர்வுகளும் பொருத்தமா இருக்கணும்" என்றார்கள்.

அருமையாக சொல்லி இருக்கிறார்கள் உங்க அம்மா! ஆனால் மணதின் ஓரத்தில் இருக்கும் ஆண் பிள்ளையின் ஆசை நம்மை காலம் முழுவதும் காப்பாற்றுவான் என்பதுதான்

தமிழ்நதி said...

வாசித்தபோது மனம் கனத்துப் போனது என்ற வார்த்தைகள் போதுமானதாக இல்லை. வெளியில் போய்வரும் நாளெல்லாம் மன வலியுடனேயே திரும்பி வருகிறேன். தெருவோரத்தில் உட்கார்ந்திருக்கும் முதியவர்களைப் பார்க்கும்போதெல்லாம் 'இவர்களுக்குப் பிள்ளைகள் இல்லையா?'என்ற கேள்வி எனக்குள் எழுவதுண்டு. அந்தப் பிள்ளைகளும் எங்காவது இப்படிக் கையேந்தி அமர்ந்திருப்பார்களோ என்றெண்ணும்போது சிந்தனை முடிவற்று நீள்கிறது. பெற்ற தாயை வீதியில் எறிந்துவிடும் மனம் படைத்தவர்கள் வாழும் இந்த உலகத்தில் வாழ்வதே குரூரமானதுதான் காயத்ரி. நம்மால் செய்யக்கூடியதெல்லாம் ஒன்றுதான் குறைந்தபட்சம் நமது வீட்டில் இருக்கும் வயோதிபர்களின் மனம் கோணாது குழந்தைகளைப் போல கவனித்துக்கொள்வது ஒன்றுதான் நம்மால் இயன்றது. உங்கள் பதிவை வாசிக்கும் ஓரிருவராவது மனம் பதைத்து இவ்விடயத்தில் கூடுதல் கவனத்தோடிருப்பார்கள் என்று நினைக்கிறேன். எல்லோரும் சொல்வதுதான்: ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு பெற்றோர் குழந்தைகளாகிவிடுகிறார்கள். அது எவ்வளவு உண்மை என்பதை நான் இப்போது கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கிறேன்.

Arvinth said...

Hi Gayathiri

Naanum Erode thaan (ippo US-la irukaen), idhu variakum unga post ellam padichu rasichu vandhurukaen...aana comment poda oru chinna thayakam.

Aanna indha post-ku, I wanna post the comment, unga kavidhailgal ellam nalla irukum, inga enoda coworker kitta perumaaya solluvaen enga oor ponnu enna azhaga kavidhai eludhuraanga-nu (he use to tease me tht I'm praising u only becoz u frm Erode)...

Aana adhu unmai illa, unga kavidhai ellam mind blowing, spell binding etc (idhuku maela enaku adjectives therila...)

What induced me to post my comment 4 this post is the title "Nenju porukudhillayae"

Romba correct...... keep going, u r doing grttt stuffs...

-Arvinth

-Arvinth

கண்மணி said...

காயத்ரி முன்பே உன் அம்மாவைப் பார்த்த போது சொன்னேன் இத்தனை புரிதல் உள்ளவங்களா என்று.
தாயைக் காப்பாற்ற முடியாத வறுமைக்கு செத்துப் போகலாம்.
தன் பிள்ளைகளை வளர்க்க நினைக்கும் அவள் தானூம் அந்தத் தாய்க்கு பிள்ளை தானே என்று எப்படி மறந்து போனாள்.
ஆமாம் நியூட்டன் லா ல்லாம் புட்டு புட்டு வைக்கிறாய்.ஓகே குட்.

கோபிநாத் said...

:-(((

தாமோதர் சந்துரு said...

நெஞ்சு பொறுக்குதில்லையே உண்மைதானுங்க. ஆனா அதுக்கு மேலே கொடிது,கொடிது வறுமை கொடிதுங்க. நானும் இதைப் படிச்சு வேதனை அடைந்தேன். அதை விட கொடுமை பாருங்க, அந்த அம்மாவுக்கு
மூன்று பசங்க. மூன்று பேரும் மன நிலை பாதித்து லக்காபுரத்துல இருக்கறாங்களாம். இதை விதின்னு சொல்றதா,இல்லை வாங்கிட்டு வந்த
வரம்னு சொல்றதா.

காயத்ரி said...

இஸ்மாயில், குசும்பன் நன்றி..

//பெற்ற தாயை வீதியில் எறிந்துவிடும் மனம் படைத்தவர்கள் வாழும் இந்த உலகத்தில் வாழ்வதே குரூரமானதுதான் காயத்ரி//

உண்மைதான் தமிழ். தவிர்க்கவும் முடியவில்லை, சகிக்கவும் முடியவில்லை.

காயத்ரி said...

தேங்க்ஸ் அரவிந்த்..

//தாயைக் காப்பாற்ற முடியாத வறுமைக்கு செத்துப் போகலாம்.//

சரியா சொன்னீங்க அக்கா!

//ஆமாம் நியூட்டன் லா ல்லாம் புட்டு புட்டு வைக்கிறாய்.//

சின்னபுள்ளைல ஸ்கூல்ல படிச்சது தானே?

காயத்ரி said...

//அந்த அம்மாவுக்கு
மூன்று பசங்க. மூன்று பேரும் மன நிலை பாதித்து லக்காபுரத்துல இருக்கறாங்களாம்.//

ஆமா தாமோதர்.. ஒரு பையன் எங்கிருக்கான்னே தெரிலன்னு சொல்லிருக்காங்க. 4 பேரை பெத்துட்டு அந்தம்மா குப்பைல கிடந்து அனாதையா செத்ததை பாக்கறவங்களாலயே தாங்க முடியல.. யப்பா! இத்தனை அவலமா இருக்கும் வாழ்க்கைல?

ranjith said...

"adappaavihalaa" postukkey onnum sollath theriyaama irunthen.

ippo inthap postingkku ennanga solla mudiyum.....

unga thalaippaiththaan sollath thonuthu.
_________________________

newton vithihalaa irunthaalum sari entha iyarbiyal vithihalaa irunthaalum sari avai unarvuhalukku utpattavai alla.
iyarbiyal vithihal unarvuhalukku samamaanavaiyum alla.
_______________
unarvuhal-unarvuhal.. avvalavuthaan. onraiyum mattrondrayum saman paduththip paarpathu nichayam unarvuhalin unarvuhalaiyee kuraiththa mathippeetirkku ullaakkividum.

onrayum mattrondrayum samanpadutha ninaiththaal yethu eppothu samanaahirathu yenra kelvi ezhum.
unavurhal vithihalukkutpattavai alla allathu vithihal unarvuhalai ulladakkiayavai alla.

sorry koncham lengthy pinnoottam. - antha newton vithi unarvup poorvamaana intha pathivirkku thevaiyillai enru thondriyathu athanaalthaan koncham lengthy- sorry again - ranjith

நாமக்கல் சிபி said...

:(

காயத்ரி said...

//iyarbiyal vithihal unarvuhalukku samamaanavaiyum alla.//

என்ன இப்படி சொல்லீட்டீங்க ரஞ்சித்? விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒரே புள்ளியில் இணைவதை பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன் நான். ஒவ்வொரு வினைக்கும் சமமானதும் எதிரானதுமான மற்றொரு வினை மிக நிச்சயமாய் இருக்கும்.. மறுக்க முடியாத உண்மை இது.

ranjith said...

a simple thing to illustrate

1.now one daughter has thrown her mother in the dustbin (whatever may be the reasons which we do not know).

2.there are news that mothers have thrown their child in the dustbin and we see a lot evidences of that in the name of thottil kuzhanthai (whatever may be the reasons again).

now can these two be equated just becoz some cases like number one is happening some cases like number two can happen.

manithaabimaana adippadayil inrandumey kadumayaana thavaru.
aanaal irandayum oralavukku verum vinayaaha saman paduththaa mudiyum.
________________________

at least to my meagre understanding so far there is no scientific physcial law that has icluded feelings of living things. but it would be interesting to think of including it in some phenomenon which can become like a science fiction story
________________
regarding ur meignanam and vignanam meetpoint - i think i have to start a blogg (which i have no idea how to start) and write an article to reply that. so right now no comments. naaan yethaavathu sollap poha neenga athukku oru bathil article yezhuthinaa avlothaan ungala kummi eduthuduvaanga. enakku blogg ethuvm kidayaathu naan thappichiduven.
______________
As a gist of my opinion they are also like railway tracks. It depends on the travellers capability to decide the meetpoint.
- ranjith

ஜெஸிலா said...

உண்மையில் நெஞ்சு பொறுக்குதில்லைதான் காயத்ரி இந்த நிலைகெட்ட மனிதர்களை நினைத்துவிட்டால். ஆனாலும் அந்த மூதாட்டியுடைய பிள்ளைகளை குறைச் சொல்லவது முறையல்ல. இப்போதுள்ள பெற்றோர்கள் குழந்தைகளுக்காக என்று எல்லாம் செய்வதற்கு பதிலாக தனகென்றும் ஏதாவது வைத்துக் கொள்ளவது தான் புத்திசாலித்தனம். இந்த காலத்தில் யாரையும் நம்பியிருக்கவே கூடாது. தன் கையே தனக்குதவி.