Friday, June 15, 2007

பறத்தல் அதன் சுதந்திரம்

பதிவு ஆரம்பித்த வேகத்தில் 50 இடுகைகள்! எனக்கே மலைப்பாகத்தான் இருக்கிறது. என்றாலும் எண்ணிக்கைகள் மட்டுமே தரத்தை நிர்ணயிப்பதாய் ஆகிவிடாது. தினமும் எழுதுகிறோம் என்பது மகிழ்ச்சியளித்தாலும் என் எழுத்தின் தரம் எப்போதும் என் ஆராய்ச்சிக்குட்பட்டதாகவே இருந்து வந்திருக்கிறது. துவைக்கும் போதெல்லாம் சாயம் வெளுப்பது போல முதலில் திருப்திகரமாய் இருப்பதாய் தீர்மானித்திருந்த எழுத்து நாளடைவிலான மீள் வாசிப்புகளின்போது அபத்தமாய்ப் பல்லிளிப்பதை உணர்ந்திருக்கிறேன். என்றபோதும் இவை என் மனதின் வளர்சிதை மாற்றங்களுக்குச் சாட்சியாய் இருப்பதனால் இவற்றை ஒருபோதும் அவமானகரமானவையாய் நான் எண்ணிப் பார்ப்பதில்லை.

என் பதிவில் கவிதைகள் மிகுதி. தமிழின் மீது தனித்ததோர் வாஞ்சை தோன்றிய நாள் முதலாய் பெரும்பாலும் கவிதைகளே என்னை ஈர்த்திருக்கின்றன. அதன் கட்டுப்பாட்டில் நானோ.. என் கட்டுப்பாட்டில் அதுவோ இருப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக நிகழ்ந்து வருகிறது. இந்த 51 வது இடுகையை என் வாசிப்பனுபவம் சொல்வதாக தயாரிக்க முடிவு செய்த போதும் 'என்னைச் சொல்' 'என்னைச் சொல்' என்று கவிதை நூல்களே மனதில் கோஷமிட்டன.

"பறத்தல் அதன் சுதந்திரம்" இருபதாம் நூற்றாண்டில் தமிழ்ப் பெண் கவிஞர்களின் கவிதைகளுடைய தொகுப்பு. பொதுவாகவே தொகுப்பு நூல்களில் எனக்கு தனிப்பட்ட ஈர்ப்பு உண்டு. தலைப்பையும், படைப்பாளர் பெயரையும் பார்க்காமல் திடுமென எடுத்துப் படிப்பேன். அந்த எழுத்தின் தடம் பிடித்து எழுதினவரை அடைய முடிந்தால் எதிர்பாராத மகிழ்ச்சி ஒன்று தண்டுவடத்தைத் தாக்கும்! அதில் ஒரு கிறக்கம் எனக்கு!

இந்த தொகுப்பு பெரியார் பல்கலைக்கழத்தில் இளங்கலை மாணவர்களுக்கான பாடமாக வைக்கப்பட்டுள்ளது. கற்பிக்க வேண்டிய கட்டாயத்தின் பேரில் படிக்கத் தொடங்கி பின் விரும்பிப் படிக்க வேண்டியதாயிற்று. தொகுப்பென்பதற்காக நிறைய கவிதைகளை அனாவசியமாய் சேர்த்திருக்கிறார்கள். என்றாலும் பல கவிதைகள் முகத்திலறைகின்றன.
ஈழத்துக்கவிஞர்களின் படைப்புகள் மிகுதி என்பதால் புலம் பெயர்ந்த நேரத்துத் துயரம் அதிகமாய் பிரதிபலிக்கிறது. இந்தக் கவிதைகளினூடே நம் தமிழ்நதியையும் சந்தித்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு. இனி தொகுப்பிலிருந்து நான் நேசித்த கவிதைகள் மட்டும் உங்கள் வாசிப்பிற்கு!

1. பறத்தல் அதன் சுதந்திரம்

- ப.கல்பனா

ஓடி ஓடித்திரிந்து
இமை கொட்டாமல் கவனித்துத்

தேன் குடிக்கும்
அந்த நேரமாகப் பார்த்துப்
பிடித்தேன் பட்டாம்பூச்சியை..
எவ்வளவு சிரமப்பட வைத்துவிட்டது

முள் தைத்து
விரல் ரணமாகி
இப்போது வலித்தது

மூடித்திறந்து
மூடும் கைகளில் கர்வமாய்
என்ன வண்ணம் என்ன வேகம்

நசுக்கி விடுவாளோ பதப்படுத்தி
குண்டூசி செருகிப் பாதுகாப்பாளோ
பூவருகே விடுவாளோ...

தூசிக்கால்களில் வண்ணத்துகள்கள்
அதன் ஆன்ம உதிர்வு

சிறகை அசைத்துப் பார்த்தது
பறத்தலுக்கான
கடைசி முயற்சியாய்

விட்டு விட்டேன்
அதே பூவருகே.

-------------------------

2. யாரிடத்தில் முறையிட

- கலைவாணி ராஜகுமாரன் (தமிழ்நதி)

வானமும் ஏரியும் கூடும் அழகு குறித்து
ஓடுகின்ற பேருந்தில் வைத்தென் தோழி சொன்னாள்..
இலையுதிர் கால மரங்களின் நிறங்கள் பற்றி
வானொலியில் யாரோ ஆச்சரியப்படுகிறார்கள்
மேலும் பனியின் வெண்மை குறித்தும் கூட
பேசுகிறார்கள்.

என் பேனா மெளனித்திருக்கிறது.

வீதியோரத்தில் உறங்கும் குழந்தைகளை
உயிரையே உண்டுயிர்க்கும் பசியை
என் கூடப்படித்தவள்
கபாலம் பிளந்திறந்த கொடுமையை
இன்னும் என் வீட்டுக் கிணற்றடி செம்பரத்தை
செத்துப் போனதை
நாங்கள் திரும்பி வருவோமென காத்திருந்து
எழும்புந் தோலுமாய் செத்துக்கிடந்த
நாய்க்குட்டியைப் பற்றி
போகிற போக்கில் காதில் விழுகிறது

என் பேனா செவிடாயிருக்கிறது.

உள்ளுலவும் ஒளியை
ஏந்தி வரும் வழியில்
எந்தக் காற்றோ அசைக்கும்
சங்கீதம் போல ஒன்று
உதடு தொடும் நேரம்
வெறும் சத்தமாய்த் தேய்ந்து போகிறது.
அற்பாயுளில் மடியும் கவிதைகட்கு
கருவறையே கல்லறையாகிறது.
புணரும் பொழுதில் கூட கடிகாரமே
கண்களில் நிற்கிறது.

என் பேனா மலடாயிருக்கிறது.

-----------------------

3. கருவறை வாசனை

- கனிமொழி

அது சந்தனம் இல்லை
ஜவ்வாதோ, இப்போது
அழகான புட்டிகளில் விற்கும்
வாசனைத் திரவியமோ, எதைப்போலும்
இல்லாத புதுமணம்.
சின்ன வயதில் அவளைக்
கட்டிக்கொண்டு தூங்கியபோது
மெல்லியதாய் வந்து மூக்கைத் தழுவும்.
அவள் அவிழ்த்துப்போட்ட சேலையைச்
சுற்றிக்கொண்டு திரிந்தபோது
அவளின் வாசனையை
பூசிகொண்டதாய்த் தோன்றும்.
முதல் மழையின் மண்வாடை போல்
மூச்சு முட்ட நிரப்பி வைத்துக்கொள்ளத்
தூண்டும் அம்மாவின் வாசனை.
எங்கெங்கோ பட்ட காயங்களுக்கு மருந்தாய்
அவள் மடியில் தலை வைத்துத்
தூங்கியபோதெல்லாம் பாதுகாப்பாய்
என்னைத் தாங்கிய மணம்..
அவள் என்பதே அதுவும் சேர்ந்தது தான்.
வளர்ந்துவிட்ட மனதின் சுவர்கள்
அவளைக் கட்டிக்கொள்ள விடாதபோதும்
தேவைகளின் தடம் பிடித்து
தூர வந்துவிட்ட போதும்
எனக்கு மட்டுமே புரியும்
அவளின் கருவறை மணத்தை
அள்ளி அள்ளி என் வீடெங்கும் தெளித்து
சுருண்டு படுத்துத் தூங்கிப் போக வேண்டும்.

--------------------------

4. என் பூர்வீக வீடு

-சல்மா

முற்றிலுமாக
தன் அடையாளமிழந்து
நொறுங்கிக் கிடக்கிறது
முன்பு நானிருந்த
என் பூர்வீக வீடு

இன்று
நானங்கு இல்லையெனினும்
அது என்னோடுதானிருந்து
கொண்டிருக்கிறது
என் பால்ய காலத்தோடு

நான் பறந்து கொண்டிருக்கிறேன்
தடுப்பரண்களுடனான
அதன் வனத்தில்

நிலா இருந்த நாட்களிலும்
இல்லாத நாட்களிலும்
என்னை ஒளித்து வைத்திருந்த
தூண்களும்

முதல் தீட்டில் பயந்திருந்த
என்னோடிருந்த
கழிப்பறைச்சுவரும் கூட
சரிந்து கிடக்கிறது
ஏனைய தன் ரகசியங்களோடு

பெரும்பாலான பொழுதுகள்
ஒண்டியிருந்திருக்கிறோம்
சுவரின் ஒருபுறம் நானும்
மறுபுறம் இந்த வேம்பும்

தன் சுவரிழந்த பின்
அது
தன் நிழல் உதிர்த்த
நிலம் பார்த்து தனித்திருக்கிறது
தான் மட்டும்

என் விளையாட்டின் தடயங்கள்
இன்றும் கூட எஞ்சியிருந்திருக்கலாம்
மச்சு அறைச்சுவரொன்றில்.

------------------------

5. வேலி

- ஊர்வசி

நட்சத்திரப் பூக்களை
எண்ணமுடியாமல்
மேலே கவிழ்ந்தபடி கூரை
ஒட்டடைகள் படிந்து
கருப்பாய்ப் போனது.

கம்பி போட்ட சாளரம் கூட
உயரமாய்.. ஆனாலும் திறந்தபடி..
அதனூடே காற்று
எப்பொழுதும்
மிகவும் ரகசியமாய்
உன்னிடம் என்னை
அழைக்கிற காற்று

என்னைச் சூழவும் சுவர்கள் தான்
நச் நச் என்று
ஓயாமல் கத்திக் கொண்டிருக்கிற
பல்லிகள் ஊர்கிற சுவர்கள்

அவையும்
ஒட்டடைகள் படிந்து
எப்போதோ கருத்துப் போனவை.

உனக்காக நான்
தனிமையில் தோய்ந்தவளாய்
இங்கே காத்திருக்கிறேன்
பழைய பஞ்சாங்கங்களில்
புதிதாக நம்பிக்கை தருவதாய்
ஒரு சொல்லைத் தேடிப்பார்த்தபடி..

எப்பொழுதுதான் என்னால்
நீ வசிக்கின்ற அந்த
திறந்த வெளிக்கு வரமுடியும்?
உன் இருப்பிடம்
இங்கிருந்து வெகு தொலைவோ?
இரண்டு சிட்டுக்குருவிகளை
இங்கே அனுப்பேன்
அல்லது
இரண்டு வண்ணத்துப்பூச்சிகளையாவது.

----------------------------

பதிவு மிகவும் நீண்ண்ண்டு விட்டது!! இருக்கட்டும். விமர்சிப்பதில் விருப்பமில்லை இப்போது. வாசித்தேன் நேசித்தேன் என்பதை சொல்லிப் போகிறேன் அவ்வளவே!

17 comments:

தமிழ்நதி said...

தற்போது சென்னையில் இல்லை. வந்த இடத்தில் தமிழ்மணத்தை மேலோட்டமாகப் பார்த்தபோது தட்டுப்பட்டது உங்கள் பதிவு. வாசித்து முடித்ததும் 'எங்கிருந்துதான் இந்தப் பெண் இதையெல்லாம் கண்டுபிடித்துப் போடுகிறாளோ ('ள்'பாவிக்கலாமா.. பிடிக்கவில்லையெனில் 'ங்களோ' போட்டுக் கொள்ளலாம்.. என்னைவிட இளையவள் என்பதால் கோபிக்க மாட்டீர்கள்)என்ற ஆச்சரியம் மேலிட்டது. பிரிந்தபின் தூற்றுபவர்கள் மத்தியில் புரிந்துகொண்டு ஏற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் காயத்ரி. நன்றி.

G3 said...

Athanai kavidhaigalum arumai endru koori idhai vaasikka vaaipalitha unakku nandri koori vidai petru kolgiren.. nandri.. vanakkam :-)))

CVR said...

துவைக்கும் போதெல்லாம் சாயம் வெளுப்பது போல முதலில் திருப்திகரமாய் இருப்பதாய் தீர்மானித்திருந்த எழுத்து நாளடைவிலான மீள் வாசிப்புகளின்போது அபத்தமாய்ப் பல்லிளிப்பதை உணர்ந்திருக்கிறேன். என்றபோதும் இவை என் மனதின் வளர்சிதை மாற்றங்களுக்குச் சாட்சியாய் இருப்பதனால் இவற்றை ஒருபோதும் அவமானகரமானவையாய் நான் எண்ணிப் பார்ப்பதில்லை.//

நல்ல கண்ணோட்டம்!! நானும் இது போன்று சில பழைய படைப்புகளை பார்க்கும் போது வருத்தம் அடைந்திருக்கிறேன். உங்கள் அனுகுமுறையை நானும் கையாள வேண்டியது தான்!! :-))

கவிதைகள் செம ஹை லெவல்ல இருக்கறதுனால என்னால ரசிக்க முடியலை!!
மன்னிக்கவும்!! :-(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் காயத்ரி...மேன்மேலும் சிறக்கட்டும் உங்கள் பதிவுகள்.

குட்டிபிசாசு said...

காயத்ரி,
நல்ல தொகுப்பு! படித்தேன் ரசித்தேன்!
தொடருக உங்கள் பணி!

வாழ்த்துக்கள்!!

இராம்/Raam said...

51 நாட்-அவுட்'க்கு வாழ்த்துக்கள்...

கவிதை தொகுப்பு அறிமுகத்துக்கு நன்றி... :)

காயத்ரி சித்தார்த் said...

//உங்கள் பதிவு// கோபிக்க மாட்டீர்கள்//

இதெற்கெல்லாம் தான் நான் கோபிப்பேன் தமிழ்! எங்கடா ஆளைக் காணோமேன்னு பார்த்தேன். வந்துட்டிங்களா!! நிஜமா உங்க கவிதைய எதிர்பாராம சந்திச்சப்போ ஜிவ்வ்னு இருந்துச்சு.. அதுக்கு தான் இந்த பதிவே!

Anonymous said...

//unakku nandri koori vidai petru kolgiren.. nandri.. vanakkam :-))) //

நீ திருந்த மாட்டியா வாலு?

நன்றி சிவிஆர்!

ஹைய்! முத்துலட்சுமியக்கா லீவ் முடிஞ்சு வந்தாச்சா!!

குட்டி பிசாசு.. நல்ல ஆக்கம்னு சொல்லலியே? :(

நாட் அவுட்டா? அவுட்டாக்கி அனுப்பற ஐடியா வேற இருக்கா? நான் வரல இந்த ஆட்டத்துக்கு!!

காயத்ரி சித்தார்த் said...

இதென்ன கொடுமை? என் பின்னூட்டமே அனானின்னு வருது? :(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இன்னும் விடுமுறை முடியவில்லை..இருந்தாலும் வசதி படும்போது ஊரிலிருந்தே உங்களை எல்லாம் பார்க்கறதுல பேசறதுல ஒரு சந்தோஷம் தான்.

manasu said...

ஆறாவதா காயத்ரி கவிதையும் வந்திருந்தா பேஷ் பேஷ்... ரொம்ப நன்னாயிருந்திருக்கும். -)))) ,-(((((((, !!!!!!

Priya said...

முதலில் வாழ்த்துக்கள்,

கவிதைகளும் கருத்துக்களும் நன்றாக இருந்தன.

காயத்ரி சித்தார்த் said...

எப்ப வருவீங்க அக்கா? இன்னும் ரெஸ்ட் எடுக்கனுமா?

மனசு! நல்ல மனசோட வாழ்த்தறாப்பல தெரிலயே?

நன்றி வள்ளி.

கீர்த்தனா said...

//வீதியோரத்தில் உறங்கும் குழந்தைகளை
உயிரையே உண்டுயிர்க்கும் பசியை
என் கூடப்படித்தவள்
கபாலம் பிளந்திறந்த கொடுமையை
இன்னும் என் வீட்டுக் கிணற்றடி செம்பரத்தை
செத்துப் போனதை
நாங்கள் திரும்பி வருவோமென காத்திருந்து
எழும்புந் தோலுமாய் செத்துக்கிடந்த
நாய்க்குட்டியைப் பற்றி
போகிற போக்கில் காதில் விழுகிறது//

தமிழ்நதியின் இந்த கவிவரிகளில் நான் என்னை இழந்து திருப்பி மீண்டு வருவதற்க்கு நேரம் எடுத்தது..:-)

நன்றி காயத்திரி ... இந்த கவிதையை பிரசுரித்தமைக்கு..

காயத்ரி சித்தார்த் said...

ஆமாங்க கீர்த்தனா.. நான் மொதல்ல இந்த தொகுப்பை தேர்ந்தெடுக்க காரணமே அவங்க தான்! அதோட 5 கவிதைலயுமே இது மாதிரியான தாக்கம் அதிகம். உணர்ச்சி அங்கங்க தேங்கி நிக்குதோன்னு தோணும் எனக்கு!

Ayyanar Viswanath said...

நல்ல இடுகை காயத்ரி உங்களிடம் இருந்து இதுபோன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறேன்

காயத்ரி சித்தார்த் said...

ஆடிக்கொரு தடவை.. அம்மாவாசைக்கொரு தடவைன்னு சொல்வாங்களே? அப்டி தான் எப் பதிவுக்கு வருவீங்க போல அய்யனார்? சரி ஏதோ பெரியவங்க வாழ்த்திருக்கீங்க. முயற்சி பண்றேன். :)