என் உறக்கம் எப்போதும் கனவுகள் நிறைந்தது. நல்லதோ அல்லதோ.. கனவுகள் இல்லாமல் தூங்கிய நாட்கள் மிகக் குறைவு. பெரும்பாலும் அம்மா தான் சிக்கிக் கொள்வார்கள். கனவு மறக்கும் முன்பாக சொல்லியே ஆக வேண்டுமென்று அடம்பிடித்து உட்கார வைத்து விலாவரியாய் மொத்தக் கனவையும் விவரிப்பேன். இடையில் எப்போதாவது அவர்கள் வேகமாக கண் சிமிட்டினாலோ பார்வை வேறு பக்கம் சென்றாலோ கவனம் குறைகிறது என்று கண்டுபிடித்து விடுவேன். "இப்ப வேற என்னமோ யோசிச்சீங்க தான? பொய் சொல்லாதீங்க.. அப்டின்னா நான் கடைசியா என்ன சொன்னேன்? சொல்லுங்க.. " என்று வம்படியாய் டார்ச்சர் செய்வேன். திருமணத்திற்கு பிறகு அந்த இடத்தில் சித்து. பொறுமையாய் கேட்டு முடித்து விட்டு (வேற வழி?) "எப்டி இவ்ளோ நியாபகம் வெச்சிருந்து சொல்ற? எனக்கெல்லாம் கனவே வர மாட்டிங்குதே" என்று ஆச்சரியப்படுவார். பெரும்பாலும் காட்சிச் சிதறல்களாய் குழப்பங்கள் நிறைந்த கனவுகள் தான் வரும். எப்போதாவது, கனவு காண்கிறோம் என்ற பிரக்ஞையோடேயே விழித்துக் கொள்ள விரும்பாத இனிமையான கனவுகள் வாய்க்கும். எனினும்.. மனதில் அதிகம் பதிந்திருப்பவை துர்கனவுகளே. பாம்புகள், நெருங்கிய உறவினர் மரணம், அறையில் தீ, அமானுஷ்ய துரத்தல்கள், உயரத்திலிருந்து விழுதல், போன்ற வழக்கமான துர்கனவுகளுக்கு அடிக்கடி மிரண்டு எழுந்து இருக்கிறேன்.. அழுதுமிருக்கிறேன். நாள் முழுக்க அசதியையும் மனச்சோர்வையும் கொடுத்த கனவுகளும் உண்டு.
நேற்றும் ஏதோவொரு கெட்ட கனவுடனேயே விடிந்தது. சிவந்த ஈறுகள் தெரிய, வாயில் எச்சில் ஒழுகும் வெறிநாய்கள் சூழ்ந்து கொண்டது போலவும், கருப்பு நாயொன்று பாய்ந்து கையில் கடித்ததுமில்லாமல் கோபமாய் எந்த மொழியிலோ திட்டியது போலவும் கனவு வந்தது. கடிபட்ட இடத்தில் இரத்தத்திற்கு பதிலாய் வெண்நுரை பொங்கி வழிந்து கொண்டேயிருந்தது. கண் விழித்தபோது பயம் திரண்டு கனத்த துக்கமாக மாறி அழுத்தமாய் தொண்டைக் குழியை அடைத்துக் கொண்டு நின்றது. வாய் விட்டு அழ வேண்டும் போலிருந்தது. அழுதால் நிச்சயம் இது கரைந்து விடும் என்று நினைத்துக் கொண்டே அமைதியாய் கண்ணீர் விட்டபடி படுத்திருந்தேன். திடீரென்று அம்மு சத்தமாய் அழுது கொண்டே எழுந்து நின்றாள். என் துக்கம் போன இடம் தெரியவில்லை. கண்ணீரை அவசரமாய் துடைத்துக் கொண்டு.. "என்னடா? என்ன செல்லம் ஆச்சு? எதுக்கு அழறே?" என்று சமாதானப்படுத்த முயற்சித்தேன். "அம்மா நானா பாப்பாவை விட்டுட்டே போய்ட்டாங்க.. அம்மாவும் நானாவும் பாப்பாவை விட்டுட்டே பைக்ல போய்ட்டாங்க" என்று ஓயாமல் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டும் விம்மி விம்மி அழுது கொண்டுமிருந்தாள். "எங்கயும் போகலடா.. இங்க பாரு ரெண்டு பேரும் உன் பக்கத்துல தான் இருக்கோம்.. அழக் கூடாது.. இது வெறும் கனவு. கனவுக்கு போய் யாராச்சும் அழுவாங்களா? அழாத செல்லம்.. அம்மா இருக்கேன்.. உன் கூடவே தான் இருப்பேன்.. தூங்குடா தங்கம்..தூங்கும்மா" என்று அவளை தட்டிக் கொடுத்தபோது அதுவரை சிறுமியாய் அழுது கொண்டிருந்த காயத்ரி திகைத்து என்னைப் பார்த்துத் திருதிருவென விழித்தாள். லேசாய் புன்னகைத்து "உனக்கும் சேர்த்து தான் சொன்னேன்.. நான் இருக்கேன்..படுத்துக்கோ.. தூங்கு" என்று அவளையும் தட்டிக் கொடுத்து தூங்க வைத்து விட்டு தைரியமான அம்மாவாய் நானும் தூங்க ஆரம்பித்தேன்.
இந்த மாதம் தான் கவனிக்கிறேன்.. அமுதினிக்கும் அடிக்கடி கனவுகள் வருகிறது. என்னைப் போலவே எழுந்ததும் அதை சொல்லவும் ஆரம்பித்திருக்கிறாள். என்னைப் போலவே பெரும்பாலும் மிரண்டு அழுது கொண்டு தான் எழுகிறாள். முதல் முறை தூக்கத்திலிருந்து எழுந்து தேம்பிக் கொண்டே "அம்மா.. அழுதாங்க.. அம்மா அழுதாங்க..அம்மா பாத்து பாப்பாவும் அழறா" என்றே சொல்லிக் கொண்டிருந்தாள். "இல்லடா.. செல்லம்.. அம்மா அழவே இல்ல. இங்க பாரு.. எப்டி சிரிக்கறேன் பாரு" என்று சிரித்து சிரித்து சமாதானப்படுத்தினேன். என்னைப் போல் கனவை காலையில் சொல்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் நியாபகம் வைத்திருந்து நாள் முழுக்க அடிக்கடி மறுஒலிபரப்பு செய்வதை இவள் வழக்கமாகக் கொண்டிருப்பதால் அன்று நாள் முழுவதும் நான் அடிக்கடி அவளுக்கு சிரித்துக் காட்ட வேண்டியிருந்தது. :) மற்றொரு முறை பெரிய பூச்சியொன்று தன்னைப் பிடிக்க வந்ததாக சொல்லி அழுதாள். அன்று அந்த பயத்தைப் போக்குவதற்காக யூடியூபில் விதவிதமான பூச்சி வகையறாக்களைப் பார்க்க வைத்தேன். தற்செயலாய் வீட்டில் தென்பட்ட குட்டி கரப்பான்பூச்சியொன்றை கண்ணாடி கிண்ணத்தால் மூடி சிறைபிடித்து நாள் முழுக்க வெளியிலிருந்து தைரியமாய் வேடிக்கை பார்த்தோம். இப்போதெல்லாம் பூச்சியென்றால் அம்முவிற்கு பயமே இல்லை. கனவிலோ நேரிலோ பூச்சியை சந்திக்க நேர்ந்தால் "போ பூச்சி" என்று கோபமாக திட்டி விரட்டப் போவதாக சொல்லியிருக்கிறாள். குளியலறை மூலையில் ஒட்டியிருக்கும் சிறிய குப்பையை பூச்சியென்று நினைத்துக் கொண்டு உள்ளே நுழையும் போதெல்லாம் "போ பூச்சி.. பாப்பா சொல்றேனில்ல?" என்று 2 நாட்களாய் மிரட்டிக் கொண்டிருக்கிறாள். :)
முதல்நாள் பள்ளிக்கு சென்று வந்த பிறகு, மூன்றாவது நாள் காலை திடீரென வீறிட்டு அலறி எழுந்தாள்.. தொடர்ந்து நிற்காத அழுகை. வெகு நேரம் விசாரித்தும் பதில் சொல்லாமல் அழுது கொண்டேயிருந்தாள். கொஞ்சம் கழித்து சமாதானமானது போல் இருக்கிறாளே என்று "என்னடா குட்டி? கனவு கண்டியா? ஏன் அழுத?" என்று கேட்டதும் திரும்பவும் அழ ஆரம்பித்தாள். பின் திக்கித் திக்கி தழுதழுத்தபடியே.. "அண்ணால்லாம்.. அட்ச்சி.. பாப்பா அழுதா" என்று ஆரம்பித்து முடிப்பதற்குள்ளாகவே 'ஓ' ந்னு கத்தி அழ ஆரம்பித்தாள். நான் கலங்கிப் போனேன். பள்ளி குறித்த பயத்தில் தான் அழுகிறாளோ.. அங்கிருந்த பையன்கள் அவளை அடிப்பது போல கனவு கண்டிருப்பாளோ.. இந்த அளவிற்கா அவளின் பிஞ்சு மனம் பாதிக்கப்பட்டிருக்கிறது?.. அவளுக்கு இந்த பள்ளி பிடிக்கவில்லையா?.. சுத்தமாய் பிடிக்காமலேயே போய்விட்டால் என்ன செய்வது?.. இல்லாவிட்டால் இப்போதே வேறு பள்ளிக்கு மாற்றி விடலாமா? என்றெல்லாம் கன்னாபின்னாவென்று சிந்தித்தபடியே குரலில் பரிவு பொங்கி வழிய "அண்ணால்லாம் பாப்பாவை அடிச்சிட்டாங்களா கண்ணு?" என்றேன். அவள் அழுகையை சற்று நிறுத்தி "இல்ல.. பாப்பா தான் அண்ணாவையெல்லாம் அடிச்சா.." என்று சொல்லிவிட்டு திரும்ப அழுகையைத் தொடர்ந்தாள். ஙே!! என்றாகிவிட்டது எனக்கு. எதற்கும் இன்னொரு முறை தெளிவுபடுத்திக் கொள்ளலாமென்று "அண்ணாவையெல்லாம் நீயே அடிச்சிட்டு நீயே அழுதியா கண்ணு?" என்று கேட்டதற்கு.. "ம்ம்ம்ம்ம்ம்" என்று ராகமிழுத்துவிட்டு கர்மசிரத்தையாய் மீண்டும் அழ ஆரம்பித்தாள். :)))
இன்று காலையிலும், "பாப்பா மேல இருந்து கீழ விழப் போய்ட்டா" என்று அழுது கொண்டே எழுந்தாள். "எது மேல இருந்து விழுந்த? எதைப் பார்த்தாலும் மேல ஏறி ஏறி நிக்காத.. டமால்னு விழுந்துடுவ.. அடிபட்டுடும்ன்னு சொன்னா கேட்டா தான?" என்று பொய்யாக அதட்டினேன். உடனே உதடுகள் பிதுங்க, கன்னங்கள் அழுகையில் உப்பிக் கொண்டன. "சரி.. சரி அழாதடா... எது மேல ஏறி விழுந்த? சொல்லு" என்றதும் "அதா அந்த சூரியன் இருக்கில்ல? அங்க இருந்து தான்" என்று ஜன்னலைக் காட்டி பதில் சொன்னாள்!
8 comments:
Sema cute :-)))))))))))
எனக்கும் இம்மாதிரி கனாக்கள் வருவதுண்டு.
சிறுவயது முதல் சங்க இலக்கியத்திலேயே ஊறி வளர்ந்ததினால் அதிகமாக சங்க கால கற்பனைகளே ஆழ்மனக்கண்ணில் நாடகமாய் கனவில் விரியும். சரி ஃப்ரீயா ஷோ காட்டுறாங்கன்னு கனவுலேயே ரசிச்சுட்டு போய்டுவேன். சில சமயங்களில் கனவில் கண்ட இடங்களை நேரில் காண்கையில் சிலிர்க்கும். தங்கள் நடை நன்று.
வாழ்த்துக்கள்.
புவனேஷ்வர்
www.bhuvanasays.blogspot.in
இன்னைக்கு இருந்தான் பைனும் பெனாத்துர கேட்டோம்,
ஏய் ஏய்,மூக்கு,ம்ம்ம் கொஞ்சம் நேரம் சொல்லிட்டு அப்படியே தூங்கிட்டான்...
இப்போத்தான் குசும்பு +க்கு காரணம் புரிஞ்சுது :-)
நானா பாவம் :-)
குட்டீஸ் மட்டும் இல்லீங்கோ சில பெரியவங்களும் இருக்காங்கோ..
குட்டீஸ் மட்டும் இல்லீங்கோ சில பெரியவங்களூம் இருக்காங்கோ ...உளறல்
பெரும்பாலானவர்களுக்கு சில பொதுவான விஷயங்களே கனவில் வருகின்றன, உயரத்தில் இருந்து விழுவது, பாம்பு துரத்துவது அல்லது கடிப்பது,நெருங்கிய உறவினர் மரணம் போன்றவை.ஆழ்மனதில் படிந்த அல்லது பாதித்த சம்பவங்கள், தூங்கச் செல்லும் முன்னர் பேசும் அல்லது நினைக்கும் விஷயங்கள் கனவாக வர வாய்ப்புகள் அதிகம்.. நமக்கெல்லாம் அடுத்த நாள் காலை வரை அந்த கனவுகள் நினைவில் இருந்தாலே பெரிய விஷயம். தங்களின் எழுத்து நடை மிக அருமை.. தொடருங்கள்.....
பெரும்பாலானவர்களுக்கு சில பொதுவான விஷயங்களே கனவில் வருகின்றன, உயரத்தில் இருந்து விழுவது, பாம்பு துரத்துவது அல்லது கடிப்பது,நெருங்கிய உறவினர் மரணம் போன்றவை.ஆழ்மனதில் படிந்த அல்லது பாதித்த சம்பவங்கள், தூங்கச் செல்லும் முன்னர் பேசும் அல்லது நினைக்கும் விஷயங்கள் கனவாக வர வாய்ப்புகள் அதிகம்.. நமக்கெல்லாம் அடுத்த நாள் காலை வரை அந்த கனவுகள் நினைவில் இருந்தாலே பெரிய விஷயம். தங்களின் எழுத்து நடை மிக அருமை.. தொடருங்கள்.....
Post a Comment