Friday, January 20, 2012

அமுதினியும் இராமாயணமும்

அமுதினியின் வளர்ச்சியில் யூ டியூப் காணொளிகளின் பங்கு மிக முக்கியமானது. அவள் பிறந்ததிலிருந்து முதல் 6 மாதங்கள் ஈரோட்டில் இருந்தோம். சுற்றிலும் மரங்கள் அடர்ந்த வீடு. பனை மரங்களில் குடியிருக்கும் கிளிகள், காகங்கள், பொன்னரளிப் பூக்களில் தேனெடுக்க வரும் தேன் சிட்டுகள், சிட்டுக்குருவிகள், மைனாக்கள், அபூர்வமாக குயில்கள் மற்றும் குருவியை ஒத்த தோற்றம் கொண்ட மஞ்சள் அலகு கொண்ட சற்று பெரிய பறவைகள் என வீடு எப்போதும் இசைக்குறிப்புகளால் நிரம்பியிருக்கும். வீட்டின் புறச்சுவரிலிருந்து சற்று தூரத்தில் மாடுகள், கன்றுக்குட்டிகள் கட்டப்பட்டிருக்கும் கட்டுத்தரை இருக்கும். காவலுக்கு ஒரு நாய். அவ்வப்போது வந்து போகும் பூனைகள் மற்றும் அணில்கள். தினமும் காலை அல்லது மாலையில் முற்றத்திலிருக்கும் ஊஞ்சலில் அமர்ந்து குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு ஜீவராசியையும் ஒலியால் அவளுக்கு அடையாளப்படுத்திக் கொண்டிருப்பேன். அவளுக்குப் புரிகிறதா.. கவனிக்கிறாளா என்றெல்லாம் கவலைப்பட்டதில்லை. 5 மாதக் குழந்தையாக இருக்கும் போது பசுவின் 'ம்ம்ம்மாஆஆ' என்ற குரலுக்கு திடீரென கண் மலர்த்தி மகிழ்ச்சியாக என் முகம் பார்த்தாள். 'யார் கத்தறா ந்னு எனக்குத் தெரியுமே' என்ற பாவனை இருந்தது முகத்தில். சந்தோஷமாக இருந்தது.

6 ம் மாதம் குவைத் வந்தாயிற்று. நாள் முழுவதும் அவள் பார்க்க என் முகமன்றி வேறில்லை என்ற நிலைமை வந்த போது அவளுக்கு யூ டியூபை அறிமுகப்படுத்தினேன். அந்த வயதிலேயே 'தப்போ தப்போ தப்பாணி' என்ற மலையாளப் பாடல் அவளுக்கு மிக விருப்பப் பாடலாக இருந்தது. அதைத் தொடர்ந்து இன்று வரை தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஹிந்தி, அரபி ஆகிய மொழிகளில் குழந்தைப்பாடல்களைப் பார்த்து வருகிறாள். அவள் பார்க்கும் பாடல்களின் எண்ணிக்கை இப்போது 160 ஐத் தொட்டிருக்கிறது. இவற்றுக்குள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல்கள், ஒரு தடவை பார்க்கலாம், இந்தப் பாடல் சலித்துப் போய்விட்டது என்பது போன்ற பாகுபாடுகளையும் அவளே உருவாக்கி வைத்திருக்கிறாள். 11 ம் மாதத்தில் பேசத் துவங்கியதிலிருந்து எல்லாப் பொருட்களையும் அவளறிந்த பாடல்களின் வழியாகவே சொல்லப் பழகி வருகிறாள். அவளின் பேச்சில் "குவா குவா வாத்து, மாம்பழமாம் மாம்பழம், வண்ண பலூன், மியா மியா பூனைக்குட்டி, பச்சைக்கிளியே வா வா" என்று அடைமொழியோடு கூடிய வார்த்தைகளே மிகுதி.

சமீபமாக பாடல்களைக் குறைத்து கதைகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறேன். நேற்று முன் தினம் எதேச்சையாக கண்ணில் பட்டது இராமாயணம் காணொளி. ஒன்னரை மணி நேரம் அதை அவள் பொறுமையாகப் பார்த்தது எனக்கே தாள முடியாத ஆச்சரியத்தைக் கொடுத்தது. படம் முடிந்தபின் இராமாயணத்தை வெறும் பத்து வரிகளாகச் சுருக்கி அவளது மொழியில் சொல்லிக் கொடுத்தேன்.

"1.இராமன் மாமா வில்லை எடுத்து 'டமார்னு' உடைச்சாரு.

2. இராமன் மாமாவும் சீதா அத்தையும் கல்யாணம் பண்ணிகிட்டாங்க.

3.அப்றம் இராமன் மாமா, சீதா அத்தை, லட்சுமணன் மாமா 3 பேரும் காட்டுக்கு போனாங்க.

4. அங்க ஒரு மானை பார்த்துட்டு சீதா அத்தை 'எனக்கு மானு வேணும் மானு வேணும்' நு அழுதா.

5. உடனே 'நான் புடிச்சித் தர்றேன்'நு இராமன் மாமா மானைத் துரத்திகிட்டு ஓடிப் போனாரு.

6. அப்போ இராவணன் பூச்சாண்டி அங்க வந்து 'வாஆஆ' ந்னு சீதா அத்தையை தூக்கிட்டு போய்ட்டாரு.

7. ஹனுமான் சொய்ய்ய்ய்ங்னு வானத்துல பறந்து போய் சீதா அத்தைகிட்ட மோதிரம் குடுத்துட்டு வளையல் வாங்கிட்டு வந்தாரு.

8. இராமன் மாமாவும் இராவணன் பூச்சாண்டியும் டிஷ்யூம் டிஷ்யூம்னு சண்டை போட்டுகிட்டாங்க.

9. இராவணன் பூச்சாண்டி டமார்னு கீழ விழுந்துட்டாரு.

10. கடைசியா இராமன் கிரீடம் எடுத்து தலைல வெச்சிகிட்டாரு"


ஹையா.. இராமாயணம் முடிஞ்சி போச்சி. :)))) கோர்வையாக இல்லாவிட்டாலும் அவள் இதை மழலையில் சொல்வது கொள்ளை அழகாக இருக்கிறது. வில்லை உடைக்கும் போது இராமனாகவும், சீதையை இழுக்கும் போது இராவணனாகவும் முகத்தில் பிரயத்தனம் காட்டி அசர வைக்கிறாள். கடைசியில் அவள் தலையில் அவளே பாவனை கிரீடம் வைத்துக் கொண்டு கை தட்டிச் சிரிக்கையில் என்னை கெளசல்யையாக உணர வைக்கிறாள். :)



4 comments:

ILA (a) இளா said...

நானும் இந்தப் படத்தை சூர்யாவுக்கு போட்டுக்காட்டினேன். பாதியாச்சு :)

சூர்யா said...

வாழ்த்துக்கள் அக்கா, தங்களின் blogai 2 வருடமாக எதிர் பார்த்து கொண்டிருந்தேன்...
மீண்டும் எழுத ஆரம்பித்ததற்கு நன்றி.. மேலும் தொடர வாழ்த்துக்கள்...அமுதினிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...
--சூர்யா

BD said...

வாழ்த்துக்கள்! இனி உமக்கு குழலினிதன்று, யாழும் பாழே!

கீதமஞ்சரி said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_14.html