Saturday, May 28, 2011

ஈன்ற பொழுதினும்...

ஒரு கண் சிமிட்டலைப் போல கடந்து விட்டது வருடம். நினைக்க நினைக்க மலைப்பாயிருக்கிறது. .. இன்று அமுதினியின் முதல் பிறந்தநாள். இதுவரை ஒரு சில காணொளிகள், ஒலிப்பதிவுகள், கணக்கற்ற புகைப்படங்கள் தவிர்த்து எழுத்தில் அவளை நான் பதிவு செய்யவேயில்லை. 'இன்மையிலிருந்து இருப்புக்கு வருவது போல' என்று ஓர் உவமை சொல்வார் ஜெயமோகன். அம்முவின் செயல்கள் ஒவ்வொன்றும் சொற்களில் தொடங்கி சொல்லின்மையில் சென்று முடிவதாகவே படுமெனக்கு. ஒவ்வொரு முறையும் மனதிற்குள்ளாகவே அதை விரித்து விரித்து.. கையிருப்பிலுள்ள வார்த்தைகளையெல்லாம் கலைத்து அடுக்கி மீண்டும் கலைத்து... முடிவில், இயலாமையினூடாக மெல்லிய பெருமிதம் கசிய 'என்ன பொண்ணு இவ' என்று சந்தோஷமாய் அலுத்துக் கொண்டு முயற்சியை கை விட்டு விடுவேன். இம்முறை அப்படி விட்டுவிட மனமில்லை.

குழந்தை கற்பூரம். ஓரிரு முறைகளில் எதையும் கற்றுக் கொண்டு விடுகிறாள். சாப்பாடு ஊட்டும் போது சில சமயம் 'அம்மாக்கு கண்ணு?' என்று வாய் திறப்பேன். அவளுக்கு நான் ஊட்டுவதைப் போலவே சின்னஞ்சிறு கையை அழகாய்க் குவித்து இல்லாத உணவை என் வாயில் திணிப்பாள். இது அவ்வப்போது நடக்கும்.

கூடவே யூ டியூபில் குழந்தைப்பாடல்களைப் பார்த்தபடி சாப்பிடுவது அவள் வழக்கம். சித்துவையும் என்னையும் தவிர்த்து இந்த வீட்டில் ஈ, எறும்பு, கொசு போன்ற இதர சிற்றுயிர்களைக் கூட காணாது வளரும் அவளுக்கு சிங்கம், புலி, குரங்கு, மாடு, யானை, முயல், பூனை, நாய், ஆடு, காக்கை, கிளி, மயில்,மான் முதலான அத்தனை ஜீவராசிகளும் இந்தப் பாடல்கள் மூலமாகவே பரிச்சயம். க்கா க்கா வெனக் கரைவது, பவ் பவ் வெனக் குரைப்பது, ம்ம்மாஆஆவென்று கத்துவது, சிங்கம் போல வாய் பிளந்து கர்ஜிப்பது, யானையைப் போல கையுயர்த்தி தலையில் ஆசிர்வதிப்பது போன்றவற்றையும் இதிலிருந்தே கற்றுக் கொண்டிருக்கிறாள். மேற்சொன்ன வரிசையில் பூனை அவளுக்கு மிகப்பிரியமான உயிர்.

கடந்த 2 வார காலமாய் அவளுடைய பாடல் வரிசையில் கீழ்க்கண்ட காணொளியையும் சேர்த்திருந்தேன். பூனைக்குட்டி கத்திக் கொண்டே துள்ளுவதைப் பார்ப்பதில் பேரானந்தம் அவளுக்கு. எப்போதோ ஒரு முறை 'பாவம் கண்ணு.. பூனைக்குட்டிக்கு பசிக்குதாம்' என்றும் சொல்லி வைத்திருந்தேன்.

நேற்று சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் இந்தப் பூனையைப் பார்த்தவள், திடுமென அதற்கு சாப்பாடு ஊட்டுபவளைப் போல கை குவித்துக் கொண்டு 'பு பு' (புவா - சாப்பாடு) என்றபடி கணினித் திரையை நோக்கி கை நீட்டினாள். என்ன சொல்ல! அவளின் புரிதலில், அதனை அவள் வெளிப்படுத்திய விதத்தில், அன்பென்று அவளே அறிந்திராத அவளது தூய அன்பினில், இனியெப்போதும் என்னால் மறக்கவியலாத அந்தக் கண நேரக் காட்சியில்... இன்னமும் பிரம்மித்துக் கொண்டேயிருக்கிறேன். கன்னலின் சுவையையும் தேனின் சுவையையும் சொல்லால் வேறுபடுத்திக் காட்ட முயல்வது போல அயர்ச்சி பரவுகிறது மனதில். :)

" தன்னைப் பெற்றேற்கு வாயமுதம் தந்தென்னை தளிர்ப்பிக்கின்றான்" என்று கண்ணனைப் பாடுகிறார் பெரியாழ்வார். தளிர்ப்பித்தல் என்பதன் பொருளை இப்போது தான் உணர்ந்து கொண்டேன்.





3 comments:

ராமலக்ஷ்மி said...

அமுதினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)!

Anonymous said...

:)

KARTHIK said...

வாழ்த்துக்கள் :-))))