Saturday, June 30, 2007

நிறங்களற்ற மாலைப்பொழுதில்...

நடைபழகும் குழந்தையாய்
இருளின் விரல் பிடித்து
எனைச் சந்திக்க வந்தது
ஓர் மாலைப் பொழுது..

பகலின் கடுமைக்கு
மன்னிப்புக் கேட்பதான
சமாதான பாவனை
அதன் முகத்தில்...

துயர்மிகு கவிதையொன்று
எழுதப்படுவதற்கான
சாத்தியங்களையும்
உன் அருகாமையுணர்த்தும்
வெம்மை மிகுந்த
நினைவூட்டல்களையும்

ஒன்றாய்க் கொணர்ந்த
அப்பொழுதினை
வெறுமனே
வழியனுப்பி வைக்கிறேன்...

கோப்பைத் தேநீரும்
போலிப் புன்னகையுமாய்!

Monday, June 25, 2007

மரண தரிசனம்!



அடர்ந்த நினைவுகளின் சுமையோடு
கணங்களாய் நகர்ந்த
பகற் பொழுதொன்றில்...

தொலைபேசியில்
வெம்மையாய் வழிகிறது...
தந்தையை இழந்துவிட்ட
தோழியின் கண்ணீர்.

வெடித்துப் பிளந்து...
குருதியும் நீருமாய் வடியும்
கொப்புளங்களின் சீற்றத்தையொத்து,
சொற்களுக்குள் பொங்கும்
வேதனையின் முன்பாய்
வெறுமனே நிற்கமட்டுமே முடிகிறது
நிராயுதபாணியாய்......

எங்கோ தூரதேசத்துக் காடொன்றில்
பெயரறியா மரத்தில்
வசித்திருந்த யட்சிணி
திடீரெனத் தோன்றி
தன் கூரிய பற்களைப் பதிக்கிறாள்
என் பின்னங்கழுத்தில்!

இயலாமையின் கைவிரிப்பில்
பேச்சிழந்து நிற்கிறேன்...

என்ன செய்ய?

தேற்றுதலுக்கான சொற்களனைத்தும்
வீரியமிழந்து போகின்றன....
ஈடுசெய்ய முடியாத
இழப்புகளின் முன்பாய்!

Sunday, June 24, 2007

பாசக்காரக் குடும்பம் - சந்திப்பு!

மயிலாடுதுறையில் பாசக்கார குடும்பத்தினர் சந்திப்பு இன்னிக்கு கலகலப்பா நடந்துச்சு! பதிவு போடனுமேன்னு அடிச்சு பிடிச்சு ஊருக்கு வந்தா அதுக்குள்ள கண்மணி அக்கா முந்திகிட்டாங்க! வழக்கமா இந்த வலைப்பதிவர் சந்திப்புன்னு அறிவிப்பு வந்தா நான் போறதே இல்லீங்க.. நாம வேற புதுசாச்சே.. போனா யாரப் பாத்து என்ன பேசறது? 'ஏன் இப்டி எல்லாம் எழுதி எங்கள கொடுமைப்படுத்தறீங்க'ன்னு யாராச்சும் சண்டைக்கு வந்துடுவாங்களோன்னு பயம்தான்!

'இது பதிவர் சந்திப்பு' இல்ல.. பாசக்கார குடும்ப சந்திப்புன்னு அபிஅப்பா தெளிவா சொன்னதால தைரியமா கிளம்பிட்டேன். அபிபாப்பாவோட குட்டித்தம்பிய பாக்கப் போனோம்னு தான் பேரு.. அவன பாத்ததென்னவோ வெறும் 10 நிமிஷம் மட்டும்தாங்க.. அங்கியும் சும்மா கும்மி களை கட்டிருச்சு.

நம்ம அண்ணாச்சி நைட்ல இருந்தே 'கிளம்பிட்டிங்களா' 'எத்தன மணிக்கு பஸ் ஏறுரீங்க' ன்னு விசாரிச்சுட்டே இருந்தார். 'ச்சே! என்னவொரு அக்கறை'ன்னு நெகிழ்ந்து போய் காலைல 5.20 க்கெல்லாம் மாயவரத்துல இறங்கி போன் பண்ணினா... 6.15 வரை மனுஷர் போன எடுக்கவே இல்லீங்க! 'தூங்கிட்டாரா.. இல்ல வீட்ட காலி பண்ணிட்டு கிளம்பிட்டாரா'ன்னு தெரியல. அட்ரசும் தெரியாம அல்லாடி ஒரு வழியா நம்ம குடும்ப உறுப்பினர்களை விசாரிச்சு அட்ரஸ் கண்டுபிடிச்சு ஆட்டோல ஏறப் போகும் போது ஃபோன் அடிக்குது! எடுத்தா.. "நீங்க காயத்ரியா? நான் கோபி" ன்னு ஒரு குரல்! "ஓ.. துபாய் கோபியா.. சொல்லுங்க எங்கிருக்கீங்க" ன்னு கேட்டா.. "உங்க பின்னாடி தான் நிக்கறேன்"ங்கிறார். (துபாய்க்காரங்க எல்லாரும் இப்டி தானா? :( ) திரும்பிப் பாத்தா கேத்ரீன், ரீட்டா, வில்மான்னு எல்லா புயலும் சேர்ந்து அடிச்ச மாதிரி பரிதாபமா நிக்கறார் மனுஷன். என்னாச்சுங்கன்னா "3.30 ல இருந்து கூப்பிடறேன்.. அபிஅப்பா ஃபோன் எடுக்க மாட்டீங்கிறார்.. பஸ் ஸ்டேண்ட சுத்தி சுத்தி வந்தேன்.. ஒரே கொசுக்கடி" ன்னு சொன்னார்! அட.. நாம பரவால்ல போலிருக்கேன்னு சந்தோஷம் எனக்கு!

தேடிப்பிடிச்சு வீட்டுக்கு போறதுக்குள்ள அபிஅப்பாக்கு தெளிஞ்சுடுச்சு. (தூக்கத்தை சொன்னேன்! தப்பா புரிஞ்சுக்காதீங்க!!) வீட்டு வாசல்ல நின்னு.. போன் பண்ணினா.. ஓவர் குழப்பத்துல இருந்தார் போலிருக்கு " சொல்லு கோபி" ங்கிறார் என்கிட்ட! "அண்ணாச்சி வாசல்ல பாவமா நின்னுட்டிருக்கோம்.. கதவ திறங்க ப்ளீஸ்"னு கெஞ்சின பின்னாடி பதறியடிச்சு ஓடி வந்தார். :) இவரு நல்லா கவுந்தடிச்சு தூங்கிட்டு... 'அபி பாப்பா ஃபோன எங்கியோ கொண்டுபோய் வெச்சிட்டா'ன்னு அந்த பச்ச புள்ள மேல பழியப் போட்டார். கொஞ்சம் கூட நம்பற மாதிரி இல்ல!

மெதுவா.. 8.30 - 9 மணி இருக்கும் போது.. நம்ம சின்ன கைப்புள்ள ராயல் ராம், கவிஞர் ஜி, இம்சையரசி ஜெயந்தி வந்தாங்க. நலம் விசாரிப்பு.. எங்க சோகக் கதை எல்லாம் பேசி முடிக்கும்போது முத்துலட்சுமி வந்தாங்க... அவ்ளோ தான்.. அப்புறம் அவங்களே தான் பேசினாங்க! நடுவுல அவங்க தெரியாம கமா, புல்ஸ்டாப் ஏதாவது வெச்சாங்கன்னா நாங்க யாராச்சும்.. "எக்ஸ்க்யூஸ் மீ அக்கா! ஒரு பின்னூட்டம் போட்டுக்கலாமா?" ன்னு பர்மிஷன் வாங்கிட்டு பேசிக்கிட்டோம்! பேசினாங்க.. பேசினாங்க அவ்ளோ பேசினாங்க!

10 மணிக்கு மேல சென்ஷி வந்தார். முத்துலட்சுமி அக்காவ தவிர வேற யாரயும் தெரியாததால திருதிருன்னு முழிச்சார். அபிஅப்பா அவர் பாணில.. ஜெயந்திய காயத்ரின்னும்.. என்னை ஜெயந்தின்னும்.. கோபிய ஜி -ன்னும் ஜி-ய கோபின்னும் (ஏதாவது புரிஞ்சுதா?!) அறிமுகப்படுத்தி.. அப்புறம் தெளிவுபடுத்தினார். எவ்ளோ தெளிவுபடுத்தியும் பாவம்! சென்ஷி நிலைமை பரிதாபம்.. "நான் இன்னும் செட்டில் ஆகல போலிருக்கு"ன்னு புலம்பிட்டே இருந்தார்!

எல்லோராலும் ரொம்ப எதிர்பார்க்கப்பட்ட கண்மணியக்கா தான் காலைல 10 க்கு வரேன்னு சொல்லி 1 மணிக்கு வந்து சேர்ந்தாங்க! (டீச்சரே லேட்!) அப்புறம் கூட்டம் செமயா களை கட்டிருச்சு.. அக்கா சொன்ன மாதிரி இம்சையரசி, பணம் குடுத்தாக்கூட வாயத் திறக்கல! "பதிவு பக்கம் வந்து ரொம்ப நாளாய்டுச்சு... நீங்க பேசறது எதுவுமே புரியல" ன்னு சொல்லிட்டு ஒரு குமுதமோட செட்டில் ஆய்ட்டாங்க. ஆனா.. ப.பா சங்கத்த யாரோ கிண்டல் பண்ணினதும் பொங்கி எழுந்து சண்டைக்கு வந்தாங்க! (யாரு நாங்க!!) ஜி-யும், கோபியும் நாங்களும் இருக்கோம்னு காட்டிக்கிற மாதிரி அப்பப்ப பேசினாங்க. கோபி டீச்சர்ட்ட ரொம்ப மரியாதையா பேசினார். சென்ஷிக்கு முத்துலட்சுமியக்காவ கலாய்க்கறதும், ராமுக்கு என்னைக் கலாய்க்கறதும் தலையாய கடமைகளா இருந்துச்சு! அபிஅப்பா செம பிசி. வந்து வந்து பேசிட்டுப் போனார். முத்துலட்சுமியக்கா மட்டும்... அதான் ஏற்கனவே சொன்னனே!! டீச்சர் வந்த உடனே... "எங்கே எல்லாரும் ஒவ்வொருத்தரா ரைம்ஸ் சொல்லுங்க"ன்ற மாதிரி எல்லார் டீடெய்ல்சும் சொல்ல சொன்னாங்க. எந்திரிச்சு நின்னு கைய கட்டிகிட்டு சொன்னோம்!! வேற என்ன...

* கும்மின்னா கண்மணி கண்மணின்னா கும்மி ன்னு ஆய்ட்டதால சீரியஸ் பதிவு போட்டா ஒருத்தரும் மதிக்கிறதில்லன்னு வருத்தப்பட்டாங்க. அதுக்கு தான் கும்மிக்குன்னு தனிப்பதிவு போட்டாங்களாம்.

* குழந்தைகளுக்காக 'குட்டீஸ் ஜங்ஷன்' ன்னு ஒரு பதிவு ஆரம்பிச்சிருக்கிறதா சொன்னாங்க.

* மூத்த பதிவர் (!!) ராயல் ராம்... வேறு சில மூத்த பதிவர்களைப் பற்றியும், காணாமல் போய்விட்ட பதிவர்களைப் பற்றியும், தமிழ்மணம் பற்றியும்
பேசினார். ரொம்ப சின்ன பெண்ணான நான் ஜெயந்தி போலவே முழிக்க வேண்டியிருந்தது!

* Wordpress templates பயன்படுத்துவதில் இருக்கிற சாதக பாதகங்களைப் பேசினார். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் என்னை கலாய்ச்சதோட அப்பப்ப என் கவிதை மற்றும் மொக்கை பதிவுகளை பெரிய மனசு பண்ணி பாராட்டினார்.

* முத்துலட்சுமி சீரியசாய் நிறைய பேசினதால எல்லாத்தயும் நியாபகம் வெச்சுக்க முடியல. முக்கியமா.. "நாம இப்பிடியெல்லாம் கும்மி அடிக்கிறோமே.. இது சரியா தப்பா" ன்னு நாயகன் ஸ்டைல்ல கேட்டாங்க.. அதுக்கு ராம் "நாலு பேர பாதிக்காதுன்னா எந்த கும்மியும் தப்பில்ல" ன்னு அதே ஸ்டைல்ல பதில் சொல்லிட்டார். குறிப்பாக.. கும்மியடிப்பவர்கள் அனைவரும் நம் குடும்பத்தவர்கள் என்பதாலேயே அது சரி என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

* புதிய பதிவர்களில்.. குசும்பன் மற்றும் குட்டிப்பிசாசின் பதிவுகள் நன்றாக இருப்பது பற்றி பேசப்பட்டது. அய்யனார் நாள் முழுக்க பேச்சில் அடிபட்டுக் கொண்டே இருந்தார். ( விக்கல் எடுத்துச்சா அய்யனார்?) பின்னூட்ட கும்மிகளைப் பற்றியும் பேசிச் சிரித்தோம். சென்ஷி வழக்கம் போலவே பேச்சிலும் "ரிப்பீட்டே" போட்டுக் கொண்டிருந்தார். மை ஃப்ரண்ட், சுகுணாதிவாகர், தமிழ்நதி, ஜி3, அவந்திகா ஆகியோர் பற்றியும் பேசினோம்.

* இது பாசக்கார குடும்ப சந்திப்பாக மட்டுமல்லாமல் ப.பா சங்கத்தின் செயற்குழு கூட்டமாகவும் அமைந்தது தனிச்சிறப்பு! (கண்மணி, நான், ஜெயந்தி)

* பின்நவீனத்துவம் (பின்னால தத்துவம்?) பற்றிக்கூட பேச ஆரம்பித்தோம்.. எங்கள் யாருக்குமே அது பற்றி தெரியாததால் நிறுத்திவிட்டோம்! :))

* அபிபாப்பாவும் முத்துலட்சுமியக்காவின் மகள் மாதினியும் இணைந்து பதிவு தொடங்கவிருப்பது புதிய தகவல்! விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்!


இது தவிர அபிஅப்பாவின் பொறுப்புணர்ச்சி, அபிபாப்பாவின் திறமைகள் போன்றவை தெரிய வந்தது. ஜன்னல் கதவை திறக்கக்கூட.. "பாப்பா இத எப்பிடி திறக்கனும்?"ன்னு சந்தேகம் கேட்கிறார் அண்ணாச்சி.

இறுதியாக அபிதம்பியை மருத்துவமனையில் சந்தித்தோம். பஞ்சுப்பொதி போல, கொள்ளை அழகுடன் உள்ளங்கைகளை இறுக்கிகொண்டு மும்முரமாய் தூங்கிக் கொண்டிருந்தார்! இரவெல்லாம் கண்விழித்து அழுததன் களைப்பாம்!! நேரமின்மையால் 10 நிமிடங்கள் மட்டுமே அங்கிருக்க முடிந்தது.

காலையில் சொதப்பி விட்டதால் இரவு நான் ஊருக்கு திரும்பி வரும்போது அப்பப்ப போன் பண்ணி விசாரிச்சுட்டே இருந்தார் அண்ணாச்சி! "நீங்க பத்திரமா போய்சேர்ந்துட்டீங்கன்னு (!!??) தெரிஞ்சா தான் நான் நிம்மதியா தூங்குவேன்"னு சொன்னார். 12.42 க்குக்கூட பேசினவர்.. 12.51 க்கு நாங்க வீட்டுக்கு வந்து போன் பண்ணும் போது தூங்கிட்டார். :) எடுக்கவே இல்ல!!

ஆக மொத்தம் நான் பிற்காலத்துல எழுதப்போற சுயசரிதைல 'மறக்க முடியாத அனுபவங்கள்' ன்னு ஒரு அத்தியாயம் எழுத வாய்ப்பளித்த பாசக்கார குடும்பத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்!!

பி.கு : மதியம் சாப்பாட்டில் நடப்பன, பறப்பன, நீந்துவன எல்லாமே இருந்தது நிஜம் தான். நேரமின்மை காரணமாகவும் நண்பர்களின் கேலி கிண்டலாலும் மிகககக் குறைவாகத் தான் சாப்பிட்டேன் என்பதை இதன் மூலம் கண்மணி அக்காவிற்கு தெரிவித்துக் கொள்கிறேன்! :(

Friday, June 22, 2007

எட்டுக்குள்ளே வாழ்க்கை இருக்கு!!

எட்டு விளையாட்டுக்குள்ள என்னையும் இழுத்துவிட்டிருக்கார் திரு.குசும்பர்! இதுவும் குசும்பு தானான்னு தெரியல! இருக்கட்டும். என் தன்னடக்கத்தை பீரோவுல வெச்சி பூட்டிட்டு என்னைப் பத்தி சொல்றேன்! (எட்டு மட்டும் போதுமா குசும்பரே?)

1. தமிழாசிரியை என்ற அடையாளம் :

தமிழ்நாட்டுல தமிழ் இலக்கியம் படிக்கிறதும் தற்கொலை பண்ணிக்கறதும் ஒண்ணுங்க. ஆனாலும் தமிழை விரும்பி படிச்சதிலயும் தமிழாசிரியையா இருக்கறதிலயும் பெருமைதான் எனக்கு. இலக்கியம் படிக்கும் போது ஏதாவது ஒரு வரில மனசு ஸ்தம்பிச்சு நிக்கும் அப்டியே. 'இத விட என்ன பெரிசா இருக்கு வாழ்க்கைல'ன்னு தோனும். பணத்துக்காக படிக்காம மனசுக்காக படிச்சோம்னு ஒரு நிறைவு இருக்கு. அதே போல ஆசிரியைங்கிற ஸ்தானம் ரொம்ப உன்னதமானது. வயதுக்கு மீறின பொறுப்புணர்வோட... என் மாணவிகளுக்கு படிப்பைத் தாண்டி துணிச்சலாவும் தெளிவாகவும் செயல்படற அளவுக்கான உள்ளீடுகளை குடுத்திருக்கேன்ற நம்பிக்கைதான் இந்த பணில கிடைச்ச ஆத்ம திருப்தி.

2. அன்பு செய்தல்:

யாரையாவது பிடிச்சு போய்டுச்சுன்னா சில்லுன்னு ஒரு வாளி நிறய தண்ணி எடுத்து அப்டியே தலைல கொட்ற மாதிரி எந்த எதிர்பார்ப்பும் இல்லாம அன்பு காட்றது என் ஸ்டைல். வந்து போன காதலர்களை பூங்காக்கள் நினைவு வெச்சிக்குதோ இல்லியோ என் மனசுக்குள்ள வந்து போனவங்க யாரையும் நான் மறக்கறதே இல்ல. தொடர்பே இல்லாம சில வருஷங்கள் இருக்கறவங்களைக் கூட பழைய அன்பார்ந்த நினைவுகளோட திடிர்னு சந்திச்சு திக்குமுக்காட வெப்பேன்.

3. கணிணியும் குழப்பமும்:

கம்பரோ.. கபிலரோ கணிணி பத்தி ரெண்டு கண்ணி கூட எழுதாம போனது என் துரதிருஷ்டம். வீட்டுல ஓரமா தேமேன்னு உக்காந்திருக்கிற இந்த பொட்டிய என்னால எவ்ளோ முடியுமோ அவ்ளோ இம்சிச்சிருக்கேன். என்ன இது? எப்டி பண்ணனும்னு யாரயும் கேக்காம சுயமா கத்துக்க முயற்சிசெஞ்சு... photo shop, vedio editing, tamil type writing லொட்டு லொசுக்குன்னு எல்லாம் பழகினேன். பாவம் 2 தடவை என் கொடுமை தாங்காம உசுர விட்ருச்சு. தம்பி தான் காப்பாத்தினான். கண்ணுக்கு தெரியற கீபோர்டு, மெளஸ், மானிட்டரோட ஒன்னுமே புரியாத Html குழப்பங்களை தாண்டி பதிவு ஆரம்பிச்சு.. 'சங்கம்' வெச்சு தமிழ் வளர்க்கிற (!?) அளவுக்கு வளர்ந்திருக்கிறது பெரிய சாதனையா படுது எனக்கு.

4. முனிவின்மை:

முனிவுன்னா வெறுப்பு! (பெரிய மீசை வெச்ச சாமியோ.. தமிழ்சினிமாவோ இல்ல!!) எல்லாரயும் நேசிக்க முடியல என்னால.. ஆனா யாரயுமே வெறுக்காம இருக்க முடியுது. ஒருத்தர் மேல கோபத்தையோ வெறுப்பையோ சுமந்துகிட்டு அலையறது.. ஒரு பாத்திரத்துல சாக்கடை தண்ணியோ.. மலமோ எடுத்து வீட்டுக்குள்ள வெச்சுக்கற மாதிரி. மனசு நாறிப் போய்டும். என்னையும் என் ஒழுக்கத்தையும் பத்தி புறம்பேசிட்ருந்த ஒரு நண்பருக்கு உடல்நிலை சரியில்லாதப்போ...அவர் பிறந்தநாள் நினைவு வெச்சிருந்து கேக்கும் பழமுமா வீட்ல போய் சந்திச்சு ஆறுதல் சொல்லிட்டு வந்தேன். என்னை வழியனுப்பும்போது அவர் முகத்துல இருந்த நெகிழ்வு!.. அப்பவே தெரிஞ்சுது மறுபடி என்னை தப்பா பேச மாட்டார்னு. ம்ம்..
"இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு"

5. நேர்மை :

"ஒருவரை ஒருவர் அடுதலும் தொலைதலும் புதுவது அன்று உலகத்தியற்கை" கிட்டத்தட்ட ரெண்டாயிரம் வருஷம் முன்னால எழுதப்பட்ட வரி... ஒருத்தன ஒருத்தன் ஏமாத்திக்கறதும் ஏமாறுறதும் ஒன்னும் புதுசில்லடா ன்னு சொல்றாங்க. இத்தனை வருஷத்தில நான் பலமுறை ஏமாந்திருக்கேனே தவிர யாரயும் ஏமாத்தினதில்ல. குறிப்பா எனக்கு முழு சுதந்திரம் குடுத்திருக்கிற என் அப்பா.. அம்மாவை. 99.99 சதவீதம் வீட்ல எந்த விஷயத்தையும் நான் மறைக்கறதில்ல. பணத்துலயோ.. மனசுலயோ யாரையும் நம்ப வெச்சு ஏமாத்தினதில்லங்கிறது ஒரு கர்வமாவே இருக்கு எனக்கு. போலித்தனமோ பாசாங்கோ இல்லாம வெளிப்படையா பழகறதும் ஒத்துவராதுன்னு தோணினா நேர்மையா சொல்லிட்டு விலகிடறதும் என் ப்ளஸ்ன்னு நினைக்கிறேன். ஒரு தடவை செல் ரீசார்ஜ் பண்ண கடைக்கு போனப்ப, கடைக்காரர் ரொம்ப நல்லவர்னு வேற ஒருத்தர் புகழ்ந்துகிட்டிருந்தார்.. அதுல மயங்கியோ என்னவோ 100 ரூபா டாப் அப் கார்டுக்கு என்கிட்ட கார்டு + 400 ரூபாய் குடுத்தார் அவர். (நான் குடுத்தது 500னு நினைச்சிட்டார் போல) திருப்பி குடுத்துட்டு வீட்டுக்கு வந்து அம்மாட்ட சொன்னேன்.. "அவர் நிஜமாவே நல்லவர்தான் போலிருக்குமா.. அதான் அவர் பணம் அவர விட்டு போக மாட்டிங்குது"ன்னு.

6. தைரியம் :

இயல்பாவே தைரியம் ஜாஸ்தி எனக்கு.. சில சமயம் குருட்டு தைரியமாவும் இருக்கும் அது. நான் வெளியூர் போனா நைட் 11.30 வரை என்ன ஆனேன்னு வீட்ல யாருமே கவலைப்பட மாட்டாங்க. அதுவரை தான் பஸ் இருக்கும். அதுக்கு பிறகு தான் போன் பண்ணுவாங்க. பொதுவா பொண்ணுங்களூக்கு குறிப்பா வேலைக்கு போற பொண்ணுங்களுக்கு பெரிய பிரச்சினையே ஆண்கள் தான். பஸ்ல, பொது இடத்துல, வேலை செய்யற இடத்துலன்னு நிறைய்ய பிரச்சினைகள சந்திச்சு சமாளிச்சு வந்திட்டிருக்கேன்னா அதுக்கு அம்மாவும்.. பாரதியும் தான் உள்ளீடா இருக்கணும். அதேபோல புடவை.. நகைன்னு அலையாம கதை ..கவிதைன்னு அலையற பொண்ணு. மத்தவங்க சொந்த விஷய்த்துல மூக்கை நுழைக்கலன்னா
பொண்ணா பிறந்ததுக்கே அர்த்தமில்லயாமே அப்டியா? இல்லாட்டி போகுது நாம என்ன டிக்ஷ்னரியா?

7. கடவுளின் பிள்ளைகள்:

அம்மா.. அப்பா.. தம்பின்னு ஒரு கூட்டுக்குள்ள LIC logo ல நடுவுல இருக்குற தீபம் மாதிரி பாதுகாப்பா வாழும்போதே 'தனிமை' 'தனிமை' னு புலம்பிட்ருக்கற எனக்கு.. ஆதரவற்றோர் இல்ல குழந்தைகள பாக்கும்போது நமக்கு இருக்கறது நிஜமா தனிமை உணர்வா.. இல்ல கொஞ்சம் அதிகப்படியான கொலஸ்ட்ராலான்னு சந்தேகம் வரும். பிற்காலத்துல வெங்கடாஜலபதி சாமி அனுக்கிரகம் இருந்தா இப்டி ஒரு இல்லம் ஆரம்பிக்கனும்னு கனவு.. ஏக்கம்.. லட்சியம் இருக்கு. முடியலன்னா குறைஞ்சபட்சம் ஒரே ஒரு குழந்தைய வளர்க்கவாச்சும் கடவுள் கருணை காட்டனும்.

8. குடுத்துட்டு போறேன் :

ரத்ததானமெல்லாம் தொடர்ந்து செய்ய முடியலன்னாலும் உயிருக்கு போராடின ஒருத்தருக்கு ரத்தம் குடுக்கிற வாய்ப்பை ஒரு முறை கடவுள் கொடுத்தார். கண்ணையும் குடுத்துட்டு போற எண்ணமிருக்கு. என்ன வழிமுறைகள்னு விசாரிக்கனும். அதுக்கு முன்னாடியே பதிவு போட கூப்பிட்டிங்களே? :( சரி எழுதிக் குடுத்துட்டு சொல்றேன். இதெல்லாம் பெருமைன்னு இல்ல.. இருந்தாலும் எண்ணிக்கைக்காக சேர்த்துகிட்டேன்.

அவ்ளோதான்!! ச்சே சுயபுராணம் பாடி பழக்கமே இல்ல.. இப்டி உண்மை எல்லாம் சொல்ல வெச்சிட்டாங்களே? :(

நான் அழைக்கும் அடுத்த எண்மர்!

1. தமிழ்நதி

2. இராம்

3. குட்டிபிசாசு

4. ஜி3

5. மை ஃப்ரண்ட்

6. முத்துலட்சுமி

7. டுபுக்கு

8. தம்பி


விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

Thursday, June 21, 2007

மறுபடியும்!!


என் சேலைப்பூக்கள்
தினமும் விரிகின்றன
நறுமணத்தோடு...

மனதில் கோர்த்து வைத்த
கவிதை ஒன்று
எழுத்தாக்கும் முன்பே
சிதறிப் போகிறது
சொற்களாய்...

சதா பேசிக்கொண்டிருக்கும்
என் புத்தகங்கள்
இப்போதெல்லாம்
முகம் திருப்பிக் கொள்கின்றன...

பேசுவதற்கென
சேகரித்த வார்த்தைகள்
எதிர்பாராத வேளையில்
திருடு போகின்றன....

நானென்ன செய்ய?

காலம் மீண்டும் மீண்டும்
புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறது
காதலையும்
அதைத் தொடர்ந்த
அபத்தங்களையும்!

Monday, June 18, 2007

என் தனியறை




வெகுசில வருடங்களாய்த்தான்
என்னோடிருக்கிறது இது.

கனத்த சுவர்கள்
மற்றும் அதனினும் கனத்த
மெளனங்களால் சூழப்பட்டு....

வேறெங்கும் பயணம் போகவியலாத
துயரத்தையும்
என்றும் கண்மூடவியலாத
அவஸ்தையினையும்
முணுமுணுப்பாய் வெளியிட்டபடி!

எவரும் இதுவரை அறிந்திராத
என் அபத்தங்கள்...
அந்தரங்கங்கள்...
அவமானங்களைத் தொடர்ந்த
மருகல்கள்...
முழங்கால்களுக்கிடையே
புதைந்து போகும் விசும்பல்கள்...
பலவற்றையும் அறிந்து வைத்திருக்கிறது.

நானே உணர்ந்திராத என் காதலை
ஒரு அதிகாலையில் எழுப்பி
என்னிடம் சொன்னதும்
இதுவாய்த்தான் இருக்க வேண்டும்.

தினமும் கசியும் இருளினூடே
என் உறக்கத்தைக்
கண்விழித்துப் பார்த்திருக்கும் இவ்வறை...
எதிர்பார்த்திருக்கலாம்
தனக்கென்றோர்
கவிதை எழுதப்படுவதையும்!

Saturday, June 16, 2007

கோபித்த காதல்!




என் பூந்தோட்டத்தின் நடுவே

மற்றுமொரு பூவாய்ப்

பூத்திருக்கிறது உன் மீதான

என்
கோபம்!

Friday, June 15, 2007

பறத்தல் அதன் சுதந்திரம்

பதிவு ஆரம்பித்த வேகத்தில் 50 இடுகைகள்! எனக்கே மலைப்பாகத்தான் இருக்கிறது. என்றாலும் எண்ணிக்கைகள் மட்டுமே தரத்தை நிர்ணயிப்பதாய் ஆகிவிடாது. தினமும் எழுதுகிறோம் என்பது மகிழ்ச்சியளித்தாலும் என் எழுத்தின் தரம் எப்போதும் என் ஆராய்ச்சிக்குட்பட்டதாகவே இருந்து வந்திருக்கிறது. துவைக்கும் போதெல்லாம் சாயம் வெளுப்பது போல முதலில் திருப்திகரமாய் இருப்பதாய் தீர்மானித்திருந்த எழுத்து நாளடைவிலான மீள் வாசிப்புகளின்போது அபத்தமாய்ப் பல்லிளிப்பதை உணர்ந்திருக்கிறேன். என்றபோதும் இவை என் மனதின் வளர்சிதை மாற்றங்களுக்குச் சாட்சியாய் இருப்பதனால் இவற்றை ஒருபோதும் அவமானகரமானவையாய் நான் எண்ணிப் பார்ப்பதில்லை.

என் பதிவில் கவிதைகள் மிகுதி. தமிழின் மீது தனித்ததோர் வாஞ்சை தோன்றிய நாள் முதலாய் பெரும்பாலும் கவிதைகளே என்னை ஈர்த்திருக்கின்றன. அதன் கட்டுப்பாட்டில் நானோ.. என் கட்டுப்பாட்டில் அதுவோ இருப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக நிகழ்ந்து வருகிறது. இந்த 51 வது இடுகையை என் வாசிப்பனுபவம் சொல்வதாக தயாரிக்க முடிவு செய்த போதும் 'என்னைச் சொல்' 'என்னைச் சொல்' என்று கவிதை நூல்களே மனதில் கோஷமிட்டன.

"பறத்தல் அதன் சுதந்திரம்" இருபதாம் நூற்றாண்டில் தமிழ்ப் பெண் கவிஞர்களின் கவிதைகளுடைய தொகுப்பு. பொதுவாகவே தொகுப்பு நூல்களில் எனக்கு தனிப்பட்ட ஈர்ப்பு உண்டு. தலைப்பையும், படைப்பாளர் பெயரையும் பார்க்காமல் திடுமென எடுத்துப் படிப்பேன். அந்த எழுத்தின் தடம் பிடித்து எழுதினவரை அடைய முடிந்தால் எதிர்பாராத மகிழ்ச்சி ஒன்று தண்டுவடத்தைத் தாக்கும்! அதில் ஒரு கிறக்கம் எனக்கு!

இந்த தொகுப்பு பெரியார் பல்கலைக்கழத்தில் இளங்கலை மாணவர்களுக்கான பாடமாக வைக்கப்பட்டுள்ளது. கற்பிக்க வேண்டிய கட்டாயத்தின் பேரில் படிக்கத் தொடங்கி பின் விரும்பிப் படிக்க வேண்டியதாயிற்று. தொகுப்பென்பதற்காக நிறைய கவிதைகளை அனாவசியமாய் சேர்த்திருக்கிறார்கள். என்றாலும் பல கவிதைகள் முகத்திலறைகின்றன.
ஈழத்துக்கவிஞர்களின் படைப்புகள் மிகுதி என்பதால் புலம் பெயர்ந்த நேரத்துத் துயரம் அதிகமாய் பிரதிபலிக்கிறது. இந்தக் கவிதைகளினூடே நம் தமிழ்நதியையும் சந்தித்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு. இனி தொகுப்பிலிருந்து நான் நேசித்த கவிதைகள் மட்டும் உங்கள் வாசிப்பிற்கு!

1. பறத்தல் அதன் சுதந்திரம்

- ப.கல்பனா

ஓடி ஓடித்திரிந்து
இமை கொட்டாமல் கவனித்துத்

தேன் குடிக்கும்
அந்த நேரமாகப் பார்த்துப்
பிடித்தேன் பட்டாம்பூச்சியை..
எவ்வளவு சிரமப்பட வைத்துவிட்டது

முள் தைத்து
விரல் ரணமாகி
இப்போது வலித்தது

மூடித்திறந்து
மூடும் கைகளில் கர்வமாய்
என்ன வண்ணம் என்ன வேகம்

நசுக்கி விடுவாளோ பதப்படுத்தி
குண்டூசி செருகிப் பாதுகாப்பாளோ
பூவருகே விடுவாளோ...

தூசிக்கால்களில் வண்ணத்துகள்கள்
அதன் ஆன்ம உதிர்வு

சிறகை அசைத்துப் பார்த்தது
பறத்தலுக்கான
கடைசி முயற்சியாய்

விட்டு விட்டேன்
அதே பூவருகே.

-------------------------

2. யாரிடத்தில் முறையிட

- கலைவாணி ராஜகுமாரன் (தமிழ்நதி)

வானமும் ஏரியும் கூடும் அழகு குறித்து
ஓடுகின்ற பேருந்தில் வைத்தென் தோழி சொன்னாள்..
இலையுதிர் கால மரங்களின் நிறங்கள் பற்றி
வானொலியில் யாரோ ஆச்சரியப்படுகிறார்கள்
மேலும் பனியின் வெண்மை குறித்தும் கூட
பேசுகிறார்கள்.

என் பேனா மெளனித்திருக்கிறது.

வீதியோரத்தில் உறங்கும் குழந்தைகளை
உயிரையே உண்டுயிர்க்கும் பசியை
என் கூடப்படித்தவள்
கபாலம் பிளந்திறந்த கொடுமையை
இன்னும் என் வீட்டுக் கிணற்றடி செம்பரத்தை
செத்துப் போனதை
நாங்கள் திரும்பி வருவோமென காத்திருந்து
எழும்புந் தோலுமாய் செத்துக்கிடந்த
நாய்க்குட்டியைப் பற்றி
போகிற போக்கில் காதில் விழுகிறது

என் பேனா செவிடாயிருக்கிறது.

உள்ளுலவும் ஒளியை
ஏந்தி வரும் வழியில்
எந்தக் காற்றோ அசைக்கும்
சங்கீதம் போல ஒன்று
உதடு தொடும் நேரம்
வெறும் சத்தமாய்த் தேய்ந்து போகிறது.
அற்பாயுளில் மடியும் கவிதைகட்கு
கருவறையே கல்லறையாகிறது.
புணரும் பொழுதில் கூட கடிகாரமே
கண்களில் நிற்கிறது.

என் பேனா மலடாயிருக்கிறது.

-----------------------

3. கருவறை வாசனை

- கனிமொழி

அது சந்தனம் இல்லை
ஜவ்வாதோ, இப்போது
அழகான புட்டிகளில் விற்கும்
வாசனைத் திரவியமோ, எதைப்போலும்
இல்லாத புதுமணம்.
சின்ன வயதில் அவளைக்
கட்டிக்கொண்டு தூங்கியபோது
மெல்லியதாய் வந்து மூக்கைத் தழுவும்.
அவள் அவிழ்த்துப்போட்ட சேலையைச்
சுற்றிக்கொண்டு திரிந்தபோது
அவளின் வாசனையை
பூசிகொண்டதாய்த் தோன்றும்.
முதல் மழையின் மண்வாடை போல்
மூச்சு முட்ட நிரப்பி வைத்துக்கொள்ளத்
தூண்டும் அம்மாவின் வாசனை.
எங்கெங்கோ பட்ட காயங்களுக்கு மருந்தாய்
அவள் மடியில் தலை வைத்துத்
தூங்கியபோதெல்லாம் பாதுகாப்பாய்
என்னைத் தாங்கிய மணம்..
அவள் என்பதே அதுவும் சேர்ந்தது தான்.
வளர்ந்துவிட்ட மனதின் சுவர்கள்
அவளைக் கட்டிக்கொள்ள விடாதபோதும்
தேவைகளின் தடம் பிடித்து
தூர வந்துவிட்ட போதும்
எனக்கு மட்டுமே புரியும்
அவளின் கருவறை மணத்தை
அள்ளி அள்ளி என் வீடெங்கும் தெளித்து
சுருண்டு படுத்துத் தூங்கிப் போக வேண்டும்.

--------------------------

4. என் பூர்வீக வீடு

-சல்மா

முற்றிலுமாக
தன் அடையாளமிழந்து
நொறுங்கிக் கிடக்கிறது
முன்பு நானிருந்த
என் பூர்வீக வீடு

இன்று
நானங்கு இல்லையெனினும்
அது என்னோடுதானிருந்து
கொண்டிருக்கிறது
என் பால்ய காலத்தோடு

நான் பறந்து கொண்டிருக்கிறேன்
தடுப்பரண்களுடனான
அதன் வனத்தில்

நிலா இருந்த நாட்களிலும்
இல்லாத நாட்களிலும்
என்னை ஒளித்து வைத்திருந்த
தூண்களும்

முதல் தீட்டில் பயந்திருந்த
என்னோடிருந்த
கழிப்பறைச்சுவரும் கூட
சரிந்து கிடக்கிறது
ஏனைய தன் ரகசியங்களோடு

பெரும்பாலான பொழுதுகள்
ஒண்டியிருந்திருக்கிறோம்
சுவரின் ஒருபுறம் நானும்
மறுபுறம் இந்த வேம்பும்

தன் சுவரிழந்த பின்
அது
தன் நிழல் உதிர்த்த
நிலம் பார்த்து தனித்திருக்கிறது
தான் மட்டும்

என் விளையாட்டின் தடயங்கள்
இன்றும் கூட எஞ்சியிருந்திருக்கலாம்
மச்சு அறைச்சுவரொன்றில்.

------------------------

5. வேலி

- ஊர்வசி

நட்சத்திரப் பூக்களை
எண்ணமுடியாமல்
மேலே கவிழ்ந்தபடி கூரை
ஒட்டடைகள் படிந்து
கருப்பாய்ப் போனது.

கம்பி போட்ட சாளரம் கூட
உயரமாய்.. ஆனாலும் திறந்தபடி..
அதனூடே காற்று
எப்பொழுதும்
மிகவும் ரகசியமாய்
உன்னிடம் என்னை
அழைக்கிற காற்று

என்னைச் சூழவும் சுவர்கள் தான்
நச் நச் என்று
ஓயாமல் கத்திக் கொண்டிருக்கிற
பல்லிகள் ஊர்கிற சுவர்கள்

அவையும்
ஒட்டடைகள் படிந்து
எப்போதோ கருத்துப் போனவை.

உனக்காக நான்
தனிமையில் தோய்ந்தவளாய்
இங்கே காத்திருக்கிறேன்
பழைய பஞ்சாங்கங்களில்
புதிதாக நம்பிக்கை தருவதாய்
ஒரு சொல்லைத் தேடிப்பார்த்தபடி..

எப்பொழுதுதான் என்னால்
நீ வசிக்கின்ற அந்த
திறந்த வெளிக்கு வரமுடியும்?
உன் இருப்பிடம்
இங்கிருந்து வெகு தொலைவோ?
இரண்டு சிட்டுக்குருவிகளை
இங்கே அனுப்பேன்
அல்லது
இரண்டு வண்ணத்துப்பூச்சிகளையாவது.

----------------------------

பதிவு மிகவும் நீண்ண்ண்டு விட்டது!! இருக்கட்டும். விமர்சிப்பதில் விருப்பமில்லை இப்போது. வாசித்தேன் நேசித்தேன் என்பதை சொல்லிப் போகிறேன் அவ்வளவே!

Tuesday, June 12, 2007

இப்படிக்குக் காதல்!




மனதின்
இனிப்புப் பிரதேசம் ஒன்றில்
வசிக்கிறாய் நீ!

உயிரின் தந்தி அதிர..
எங்கோ சில பூக்கள் உதிர...
உன்னில் மோதி மீளும்
நினைவலைகள்
ஒவ்வொரு முறையும்
விட்டுப் போகின்றன...

கொஞ்சம் கர்வத்தையும்
ஒரு சில கவிதைகளையும்!

Saturday, June 9, 2007

தொலையாத தொலைவுகள்..

பேசிப் பேசித் தீர்த்தபின்பும்
பேச நினைத்த வார்த்தை ஒன்று
தொக்கி நிற்கிறது உதட்டில்
எப்போதும்...

உனக்கான என் கடிதங்களில்
முற்றுப்புள்ளிகளின் அருகே
தேங்கி நிற்கும் மெளனத்தை
படித்ததுண்டா நீ?

வட்டத்தின் முடிவைத்
தேடுவதையொத்து
உன்நினைவைப்
பற்றியலைகிறது என் இருப்பு..

பேச்சிலும்...
மடல்களிலும்...
நியாபகக் குப்பிகளிலும்...
இட்டு நிறைத்த பின்னும்
இன்னும் மிச்சமிருக்கிறது
காதல்!

சொல்லேன் எனக்கு?

இந்த தூரங்களை
எதனை இட்டு நிரப்ப?

Thursday, June 7, 2007

அன்புள்ள உனக்கு...





மழையில் நனைந்த பறவையாய்
அடிக்கடி சிலிர்த்துக் கொள்கிறது
மனசு!

செயல்கள் எதிலும்
முழுமையில்லை

கண் பார்த்துப் பேசுதல்...
சிந்தாமல் உணவருந்தல்...
கனவுகளற்ற உறக்கம்....
புருவ மத்தியில் தியானம்...

ம்ஹூம்...
எதுவும் சாத்தியமில்லை
இப்போது!

காலில் இடித்துக் கொண்டு
கல்லைத் திட்டுவதாய்
என்னைக் குற்றம் சாட்டுவது
எளிதாயிருக்கிறது உனக்கு!

என்றுமே நீ
அறியப்போவதில்லை

உன் காதலியாய் இருப்பதின்
கஷ்டங்களை!

Monday, June 4, 2007

சமையற்கலை - ஓர் ஆய்வியல் அணுகுமுறை!

ஹி..ஹி.. தெரியும். தலைப்பு பாத்து ஏதோ சீரியஸ் மேட்டர்னு நினச்சிட்டிங்க தானே? அதான் இல்ல! சமையல் கலையை கத்துக்கிறதுக்கு நான் என்னெல்லாம் முயற்சி மேற்கொண்டேன்.. அதுக்கு எத்தனை விதமான கூர்நோக்கு, நுண்ணோக்கு மற்றும் தொலைநோக்கு அணுகுமுறைகள் கையாளப்பட்டனன்னு இந்த கட்டுரைல (!) விம் பார் போட்டு விளக்கப் போறேன். அதுக்கு தான் இந்த தலைப்பு!!

நான் ரொம்ம்ம்ம்ப கஷ்டப்பட்டு +2 படிச்ச கண்ணீர் கதைய சொல்லிருக்கேன் இல்ல? அதனால.. எக்ஸாம் முடிஞ்சதும் ஒரே டயர்ட் எனக்கு! ஸ்ஸ்ஸ்... அப்பாடான்னு நிம்மதியா சாப்டு, தூங்கி, குட்டீஸ் கூட லூட்டி அடிச்சு, ஊர் சுத்தி, படம் பார்த்து.. சொந்தக்காரங்க வீட்டுக்கெலாம் போய் நலம் விசாரிச்சு.. சந்தோஷத்தோட உச்சத்துல இருந்தப்போ திடீர்னு நம்ம புத்தருக்கு வந்த மாதிரி ஒரு ஞானோதயம் வந்து தொலச்சிடுச்சு. "இப்படி எத்தனை நாள் ஆட்டமும் பாட்டமுமா இருப்ப காயத்ரி? உனக்கு என்னிக்கு தான் பொறுப்பு வரும்"னு என் மனசாட்சி என்னை பெஞ்ச் மேல நிக்க வெச்சு கேள்வி கேட்டதால நான் அந்த விபரீத முடிவ எடுக்க வேண்டியதா போச்சு. அதாங்க.. சமையல் கத்துக்கிறதுன்னு!

உடனே நேரா அம்மாட்ட போய் வீரசிவாஜி மாதிரி விறைப்பா நின்னு, "ஆணையிடுங்கள் அம்மா.. நான் செய்து முடிக்கிறேன் சமையலை" ன்னு வசனம் பேசினேன். புள்ளைக்கு பொறுப்பு வந்தா பண்டிகைக்கு கூழ் ஊத்தறேன்னு அம்மா வேண்டியிருந்தாங்க போல! உடனே நடிகர் திலகம் சிவாஜி மாதிரி எமோஷனலா கண்ணீர் ததும்ப சமயபுரம் மாரியம்மன பாத்து ஒரு லுக் விட்டாங்க! அப்புறம் சமையல் க்ளாஸ் ஸ்டார்ட் ஆச்சு. என்னிக்கு என் திட்டம் வெளில தெரிய வந்துச்சோ அன்னிக்கே.. "அம்மா! நான் லைஃப்ல சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. நான் வாழணும்னு ஆசைப்படறேன்" அப்டின்னு சொல்லிட்டு சித்தி வீட்டுக்கு போய்ட்டான் என் தம்பி. நான் இதுக்கெல்லாமா அசருவேன்? "யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க"ன்னு பாட்டு பாடிட்டே சமைக்க ஆரம்பிச்சேன். அதென்னமோ தெரிலங்க.. நான் சமைக்க ஆரம்பிச்சவுடனே எங்கம்மாக்கு பக்தி முத்திப் போச்சு. என்னிக்கெல்லாம் நான் சமைக்கிறனோ அன்னிக்கெல்லாம் அவங்க விரதம் இருப்பாங்க! இருக்கட்டுமே? 'அப்பா'ன்னு ஒரு அப்பாவி ஜீவன் இருக்கும்போது எனக்கென்ன கவலை? அவர் ரொம்ம்ம்ம்ப நல்லவர்.. நான் எப்டி சமைச்சாலும் சாப்பிடுவார்!!

தினம் எங்கம்மாவ ஹால்ல உக்காத்தி வெச்சிட்டு ஒவ்வொரு டப்பாவா எடுத்திட்டு வந்து.. "மிளகாத்தூள் இதானே?" "மல்லித்தூள் இவ்ளோ போட்டா போதுமா?" ன்னு கேட்டு கேட்டு கிச்சனுக்கும் ஹாலுக்குமா ஓடி ஓடி ரன் எடுப்பேன் நான். உள்ள.. வறுத்தல், வதக்கல், காய்தல், தீய்தல்னு எல்லா எக்ஸ்ப்ரிமெண்ட்டும் முடிச்சு குழம்பு மாதிரி ஒன்ன கொண்டு வந்து அப்பா முன்னாடி வெப்பேன். அவர் பிசைஞ்சு ஒரு வாய் சாப்பிடறதுக்குள்ள... ரிசல்ட் பாக்குற ஸ்டூடெண்ட், பிரசவ வார்டு முன்னாடி நிக்கற ஹஸ்பண்ட், லவ்வ சொல்லப்போற விடலைப்பையன் இவங்கள மாதிரி எல்லாம் டென்ஷனாகி அவர் மூஞ்சிய உத்து உத்து பாப்பேன். எங்கப்பா ரொம்ப கூச்சப்பட்டு நெளிஞ்சு.. "போம்மா...நல்லாத்தான் இருக்கு"ன்னு கூசாம பொய் சொல்வார்!

சித்திரம் மட்டுமில்லிங்க.. சமையலும் கைப்பழக்கம் தான். பழகிப் பழகி இப்ப நல்லாத்தான் சமைக்கிறேன். (சத்தியமா! நம்புங்க ப்ளீஸ்) ஒரே ஒரு குறை என்னனா... எவ்ளோ போராடியும் எனக்கு இன்னும் டீ போட வர மாட்டிங்குது. சில நேரம் சலசலன்னு இருக்கும்.. சுண்ட வெச்சா கசக்கும்.. பால் கம்மியாகி கருப்பாவோ.. ஜாஸ்தியாகி சப்புன்னோ ஆய்டும். எல்லாம் சரியா இருந்தா ஆத்தி ஆத்தியே ஆறிப்போய்டும். சரியான இம்சைங்க இது. "டீயே போட வரல. நீ நல்லா சமைக்கிறேன்னு நாங்க நம்பனுமா"ன்னு கேக்கப்படாது. சில உண்மைகள் அப்படித்தான். கஷ்டப்பட்டாவது நம்பித்தான் ஆகனும்.

இந்த பிரச்சினையால அம்மா இல்லாத நேரம் யாராச்சும் வீட்டுக்கு வந்தா பதட்டமாய்டும் எனக்கு. அவங்க மழைல சொட்டச் சொட்ட நனைஞ்சுட்டு வந்தாலும்.. "ஹி ஹி.. வாங்க.. உக்காருங்க.. ஜூஸ் சாப்பிடறீங்களா" அப்டின்னு தான் கேப்பேன்.
அப்டித்தான் ஒருத்தர் வந்தார் அன்னிக்கு. அம்மா அப்பதான் பக்கத்து கடைக்கு போயிருந்தாங்க. என்ன பண்றது? நானும் பிஸ்கட்.. முறுக்கு எடுத்து வெச்சு.. பையன் சவுக்கியமா.. பாட்டி சவுக்கியமா.. நாய்க்குட்டி சவுக்கியமான்னு பேச்ச வளர்த்திப் பாத்தேன். அவரா.. "தலைவலிம்மா.. கொஞ்சம் டீ போடேன்" ன்னு வாய் விட்டே கேட்டுட்டார். இதுக்கு மேல என்ன பண்ண? "இந்த அம்மாவ வேற காணமே"னு உள்ள உதறல். திரு திருன்னு முழிச்சுட்டே உள்ள போய் அடுப்ப பத்த வெச்சு.. ஒரு டம்ளர் டீக்கு 2 டம்ளர் தண்ணி வெச்சு தூள் போட்டு.. அடுப்பையும் sim ல வெச்சிட்டு உள்ளயே செட்டில் ஆய்ட்டேன்!! அவ்ளோ தண்ணியும் சுண்டறதுக்குள்ள அம்மா எப்படியும் வந்துடுவாங்கன்னு ஒரு நம்பிக்கை தான்!
நான் சத்தமில்லாம கிச்சன்லயே இருக்க.. அவர் ஹால்ல தேமேன்னு உக்காந்திருக்க நேரம் பாட்டுக்கு போய்ட்டுருக்கு. ஒரு வழியா அம்மா வந்துட்டாங்க. "வாங்க.. எப்ப வந்திங்க.. டீ எதாச்சும் சாப்டிங்களா?" ன்னு அம்மா கேக்க.. "ம்ம்.. உங்க பொண்ணு டீ போடறேனு உள்ள போனா. போய் பாருங்க தூள் வாங்க எஸ்டேட்டுக்கே போய்ட்டா போல" ன்னு அந்த மனுஷன் என் மானத்தை கப்பலேத்தி டாட்டா காட்டி அனுப்பி வெச்சிட்டார்.

அன்னில இருந்து நாங்க எல்லாரும் டீ குடிச்சாலும் விருந்தாளிங்களுக்குன்னே ப்ரூவும்.. காம்ப்ளானும் வாங்கி வெச்சிட்டாங்க வீட்டுல. ஹி ஹி.. அதெல்லாம் நல்லா போடுவேனாக்கும்! உயரமா வளர முடியலன்னு கவலைப்படறவங்க யாராச்சும் இருந்தா வாங்க வீட்டுக்கு.. காம்ப்ளான் குடிக்கலாம்!

பி.கு: நல்லா டீ போடத் தெரிஞ்ச வரன் இருந்தா சொல்லுங்க.. ப்ளீஸ்!

Saturday, June 2, 2007

மெளனத்தின் மொழி

நேற்று...
எங்கோ ஓர் காதல் நிராகரிக்கப்பட்ட...
யாருக்கோ ஏமாற்றம் கொடுத்த...
நம்பிக்கை ஒன்று கைவிடப்பட்ட....
சாத்தானால் ஆசீர்வதிக்கப்பட்ட...

துயர் மிகுந்த கணம் ஒன்றில்
முடிவெடுத்தேன்
உன்னிடம்
பேசாதிருப்பது என்று.

அதனால்..
உனக்கென்று சுரந்த சொற்களை
சேமிக்க வேண்டியதாயிருந்தது
நாள் முழுவதும்.

தசைகளில்
நரம்புகளில்
ரத்தநாளங்களில்
சுவாசப்பைகளில்
இதய அறைகளில்
நிரம்பி வழிந்த சொற்களால்
வீக்கமடைந்தது உடல்.

மாலையில் நீ வந்தாய்...

பேச எத்தனிக்கும் முன்பாக
சட்டென்று துளிர்த்து
கன்னங்களில்
கோடாய் இறங்கிய கண்ணீரில்
வடிந்து போயின
எல்லாச் சொற்களும்!