Thursday, September 20, 2007

வாழ்வைச் சுமத்தல்


"எல்லாத்தையும் விட்டுட்டு செத்துப் போய்டலாமா?"

என்று எந்த ஒரு வலி மிகுந்த கணத்திலாவது நீங்கள் நினைக்காமல் இருந்ததுண்டா?

முதுகின்மேல் கனக்கும் வாழ்க்கையின் பாரம் அதிகரிக்கையில், துயரங்களின் துரத்தல்களுக்குப் பணிந்து ஓடிக் களைத்து மூச்சிரைத்து நிற்கையில் ஏதோவோர் கணத்தில் எல்லோருக்குமே விட்டு விடுதலையாவதற்கான வேட்கை வருகிறது இல்லயா? சாலைச் சந்திப்பில் நின்றபடி போக வேண்டிய பாதையைத் தேர்ந்தெடுப்பது போலவே பிரச்சினைகளின் விளிம்பில் நின்றபடி வாழ்வா? சாவா? என்று திசை தீர்மானிக்க வேண்டிய கட்டாயங்களுக்கு 'தற்கொலை' மிகச்சிறந்த தப்பித்தலாய் அமைந்து விடுகிறது.

நேற்றும்கூட தனது இரண்டு பிள்ளைகளுடன் தீக்குளித்து இறந்து நேற்றைய முக்கியச்செய்திகளில் இடம்பிடித்தார் ஒரு பெண். இப்படி தினமும் காலையில் கொலையும் தற்கொலையுமான தகவல்களால் நிரம்பிவரும் நாளிதழ்கள் எல்லாம் கண்களுக்கும் கவனங்களுக்கும் வெகுவாய் பழக்கப்பட்டுப் போய் நம்மை சகஜ நிலையிலேயே வைத்திருப்பது எத்தனை குரூரமானது?

மக்கள் தொடர்பு ஊடகங்களை பகுதிநேரங்களில் சார்ந்திருக்கும் நான் தினமும் ஒரு சில மரணச்சேதிகளையாவது ஊருக்குச் சொல்ல வேண்டியவளாயிருப்பதால், "தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்" "மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார்" என்பன போன்ற சொற்கோர்வைகள் ஏதோ "இன்று திங்கட்கிழமை"" என்பது போலத்தான் காதில் விழுகின்றன. மேலதிகமாய் விஷம் குடித்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவன் சற்று வீரியமுள்ள எதையாவது குடித்துத் தொலைத்திருக்கக் கூடாதா? தலைப்புச் செய்திக்கு உபயோகப்பட்டிருக்குமே என்ற ரீதியிலான தொழில் தர்மங்களையும் சந்தித்ததுண்டு. என்றாலும் சில துர்மரணங்கள் கண்ணாடியில் வீசப்பட்ட கல்லாய் உணர்வுகளை, வாழ்வின் அஸ்திவாரங்கள் மீதான அடிப்படை நம்பிக்கைகளை சிதறடித்துப் போவதைத் தவிர்க்க முடிவதில்லை.

சேலத்தில் 10 மாதக்குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்று தானும் தூக்கு மாட்டி இறந்து போனாள் ஒரு தாய். கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பது போல வாளியில் எடுத்தார்கள் அந்த குழந்தையை. வாளியின் பக்கவாட்டில் சாய்ந்தபடி உறங்குவது போல மரித்திருந்த அந்தப் பிள்ளை இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் எதோவோர் நடுநிசியிலும் பின்னிரவுகளிலும் என் உறக்கம் கலைத்தபடியே இருக்கிறது.

இதோ நாம் சந்தோஷமாய்ச் சிரித்துக் கொண்டிருக்கிற நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருக்கிற, கதைத்துக் கொண்டோ, காதலித்துக் கொண்டோ, பொழுது போக்கிக் கொண்டோ இருக்கின்ற இந்த கணங்களில் எங்காவது யாராவது நெஞ்சம் வெடிக்கும் வேதனையிலும் விரக்தி மற்றும் வெறுப்பைச் சுமந்தபடியும் சாவதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருப்பார்களோ என்ற எண்ணம் அதிபயங்கரமாயும் தாங்க முடியாததாயுமிருக்கிறது.

கொடைக்கானலில் சூசைட் பாய்ண்ட் பார்த்தபோதும் கூட அடிவயிற்றில் சில்லிட்ட பயத்தை விடவும், வழியும் கண்ணீருடனோ விரக்தியில் வாடிப்போன முகத்துடனோ அங்கு வந்து நின்றிருந்து கசப்பின் உச்ச கணங்களில் உயிரை வீசியெறிந்து தற்கொலை கொண்ட மனிதர்களைப் பற்றிய கற்பனை தாங்க முடியாததாயிருந்தது. அங்கு வீசும் காற்றிலும் அவர்களின் துயரமும் கண்ணீரின் ஈரமும் மிச்சமிருப்பதாய்ப் பட்டது.

நினைவறிந்து இதுவரை 2 முறை என்னை உலுக்கியெடுத்த உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. முதல் தற்கொலை ஜெயஸ்ரீயினுடையது. 'பள்ளியிறுதித் தேர்வில் தோல்வி' என்ற வெகு அற்பமான காரணமே வாழ்க்கையை முடித்துக் கொள்ள போதுமானதாயிருந்தது அவளுக்கு. பாதம் மறைக்கும் பட்டுப்பாவாடைகளும், காதை நிறைக்கும் சதங்கைக் கொலுசும், திரும்பிப் பார்க்க வைக்கும் முகமும் ஜெயஸ்ரீயின் தனித்துவமான அடையாளங்கள்.

என்ன காரணத்தாலோ என்னை மிகவும் நேசிப்பவளாயிருந்தாள். எப்போதும் அவள் என்னுடனே இருந்தாளென்பதை அவள் இல்லாத நாட்களில் தான் என்னால் உணர முடிந்தது. அவள் அன்பை அவ்வப்போது தேவைக்கேற்ப மட்டுமே நான் பயன்படுத்திக் கொண்டேன் என்ற குற்ற உணர்வை அவள் மரணம் என் மனதில் நிரந்தமாக்கிவிட்டுப் போயிருக்கிறது.

ஜெயஸ்ரீ நல்ல நிறம். தாழம்பூ போலிருக்கிறாள் என்று கூட நான் நினைத்ததுண்டு. தேர்வு முடிவு வந்த அன்று மாலை பூட்டிய அறைக்குள் மண்ணெண்ணெய் ஊற்றி பற்றவைத்துக் கொண்டாள் என்றும் அரை மணி நேரம் எரிந்து கொண்டிருந்தாள் என்று சொன்னார்கள். போய்ப் பார்க்கும் அளவிற்குத் திராணியில்லை எனக்கு.

காதல், கடன், வன்கலவி இவற்றின் வரிசையில் தற்கொலைக்குத் தூண்டும் காரணிகளில் ஒன்றாய் தேர்வு முடிவுகளும் இருக்கும் அவலம்ம் நம் நாட்டில் மட்டும் தானா?

அதன் பின்னாய் 6 வருடங்கள் கழித்து மீண்டும் அதே அளவிற்கு அதிர்ச்சி தந்தவள் சிந்தியா... வெகு அழகு. வட்ட முகம்.. எப்போதும் சிரித்தபடியிருக்கும் உதடுகள். மிகுந்த தைரியசாலியான பெண் என்று சொல்ல வைக்கும் தோற்றம். ஆனால் அவளின் அலங்காரமும் ஆர்ப்பாட்டமான பேச்சும் சுற்றியிருப்பவர்களுக்கு அவளின் பத்தினித்தனத்தைச் சந்தேகிக்க உதவுவனவாய் இருந்தன.

ஒரு முறை ஹேண்ட்பேக்கிலிருந்து நீளமாயிருந்த செயின் ஒன்றை எடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டிருந்தாள். "இதென்ன டிசைன்? வித்தியாசமாய்..?" என்றதற்கு "இதுவா? இது தாலி" என்றாள் அலட்சியமாய். சில நேரங்களில் 'அவள் அப்படித்தான்' பட கதாநாயகியை நினைவூட்டும் படியாய் நடந்து கொள்வாள்.

சில பல மாதங்கள் கழித்து வெகு சோம்பலாய் நகர்ந்து கொண்டிருந்த அலுவலக மாலை நேரத்தை "சிந்தியா சூசைட் பண்ணிகிட்டா" என்ற செய்தியின் மூலம் பரபரப்பாக்கினாள். பதறியடித்துக் கொண்டு பார்க்கப் போனோம். ஹால் நடுவில் அவள் கிடத்தப்பட்டிருக்க மூலையில் டிவி ஓடிக் கொண்டிருந்தது. எவரையும் இழந்ததற்கான அறிகுறி எதுவும் அவள் கணவன் மற்றும் குடும்பத்தாரின் முகத்தில் இருந்ததாய் தெரியவில்லை.

கண்கள் பிதுங்கிய நிலையிலும், மூக்கிலும் கடைவாயிலும் ரத்தம் வழிந்தோடிய நிலையிலும் விகாரமடைந்திருந்த அவள் முகத்தைப் பார்த்தபோது வாழ்க்கை மீதான நம்பிக்கைச் சங்கிலியில் சில இணைப்புகள் சட்டென்று விட்டுப் போயின. அவள் இறப்பிற்கான காரணம் தெரியவில்லை. ஏன்? எதற்காக என்ற கேள்விகள் மட்டுமே எஞ்சியிருந்தன எல்லோரிடமும்.

அவள் உயிரோடிருந்தபோது "அது கேசுப்பா" என்று வர்ணித்த ஆண்கள் எல்லோரும் எத்தனை 'ஒழுக்க சீலர்கள்' என்பதையும் எல்லோரது குரலிலும் "சீச்சி இந்தப் பழம் புளிக்கும்" என்ற ஏமாற்ற தொனியிருந்ததையும் நான் அப்பட்டமாய் உணர்ந்திருக்கிறேன். காலங்காலமாய்ச் சொல்லிக் கொடுக்கப்பட்டு வருவதைப் போல அவள் 'குத்துவிளக்காய்' இல்லாவிட்டாலும் உண்மையில் அவள் நெருப்பாகவே இருந்தாள். ஏன் அணைந்து போனாளென்பது அவள் மட்டுமே அறிந்த ரகசியம்.

"பெண் ஒழுக்கமாயிருப்பதை விடவும் தான் ஒழுக்கமாயிருப்பதை ஒவ்வொருவரிடமும் நிரூபித்துக் கொண்டேயிருக்க வேண்டும்" என்ற அசிங்கமான உண்மையை அவள் மெளனமாய்ச் சொல்லிப் போயிருக்கிறாள் என்றே தோன்றியது எனக்கு.

இரக்கமற்று மீண்டும் மீண்டும் தோற்கடித்துக் கொண்டே இருக்கும் வாழ்க்கையை பழிவாங்குவதற்கான இறுதி முயற்சியாய் மனிதர்கள் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறார்களா? சாவைத் தீர்மாணிக்கும் கணங்கள் வெகு சொற்பமாய் இருந்தபோதும் எளிதில் கடந்து விட முடியாத தொலைவாய் நீள்கின்றன. மரணத்தை அதன் வாசலிலேயே சந்திக்கவும் ஓர் அசாத்திய தைரியம் தேவைதான் இல்லையா?

"தற்கொலை என்பது கோழைத்தனம்" " கோழைகள் எடுக்கும் துணிச்சலான முடிவு" என்றெல்லாம் வக்கணையாய்ப் பேசிக் கொண்டாலும் அந்தக் கணங்களை நேரடியாய்ச் சந்திக்க நேர்கையில் எல்லோரிடமும் மிஞ்சுவது எதுவும் கையாலாகாத இயலாமை மட்டுமே. இத்தனை குரூரங்களுக்கு மத்தியில் தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என நினைக்கையில் கனிமொழியின் வரிகளைத்தான் சொல்லிக் கொள்ளத் தோன்றுகிறது.

" அகால முடிவுகள் என்ற செய்திகளோடு
விடியும் நாள்களை
வாழவும் முடியவில்லை
வாழாதிருக்கவும் முடியவில்லை"

47 comments:

காட்டாறு said...

//மரணத்தை அதன் வாசலிலேயே சந்திக்கவும் ஓர் அசாத்திய தைரியம் தேவைதான் இல்லையா?
//

ஒரு சில விநாடிகளே நம்முள் நீளும் இந்நிலை... இதை மீள முடியாமல் தற்கொலை செய்து கொள்பவர்கள் பலர் மன அழுத்தம் என்ற நோயால் பாதிக்கப் பட்டவர்களே என்று மருத்துவம் கூறுகிறது.

உங்கள் தோழிகளின் இறப்பிற்கு என் வருத்தங்கள். இது உங்களுக்கு அமைதியை அளிக்காது என அறிந்தும் என் அனுதாபங்களையும் தெரிவிக்கிறேன். காலம் ஆற்றும்.

மங்கை said...

ம்ம்ம்ம்...கணப்பொழுது முடிவா.. அப்படியும் நினைக்க முடியவில்லை.. எத்தனை மனத்திடம் தேவை?..ஹ்ம்ம்ம்..

seethag said...

''பெண் ஒழுக்கமாயிருப்பதை விடவும் தான் ஒழுக்கமாயிருப்பதை ஒவ்வொருவரிடமும் நிரூபித்துக் கொண்டேயிருக்க வேண்டும்" என்ற அசிங்கமான உண்மையை அவள் மெளனமாய்ச் சொல்லிப் போயிருக்கிறாள் என்றே தோன்றியது எனக்கு."


இதுதான் மிகவும் சங்கடமான விஷயம்.
பெண்கள் குத்துவிளக்காய் இருக்கவேண்டுமா என்ன?

Anonymous said...

I feel very sad after reading your post.

Unknown said...

Excellent Post.
//பெண் ஒழுக்கமாயிருப்பதை விடவும் தான் ஒழுக்கமாயிருப்பதை ஒவ்வொருவரிடமும் நிரூபித்துக் கொண்டேயிருக்க வேண்டும்" என்ற அசிங்கமான உண்மையை அவள் மெளனமாய்ச் சொல்லிப் போயிருக்கிறாள் என்றே தோன்றியது எனக்கு.//
Very True
- Ramya.

பாரதி தம்பி said...

>::இரக்கமற்று மீண்டும் மீண்டும் தோற்கடித்துக் கொண்டே இருக்கும் வாழ்க்கையை பழிவாங்குவதற்கான இறுதி முயற்சியாய் மனிதர்கள் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறார்களா? ::<

இல்லை. வாழ்க்கையை வாழ்ந்துதான் தோற்கடிக்க வேண்டும்.. செத்தல்ல.

வாழ்வை எதிர்கொள்ள திராணியற்று போகும்போது, சக மனிதர்கள் மீதான கடைசி நம்பிக்கைகளும் பொய்த்துபோகும்போது, பேரன்பும், பெருங்கருணையும் நிராகரிக்கப்படும்போது வாழ்தலின் அர்த்தங்கள் அஸ்தமித்துவிட்டதாய் மனம் உணர்கிறது. உயிரை விடுவதால் அவற்றை மீளப்பெற இயலாது. இருந்தும் யாரறியக்கூடும்...தற்கொலை மனதின் அந்த கண நேர உணர்வுகளை..?

காயத்ரி சித்தார்த் said...

//உயிரை விடுவதால் அவற்றை மீளப்பெற இயலாது. இருந்தும் யாரறியக்கூடும்...தற்கொலை மனதின் அந்த கண நேர உணர்வுகளை..?//

மிகச்சரியாய் சொன்னீர்கள் ஆழியூரான். அந்த அபாய கணங்களில் மீண்டும் நம்பிக்கையூட்ட ஏதேனும் அல்லது யாரேனும் இருந்தால் வாழ்தலின் அவசியம் உணரப்படக்கூடும். துரதிர்ஷ்டவசமாய் அந்த கணங்களில் தனிமை மட்டுமே துணையிருக்கிறது.

Ayyanar Viswanath said...

சிறந்த பதிவு காயத்ரி

Bee'morgan said...

//எப்போதும் அவள் என்னுடனே இருந்தாளென்பதை அவள் இல்லாத நாட்களில் தான் என்னால் உணர முடிந்தது//
உறவின் வேதனை பிரிவில்தான்.
காலத்தின் பயணத்தில், மனதின் இடுக்குகளில் எங்கெங்கோ மறைந்திருந்த அனைத்து சோகங்களையும் வெட்டியெடுக்கிறது உங்கள் பதிவு..

குசும்பன் said...

""பெண் ஒழுக்கமாயிருப்பதை விடவும் தான் ஒழுக்கமாயிருப்பதை ஒவ்வொருவரிடமும் நிரூபித்துக் கொண்டேயிருக்க வேண்டும்" என்ற அசிங்கமான உண்மையை அவள் மெளனமாய்ச் சொல்லிப் போயிருக்கிறாள் என்றே தோன்றியது எனக்கு."


படார் என்று தலையில் ஓங்கி அடித்தது போல் இருக்கிறது இந்த வரிகள் :(((

nagoreismail said...

என் நண்பன் ஜாகிர் என்பவனும் இதே நிலைமைக்கு என்னை ஆளாக்கி விட்டு போனான், அவன் சில காலமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தான், அவனது வீட்டில் எங்கேயும் வெளியே விட மாட்டார்கள், நான் போய் என் கல்யாணத்திற்கு அவசியம் விட வேண்டும், நானே கார் வைத்து அழைத்து வந்து திரும்பவும் காரிலேயே நானே வந்து விட்டு விடுகிறேன் என்றதும் அனுமதி தந்தார்கள், கல்யாணம் முடிந்து சிங்கப்பூர் வந்த போது ஒரு நாள் தொலைபேசியில் அந்த இடி போன்ற செய்தியை என் தாயார் சொன்னார்கள், 'உன் கூட்டாளி, ஜாகிர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டான், நான் மய்யித்துக்கு போயிட்டு வந்தேன்' - என்று, அதிகாலையில் சொன்ன அந்த செய்தியால் அந்த பொழுது எனக்கு விடியாமலே இருந்தது - நாகூர் இஸ்மாயில்

சாவை சாவு தீர்மானிக்கட்டும்
வாழ்வை நீ தீர்மானி
என்கிறார் வைரமுத்து - கவிதை நூல் - இந்த பூக்கள் விற்பனைக்கல்ல

மங்களூர் சிவா said...

"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்"

என்பதெல்லாம் தெரிந்திருந்தாலும்ம் அது தெரிந்தவர்களுக்கோ, உறவினர்களுக்கோ, எனும் போது வலி அதிகம்தான்.

//மரணத்தை அதன் வாசலிலேயே சந்திக்கவும் ஓர் அசாத்திய தைரியம் தேவைதான் இல்லையா?
//

வாழ்க்கையை எதிர் கொள்ள துப்பில்லாத தைரியம் தற்கொலைக்கு முயலும் ஒருவனிடமா? அதற்கு பெயர் தைரியமா??

//
மன அழுத்தம் என்ற நோயால் பாதிக்கப் பட்டவர்களே என்று மருத்துவம் கூறுகிறது.
//
கண்டிப்பாக

//

ஒரு முறை ஹேண்ட்பேக்கிலிருந்து நீளமாயிருந்த செயின் ஒன்றை எடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டிருந்தாள். "இதென்ன டிசைன்? வித்தியாசமாய்..?" என்றதற்கு "இதுவா? இது தாலி" என்றாள் அலட்சியமாய்

''பெண் ஒழுக்கமாயிருப்பதை விடவும் தான் ஒழுக்கமாயிருப்பதை ஒவ்வொருவரிடமும் நிரூபித்துக் கொண்டேயிருக்க வேண்டும்" என்ற அசிங்கமான உண்மையை அவள் மெளனமாய்ச் சொல்லிப் போயிருக்கிறாள்
//

இது அவருடைய சொந்த பிரச்சனையாக / அனுபவமாக இருக்கலாம்

ஒவ்வொருவரிடமும் நிரூபித்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்பத்தெல்லாம் சுத்த பேத்தல்.

இந்த பதிவை படிக்கும் எத்தனை பெண்மனிகள் ஒத்துக்கொள்கிறீர்கள் என அவர்களிடமே விட்டு விடுகிறேன்.

//
கோழைகள் எடுக்கும் துணிச்சலான முடிவு
//

கோழை துணிச்சல் என்ன ஒரு முரண்பாடு. துணிச்சலான முடிவல்ல பைத்தியக்காரத்தனமான முடிவு.

மற்றபடி கமெண்டுகளையெல்லாம் கமெண்டினால் என் கமெண்ட் நேற்று போல நிராகரிக்கப்படும் அபாயம் உள்ளதால்.. .. ..

நந்தா said...

//அவள் அன்பை அவ்வப்போது தேவைக்கேற்ப மட்டுமே நான் பயன்படுத்திக் கொண்டேன் என்ற குற்ற உணர்வை அவள் மரணம் என் மனதில் நிரந்தமாக்கிவிட்டுப் போயிருக்கிறது.//

இது உங்களுக்கு மட்டுமில்லை. நாம் நேசித்த் அல்லது மதித்த யாரேனும் நம்மை விட்டுப் பிரியும் போது, அவர்களிடம் இன்னும் கொஞ்சம் இணக்கமாக நடந்திருக்கலாமே என்றுதான் மனது அடித்துக் கொள்ளும். உண்மையில் அந்த உணர்வுகள்தான் அவர்கள் மீதான நம் பாசத்தின் வெளிப்பாடாக இருக்கும்.

//"பெண் ஒழுக்கமாயிருப்பதை விடவும் தான் ஒழுக்கமாயிருப்பதை ஒவ்வொருவரிடமும் நிரூபித்துக் கொண்டேயிருக்க வேண்டும்" என்ற அசிங்கமான உண்மையை அவள் மெளனமாய்ச் சொல்லிப் போயிருக்கிறாள் என்றே தோன்றியது எனக்கு.//

செருப்பால் அடித்தது போன்ற வார்த்தைகள்.

//"தற்கொலை என்பது கோழைத்தனம்" " கோழைகள் எடுக்கும் துணிச்சலான முடிவு" என்றெல்லாம் வக்கணையாய்ப் பேசிக் கொண்டாலும் அந்தக் கணங்களை நேரடியாய்ச் சந்திக்க நேர்கையில் எல்லோரிடமும் மிஞ்சுவது எதுவும் கையாலாகாத இயலாமை மட்டுமே. //

துரோகத்தின் வன்மமோ, கையாலாகாத் தனத்தின் கோபமோ, வன்மமாய் நம்மைத் தாக்கும் அந்த வலி மிகுந்த கணங்களில் தற்கொலை செய்து கொண்ட ஒவ்வொருவரும் ஒரு வேளை வாழ்ந்து பார்த்திருந்தால், பிறிதொரு நாளின் துணையின் மடியில் கட்டுண்டு கிடக்கும், தன் குழந்தையைக் கொஞ்சும், நண்பர்களாலோ, உறவினர்களாலோ வாழ்த்திப் பேசப்படும் ஒரு சந்தோஷ கணங்களில், வெகு நிச்சயமாய் "எப்படிப் பட்ட தவறினைச் செய்ய இருந்தோம் என்று" ஆனந்தத்துடன் மருகும் கலவை உணர்வுகளை, அனுபவிக்கத் தவறிய துரதிர்ஷ்டசாலிகளாகவே இருக்கிறார்கள்.

ஜே கே | J K said...

//"தற்கொலை என்பது கோழைத்தனம்" " கோழைகள் எடுக்கும் துணிச்சலான முடிவு"//

சில சமயங்களில் தைரியமாக பேசுபவர்களும் கோழைத்தனமாக இம்முடிவை எடுக்கின்றனரே!.

பள்ளி தேர்வில் தோல்வி என்று தற்கொலை கொடுமையான விசயம்.

பக்கத்து ஊரில் இப்படி தான், நன்றாக படிக்கும் ஒரு மாணவன் +2-ல் தோல்வி, செய்திதாளில் பார்த்துவிட்டு என்று தற்கொலை செய்து கொண்டான். அடுத்த நாள் காலை செய்திதாளில் விடுபட்ட எண்கள் வரிசையில் அவன் எண், அதை விட கொடுமை, அந்த தேர்வில் வகுப்பில் அவன் தான் முதல் மதிப்பெண்.

நாகை சிவா said...

யோசிக்க வைக்கும் பதிவு...

ஆனால் ஏதற்க்குமே தீர்வு அது இல்லை என்பது மட்டும் ஆணித்தரமான உண்மை.

கதிர் said...

மரணத்தை பத்தி நாம உணர்ந்துகொள்ளவே நாலு பேரோட மரணம் தேவையாயிருக்கு.

நாம் பார்க்கும் எல்லா மரணமும் ஒரே மாதிரி அமைந்து விட்டால் நமக்கே சலிப்படைந்து விடும் அதனாலதான் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகமா இருக்கு.

இயற்கையான மரணத்தை தினசரிகளின் ஓரத்துல கூட பாக்க முடியாத நிலைமை இன்னிக்கு. அப்படியும் எதாச்சும் அபூர்வமா வரும் அந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பிங்களா?

வாழ்வு மாதிரிதான் சாவும் பல வகை.
சிலது ஆச்சரியப்படுத்தும், சிலது அழவைக்கும். சிலது அதிசயிக்க வைக்கும்.

எங்கூர்ல ஒரு பாட்டி எதை கொடுத்தாலும் அவ மகனை சாப்பிடசொல்லி பிறகுதான் சாப்பிடும். மருமகள் மேல அவ்வளவு நம்பிக்கை. :)

கடைசில அந்த பாட்டிக்கும் முன்னால மருமகள் போயிட்டா! :)

கப்பி | Kappi said...

+ + +

சிறந்த பதிவு!!

manasu said...

//"எல்லாத்தையும் விட்டுட்டு செத்துப் போய்டலாமா?"

என்று எந்த ஒரு வலி மிகுந்த கணத்திலாவது நீங்கள் நினைக்காமல் இருந்ததுண்டா?//

இதுக்கு, வழக்கமான கமென்ட் போடலாம்னு நினைச்சேன்.

ம்ம்ம் வேண்டாம்.

ஜஸ்ட் ப்ரசன்ட் டீச்சர்.

நிலா said...

ம்ம்ம் குட்டிபாப்பாக்கு வெய்ட்டான மேட்டர். இருந்தாலும் அப்பா சொல்றத சொல்ரேன்.

"தற்கொலைக்கு முயற்சி செய்து காப்பாற்றப்பட்டவனை "அப்டியே விட்ருக்க வேண்டியதானே. இவனையெல்லாம் காப்பாத்தகூடாதுங்க" ணு தான் நிறய பேரு சொல்லுவாங்க.

உண்மைதான். விட்டுவிடலாம்தான்.தனிமனித சுதந்திரத்தில் இதும் கூட இருக்குமாக இருக்கலாம்.

ஆனால் கூடவே பிஞ்சு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு சாவதை என்ன வகைப்படுத்துவது?

புறாவில் சிறுபுறா ஒன்று உன்டு. அதன் கூட்டில் அதன் முட்டையை நாம் சும்மா கையில் எடுத்து பார்த்து விட்டு வைத்ததை பார்த்து விட்டாலே போதும். பிறகு தன் முட்டையை தானே உடைத்து விட்டு விடும்.

தன் சந்ததி வேறு எங்கும் மாட்டிக்கொண்டு கஷ்டப்பட கூடாது என்பதற்காக.


மனிதர்கள் செய்வதும் இதேதான். புறாவாகட்டும். மனிதனாகட்டும் தன் சந்ததி கஷ்டப்பட கூடாது என்ற நினைப்பு பெரியதாக இருகிறதே தவிர எது கஷ்டம் என்பதே தனக்கும் தன் வாரிசுக்கும் மாறுபடும் என்று தெரிவதில்லை.

எது எப்படியோ என்ன காரணமாக இருந்தாலும் தற்கொலை செய்யக்கூடாது என்றெல்லாம் நீங்களும் நானும் சொல்ல கூடாது. சில சூழ்நிலைகளை சவுகரியமான இடத்தில் இருந்து பார்க்கும் போது நமக்கு புரிவது முடியாத செயல்.

உன்னால் முடியலயா? தாராளமா செத்துக்கோ. ஆனா உன் புள்ளயயும் சேத்து கொல்ல நீ யாரு? அப்டி உன் புள்ள கஷ்டபடுமேன்னு தோணுச்சுன்னா நீ சாவாம கஷ்டப்பட்டு உன் புள்ளய கஷ்டப் படாம பாத்துக்கோ."

அப்டீன்னு அப்பா சொல்றாங்க ஆன்ட்டி. எனக்கு செத்துபொறதுனாலே என்னன்னு புரியல. அதுனால நான் மம்மு குடிக்க போயிட்டேன்

இராம்/Raam said...

மனதை நெகிழ வைத்த பதிவு...

வேற ஒன்னும் சொல்ல தோணலைங்க.... :(

Anonymous said...

attendance 1st teacher :P
i wil read all ur long post tomorrow.konjam seekirama neegthaan star nu sonna 1st day ve kummi adichu irrukalam.no worries i still have 4 more days..kandipa varen.congrats for being TM star.

ஜமாலன் said...

பதிவிற்கு பாராட்டுக்கள்...

தற்கொலை என்பது ஒரு தனி உடல் தனக்கு தேவைப்படும் ஒன்றை தர மறுத்த சமூகத்தை எதிர்கொள்ளும் விதம். அல்லது சமூகத்தை அதன் அடக்குமுறையை தனது உயிரற்ற உடலின் மூலம் உன்னால் என்னை என்ன செய்யமுடியும் என்று கேலி செய்தலாகும். அது வலி நிரம்பிய ஒரு மெளனத்தின் மூலம் சமூக மனசாட்சியை உலுக்கி விழிப்புக் கொள்ளச் செய்யும்நிலை. ஆணால், சமூகம்தான விழிப்பதி்ல்லை. நம்மைப் போல உச்சு கொட்டிவிட்டு நகர்ந்துவிடும் வேறொரு பதிவிற்காக கருத்தைத் தேடிக் கொண்டு.

உங்கள் நண்பர்கள் இருவருமே சமூகத்தின் இறுக்கத்தால் சுவாசிக்க முடியாத ஒரு நிலையிலேயே இதனை செய்துள்ளனர். இது ஒரு சமூகப் பிரச்சனை.. இதனை தனிமனித பிரச்சனையாக மாற்றிப் பேசுப்பொருளாக ஆக்கியிருக்கிறோம். இத் தற்கொலைகள் எல்லாம் ஒரு சமூகத்தின் அடக்குமுறை அல்லது தேவையற்றதான கட்டளைகள் சம்பிரதாயங்கள் இவைகளால் வருபவை. தீர்வு சமூகத்தின் பொதுபுத்தியாக உருவாகியுள்ள கருத்தாக்கங்களை எதிர்த்த வலிமையான போராட்டம்தான். அதற்கு ஊடகங்கள் துவங்கி இத்தகைய பதிவுலகு வரை சமூகத்தின் இறுகி கெட்டித் தட்டிப்போன கருத்துகளை கிழித்துப்போட வேண்டும். தற்சமயம் இப்திவில் நீங்கள் முயன்றிருப்பதைப் போல.

நட்புடன்
ஜமாலன்.

Osai Chella said...

மனம் மறத்துப்போய் அவர்கள்எடுக்கும் முடிவிற்கு சரி தவறுஎன்று சொல்லும் நிலையில் நிச்சயம் நாமிருக்க முடியாது. சமூக விழிப்புணர்வின்மையே இவற்றுக்கு மூலகாரணம் என்று ஈரோட்டின் மஞ்சள் மணத்தை மெச்சியிருந்த நீங்கள் இன்னொரு கருப்புக்காரரை, பெண்ணடிமைத் தளைகளை (வரதச்சினை, வேலையின்மை, படிப்பறிவின்மை) அறுக்க முயற்சித்தவரை, அவரின் கருத்துக்களை, ஒரு வரியாவது இக்கட்டுரையில் குறிப்பிடாமல் போனது ஏமாற்றமே!

அன்புடன் செல்லா

அபி அப்பா said...

சூப்பர் காயத்ரி! அருமையான பதிவு! போன இரண்டு பதிவுக்கும் வரமுடியாமல் நெட் சொதப்பிடுச்சுப்பா!

Jazeela said...

நிஜமாவே சுமந்துக் கொண்டிருந்ததை இறக்கி வைத்துள்ளீர்கள். நிரந்தர பிரிவு என்பதே தாங்கிக் கொள்ள முடியாத ஒன்று. அதுவும் தேர்ந்தெடுத்த பிரிவு என்னும் பொழுது?

//பெண் ஒழுக்கமாயிருப்பதை விடவும் தான் ஒழுக்கமாயிருப்பதை ஒவ்வொருவரிடமும் நிரூபித்துக் கொண்டேயிருக்க வேண்டும்" என்ற அசிங்கமான உண்மையை// 100% உண்மை. என்னத்த சொல்ல நிருபிக்க முடியாமலே எத்தனையோ பேர் போய் சேர்ந்துவிட்டார்கள்.

PPattian said...

நட்சத்திர பதிவர் எல்லாருமே "மரணம்" குறித்த ஒரு பதிவு எழுதனும்னு விதியா? ஆழியூரானும் எழுதினார்.. நீங்களும்.

நல்ல பதிவு. தற்கொலை குறித்த பதில் தெரியாத பல கேள்விகள்

கணப்பொழுதின் முடிவு என்றில்லாமல், பல முறை முயற்சித்து தற்கொலையில் வென்ற கிருஷ்ணகுமார் எனக்கு ஞாபகம் வருகிறான்.. அவனது சித்தாந்தத்தில் வாழ்வதே ஒரு கேவலமான செயல்...

வித்யா கலைவாணி said...

மக்களை வழி நடத்திச் செல்ல வேண்டிய தகவல் தொடர்பு சாதனங்களும் தற்கொலைச் செய்திகளை மிகவும் சுவாரஸ்யமாக மிகைப்படுத்தி காட்டுகின்ற்ன.
எதோ பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்தது போல் காட்டுகின்றன.
இது பல நேரங்களில் தூண்டுகோலாக அமைந்து விடுகின்றன.
இப்படிப்பட்ட செய்திகளை வெளியிட வேண்டுமெனில் முடிவில் தற்கொலை எந்த பிரச்சனைக்கும் முடிவு தராது என்பதை அழுத்தமாக சொல்ல வேண்டும்.
அது மெல்ல மெல்ல மக்களை வளப்படுத்த பயன்படும்

Excellent Post Kayathri Keep it up

Unknown said...

நல்ல பதிவு. நல்ல கவிதையாய் எழுதுகிறீர்கள் அய்யனார்.

கார்த்திக் பிரபு said...

"பெண் ஒழுக்கமாயிருப்பதை விடவும் தான் ஒழுக்கமாயிருப்பதை ஒவ்வொருவரிடமும் நிரூபித்துக் கொண்டேயிருக்க வேண்டும்" என்ற அசிங்கமான உண்மையை அவள் மெளனமாய்ச் சொல்லிப் போயிருக்கிறாள் என்றே தோன்றியது எனக்கு.
//

டாப் நிறைய படிக்கிறீங்க நிறைய அனுபவங்கள் உங்களுக்கு , தினமும் உங்களை படிக்க போகிறேன் இன்றிலிருந்து

கார்த்திக் பிரபு said...

hi pls add my googlepages in your blog frends list or favorites

its a page for tamil ebooks , free downloads.

thanks for addding

url - http://gkpstar.googlepages.com/

துரியோதனன் said...

நான் கூட பார்த்திருக்கேன் காயத்ரி, எதிர் வீடு கணவன் மனைவியிடயே சண்டை காலையில் யாருக்கும் தெரியாமல் விஷம் குடித்த மனைவி ஒரு நாள் முழுவதும் கணவனுடன் பேசாமல் உட்கார்ந்திருந்தாள். கணவனோ சாப்பிடசொல்லி கெஞ்சி கொண்டிருந்தான், "நான் காலையிலேயே வெஷத்த சாப்டுட்டன் எனக்கு ஒன்னும் சோறு தண்ணி வேணாம் " என்று சொல்லி சில நிமிடங்களில் இறந்து போனாள் மனைவி. அந்த கணவன் 15 நாள் கழித்து வெளியூரில் இருக்கும் மகன்களுக்கு இந்த தேதியில் சாகலாமென்றிருக்கிறேன் எல்லோரும் குடும்பத்தோட வந்துடுங்க என்று கடிதம் எழுதி சொல்லிட்டு செத்துப்போனார்.

இவர்களுக்கெல்லாம் உங்களால் முடிந்தது ஒரு பதிவும், என்னால் ஒரு பின்னூட்டமும் தான்.

"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!"

Anonymous said...

மனதை கனக்க வைத்துவிட்டது உங்கள் பதிவு...

ILA (a) இளா said...

நல்லா எழுதி இருக்கீங்க. உங்கள் பதிவுகளில் என்னைக் கவர்ந்த பதிவும் கூட.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

தன் மரணத்தை தானே தேர்ந்தெடுப்பது அவரவர் எண்ணத்தை/சூழலைப் பொறுத்து சரியானதாக இருக்க காரணங்கள் இருக்கக் கூடும் என்கிறது இந்தப் பதிவு.
இந்தக் கருத்து தவறானதோ எனத் தோன்றுகிறது.தற்கொலை முயற்சி எப்பொழுதும் அந்தக் கண நேர பைத்தியக்காரத்தனம் என்பது உளவியலின் முடிவு கூட!
மரணத்தைத் தவிர எந்த ஒரு பிரச்சினையையும் பேசித் தீர்க்கலாம் என்ற பொருளில் ஒரு வாழ்வியல் சிந்தனை உண்டு;அதன் கருத்து மரணம் 'நிகழ' வேண்டும்,தேடப் படக் கூடாது என்பதுதான்.
உலகம் பரந்துபட்டது,நீங்கள் குறிப்பிட்ட இரு நபர்களும் அதிகபட்சம் எவ்வளவு பேர்களால் பேசப்பாட்டிருப்பர்கள்?
பேசியவர்களைப் புறந்தள்ளி வாழ்வை வென்றெடுப்பதில்தான் மனிதம் வெல்கிறது.
நீங்கள் குறிப்பிட்டவர்கள் கோழைகள்,அவ்வளவுதான் !

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சீ என்ன வாழ்வு ,செத்துவிடுவோம் என வாழ்வின் எல்லைக்கே சென்று, திரும்பிய கோடானு கோடி பேரை யாரும் கண்டு கொள்வதில்லை.
ஆனால் செத்துவிட்டவர்களுக்கு உச்சுக் கொட்டுகிறோம்.
இது தான் சகோதரி..உலகம்.....

நாமக்கல் சிபி said...

சிறந்த பதிவு!

++++++++++

நாமக்கல் சிபி said...

//நீங்கள் குறிப்பிட்ட இரு நபர்களும் அதிகபட்சம் எவ்வளவு பேர்களால் பேசப்பாட்டிருப்பர்கள்?
பேசியவர்களைப் புறந்தள்ளி வாழ்வை வென்றெடுப்பதில்தான் மனிதம் வெல்கிறது.
நீங்கள் குறிப்பிட்டவர்கள் கோழைகள்,அவ்வளவுதான் !
//

சரியான கருத்து!

வாழ்க்கைப் போராடிப் பார்க்க வேண்டிய ஒன்று!

புறக்கணிக்கத் தக்கதல்ல!

மரணம் எந்த ஒரு பிரச்சினைக்கும் சரியான தீர்வு அல்ல!

http://manamumninavum.blogspot.com/2006/03/14.html

SnackDragon said...

//நேற்றும்கூட தனது இரண்டு பிள்ளைகளுடன் தீக்குளித்து இறந்து நேற்றைய முக்கியச்செய்திகளில் இடம்பிடித்தார் ஒரு பெண். //

+
//"மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார்" என்பன போன்ற சொற்கோர்வைகள் ஏதோ "இன்று திங்கட்கிழமை"" என்பது போலத்தான் காதில் விழுகின்றன.//

You + YOU???

கோபிநாத் said...

மனதை நெகிழ வைத்த பதிவு.. :(

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நானும் பலமுறை யோசித்திருக்கின்றேன்...மரணத்திற்குப் பிறகு வாழப்போகும் அந்த புதிரான மர்மமான வாழ்க்கையைப் பற்றிய பயம் எல்லோருக்கும் இருக்கும்..அந்த மரணத்தை தனாகவே வரவழைத்துக் கொள்ளும் தைரியம் எப்படி வருகின்றது தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு..?

கோழைகள் எடுக்கின்ற தைரியான முடிவு அது...

நல்ல பதிவு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காயத்ரி தற்கொலைன்னாலே பதறும் அளவுக்கு நினைவுக்கு வருகிற இரண்டு தோழிகள் மரணம் என்னை பாதிச்சிருக்கு.. :( அது அவர்களின் அந்த் நேர தவறான முடிவுகள் தான் ..ஆனா அவர்களை அந்த முடிவுக்கு தள்ளிவிட்டவர்கள் இன்றும் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள்.

SurveySan said...

சூப்பர்..

அட்டகாசமா எழுதறீங்க.
பேசாம என்ன மாதிரி ஆளெல்லாம் ஓரமா நின்னு வாசகனாயிடலாம். தமிழ்மணம் உருப்படும் :)

தொடரட்டும்.

வல்லிசிம்ஹன் said...

காயத்ரி, தற்கொலைக்கு முயலவும் தைரியம் வேணும்.
அப்படியும் மீறி உயிர் வாழ அதைவிட துணிச்சல் வேண்டும்.

இரண்டுக்கும் இடைப்பட்டு வாழ்பவர்களே இப்போது அதிகமாக இருக்கிறார்கள்.
மீண்டும் நல்லதொரு பதிவு.

பெண்களுக்குத் தங்களை நிரூபணம் செய்ய வேண்டிய கடமை என்னாளும் தொடரும்.

Chandravathanaa said...

காயத்ரி,
காத்திரமான பதிவு.
படிக்கப் படிக்க உடம்பில் எதுவோ ஊர்வது போல இருந்தது.
மனசு கனத்தது. நான பார்த்த பல - தற்கொலைக்குப் பின்னான
அழகு முகங்களின் அவலட்சண கோலங்கள் ஒவ்வொன்றாய் நினைவில் வந்து
கண்கள் கலங்கின.

ஏன் இப்படிச் செய்தார்கள் என்று... நினைவுகள் வரும் போதெல்லாம் மனதைக்
குடைந்து கொள்ளும் நிகழ்வுகள் அவை.

எனக்கு நெருங்கிய உறவுப் பெண் ஒருத்தி ஜெயசிறீ போலத்தான் மண்ணெய் ஊற்றி தன்னைத்தானே
கொளுத்திக் கொண்டாள்.

Unknown said...

காயத்ரி, கீழ்நோக்கி வரும் நீரைப் போல், உங்களுக்கு உணர்வுகளை எழுத மிக இயல்பாக‌ வருகிறது. //''பெண் ஒழுக்கமாயிருப்பதை விடவும் தான் ஒழுக்கமாயிருப்பதை ஒவ்வொருவரிடமும் நிரூபித்துக் கொண்டேயிருக்க வேண்டும்" ...// முழுக்க உண்மை!! இந்த ஒரு வரி, இதைப் படித்துப் பின்னூட்டமிட்ட மற்ற பெண்களைப் போல் என்னையும் தொட்டது.

திருமணமான மூன்றாம் மாதத்தில் தூக்கிலிட்டுக் கொண்ட‌ என் பள்ளித் தோழியையும், காதலித்தவன் திரும்ப காதலிக்காததால் (எத்தனையோ வாதித்திருக்கிறேன்:-( தினமும் சிறிது சிறிதாக விஷம் குடித்துப் போன என் ஹாஸ்டல் தோழியையும் ஒரு நாள் போய் கேட்க வேண்டும்.


//அவள் உயிரோடிருந்தபோது "அது கேசுப்பா" என்று வர்ணித்த ஆண்கள் எல்லோரும் எத்தனை 'ஒழுக்க சீலர்கள்' என்பதையும் எல்லோரது குரலிலும் "சீச்சி இந்தப் பழம் புளிக்கும்" என்ற ஏமாற்ற தொனியிருந்ததையும் நான் அப்பட்டமாய் உணர்ந்திருக்கிறேன். // மிக ரசித்தேன்.

//காலங்காலமாய்ச் சொல்லிக் கொடுக்கப்பட்டு வருவதைப் போல அவள் 'குத்துவிளக்காய்' இல்லாவிட்டாலும் உண்மையில் அவள் நெருப்பாகவே இருந்தாள்// இந்த வரி யாருக்காக?

மீண்டும் வாழ்த்துக்கள்!

Unknown said...

ரொம்ப நாள் கழிச்சு சில தற்கொலைகளை நினைவு படுத்தி விட்டது உங்கள் பதிவு.
அந்தக் கணத்தில் அவர்களுடைய எண்ணம் பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளுதல், தாங்க முடியாத வேதனை என்பதாகத்தான் இருந்திருக்கும், என்று நான் நினைத்துக் கொண்டாலும் உண்மையில் அது அவர்களுக்கே வெளிச்சம்.

பாரதி தம்பி said...

//.....கீழ்நோக்கி வரும் நீரைப் போல்,//

இது ரொம்ப நல்லாயிருக்கு. இயல்பானது என்பதை உணர வைக்க, உண்மைக்கு மிக அருகிலான உவமை.