Wednesday, February 27, 2013

லெபனான் பயணம் - பெய்ரூட் - 1












இது Jeita Grotto. பெய்ரூட் சுற்றுலாவின் அதிமுக்கிய அம்சம். ஆழத்தில் செம்மண் கொழித்துக் கொண்டோடும் நதியின் மேல் ரோப் காரில் 5 நிமிடம் பயணித்தால் ஒரு அற்புத குகை வாயிலில் இறக்கி விடுகிறார்கள். உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. (இவையனைத்தும் இணையத்தில் சுட்டவை) அதனால் குகையின் அழகை பேராசையோடு கண்களால் அள்ளி மனதின் கொள்ளளவு முழுக்க நிறைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. உள்ளே பாறைகள் உருகி வழிந்தாற் போன்றும், மெல்லிய துணி மடிப்புகள் போன்றும், அழகிய சிற்பக் காடு போன்றும் தோற்றமளிக்கின்றன. கற்கள் மேலிருந்து உருகி வழிகின்றனவா அல்லது கீழிருந்து மேல்நோக்கி வளர்கின்றனவா என்று கணிக்க முடியாத தோற்றம்.  'தொடாதே' என்று பலவிடங்களில் எழுதியிருந்தாலும் கற்களின் பளபளப்பும், வழவழப்பும் ரகசியமாய்த் தொட்டுப் பார்க்கத் தூண்டுகின்றன. இங்கிருந்து படகில் வேறொரு குகைக்கு கூட்டிப் போவார்களாம். அங்கே ஆக்ஸிஜன் மிகக் குறைவாக இருக்கும் என்று கேள்விப்பட்டதால் நாங்கள் போகவில்லை. குகையினுள்ளே மாயமாய் இயங்கிக் கொண்டிருப்பது மேலிருந்து செதுக்கும் சிற்பியின் கரங்களா, கீழிருந்து வளர்த்தெடுக்கும் குயவனின் கரங்களா என்பது இயற்கைக்கே வெளிச்சம். சென்ற ஓரிரு பயணங்கள் போலில்லாமல் குழந்தை இப்பயணத்தை மகிழ்ந்து கொண்டாடுகிறாள். குகையினுள் நுழைந்து நடந்து கொண்டிருக்கையில், "அம்மா நாம எங்க இருக்கோம்? மலைப்பாம்பு வயித்துக்குள்ள நடக்கறோமா?" என்றாள்! :)