Tuesday, July 10, 2012

காயத்ரி பிறந்தநாள் கொண்டாட்டம் 2012 - உருவான விதம் :))



சித்துவிற்கு லேசாக செலக்டிவ் அம்னீஷியா உண்டு.  இஸ்ரேலின் ஆதியோடந்தமான வரலாறு, ஆண்டாளின் திருப்பாவை, குறுந்தொகைக் கவிதைகள், உலகப்படங்கள் மற்றும் அவற்றின் பிரத்தியேக காட்சிகள், Friends எபிசோட்ஸின் டயலாக்குகள், இயற்பியல் விதிகள், அண்டைநாடுகளின் அரசியல் மாற்றங்கள், விஷ்ணுபுரம்/ கொற்றவை/ பின் தொடரும் நிழலின் குரல் / காடு ஆகியவற்றில் எந்த வரி எத்தனையாவது பக்கத்தில் எதற்காக இடம்பெற்றுள்ளது, ஆப்பிள் நிறுவனத்தின் இது வரையிலான மற்றும் வரவிருக்கும் தயாரிப்புகள் பற்றிய தகவல்கள், மலையாளக் கவிதைகள் / இயக்குனர்கள், மகாத்மா காந்தி, அயன்ராண்ட், டெர்ரி ப்ராட்சட்,  அகிரா குரோசோவா, டால்ஸ்டாய், கம்பர், பாப் டிலன், இளையராஜா, ஜெயமோகன், யுவன் சந்திரசேகர்,  ஹயோ மியாசகி, கிரிக்கெட், ரூபி நிரலாக்க மொழி பற்றியெல்லாம் எந்த நேரம் என்ன கேள்வி கேட்டாலும் யோசிக்காமல் பதில் சொல்லக் கூடிய மனிதர்.. எலுமிச்சம்பழம் வாங்குவதற்காக என்றே வேகாத வெயிலில் நடந்து கடைக்குப் போய்விட்டு, இடையில் நான் போன் செய்து “புதினாவும் சேர்த்து வாங்கிட்டு வாங்கப்பா” என்றால் வெறும் புதினாவோடு மட்டும் வீட்டிற்குத் திரும்புவார். :)))  இந்த விநோதமான மெமரி ஸ்டேட்டை புரிந்து கொள்ள முடியாமல் நான் இன்னமும் திணறிக் கொண்டிருக்கிறேன். இதுவே இப்படியென்றால் நெருங்கியவர்கள் / உறவினர்கள் பிறந்தநாள், திருமணநாள், அவர்களுக்கு என்னென்ன பிடிக்கும் போன்ற விஷயங்கள் பற்றியெல்லாம் சொல்லவே தேவையில்லை. ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாளை அவர் மறக்காமல் இருப்பதே பெரிய சாதனையாக எண்ணி பெருமைப்பட்டுக் கொள்வேன். ஆனால் இந்த வருடம் எதிர்பாராத ஆச்சரிய அதிர்ச்சி.. :) 

பிறந்தநாளுக்கு 2 நாட்கள் முன்பே மூணரைப் பவுனில் வளையல், மஸக்களி சுடிதார் என்று ’வல்லிய’ வசூலாகி விட்டதால் ஏழாம் தேதி இரவு 10.30 மணிக்கெல்லாம் எந்த எதிர்பார்ப்புமில்லாமல் நிம்மதியாக தூங்க ஆரம்பித்திருந்தேன். திடீரென்று தூக்கத்தினிடையில் இனிமையான இசை ஒலிக்கக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். எழுந்த போது அறை வெளிச்சமாக, அமைதியாக இருந்தது. அருகில் அம்மு மட்டுமே தூங்கிக் கொண்டிருந்தாள். ‘என்ன சத்தம் அது?.. சித்து எங்க?” என்றெல்லாம் குழம்பிக் கொண்டிருந்த போது “ஹாப்பி பர்த் டே டூ யூ” என்று பாடிக் கொண்டே உள்ளே நுழைந்தார்.  மணி 12 ஆகியிருந்தது. கையில் ஒரு பெரிய தட்டில்.. Mini dates croissants, Nachos, strawberry & white chocolate milk shake, green tea with lemon & mint can,  Ferrero Raffaello almond coconut treat chocolates, Ice cream Cakes  என்று எனக்குப் பிடித்த தீனி வகையறாக்களை அடுக்கிக் கொண்டு வந்து நீட்டினார். சந்தோஷத்தில் சிரிப்பு பொங்கிக் கொண்டு வந்தது. இருந்தாலும் குழப்பம் முழுமையாய்த் தீராமல் "என்ன சத்தம் கேட்டுச்சு? நான் எப்டி எழுந்தேன்? நான் இப்ப எங்க இருக்கேன்?" என்று அடுக்கடுக்காய் நான் எழுப்பிய கடினமான கேள்விகளுக்கு "நான் உனக்கு மெசேஜ் அனுப்பிட்டு உள்ள வந்தேன்.. உன் போனோட மெசேஜ் டோன் தான்" என்று சுருக்கமாக பதிலிறுத்தார்.  பின்னர், கப் கேக் போலிருந்த குட்டி ஐஸ்க்ரீம் கேக்கை வெட்டி சாப்பிட்டதோடு அவர் மனம் சங்கடப்படக் கூடாதே என்ற ஒரே காரணத்திற்காக அவர் கொண்டு வந்திருந்த எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சம் டேஸ்ட் பார்த்து விட்டு  1 மணிக்கு தும்மிக் கொண்டே படுத்துத் தூங்கினேன். 

விடிகாலையில் மூக்கிலிருந்து ஜலம் கொட்டத் தொடங்கி, தலை கனத்து எழுந்திரிக்கவே முடியாமல் போய்விட்டது. பிறந்தநாளன்று கணவரையும், மாமனாரையும் காலைக்கும் மதியத்திற்கும் சேர்த்து ஆபீஸிற்கு பட்டினியாக அனுப்பினேன் என்ற குற்ற உணர்வு தாளாமல் சித்துவிற்கு பிடித்த மிளகுக் குழம்பு வைக்கலாம்.. மாலை வந்தாவது சாப்பிடட்டும் என்று மதியம் சமைக்கப் போனேன். மிளகை வறுத்து எடுத்து தட்டில் கொட்டலாம் என்று நினைத்துத் திரும்பிய வேளையில் திடீரென அமுதினி அழும் சப்தம் கேட்டு அடுப்பை அணைக்காமலேயே வெளியில் ஓடி, அவளைத் தூக்கி சமாதானப்படுத்திக் கொண்டே திரும்பி வருவதற்குள் ஏற்கனவே கருப்பாக இருந்த மிளகு  வடிவேலுவைப் போல கருப்பாய் பயங்கரமாய் இருந்தது. “ஏன் எனக்கு மட்டும் இப்டியெல்லாம் நடக்குது” என்று துக்கம் தொண்டையை அடைக்க, மிளகுக் குழம்பு திட்டத்தைக் கை விட்டு மோர்க்குழம்பு வைக்கலாமென்று முடிவெடுத்தேன்.  சித்துவும், அப்பாவும் திரும்பி வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு இரும்பு வாணலியில் வெண்டைக்காய் வதக்கி, தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் அரைத்துக் கொட்டி கொதிப்பதற்குள் குழந்தையை குளிப்பாட்டி விடலாம் என்று சென்று திரும்புவதற்குள்... இல்லை.. இல்லை.. இது தீயவில்லை. ஆனாலும் குழம்பு கருப்பாயிருந்தது.  எப்படி என்று தான் புரியவில்லை. சரி.. அப்புறமாய் செஃப் தாமோதரனுக்கோ, மல்லிகா பத்ரிநாத்திற்கோ சமையல் சந்தேகங்கள் பிரிவில் எழுதிக் கேட்டுக் கொள்ளலாம் என்று என்னை நானே தேற்றிக் கொண்டு,  குழம்பு கருப்பாய் இருந்தால் என்ன மோர் வெள்ளையாய் தானே இருக்கிறது? ஒளி இருளை விரட்டும் போது வெண்ணிற மோர், கார்க்குழம்பை வெளுப்பாக்காதா என்ன? என்ற நம்பிக்கையில் மோரையும் அதில் ஊற்றினேன். எல்லாம் சேர்ந்து மொத்தமாய் திரிந்து போய் விட்டது. அவ்வ்வ்.. வெளியில் எட்டிப் பார்க்கவிருந்த கண்ணீரை “பெண் என்பவள் அழப் பிறந்தவள் அல்ல; ஆளப் பிறந்தவள்" என்ற தினத்தந்தி ராணி காலண்டர் பொன்மொழி நினைவிற்கு வந்து அடக்கியது. இப்படியாக பிறந்தநாள் அன்று குடும்பத்தார்க்கு வெறும் சோற்றையும் ரசத்தையும் மட்டுமே உணவாகப் படைத்த பாவியாக பழியேற்கவிருந்ததால்.. டின்னரையாவது உருப்படியாக செய்து முடிப்பது என்று நான் கட்டாய சபதமெடுக்க வேண்டியதாயிற்று. 

சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கெளமாரம், செளரம் ஆகிய அறுசமயக் கடவுளர்களையும், பிற மதத்துத் தெய்வங்களையும், சீட்டில் எழுதி மரத்தில் கட்டினால் வேண்டுதலை அப்படியே நிறைவேற்றித் தரும் உள்ளூர் கடவுள் உட்பட அத்தனை சிறு தெய்வங்களையும், மதுரை ஆதீனம் தவிர்த்து பிற தமிழக ஆதீனங்கள் அனைவரையும் வேண்டி வணங்கி இரவு உணவிற்கு Tuna பிரியாணியும், சப்பாத்தி + கொங்குநாட்டுக் கோழிக் குழம்பும் சிறந்த முறையில் செய்து அசத்தினேன். (அசத்தினேன் என்றவிடத்தில் என 'அசந்தேன்' என்ற பதமும் பொருந்தக் கூடியதே) சித்துவின் நெருங்கிய நண்பரும் அவர் மனைவியும் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்திருந்தனர். பிரியாணியும்  குழம்பும் மிக அருமையாக இருப்பதாக வாய் கொள்ளாமல் பாராட்டி விட்டுச் சென்றனர். வீட்டிற்கு சென்றதுமே, எங்கோ மலேசியாவில்  இன்னும் சில நாட்களில் கேன்சரில் சாகவிருக்கும் Zanzila binti Hashim என்ற முகம் தெரியாத புண்ணியவான் (புண்ணியவதி?) தன்னுடைய சொத்திலிருந்து 2 பில்லியன் பிரிட்டன் பவுண்டுகளை இவர்கள் பேரில் எழுதி வைப்பதாக மெயில் அனுப்பியிருந்தாராம். உடனேயே எனக்கு போன் செய்து "எல்லாம் உன் கை ராசி.. நீ செய்த பிரியாணியை வயிறாரச் சாப்பிட்டு வாயாரப் புகழ்ந்ததின் பலன் தான் இது.." என்று மேலும் அரை மணி நேரம் புகழ்ந்தார்கள். நான் அமைதியாக புன்னகை செய்து "என்னை ரொம்ப புகழாதீங்க. நான் என் கடமையைத் தான செஞ்சேன்?" என்று கூறியபடி சித்துவின் கண்ணாடியைக் கழற்றினேன். (நான் தான் கண்ணாடி போடலயே?) :)