Thursday, January 29, 2009

பின்பனிக்காலத்திலோர் விடியல்..



பயணங்கள் மட்டுமே வாழ்வாயிருந்த தினங்களை, என்னிடம் அவையேற்படுத்தியிருந்த ஆழ்ந்த சலிப்பினை இப்போது வாய்த்திருக்கும் இந்த அபூர்வ பயணத்தில் நீண்ட பெருமூச்சுகளினூடே மீண்டும் நினைத்துக் கொள்கிறேன். வெளியில் இன்னமும் தீர்ந்து போய்விடாத இரவையும் கனத்த இருளையும் ஊடுருவி பகலை நோக்கி விரைகிறது பேருந்து. தவிட்டு நிற, ஒளி குன்றிய கண்ணாடி சன்னல்களின் பின்னாலிருந்து ஓர் மொட்டவிழ்வது போல மெல்ல விரிந்து கொண்டிருக்கும் இன்றைய நாள், மெலிதாய் கண்களுக்குத் தட்டுப்படுகிறது. இது வரை நான் கண்டுவந்திருக்கும் விடியல்களைப் போன்றே அதே ரம்மியங்களோடு, அதே நிறங்களோடு, அதே நிதானங்களோடு, அதே புன்னகையோடு... அனைத்திலும் அதுவே போன்ற, ஆனால் இதுவரை கண்டேயிராத இந்த விடியல் புதியதோர் பரவசத்திலாழ்த்துகிறது!

வியப்பாயிருக்கிறது.. என் நாட்களும் கூட இப்படியாகத்தான் மிக நீண்டதோர் இரவை, அதன் மீது வழிந்து கொண்டிருக்கும் அடர்கருமையை, அதன் மெளனத்திற்குள் ஒளிந்திருக்கும் அதிபயங்கரங்களைக் கடந்து, கடந்து, இப்போது தான்.. இதோ இந்த புலர்காலையைப் போன்றே மென்மையாய் விடிந்து கொண்டிருப்பதாய்த் தோன்றுகிறதெனக்கு.

ஒருவர் பின்னொருவராய் முன்னிருப்பவரின் உடுப்பைப் பற்றிக் கொண்டு ஓடி வரும் சிறுபிள்ளைகளைப் போல உன் நினைவுகள் கூச்சலிட்டபடி ஓடி வருகின்றன... ஒரு வட்டத்தின் துவக்கப் புள்ளி போல உன்னிலிருந்து தொடங்கும் என் அனைத்தும் உன்னிலேயே வந்து முடிவதை வெகு ஆச்சரியங்களோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை என்னால் இயன்றதும், இயல்வதும்.. எனக்கென்று பணிக்கப்பட்டிருப்பதும் கூட வெறுமனே பார்த்திருத்தலாகத் தான் இருக்கக் கூடுமோ? தெரியவில்லை. என்றாலும் பங்கேற்றிருத்தலும் நாமாய், பார்த்திருத்தலும் நாமாய் இருப்பதில் அனேக சுவாரஸ்யங்கள் இருக்கத்தான் செய்கின்றன இல்லையா? நம் சந்திப்பு முதலாய் இந்நாள் வரையிலும் நம் நாட்களை கையெடுக்காமல் வரையப்பட்ட கோட்டோவியமாய்த் தொடர்ந்து வரைந்து கொண்டிருக்கும் அற்புத விரல்களை, இக்கணத்தில் நன்றியின் பொங்குதல்களோடு நினைத்துக் கொள்கிறேன்.

முத்துக்களின் நுண்ணிய துளைகளின் வழி மெல்லிய இழையொன்று புகுந்து புறப்படுவதையொத்து நினைவுகளை கண்களுக்குப் புலப்படாத கண்ணியால் கோர்க்க விழைகிறதென் இதயம். என் வாழ்வின் துயரங்கள், பிறழ்வுகள், இழப்புகள் ஆகியவற்றின் துவக்கத்தைப் போன்றே பூபாளத்தின் முதல் ஸ்வரத்தை, பரிவினால் சுரந்து காற்றில் கலந்து வந்த அன்பின் கதகதத்த வெம்மையை இதே போன்றதோர் விடியல் தான் என்வசம் கொணர்ந்து சேர்த்தது. அப்போது அல்லிகள் மலர்ந்து, வெயில் மெதுவாய் ஊர்ந்து கொண்டிருந்த குளக்கரையின் விளிம்பிலமர்ந்தபடி, தளும்பும் நீரலைகளில் பார்வையைப் பதித்த வண்ணம், நிறைய தயக்கங்களோடு மெல்ல விரிந்த விரல்களை, அன்பும், நம்பிக்கையும், பாதுகாப்பும், உறுதியும் மிக்க விரல்கள் மிக உரிமையாய் கோர்த்துக் கொண்டன. வெயில் வேகமாய் நகர்ந்து அவ்விரல்களின் மீது வெளிச்சமிட்டது. அவ்விடத்தில் வெயிலோடு தானும் ஊர்ந்து கொண்டிருந்த எறும்புகளும், உறக்கத்தில் ஒரு முறை கண்விழித்துப் பார்த்த பூனைக் குட்டியும் அப்புனித நிகழ்விற்கு சாட்சியங்களாகின!

உனக்குத் தெரியுமா? அந்த நாளை, அந்த விடியலை, இறுக மூடியிருக்கும் சிசுவின் உள்ளங்கைகளைப் போன்று கண் கூசச் செய்யும் அதன் தூய்மையை, எத்தனை பெரிய அந்தகாரத்தின் நடுவிலும் பிரகாசமாய் ஒளிரும் அதன் வசீகர அழகை, எவரும் எதுவும் நெருங்கவியலாத ஆழத்தில் இதயத்தின் ரகசிய அறையில் நான் பொதிந்து வைத்துக் கொண்டிருக்கிறேன். என்றேனும் நானறியாப் பொழுதில் அது திறந்து கொள்கையில் அதன் அற்புதப் பிரவாகத்தில் நான் மூழ்கிவிட நேர்கிறது. நான், என் என்பது ஏதுமற்று நெருப்பில் கரையும் கற்பூரமாகி விடுகிறது மனது. என்னால் நிச்சயமாய்ச் சொல்ல முடியும்.. அந்த நாளுக்குப் பின்னாக வந்த வேறெந்த நாளும் அதனுடைய வனப்பில் பாதியைக் கூடப் பெற்றுவிட முடியவில்லை.

இப்போது நீ எங்கிருப்பாய்? எங்கோ தொலைவில்... வெகு தொலைவில்.. பசியால் அழுது ஓய்ந்த குழந்தையின் சாயல்களோடு, எனக்கான மிச்ச ஏக்கங்களோடு, முகத்தில் எப்போதும் ததும்பும் கருணையோடு, அயர்ச்சியில் உறங்கிக் கொண்டிருப்பாய். என் மனம், இப்போது வெளியே பொழிந்து கொண்டிருக்கும், புற்களிலும், பூக்களிலும், வயல்களிலும், மரங்களிலும், துயில் கலைந்து பறக்கத் துவங்கியிருக்கும் பறவைகளின் சிறகுகளிலும் படிந்து கொண்டிருக்கும், மெல்லிய பனியாய் மாறிவிடத் துடிக்கிறது. உறங்கும் உன் சிப்பியிமைகளில் மிருதுவாய்ப் படிந்து, அவை மெல்லத் திறக்கையில் உன் பார்வை தொடும் முதல் உணர்வாய், முதல் குளிராய் உள்நுழைந்து குழந்தைமைகளை கொஞ்சமும் இழந்து விடாத உன் தூய இதயம் முழுவதிலும், ஒவ்வொரு அணுவிலும் நிரம்பி விடத் தவிக்கிறது. உனக்கும் எனக்குமான தூரங்களை நிறைத்திருக்கும் வெளி முழுவதும் தானேயாகப் படர்ந்து உன்னை அடைந்துவிட விழைகிறது....

இயலாமையின் தோற்கடிப்பில் விழிசோர்கிறதெனக்கு. சன்னல்களின் கண்ணாடித் திரை விலக்கி கொட்டும் பனியை கைகளில் ஏந்துகிறேன். மழையைப் போல் விரல்களினூடே வழிந்து விடாமல் ஏந்திய கரங்களில் தேங்குகிறது பனி. அன்றோர் நாள் அடிபட்ட பறவையாய் உன் மடியில் நான் வீழ்கையில் பறக்கவியலாதவென் சிறகுகளை ஆதுரத்துடன் வருடிய உன் கரங்களின் குளுமையை நினைவூட்டிக் கொண்டே உள்ளங்கைக் குழிவில் படிந்து கொண்டிருக்கிறது.. வெட்டப்படாத என் சிறகுகளை பெருமையாய்ப் பார்த்த வண்ணம் நீயிருக்கும் திசை நோக்கிப் பறக்கத் தீர்மானிக்கிறேன் நான்.

Friday, January 9, 2009

பாற்கடல்!

சித்துவிற்கு புத்தகங்கள் என்றால் அலாதிப் ப்ரியம். உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளின் பட்டியலில் நிச்சயம் அவையும் இடம் பெற்றிருப்பதாய் சாதிப்பார்! இந்த முறை சென்னையிலும் ஈரோட்டிலுமாய் புத்தகக் கடைகளில் ஏறி இறங்குகையில் லா.ச.ரா வின் 'பாற்கடலை' அதிதீவிரமாய் தேடிக் கொண்டிருந்தார். ஒரு வழியாய் ஈரோடு பாரதி புத்தகாலயத்தில் லா.ச.ரா -வின் படைப்புலகம் கிடைத்தது.. மேலதிகமாய் கவிஞர் அபியின் விமர்சனங்களோடு.

சிறுகதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள் மற்றும் குறுநாவல்கள் பற்றிய அறிமுகங்களோடு கூடிய அத்தொகுப்பு நூலை இருள் கவியத் தொடங்கிய மாலையொன்றில் காவிரி ஆற்றங்கரையில் அமர்ந்து படிக்கத் துவங்கினோம். காவிரி முன் போலில்லை. என் சின்னஞ்சிறு விழிகளில் விரிந்து விரிந்து.. என் இளம் பிராயங்களின் கரைகளில் நிரம்பித், ததும்பிக் கொண்டிருந்தது போல பின்னெப்போதும் அது இருக்கவில்லை. ஆறும் கல்பொரு சிறு நுரையாகிக் கொண்டிருக்கிறதோ என்னவோ? என்றாலும் ஆற்றங்கரைகளுக்கேயுரிய தனி வசீகரமும் இல்லாமலில்லை.

"சிறு அசைவுகளில் பெரிய விளைவுகள் உண்டாக்க வேண்டும். சொல்லாமல் உணர்த்தும் நளினம் கைவர வேண்டும். தமது நடவடிக்கைகள் மெளனத் தளத்தில் இருக்க வேண்டும்" என்று தீவிரமாக ஆசைப்படுபவர் லா.ச.ரா என்கிறார்
அபி.

அபியின் கணிப்பு சரி தான் என்றாமோதிக்கிறது 'பாற்கடல்'. பாற்கடலைப் போல, படிக்கப் படிக்க உடம்பு சிலிர்த்துக் கொண்டதும், மனம் பெரு மைதானம் போல விரிந்து கொண்டே சென்றதும், படித்து முடிக்கையில் பேரானந்தமும்
பெருந்துக்கமுமாய் தொண்டை அடைத்துக் கொண்டதுமான மெய்ப்பாடுகள் வேறெப்போது நிகழ்ந்தனவென்று நினைவிலில்லை. எங்கள் முன்னால் வற்றி இளைத்து, உடம்பெங்கும் எலும்புகள் துருத்தினாற் போல் நகர்ந்து கொண்டிருந்த நதி கூட சட்டென்று பாற்கடலாகி விட்டது போலொரு பிரமை தட்டிற்று. சொல்லி வைத்தாற் போல் நிறைவாய் இரு புன்னகைகள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன.

'நல்ல கதை... நல்ல்ல கதை' - சித்து தன்னையறியாமல் முணுமுணுத்துக் கொண்டேயிருந்தார். கடிதமா கதையா என்று பிரித்துப் பார்க்கவியலாதபடி வெகு இலாவகமாய் நகரும் கதையின் கட்டமைப்பை வெகு நேரம் வியந்து கொண்டிருந்தார். வலைப்பதிவில் நிச்சயம் எழுதவேண்டும் என்றார்.

இதோ இப்போது பாற்கடல் பற்றி எழுதுவது என்று முடிவான பின்னும் கூட லா.ச.ரா விரும்பும், அவர் படைப்புகள் அனைத்திலும் அவர் நிகழ்த்திக் காட்டியிருக்கும் 'சொல்லாமல் உணர்த்தும் நளினம்' கைவருமா
என்ற சந்தேகத்தில் தான் நான் இப்படி சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறேன்.

இக்கட்டுரை நிச்சயம் ஒரு விமர்சனக் கட்டுரையில்லை.. இன்னின்ன நிறைகள், இத்தனை குறைகள் என்று பட்டியலிடும் எண்ணமில்லை. மாறாய் ஒரு அளப்பரிய உன்னத கணத்தை, எப்போதும் மாறாமலிருக்கும் உண்மையொன்றை, மனம் தளும்பும் மகிழ்ச்சியொன்றை தற்செயலாய் ஸ்பரிசித்து விட்ட அனுபவத்தை மட்டுமே இதில் சுட்டிப் போக விரும்புகிறேன். ஒரு விழைவு.. அல்லது ஆற்றுப்படுத்தும் முயற்சி.. அல்லது முதன்முதலாய் கடல் பார்க்கும் குழந்தையின் ஆச்சரியம்!

"குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்து லட்சுமி, ஐராவதம், உச்சஸ்ரவஸ் எல்லாம் உண்டாயின. .... ஆலகால விஷமும் அதிலிருந்து தான் உண்டாகியது; உடனேயே அதற்கு மாற்றான அம்ருதமும் அதிலேயே தான்.."

என்று நிறைவுறுகிறது கதை. நம் பழஞ்சமூகம் முன்னொரு காலத்தில் கட்டமைத்திருந்த கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பம் தான் பாற்கடலின்
கதைக்களமாகியிருக்கிறது. கூட்டுக்குடும்பங்கள் பற்றிய தற்காலத்தைய அவநம்பிக்கையை, முன்மதிப்பீடுகளை எல்லாம் பொட்டிலறைந்தாற் போல ஒரே ஒரு கதையின் மூலம் களைந்து விட முடியுமா என்ற ஐயப்பாட்டை சாத்தியமாக்கியிருக்கிறது லா.ச.ரா வின் எழுத்து. அன்பு, பாசம், காதல், நெகிழ்ச்சி, உறவு, பிரிவு.... இன்னும் பின்னவீனத்துவ வாதிகளின் கேலிக்குள்ளாகும் இதேபோன்ற இன்னபிற பொய்களில் நிறைந்திருக்கும் உண்மையின் சதவீதத்தை அன்னம் போல பிரித்துக் காட்டியிருக்கிறது.

கதை படித்த நாளிலிருந்து பாற்கடல் என்ற படிமம் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். எவர் உருவாக்கியிருப்பார்கள் இதை? கற்பனைக்கெட்டா வண்ணம் ஆழமும் விரிவுமாய் பரவியிருக்கும் உவர்கடலை, முழுவதும் பாலால் நிரப்பிப் பார்க்க எந்த மனம் விரும்பியிருக்கும்? விஷமும் அமிர்தமும் அதிலிருந்தே வந்ததென்ற கற்பனை எவர் மனத்தில் உதித்திருக்கும்?

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த கதை, மனதில் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்குமிடையிலான தடுப்புச் சுவற்றை வலுவுற மேலெழுப்பிக் கட்டியதெனில் லா.ச.ராவின் 'பாற்கடல்' இருமைகளுக்கிடையிலான தடித்த கோட்டினை முற்றிலும் இல்லாமலாக்கியிருக்கிறது. உண்மை தான். சூரியன் ஒரேயிடத்தில் இருக்கையில் இரவேது? பகலேது? உறவுகளும் அவை தரும் துன்பங்களும் அதைத் தொடர்ந்த தேற்றுதல்களும் பின் வரும் இன்பங்களும் என்றான வாழ்க்கைச் சுழற்சி கூட இத்தனை நாட்கள் இரவு பகலைப் போல வேறு வேறாய் காட்சியளித்தவை தானில்லையா? நன்றும் தீயதுமான அல்லது நன்மையும் தீமையுமற்ற பாற்கடலைப் போன்றது தான் குடும்பங்களெனில் ஒவ்வொரு மனிதரையும் கூட பாற்கடலாய்த் தான் பார்க்கத் தோன்றுகிறது!