Sunday, April 20, 2008

தமிழ்ச்செல்வியின் 'கீதாரி'


" நீ வளர்ந்திருக்க.. அவ்ளோ தான். இன்னும் வாழவே ஆரம்பிக்கல"

எப்போதோ பேச்சுவாக்கில் அம்மா சொன்னது இது! காற்றில் திசையறுந்த பட்டம் போல் மனக்கிளை ஒன்றில் மாட்டிக் கொண்டு எப்போதும் படபடத்துக் கொண்டே இருக்கிறது இந்த வரி. கால் நூற்றாண்டைக் கடந்தாயிற்று.. இன்னும் வாழவில்லை என்றால் எப்படி?

நிஜம்தான். என்றோ துயரமென மறுகியவை புன்னகையாகவும், மகிழ்வெனக் கொண்டாடியவை கண்ணீராகவும் தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கும் விசித்திரத்தின் நடுவில் வாழ்வில் இதுவரை கற்றதும் பெற்றதும் எவையென தேர்ந்து கொள்வது சிரமமாய்த்தானிருக்கிறது.

வாழ்க்கைக்கு அநேக முகங்கள். சிலரிடம் சிரித்தபடியும், சிலரிடம் சினந்தபடியும் சிலருக்கு எக்காலமும் அருள்பாலித்தபடியும் சிலரை என்றென்றும் வெறுத்தொதுக்கியபடியும் அன்பாய், அருவருப்பாய், சாந்தமாய், குரூரமாய்.. விதவிதமாய் இருக்கும் விநோத முகங்கள். எல்லோருக்கும் எல்லா முகங்களையும் சந்திக்க வாய்ப்பதில்லையென்றாலும் பெரும்பாலும் புத்தகங்கள் அவற்றை இனங்காட்டி விடுகின்றன இல்லையா?

ஒவ்வொரு முறையும் பிறவியெடுத்து முழுமையாய் வாழ்ந்து பார்க்க வேண்டிய வாழ்க்கையை, இந்தப் புத்தகங்களில் வீசும் அச்சு மையின் மெல்லிய வாசனைகளூடாய் நாமும் வாழ்ந்து விட முடிவது எத்தனை அற்புதமானது! கீழே விழாமலே அடிபட்ட வலியும்.. இழக்கும் முன்பே இழப்பின் வேதனையும்..காயங்கள் ஏதுமின்றி குருதியுமிழ் புண்களும் வாசிப்பில் மட்டும்தான் சாத்தியம் என்று தோன்றுகிறது.

அப்படியொரு வலி மிகுந்த வாழ்க்கைதான் தமிழ்ச்செல்வியின் 'கீதாரி'. வாங்கி 6 மாதங்களாய் பாத்திரத்தில் சேமித்த விதைநெல் போல பொறுமையாய் காத்துக் கொண்டிருந்தது அது! இம்மாதத் துவக்கத்தில் ஒவ்வொரு நொடியையும் கழுத்தைப் பிடித்து தள்ள வேண்டியிருந்த நாளொன்றில்.. தன்னை எங்காவது தொலைத்துவிடும்படி கெஞ்சிக் கொண்டிருந்த வெயில் நேரத்தை கீதாரிக்குத் தின்னக் கொடுத்திருந்தேன். படித்து முடித்தபோது வெகுவாய் ஓர் ஆயாசமும் கனமும் எஞ்சியிருந்தது மனதில்.

ஏற்கனவே தமிழ்ச்செல்வி பற்றி பிறர் சொல்லக் கேட்டும்.. தம்பியின் 'அளம்' பற்றிய பதிவைப் படித்துமிருந்ததால் புத்தகம் பிரிக்கையில் எதிர்பார்ப்பின் அடர்வு கூடியிருந்தது. ஆனால் முதல் பத்தியிலேயே முன்முடிவுகள் அனைத்தும் சிதைந்து போயின! ஒப்பனைகள் ஏதுமற்ற வெற்று முகம் போன்ற தமிழ்ச்செல்வியின் எழுத்து என்னை அத்தனை ஈர்த்தது எனக்கே ஆச்சரியம் தான்!

"யதார்த்தம் குரூரமாகவும் வக்கிரமாகவும் இருக்கிற போது அதை மிகைப்படுத்தவோ சிதைக்கவோ நான் விரும்புவதில்லை.ஒரு மலையைப் போலவோ அடர்ந்த வனத்தைப் போலவோ உருப்பெறுகிறது என் நாவல்"

எனச் சொல்லிக் கொள்ளும் தமிழ்ச்செல்வி இதை செய்துகாட்டியுமிருக்கிறார்.

*கீதாரி - இயற்கையின் மாற்றங்களையும் சீற்றங்களையும் ஒன்றேபோல வெட்ட வெளியில் எதிர்கொள்ளும் ஆட்டிடையர்களின் துயர்நிரம்பிய வாழ்க்கையைப் பேசுகிறது. ராமு கீதாரி, கரிச்சா என்று இரண்டு கதாபாத்திரங்கள். பூவிடைப்பட்ட நார் போல கதை முழுக்க விரவி நிற்கும் இவர்கள் இருவரையும் உருவி எடுத்துவிட்டால் நாவல் பொலபொலவென வெறும் சொற்களாய்க் கொட்டிவிடுமோவென பிரமை தட்டியது எனக்கு.

அதிலும்.. அந்தப் பெண்... அந்த கரிச்சா..என்னவொரு மனோதிடம் அவளுக்கு! ஒரே பேற்றில் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றுவிட்டு இறந்து போகும் புத்திசுவாதீனமற்ற தாயொருத்தியின் மகள் அவள். ராமு கீதாரியின் பாதுகாப்பில் வளர்கிறாள். உடன்பிறந்தவளை வேறொருவருக்கு தத்து கொடுக்கையில் பிரிவில் உருகுகிறாள்.. பூப்படையும் போது பக்கத்தில் பெண் துணையின்றி முதன்முறையாய் இறந்து போன தாயை நினைத்து கொண்டு தவிக்கிறாள்...சந்தர்ப்ப சூழ்நிலையால் அதுவரை தனக்கு 'சித்தப்பா'வாயிருந்த கீதாரியின் வளர்ப்பு மகனையே மணக்கிறாள்... தத்து கொடுக்கப்பட்ட உடன்பிறந்தவள், வளர்ப்புத் தந்தையாலேயே கற்பழித்துக் கொல்லப்பட்டாளென அறிந்து கதறுகிறாள்... குழந்தையில்லை என கணவனின் வெறுப்பிற்கு ஆளாகிறாள்... தாங்க முடியாத கணத்தில் துணிந்து அவனைப் பிரிந்து வருகிறாள்.. 5 வருடங்களாய் வாய்க்காத பிள்ளை வரம் வாய்த்தும் மீண்டும் அவனுடன் சேர்ந்து வாழ மறுக்கிறாள்... முதிர்ந்து தளர்ந்த கீதாரியை தன் பொறுப்பில் பராமரிக்கிறாள்.. தன் மகனை படிக்க வைக்க விரும்புகிறாள்... எதிர்பாராத நாளொன்றில் பாம்பு கடித்து இறந்து போகிறாள்.

கரிச்சாவையும் அவள் தமக்கை சிவப்பியையும் அவள் கணவன் வெள்ளைச்சாமியையும் எதிர்பார்ப்புகளற்ற அன்போடு வளர்த்து ஆளாக்கிய கீதாரி.. கரிச்சாவின் மகனோடு மீண்டும் தன் பயணத்தைத் தொடர்கிறார்!

'இன்னமும் எவ்வளவு துன்புறுத்திவிடுவாய் நீ?' என வாழ்க்கையிடம் பந்தயம் கட்டிக் கொண்டது போலிருக்கிறார்கள் இருவரும். முளைவிதையின் உயிர்த்துடிப்பும் வெட்ட வெட்டத் தழைக்கும் வாழ்தலுக்கான வேட்கையும் நிரம்பிய நாவல் மனதின் இருள் மூலைகளில் வெளிச்சமாய்க் கசிகிறது!

என்றாலும் கதை முழுக்க அறியாமையின் கோரப்பற்கள் ஒவ்வொருவரையும் குரூரமாய்க் கிழித்தெறிவது பரிதாபமாயிருக்கிறது.

"ஊர்விட்டு ஊர்வந்து நாடோடிகள் போல பிழைப்பு நடத்தும் ஆட்டுக்காரர்கள் ஊமைகளாகவே எங்குமிருந்தார்கள். ரோஷம், அவமானம் என்பதையெல்லாம் இவர்கள் ஒரு போதும் நினைப்பதேயில்லை. இவர்களை வலிய கூப்பிட்டு யாரேனும் அடித்து உதைத்தாலும் ஏனென்று கேட்க மாட்டார்கள். இவர்களின் இந்த பரிதாபமான நிலை கண்டு இரக்கப்பட்டு யாராவது இவர்களிடம் விசாரித்தால் அதற்கு இவர்கள் சொல்லும் பதில் இன்னும் பரிதாபமாய் இருக்கும். ' யாரும் எங்கள சும்மா அடிக்க மாட்டாக..போன வருஷம் மொத வருஷத்துல அவுக கொல்ல பயிறு பச்சயில எங்க ஆடுக மேஞ்சிருக்கும்.. அந்த கோவத்துல அடிக்கறாக.. அவுக அடிக்கறது ஞாயந்தான ?. நம்ம மேல தப்பிருக்கு.. பட்டுகிட்டுதான் போகனும்' என்று மிக இயல்பாக சொல்வார்கள்"

இந்த மனிதர்களை என்ன சொல்ல?

படித்து முடிக்கையில்....

"வா விளையாடலாம்
என்று அழைத்துப் போய்
நீ உதைத்து விளையாடும்
பந்தாக என்னை ஆக்கிக் கொண்டாயே"

தபூசங்கரின் வாழ்க்கை பற்றிய வரிகள் ஓடி மறைந்தன மனதிற்குள்..

குறைந்தபட்ச நியதிகள், ஒழுக்கங்கள், தேவைகள் ஆகியவற்றோடு அதிகபட்ச துயரங்களை எதிர்கொள்ளும் இம்மக்களின் வாழ்க்கை, படிக்கும்போதும் படித்தபின்னும் 'அய்யோ' வென்ற பதைபதைப்பையும் 'எத்துணை ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வு நம்முடையது' என்ற ஆசுவாசத்தையும் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.

ஜெயமோகன் சொல்வது எத்தனை உண்மை... நிஜம் தான்.

"வாழ்க்கை மிகப்பெரிய அறிய முடியாமையன்றி வேறல்ல!"

*கீதாரி - ஆட்டிடையர்களின் தலைவரைக் குறிக்கும் பெயர்

Sunday, April 6, 2008

தொலைத்தல் மற்றும் தொலைந்து போதல்

670 ரூபாய் ரொக்கம்
கொஞ்சம் சில்லறைக் காசுகள்
வீடு மற்றும் என் அறையின் சாவி
திருச்சி செல்வதற்கான 42 ரூபாய் டிக்கெட்
கல்லூரியில் செலுத்தவிருந்த 4250 ரூபாய்க்கான டிடி
வங்கி பண அட்டைகள்
படிக்கிறேன்.. பணிபுரிகிறேன் என்பதற்கு சாட்சியங்களான அடையாள அட்டைகள்.
K750i சோனி எரிக்சன் மொபைல்
கறுப்பு ஜெல் பேனா
நான்கைந்து விசிட்டிங் கார்டுகள்
தம்பியின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
ராம மந்திரத்துடன் கூடிய நாமக்கல் ஆஞ்சனேயரின் படம்
டிசைனர் புடவைகளை பெட்ரோல் வாஷிற்கு கொடுத்ததற்கான ரசீது
மிளகு சைஸ் கறுப்பு ஸ்டிக்கர் பொட்டு அட்டை....

இன்னும் அந்த பர்ஸில் என்னவெல்லாம் வைத்திருந்தேன் என்பதை பேருந்தில் அது தொலைந்தபின் தான் அவசர அவசரமாய் யோசித்துக் கொண்டிருந்தேன்..!

போன மாதத்தின் ஏதோவோர் புதன்கிழமை.. எனக்கு முனைவர் பட்டம் வழங்கும் பெருமையை திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பெற்றுக் கொள்ள விரும்பியதால் மனமுவந்து திருச்சிக்குக் கிளம்பினேன். அதிகாலை (பெரும்பாலும் அது யாமம்) 5 மணிக்கே ஈரோட்டில் திருச்சி பஸ் ஏறி வசதியாய் ஒரு சீட் பிடித்து ஜன்னல் கம்பியில் தலை சாய்த்து 5.15 க்கெல்லாம் ஆழ்ந்து தூங்கத் தொடங்கியிருந்தேன். அப்போது மேற்குறிப்பிட்ட இத்தியாதிகளோடு பர்ஸ் என் மடியில் தான் இருந்தது.

அப்பா எப்போதும் நிறைய முன்யோசிப்புகளோடிருப்பவர். அவர் வெளியூர் செல்வதாயிருந்தால் எங்கு போகிறேன்.. யாரைப் பார்க்க.. அவர் முகவரி என்ன.. தொலைபேசி எண் என்ன.. அது பிசியாக இருந்தாலோ அவர் தொடர்பெல்லைக்கு அப்பாலிருந்தாலோ வேறு எந்தெந்த எண்ணில் தொடர்பு கொள்வது.. அதே ஊரில் அந்த நபருக்கு வேறு நண்பர்கள் உண்டா.. அவர்களின் மொபைல் மற்றும் லேண்ட் லைன் எண்கள் என்ன என்பது வரை விலாவரியாய் (கார்பன் வைத்து) 2 பிரதிகள் தயார் செய்து ஒன்றை வீட்டில் எல்லோருக்கும் தெரியும்படி பிரகடனப்படுத்திவிட்டு மற்றொன்றைஅவர் எடுத்துச் சென்றிருப்பார்.

வழக்கமாய் விட்டலாச்சாரியார் படங்களில், ஏழு மலைகள் ஏழுகடல்கள் கடந்து, அடர்ந்த காட்டில், இருள் குகை ஒன்றில், பாம்புகளின் பாதுகாப்பில்,பாறைக்கடியில், மண்ணுக்குள் ஆழப்புதைக்கப்பட்ட கண்ணாடிப் பேழையில், வைக்கப்பட்டிருக்கும் கருவண்டிற்குள் மந்திரவாதியின் உயிர் இருப்பதாய் காட்சி வருமே? அதைப்போலத்தான் பயணங்களின் போது பணத்தையும் வெகுபாதுகாப்பாய் வைக்க விரும்புவார்! நானும் அப்படியே இருக்க வேண்டும் என்பதில் பெருவிருப்பமும் நான் அப்படியில்லாததால் மிகுந்த வருத்தங்களும் அவருக்கு உண்டு. இந்த முறையும் கிளம்பும்போது "ஏம்மா பர்ஸை ஒரு பையில் வைத்து எடுத்துப் போயேன்?" என்று சொல்லத்தான் செய்தார். நான்தான் கேட்கவில்லை.

என்றாலும் நீங்கள் இப்போது நினைப்பது போல நான் ஒன்றும் அத்தனை பொறுப்பற்றவளில்லை. கரூரில் ஒரு முறை, குளித்தலையில் ஒரு முறை அவ்வப்போது கண்விழித்து பர்ஸ் இருப்பதை உறுதி செய்துகொண்டுதானிருந்தேன். ஆனால் எப்போது அது தொலைந்தது என்பதைத்தான் கவனிக்கவில்லை.

மறுமுறை பெயர் தெரியாத ஊரில் கண்விழித்தபோது மடியில் வெறும் ஃபைல் மட்டுமேயிருந்தது. பக்கத்து சீட்டிலோ பின்னிரண்டு இருக்கைகளிலோ ஆட்கள் எவருமில்லை. 'மச்சானை பார்த்தீங்களா' ரீதியில் எவரிடமும் விசாரிக்கவும் வழியில்லை. சின்னதாய் குல்லாவும் சிவப்பு ஸ்வெட்டரும் அணிந்தகைக்குழந்தையுடன் பக்கத்தில் உக்காந்திருந்து எந்த நிறுத்தத்திலோ இறங்கிப் போயிருந்த பெண்ணை சந்தேகிக்க மனம் வரவில்லை. பேருந்தில் கீழே சாஷ்டாங்கமாய் விழாத குறையாய் எல்லாப்பக்கமும் தேடியாயிற்று இனி என்ன செய்ய?

நிலைமையின் தீவிரம் புரிய பதற்றம் கூடிக் கொண்டே போனது. கையில் ஒரு பைசா இல்லை.. திருச்சியில் தெரிந்தவர்கள் எவருமில்லை.. அங்கு போய் சேர்ந்த பின்பாய் திரும்பி வரவும் வழியில்லை. எவரையும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.. குறைந்தபட்சமாய் 'மொபைல் தொலைந்து போய்விட்டது' என்பதையாவது அவசரமாய் யாருக்கேனும் போன் செய்து சொல்ல விரும்பினேன் நான். அதற்கும் வழியில்லை. எல்லாவற்றுக்கும் மேலாய் எனது மற்றும் எங்கள் இல்ல தொலைபேசி எண் தவிர்த்து மற்ற எவரின் எண்ணும் நினைவிலில்லை.

கையில் ஒரு ரூபாய் கூட இல்லாத நிலையில் யாருக்கு எப்படி என் நிலைமையை விளக்கி எவரிடம் உதவி கேட்டு எப்போது ஊர் போய்ச் சேர்வதென தவித்துக் கொண்டிருக்கையில் எப்போதோ தம்பி சொன்ன அறிவுரையும் நியாபகம் வந்தது.. 'எப்போதும் பணத்தை ஒரே இடத்தில் வைத்திருக்காதே' என்றான் ஒருமுறை. ஒருவேளை இந்த அதிகார மையம், குவியம், விளிம்பு பற்றில்லாம் இவனும் படித்திருப்பானோஎன்று அசந்தர்ப்பமாய் நினைத்துக் கொண்டேன். என்றாலும் அவன் பேச்சை மதித்துத்தான் பர்ஸின் வெளிப்பக்க அறையில்170 ரூபாயையும் உள்ளறையில் 500 ரூபாய் தாளையும் பிரித்து வைத்திருந்தேன்.. இப்படியாகுமென கனவிலும் நினைக்கவில்லை.

ஒரு வழியாய் யோசித்து, திருச்சியில் இறங்கியதும் கருணை ததும்பும் முகம் கொண்டகடைக்காரர் எவரேனும் கண்ணில் பட்டால் அவரிடம் நிலைமையை விளக்கி ஒரு போன் செய்துவிட்டு, மீட்க எவரேனும் வரும் வரை அடகுப் பொருள் போல கடையிலேயே அமர்ந்துகொள்வதென தீர்மானித்தேன். ஆனாலும் யாருக்குப் போன் செய்வதென்ற குழப்பம் நீடித்தது.

முதல் காரியமாய் எனக்கே போன் செய்யலாம்... அதாவது என் எண்ணுக்கு! மறுமுனையில் எடுப்பார்களா? நிச்சயமாய் எடுப்பார்கள்.. 'தொலைந்து போன பொருள் ஒன்று திரும்பக் கிடைக்கும்..மாற்று இனத்தார் தானே வந்து உதவுவர்' என்று சென்ற மாத ராசிபலனில் போட்டிருந்ததே? சென்ற மாத ராசிபலன் இந்த மாதம் வரை நீடிக்குமா? மாற்று இனத்தவர் என்றால் யார்? தெலுங்கர்கள், கன்னடர்களா? கிறிஸ்துவர்.. இஸ்லாமியர் போன்றவர்களா? யாராயிருந்தால் என்ன போனை எடுத்தால் போதும்.. எடுத்ததும் என்ன பேசுவது? 'ஐயா உங்களிடமிருக்கும் அலைபேசி உண்மையில் என்னுடையது. அதை தாங்கள் என்னிடம்...'என்று பணிவுடனா? அல்லது அபிஅப்பா போல..'டாய்ய்ய்.. நான் யாருன்னு தெரியுமா? ஈரோடு சூரம்பட்டி ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் என்ஒன்னு விட்ட அக்கா வூட்டுக்காரருக்கு செம தோஸ்து' என மிரட்டலாகவா? சூரம்பட்டி இன்ஸ்பெக்டருக்கு, திருச்சி திருடர்கள் பயப்படுவார்களா என்று வேறு சந்தேகமாயிருந்தது.

இழப்பின் அடர்த்தியை விடவும் இனி செய்யக்கூடியது என்ன என்பதே மிகவும் அலைக்கழித்தது.. "எக்ஸ்க்யூஸ் மீ... மிஸ் இது உங்க பர்ஸா? இங்க கீழ கிடந்தது" என்று காக்க காக்க சூர்யா போல சுமாரான இளைஞர் யாரேனும் சொல்லக்கூடுமா என்றும் கூட எதிர்பார்த்தேன். அப்படி எதுவும் நடப்பதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை. சோர்ந்து முன்னும் பின்னுமாய் பேருந்திற்குள் அலைபாய்ந்து கொண்டிருக்கையில்.. என் இருக்கைக்கு 3 இருக்கைகள் பின்னால் அமர்ந்திருந்த பெரியவர் 'பாப்பா இதையா தேடறே' என்றார். ஆஹா! அவர் கையில் என்னைப் போலவே சாதுவான தோற்றத்துடன் இருந்தது என் பர்ஸ்! மடியிலிருந்து கீழே விழுந்து 3 இருக்கைகளுக்கு அது தத்தி தத்தி போகும் வரை என்னை உறக்கத்திலேயே ஆழ்த்தியிருந்த நித்திராதேவியை அவசர அவசரமாய் சபித்தேன். பர்ஸைப் பார்க்கப் பார்க்க,

"தேடினென்! கண்டனென்! தேவியே! என
ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும் பாய்ந்து
ஓடினன் உலாவினன்"

அசோகவனத்தில் சீதையை பார்த்து மகிழ்ந்த அனுமனைப் போல உள்ளுக்குள் உவகை பொங்கியது!

ஆனால் அவர் அதை என்னிடம் தருவதாய் தெரியவில்லை. அவர் கையில் என் அடையாள அட்டை இருந்தது.. என்னையும் அதையும் மாற்றி மாற்றிப் பார்த்து 'இது நீயா?' என்றார் சந்தேகமாய்.. அதில் 'நிச்சயமாய் நீயில்லை'என்ற உறுதிப் பொருள் தொனித்தது. 'சத்தியமா நான் தாங்க.. போட்டோ 5 வருஷம் முன்ன எடுத்தது' என்றேன் சோகமாய். அரைமனதோடு என் கையில் கொடுத்தார். நிச்சயமாய் சொல்கிறேன் இதற்கு முன்பாய் அந்த பர்ஸை அத்தனை அன்புடனும் வாஞ்சையுடனும் நான் பார்த்ததேயில்லை.

"நன்றிங்க... ரொம்ப நன்றி" என்றேன் திரும்பத் திரும்ப. அப்போது மனதிலிருந்த நன்றியைச் சொல்வதற்கு இந்த வார்த்தை போதுமானதாய் இல்லையென தோன்றியது.

பின் கோவில் பிரசாதம் போல பயபக்தியாய் அதை எடுத்துக் கொண்டு என் இருக்கைக்கு திரும்பினேன்.

"தொலைந்து போனது
நீ மட்டுமில்லை
நானும் தான்"

இப்படி ஏதாவது பர்ஸைப்பற்றி தலைப்பில்லாமல் கவிதை எழுதலாமா என்று கூட தோன்றியது.

அந்தப் பெரியவரும் பின்னாலேயே வந்து என் முகம் பார்த்துப் பேச வசதியாய் எதிர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டார்.

"நானா இருக்கங்காட்டியும் எடுத்துக் கொடுத்தேன்.. வேற எவனாச்சுமா இருந்தா லவட்டிகிட்டு போயிருப்பான்"தனக்குள் பேசுவது போல தன்னை தானே மெச்சிக் கொண்டார். 'ஆமாங்க' என்றேன்.

திடீரென ஆவேசமாகி... "இது தான் ஃப்ர்ஸ்ட் அண்டு லாஸ்ட்டு டைமா இருக்கனும்.. இதை நீ தொலைக்கறது" என்றார் கோபமாய்.

"லாஸ்ட் டைம்னு வேணா சொல்லுங்க.. நான் இதை தொலைக்கறது இதான் ஃப்ர்ஸ்ட் டைம் னு உங்களுக்கு எப்டி தெரியும்?" துடுக்குத்தனமாய் கேள்வி வந்து நின்றது உதட்டில். "பாதகி.. எதையாவது பேசி நன்றி கொன்றவளாகி விடாதே" என உள்ளிருந்து ஒரு காயத்ரி அதட்டியதால் பணிவாய் "சரிங்க" என்றேன்.

அவர் கொஞ்சம் சாந்தமானது போலிருந்தது.. சற்று நேரம் கழித்து "படிக்கறாப்லயா?" என்றார். எனக்கு குழப்பமாயிருந்தது. ஆமாம் என்றால் எத்தனாவது என்று கேட்பாரோ? பி.ஹெச்.டி யை எத்தனாவது என்று சொல்வது? 12+ 3+ 2+... வருடங்களை மனசுக்குள் கூட்டிக் கொண்டே ஆமாம் என்பது போலவும் இல்லை என்பது போலவும் குத்துமதிப்பாய் தலையசைத்தேன்.

"ம்ம்.. படிச்சாத்தான் இந்த காலத்துல பொழைக்க முடியும்" வழக்கம்போல தனக்குத்தானே பேசிக்கொண்டே "ஏம்மா நீ ....... சாதிப்பொண்ணா?" என்றார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. சாதியெல்லாம் தெரிந்து என்ன செய்யப்போகிறார் இவர்? லேசாய் கடுப்பாகி' இல்ல' என்றேன் சுருக்கமாய்... 'பின்ன?' என்றார் அவரும் சுருக்கமாய்.

எனக்கு நன்றியுணர்ச்சி மங்கிக் கொண்டே வர எரிச்சல் தலை தூக்கியது. இதுக்கு இந்த பர்ஸ் தொலைஞ்சே போயிருக்கலாம் போல. வேறு வழியில்லாமல் பதில் சொன்னேன். இத்தோடு விட்டுவிடமாட்டாரா என்று ஏக்கமாயிருந்தது.

அவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் "அது சரி.. இப்ப எங்க போறாப்ல" என்று கேள்வியைத் தொடர்ந்தார். பற்றிக் கொண்டு வந்தது எனக்கு. 'ஈரோட்டுக்கு' என்றேன். "ஈரோடா? பஸ் திருச்சிக்கில்ல போகுது?" அதிர்ச்சி அவர் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. "ம்ம்.. ஈரோட்டுக்கு போய்ட்டு திருச்சிக்கு போய்ட்டிருக்கேன்" என்றேன் பஞ்சதந்திரம் பாணியில்! என் கிண்டல் அவருக்கு புரிந்ததாய் தெரியவில்லை. குழப்பமாய் விழித்தார். பின்னும் சளைக்காமல் "ஈரோட்ல தான் வீடா? எந்த ஏரியா?" என்றார்.
நான் நொந்து போனேன்.. அப்பெரியவருக்கு எதேனும் கொள்ளைக் கூட்டத்துடனோ கடத்தல் கும்பலுடனோ தொடர்பிருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாய் தெரிந்தபோதும் நாங்கள் வசிக்கும் பகுதிக்கு நேர் எதிர்த்திசையில் 20 கி.மீ தள்ளி இருக்கும் இடத்தின் பெயரைச் சொன்னேன்.. "அங்க எங்க?" என்று கேட்பார் என்று முன்கூட்டியே யோசித்ததால் 'பிள்ளையார் கோவில் பக்கத்துல' என்றும் சொல்லிவைத்தேன். பிள்ளையார் கோவில்கள் இல்லாத தெருக்கள் தமிழகத்தில் மிகக்குறைவு தானே?

எதோ யோசித்தவர், அந்த பகுதியிலிருக்கும் ச.ம.உ அலுவலகத்திற்கு (MLA ஆபீஸ்!) எதிர்ச்சந்தில் 3 வதாக இருக்கும் பொட்டிக்கடையை தவிர்த்து விட்டு எண்ணினால் 8 வதாக இருக்கும் ஓட்டு வீட்டில் தான் தன் மூத்த மகளைக் கட்டிக் கொடுத்திருப்பதாக உபதகவல் வேறு சொன்னார். நல்லவேளையாய் அவர் அடுத்த கேள்விக்கு தயாராவதற்குள் திருச்சி வந்திருந்தது. அவசரமாய் விடைபெற்றுக் கொண்டு பெருமூச்சுடன் விலகி நடந்தேன்.

மேலும் இனிமேல் பர்ஸை தொலைப்பதாயிருந்தால் எவருமே இல்லாத இடத்தில் தொலைக்க வேண்டும்..திரும்பிப் போய் மீண்டும் நாமே எடுத்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்து கொண்டேன்!!