Sunday, September 27, 2009

வாங்கிட்டீங்களா?

கிழக்கு பதிப்பகத்தின் இணைய தளத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாய் புத்தகங்களுக்கான விலைச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. பத்ரி சேஷாத்ரியும் இது குறித்துப் பதிவிட்டிருந்தார். இருபது புத்தகங்களை வெறும் ஆயிரம் ரூபாய்க்குத் தருகிறார்கள். எத்தனை பேர் பயன்படுத்திக் கொண்டீர்கள் எனத் தெரியவில்லை. நான் தொலைபேசியிலும், உரையாடல் ஜன்னலிலுமாய் என் நண்பர்கள் சிலருக்கு பரிந்துரைத்தேன். நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்கும் பொசியட்டுமே என்ற அக்கறையில் இந்தப் பதிவு! முழு விபரங்கள் இந்தச் சுட்டியில்.. http://nhm.in/shop/kizhakku-book-club/


1. ஒரு மோதிரம் இரு கொலைகள்
2. இது காந்தி
3. உயிர்ப்புத்தகம்
4. ஶ்ரீ நாராயண குரு
5. கஜல்
6. சுதந்திர பூமி
7. அரசூர் வம்சம்
8. அனுபிஸ் மர்மம்
9. அடடே - 1
10. அடடே - 4
11. முகமது யூனுஸ்
12. மாலதி
13. கோபுலு: கோடுகளால் ஒரு வாழ்க்கை
14. கட்சி ஆட்சி மீட்சி
15. 60 வயதுக்குப் பிறகு
16. புதுசும் கொஞ்சம் பழசுமாக
17. வேதபுரத்து வியாபாரிகள்
18. வல்லினம் மெல்லினம் இடையினம்
19. கைலாஷ் செளதுரியின் ரத்தினக் கல்
20. கால் முளைத்த மனம்

இது நாங்கள் வாங்கிய புத்தகங்களின் பட்டியல். மொத்தம் 1600 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் 1000 ரூபாய்க்கு கிடைத்திருக்கின்றன!

Wednesday, September 16, 2009

பகடையாட்டம்

21 புள்ளிகள்.. 5 வரை நடுப்புள்ளி என்றோ, வேறு ஏதேனுமோர் எண்ணிக்கையிலோ வாசலில் விரைந்து புள்ளியிடும் அம்மாவின் விரல்களை அருகமர்ந்து வியப்பாய்ப் பார்த்துக் கொண்டிருக்கையில், புள்ளிகள் இணைந்த பின் வரவிருப்பது தேரா, தாமரைகளா, தீபங்களைச் சுற்றி இழையும் சர்ப்பங்களா.. அல்லது வேறு ஏதேனுமா என்பது என் பால்ய மனதிற்கு எப்போதும் புதிராகவே இருக்கும். புள்ளிகள் சேரச் சேர, புலனாகும் மாக்கோல வடிவம் யூகங்களுக்குட்பட்டதாக இருப்பின் இனம் புரியா மகிழ்வொன்று மனதில் நுரைத்துப் பொங்கும். யுவனின் 'பகடையாட்டம்', வாசிப்பினிறுதியில் இத்தகைய குதூகலத்தையே விட்டுச் சென்றுள்ளது.

யுவன் பற்றிய எனது அறிதல் சித்தார்த்தின் இந்தப் பதிவிலிருந்து தான் தொடங்கியதென நினைக்கிறேன். என் வரையில், சமகால எழுத்தாளர்களில் என்னைத் தொடர்ச்சியாய் பிரம்மிப்பிலாழ்த்திக் கொண்டேயிருப்பவர்கள் மூவர். ஜெயமோகன், அம்பை மற்றும் யுவன். முன்னிருவரைப் போன்றே எளிதில் நிராகரித்து விட முடியாத / கூடாத மொழி யுவனுடையது. யுவன் படைப்புகளில் முதன்முதலில் வாசித்த 'ஏற்கனவே' சிறுகதைத் தொகுப்பு அதன் எளிமையாலும், நேர்த்தியாலும், சிறிய விஷயங்களை அழகாய்க் கோர்த்துச் சொல்லும் சுவாரசியத்தாலும் வெகுவாய்க் கவனம் ஈர்த்தது. பின், ஈரோட்டிலிருந்து கோவை வரையிலான 2 மணி நேரப் பயணத்தில் படித்து முடித்த 'கானல் நதி', பேருந்தென்றும் பாராமல் கண்ணீர் சிந்த வைத்ததோடு அடுத்த பல நாட்களுக்குப் பலமாய் அலைக்கழித்தது. அதற்குப் பின்னாய் சற்றே நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது வாசிக்கக் கிடைத்த பகடையாட்டம், என் சிந்தனா சக்தியை இன்னும் தன் பிடியிலேயே வைத்திருக்கிறது. வாசிக்கையிலும், முடித்த பின்னும் பயிற்சியாளனுக்கு கட்டுப்பட்டு சாகசங்கள் புரியும் பணிவான வனமிருகம் போன்றும், கணவனின் அன்புக் கரங்களுக்குள் இழையும் மனைவியைப் போன்றும், யுவனிடம் மொழி இணங்கியும் நெருங்கியும் எப்போதும் கூப்பிடு தொலைவிலேயே காத்து நிற்பதாய்த் தோன்றுகிறது.

"சதுரங்கக் காய்களுக்குச் சுய சிந்தனை கூடாது என்பது முதல் பாடம்"

எனத் தொடங்கும் இந்நாவல், தனது அத்தியாயங்களைச் சதுரங்கப் பலகையின் கருப்பு வெள்ளைக் கட்டங்களாகவும், கதை மாந்தர்களை சதுரங்கக் காய்களாகவும் கற்பித்துக் கொண்டு மெல்ல மெல்ல கற்பனையின் பரப்பில் எல்லையற்று விரியத் தொடங்குகிறது. இந்தியா - திபெத் - நேபாளம் என்னும் முக்கோணத்திற்கிடையில் இருக்கும் ஸோமிட்ஸியா என்ற கற்பனை தேசத்தின் அரசியல் நிலைப்பாடுகளைப் பேசும் ஒரு புத்தகம், ஸோமிட்ஸியாவின் ஆதி தோற்றம் பற்றி விவரிக்கும் பூர்வ கிரந்தம் என்னும் நூல், மேஜர் க்ருஷ் என்றழைக்கப்படும் கீழக்குண்டு ஜெயராமன் கிருஷ்ணமூர்த்தியின் சுயசரிதத்தினின்று சில பக்கங்கள், ஜூலியஸ் லுமும்பா - ஹான்ஸ் வெய்ஸ்முல்லர் என்னும் கருப்பு வெள்ளை நண்பர்களின் வாழ்க்கை வரலாறு.... இவற்றைத் தனித்தனிப் பக்கங்களாகக் கிழித்து அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசை மாற்றிக் கலந்து வைத்தால் கிடைக்கும் ஒற்றைப் புத்தகமே பகடையாட்டம்!

ஒன்றுக்கொன்று தொடர்பேயில்லாதது போன்று நகரும் அத்தியாயங்கள் அனைத்தும் முடிவில் இதற்காகத் தான் இது என்பது போல காரண காரியங்களோடு வரிசையாய்க் கைகோர்த்துக் கொள்வதும், தொடங்கியதிலிருந்தே பூத்தொடுப்பது போல மனம் அவற்றை கோர்க்க முயன்று கொண்டேயிருப்பதுமாய்.... இப்புத்தகம் என்னை மீண்டும் புள்ளிக் கோலங்களை வியந்து கொண்டிருக்கும் சிறுமியாக்கி விட்டிருக்கிறது.

ஒரு மனிதனின் வாழ்க்கை என்பது, முழுக்க முழுக்க அவனுடையதாக மட்டுமே இருத்தல் சாத்தியமா? வெற்றுத் தாளில் மசியினால் வைக்கப்பட்டிருக்கும் ஒற்றைப் புள்ளிக்குக் கூட திசைகளும், இடம், காலம் என்னும் அலகுகளும், பெளதிக விதிகளும், தாள், எழுதுகோல், மசி, அவற்றைக் கையாளும் கரம் ஆகியவற்றுடனான தொடர்புகளும், அவை குறித்த நீண்ட வரலாறுகளும், அப்புள்ளி எதோவொன்றின் தோற்றுவாயாகவோ, முற்றிடமாகவோ மாறும் சாத்தியங்களும், என்ன வடிவமாகவேனும் பரிணமிக்கும் அளவற்ற சுதந்திரமும் வாய்த்திருக்கையில்.. கற்பனையால் எழுதப்படும் ஒரு மனிதனின் வாழ்க்கை அல்லது ஒரு தேசத்தின் வரலாறு என்பது, எத்தனை எண்ணற்ற பரிமாணங்களையும், அலகற்ற சாத்தியங்களையும் , ஆதியந்தம் காணவியலாத தொன்மைகளின் தொடர்புகளையும் பெற்றிருக்கக் கூடும்? அச்சாத்தியங்களை தன்னால் இயன்ற வரை இந்நூலுக்குள் மொழியால் கட்டி இழுத்து வந்திருக்கிறார் யுவன் சந்திரசேகர்.

இந்நாவலினூடே உடன் பயணிக்கும் பூர்வ கிரந்தம் என்னும் கற்பனை நூலின் மொழிநடை வெகு அலாதியானது. "ஸோமிட்ஸியாவின் அரசியல் நிலைமையையும், சமூக வாழ்க்கையின் கதியையும் முழுக்க முழுக்க நிர்ணயிப்பது, பூர்வ கிரந்தம் என்றழைக்கப்படுகின்ற நூல். அரசியல் சாசனம் என்று கொள்ள முடியாத, மதநூல் என்று தள்ளவும் முடியாத, குழந்தைகளுக்கான மாயாஜாலப் புத்தகம் என்று சுவாரசியமாக ரசிக்கவும் முடியாத விநோதநூல்." என்று நாவலிலேயே இந்நூல் பற்றிய விவரணை இடம்பெறுகிறது. இவ்விவரிப்பிற்குக் கொஞ்சமும் மாறுபடாமல், முழு நாகரிக வளர்ச்சியோ கல்வியின் நிறைவையோ பெற்றிராத ஒரு தேசத்தின் மக்கள் கண்மூடித் தனமாகப் பின்பற்றும் விதிமுறைகளும், நம்பிக்கைகளும், வரலாறுகளும், மாய தளங்களும் விரவியதாக, பழமை போர்த்திய வசீகர மொழியில் எழுதப்பட்டிருக்கிறது பூர்வ கிரந்தம்.

"நீரை வணங்குவாயாக.
நீரே உயிரின் சாரம். நீரின் அலைகளில் வாழ்வின் தாளம்.
கனியில் ருசியாய், மலரில் மணமாய், ஞாபகத்தில் நெகிழ்வாய், காமத்தின் நதியாய்..
நீரை அறிவாயாக... நீரின் தீராக் குழந்தைமையை வணங்குவாயாக.

ஆகாயத்தை வணங்குவாயாக.
நிறங்கள் சலனங் கொள்ளும் பிரபஞ்சக் கூரை அது. பறவைகளும் மேகங்களும் வசிக்கும் மெளனவெளி. ஆழத்தில் கோள்களும் இன்னும் ஆழத்தில் விண்மீன்களும் யாரும் ஆணையிடாமலே கடமை தவறாமல் சுழன்று நீந்திக் களிக்கும் மகா சமுத்திரம்."

"நகர்தல் நதியின் தியானம். வளர்தல் செடியின் தியானம். சும்மாயிருத்தல் பாறையின் தியானம். நீரையும் நதியையும் பிரித்தறிதல் இயலாது. தியான மெளனத்தில் சலனமுறும் சுவாசமே உயிர்ப்புலம் என்றறிக"

என்பன சில எடுத்துக்காட்டுகள். இந்நாவல் உருவான விதம் மற்றும் களம் குறித்துக் கூறுகையில், வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு நாடுகளை விட்டு வெவ்வேறு காலகட்டங்களில் புலம்பெயர்ந்த திபெத்திய துறவிச் சிறுவன் ஒருவனைப் பற்றிய செய்தியும், ஜெர்மானிய ராணுவ அதிகாரி ஒருவரின் சுயசரிதையும், நாவலின் விதைகள் என்கிறார் யுவன்.

"புனைகதையின் உயிர் அதன் சாரத்திலில்லை, உருவத்தில் தான் இருக்கிறது என்று எனக்கு ஒரு நம்பிக்கை. சொல்லித் தீர்ந்து விட்டன எல்லாக் கதைகளும். மறுகூறலுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே தன் உயிரை வைத்திருக்கிறது."

என்ற அவர் கூற்று நாவலின் சதுரங்க வடிவத்திற்கான விளக்கமாக அமைகிறது. மேலும் உலகின் எண்ணற்ற நாடுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்காமல் கற்பனை தேசம் ஒன்றை உருவாக்கியதற்கும் பின்வருமாறு காரணம் சொல்கிறார்..

"நான் பிறக்க நேர்ந்த நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டைக் களமாகக் கொண்டு எழுதினாலும் அந்த நாட்டின் புற, அக குணாம்சங்களைப் பொறுத்தவரை நான் அந்நியனாகத் தான் இருப்பேன். இந்த நாவலின் களமாகக் கட்டமைக்கப்பட்ட ஸோமிட்ஸியா என்ற நாட்டுடன் எனக்கு உருவாகிய சுவாதீனம் அளவிட முடியாதது. அந்த நாட்டின் நிலப்பரப்பிலும், குடிமக்களின் அகப்பரப்பிலும், அதன் அரசியல் நிர்வாக மட்டங்களிலும் மிகச் சுதந்திரமாகப் போய் வர முடிந்தது என்னால்."

சரி தான். பிள்ளையைப் பற்றி தாயைக் காட்டிலும் அதிகம் அறிந்தவர் யார் இருக்க முடியும்! புத்தக வாசிப்பின் போது மனங்கவர்ந்த வரிகளை அடிக்கோடிடும் (நல்ல / கெட்ட) பழக்கம் என்னிடமுண்டு. இப்புத்தகத்தில் அதனைக் கையாளவில்லை.. நூலின் பெரும்பான்மைப் பகுதிகள் அடிக்கோடுகளால் நிரம்பியிருக்கக் கூடும். அவற்றுள் மிகச் சில மட்டும் இங்கே..

"கண்ணுக்குத் தெரியாத அழிரப்பர் ஒன்று எல்லாவற்றையும் அழித்துக் கொண்டே போக, தன் முயற்சியில் தளராத மாயப் பென்சில் பின் தொடர்ந்து எழுதிப் போகிறது என்று தோன்றியது செல்லச்சாமி வாத்தியாருக்கு. ஆனாலும் ரப்பரின் சக்தி தான் பெரியது. மீண்டும் அதே மாதிரி எதையும் எழுத முடியவில்லை பென்சிலால்."

"ஒரு நட்சத்திரத்திற்கும் இன்னொன்றும் உள்ள அதே அளவு இடைவெளி, ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையிலும் இருக்கிறது.."

"எந்தக் கேள்விக்கும் பதில் தேட வேண்டிய அவசியமின்றி, தேவையானபோது உண்பதற்கான உணவு மூட்டையாய் மாறிவிடுகிறது மனதில் சேகரமாகியிருக்கும் தகவல் தொகுப்பு"

"சக மனிதர்களின் உணர்வுகளைச் சாப்பிடாமல் மனிதர்களால் உயிர் வாழவே முடியாது.."

"பார்வைக்குத் தெரிகிற மனிதனும் பழக்கத்துக்குத் தெரிகிற மனிதனும் ஒன்றாயிருப்பது அபூர்வம் தானே..?"

என்னளவில் நான் வாசித்தவற்றுள் ஆகச்சிறந்த நாவல்களில் ஒன்றாய் பகடையாட்டத்தைக் குறிப்பிடுவேன். மற்றும் என் அலைவரிசையைச் சேர்ந்த எவருக்கும் இந்நூலை தைரியமாய்ப் பரிந்துரைப்பேன்.


நூல் : பகடையாட்டம்
ஆசிரியர் : யுவன் சந்திரசேகர்

வெளியீடு : தமிழினி

விலை: ரூ. 130

Sunday, September 13, 2009

உயிர்த்தல்




நீயற்ற பொழுதுகளின்
கனம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன்

உறக்கம் தொலைத்த இரவுகளை..
உன்னை நினைத்துக் கொண்ட தருணங்களை..
உன்னோடிருந்த நாட்களை....
உன்னைப் போலிருந்த மனிதர்களை...

சொற்களின் இடுக்குகளில்
கசியத் தொடங்குகிறது
விழிகளின் ஈரம்..

கண்கள் தவிர்த்து
காற்றிடம் பேசுமென்னை
முன்னெப்போதுமில்லாத
பரிவின் முகம் கொண்டு
பார்த்துக் கொண்டிருக்கிறாய் நீ...

விடைபெறும் வேளையில்..
மழையின் குரலில்
அழைக்கிறாய் என்னை..

நான்
எத்தனை சொல்லியும் தீராக் காதலை
ஒற்றைச் சொல்லில் நிரப்பி விளிக்கிறாய்..

எங்கோ
கிளைகளுதிர்த்த பூக்களில் ஒன்று
மீண்டும் பூக்கிறது
மனதின் ஆழத்தில்.

Thursday, September 10, 2009

யுவன் கவிதை

யுவன் சந்திரசேகரின் பகடையாட்டம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். 87 பக்கங்களைக் கடந்தாயிற்று. சென்று சேருமிடம் குறித்த முன்முடிவுகள் / யூகங்கள் ஏதுமின்றி, தொடர்ந்து பாதைகளை மாற்றிக் கொண்டேயிருக்கும் கதையின் பாதச்சுவடுகளை அடியொற்றிச் செல்வதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். கடந்த ஜனவரிக்குப் பிறகு நாளை, நாளை என்று நான் ஒத்திப் போட்டுக் கொண்டே வந்த, 'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை இன்றென நிர்ணயித்திருக்கிறது போல. கதையை, இன்று இதற்கு மேல் தொடர முடியாதெனத் தோன்றுகிறது. கவிதையை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன்.


"ஒரு சிட்டுக்குருவியைக் கொல்வது
வெகு சுலபம்

முதலில் உள்ளங்கை நிரம்பிய
தானிய மணிகளால் அதைக்
கவர்ந்திழுக்க வேண்டும்.

ஆகாயத்தை விடவும்
கூண்டு பாதுகாப்பானது என்று
நம்பச் செய்ய வேண்டும்.

சுவாதீனம் படிந்த பிறகு,
எதிர்பாராத தருணமொன்றில்
அதன் சிறகுகளைத் தரித்துக்
குப்பையில் வீச வேண்டும்,
தூவிகளில் ஒட்டிய
ஆகாயக் கனவுகள் மட்கும் வண்ணம்.

பிறகு
அதன் கால்களை ஒடித்துவிட வேண்டும்
உயிர்வாழும் வேட்கையால்
நடந்தேனும் இரைதேட விடாதபடி.

அடுத்ததாக,
அதன் அலகை முறித்து விடுவது நல்லது
தானாய் வந்து
சிக்கும் இரையைப் பிடிப்பதையும்
தடுத்து விடலாம்.

இப்போது சிட்டுக்குருவி
ஒரு கூழாங்கல் ஆகிவிட்டது

சிறு வித்தியாசத்துடன்.

கல்போலின்றி, பறந்த நாட்களை
நினைவு கூரும் குருவி.

பூர்விக நியாபகம் போல
உயிர் துடிக்கும்
அதன் கண்களில்.

இனி நீங்கள் செய்ய வேண்டியது
ஒன்று தான். குருவிமிச்சத்தைத்
தரையில் இட்டுக் காலால் தேய்த்துவிட வேண்டும்.

சிட்டுக்குருவியைக் கொல்வது,
ஒரு நட்பையோ
ஒரு ஆன்மாவையோ
முறிப்பது போல,
மிக மிகச் சுலபம்"

புத்தகத்தை மூடிவிட்டு, சிட்டுக்குருவிகள் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் சிட்டுக் குருவியாய் இருந்த தருணங்களையும்.