Tuesday, September 30, 2008

காதலில் விழுந்தேன் - விமர்சனம்


நடிப்பு: நகுலன், சுனேனா, சம்பத்
இசை: விஜய் ஆண்டனி
இயக்கம்: பி.வி.பிரசாத்
தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்

நீங்கள் 13 வயதிற்குட்பட்டவர் அல்லது 19 வயதிற்கு மேற்பட்டவர் எனில், சாலையில் வாகனம் மோதி இறந்து கிடக்கும் நாய், பூனை மற்றும் மனிதர்களையும், கசாப்புக் கடையில் கழுத்தறுபட்டுக் கொண்டிருக்கும் ஆட்டுக்குட்டியையும் ஒருபோதும் காணச் சகியாதவர் எனில், பிப்ரவரி 14ம் தேதியை 'மற்றுமோர் நாளாக' மட்டுமே பாவிக்கும் யதார்த்தவாதி எனில், 'காதலில் விழுந்தேன்' உங்களுக்குரிய படமல்ல.

அதிலும் சித்தப்பாக்கள், சித்திகள், குழந்தைகள், மாமா, அத்தை, பாட்டி, தம்பி, தங்கை என குடும்ப சகிதமாய் சென்று பார்ப்பவர்களுக்கு நிச்சயம் உகந்த படமல்ல. நேற்று முன்தினம் மாலை சொந்தங்கள் சந்தித்துக் கொண்ட அபூர்வ நாளை கொண்டாடுவதென முடிவெடுத்து இந்த திரைக்காவியத்தைப் பார்க்கப் போய் பாரபட்சமின்றி எல்லோரும் ஒருசேர துயரத்தில் விழுந்தோம். பட்ட காலிலே படும் என்பார்கள். எனக்கு பட்ட தியேட்டரிலேயே படுகிறது.

கடந்த 11 வருடங்களுக்கும் மேலாய் திரையரங்கு பக்கம் வந்திராத எங்கள் தாத்தி (பாட்டி) படத்தின் நடுவே என்னை அழைத்து 'என்னைக் கூட்டிட்டு வர வேற நல்ல படமே கிடைக்கலயா உங்களுக்கு?' என்றார்கள் பரிதாபமாய். என் 3 வயது குட்டித் தங்கை திரையில் ரத்தத்தைப் பார்த்ததும் வீறிட்டு அழத் தொடங்கியவள்... நிறுத்தி நிறுத்தி படம் முழுக்க அழுது கொண்டேயிருந்தாள். இரவுக் காட்சி என்பதால் பாதுகாப்பின் அவசியமுணர்ந்து, எழுந்துபோக வழியின்றி சித்தப்பாக்கள் சங்கடமாய் நெளிந்து கொண்டிருந்தார்கள். என்னைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன?

சரி கதைக்கு வருவோம்.. யாரோ 4, 5 பலவான்கள் துரத்தி வர அவர்களிடமிருந்து காதலியை காப்பாற்றி புகைவண்டியிலேறி காதலர்கள் உடன்போக்கு செல்லும் காட்சியில் தொடங்குகிறது படம். கதைகளில், திரைப்படங்களில் வரும் காதலுக்கு எப்போதும் நாமெல்லோருமே முழு ஆதரவாளர்கள் தான் என்பதால் 'அப்பாடா தப்பியாச்சு' என்ற ஆசுவாசமும் 'அவனுங்க ஃபாலோ பண்ணாமஇருக்கனுமே' என்ற பதற்றமும் ஒருமித்து எழுகிறது. காதலியை படுக்க வைத்துவிட்டு டிக்கெட் பரிசோதகர் லிவிங்ஸ்டனிடம் தங்கள் கதையை சொல்லவாரம்பிக்கிறார் நாயகன். (வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் அல்ல)

ஏழை நாயகன் நகுலன், செல்வந்த நாயகி சுனேனா. ஓர் நாள் சுனேனாவின் துப்பட்டா மிக அழகாய் காற்றில் பறந்து சென்று நகுலனின் முகத்தை மூட, தமிழ் சினிமா நியதிப்படி காதல் வந்திருக்க வேண்டிய காட்சியில் எதிர்பாராத விதமாய் விபத்து வந்துவிடுகிறது. (இரண்டும் ஒன்றுதான் என்கிறீர்களா!) தன்னால் தான் விபத்து நேர்ந்தது என்ற குற்ற உணர்வின் நீட்சியில் நகுலனை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து பணிவிடைகளும் செய்கிறார் சுனேனா. விபத்து நட்பாகி, நட்பு காதலாகிறது. திடீரென விளையாட்டுப் போட்டிக்காக வெளியூர் சென்று திரும்பும் நகுலனிடம் சுனேனா இறந்து விட்டதாக சொல்கிறார்கள் நண்பர்கள். அதை நம்ப மறுக்கும் நகுலன் மார்ச்சுவரிலிருந்து காதலியின் பிரேதத்தைத் தூக்கிக் கொண்டு போகிறார். முதல் காட்சியில் ரயிலில் அவர் படுக்க வைத்ததும் அதைத்தான் என்பது தெரிய வரும்போது 'ஏப்ரல் ஃபூல்' ஆனது போல் முகத்தில் அசடு தட்டுகிறது நமக்கு. சுனேனாவைக் கொன்றது நகுலன் தான் என்று காவல்துறை தீவிரமாக தேடிக்கொண்டிருக்க, கொன்றது யாராயிருக்குமென நம்மையும் தீவிரமாய் யோசிக்க வைத்து 'அட..இது கூடவா தெரில? சொத்துக்காக அவங்க சித்தப்பா தான் கொன்னுட்டார்' என்று பாரம்பரியமிக்க புராதன முடிவையே சொல்லி அசத்தியிருக்கிறார்கள்!

காதலர்கள் பைக்கில் சுற்றுதல், ஹோட்டலில் சந்தித்தல், மேசையினடியில் காலுரசிக் கொள்ளுதல், பூக்கள் சிதறிக்கிடக்கும் சாலையில் கைகோர்த்து நடத்தல், தனியறையில் அரைகுறை ஆடையில் நடனமாடுதல், இதழோடு இதழ் பொருத்தி முத்தமிட்டுக் கொள்ளுதல் உள்ளிட்ட வழமையான தமிழ்த்திரையம்சங்கள் எதற்கும் குறைவின்றி, காட்சிக்குக் காட்சி ஏதோவோர் படத்தை நினைவூட்டியபடி நகர்கிறது முற்பாதி.

முற்பாதி தான் இப்படி நிறைய படங்களை ஞாபகப்படுத்துகிறதே தவிர பிற்பாதி படம் அப்படியில்லை. அது சந்தேகத்திற்கிடமில்லாமல் முழுமையாய் கமல்ஹாசனின் 'குணா'வை மட்டுமே நினைவில் நிறுத்துகிறது! படம் ஆரம்பித்ததிலிருந்தே இறந்து போன காதலியின் உடலைத்தான் நகுலன் தூக்கிக் கொண்டு அலைகிறார், 'எங்களை வாழ விடுங்கள்' என்று எல்லோரையும் கெஞ்சிக் கொண்டு திரிகிறார் என்பதை இடைவேளை முடிந்ததுமே இயக்குனர் சொல்லி விடுவதால், படம் முடிந்துவிட்ட திருப்தியோடு பார்வையாளர்கள் அப்போதே கிளம்பி விட ஏதுவாயிருக்கிறது! இதன் மூலம் படம் பார்ப்பவர்களுக்கு நேரம் வெகுவாய் மிச்சமாகிறது!!

நாயகி சுனேனா அழகாக இருக்கிறார். பிரேதம் போலவே மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்! ஆனால் எப்போது சாவார், எப்போது பிழைத்தெழுந்து நடனமாடுவார் என்பது இயக்குனருக்கே புரியாத புதிராயிருந்திருக்க வேண்டும். தோழிக்கு காதல் கடிதம் கொடுத்த நண்பனுக்கு "இது படிக்கற வயசு.. நீ எவ்ளோ கஷ்டப்பட்டு ஃபீஸ் கட்றன்னு எனக்கு தெரியும். படிப்பை கவனிடா" என்று அட்வைசிக் கொண்டிருந்த நாயகி, வீட்டை விட்டு துரத்தப்பட்டு தன்னிடமே அடைக்கலமாகியிருக்கும் நகுலன் தன்னைக் காதலிப்பது தெரிந்ததும், தன் கல்லூரியிலிருந்து விலகி அவர் வகுப்பிலேயே சேர்ந்து பயில்கிறார். காதலித்தாலும் கல்லூரி மாறியாவது கல்வியைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் போலிருக்கிறது. காதல் புகினும் கற்கை நன்றே!

படம் முழுக்க கையில் கிடைப்பவர்களை எல்லாம் கொன்று தீர்க்கிறார் நகுலன். இறுதிக்காட்சி கொடூரம்.

சரி... ஒட்டுமொத்தமாய் குறை மட்டும் சொல்வானேன்?

1. நகுலனின் நடிப்பை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். பாய்ஸில் பார்த்த நகுலனில் கால்வாசி நகுலன் தான் இருக்கிறார் இப்போது! நடனத்திலும் சண்டைக் காட்சிகளிலும் மின்னல் வேகம். கோபமும் குழந்தைத்தனமும் மாறி மாறி பிரதிபலிக்கிறது முகத்தில்.

2. படத்தின் மற்றுமோர் நாயகன் 'நாக்க முக்க' பாடல். அரங்கம் அதிருகிறது. படத்தில் 2 முறை இடம் பெற்றிருந்தபோதும் ஒவ்வொரு முறையும் ஒன்ஸ்மோர் கேட்டபடி குத்தாட்டம் போடுகிறார்கள் இளைஞர்கள்.

3. விஜய் ஆண்டனியின் இசையும் தாமரையின் வரிகளும் பாடல்கள் படமாக்கப்பட்டிருக்கும் விதமும் ஒன்றையொன்று விஞ்சத் துடிக்கின்றன.

4. மலைப்பிரதேசத்தில் தொலைவில் நடக்கும் சண்டைக்காட்சி அருமை.

5. படத்தில் குறிப்பிடத்தக்க மற்றுமோர் நபர் காவல்துறை அதிகாரியாய் வரும் சம்பத். சரோஜாவிலேயே கலக்கியிருந்தார் மனிதர். இதிலும் குறை வைக்கவில்லை.

தன்னால் இயன்றவரை திரைக்கதையை வைத்து சமாளிக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் பி.வி.பிரசாத். அத்தனை முயற்சிகளும் கதையிலிருக்கும் மாபெரும் ஓட்டையில் விழுந்து விடுவது தான் பரிதாபம்.

பி.கு: சரோஜா படம் ரொம்ப நல்லாருக்கு!

Monday, September 29, 2008

குறையொன்றுமில்லை..

பூக்களாலான பள்ளத்தாக்கினுள்
விழுந்து விட்டாற் போலிருக்கிறது.

கூறும் முன்பாய்க்
குறைகள் களையப்படுகின்றன.

உவகையில் கசியும் விழிநீர்
தரைவிழும் முன்னர்த்
தடுத்தாட் கொள்ளப்படுகிறது.

'போய பிழையும்
புகுதருவான் நின்றனவும்
உன் முன்னால்
தீயினில் தூசாகித்'
திசை கெட்டழிகின்றன.

இருபெரும் கரைகளுக்குள்
பெருகியோடும் நதியாய்

உன்னிரு கரங்களுக்குள்
வாழ்ந்துவிட தோன்றுகிறது...
ஒரு சில யுகங்களேனும்.

Wednesday, September 17, 2008

அக்மதோவாவும் அக்கரைப் பூக்களும்

முதல் வாசிப்பிலேயே எவரிடமாவது பரிந்துரைக்கத் தூண்டிய தொகுப்பு நூல் இது. என்ன காரணத்தாலோ விட்டுப் போனது. இன்றைய விடியலை மேலும் அடர்வு மிக்கதாய் மாற்றியதில் இத்தொகுப்பின் மீதான மீள்வாசிப்பிற்கும் பங்குண்டு என்பதால் இன்றே எழுதிவிடுவதென்ற தீர்மானத்தோடு துவங்கியிருக்கிறேன்.

இது ஒரு கவிதைத் தொகுப்பு. அக்மதோவா முதலாக 18 பிறமொழி கவிஞர்கள் எழுதிய, தேர்ந்தெடுக்கப்பட்ட 53 கவிதைகளின் மொழிபெயர்ப்பு. பெரும்பாலும் தமிழில் மொழிபெயர்ப்பு கவிதைகள், வரிவரியாய் மணலோடிய படுகையைச் சுட்டிக்காட்டி 'இதற்கு முன் இங்கு ஓர் நதியிருந்தது' எனச் சொல்வன போன்று அமைந்திருப்பதாகவே படுமெனக்கு. சற்றும் இளகலில்லாத ஒரு வறட்சி அதில் படிந்திருப்பது, கவிதைகளை கணக்குப் புத்தகங்கள் போலாக்கி விடுகிறது இல்லையா? ஆனால் வ.கீதாவும் எஸ்.வி.ராஜதுரையும் மொழிபெயர்த்திருக்கும் இக்கவிதைகள் மேற்படி குற்றச்சாட்டிலிருந்து பெருமளவு தப்பியிருக்கின்றன.

இந்நூலில் அன்னா அக்மதோவாவின் 13 கவிதைகளை பெயர்த்துத் தந்திருக்கிறார்கள். மேலதிகமாய் அவரைப் பற்றிய விரிவான முன்னுரை ஒன்றும் வழங்கப்பட்டிருக்கிறது.

"சோவியத் யூனியனின் தகர்வுக்கு 4 ஆண்டுகளுக்கு முன் மாஸ்கோவின் முன்னணி இலக்கிய ஏடான 'அக்டோபர்' "இரங்கற்பா" என்னும் தொடர்கவிதையை வெளியிட்டதன் மூலம் சென்ற நூற்றாண்டின் மாபெரும் கவிஞர் ஒருவருக்கு நீண்டகாலமாக இழைக்கப்பட்டு வந்திருந்த அநீதியை துடைத்தெறிந்தது. அப்படைப்பு உருவாக்கப்பட்டு 47 ஆண்டுகளுக்கும் அவற்றைப் படைத்தவர் மறைந்து 21 ஆண்டுகளுக்கும் பிறகு அது வெளியிடப்பட்டமை சோவியத் சமூக வாழ்வில் அறநெறிகள் புதுப்பிக்கப்படுவதன் அறிகுறியாகத் தெரிந்தது"

என்று தொடங்கும் முன்னுரை, அடுத்த 15 பக்கங்களில் அவரின் வாழ்க்கையை, ஆளுமையை, காதலை, பிரிவை, வலியை, தேசத்தின் மீதான வலுவான பிடிப்பை, எந்த நிர்ப்பந்தத்திற்கும் வளைந்து கொடுக்காத அவரது கவிதைகளை... தொடர்ச்சியாய் பேசிப்போகிறது.

அன்னா அக்மதோவா ஒரு ரஷ்யர். ரஷ்ய இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க கவிஞர். அதைவிடவும் அவர் ஓர் பெண் கவிஞர். விசும்பென விரிந்து கிடக்கும் தமிழின் நீள்நெடும் இலக்கிய வரலாற்றிலும் கூட பெண் கவிஞர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மட்டுமே காணக் கிடைப்பதால், அடக்குமுறைகளை எதிர்த்து உரத்து எழும், முதல் பெண் குரல் உலகின் எந்த மூலையிலிருந்து ஒலித்தாலும் அக்குரல் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கிறது!

அக்மதோவா 1899 க்கும் 1966 க்கும் இடைப்பட்ட காலத்தில் ரஷ்யாவில் வாழ்ந்தவர். புகழ்பெற்ற கவிஞரான நிகோலாய் குமிலியோவை பள்ளிப்பருவத்திலேயே காதலித்து மணந்தவர். தவறான குற்றச்சாட்டின் பெயரால் குமிலியோவ் சுட்டுக் கொல்லப்பட்டபோதும் துயரத்திற்குத் துணையாய் தன் கவிதைகளை மட்டுமே அருகிருத்திக் கொண்டவர். பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்ட்டுகளும் பொதுமக்களும் கொடிய அடக்குமுறைகளுக்கும் மரணதண்டனைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட காலத்தில் அம்மக்களின் வேதனைகளுக்கு நிரந்தர சாட்சியமாய் 'இரங்கற்பா' என்னும் தொடர்கவிதையை எழுதினார். அவர் இறந்து 21 ஆண்டுகளுக்கு பிறகாய் அக்கவிதையை வெளியிட்டு பரிகாரம் தேடிக்கொண்டது 'அக்டோபர்' இலக்கிய இதழ். அடுத்து வந்த 1989 ம் ஆண்டை 'அக்மதோவா ஆண்டாக' அறிவித்து அவரின் புகழை உறுதிப்படுத்தியது யுனெஸ்கோ நிறுவனம். தனது சுயத்தின் வெளிப்பாடுகளை, ஆணின் அனுபவங்களையே சார்ந்து நிற்கும் மொழியின் மீதே சுமத்தி தனது தனிப்பட்ட அர்த்தங்களுக்கு அக்மதோவா புதுக்குரல் கொடுப்பதாகச் சொல்கிறார்கள் வ.கீதாவும் எஸ்.வி. ராஜதுரையும்.

இந்நூலில் கொடுக்கப்பட்டிருக்கும் அன்னாவின் 13 கவிதைகளில் என்னை மிகவும் அலைக்கழித்த கவிதை இது..

"ஆழ்கிணற்றின் அடியாழத்திலுள்ள ஒரு வெள்ளைக்கல் போல
என்னிடத்தில் ஒரே ஒரு நினைவு மட்டும்.
அதை நான் போக்க முடியாது, போக்க விரும்புவதுமில்லை
அது ஒரு உவகை, அது வேதனையும் கூட.
எனக்குத் தோன்றுகிறது என் கண்களை உற்றுப் பார்ப்பவருக்கு
அது தெளிவாகத் தெரியுமென்று.
சோகம் ததும்பும் கதையொன்றைக் கேட்பவரை விட
அவர் நெஞ்சம் மேலும் கனக்கும், துயருறும்.
எனக்குத் தெரியும் கடவுளர் மனிதரைக்
கல்லாக மாற்றியுள்ளனர்,
மனங்களை அப்படியே விட்டுவைத்து.
அந்த அற்புதமான சோகங்கள்
இன்னும் எஞ்சியிருக்க வேண்டுமென்று
என் நினைவாக மாற்றப்பட்டு விட்டாய் நீ."

நிஜம் தான்.. கல்லை மனமாய்க் கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றி எவரும் அக்கறை கொள்ள வேண்டியதில்லை. ஆனால் மனம் மரிக்காமலிருக்கையிலேயே வெளியில் கல்லாய்ச் சமைந்த மனிதர்கள் பெரும் பரிதாபத்திற்குரியவர்கள். எல்லோருடைய மனங்களின் அடியாழத்திலும் சில அற்புதமான சோகங்கள், மறக்க விரும்பாத நினைவுகள் குளிர்ந்த கற்களாய் தேங்கிக் கிடப்பதை யாரேனும் மறுக்கக் கூடுமா என்ன?

மற்றுமோர் கவிதையில்..

"அன்பு இல்லாமலிருப்பது
என் நிம்மதியைக் கூட்டத்தான் செய்கிறது"

என்கிறார் அக்மதோவா. அன்பு ஒரு வகையில் மெல்லிய கண்ணாடிச் சிற்பம் போன்றது தான் இல்லையா? சிற்பத்தின் மீதான பிடி இறுகும்போதும் விலகும்போதும் மனங்கள் நொறுங்குவது தவிர்க்க முடியாததாகிறது. அன்பு இல்லாமலிருப்பதும் கூட சில நேரங்களில் ஆசுவாசமாய்த் தான் இருக்கும் போல!

நற்றிணையில் ஓர் பாடல் உண்டு. தலைவி தோழியரோடு விளையாடுகையில் என்றோ மண்ணில் புதைத்து வைத்த புங்க விதை முந்தைய மழையில் முளை விட்டிருக்கும். 'இம்மரம் உன்னை விடவும் சிறந்தது உனக்கு சகோதரி போன்றது' என்று தாய் சொல்ல.. பாலும் நெய்யும் ஊற்றி அந்த மரத்தை வளர்க்கிறாள் தலைவி. அம்மரத்தினடியில் தலைவன் அவளைச் சந்திக்க வருகையில் 'என் சகோதரியின் முன்பாக உங்களுடன் காதல்மொழி பேச நாணமாயிருக்கிறது' என்பாள். இயற்கையோடு இயைந்த வாழ்வை, எக்காலத்தும் மாறாமலிருக்கும் பெண்களின் மெல்லிய உணர்வுகளை நுட்பமாய் முன்வைக்கும் கவிதை அது. அக்மதோவாவிடம் இதே நுண்ணுணர்வை காண நேர்ந்தபோது மொழி, நாடு, இனம் என மனிதன் வகுத்துக்கொண்ட அற்ப எல்லைகள் அனைத்தும் சட்டென்று இல்லாமலாகின. இதயத்துடிப்பு போல எல்லா மனிதர்களுக்கும் உணர்வுகளும் ஒன்று தானோவெனும் ஐயம் மீண்டுமொருமுறை தோன்றி மறைந்தது.

அக்மதோவாவால் நேசிக்கப்பட்டிருந்த ஒரு வெண்ணிற வில்லோ மரம் வெட்டப்பட்டு விடுகிறது. அப்போது எழுதுகிறார்...

"நான் நேசித்தவை புற்களும் புதர்களும்.
எல்லாவற்றையும் விட ஒரு
வெண்ணிற வில்லோ மரத்தையே.
அதுவும் விசுவாசத்துடன்
வாழ்நாள் முழுவதும் என்னோடே இருந்தது
..............................................................
என்ன ஆச்சரியம்!
அதன் ஆயுளையும் விஞ்சிவிட்டேன் நான்.
குத்துக்கட்டை மாத்திரம் அங்கே நிற்கிறது:
..............................................................
நானோ மெளனத்தில்..
ஒரு சகோதரனை இழந்தவளைப் போல"

வேறு சில கவிதைகளில்,

"தெருவின் பனிப்போர்வையின் மீது
முந்தய நாள் நான் விட்டுச் சென்ற
என் பாதச்சுவடுகளைத் தேடி ஏமாறுவேன்"

எனத் தன் குழந்தைமையை பதிந்து செல்லும் அக்மதோவா,

"குழந்தைகள் இறைக்கும் சாலையோர பூக்கள்
யாரும் பொருட்படுத்தாக் காட்டு மலர்கள்..."

என அழகான அவதானிப்புகளையும் சுட்டிச் செல்கிறார்.

துயரத்தாலும் அவலச்சுவையாலும் சமூக அநீதிகளுக்கெதிரான கூக்குரல்களாலும் நிரப்பப்பட்டிருக்கும் அவரின் 'இரங்கற்பா' இப்படி தொடங்குகிறது...

"இத்தகைய துயரம் மலைகளுக்குக் கூனல் விழச் செய்துவிடும்
ஆறுகளின் போக்கைத் திருப்பி விடும்..."
................................................................................
இறந்தவர் மட்டுமே அன்று புன்னகைத்தனர்
அமைதியடைந்ததில் ஆனந்தம்."

அக்மதோவா தவிர ஷேக்ஸ்பியர், ஜான் கீட்ஸ், பெய் டாவோ, ப்ளாகா டிமிட்ரோவா, கரோல் சத்தியமூர்த்தி உள்பட 17 கவிஞர்களின் சிறந்த கவிதைகள் அக்கரைப் பூக்களாய்த் தொகுக்கப்பட்டிருக்கின்றன இதில்.

"கூழாங்கல்
ஒரு வடுவற்ற படைப்பு
அதற்கு நிகர் அது தான்
அதற்குத் தன் வரம்புகள் தெரியும்
அதில் நிரம்பியுள்ளது
ஒரு கூழாங்கல் அர்த்தம்"

எனத்தொடங்கும் ஜிபிக்னியூ ஹெர்பர்ட்டின் கூழாங்கல் கவிதை மிக அருமை.

ப்ளாகா டிமிட்ரோவாவின் 'சாலையில் தனியாய் ஒரு பெண்'

"இன்னும் ஆண்களுடையதாகவே இருக்கும்
இந்த உலகத்தில்
எங்கும் ஆபத்தும் தொல்லையும் தான்"

எனவாரம்பித்து எப்போதும் மாறாமலிருக்கும் பெண்ணின் பாதுகாப்பற்ற நிலையைவெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

இவை தவிர ஆசை, அந்த காதலை மீண்டும் என்னிடமிருந்து கேட்காதே, கை ரேகை பார்த்தல், காலதேவனின் அரிவாள், எனது மனைவியைப் பற்றிய எளிய பாடல், காதலும் சாதலும், உடைந்த நிலா ஆகிய கவிதைகள் இந்தத் தொகுப்பில் குறிப்பிடத்தகுந்தவையாய் இருக்கின்றன.


நூல்பெயர் : அக்மதோவா - அக்கரைப்பூக்கள்
தமிழாக்கம் : வ.கீதா - எஸ்.வி.ராஜதுரை
விலை : ரூ.65
பதிப்பு : அடையாளம் பதிப்பகம். (04332 - 273444)
admin@adaiyalam.com

Wednesday, September 10, 2008

மறுபடி ஒரு மொக்கைப் படம் பார்த்து தொலைச்சிட்டேன்...



நடிப்பு : விநய், பாவனா, லேகா வாஷிங்டன், கிஷோர்குமார், அதிசயா, விவேக், சந்தானம்
திரைக்கதை & இயக்கம் : ஆர்.கண்ணன்
இசை: வித்யாசாகர்
தயாரிப்பு : சத்யஜோதி ஃபிலிம்ஸ்

சனிக்கிழமை பொன்மாலைப் பொழுது! +2 படிக்கும் அருமை தங்கையிடமிருந்து போன். "அக்கா ட்யூஷனுக்கு மட்டம் போட்டுட்டேன்.. ஜெயம்கொண்டான் போலாமா?" விதி வலியது. ஆடு எப்பவும் கசாப்புக் கடைக்காரனைத் தான நம்பும்? அடிச்சி பிடிச்சி கிளம்பிப் போயாச்சு. உள்ள நுழையும்போது படம் போட்டு 10 நிமிஷமாகியிருந்துச்சு. அடடா! கொஞ்சம் முன்ன வந்திருக்கலாமேன்னு வருத்தப்பட்டுட்டே பாக்க ஆரம்பிச்சோம். இண்டர்வெல்ல "அடடா! ரொம்ப பின்ன வந்திருக்கலாமே" ன்னு மறுபடி ஒருமுறை வருத்தப்பட்டோம்!!

படம் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் 'படம் எப்படியிருந்துச்சு? என்ன கதை?'ன்னு கேட்டாங்க அம்மா. ஒரு ஆர்வக் கோளாறுல ரொம்பவும் சுருக்கமா கதை சொல்ல ஆரம்பிச்சேன். அதிரடியா ஆரம்பிச்சா நல்லா இருக்குமேன்னு இப்படி தொடங்கினேன்..

"வில்லன் ஹீரோவ பெரிய சுத்தியால அடிக்க வர்றான் மா.. ஹீரோ அதை தடுக்கறார். அப்ப என்னாகுதுன்னா... அந்த இரும்பு தவறிப் போய் வில்லனோட வைஃப் மண்டைல விழுந்து அவ செத்து போய்டறா... அதுல இருந்து வில்லனுக்கு வருது பாருங்க ஒரு வெறி..."

"அப்ப தான் வெறி வருதா? அப்ப ஏன் முன்னயே சுத்தில அடிக்க வந்தானாம்?"

"அது வேற ஒரு பிரச்சினைக்கு.. ஹீரோவோட தங்கச்சிக்கு வில்லன் சப்போர்ட்டா வர்றான். அதனால ஹீரோ அவனை அடிச்சிடறார்"

"ஹீரோ தங்கச்சிக்கு வில்லன் ஏன் சப்போர்ட் பண்றான்??!!"

"இது ஒரு நல்ல்ல கேள்வி! ஹீரோவோட வீட்டை அவனுக்கு தெரியாம அவன் தங்கச்சி விக்கறா. அதை தடுக்கும்போது தான் இப்டியாய்டுது"

"தங்கச்சி ஏன் அண்ணனுக்கு தெரியாம சொத்தை விக்கனும்?"

"அதுவந்து... அது இன்னொரு பிரச்சினை.. ஹீரோவோட அப்பாவுக்கு ரெண்டாந்தாரத்துப் பொண்ணு அது. சொத்துக்காக அடிச்சுக்கறாங்க.."

இப்டியே ஒவ்வொரு பிரச்சினையா விரிவா எடுத்து சொல்லி கதை ஆரம்பம் வரை போய் மறுபடி ரிவர்ஸ் கியர் எடுத்து க்ளைமாக்ஸ் வரை போய் சுருக்க்க்கமா நான் சொல்லி முடிச்சப்ப... அம்மா, "படத்துக்கு நடுவுல புகை பிடிக்காதீர், அஜந்தா பாக்குத்தூள் னு கார்டெல்லாம் வருமே? அதை சொல்லாம விட்டுட்டியே?" ன்னு கேக்கறாங்க. (அவ்வ்வ்வ்) . நானென்னங்க செய்வேன்? வாழைப்பழத்தை விளக்கெண்ணை விட்டு பிசைஞ்ச மாதிரி இருக்கு கதை. இத விட தெளிவா வேறெப்படி சொல்றதாம்?

சரி வேற மாதிரி சொல்றேன்.. உங்களுக்காச்சும் புரியுதான்னு பாருங்க.

7 வருஷமா லண்டன்ல இருந்த விநய், அப்பா செத்ததும் திரும்பி வர்றார் இந்தியாக்கு. இவ்ளோ நாள் சம்பாதிச்ச காசுல இங்கயே பிசினஸ் தொடங்கலாம்னு நினைக்கறார். வந்து பாத்தா பேங்க்ல பணமேயில்ல. சம்பாதிச்சு அனுப்பின 60 லட்சமும் எங்க போச்சின்னு தெரில. அப்பாக்கு இன்னொரு மனைவி இருக்காங்கன்னும் 20 வயசுல பொண்ணொருத்தி (லேகா வாஷிங்டன்) இருக்கான்னும், தான் அனுப்பின பணத்துல அப்பா மதுரைல ஒரு வீடு வாங்கி வெச்சிருக்கார்னும் விசாரிச்சு தெரிஞ்சுக்கறார்.

அப்பா சொத்து தனக்குத் தான்னு ரெண்டு பேரும் அடிச்சுக்கறாங்க. லேகாக்கு அமெரிக்காக்கு போய் படிக்க பணம் வேணுமாம். ரெண்டு பேரும் அந்த வீட்டை விக்க முயற்சி பண்றாங்க.

ஆச்சா? கத ஒரு மாதிரி வெளங்குதா? இது வரைக்கும் எனக்கு என்னவோ தினத்தந்தில நிலத்தகராறு, சொத்துத் தகராறு நியூஸ் படிக்கறாப்ல இருந்துச்சி.

அப்பால விநய் என்ன செய்றார்னா.. நேரா மதுரைக்கு போய் அந்த வீட்லயே தங்கி அங்க குடியிருக்கற பாவனா ஃபேமிலியை வீட்டைக் காலி பண்ண சொல்றார். பாவனா முடியாதுன்றாங்க. பாவனாவை கன்வின்ஸ் பண்றதுக்காக "நாம சின்ன வயசுல ஒன்னாப் பழகியிருக்கோமே" ன்னு இஷ்டத்துக்கு ரீல் விடறார். தமிழ் சினிமா நியதிப்படியும் டைரக்டர் சொல்லிக்குடுத்த மாதிரியும் பாவனாக்கு விநய் மேல காதல் வந்திடுது.

ஒரு வழியா அவங்க வீடு காலி பண்ணினதும் வீட்டை அளந்து பாத்தா பக்கத்து வீட்டுக்காரன் 1900 சதுரடி ஆக்ரமிச்சு கட்டிருக்கான். ( என்ன அநியாயம் பாருங்க!) அவன் மேல கோர்ட்ல கேஸ் போட்டு, வாதாடி, ஜெயிச்சு, நோட்டீஸ் ஒட்டி, ஆக்ரமிப்பெல்லாம் இடிச்சு, வீட்டை விக்க ஏற்பாடெல்லாம் பண்ணிடறார். (ஆஆவ்வ்வ்வ்)

அப்ப பாத்து தங்கச்சி கிளம்பி வந்து மதுரைய கலக்கிகிட்டிருக்கற குணா-ன்ற தாதா துணையோட வீட்டை விக்கப் பாக்கறா. வில்லனும் என்னவோ கல்யாணத்துக்கு போற மாதிரி பொண்டாட்டியோட குடும்ப சகிதமா ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு வந்திடறார். கரெக்டா விநய் ஸ்பாட்டுக்கு வந்து தங்கச்சியப் பாத்து "கையெழுத்து போடாத" ன்றார். வில்லன் "நீ போடு" ன்றார். இவர் "போடாத"ங்கிறார். அவரு "போடு"ங்கிறார். வந்த ஆத்திரத்துல எனக்குத்தான் யார் தலைலயாச்சும் கல்லைத் தூக்கிப் போடலாமான்னு இருந்துச்சு.

இந்த சண்டைல வில்லனோட வைஃப் செத்துப் போய்டறாங்களா அங்க தான் கதைல ஒரு ட்விஸ்ட் வைக்கறாங்க. (அங்ங்ங்ங்க கொண்டு போயா வெச்சீங்க? - நன்றி விவேக்!) வில்லன் துரத்த ஆரம்பிக்கறார். வீடே வேணாம்டா சாமீன்னு இவங்க ஊருக்கு ஓடிர்றாங்க. ஊடால பாவனாவும் சென்னைக்கு வந்து "நாங்க சின்ன வயசுல இருந்து காதலிக்கிறோம்.. எனக்கு அவுக(விநய்) மடில தான் காது குத்தினாங்க"னு அவங்க பங்குக்கு நமக்கு காது குத்தறாங்க . (அய்ய்ய்ய்ய்யோ!) பணம் கிடைக்காம ஹீரோ சுத்தமா வெறுத்துப் போய் மறுபடி லண்டன் கிளம்பறார். அவ்ளோ நாள் சும்மா இருந்த வில்லன், சரியா இவரு கிளம்பற அன்னிக்கு ராகுகாலம் எமகண்டம் பாத்து லேகாவ கடத்திடறார். ஏர்போர்ட் வரைக்கும் போன விநய் நம்ம அபிஅப்பா மாதிரியே ஃப்ளைட்டை கோட்டை விட்டுட்டு தங்கச்சிய காப்பாத்தப் போறார்.

விநய் லேகாவை காப்பாற்றினாரா... ? லேகாவின் லட்சியம் நிறைவேறியதா? தாதா குணாவை போலீஸ் கைது செய்ததா? அண்ணனும் தங்கையும் ஒன்று சேர்ந்தார்களா? பாவனா - விநய் காதல் என்னவாயிற்று? விடைகளை வெள்ளித்திரையில் காண்க ன்னு நான் சொன்னா நீங்க என்னை அடிக்க வர மாட்டீங்க தானே?

இயக்குனர் ஆர்.கண்ணன் மணிரத்தினத்தின் உதவியாளராம். நம்பறாப்ல இல்ல படம். (சைடு பிசினஸா பழனில பஞ்சாமிர்தம் வித்துட்டிருந்தார் போல) இசை வித்யாசாகர் ஒரே ஒரு பாட்டு நல்லாருந்த மாதிரி இருந்துச்சு.. அதும் இப்ப மறந்து போச்சு. படத்துல நகைச்சுவைக்கு விவேக்கும் சந்தானமும். சந்தானம் ஸ்கோர் பண்றார். இவங்க ரெண்டு பேரை விடவும் அருமையா காமெடில கலக்கியிருக்கறது சிவாஜி புகழ் 'லக லக லக' இன்ஸ்பெக்டர் லிவிங்ஸ்டன்! க்ளைமாக்ஸ்ல, கடைசீஈஈஈஈ ஆளா வந்து டுமீல்னு வில்லன சுட்டுட்டு "நான் பாத்துக்கறேன் நீங்க போங்க" ன்னு கம்பீரமா விநய்கிட்ட சொல்ற நகைச்சுவை காட்சியை நான் ரொம்பவே ரசிச்சு சிரிச்சேன்!!
விநய்க்கு தமிழ்நாட்டுல 'விலைவாசி ஏறிட்டே போகுது, டீசல் கிடைக்க மாட்டிங்குது, எப்பவாச்சும் தான் கரெண்ட் வருது..' ன்னு கவலை போலிருக்கு.. எப்பவும் சோகமாவே இருக்கார். க்ளைமாக்ஸ்ல அவர் வில்லனுக்கு அட்வைஸ் பண்ற சீன் இருக்கே... ஸ்ஸஸ்ஸ்ஸ்... (கேப்டன்! உங்களைப் போய் எல்லாரும் கிண்டல் பண்றாங்களே? அடுத்த எலக்ஷன்ல என் ஓட்டு தேமுதிகவுக்கு தான்!)

ஆனா இத்தனை கொடுமையையும் மறக்கற அளவுக்கு பாவனா அழகா இருக்காங்க. விநய் தன்னை பொண்ணு பாக்க வந்திருக்கறதா நினைச்சுகிட்டு தயங்கி தயங்கி பேசற காட்சி அழகு! வில்லன் மனைவியா வர்ற அதிசயா... கொஞ்சமே கொஞ்சம் காட்சிகள்ல வந்தாலும் நடிப்பு அசத்தல்! இலவச இணைப்பு மாதிரி பாவனா தங்கச்சியா வர்ற சின்ன பொண்ணு செம க்யூட். பாட்டெல்லாம் கேக்கற மாதிரி இல்லன்னாலும் பாக்கற மாதிரி இருக்கு...
மொத்தத்தில் ஜெயம்கொண்டான் ரொம்பவும் சகிப்புத் தன்மையுள்ள மக்கள்ஸ் (அதாவது என்னய மாதிரி!) ஒரே ஒரு முறை கண்ண மூடிக்கொண்டு பார்க்கத் தகுந்த படம் என்று இந்த விமர்சனக் குழு பரிந்துரைக்கிறது.

ஜெயம்கொண்டான் - மறைக்கப்பட்ட உண்மைகள் :
படம் முடிஞ்சு வெளில வந்ததும் நானும் தங்கச்சியும் ஒருத்தரையொருத்தர் பரிதாபமா பார்த்துகிட்டோம்... அப்றம் தோள்ல கை போட்டுகிட்டு "நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை.. டொய்ங்க்க்..." அப்டின்னு பாடிகிட்டே வீட்டுக்கு போய்ட்டோம்.

Friday, September 5, 2008

இவரைக் காப்பாத்த யார் இருக்கா??

"எனக்குப் பிடித்த தெய்வம் கணபதி.
எந்த தெய்வம் ஒப்புக் கொள்ளும்
கும்பிட்ட பின் உடைக்க?"
-- ஞானக் கூத்தன்














நன்றி: தொடர்மடலில் அனுப்பிய தீனதயாளனுக்கு.

Tuesday, September 2, 2008

குழந்தையின் சுவர்க்கிறுக்கல்களைப்
போலிருந்தது உன் கோபம்....
எரிநட்சத்திரங்களென்றும்...
ஈரம் பொசிந்த
மழைக்காளான்களென்றும்...
காற்றசைத்த அதிர்வில்
கிளைகள் தவறவிட்ட
மலர்களென்றும் கூட
முன்னொரு முறை
நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
நீ கோபிக்கிறாய்..
நீளத்துவங்குகிறது என்
ஆச்சரியங்களின் பட்டியல்!

Monday, September 1, 2008

பூவுக்கு பொறந்த நாளு...















என் நேசமிகு தோழியும், பாசமிகு தங்கையுமாய் (2 மாசம் முன்னால பொறந்து தொலைச்சிட்டேன் ) உடனாய்.. துணையாய்.. இனிமையாய்.... இம்சையாய்.. பிரியங்களாய்... நட்பாய் என்னைத் தொடர்ந்து வரும் ஜி3 என்ற காயத்ரி க்கு இன்று பிறந்தநாள். அவள் என்றும் மகிழ்வாய் வாழ மனமுவந்து வாழ்த்துகிறேன்!!!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம்..