யார் யாரிடமோ
உன் சாயல்களைப் பார்த்தபடி
வீடு வந்து சேர்ந்தேன்..
வீட்டிலிருந்த நீ
யாரோவாகியிருந்தாய்.
பிரிவும் பிரிவின் நிமித்தமும்...
உள்ளங்கையின்
மெல்லிய ரேகையில்
தளர்வாய் ஊர்கிறதோர்
சிற்றெறும்பு...
எல்லையற்ற வெளியில்
வழிதவறியலைவதாய்
ஒருவேளை அது
பதறிக்கொண்டிருக்கலாம்.
இருக்கட்டும் அப்படியே...
எல்லோர்க்கும் கையளவே இருக்கிறது
வாழ்க்கையும்!
"என் பெயரோ
அவள் பெயரோ
எங்கள் பெயர்களோ அற்று
இருக்கும்
இந்தக் கவிதையில்
எங்கேயாவது
காதல் பிடிபடலாம்
அப்போது நீங்கள்
கண்ணீர் சிந்தலாம்.
காறி உமிழலாம்.
கனத்த மனதோடு சிரிக்கலாம்.
அது
எங்கள் காதல் என்பதை மறந்து.."