Sunday, November 25, 2007

கொலைவெறி ஏனடா?


தயாரிப்பு: யூடிவி & ராடான் மீடியா வொர்க்ஸ்

நடிப்பு: சத்யராஜ், ராதிகா, பிருத்விராஜ், சந்தியா

இசை: யுவன் சங்கர் ராஜா

கொடுமை கொடுமைன்னு தியேட்டருக்குப் போனா அங்க 4 கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு குதிச்சிட்டு இருக்கு... ஆமாங்க மறுபடி ஒரு மொக்கைப் படம் பாத்து தொலைச்சிட்டேன். இருங்க கொஞ்சம் ப்ளாஷ்பேக் போய்க்கறேன்....

அது ஒரு அழகான சனிக்கிழமை! (சனிக்கிழமைல என்னா அழகுன்னெல்லாம் கேக்கப்படாது.. சும்மா ஒரு பில்ட் அப் தான்! வேணும்னா 'சமீபத்தில்' ஒரு சனிக்கிழமைன்னு படிச்சுக்குங்க!)

ஏற்கனவே பட்டியல், பரட்டை என்கிற அழகுசுந்தரம், கூடல்நகர் போன்ற கலைக்காவியங்களுக்கு என்னால் அழைத்துச் (இழுத்து?) செல்லப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த என் அருமைத் தங்கை என் மேல கொலைவெறியோட இருக்கறது தெரியாம சித்தி வீட்டுப் பக்கம் போய்ட்டேன்.

போனதுமே "அக்கா 'அழகிய தமிழ்மகன்ன்"...ன்னு இழுத்தா. ஏற்கனவே ராம் அந்த கருமத்தைப் பாத்துட்டு உயிருக்கு ஆபத்தான நிலைல ஐ.சி.யூ -ல இருந்து தப்பி பிழைச்சு வந்திருக்கறதால நான் ரொம்ப உஷாராகி 'தெய்வ மகன், தங்க மகன், உழவன் மகன்,... இப்படி எந்த படத்துக்கு வேணா கூப்பிடு .. அழகிய(?) தமிழ் மகனுக்கு மட்டும் வர மாட்டேன்'னு கறாரா சொல்லிட்டேன். அப்புறம் பொதுக்குழு செயற்குழு எல்லாம் கூட்டி பொல்லாதவன், வேல், கண்ணாமூச்சி ஏனடா.. ஆகிய மூன்று படங்களின் ஆதாரம் சேதாரம் பத்தியெல்லாம் அலசி ஆராய்ஞ்சு கடைசியா 'கண்ணாமூச்சி ஏனடா' போறதுன்னு முடிவாச்சி.

ஈரோட்ல 'ஸ்டார்'னு ஒரு தியேட்டர்ல(!?) ரிலீஸ் ஆகியிருக்கு அந்தப்படம். (நிலாவும் அவங்கப்பாவும் இல்லன்னா அந்த தியேட்டருக்கு மல்டிப்ளக்ஸ் ரேஞ்சுக்கு எதுனா பில்ட் அப் குடுத்திருக்கலாம்.. இப்ப உண்மைய சொல்ல வேண்டிய நேரம் வந்திடுச்சி!)

எங்கம்மாகிட்ட 'அம்மா ஸ்டார் தியேட்டர் எங்கன இருக்கு?' ன்னு கேட்டதுக்கு 'அட.. அந்த தியேட்டர் இன்னமுமா இருக்கு? இன்னேரம் மஞ்ச மண்டி ஆக்கிருப்பாங்க' ன்னு இல்ல நினைச்சேன்னாங்க! இதிலிருந்து தியேட்டரின் உள் மற்றும் வெளிப்புற கட்டமைப்பு பற்றி நீங்க ஒரு தெளிவான தீர்மானத்துக்கு வரமுடியும்னு நினைக்கறேன். (அவ்வ்வ்வ்...)

அங்கொருத்தரும் இங்கொருத்தருமா மொத்தம் 20 பேர் நிரம்பி வழிஞ்ச(!) அந்த தியேட்டர்ல ஒரு மாதிரியான கலவரத்தோட தான் போய் உட்கார்ந்தோம். டைட்டில் கார்ட்ல.. தயாரிப்பு ராடான் னு பாத்தப்பவே தெறிச்சி ஓடி வந்திருக்கனும்.. வடிவேலு கணக்கா தெனாவெட்டா உட்கார்ந்திருந்தது தப்பாப் போச்சுங்க. நெடுந்தொடர்(?) மாதிரியே ஒன்னரை வரிக்கதைய ரெண்டரை மணி நேரமா இழு இழு இழூன்னு இழுத்து படம் முடிஞ்சி வர்றப்ப எங்களுக்கே மூச்சு வாங்க ஆரம்பிச்சிடுச்சு. இருங்க என்ன கதைன்னு 'சுருக்கமா' சொல்ல முயற்சி பண்றேன்.

மலேசியாவுல ஃஎப். எம் கேட்டுகிட்டே நம்ம ஹீரோ பிருத்வி கார் 'ஓட்டிண்டு' வர்றார். அந்த நேரம் பாத்து கண்ணுமண்ணு தெரியாம ரோட்ட க்ராஸ் பண்ணி, ஹீரோ கார் முன்னால வந்து நின்னு வீல்னு சவுண்ட் விட்டுட்டே புக்ஸையெல்லாம் கீழ போடற 'அம்மணி' சந்தியா.. ரொம்ப கோபமா "மெண்டல்" னு பிருத்விராஜ திட்ராங்க! (என்ன கொடுமை சார் இது?)
அப்புறம் என்னாகும்னு நான் சொல்லனுமா? சந்தியா அழகா இருக்கறதாலயோ அல்லது முதல் சந்திப்புலயே தன்னைப் பத்தி கரெக்டா தெரிஞ்சிகிட்டதாலயோ ஹீரோ ஹீரோயின் பின்னாலயே சுத்தறார். எல்லா ஹீரோவ போலவே 'இதுக்கு முன்ன யார் பின்னாடியும் இப்டி சுத்தினதில்ல' ன்ற டயலாக்கையும் மறக்காம சொல்றார். அப்புறம் ரெண்டு பேரும் லவ் பண்ணி ஊரெல்லாம் சுத்திட்டு... சந்தியாவோட அப்பா அம்மாட்ட பர்மிஷன் வாங்கறதுக்காக சென்னைக்கு வர்றாங்க.

வேற ஜாதிப் பொண்ண காதலிக்கறதால பிருத்வியோட மாமா ராதாரவி "ஆத்த விட்டுப் போடா வெளியே" ன்னு விரட்டிண்டுடறார்! கைல காசு, பணம், வேலை எதும் இல்லாத ஹீரோ இதெல்லாம் தெரிஞ்சா லவ்வர் ஃபீல் பண்ணுவாளேன்னு அவகிட்ட எதும் சொல்லாம அவா ஆத்துக்கு... ச்சே அவங்க வீட்டுக்கு போறார்.

சந்தியாவோட அப்பா சத்தியராஜ் போலீஸ் கமிஷ்னர்.. ஜாதி மதம் பாக்காத முற்போக்குவாதியாம். ஆனாலும் இயல்பான போலீஸ் புத்தியோட பிருத்விய சந்தேகப்பட்டுட்டே இருக்கார். (பிருத்விராஜ் தூங்கறப்போ அவர் கால்ல கயித்தக் கட்டி வைக்கிறதெல்லாம் ரொம்ப ஓவர்..)

ஹீரோ நல்லவர் தான்னு சத்தியராஜ்க்கு கொஞ்சூண்டு நம்பிக்கை வர்றப்ப ராதாரவி அவருக்கு போனப் போட்டு 'பிருத்வி சரியான களவாணிப் பையன்.. கம்பெனி பணத்தை திருடிட்டு ஓடிட்டான்' னு சொல்றார். உடனே வேதாளம் மறுபடி முருங்கை மரம் ஏறி பிருத்விராஜை ரொம்ப அவமானப்படுத்தி வீட்ட விட்டு துரத்திடறார் சத்தியராஜ். சந்தியாவும் இதை நம்பி ஹீரோகிட்ட கோச்சுக்கறாங்க. (ப்ச்.. பிருத்வி ரொம்ப பாவம் இல்ல?)

இதுவரைக்கும் கூட எதோ சகிச்சுக்கலாம்னு வைங்க.. அதுக்கப்புறம் என்ன நடக்குதுன்னே பிரியலங்க. திடீர்னு ராதிகா 'நீங்க என்னை மதிக்கறதில்ல.... மரியாத குடுக்கறதில்ல..அடிமையா நடத்தறீங்க' அது இதுன்னு சத்யராஜை காச் மூச்னு திட்டிட்டு, சந்தியாவையும் கூட்டிட்டு வீட்ட விட்டு போய்டறாங்க. திடீர்னு இப்படி ஒரு சீனப் பாத்ததும் நான் கூட அய்யய்யோ! இது பெண்ணிய'வாத' படம் போல பயந்தே போய்ட்டேன். நல்லவேளை டைரக்டருக்கு அதையும் உருப்படியா சொல்லத் தெரியல!!

காணாம போன லவ்வரையும் அவங்கம்மாவையும் சர்ஃப் எக்ஸல் கறை மாதிரி 'தேடிகிட்டே' இருக்கற பிருத்வி அவங்க ரெண்டு பேரும், சத்யராஜோட ட்வின் சிஸ்டரும் ஓடிப்போன 'தங்கச்சிக்கா'வுமான ஸ்ரீப்ரியா வீட்ல தான் இருக்காங்கன்ற அரிய உண்மையை கண்டுபிடிச்சி சத்யராஜ்கிட்ட சொல்றார். (ஸ்ஸ்ஸ்... லேசா கண்ணக் கட்டுதில்ல?)

அப்பால ரெண்டு பேர்ல யார் மூத்தவங்கன்னு சத்யராஜ்க்கும் ஸ்ரீப்ரியாவுக்கும் நடக்கற பட்டிமன்றம், ராதிகாவ சமாதானப்படுத்த ராத்திரில திருடன் மாதிரி வீடு புகுந்து சத்யராஜ் பேசற ரொமான்ஸ் வசனங்கள், சந்தியாவ கன்வின்ஸ் பண்ண பிருத்வி படற கஷ்டம், எல்லாரும் நடந்துகிட்டே இருக்கற 'பரபரப்பான க்ளைமாக்ஸ்..... இந்த சீனெல்லாம் வரும்போது தியேட்டர்ல 'டொம், டொம்' னு பயங்கர சத்தம். என்னன்னு எல்லாரும் திரும்பிப் பாத்தா நான் தான் எந்திரிச்சு போய் தியேட்டர் சுவத்துல முட்டிகிட்டிருந்தேன்!!

படத்துக்கு இசை யுவனா? படம் முழுக்க சாவுக்குத்து மீஜிக்கா இருக்கு. மேகம் மேகம், சஞ்சாரம் செய்யும் கண்கள்... ரெண்டு பாட்டு பரவால்ல.

ஆகமொத்தம் கடைசியில் ராதிகா சமாதானமடைந்தாரா? (நாலே வரி டயலாக்ல அம்மணி சரண்டர்!) ராதிகா - சத்யராஜ் ஜோடி இணைய பிருத்விராஜ் என்ன செய்தார்? (ஒன்னியும் இல்ல!) சந்தியா கோபம் தணிந்து பிருத்விராஜை ஏற்றுக் கொண்டாரா? (அந்தக் கருமம் நடக்காமயா?) போன்ற கேள்விகளுக்கான விடைகளை வெள்ளித்திரையில் காண்க!! (இதுக்கு மேல உங்க தலையெழுத்து!)

பிருத்விராஜ் படம்னு நினைச்சுப் போய்டாதீங்க.. இது சத்யராஜ் படம். நக்கல்ன்ற பேர்ல நல்லா சொதப்பியிருக்கார். ராதிகாவும் ஸ்ரீப்ரியாவும் போடற ஆட்டம் சகிக்கல. ராதாரவி ஏன் திருந்தறார்னு தெரியல. சந்தியா எதுக்கு கோபப்படறாங்கன்னு புரியல.

இப்படி நம்மை ரொம்ப யோசிக்க வைக்கற படமாவும் நம் சகிப்புத் தன்மையை வளர்த்துக்க உதவற படமாவும் இருக்கு இந்த 'கண்ணாமூச்சி ஏனடா'! கண்டிப்பா சீக்கிரமா போய் பாருங்க.. டோண்ட் மிஸ் இட்!! (ஏதோ என்னால முடிஞ்சது!)

பி.கு: நான் வெளியூர் செல்லவிருப்பதால் வீட்டிற்கு ஆட்டோ அனுப்ப விரும்புவோர் இன்னும் 'சில' நாட்கள் கழித்து (2060 -ல்) அனுப்பி ஏமாற்றத்தை தவிர்த்துக் கொள்ளும்படி தெரிவித்துக் கொள்கிறேன்!!

Saturday, November 24, 2007

புள்ளி




எண்ணிக்கை தப்பாகியிருக்கலாம்..
கோடிழுக்கும் அவசரத்தில்
விட்டுப் போயிருக்கலாம்..
அல்லது
வேண்டுமென்றே கூட
தவிர்க்கப்பட்டிருக்கலாம்..
காரணம் எதுவாயிருப்பினும்
தன்னந்தனியாய்
மனதில்
உறுத்திக்கொண்டேயிருக்கிறது
கோட்டிற்குள் சிக்காத
ஒற்றைப் புள்ளி.

Wednesday, November 14, 2007

தப்பித்தலின் சாத்தியங்கள்...




நான் விதைக்கப்பட்டிருக்கும்
சின்னஞ்சிறு பரப்பினை
வன்மமாய்
நினைவூட்டுகின்றன
இந்த தொட்டிச்செடிகள்..

விடுபடலோ
விட்டு விடுதலையாதலோ
சாத்தியமாவதில்லை
எப்போதும்...

வேர்களால் உள்வாங்கி
பூக்களாய் எதிரொளித்து
தளிர்நுனிகள் அனைத்திலும்
உயிர்சொட்டும் விருட்சங்கள்
காழ்ப்புணர்ச்சியோடு
கசப்புத் தருகின்றன...

தப்பித்தல்களுக்கான
இடம் தேடிக்களைத்து
எங்கேனும் எதிலேனும்
ஒளிந்துகொள்ள முயன்று
முடிவாய் மறைந்து போகிறேன்
கவிதைகளின் பின்னால்.

Tuesday, November 13, 2007

ஹேப்பி பர்த்டே டு யூ அபிஅப்பா!!

அபி அப்பாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Friday, November 9, 2007

தனித்திருத்தல்




தனிமை,வெறுமை
வெற்றிடம்,மெளனமென
நாள்பட்ட சொற்களின் துணையோடு
எத்தனை கவிதைகள் எழுதியபோதும்
எந்தக் கவிதையும் நிரப்பிவிடவில்லை
எப்போதுமிருக்கும் தனிமையை...

Monday, November 5, 2007




எப்போதும் சண்டையிட்டபடி
எல்லாவற்றையும் சந்தேகித்தபடி
கொஞ்சல்
மிஞ்சல்
குழைதல்
கோபித்தல்
குறை கூறல்
கேள்வி கேட்டல்
காதலித்தல்
கண்ணீர் விடல்

மற்றும்...

இன்னபிற மிகைப்படுத்தல்களின்
கலவையாயிருக்கும்
ஒருவன் அல்லது ஒருத்தியின்
பெருங்கொண்ட காதலை
உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

உங்களால் ஏற்கப்படாவிட்டாலும் கூட
கறுப்பும் ஓர் நிறமாய்
கசப்பும் ஓர் சுவையாய்
இரவும் ஓர் பொழுதாய்
இருத்தலைப் போன்றே
அவர்களின் காதலும்
காதலாகவே இருக்கிறது
எப்போதும்...!

Saturday, November 3, 2007

அலையின் பாடல் - கலீல் ஜிப்ரான்

வலிமையான கரையே என் காதலன்; நான் அவனது காதலி.

காதலால் கட்டுண்டவர்கள் நாங்கள். நிலவுதான் என்னை அவனிடமிருந்து இழுக்கிறது.

அவசரமாய் அவனை நோக்கி நான் செல்கிறேன்; சட்டென பிரிகிறேன்; பலமுறை சின்னச் சின்ன விடைபெறல்கள்.

நீலவானத்திற்கு அப்பாலிருந்து வெள்ளி நுரைகளை நான் சட்டென திருடி வந்து, அவனது பொன்மணல் மேல் பரப்பி வைக்கிறேன்.

ஒளிமயமாய் நாங்கள் கூடிக் கலக்கிறோம்.

நான் அவனது தாகத்தைத் தணிக்கிறேன். அவனது இதயத்திற்குள் செல்கிறேன்.

அவன் என் குரலை மென்மையாக்குகிறான்; என் சினத்தை அடக்குகிறான்.

விடியற்காலையில் நான் அவன் காதில் காதலின் விதிகளை ஓதுகிறேன். அவன் ஆசையோடு என்னைத் தழுவிக் கொள்கிறான்.

ஏற்றவற்ற அலைகளின்போது நான் நம்பிக்கையின் பாடல் பாடுகிறேன். அவன் முகத்தின்மேல் இனிய முத்தங்கள் பதிக்கிறேன்.

எனக்கு பயம். எனக்கு வேகம்.

ஆனால் அவன் அமைதி; பொறுமை;சிந்தனை.

அவனது நிம்மதியின்மையை அவனது பரந்த மார்பு அமைதிப்படுத்துகின்றது.

அலையடிக்க நாங்கள் தொட்டுக் கொள்கிறோம். அலை பின்வாங்க நான் அவனது காலடியில் விழுந்து வணங்குகிறேன்.

கடற்கன்னிகளைச் சுற்றி பல முறை நான் நடனமாடியிருக்கிறேன். அவர்கள் என் அடியாழத்திலிருந்து எழுந்து அலை நுனியில் நின்று விண்மீன் பார்ப்பார்கள்.

காதலர்கள் பலமுறை என்னிடம் வந்து முறையிடுவது வழக்கம். நான் அவர்கள் பெருமூச்சு விட உதவுவேன்.

பலமுறை நான் பாறைகளை சீண்டிவிட்டு பார்த்திருக்கிறேன். அவற்றை கிச்சுகிச்சு மூட்டியும் பார்த்திருக்கிறேன். அவை ஒரு முறை கூட சிரிக்கவே இல்லை.

என்னில் மூழ்கிப் போகிற உயிர்களை மென்மையாய் ஏந்தி கரை சேர்த்திருக்கிறேன்.

கரைக்காதலன் என் வலிமை எடுத்தது போல அவர்களுக்கு வலிமை தந்திருக்கிறான்.

பலமுறை நான் அடியாழத்திலிருந்து வைரமணிகளைத் திருடி வந்து என் காதலனுக்குப் பரிசளித்திருக்கிறேன். அவன் மெளனமாய் அவற்றை ஏற்றான். என்னை அவன் வரவேற்பான் என்று இன்னமும் தந்து கொண்டிருக்கிறேன்.

கனத்த இரவில் எல்லாம் உறங்க நான் அமர்ந்து ஒரு்முறை பாடுகிறேன். ஒரு முறை பெருமூச்சு விடுகிறேன். நான் என்றும் விழித்திருக்கிறேன்.

அந்தோ! உறக்கமின்மை என்னை பலவீனப்படுத்திவிட்டது. என்றாலும் நான் காதலியாயிற்றே? காதலின் உண்மை கனத்தது அல்லவா?

நான் களைத்துப் போனாலும் எனக்கு மரணமில்லை!

பி.கு: நூலகத்தில் எதையோ தேடப்போக உண்மையில் புதையலாக கிடைத்தது கலீல் ஜிப்ரானின் "பொன்மணிப் புதையல்". அதிலிருந்து என்னோடு சட்டென்று ஒட்டிக் கொண்ட கவிதை இது! முடிந்தால் விரிவான விமர்சனம் தர முயற்சிக்கிறேன்.